மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அரசின் மலிவு விலை காய்கறிக்கடை- ஒரு கண்ணோட்டம்.

ஆச்சாரி

Jul 1, 2013

தமிழகத்தில் என்றும் இல்லாத  அளவிற்கு காய்கறிகளின் விலை வானுயர உயர்ந்த நிலையில் சென்னையில் மட்டும் 31 மலிவு விலை காய்கறிக்கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. தமிழகத்திற்கு வழக்கமாகப் பெய்யக்கூடிய தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதாலும். விளை நிலங்கள் எல்லாம் வீடுகளாகி வருவதனாலும், பிறமாநிலங்களிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்வதாலும் அனைத்துக் காய்கறிகளின் விலையும் உயர்ந்தது. சின்ன வெங்காயம், பீன்ஸ், தங்காளி, இஞ்சி, பூண்டு, அவரை, மிளகாய், கேரட் போன்றவை உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்வினால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்படியான சூழலில், தமிழக அரசு  பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளைத் திறக்க முடிவு செய்தது. வெளி மார்க்கெட்டில் காய்கறிகள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. நியாயமான விலையில் தரமான காய்கறிகளை விற்க “பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள்” சென்னையில் 31 இடங்களில் திறக்கப்பட்டது.

திறக்கப்பட்ட 31 கடைகளுக்குத் தலைமை இடமாக தேனாம்பேட்டையில் உள்ள டி.யு.சி.எஸ் காமதேனு சிறப்பங்காடியில், பண்ணைப் பசுமை காய்கறிக்கடையை தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோ கான்பரன்ஸ் ­மூலம் தமிழக முதல்வர் திறந்துவைத்தார். முதல்வர் அவர்கள் இந்த இடத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுவதற்குக் காரணம் 18.10.1985  அன்று மாண்புமிகு டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்த டி.யூசி.எஸ் காமதேனு சிறப்பங்காடி, 1985ஆம் ஆண்டு  கூட்டுறவு அமைச்சராக திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருந்தார். இதன்  மூ­லம் முதல்வர் அவர்கள், மலிவு விலைக் காய்கறிக்கடைக்குத் தலைமை இடமாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததின் காரணத்தை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

சென்னையில் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள டி.யூ.சி.எஸ் சிறப்பங்காடியிலும், கீழ்பாக்கம் உள்ளிட்ட 5 இடங்களிலும், சிந்தாமணி இது தவிர இரண்டு மொபைல் வாகனங்களிலும் காய்கறிகள் குறைந்த விலையில் விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நகரின் முக்கியமான இடங்களில் இந்த வாகனம் செல்லும்போது பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிப் பயன் பெறலாம், என்ற அறிவிப்பும் வந்திருக்கிறது.கூட்டுறவு சங்கம் மூ­லம் அண்ணா நகர், திருமங்கலத்திலும், இப்புதிய காய்கறிக் கடைகள் திறக்கப்படுகிறது. காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை ­மூலம் தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், பார்க்டவுன் ரெயின்போ கூட்டுறவு சங்கங்கள் மூ­லமும் இக்கடைகள் திறக்கப்படுகின்றன.காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளின் விளை நிலங்களிலிருந்தும்  கூட்டுறவு சங்கங்களின் கொள்முதல் மையங்களிலிருந்தும் காய்கறிகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து நேரிடையாக ஒவ்வொரு நாளும் கொள்முதல் செய்யப்படும் காய்கறிக்களுக்கான தொகை அன்றைய தினமே சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதால். விவசாயிகள் இடைத்தரகர்களை நாடவேண்டிய சூழல் தவிர்க்கப்படுவதுடன் அவர்களுக்கு உரியவிலை உடனடியாக கிடைக்கவும்  ஏதுவாகிறது.மலிவு விலைக்கு காய்கறி விற்பது எப்படி?

விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு அன்றைய அடக்க விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும்பயன் அடையவுள்ளனர். இதனால் காய்கறிகளின் விலையும் குறைத்து விற்கப்படுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் காய்கறிகள் திண்டுக்கல் மாவட்டம், தங்கம்பட்டி, மணியக்காரப்பட்டி, பழனி சத்திரப்பட்டி, திருவள்ளூர் மாவட்டம்-ஆரணி, கிருஷ்ணகிரி மாவட்டம்-பாகலூர், பேரிகை, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், வெள்ளிமலை, நாமக்கல் மாவட்டம்- கொல்லி மலை,  நீலகிரி மாவட்டம் போன்ற இடங்களில் காய்கறி அதிமாக விளையும் பகுதிகளில்  கூட்டுறவு சங்கங்கள் நேரடியாகக் காய்கறிகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் சென்னை, தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி வளாகத்தில் குளிர்சாதன அறையில் பாதுகாக்கப்படுகிறது.

இவ்வாறு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் சென்னையில் உள்ள தேனாம்பேட்டைக்கு,  ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ராஜா அண்ணாமலைபுரம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கீழ்பாக்கம் பெரியார் நகர், கண்ணம்மா பேட்டை மற்றும் துரைப்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள டி.யூ.சி.எஸ் விற்பனை நிலையங்களிலும், அண்ணா நகர், வில்லிவாக்கம் மற்றும் ஷெனாய் நகர் ஆகிய 3 இடங்களிலுள்ள பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கடைகளிலும், தாம்பரம் கிழக்கு , இராயப்பேட்டை, போரூர், பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் ஆகிய 5 இடங்களிலுள்ள காஞ்சிபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக் கடைகளிலும், மாத்தூர் மற்றும் ஆர்.வி.நகர் ஆகிய இரண்டு இடங்களிலுள்ள வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக் கடைகளிலும், அடையார் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய 2 இடங்களிலுள்ள தொடக்க கூட்டுறவு பண்டகசாலைக் கடைகளிலும், அண்ணாநகர், நந்தனம், கீழ்பாக்கம், கோபாலபுரம், இந்திரா நகர் மற்றும் ஆனைமேடு ஆகிய 6 இடங்களிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கடைகளிலும் என மொத்தம் 29 கடைகள் ­மூலம் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த 29 கடைகளுக்கும் தலைமை இடமாக விளங்குகின்ற தேனாம்பேட்டையிலுள்ள டி.யு.சி.எஸ் காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடிக்கு காலை 6.30 மணியளவில் சென்று என்ன நடக்கிறது? எனக்கவனித்தேன்.  டி.யு.சி.எஸ் லாரிகளிலும், மற்ற தனியார் கனரக வாகனங்ளிலும் புத்தம் புதிதான காய்கறி மூ­ட்டைகள் வந்திறங்கியது. பெட்டி பெட்டியாய் தக்காளி, வெங்காயம் என பலவாறான காய்கறிகள் இறங்குமதி செய்யப்பட்டது.

அதிகாலை 6.30க்கு இந்த தலைமை இடமானது அவ்வளது சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 29 மலிவு விலை காய்கறி மையங்களிலுள்ள தலைமைப் பொறுப்பாளர்களும், அக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களும் தங்கள் கடைகளுக்குத் தேவையான காய்கறிகளை எடைபோட்டுக் கொண்டு தங்களுக்காக பிரித்து வைக்கப்பட்ட கனரக வாகனத்தில் காய்கறிகளை ஏற்றக்கொண்டிருந்தனர். ஒருபுறம் “எப்போங்க இங்க காய்கறிகளை விலைக்கு வைப்பிங்க?” எனக் கேட்காத குறையாக பெண்களும், ஆண்களும் கொண்டு வந்திருந்த கட்டைப் பைகளோடு காய்கறிகள் வாங்கக் கூட்டமாகக் காத்து நிற்கின்றனர். சரியாக 8.30 மணிக்கெல்லாம் அனைத்து மலிவு விலை மையங்களுக்கும் காய்கறிகள் பிரித்து அனுப்பப்பட்டபின் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க  ஆவலாக பெட்டி பெட்டியாகக் காய்கறிகள் கட்டாந்தரையில்  வரிசையாக வைக்கப்பட்டது.  “இப்போது பொதுமக்கள் வாங்கலாம்” என மலிவுவிலைக் காய்கறி மைய தலைமை அதிகாரி சக்தி சரவணன் அவர்கள் அறிவித்ததும் பொதுமக்கள் ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கக் குவிந்தனர். காய்கறிகள் வாங்க வந்த பொது மக்களுக்கு கைகளில் பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட்டது. ஒருபுறம் மக்கள் காய்கறிகள் வாங்க மறுபுறம் கணிப்பொறி உதவியுடன் காய்கறிகளுக்கான பில் போடப்பட்டது.

தேனாம்பேட்டையில் உள்ள இந்த “பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை” யில் பல பிரிவுகளில் விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில் பண்ணைப்பசுமை நுகர்வோர்கடை (நியாயமான விலை, தரமான காய்கறிகள்) ஒரு பிரிவாகவும், காமதேனு  கூட்டுறவு அருந்தகம் ஒரு பிரிவாகவும், 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் (விற்பனைப் பிரிவு) ஒரு பிரிவாகவும், சிறுவனப் பொருட்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்கள் விற்பனைப்பிரிவு ஒரு பிரிவாகவும், சிறுகுளிர் பதன அறை ஒரு பிரிவாகவும், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் விற்பனைப் பிரிவு ஒரு பிரிவாகவும், பேன்சி மற்றும் பரிசுப் பொருட்கள் விற்பனைப் பிரிவு ஒரு பிரிவாகவும் இங்கு உள்ளன.

இங்கு கிடைக்கும் பொருட்கள்:

படிவகைகள்: ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, திராட்சை, பன்னீர் திராட்சை, வாழைப்பழம் (ரோடஸ்டா), வாழைப்பழம் (பூவன்) வாழைப்பழம் (ரஸ்தாலி), வாழைப்பழம் (மலை), வாழைப்பழம் (கற்பூர வள்ளி), சப்போட்டா பழம், மாம்பழம் (மல்கோவா, நீலம், பங்கனப் பள்ளி, ருமான்சா, ஒட்டு மாம்பழம்).

வாசனைப்பொருட்கள்

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை.

சிறுவகைப் பொருட்கள்

தேன், மிளகு, கொய்யா, அன்னாசி, வாழை, திணை மாவு, சீயக்காய், கடுக்காய், துடைப்பம், ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய்.

வடகம்  வத்தல் வகைகள்

வடகம், வத்தம், வகைகள், அப்பள வகைகள், ஊறுகாய் வகைகள், பருப்புப்பொடி, இட்லிப் பொடி, பூண்டுப்பொடி.

உடனடி உணவு வகைகள்

இட்லி மாவு, சப்பாத்தி, பரோட்டா, பூரி, ஜாம், பிரட்.

காய்கறி விலைப்பட்டியல்

காய்கறிகள்                              அளவு(1 கிலோ)                        ரூபாய்

பெரிய வெங்காயம்              1 கிலோ                                          ரூ. 20

சாம்பார் வெங்காயம்          1 கிலோ                                          ரூ.60

தக்காளி                                       1 கிலோ                                          ரூ.30

உருளை                                      1 கிலோ                                          ரூ.20

சேனைக்கிழக்கு                     1 கிலோ                                           ரூ.25

கருணைக்கிழக்கு                 1 கிலோ                                           ரூ.30

கத்தரிக்காய்                             1 கிலோ                                           ரூ.20

முருங்கைக்காய்                   1 கிலோ                                          ரூ.30

வெண்டை                                 1 கிலோ                                          ரூ.24

அவரை                                       1 கிலோ                                          ரூ.40

முள்ளங்கி                                 1 கிலோ                                          ரூ.16

கோவைக்காய்                       1 கிலோ                                           ரூ.20

புடலங்காய்                              1 கிலோ                                           ரூ.25

வாழைக்காய்                         1 ஒன்று                                           ரூ. 5

பாகற்காய்                                1 கிலோ                                           ரூ. 25

சுரைக்காய்                              1 கிலோ                                            ரூ.10

வெள்ளரிக்காய்                    1 கிலோ                                            ரூ.15

மாங்காய்                                  1 கிலோ                                           ரூ.15

கேரட்                                          1 கிலோ                                            ரூ.40

பீன்ஸ்                                         1 கிலோ                                           ரூ.50

முட்டைகோஸ்                    1 கிலோ                                           ரூ.18

சௌ சௌ                                1  கிலோ                                         ரூ. 25

பீட்ரோட்                                    1 கிலோ                                          ரூ. 20

காலி பிளவர்                            ஒன்று                                            ரூ. 15

நூக்கல்                                      1 கிலோ                                           ரூ. 15

பச்சைமிளகாய்                   1 கிலோ                                            ரூ. 30

இஞ்சி                                         1 கிலோ                                            ரூ. 140

எலுமிச்சம்பழம்                   ஒன்று                                              ரூ. 1.50

கறிவேப்பிலை                                                                                  இலவசம்

தேங்காய்                                   ஒன்று                                              ரூ. 8

கொத்தமல்லி                          கட்டு (1)                                          ரூ. 6

(இந்த காய்கறி விலைப்பட்டியல் சில நாட்களில் கூடலாம், குறையலாம் எனக்கூறினர்)

பொதுமக்கள் கருத்து (மலிவு விலை கடை பற்றி)

கிருஷ்ணவேணி  தேனாம்பேட்டை:     இங்கே வரும் காய்கறிகள் மிக சுத்தமாக இருக்கிறது. விலையும் குறைவாக இருக்கிறது. அதனால் மற்ற கடைகளுக்குச் செல்லாமல் இங்கே வந்து வாங்குகிறேன். இது எனக்குப் பயனாகவே உள்ளது.

கருணாகரன்  (வங்கி அலுவலர்) தி. நகர்:

நான் தி.நிகரில் இருந்து இங்கு காய்கறி வாங்க வருகிறேன். எங்கள் பகுதியில் உள்ள காய்கறிக்கடையிலும், தள்ளு வண்டியிலும் ஸ்பென்சரிலும் வரும்  காய்கறிகளின் விலை அதிகம். இங்கே மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதுபோல் மொபைல் காய்கறிக்கடைகள் நிகரம் முழுக்க இருந்தால் மக்கள் அலையாமல் அந்தந்த இடங்களில் வாங்கிக் கொள்ள வசதியாக இருக்கும்.

கு.அறிகரன் வணிகர் -தி.நகர்:

இந்த மலிவு விலை காய்கறிகள் கடைத்திட்டம்  மிக நல்லதிட்டம். இது பாமர மக்களுக்கு பசுமையான திட்டம். இந்தியாவிலேயே இந்தத்திட்டத்தை தமிழக அரசைத் தவிர எவரும் செயல்படுத்தியதில்லை. பாமர மக்கள் பயனைடையும் விதத்தில் இது போல இன்னும் பல திட்டங்கள் வரவேண்டும் என்றே விரும்புகிறேன்.

வனிதா  கணிப்பொறியாளர்  தேனாம்பேட்டை:

இங்கே காய்கறிகள் விலை குறைவாக உள்ளது. எங்களுக்கு அருகாமையிலும் உள்ளது. சாதாரண கடையில் வாங்குபவது போல் இல்லாமல் நாங்களே எங்களுக்குத் தேவையான காய்கறிகளை இங்கே தேர்வு செய்து வாங்கிக்கொள்கிறோம். முன்பு கோயம்பேடு செல்வோம். தற்போது இக்கடை வந்ததால் எங்களுக்கு மிக வசதியாக உள்ளது. இது சிறப்பான திட்டம் தான்.

பாலு -ETA-கன்ஸ்ட்ரக்சன்:

சாதாரண காய்கறிக்கடைக்குச் சென்றால் நமது விருப்பம் போல காய்கறிகளை வாங்க முடியாது. அவர்களே அள்ளி போட்டு அனுப்பி விடுவர். ஆனால் இங்கே எங்களுக்கு தேவையான காய்கறிகளை நாங்களே எடுத்துக்கொள்கிறோம். வெளியில் இருக்கும் கடைகளில் கண்டபடி விலை ஏற்றி, காய்கறிகளை விற்கின்றனர். ஆனால் இங்கே குறைவானதாக இருப்பதால் எங்களுக்கு இது வசதியாக இருக்கிறது.

தவிர இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அதிகாலை நாங்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்க முடியவில்லை, அலுவலகம் போகும் பரபரப்பில் இருக்கிறோம். இக்கடை காலை 7 மணி முதல் மாலை 7 மணிக்குள் ­மூடிவிடுகின்றனர். நாங்கள் வேலைவிட்டு வரவே இரவு 8 மணி ஆகிறது. அதனால் இரவில் கடை நேரத்தை கொஞ்சம் அதிகரித்தால் நன்றாக இருக்கும்.

வேல்முருகன் – ஆழ்வார்பேட்டை:

இங்கு காய்கறி குறைவான விலையில் கிடைப்பது மகிழ்ச்சியான விசயம் தான். ஆனால் இங்கே காய்கறிகளை கால்கிலோ, அரைகிலோ என பாக்கெட் பண்ணி வைத்திருந்தால் உடனே வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும். அடுத்து போடுற பில் சரியாக அச்சாகவில்லை நீங்களே பாருங்கள் என என்னிடம் காட்டினர் (உண்மையில் சரியாக அச்சாகாமல் இருந்தது)

மலிவு விலை கடை நேரம்:

காலை    8 மணி   முதல் 11 மணி வரை

மாலை  4 மணி    முதல்  7 மணி வரை

மொத்தத்தில் மலிவு விலை காய்கறிக்கடையால் மக்கள் பலன் அடைந்துள்ளனரே  என்று கூறவேண்டும். தவிர இதற்குள் இருக்கும் சின்னஞ்சிறு குறைகளை நிவர்த்தி செய்து கொண்டால் இத்திட்டம் எல்லா மக்களையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை.

For www.eduessayhelper.org/ example could be chunked into

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “அரசின் மலிவு விலை காய்கறிக்கடை- ஒரு கண்ணோட்டம்.”
  1. S PANDY says:

    sir, naanum enadhu nanpargalum tiruvadanai taluka andavoorani arugil intha buisiness seigirom. mr arul thomas contact number koduthaal nadraga irukkum

அதிகம் படித்தது