அக்டோபர் 28, 2016 இதழ்
தமிழ் வார இதழ்

சுற்றுச்சூழல் கேடும், அழியும் மனித இனமும்.

எல்.துரை(மாநில ஒருங்கிணைப்பாளர் தேசிய பசுமைப்படை)

Jun 15, 2013

மனித இனம் மட்டுமன்றி உயிரினங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலை சார்ந்தே உயிர் வாழ்கின்றன. இயற்கை தந்த செல்வம் சுற்றுச்சூழல். உயிரினங்கள் அனைத்திற்கும் இயற்கை தான் கடவுள். மனிதனும் சுற்றுச்சூழலும் பிரிக்க முடியாத இரட்டையர்கள். சுற்றுச்சூழல் பாதித்தால் மனித  இனம் கூண்டோடு அழிவது திண்ணம். மனிதன் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதனவாக விளங்கும் காற்று, நீர், வெப்பம், ஆகாயம், பூமியின் கூறுகள் வாழ்வோடு வாழ்வாக இயற்கை அளித்துள்ளது. அது தான் சுற்றுப்புற சூழல். அது பாதிக்கப்பட்டால் நீரிலிருந்து கரையில் தூக்கி போட்ட மீன் போல் மனித இனம் அழிந்து விடும்.

முதலாவதாக காற்று மாசுபாடு, பெருகிவரும் வாகனங்கள் அது தரும் புகை மண்டலம் சுவாசக்காற்றை மாசுபடுத்துவது மட்டுமன்றி வாயுமண்டலத்தில் தடை உண்டாக்கி “கிரீன் ஹவுஸ் விளைவு” என சூரியக் கதிர்களை சிறை செய்து பூமியைச் சுற்றி வெப்பப்படுத்தி, துருவமண்டலத்தை சூடேற்றி பனியைக் கரைத்து, கடல் நீரை அதிகப்படுத்தி நகரங்களை விழுங்க காத்திருக்கின்றது. ஒரு பக்கம் சுனாமி, ஒரு பக்கம் நிலநடுக்கம், ஒரு பக்கம் எரிமலை கொதிப்பு, ஒருபக்கம் சூறாவளி.

அடுத்ததாக நீர் மாசுபாடு, தேசிய நீர் தன்மை ஆராய்ச்சியின்படி நிலத்தடி நீரில் தற்போது 5mg/1லிட்டர் அளவுக்கு புளோரைடு எனும் மாசு காணப்படுகிறது. இருக்க வேண்டிய அளவு  1.5mg/லிட்டர் இதனால் பற்களில் குழி விழுதல், எலும்புகளில் ஸ்திரத்தன்மையின்மை.

இந்தியாவில் 17 மாநிலங்களில் 200 மாவட்டங்களில் 90 மில்லியன் மக்கள் (9 கோடி மக்கள்) நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால் பற்கள், எலும்புகள் நோய்கள் ஏற்படும் அபாய கட்டத்தில் உள்ளனர்.

காற்று மற்றும் நீர் மாசு அடைவதால் மக்கள் அடையும் துயருக்கு ஏணி வைத்தாற்போல் எங்கு நோக்கினும் குப்பை கூளங்கள். அதன் மூலம் எலிகள் ,கொசுக்களின் தொல்லைகள், நோய்கள் எங்கு நோக்கினும் டெங்கு ஜுரம் பன்றி காய்ச்சல்.

தெருவை சுத்தப்படுத்த சென்னை மாநகராட்சி செலவிடும் செலவினம். 200 வார்டுகளில் குப்பைகளைச் சேகரிக்க சென்னை மாநகராட்சி ஒவ்வொரு வருடமும் 400கோடி ரூபாய் செலவிடுகிறது.

ஒவ்வொருவரும் தன் வீட்டில் உணவு, தாவரக் குப்பைகளைத் தவிர்க்க வேண்டும், அவற்றை உரங்களாக மாற்ற வீட்டிலேயே நிலத்தொட்டிகள் அமைக்க வேண்டும். குப்பைகளில் தேவையானவற்றை மறு சுழற்சி செய்ய வேண்டும் 10 வருடங்களுக்கு முன் 2900 டன்கள் மாநகராட்சி குப்பை சேமிப்பு என்றால் 2012 ம் வருடம் அது 4500 டன் எட்டியுள்ளது. ஒவ்வொருவரும் உணர்ந்து குப்பை நிர்வாகம் செய்தால் 60% குறைத்து விடலாம் என்பது உண்மையான ஒன்று.

சுற்றுச்சூழல் காக்க ஆண்கள், பெண்கள், சிறுவர், மாணவர்கள், கற்றோர், கல்லாதோர், பட்டதாரிகள், எஞ்சினியர்கள், தொழில் துறை மேதாவிகள், சட்ட வல்லுனர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், மாமன்ற, மாநகர, பஞ்சாயத்து ஆளுநர்கள், மாவட்ட, மாநில உயர் அலுவலர்கள் முதல் பாமர மக்கள் வரை “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு” போராட்டம் பங்கேற்க வேண்டும் அதற்காக.

 1. வாகனப் பயன்பாட்டைக்  குறைத்துக் கொள்ள வேண்டும்.
 2. மின்சார சேமிப்பைக் கடைபிடித்தல் வேண்டும்.
 3. தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.
 4. செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
 5. நீராதாரங்களில் கழிவுகள் கலக்காமல் பாதுகாக்க வேண்டும்.
 6. மழை நீர் சேகரிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
 7. நீர் நிலைகளின் ஓரங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆகிய இடங்களில் மரங்களை வளர்த்து பாதுகாக்க வேண்டும்.
 8. திடக்கழிவு மேலாண்மை- குப்பைகள், பிளாஸ்டிக்குகள் முறையாகப் பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.
 9. பல்லுயிர் பெருக்கத்தின் சிறப்பை உணர வேண்டும். பல வகைத் தவிர வகைகளைப்  பாதுகாக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 10. பருவநிலை மாற்றத்தின் அபாயத்தை உணர வேண்டும். இதற்காக காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு கல்விக்கு முதன்மை வாய்ப்பு அளிக்க வேண்டும்.
 11. கடற்கரை ஓரங்களைக் காக்க வேண்டும்.
 12. சுற்றுப்புறச்  சூழ்நிலைக் கல்விக்கு வித்திடல் வேண்டும்.
 13. தொழிற்சாலைகளின் மூலம் நீர், நிலம் மாசடைவதைத் தடுக்க நிர்வாகத் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.
 14. நகர விரிவாக்கத்தால் வேளாண்மைக்கு ஏற்படும் அபாயத்தை உணர வேண்டும்.

மொத்தத்தில் “சுற்றுப்புற சூழ்நிலை” கெடுவதால் மனித இனத்திற்கு ஏற்படும் அபாயத்தை உணர்ந்து வருமுன் காக்க அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்.


எல்.துரை(மாநில ஒருங்கிணைப்பாளர் தேசிய பசுமைப்படை)

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “சுற்றுச்சூழல் கேடும், அழியும் மனித இனமும்.”
 1. senthil babu says:

  awesome points