உலகத் தமிழ் செம்மொழி மாநாடும் தமிழ் படைப்புச்சூழலும் (கட்டுரை)
ஆச்சாரிJun 15, 2013
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த இந்தத் தருணத்தில் வரலாற்று ரீதியாக தமிழ்ச் சூழலில் இலக்கியம் குறித்த நிலைப்பாடுகளும், அணுகுமுறைகளும் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்கிற பார்வை அவசியமானது. தமிழ் இலக்கிய வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் புதிய படைப்பு நோக்கிலும், தீவிர வாழ்வுணர்வின் அடிப்படையிலும் எண்ணற்ற படைப்புப் பொறிகள் செயல்பட்டு வந்திருக்கின்றன. அவற்றின் சாரமாகவே யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நண்டும் பிறர்தர வாரா, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன், தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம், காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம் என்பது போன்ற சொல்லாடல்கள் படைப்புத் தீவிரங்களைத் தாங்கி காலம் கடந்து நின்று வருகின்றன. ஆனாலும் பெரும்பான்மைப் போக்கு என்பது இலக்கணத்தைத் தாண்டி இலக்கியத்தை வாழ்வனுபவமாக உணர்ந்து அறியாத பண்டிதர்களாலும், பிழைப்புக்காக அரசு அதிகாரத்தைப் போற்றி வாழ்ந்த புலவர்களாலுமே நிரம்பி உள்ளது. திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள், தொகை நூல்கள் மற்றும் பல சிற்றிலக்கியங்களின் படைப்புச் செறிவு மதச் சார்பு கொண்ட உரையாசிரியர்களால் நீண்ட காலம் கவனிக்கப்படாமலே இருந்தது. இலக்கியப் படைப்புணர்வுக்கு ஆதாரமான தீவிர வாழ்வனுபவத்தையும், சுய பார்வையையும் ஒதுக்கி இலக்கணத்தையும், விதிகளையும், நீதி போதனைகளையும் வலியுறுத்திய இலக்கியப் பின்புலத்தினால் பண்டித மனப்பான்மையும், செய்யுள் ஆக்கங்களுமே நம்முடைய இலக்கியச் செயற்பாடுகளாக நிலைபெற்றன. தீவிரமான உணர்வுப்பெருக்கும், அறிவு பூர்வமான தேடலும், சமூக நல்லிணக்க உணர்வுகளும் பிற்காலத்தில் வந்த உ.வே.சாமிநாதய்யர், ராமலிங்க அடிகள், கோபால கிருஷ்ணபாரதி, சுப்பிரமணிய பாரதியார், பாரதிதாசன் ஆகியோராலேயே அதிக எழுச்சி பெற்றன. சனாதனத்திற்கும், உயிர்ப்பு அற்ற பண்டிதத்தனத்துக்கும் எதிராக இவர்களே போராடினார்கள். இவர்களுக்கு முன்பாக மதச் சட்டங்களுக்குள்ளிருந்து கொண்டே தீவிரமான வாழ்வுணர்வுக் குரல்களை வெளிபடுத்திய ஆண்டாள், ஆவுடையக்காள் (பதினேழாம் நூற்றாண்டு) ஆகியோரின் மாற்றுக் குரல்களும் தமிழ்ச் சூழலில் இருந்தன.
சமூக சீர்திருத்த இயக்கமாகத் துவங்கிய திராவிட இயக்கம் கலை இலக்கியங்களை வெறும் பயன்பாட்டு நோக்கிலேயே அணுகியது. தொன்மை, மரபு, பௌரானிகம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் கற்பனைவளம் மற்றும் படைப்பூக்கம் ஆகியவற்றைப் புறந்தள்ளி மூடநம்பிக்கை எதிர்ப்பு என்ற பெயரில் வெற்று கோசங்களையும், பிரகடன்களையும் இலக்கியமாக அது முன் வைத்தது. பாரதியால் உத்வேகம் பெற்று ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று படைப்புத் தீவிரம் காட்டிய பாரதிதாசன் மெதுவாக பிரசார இலக்கியத்துக்கு தள்ளப்பட்டார். கடவும், மதம் தொடர்புடைய பிராமணீயக் கலாச்சாரத்துக்கு மாற்றாக எளிய மக்களுடைய வாழ்நிலைகளையும், அழகியல் ஈடுபாடுகளையும் கலை பிரதிபலிக்க வேண்டும் என்று பிரகடனம் செய்த திராவிட இயக்கம் எளிய மக்களின் நாட்டுப்புறக்கலைகளை உரிய முறையில் அங்கீகரிக்கவில்லை. தொன்மங்கள், வாய்மொழிக்கதைகள் மற்றும் சடங்குகள் சார்ந்த எளிய கலை வெளிப்பாடுகளை அவை மதச்சாயல் கொண்டிருப்பதாக தவறாக அனுமானித்து அவற்றைப் புறக்கணித்தது. மதத்தையும், தொன்மைங்களின் புனைவுத்தன்மையையும் வேறுபடுத்திப் பார்க்காமல் எளிய கதையாடல் நிகழ்வுகளை மதக் கண்ணோட்டத்தில் அணுகி அவைகளை வறட்டுத்தனமாக நிராகரித்தது. தமிழின் தொன்மையான குறியீடாக சங்க காலத்தை முன்நிறுத்தியபோதும் கூட சங்ககாலத்தின் ஆற்றுப்பெருக்கான யாப்புக்கு கட்டுப்படாத தன்னுணர்வுக் கவிதைகளை முன்னுதாரணமாகக் கொள்ளாமல், பண்டித மரபின் எச்சமான யாப்பைப் பற்றிக் கொண்டு கவிதை உணர்வற்ற வெற்று எதுகைச் சொல்லாடர்களிலேயே இவர்கள் ஈடுபட்டனர். அலங்காரமான மேடைப் பேச்சும், மேம்போக்கான பட்டிமன்றங்களும், கவியரங்கங்களுமே தமிழ் உணர்வுச் செயல்பாடுகளாக முன்வைக்கப்பட்டன. பாரதிக்குப் பின் தமிழில் வேர் கொண்ட புதுக்கவிதை இயக்கம் பற்றியோ, சிறுகதைகளில் சாதனை படைத்த மௌனி, கு.ப.ராஜகோபாலன் மற்றும் புதுமைப்பித்தன் பற்றியோ தமிழில் வணிக எழுத்துக்கு மாற்றான இலக்கிய இயக்கத்தை உருவாக்கிய மணிக்கொடி, எழுத்து பத்திரிக்கைகளின் பங்களிப்பு பற்றியோ இவர்கள் அக்கறை செலுத்தவில்லை. தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளியான புதுமைப்பித்தன் இவர்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தான் வறுமையாலும், நோயாலும் பீடிக்கப்பட்டு கவனிப்பாரற்று இறக்க நேர்ந்தது.
மதச் சார்புகள் அற்று வாழ்நிலை உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாட்டுப்புறப்பாடல், இசை மற்றும் ஆட்ட வடிவங்களைப் பாதுகாத்து பிரபலப்படுத்தாமல் அவற்றுக்கு மாற்றாக முற்றிலும் வணிக மதிப்பீடுகள் கொண்ட ஒரு சினிமாக் கலாச்சாரத்தையே வெகுஜனக் கலாச்சாரமாக இவர்கள் முன்மொழிந்தனர், சுய இருப்புக்காகவும் உரிமைக்காகவும் போராடும் பெண்ணின் போராட்ட வடிவங்களை கௌரவிக்காமல் தங்களுடைய இலக்கியச் சொல்லாடல்களில் எல்லாம், கண்ணகி, மாதவி ஆகிய பிம்பங்களையே முன் நிறுத்தி ஒரு செயற்கையான கற்பு என்னும் பெருங்கதையாடலையே தொடர்ந்து முன்வைத்தனர். பெண்ணை ஒருபுறம் கற்பு எந்திரமாகவும், மறுபுறம் பாலிச்சையைச் தூண்டும் கேளிக்கை வடிவமுமாகவே இவர்கள் தங்கள் ஊடகங்களில் சித்தரித்தனர். பெண் குறித்த இத்தகைய பிற்போக்குப் பார்வை தான் இன்று வரை ஒரு இழிந்த அரசியல் உத்தியாகவும், வியாபார உத்தியாகவும் இவர்களுடைய ஊடகங்களில் செயல்பட்டு வருகிறது.
இன்றைய உயர்கல்விச் சூழலில் இலக்கியக் கல்விக்கும். நுண்கலைத் தேர்ச்சிக்கும் வழங்கப்படும் இடம் மிகவும் பரிதாபகரமானது. முக்கியமாகத் தமிழ் இலக்கியக் கல்வி என்பது மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. தமிழ் இலக்கியக் கல்வியை மாணவர்கள் விரும்பி ஏற்கும் நிலை நம்முடைய பல்கலைக்கழகங்களில் இல்லை. இலக்கியக் கல்வியின் மனிதவள மேம்பாட்டுக்கான சாத்தியங்கள் பரிசீலிக்கப்படாமல் எந்திர ரீதியாக வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமற்ற படிப்பாகவே அது பார்க்கப்படும் நிலை உள்ளது. இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நவீன இலக்கியக் கருத்தோட்டங்களின் பரிச்சயமற்று இலக்கியக் கல்வியை பண்டைய இலக்கியப் பிரதிகளுக்குள் சுருக்குபவர்களாகவே உள்ளனர். இதனால் இலக்கியம் பயிலும் மாணவர்கள் இலக்கியம் குறித்த நுண்ணுணர்வோ கற்பிக்கப்படும் இலக்கிய வரலாறு குறித்த விமர்சனப் பார்வையோ, சமகால இலக்கியக் கருத்தோட்டங்களுடன் தொடர்புபடுத்தும் ஆற்றலோ, இலக்கியக்கல்வியால் பெற வாய்ப்புள்ள படைப்புத் திறனை செயல்படுத்தக்கூடிய மனநிலையோ அற்றவர்களாக உள்ளனர். இன்றைய காலகட்டத்தில், இலக்கியக்கல்வி என்பது அதற்குரிய முக்கியத்துவத்தையும், பொருத்தப்பாட்டையும் உணர்த்தும் விதமாக மறுவடிவமைப்பு செய்ய எண்ணற்ற சாத்தியங்களும், நிர்பந்தங்களும் நம்முடைய சூழலில் உள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியரான முனைவர். சு.வேங்கடராமன் தன்னுடைய ‘அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் 12ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டு வரை வரலாற்றாசிரியர்கள் கவனப்படுத்தாத முக்கியம் வாய்ந்த சில இலக்கியக்குரல்களைப் பதிவு செய்துள்ளார். நீண்டு பரந்த தமிழ் இலக்கிய வரலாறு இன்னும் அறியப்படாத பல கொண்டதாகவே உள்ளது. நம்முடைய நாட்டுப்புறவியலும், நாடகவியலும் பல்கலைக் கழகங்களிலும் இன்னும் சரியாக அறிமுகப்படுத்தப்படாத நிலையே உள்ளது. அத்துறைகள் செயல்படும் ஒரு சில இடங்களில் கற்றுத் தேர்ந்தவர்களின் திறன்களின் பயன்படுத்தக்கூடிய எந்தவிதமான கட்டமைப்பு இல்லை. ஒரு சமூகத்தின் வாழ்வியல் பார்வைகளை வளப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கொண்ட இலக்கியம், வரலாறு, நுண்கலைகள் ஆகியவற்றின் உயர்கல்வியும், பயன்பாடும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.
ஒரு சூழலில் படைப்புணர்வு, ரசனை, கலைகளின் அங்கீகாரம் போன்றவை பெறும் இடமே அச்சூழலின் தரத்தையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் விசயமாக உள்ளது. வெறும் பொழுதுபோக்கு நோக்கம் கொண்ட வணிகப் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் கடந்த ஐம்பதாண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. இவை இழிந்த உத்திகளுடன் மலிவான ரசனையையோ ஊக்கப்படுத்தி வருகின்றன. தரமான இலக்கியம், தரமான சினிமா தரமான நாடகம் என்பது மிகவும் சிறுபான்மைப்பட்டதாகவே உள்ளது. வர்த்தக நோக்குகளால் வன்முறையும், பாலியல் வக்கிரமுமே மலிந்து நடைமுறையாகியுள்ள இச்சுழலில் சமூகத்தின் மென்மையான உணர்வுகளையும் மதிப்பீடுகளையும் சிதைத்து மனித உறவுகளை கொச்சைப்படுத்தி வருகிறது. இலக்கிய மேம்பாட்டை ஊக்குவிக்காத அரசு மெத்தனம் போலவே இங்கு அகாடமிகளும், நிறுவனங்களும் சமகால இலக்கியப் போக்குகள் பற்றிய உணர்வின்றி மேலோட்டமானதும்,வணிக வெற்றி பெற்றதுமான ஜனரஞ்சக எழுத்துக்களையே கொண்டாடி வருகின்றன. தமிழின் சீரிய படைப்பாளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். நல்ல இலக்கியப் பரிச்சயத்துக்கான எல்லா வாய்ப்புகளும் பெற்ற இந்த நிறுவனங்கள் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவு வணிக எழுத்துக்களைத் தாண்டி வேறு போக்குகளை அறியாத இலக்கிய மொண்ணைத்தனத்துடன் செயல்படுகின்றன. தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்த கடந்த காலப் படைப்பாளிகளான ந.பிச்சமூர்த்தி, மௌனி, கு.ப.ராஜகோபாலன், ஆர்.சண்முகசுந்தரம், சுந்தரராமசாமி, ப.சிங்காரம், ஆதவன், சம்பத், நகுலன், ஆத்மாநாம் போன்றவர்களும் சமகாலப் படைப்பாளிகளான ஞானக்கூத்தன், வைதீஸ்வரன், தேவதச்சன், தேவதேவன், பிரம்மராஜன், அம்பை, ஆனந்த், வண்ணதாசன், வண்ணநிலவன், ஆ.மாதவன், பா.செயப்பிரகாசம், பூமணி, சோ.தர்மன், இமையம், தமிழ்செல்வி போன்றவர்களும் இந்த அகாடமிகளின் கவனத்திலேயே இல்லை. தங்களுடைய குழு உறுப்பினர்களுக்குள்ளேயே பரிசு வழங்கிக் கொள்வதும், அரசு அதிகாரத்தை அடிவருடி வாழ்வதும் தான் இந்த அகாடமிகளின் செயல்பாடுகளாக உள்ளன.
இத்தகைய மலிந்த ரசனைகளாலும், மதிப்பீட்டு சரிவுகளாலும் சிறுமை கண்டு பொங்குவாய்’ என்றிருந்த தமிழ் மரபின் வரலாற்று அற உணர்வு இன்று கேள்விக்குரியதாகி உள்ளது. சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி என்றபடிக்கு மனிதப் பேரவலம் கண்டும் ஒரு கொடூரப் பேரமைதிக்கு நம்மைத் தள்ளியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் நான் மதிக்கக்கூடிய ஒரு தமிழ்ப் பேராசிரியர் மதுரையிலிருந்து எனக்குப் போன் செய்து செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்க முடியுமா ? என்று கேட்டார். மாநாடு எந்த சந்தர்ப்பத்தில் எந்த நோக்கத்துக்காக நடத்தபடுகிறது என்பதை உணர்ந்து கொண்டு படைப்பாளிகள் ஒரு தார்மீக நிலைப்பாடு எடுக்க வேண்டிய தருணம் இது என்று அவரிடம் கூறினேன். அவர் மேலும் வலியுறுத்தாமல் என்னுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வதாகக் கூறினார். மாநாட்டு எதிப்பு LTTE ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து எழுவதாகக் கூறி எதிப்பை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தவாறு உள்ளன. ஈழப்பிரச்சனையில் திமுக அரசின் சந்தர்ப்பவாத பாசாங்கு அரசியலை விமர்சிக்க ஒருவர் LTTE ஆதரவாளராக இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இது முற்றிலும் மனித உரிமைகள் சார்ந்த, வதைபடும் மனித வாழ்நிலை குறித்த ஒரு மனிதாபிமான நிலைப்பாடு. LTTE எதிர்நிலையிலும் இந்த நிலைப்பாட்டிற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு, தொடர்ந்து இந்தப் பிரச்சனையில் நாடகக் காட்சிகளையே அரங்கேற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசாங்கத்தின் இந்த மாநாட்டுத் தேர்வு அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்படக்கூடியது என்றாலும், மொழி வளர்ச்சி சார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும் இங்கு எத்தகைய சூழலும், கட்டமைப்பும் உள்ளது என்பதை படைப்பாளிகள் எளிதாகப் பரிசீலிக்க முடியும்.
எங்களுடைய பல நாடக ஒத்திகைகளில் நல்ல கல்வித் தகுதி உள்ளவர்கள் கூட தமிழ் வசனங்களை சரளமாகப் படிப்பதற்கும், உச்சரிப்பதற்கும் சிரமப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். எங்களுடைய பள்ளி நாட்களில் பாடங்களை எல்லோரும், வாய்விட்டுப் படிப்பது. மனப்பாடப் பாடல்களை வாய்விட்டு உரிய நிறுத்தங்களுடன் சொல்வது போன்றவை நடைமுறையில் இருந்தன. வாய்விட்டுப் படிக்கும் நிலையிலேயே மொழிப்பிரயோகத்துடன் ஒரு நெருக்கமான உறவு சாத்தியப்படுகிறது. தேவாரம் மற்றும் திருப்பாவைப் பாடல்கள் பாடப்படுவதைக் கேட்கக் கேட்க மொழியின் நுண்மை குறித்த உணர்வுகள் பெருகி இருக்கின்றன. இவ்வாறு பள்ளி நாட்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கியமே மேலான தேர்ச்சிகளையும், புரிதல்களையும் நோக்கி அழைத்துச் சென்றதை என்னால் உணரமுடிகிறது. இன்று உயர்கல்வியில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுத்தவர்களிடையே கூட மொழியுடனும், இலக்கியத்துடனும் ஒரு எந்திர ரீதியாக உறவுநிலையே உள்ளது. அது அவர்களுடைய படைப்புணர்வுடன் இணைந்ததாக இல்லை. நான் நாடகம் சார்ந்து உரையாற்ற சில கல்லூரிகளின் தமிழ்த்துறைக்கு சென்றபோது அங்கு இலக்கியத்துறை ஒரு புறக்கணிக்கப்பட்ட துறைபோல் செயல்படும் விதம் வருத்தமளிப்பதாக இருந்தது. ஆசிரியர்களும், மாணவர்களும் இலக்கியப்படிப்பின் பயன்பாடு குறித்த எந்த நம்பிக்கையும் அற்றவர்களாய் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் அந்தத்துறை இயங்குவதைப் பார்க்க முடிந்தது. உண்மையில் இன்றைய உலகமயமாக்கல் சூழலில் மனித வள மேம்பாட்டுக்கான பல்வேறு சாத்தியங்கள் கொண்ட இலக்கியம், வரலாறு, தத்துவ நுண்கலைகள் ஆகிய துறைகள் அவற்றின் முக்கியம் உணரப்படாமல் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன.
பட்ட மேற்படிப்புக்குப் பிந்தைய ஆய்வுநிலையிலும் கல்வெட்டுகள் சார்ந்தும் ஓவியம், சிற்பம், நடனம், கூத்துவகைகள், இசைக்கருவிகள், தத்துவத்தேடல்கள் என தமிழ் வாழ்வியலின் அறியப்படாத பல பகுதிகள் எண்ணற்ற ஆய்வுகளையும் உரையாடல்களையும் எதிர்நோக்கியபடி உள்ளன. நவீன சிந்தனையும், சமகால இலக்கியப் பரிச்சயமும் உள்ள ஒரு சிலரே பாடத்திட்டங்களைக் கடந்து இலக்கியப்படிப்பை வாழ்வியலுடன் இணைத்துப் பார்க்கும் பார்வையை மாணவர்களுக்கு வழங்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். இலக்கியப்படிப்பின் எல்லைகளை விஸ்தரிக்கவும், ஆய்வுக்கான புதிய பார்வைகளையும் திறவுகோல்களையும் உருவாக்குவதற்கான எண்ணற்ற சாத்தியங்கள் நம்முடைய சூழலிலேயே இருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கான ஆர்வங்களும், நிறுவன ஆதரவும் உயர்கல்விச் சூழலில் மிகவும் குறைவாகவே உள்ளன. தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் இன்னும் நாடகம் என்பது அங்கீகரிக்கப்பட்டத் தனித்துறையாக இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் நிகழ்கலைகளை ஊக்குவிப்பதற்கான நிகழ்கலை மையம் ஒன்று தமிழ்நாட்டில் எங்கும் இல்லை. எளிய மக்களின் அழகியல் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாட்டுப்புறக் கலைகள் குறித்து இவ்வளவு ஆண்டுகளாக அக்கறை காட்டாத அரசாங்கம் அண்மையில் சில ஆண்டுகளாக சென்னை சங்கமம் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு திருவிழா கண்காட்சி போல அவைகளை காட்சிப்படுத்தி வருகிறது. ஆனால் நாட்டுப்புறக்கலைஞர்கள் இவற்றையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ளதால் இவை தொடர்ந்து போதிக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. நாட்டுப்புறக்கலைகளை அழியாமல் பாதுகாக்கவும், கலாச்சார நீரோட்டத்துடன் அவற்றை தொடர்ந்து இணைத்துச் செல்லவும் மாவட்டந்தோறும் நிகழ்கலை மையங்கள் தேவைப்படுகின்றன.
செம்மொழி மாநாட்டுக்கு 300 கோடி ரூபாய் செலவழிக்கத் தயாராக உள்ள அரசாங்கம் சில கோடி ரூபாய் செலவழித்து பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் உரிய கட்டமைப்பை உருவாக்கி இலக்கியம் மற்றும் நுண்கலைக் கல்வியின் தரத்தையும் பயன்பாட்டையும் ஊக்குவித்தால் ஒரு இளைய தலைமுறை பயன்பெறும். ஆனால் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடாமல் விழா, பகட்டு, வெற்றுக் கோசங்கள் என்பதே முந்தைய அரசின் நடைமுறையாக இருந்தது. திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்த இந்த 40 ஆண்டுகளில் இதுவரை மூன்று உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. அவை வெறும் அரசியல் திருவிழாக்காளாகவும், துதிபாடும் வீர உரைகளாகவும் தான் நிகழ்த்தப்பட்டனவே தவிர தமிழ்க்கல்வியின் தரம், இலக்கிய மேம்பாடு, பிறமொழி இலக்கிய அறிமுகம்,கலைகளின் ஊக்கம் ஆகியவை எந்த அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் ஏற்றம் பெற்றன என்பது பரிசீலனைக்குரியது. அரசின் ஆதரவின்றி நடத்தப்படும் இலக்கியச் சிறுபத்திரிகைகளும், அவை சார்ந்த படைப்பாளிகளின் படைப்பு முயற்சிகளும் தான் ஒரு செறிவான கலை, இலக்கியச் சூழலுக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தில் அரசின் கண்காணிப்பில் இயங்கும் மக்கள் தொடர்பு சாதனங்களான தகவல் ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் கலாச்சாரம் குறித்த எத்தகைய செய்திகளை வெகுஜனப் பார்வைக்கு வழகியுள்ளன என்பதைப் பார்க்க வேண்டும் முற்றிலும் கலாச்சார உணர்வற்ற, அப்பட்டமான வணிகக் கருத்தாக்கத்தையே இந்த ஊடகங்கள் இதுவரை முன்னெடுத்து வந்துள்ளன. வன்முறைக்கும், பாலியல் வக்கிரத்திற்கும், தரமற்ற ஆர்ப்பாட்ட அரசியலுக்கும் இந்த ஊடகங்கள் தரும் முக்கியத்துவம் தமிழ் சமூகத்தின் மனநிலையைப் பெரிதும் பாதித்துள்ளதை நாம் பார்க்க முடியும். குடும்ப அளவிலும், சமூக அளவிலும் இன்று மனித உறவு நிலைகள் சீர்கெட்டிருப்பதற்கு இந்த ஊடக மதிப்பீடுகள் பெரும் பங்காற்றியுள்ளன. நம்முடைய தமிழ்ச் சமூகம் பெண்ணின் பங்களிப்பை ஆரோக்கியமாக உள்வாங்கி ஒரு திறந்த சமூக அமைப்பாக இயங்கியதை மறந்து போலித்தனமான கற்பிதங்களுடனும், பிற்போக்குப் பார்வையுடனும் பெண்ணின் இயல்பான சுதந்திர வெளியை மறுத்தும், ஆண் பெண் உறவுகளைக் கொச்சப்படுத்துவதையும் இந்த ஊடகங்கள் செய்து வருகின்றன. பரபரப்பு அரசியல், சினிமாத்தனம் இவற்றைக் கடந்து மாறிவரும் கலாச்சாரத்தின் பிரச்சனைகளைக் கணக்கில் எழுத்துக் கொள்ளவோ, புதிய சமூக சமன்பாடுகளுக்கு எதிர்வினையாற்றவோ இயலாத நிலையிலேயே இவை உள்ளன.
தரமற்ற அரசியலும், கண்மூடித்தனமான வன்முறையும், பாலியல் வக்கிரங்கள் நிறைந்த ஊடக வெளியும் தமிழ்ச் சமூகத்தில் எண்ணற்ற மதிப்பீட்டுச் சிதைவுகளை உருவாக்கி தமிழனின் வரலாற்று அற உணர்வு என்பது இன்று கேள்விக்குரியதாகி உள்ளது. சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகிக்கு அடைக்கலம் தரும் ஆயர்குலப் பெண் மாதிரி கோவலன் கொலையுண்டதும் தன்னிடம் அடைக்கலமாக வந்தவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்று “அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்காள்’ என்று கதறி உயிர் துறக்கிறாள். குலோத்துங்க சோழனின் அதிகாரத்துக்கு அடி பணிய மறுத்து ‘ உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்’ என கலகக்குரல் எழுப்புகிறான் கம்பன். துதிப்பாடல்கள் போலவே அதிகார எதிப்பும், கலகக்குரல்களும், தார்மீக நிலைப்பாடுகளும் கொண்ட பன்மைச் சமூகமாகவே தமிழ் சமூகம் இயங்கியிருக்கிறது. ஆனால் இன்று படைப்பு ஆளுமை மிகுந்த படைப்பாளிகள் கூட பிராபல்யத்துக்காகவும், அங்கீகாரத்துக்காகவும், அதிகாரத்துக்குத் துணை போகும் அவல நிலை உள்ளது. அண்மையில் கடந்த தீராநதி இதழில் நவீன எழுத்தாளர் காலபைரவன் கடுமையான கிண்டல் தொனியில் அரசாங்கத்தின் சுயவிருதுக் கலாச்சாரத்தை சாடியுள்ளார். இன்றைய இலக்கியம் என்பது மையப்படுத்தப்பட்ட ஒற்றை அதிகாரத்துக்கு வெளியிலுள்ள சிறுகதையாடல்களின் சிதறலை நோக்கிய ஒரு வெளிப்பாடு தான்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகத் தமிழ் செம்மொழி மாநாடும் தமிழ் படைப்புச்சூழலும் (கட்டுரை)”