நினைவில் நிற்கும் பெரியோர்கள் – 1 (கட்டுரை)
ஆச்சாரிJul 15, 2013
20ம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சி கண்டது. அதற்கு உழைத்த பல அறிஞர்களின் அருஞ்சேவை போற்றுதலுக்குரியது. உடல் ஊனம் என்றதும், நம் வீட்டில் உள்ளவர்களே அவர்களை மேலும் ஊனப்படுத்தி முடக்கும் ஒரு சமுதாயச் சூழலில், தன் தந்தையை 14 வயதில் இழந்த, இளம்பிள்ளை வாதத்தால் தாக்குண்ட ஒரு குழந்தை – ஏழு மாதங்கள் கூட திண்ணைப் பள்ளி செல்ல முடியாமல், வீட்டிலேயே தமிழ் கற்று, மேலும் வடமொழியாகிய சமசுக்கிருதமும் கற்று, வட மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து பல நூல்கள் தந்து, தமிழ் கூறும் நல்லுலகில் மொழிபெயர்ப்பின் வாசலைத் திறந்தவர், தண்டூன்றி நடந்தாலும் தமிழை பீடு நடைபோடச் செய்தவர் முதுபெரும் புலவர், மகா கோபாத்யாய, பண்டிதமணி மு.கதிரேசனார்.
இவர் நான்காம் தமிழ்ச் சங்கம் தொட்டு, புதுக்கோட்டை தனியரசில் – மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை நிறுவி அதனூடாக கணேசர் செந்தமிழ்க் கல்லூரி துவக்கி தமிழை தழைக்கச் செய்தவர். வள்ளல் பாண்டித்துரை,தமிழிசைக் காவலர் அண்ணாமலை அரசர், தென்னாட்டின் ஆலையரசர் தியாகராசர், நாவலர் சோம சுந்தர பாரதியார் என்று பல அறிஞர்கள், புரவலர்கள் தொடர்பில் தொய்வில்லாமல் தமிழுக்கும் தமிழ்ச் சான்றோர்க்கும் அவர் செய்த பணிகள் எண்ணிலடங்கா. அவர் எதனையும் எளிமையாகவும், நகைச்சுவையோடும் சொல்லும் ஆற்றல் உடையவர். அவர் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் நம்மை சுவையுடன், சிந்திக்கவும் வைக்கும்.
1. ஒருமுறை பண்டிதமணி அவர்கள், அவர்மீது மிகுந்த பேரன்பு கொண்ட அன்பர் வீட்டிற்கு அவர் அழைப்பின் பேரில் சென்றார். ஐயாவின் வருகையைக் கண்டு பேருவகை கொண்ட அந்த அன்பர் ஐயா வந்த வாகனத்திலிருந்து அவரது அனைத்து பொருட்களையும் எடுத்துச் சென்று வீட்டினுள் வைத்துவிட்டு ஐயா….வருக…வருக…. என்று இன்பப்பெருக்கில் அழைக்க, சற்றே முக மலர்ச்சியுடன், பண்டிதமணி அவர்கள் அவரைப் பார்த்து ஐயா….. முதலில் எனது ஊன்று கோலைத் தருக…. தருக எனச் சொல்ல அப்போது தான் அந்த அன்பருக்கு ஐயா அவர்கள் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர், நடப்பதற்கு ஊன்றுகோல் இன்றி இவரால் இயலாது என்ற உண்மையை உணரமுடிந்து உடனே அதனை எடுத்துக் கொண்டு வந்தார்.
2. தமிழகத்தில் ஒருமுறை தமிழ் அறிஞர்களும், சஞ்சிகைகளும் கம்பன் யார் ? அவர் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சை சூடுபறக்க நிகழ்ந்து கொண்டிருக்க, ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்க, இதனைப் பார்த்து வருந்திய பண்டிதமணி அவர்கள் தமிழ் செய்தவர்களின் குலம் கோத்திரத்தில் என்ன இருக்கிறது? கம்பை உடையவன் கம்பன், அப்படியெனில் இன்று தமிழகத்தில் கம்பு வைத்திருப்பவன் நான் ஒருவனே. ஆகவே கம்பு உடைய நானே கம்பன் என்றார் அதிரடியாய். பின் நாட்களில் அந்த சர்ச்சையும் மெல்ல அடங்கியது.
3. ஒருமுறை பண்டிதமணி அவர்கள் ஒரு கோவிலுக்குச் சென்றார். அதற்கு அவரது உடலியல் கருதி அவருடன் கோவிலைச் சுற்றிக் காட்டிய அன்பர் அவரது தளர் நடைக்கு ஏற்ப வழி சொல்லி பக்குவமாய் அழைத்துவந்தார். அவர் வரும் வழியில் ஐயா.. பார்த்து, படி உள்ளது எனச் சொல்ல, ஐயா பண்டிதமணி அவர்களும் படியளப்பவனே அந்தப் பரம்பொருள்தானே…!!! படியில்லாமலா இருக்கும் என்றார்.
4.ஒரு முறை ஒரு தமிழ் மன்றக் கூட்டத்தில் ஐயா பண்டிதமணி அவர்கள் தலைமையேற்று சொற்பொழிவாற்றினார். அப்போது பெண்கள் பகுதியில் இருந்து ஓயாது பேச்சொலி கேட்க, தன் உரையினை நிறுத்திய பண்டிதமணி, பெண்கள் மணிகள் அல்லாவா..? அதுதான் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கின்றனர் என்றார். அந்தக் கனத்திலிருந்து பெண்கள் பகுதிலிருந்து சிறு மணி கூட ஒலிக்கவில்லை.
5.ஒரு முறை ஐயா அவரது இல்லத்தில் முகப்பில் உள்ள தாழ்வாரத்தில் அமர்ந்திருக்க, அதிகாலைப் பொழுதில் பால்காரர் வந்து பாத்திரம் நிறைய பால் கொடுத்தார். பண்டிதமணி அவர்கள் அந்தப் பாலில் ஒரு எறும்பு மிதப்பதைப் பார்த்து, அந்தப் பால்காரரிடம், பாருங்கள் பாற்கடலில் ஸ்ரீநிவாசன் பள்ளிகொண்டுள்ளார் என்றார்.
6.கி.பி.1925ம் ஆண்டில் தமிழறிஞர்ரா.இராகவய்யங்கார் முன்னிலையில், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள்தலைமையில் ஐயா அவர்களுக்கு “பண்டிதமணி” என்ற பட்டம்வழங்கிப் பெருமைப்படுத்தியது மேலைச் சிவபுரி சன்மார்க்க சங்கம். அந்த விழாவின் ஏற்புரையில் ஐயா அவர்கள் பேசும் பொழுது, தங்கக் கிண்ணத்தைக் கொண்டு அமுது ஊட்டும் அன்னை குழந்தையை மகிழ்விக்க,கையிலிருக்கும் தங்கக் கிண்ணத்தை கொடுப்பாள். அதன் மதிப்பறியா பச்சிளம் குழந்தையோ அந்தக் கிண்ணத்தை மறுபடியும் தாயிடத்தில் கொடுக்காது.தாயும் குழந்தையின் விருப்பத்தையும்மனதில் வைத்து, தங்கக் கிண்ணத்தின் மதிப்பினையும் கருத்தில் வைத்துகுழந்தையின் கையில் உள்ள கிண்ணத்தை பாதுகாக்கும் எண்ணத்திலேயே இருப்பாள்.அது போலத்தான் அறிஞர்களாகிய தாங்கள் எனக்களித்த பட்டத்தினை நான் மீண்டும்தரப்போவதில்லை, நானே வைத்திருப்பேன். மாறாக தாயுள்ளம் கொண்டவர்களாகியதாங்கள் எல்லாம் நான் ஏதும் தவறிழைக்காமல் தாயுள்ளத்துடன் என்னைகவனித்துக்கொள்ள வேண்டும்என்றவர், அப்போது மாணிக்கவாசகர்மையிலங்கு… எனத்தொடங்கும் திருச் சதகத்தில் எழுதிய “……மழக்கையிலங்கு பொற்கிண்ணம்..” என்ற பாடலை எடுத்தியம்பியது அனைவரின்கவனத்தையும், அவரது உரை வழங்கும் பேராற்றலையும் உணர வைத்தது.
முதுபெரும்புலவர்,மகாகோபாத்யாய பண்டிதமணி மு.கதிரேசனார் சோழவந்தான்அறிஞர் திரு.அரசஞ்சண்முகனாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.அரசஞ்சண்முகனார் இவரை மாணாக்கராகவே பார்க்கவில்லை உற்ற தோழராகவே தம் வாழ்நாளில் பாவித்தார்.
வடமொழியில் வல்லுனரான திரு.தருவை நாராயண சாசுத்திரியார் அவர்களிடம்ஐந்து ஆண்டுகள் வடமொழி பயின்றார். பின்னர் தன் மாணாக்கர் மு.கதிரேசனாரின்வடமொழியின் நுன்மான் நுழை புலம் கண்டு தாம்தான் இவரது மாணாக்கராயிருத்தல்வேண்டும் என்றார்.
இவரது காலம்பிறப்பு : 06-10-1881 – இறப்பு :24-10-1953.
இவர் பிறந்து வாழ்ந்த ஊர் சங்க இலக்கியங்களில் பூங்குன்றம் எனப்பட்டு, தற்பொழுது மகிபாலன்பட்டி எனப்படும் சிவகங்கை மாவட்டம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்…
என்ற கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர்.
ஐயா அவர்களின் தமிழ்கொள்கை:
“நாமே நம் தாயை மறந்திருப்போமாயின்
நமக்கு நினைவுறுத்துவார் யார்..? “
——— பண்டிதமணி.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
மேலும் கச்சத்தீவில் ஆண்டாண்டுகாலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக பல்தேசிய வியாபாரிகள் அவர்களுக்குப் பின்பலமான சந்தர்ப்பாவத அரசியல் தலைவர்கள், இலங்கை இனவெறி அரசும் அதன் இராணுவம் ஆகியவற்றின் இடையே தமிழக மற்றும் ஈழத் தமிழ் மீனவர்கள் நசுங்கி மாண்டுபோகிறார்கள்.
6.கி.பி.1925ம் ஆண்டில் தமிழறிஞர் ரா.இராகவய்யங்கார் முன்னிலையில், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் தலைமையில் ஐயா அவர்களுக்கு “பண்டிதமணி” என்ற பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது மேலைச் சிவபுரி சன்மார்க்க சங்கம். அந்த விழாவின் ஏற்புரையில் ஐயா அவர்கள் பேசும் பொழுது, தங்கக் கிண்ணத்தைக் கொண்டு அமுது ஊட்டும் அன்னை குழந்தையை மகிழ்விக்க,கையிலிருக்கும் தங்கக் கிண்ணத்தை கொடுப்பாள். அதன் மதிப்பறியா பச்சிளம் குழந்தையோ அந்தக் கிண்ணத்தை மறுபடியும் தாயிடத்தில் கொடுக்காது. தாயும் குழந்தையின் விருப்பத்தையும் மனதில் வைத்து, தங்கக் கிண்ணத்தின் மதிப்பினையும் கருத்தில் வைத்து குழந்தையின் கையில் உள்ள கிண்ணத்தை பாதுகாக்கும் எண்ணத்திலேயே இருப்பாள். அது போலத்தான் அறிஞர்களாகிய தாங்கள் எனக்களித்த பட்டத்தினை நான் மீண்டும் தரப்போவதில்லை, நானே வைத்திருப்பேன். மாறாக தாயுள்ளம் கொண்டவர்களாகிய தாங்கள் எல்லாம் நான் ஏதும் தவறிழைக்காமல் தாயுள்ளத்துடன் என்னை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றவர், அப்போது மாணிக்கவாசகர் மையிலங்கு… எனத்தொடங்கும் திருச் சதகத்தில் எழுதிய “…… மழக்கையிலங்கு பொற்கிண்ணம்..” என்ற பாடலை எடுத்தியம்பியது அனைவரின் கவனத்தையும், அவரது உரை வழங்கும் பேராற்றலையும் உணர வைத்தது.
அருமையான தகவல்…