கனடாவில் தமிழ் விழா
ஆச்சாரிJul 1, 2013
வட அமெரிக்காவில் மொழியின் வளர்ச்சியும், பண்பாட்டு வளர்ச்சியும் பெருமளவு விரிவடைந்துள்ளது அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் கண் தெரிகிறது. அமெரிக்காவில் தமிழ்ச் சங்கங்கள் இல்லாத பெருநகரங்களே இல்லை எனலாம். அங்கு நம் மொழியின் சிறப்பையும், பண்பாட்டின் தேவையையும் கூறும் விழாக்கள் வெகு அளவில் நடைபெற்றுவருகின்றன. வாரம் தோரும் பரதநாட்டிய நிகச்சிகளும், கருநாடக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருவது இங்கு வாழும் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் இங்கு பிறந்து வாழ்ந்துவரும் இளைய தலைமுறையினரும் கலைக்கு கொடுத்துவரும் முதன்மையை தெரிவிக்கிறது.
இதற்கு முத்தாய்ப்பு வாய்த்தாற்போல் கடந்த 25 ஆண்டுகளாக வடஅமெரிக்காவில் செயல்பட்டு வரும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா விடுதலையடைந்த நாளில் தமிழ் மொழிக்கும், பண்பாட்டிற்கும் விழாவெடுத்துக் கொண்டாடிவருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழினச் சிக்கலையும் வட அமெரிக்க மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், அரசியல் பெருமக்களுக்கும் எடுத்துச் சென்று வருகிறது. அனைத்து தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தமிழர் உரிமைக்கும் முதன்மைக் கொடுத்துவருவது இப்பேரவை.
இவ்விழாவில் பெரும் தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார், பெரும் எழுத்தாளர்களான பிரபஞ்சன், ச. இராமகிருட்டிணன் போன்றோரும், தமிழ்ப் பேராசிரியர்களான முனைவர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் ர. விஜயலக்ஷ்மி, முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் போன்றோர் பங்கேற்றுள்ளனர். தமிழர் உரிமைக்காக பாடுபட்டுவரும் திரு. வைகோ, அய்யா நல்லக்கண்ணு போன்றோரும், திரையிசை வல்லுநர்கள் இளையராசா, பரத்வாஜ், பாடகர்கள் சௌந்திரராசன், பாலசுப்ரமணியன், அரிகரன், உண்ணிகிருட்டிணன், வாணி செயராம், சுசீலா, சின்மயி போன்றோரும், நடிகை-நடிகையர் மணிவண்ணன், கமல், சத்யராசு, விக்ரம், சிவக்குமார், கார்த்தி, சினேகா போன்றோர் வந்து விழாக்களைச் சிறப்பித்துள்ளனர். கருநாடக இசைக் கலைஞர்களான திருமதி.சுதா இரகுநாதன், திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன், திரு. புட்பவனம் குப்புசாமி, திரு. திருபுவனம் ஆத்மநாதன், திரு. டி.கே.ச. கலைவாணன் போன்றோர் வந்து தமிழிசைப் பாடல்கள் பாடி தமிழிசைக்கு சிறப்புக் கொடுத்துள்ளனர்.
இந்நாள் வரை அமெரிக்க நகரிலொன்றின் நடைபெற்றுவந்த பேரவையின் தமிழ் விழா முதன் முறையாக 300,000 தமிழர்கள் வாழும் தொரொண்டோ நகரில் நடைபெறவுள்ளது. கனடாவில் முதன்முறையாக நடைபெறுவது பேரவையின் மகுடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லை பதித்துள்ளது. உலகிலே அரசு சாராத தமிழ் அமைப்பொன்று தமிழுக்கு 3 நாள் விழா எடுப்பது பேரவை ஒன்றுதான் என்பது மிகையல்ல. முழுக்க முழுக்க தமிழர்களின் ஆதரவில் இவ்விழாக்கள் நடைபெற்றுவந்துள்ளன. தொரொண்டோ விழாவில் பங்கு கொண்டு நம் மொழியையும், பண்பாட்டையும் சிறப்பிக்க வருபவர்களின் வரிசையைப்பார்த்தால் பேரவையின் தமிழ்ப் பணி தெரியும். 2013 தமிழ் விழாவில் பங்கு பெறவுள்ளோர்.
தமிழின உணர்வாளர்கள் திரு. தமிழருவி மணியன், பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த திரு. சி.மகேந்திரன், ஈழத்திலிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுபினர்கள் திரு. இரா. சம்பந்தன், திரு. சுமத்திரன், திரு. சிரீதரன், திரு. சரவணபவன் போன்றோர் வந்து தமிழினச் சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கவுள்ளனர்.
ஈழச்சிக்கலில் தீவிரமாக ஈடுபட்டு தமிழர்களின் நிலையை உலகிற்கு நடுநிலையில் எடுத்துக் காட்டிவரும் சானல்-4 தொலைக்காட்சியைச் சேர்ந்த கல்லம் மெக்கரே (Director of No Fire Zone, Sri Lanka-Killing fields), எழுத்தாளர் திருமதி. பிராசிஸ் ஹாரிசன் (Author of ‘Still Counting the Deaths), உலகத் தமிழர் பேரவையின் தலைவர் முனைவர் அருட்தந்தை இம்மானுவேல் போன்றவர்கள் சிறப்பு விருந்தினாராகக் கலந்துக் கொண்டு உரையாற்றவுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த நடன கலைஞர் திரு. முரளீதரன் தனது குழுவினருடன் வந்து கனடாவைச் சேர்ந்த நடன மாணவர்களுடன் இணைந்து கல்கியின் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகத்தை வட அமெரிக்க மண்ணில் அரங்கேற்றவுள்ளார். கனடாவைச் சேர்ந்த தமிழர்கள் ஈழத்து கதையான நாட்டுக் கூத்து நிகழ்ச்சியை அளிக்கவுள்ளனர். இது மட்டுமல்லாமல் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலை நிகழ்ச்சியை அளிக்கவுள்ளனர்.
தமிழ்த் திரைக் கலைஞர்களான திரு. சமுத்திரகனி, செல்வி ஓவியா வருகைத் தரவுள்ளனர். நடிகர் இளவரசு தலைமையில் விவாத அரங்கமும், கவிஞர் திரு. யுகபாரதி அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடைபெறவுள்ளன.
திருமதி. சாருலதா மணி அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திரைப்பாடகர் திரு. மனோ தலைமையில் கனடாவைச் சேர்ந்த அக்னி இசைக்குழுவினர் திரையிசை விருந்தை அளிக்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் திருமதி சாருலதா மணி, செல்வி பிரகதி போன்றோரும் பாடவுள்ளனர்.
மேலும் உலகத் தமிழ் அமைப்பு, உலகத் தமிழர் பேரவை, அமெரிக்கத் தமிழர் அரசியல் அவை போன்ற தமிழ் அமைப்புகளின் செயற்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
இதுமட்டுமல்லாமல் இளையோர்கள் நடத்தும் இளையோர் சந்திப்பு, தொழிலதிபர்கள் சந்திப்பு, இளையத் தலைமுறையினரின் தமிழிசை இசை நிகழ்ச்சி, இலக்கிய வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் தனி அரங்கங்களில் நடைபெறவுள்ளன.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (www.fetna.org) தமிழ் விழாவில் கலந்துக் கொள்வோர் ஒரு தரமான தமிழ் நிகழ்ச்சிக்கு வந்த திருப்தியுடன் செல்வது கண்கூடு. கடந்த 25 ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழர்களுக்கு தமிழ் மொழிக்காகவும், தமிழினத்திற்காகவும் பாடுபட்டு வரும் பேரவையை வாழ்த்த வார்த்தையில்லை.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
அன்புடையீர்,வணக்கம்.நான் தமிழ்க் கவிஞன்.இலக்கியப் பேச்சாளன்.மந்திரச் சொற்கள்,மகுடி வார்த்தைகள்,சுந்தரத்தமிழ் நடை எளியேற்குச் சொந்தம்.குவைத் போன்ற நாடுகளில்
பேசியிருக்கிறேன்.இலக்கியம்,ஆன்மிகம்,சமூகத் தளங்களில் சிந்தனைக் கிளர்ச்சியுடன் பேசிவருகிறேன்.
கருத்துப் பரல்தெறிக்க–கவிதைப் புயல்வீச-நெருப்பு மழைபொழிய–எனக்கு வாய்ப்புக் கிட்டுமா? நடிகர் இளவரசு அவர்கள் என்னை அறிவார்கள்.என் பொழிவைக் கேட்டுள்ளார்கள்–குவைத்தில்!நன்றி.
–கவிஞர்.கங்கைமணிமாறன்,செல்:9443408824