தமிழில் நாடக நிகழ்விப்புகள் – ஒரு பார்வையாளனின் பதிவுகள் (கட்டுரை)
ஆச்சாரிJul 15, 2013
கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு முன்னாள் இருக்கும் 1974 ல் என்று நினைக்கிறேன் பிரக்ஞை பத்திரிக்கையில் முத்துசாமி அவர்கள் பொம்மலாட்டம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். சென்னைப் பல்கலைக்கழக அரங்கில் ஒரு வெளிநாட்டுக் குழு ஒரு தியேட்டருக்கான எல்லாப் பரிமாணங்களையும் கொண்டு ஒரு முடிவுற்ற வெளியில் பல்வேறு மன அதிர்வுகளை சுண்டியிழுப்பது போல் அந்த உருவங்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. நடன அசைவுகளை ஒரு அரங்கமாகப் பாவித்து விரிவாக்கிக் கொண்டு போகிற ஒரு மனம் அதில் வெளிப்பட்டது. புதிய இலக்கிய உணர்வுகளை நாடகத்தில் புகுத்திப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அப்போது எழுப்பியிருந்தது. உலக இலக்கியத்தின் தாக்கம், தமிழில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் ஆகிய உணர்வுகளுக்கு அப்போது கசடதபற ஒரு வடிகாலாகச் செயல்பட்டது. ஆனால் அதன் கடைசிக்கட்ட இதழ்களில் வெளிப்பட்ட தனிநபர் சச்சரவுகள் இலக்கியம் பற்றிய நிலைப்பாடுகள் குறித்த கடுமையான அபிப்பிராய பேதத்தையும் உருவாக்கி இருந்தன. பிரக்ஞை பத்திரிகை முற்றிலும் புதிய இளைஞர்களைக் கொண்டு புதிய உத்வேகத்துடன் துவக்கப்பட்டிருந்தது. தமிழ் நாடகத்தில் புதிய இலக்கிய உணர்வுகளுக்கான இடம் தவிர வேறொரு நாடகம் என்பது அன்று தமிழ்ச் சூழலில் அனுமானத்தில் இல்லை. இந்திரா பார்த்தசாரதியின் மழை நாடகம் கசடதபறவில் வெளிவந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். அதில் செயல்பட்ட ஒரு intelligent craft ம் மனப் பிறழ்வுகளின் அங்கீகாரமும் எங்களுக்கு உவப்பானதாக இருந்தன. நான் சென்னைக்கு வந்தபோது மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபாவில் அது முதன்முதலாக நிகழ்த்தப்பட்டது (ஏற்கனவே அது டெல்லியில் நிகழ்த்தப்பட்டிருந்தது) ஆனால் அது நடத்தப்பட்ட விதம் மனத்தைக் கவரவில்லை. ஒரு புதிய நிகழ்ச்சிக்கு வந்த மேஜர் சுந்தர்ராஜன் அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு ரொம்பவும் அண்டர் ஆக்டிங் என்றார். ஓவர் ஆக்டிங் செய்தே பழக்கப்பட்டவர்கள் அல்லவா. சபா நாடகத்தின் வடிவத்தைக் கைவிட்ட, நவீனச் சிறுகதை போன்ற ஆரம்பமும் முடிவும் அற்ற, எல்லையற்று நீண்டு கொண்டே போவதான கூர்மையான ஒரு புதிய நாடகத்தைப் பற்றிய கற்பனையில் மனம் ஆழ்ந்திருந்தது. முத்துசாமியின் பொம்மலாட்டம் கட்டுரை படித்ததும் அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். நேரில் சந்தித்தபோதும் அந்தப் பொம்மலாட்ட நிகழ்ச்சி பற்றி விரிவாகப் பேசினார். அந்த நிகழ்ச்சியை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த உணர்ச்சியை என்னால் கற்பனை செய்ய முடிந்தது. திருச்சியிலிருந்து வெளிவந்த ஒரு பத்திரிக்கைக்காக அவரிடம் நான் கட்டுரை கேட்ட போது நடேசத்தம்பிரான் நிகழ்த்திய கர்ண மோட்சம் கூத்துப் பற்றிய ஒரு கட்டுரையை என்னிடம் கொடுத்தார். ஏற்கனவே முத்துசாமி என்பவர் கூத்துத்தான், தமிழர்களின் பண்டைய அரங்கு என்றும் கூத்தின் கலை அம்சங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்கிற சிந்தனையோட்டத்திலும் இருந்தார். அது பற்றி நிறையவும் எழுதி இருந்தார். இந்தக் கட்டுரை கூத்து அவரிடம் விளைவித்திருந்த உணர்வுக் கிளர்ச்சியைப் படிப்படியாக விளக்குவதாக இருந்தது. அந்த அளவுக்கு கூத்தில் வலு இருந்ததா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் கூத்தை glorify பண்ணிப் பார்க்கக்கூடிய ஒரு மனம் கூத்துப்பட்டறை நடத்தும் முத்துசாமியிடம் செயல்பட்டது.
தமிழ்ச்சூழலில் பத்திரிக்கைகளும், சினிமாவும், அரசியல் மேடைகளும் விளைவித்திருந்த வர்த்தக மதிப்பீடுகளுக்கு மாற்றாக சிந்தனையும் கலை உணர்வும் கொண்ட ஒரு ஊடகத்தைப் பற்றிய தேடலை மனதில் விதைத்து சிறுபத்திரிக்கைத் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்த எனக்குக் கூத்தில் செயல்பட்ட கற்பனையும் அழகும் ஒரு மாறுதலாக இருந்தன. சென்னை கல்லூரி சாலையில் அமைந்திருக்கும் அலையன்ஸ் பிரான்சிஸ் வளாகத்தில் நடேசத் தம்பிரானின் கூத்து நிகழ்த்தப்பட்ட போது அந்த இரவு வர்ணங்கள் நிறைந்த ஒரு இரவாக இருந்தது. ஒரு rich musical ballet பார்ப்பது போன்ற உணர்வை அது ஏற்படுத்தியது. பிரக்ஞை நண்பர்கள் வீராச்சாமி ரவிசங்கர் பாரவி மற்றும் முத்துச்சாமி எல்லோரும் இணைந்து கூத்துப் பட்டறை என்ற அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். பலவிதமான (தியேட்டர்) நாடக பாணிகளை விவாதிக்கும் ஒரு அரங்கமாகத்தான் கூத்துப் பட்டறை முதலில் செயல்பட்டது. பொறியியல் கல்லூரி மாணவர்களான கே.சி.மனவேந்திரநாத்தும், ஸ்ரீராமும் சிறப்பான நாடக உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் பீட்டர் வெய்ஸ்-வின் Tower நாடகத்தையும் மரோ ஜெக்கின் Striptease நாடகத்தையும் மிகச் சிறப்பாக மேடையேற்றினார்கள். நடிகனின் enrichment என்பதுதான் முத்துசாமியின் முழுக்கவனமாக இருந்தது. தியேட்டர் அடிப்படைகளிலும், உடல் அசையிலும் குரல் வளத்திலும் தேர்ந்த நடிகர்கள் உருவாவது முதல்கட்டம் என்பது அவர் நினைப்பாக இருந்தது. நடிகர்களுக்கான பயிற்சிகளும். நாடக வாசிப்புகளும் கூத்துப் பட்டறையில் மேற்கொள்ளப்பட்டன. நாட்டுப்புறக் கலைகளில் ஈடுபாடு கொண்ட இந்திய மற்றும் ஐரோப்பியக் கலைஞர்களின் சந்திப்பும் அங்கு நிகழ்ந்தது. ஒரு நெருங்கிய பகிர்தலுக்கான பல தளங்கள் இங்கு தென்பட ஆரம்பித்தன. ஆனால் அதே சமயம் தமிழ்நாட்டுக் கிராமம் சார்ந்த தெருக்கூத்தை நன்கு கவனம் செய்து அதற்குள்ளிருக்கும் வீரியமான அரங்கத்தை உள்வாங்கி புதிய அரங்கத்தை உருவாக்கிக் கொள்வது என்ற கூத்துப் பட்டறையின் ஆரம்பகாலக் கண்ணோட்டத்தில் நாளடைவில் பல முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்தன. கூத்தை சுத்திகரிப்பது, கழிவுகள் நீக்கி உன்னதப்பாடுகள் தோன்ற ஆரம்பித்தன. கூத்தை சுத்திகரிப்பது, கழிவுகள் நீக்கி உன்னதப் படுத்திப் பார்ப்பது என்ற முத்துசாமியின் கோட்பாடு அதை சுயமாகப் பராமரித்து வந்த மக்களின் வாழ் நிலையிலிருந்து பிரித்தெடுப்பதாகும் என்ற கருத்தை வீராச்சாமி உட்பட பலர் முன்வைத்தனர். ஆனால் தெருக்கூத்தில் எந்தச் சோதனை முயற்சியும் அதையே நம்பிக் கொண்டிருக்கும் அவர்களுடைய பிழைப்புக்குப் பாதகமாக இருக்கக் கூடாது என்று முத்துசாமியும் அப்படிப்பட்ட முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்டவில்லை. கூத்துக்கும், நவீன நாடகத்துக்குமான இணைப்புப் பற்றிய செயல்பாடுகளில் கூத்துப்பட்டறை ஈடுபட்டது. கண்ணப்ப தம்பிரானின் மகன் சம்பந்தன், காந்தி கிராமத்தில் பேராசிரியர் ராமானுஜம் நடத்திய 45 நாள் நாடகப்பட்டறையில் கலந்துகொண்டு தெருக்கூத்து பற்றிய கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவினார். அதேபோல் கூத்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் திருச்சூர் நாடகப் பள்ளியில் சேர்ந்து நாடகக்கலையில் பட்டப் படிப்பை மேற்கொள்ள கூத்துப் பட்டறை உதவியது. கூத்தின் பாதிப்பை தம்முடைய நாடகங்களில் உபயோகிப்பது பற்றி முத்துச்சாமி சிந்திக்க ஆரம்பித்தார். கூத்துப் பட்டறை முழுவதுமாக முத்துசாமியின் கட்டுப்பாட்டிலும், சிந்தனையோட்டத்திலும் செயல்படத் தொடங்கியது.
வீராச்சாமி முக்கிய பங்கு பெற்ற பிரக்ஞை, ஒரு தீவிரமான சமூக அரசியல் தளத்தை நோக்கியும் அதற்கான நாடக ஆக்கத்திலும் தன்னுடைய பயணத்தைத் துவக்கியிருந்தது. கூத்துப்பட்டறையிலிருந்து பிரிந்து போன ஞாநி மத்திய வர்க்கத்தினருக்கான நாடகம் என்ற புதிய கோசத்தை எழுப்பினார். அவர் காந்தி கிராமத்தில் பேராசிரியர் ராமானுஜம் நடத்திய 45 நாள் நாடகப் பட்டறையில் பங்கு பெற்று திரும்பியிருந்தார். அந்தப் பட்டறை அவருக்கு புதிய தன்னம்பிக்கையை வழங்கியிருக்க வேண்டும். அரசாங்க அலுவலகங்களிலும், பிற அலுவல்களிலும் வேலை செய்து கொண்டிருந்த இலக்கிய உணர்வுள்ள நண்பர்களைக் கொண்டு அவர் “பரிக்க்ஷா” என்ற நாடகக் குழுவைத் துவக்கினார். முத்துசாமியின் நாற்காலிக்காரர், இந்திரா பார்த்தசாரதியின் போர்வை போர்த்திய உடல்கள் ஆகிய நாடகங்களை முதலில் அவர் நிகழ்த்தினார். சபா நாடகங்களால் சலிப்புற்ற மத்திய வர்க்கப் பார்வையாளர்களுக்கு இது ஆறுதலாக இருந்தது. பெரும்பாலும் கணையாழி போன்ற இலக்கியப் பத்திரிக்கையின் வாசகர்களாக இருந்த இந்த மத்திய வர்க்க அறிவுஜீவிகள் இந்தப் புதிய போக்கிற்கு தங்கள் ஆதரவை அளித்தார்கள். வீதி நாடகத்தின் தந்தை என அழைக்கப்படும் பாதல் சர்க்காரின் பிறகொரு இந்திரஜித், ஊர்வலம், ஞாநியின் பலூன், ஜெயந்தனின் மனுசா மனுசா, விஜய் தெண்டுல்கரின் கமலா ஆகிய நாடகங்கள் பரிக்க்ஷாவின் மதிப்பை கணிசமான அளவுக்கு உயர்த்தின. 1980களின் துவக்கத்தில் பெரும்பாலும் மியூசியம் அரங்கில் நிகழ்த்தப்பட்ட இந்த நாடகங்களுக்கு கணிசமான பார்வையாளர்களைத் திரட்டி நாடகத்தில் புதிய எதிர்பார்ப்புகளையும், விவாதத்தையும் உருவாக்கியது பரிக்க்ஷாவின் முக்கியமான சாதனை.
அதே நேரம் பரிக்க்ஷா, தனக்குள் பல பலகீனங்களையும் கொண்டிருந்தது. உறுதியும் தீவிரமான பிடிப்புகளும் அற்ற மத்திய வர்க்க மனப்பான்மை, மேலோட்டமான அறிவு ஜீவித்தனம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இருந்தது பரிக்க்ஷா. இந்தப் போக்குகள் உருவாக்கிய அபிப்பிராய பேதங்களிலிருந்து வெளிப்பட்ட கே.எஸ்.ராஜேந்திரன் எளிமையும், தீவிரத்தன்மையும் கொண்ட வேறொரு நாடகத்திற்கான கோசத்தை முன்வைத்தார். பரிவர்த்தனா, வீதி போன்ற அமைப்புகள் உருவாயின. நாடகத்தை அரங்கங்களில் இருந்து விடுவித்து மக்களிடம் எடுத்துச் செல்வது என்கிற சிந்தனைப் போக்கை கோட்பாட்டு அளவிலும், செயல்பாட்டு ரீதியிலும் பரவலாக எடுத்துச் சென்றது வீதி. இத்தகைய தளத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சிறப்பாக செயல்பட்டது வீதி. ஏனென்றால் அதற்குப் பின்னால் தமிழின் முக்கியமான இடது சாரிச் சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் செயல்பட்டனர். வீராச்சாமியின் மக்கள் கலை இலக்கியக் கழகமும், வீதி அமைப்பும் இணைந்து முறையே பெல்ச்சி, சுயம்வரம் ஆகிய நாடகங்களை நிகழ்த்தியபோது எளிமையும், கலை அம்சமும் கொண்ட நேரடியான நாடகங்கள் கூட ஒரு பெரிய உணர்வை எழுப்ப முடியும் என்பதைப் பார்க்க முடிந்தது. பிரதி இல்லாமலேயே சிறு சிறு நாடகக் கருக்களை காலையில் விவாதித்து மெருகேற்றுதல் மூலம் அதற்கு உருவம் கொடுத்து மாலையில் சென்னை கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் முன்னால் முன்னால் அதை நிகழ்த்தியது வீதி. கூட்டு விவாதம், சிந்தனை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இருந்தது வீதி. கல்கத்தாவில் பாதல் சர்க்கார் செயல்பட்ட விதம் வீதிக்கு ஒரு முக்கிய தூண்டுகோலாக இருந்தது. பாதல் சர்க்காரை அழைத்து தமிழின் முக்கிய எழுத்தாளர்களையும், நாடகக்காரர்களையும் ஈடுபடுத்தி ஒரு நாடகப் பட்டறை ஏற்பாடு செய்து தமிழில் நாடகச் செயல்பாடுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், திசையையும் வழங்கியதில் வீதியின் பங்கு கணிசமானது. ஆனால் வீதீயின் பின்னணியில் செயல்பட்ட அரசியல் சிந்தனை நாடகச் செயல்பாட்டில் பல முரண்பாடுகளை முன் வைத்தது. அந்த அரசியல் முரண்பாடுகளுக்குள் நாடகம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால் பாதல்சர்க்கார் நாடகப் பட்டறையின் உத்வேகம் பலரை முழுநேர நாடகக்காரர்களாக மாற்றியது.
அப்படி வெளிப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் மு.ராமசாமி கே.ஏ.குணசேகரன் போன்றவர்கள். ஏற்கனவே மு. ராமசாமி மதுரை நிஜநாடக இயக்கத்தை ஏற்படுத்தி சமூக உணர்வுள்ள பல புதிய நாடகங்களை மதுரைப் பல்கலைக்கழக வளாகங்களில் நிகழ்த்தி வந்தவர். பாதல் சர்க்கார் பட்டறை மு.ராமசாமியின் செயல்பாட்டுக்கு இன்னொரு பரிமாணத்தை அளித்தது. நாடகம் என்கிற வடிவத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள இந்த அனுபவம் அவருக்கு உதவியது. மரபுடன் அதிக பரிச்சயம் வேண்டும் என்பதற்காக புரிசையில் தங்கியிருந்து கூத்தை கற்றுக்கொண்டார். சிறு பத்திரிகைத் தொடர்புகளால் கிடைத்த இலக்கிய உணர்வுகள், அமைப்புகள் எதிரான சிந்தனை, மரபுடன் அதிக வேண்டும் என்பதற்காக செய்யாற்றில் உள்ள புரிசை கூத்துப் பள்ளியில் தங்கியிருந்து கூத்தைக் கற்றுக்கொண்டார். சிறு பத்திரிகை தொடர்புகளால் கிடைத்த இலக்கிய உணர்வுகள், அமைப்புக்கு எதிரான சிந்தனை, மரபுடன் ஆழ்ந்த பரிச்சயம் போன்றவை அவரிடமிருந்து ஒரு முற்றிலும் புதிதான நாடகத்தை வெளியே கொண்டு வந்தன. கிரேக்க ஆண்டிகனியைத் தழுவி அமைந்த அவருடைய ‘துர்க்கிர அவலம்’ ஒரு செறிவான படைப்பு. உறுமி ஓசையின் பின்னணியில் நடன அசைவுகளுடன் துர்க்கிரனின் அவலம் ஒழிக்க ஒரு வீரியமான நாடகம் வெளிப்பட்டது. அதே போல் புராணக் கதையைத் தழுவி அமைந்த ‘சாபவிமோசனம்’ நாடகத்திலும் மனித மனத்தின் சிக்கல்கள் குறித்த இரட்டை நிலைப்பாட்டை கயிறுகள் பின்னிப் பிணைந்த ஒரு வடிவத்தின் மூலம் சிறப்பான உருவம் கொடுத்திருந்தார். அண்மையில் அரங்கேறிய மலைச்சாமியின் ‘முனி’ நாடகத்திலும் புனைவும், கவிதையுமாக ஒரு பெண்ணின் சிக்கலை சிறப்பான வடிவமைத்திருந்தார். அவர், தமிழ் நாடகத்தில் ஒரு செறிவான நாட்டுப்புற மரபுக்கும், புனைவுக்கும், நவீன சிந்தனைக்குமான ஒரு குரலை எதிரொலிப்பவர் மு.ராமசாமி. கே.ஏ.குணசேகரனும் நாட்டுப்புறப்பாடல்கள் ஊடாக தன்னை அடையாளம் கண்டு கொண்டவர். தன்னுடைய பயணத்தை வடிவமைத்துக் கொண்டவர் அவருடைய நாட்டுப்புறப் பாடல் ஆய்வு அவரை மறைவான பல பிரதேசங்களுக்கும் எடுத்துச் சென்றது. படைப்பு சக்திக்கான ஒரு உலகத்தை அதில் அவரால் காண முடிந்தது. அதுவே அவரை ஒரு தலித் அரங்கத்திற்கும் அழைத்துச் செல்கிறது. ‘மனுசங்கடா, நாங்க மனுசங்கடா’ என்று குரல் எழுப்ப முடிகிறது. அவருடைய ‘பலி ஆடுகள்’ ஒடுக்கப்பட்ட உணர்வுகளின் ஒரு நாடகம். ஒடுக்கப்பட்ட உணர்வுகளிலிருந்து ஒரு படைப்பு சக்தியை மீட்டெடுப்பவராக இன்று நம் முன் நிற்பவர் குணசேகரன். இதே போல் இயக்க ரீதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு நாடகத் தளத்தில் தெளிவான இலக்குகளுடன் இயங்கி வருபவர் அஸ்வகோஷ். நெய்வேலிப் பகுதிகளில் இடதுசாரிச் சிந்தனையும் எதிப்புணர்வும் கொண்ட நாடகங்களை மக்கள் முன் கொண்டு சென்றதில் அஸ்வகோஷின் பங்கு கணிசமானது. இன்று பிரளயன் இதே போல் ஒரு இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு நாடகங்கள் மூலமாக மக்களைச் சந்தித்து வருபவர். அண்மையில் அவருடைய மக்கள் கலைக்குழு ஏற்பாடு செய்திருந்த நாடகவிழா நாடகத் தளத்தில் பல கருத்தோட்டங்கள் சந்திக்கும் ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது.
தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற பேராசிரியர் ராமானுஜம், ராஜூ, கே.எஸ்.ராஜேந்திரன் ஆகியோருடைய பங்களிப்பு தனித்துவம் வாய்ந்தது. புதிய நாடகத்துக்குத் தேவையான மன வளமும், கற்பனையும் நிறைந்த பயிற்சியாளர்களை உருவாக்குவதில் இன்று பேராசிரியர் ராமானுஜமும், காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.பி. சீனிவாசனும் முன் நிற்கிறார்கள். கேரளப் பகுதிகளில் சங்கரப் பிள்ளையுடன் இணைந்து சிறப்பான குழந்தை நாடகங்களை உருவாக்கிய பேராசிரியர் ராமானுஜம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நாடகப் பட்டறைகளை நடத்தியவர். அண்மையில் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடந்த நாடகப் பட்டறைக்கு நான் சென்றிருந்தபோது பேராசிரியர் ராமானுஜம் மிகுந்த கற்பனையுடன் பயிற்சியாளர்களை வழிநடத்திச் சென்றதை பார்க்க முடிந்தது. குறைந்த கால அவகாசத்தில் பயிற்சியாளர்களைக் கொண்டு Synge -ன் Riders to the sea- தமிழில் கடலோடிகள் நாடகத்தையும் சிறப்பாக வடிவமைத்திருந்தார். புதிய நாடகத்தின் கூறுகள் பற்றி அதிகப் பரிச்சயமில்லாத அந்தப் பயிற்சியாளர்கள் அந்தப் பதினைந்து நாள் அவகாசத்தில் முற்றிலும் புதியவர்களாக உருமாறினார்கள். அந்த மாற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய பயிற்சியை அவர்கள் இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நடிகர்களைப் பயிற்றுவிக்க ஒரு நாடகப் பள்ளி உருவாக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமானால் அதை நிர்வகிக்கக் கூடிய பொறுப்பை இன்று ராமானுஜம் தான் மேற்கொள்ள முடியும்.
நாடக இயக்கத்திலும் இவர்களுடைய அணுகுமுறை தனித்தன்மை வாய்ந்தது. சூழலைக் கற்பனையுடன் வடிவமைப்பதில் அல்காஷியிடம் பெற்ற பயிற்சியை ராமானுஜம் சிறப்பாக செயல்படுத்துகிறார். வெறியாட்டம் நாடகத்தில் ஒப்பாரியைக் கொண்டு ஒரு புனைகதையை வடிவமைத்தது, கால யந்திரம் நாடகத்தில் எந்திரத் தன்மையை உருவகித்தது. நாற்காலிக்காரர் நாடகத்தின் விளையாட்டுத் தன்மை, அண்டோரா நாடகத்தின் கோர்ட் காட்சிகள், மௌனக் குறம் நாடகத்தில் எளிய பொருட்கள் ஒரு சூழலாக மாறியது, கடலோடிகள் நாடகத்தில் ஒரு வலையைக் கொண்டு மரணம் தழுவும் ஒரு சூழலை உருவகித்தது எல்லாம் நாடகத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்தவை. ஒரு தமிழ் அரங்கத்திற்கான கூறுகளையும் உள்ளடக்கியவை. இலங்கை நாடகக்காரரான இளைய பத்மநாதனும் ஒரு பயணத்தின் கதை, தீனிப்போர், ஏகலைவன் நாடகங்களில் ஆடல் பாடலுடன் நாட்டுப்புறத்தன்மை கலந்த ஒரு தமிழ் அடையாளத்தை முன் நிறுத்துகிறார். அவருடைய நாடகங்கள் didactic ஆகப் போனாலும் தீனிப்போர் நாடகத்தில் ஒரு சிறப்பான கற்பனை செயல்பட்டது. இந்தக் கூறுகளை உள்வாங்கி மங்கை என்பவர் மௌனக்குறம் நாடகத்திலும் மற்ற பெண்ணிய நாடகங்களிலும் செயல்படுத்துகிறார்.
தேசிய நாடகப்பள்ளி மாணவர்களான ராஜுவும், கே.எஸ்.ராஜேந்திரனும் தங்கள் தனித் தன்மையை உறுதி செய்தவர்கள். ராஜு மிகவும் கலைத் தன்மையுடன் இசையையும், நடனத்தையும் வடிவமைப்பவர். அவருடைய நந்தன் கதை நாடகத்தில் பறை ஒலி, சாதி அடையாளத்தின் குறையீடாகப் பயன்படுகிறது. ‘சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை’ நாடகத்தில் அந்தப் பெண்ணின் முகபாவம், கூந்தல், பொட்டு ஆகிய ஒவ்வொரு விசயத்திலும் நாடகத்தின் தீவிர கணங்கள் வெளிப்பட்டன. அண்மையில் நிகழ்த்தப்பட்ட ‘மூன்றாவது விலா எலும்பும்’ விழுதுகளற்ற ஆலமரமும்’ நாடகத்தில் நாடகத்தின் காலம் பற்றிய உணர்வை மிகுந்த கற்பனையுடன் வெளிப்படுத்தியிருந்தார். தேசிய நாடகப் பள்ளி மாணவரான கே.எஸ்.ராஜேந்திரன் மற்றொரு திறமையான இயக்குனர். ‘மூன்று பண்டிதர்களும் மாண்டதொரு சிங்கமும்’ நாடகமும் ‘அமைதி! கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது’ நாடகமும் மிகவும் வடிவ ஒழுங்குடனும், தெளிவுடனும் வெளிப்பட்ட நாடங்கள் சம்பந்தன் முக்கிய பாத்திரமாக, கூத்து கலந்த பாணியில் நிகழ்த்தப்பட்ட ‘வெள்ளை வட்டம்’ நாடகம் ஒரு தேர்ந்த உரையாடல் பாணியைக் கொண்டது. ஆல்பியின் Zoo storyp நாடகத்தையும் மிகவும் திறமையுடன் வெளிக் கொணர்ந்திருந்தார். ராஜேந்திரனின் படைப்புத்திறன் தெளிவும், கூர்மையும் கொண்டது.
ஆனால், தமிழ் நாடகத்தில் அதிகமான சோதனை முயற்சிகளையும், செறிவான படைப்புகளையும் வழங்கியது கூத்துப்பட்டறைதான். ஒரு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நாற்காலிக்காரர் நாடகத்தை நிகழ்த்துவது பற்றி முத்துச்சாமி விவாதித்துக் கொண்டு வந்த அந்த நாட்களிலிருந்து நாடகத்துக்கான எல்லா infra structure உடன் தமிழின் ஒரே முழு நேர நாடகக்குழுவாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய நாட்கள் வரை முத்துச்சாமியின் நாடகப் பயணம் இலக்கை நோக்கியது. ஓவியர் கிருட்டிணமூர்த்தியின் ஒத்துழைப்புடன் சுவரொட்டிகள் நாடகம் சென்னை லலித் கலா அகாடமியில் நிகழ்த்தப்பட்ட போது வெளிப்பட்ட பொறிகள் பிரமிக்கத்தக்கதாக இருந்தன. அதில் வெளிப்பட்ட நாடக மொழியும், நிகழ்த்துதலில் வெளிப்பட்ட அசாதாராணமான அணுகுமுறையும் ஒரு புதிய நாடகத்தின் இருப்பை உறுதி செய்தன. அதே போல் கட்டியங்காரன் நாடகமும், உந்திச்சுழி நாடகமும் சென்னை மியூசியம் தியேட்டரில் நிகழ்த்தப்பட்ட போது வெளிப்பட்ட intellectual fervor மனதுக்கு மிகவும் இதமாகவும், சந்தோசமாகவும் இருந்தது. அத்தகைய ஒரு படைப்புச் சக்தியை கூத்துப்பட்டறையின் பின்னால் வந்த நாடகங்களில் கூட பார்க்க முடியவில்லை. கே.சி. மனவேந்திரநாத், ஓவியர் கிருட்டிணமூர்த்தி, டில்லி ரவீந்திரன், முக்கியப் பெண் பாத்திரமாக நடித்த விஜயலட்சுமி ஆகிய எல்லோரும் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்கள். ரவீந்திரன் ஒளியமைப்பில் படைப்புக்கான தளங்களைக் காண்பவராக அந்த நாடகத்தில் வெளிப்பட்டார். நவீன யுகத்துக்கேற்ற நவீன மனிதர்களாக நாம் இல்லை என்ற கருத்தை நாடகம் வெளியிட்டது. கட்டியங்காரன் நாடகத்திலும் ஆண் பெண் உறவுத் தாக்கங்களின் முகமூடிகள் அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தன. நம்முடைய மனதின் ரகசியங்களைப் பாத்திரங்கள் பேசும்போது உண்டாக்கக்கூடிய கிளர்ச்சியை நாடகத்தில் பெற முடிந்தது. கட்டியங்காரன் நாடகம் கே.எஸ்.ராஜேந்திரனின் இயக்கத்தில் சங்கீத் நாடக அகாடமியின் நாடக விழாவுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
கூத்துப்பட்டறையின் பல நாடகங்கள் கருத்து ரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும் பல சோதனைகளை முன் வைத்தன. முக்கியமான சில நாடகங்களைப் பற்றிய குறிப்புகள்:
- பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித் நாடகம் வாழ்க்கையின் வியர்த்தத்தை உணர்த்தும் ஒரு கடுமையான நிலைப்பாட்டை மிகவும் நெகிழ்வான ஒரு சூழலில் வெளிப்படுத்தியது.
- ஜெர்மன் நாடகாசிரியர் சீக்ஃப்ரீப் லென்சின் ‘நிரபராதிகளின் காலம்’ குற்ற உணர்வு பற்றிய விவாதங்களை மிகவும் நாடகார்த்தமாக முன்வைத்தது.
- வார்த்தைகள் அற்ற இங்கிலாந்து நாடகம், இசையை முழு மையமாகப் பின்னணியில் உபயோகித்தது. வண்டிச் சோடையின் நினைவுச் சுவடுகள் கிராமிய மதிப்பீடுகளின் இழைப்பை கவிதை வரிகளில் வெளிப்படுத்தின.
- தூத கடோத்கஜம் நாடகம் நவ நாகரீகப் பாணியில் ஒரு dual conflict மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியது.
- ஜெர்மன் நாடகாசிரியர் கெய்ஸரின் Gas II நாடகம் நடேசின் இயக்கத்தில் வாயுப் பிரயோகத்துக் கெதிரான இருத்தலின் தவிப்பை கவிதைப் படிமங்களில் வெளியிட்டது.
- நற்றுணையப்பன் நாடகம் நடேசின் இயக்கத்தில் பாத்திரங்கள் நூலேணிகள் மூலமாக காலத்தைத் தாண்டி வருவதை உருவகப்படுத்தியது.
- சார்த்தரின் ‘மீள முடியுமா?’ நாடகம் கனவு, மரணம் குறித்த ஒரு ஆழ்ந்த உரையாடல்.
- மகாத்மா காந்தியின் கடைசி ஐந்து வினாடிகள் ஜெர்மன் நாடகம் சோழ மண்டலம் கடற்கரையில் நிகழ்த்தப்பட்டு காந்தி மரணத்திற்கு முன் ஒவ்வொரு வினாடியையும் கடந்து வருவதை இறுக்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்தியது.
- மோலியரின் டான் ஜுவான் நாடகம் ஒரு கற்பனை மிகுந்த romantisisation உடன் கையாளப்பட்டது. டான் ஜுவான் பாத்திரம் மிகவும் அநாயாசமான புத்திசாலித்தனத்துடன் வெளிப்பட்டது.
- ஆல்பர்ட் காம்யூவின் காலிகுலா நாடகம் மியூசியம் அரங்கத்தின் முன்பகுதியில் British Architechture -ன் பின்னணியில் நிகழ்த்தப்பட்டு காலிகுலா வாழ்ந்து கொண்டிருப்பதான பிரமையை வழங்கியது.
- பசுபதியின் இயக்கத்தில் அயனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’ யதார்த்தங்கள் குறித்த ஒரு வளமான உருவகம்.
- சகஜீவி மற்றும் சவால் நாடகங்கள் கவிதைப் பிரதேசங்களின் ரகசிய உலகுக்குள் பயணம் செய்ய எத்தனிக்கும் முயற்சிகள்.
- ஜெர்மன் நாடகமான ‘ஹெலேனாவின் தியாகம்’ வழங்கிய கவிதைத் தனமான பின்புலம்.
இன்றைய ஜெர்மி நாடகம் வரை இந்தப் பதினைந்து வருட காலகட்டத்தில் 30 க்கும் அதிகமான நாடகங்களை கூத்துப்பட்டறை நிகழ்த்தியுள்ளது. முத்துசாமி, தனுஷ்கோடி, கோபாலகிருஷ்ணன், ஓவியர் கிருட்டிணமூர்த்தி (காளி நாடகம்) நடேஷ், பிரவீன், பசுபதி ஆகிய இயக்குனர்களும் பசுபதி, பிரசாத், கலைராணி, ஜெயக்குமார், குமாரவேல் போன்ற சிறப்பான நடிகர்களும் இந்த நாடகங்களில் இருந்து வெளிப்பட்டுள்ளனர். உலகின் எந்த மொழி நாடகத்தையும் தமிழில் சிறப்பாகக் கொண்டு வர முடியும் என்பதை கூத்துப்பட்டறை நிரூபித்துள்ளது. அண்மையில் கூத்துப் பட்டறையின் ஒத்துழைப்புடன் கொலம்பியாவைச் சேர்ந்த மாபா குழுவினர் மார்க்வெஸின் ‘நீண்ட சிறகுகளுடன் வயோதிகன்’ நாடக ஆக்கத்தை புரிசை கூத்துக்குழுவுடன் இணைந்து மேடையேற்றியது கூத்துப் பட்டறை மேற்கொள்ளும் பினைப்புக்கான ஒரு அறிகுறி. பல்வேறு மொழிக் குழுக்கள் தங்கள் பயிற்சிகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முகாந்திரத்தையும் கூத்துப்பட்டறை வழங்கியுள்ளது. வெளித் தோற்றத்தில் elitist ஆகாத தோற்றம் கொண்டாலும் அடிப்படைகளில் நாடகம் குறித்த ஆழ்ந்த அக்கறைகளை கூத்துப்பட்டறை வெளிப்படுத்தியுள்ளது.
இதிலிருந்து மாறுபட்ட non elitist ஆன, ஆனால் சூழல் சார்ந்த, புதிய யதார்த்தங்களைப் பிரதிபலிக்கிற, கூர்மையான நாடக உணர்வுகளை தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் பார்க்க முடியும். அப்படிப்பட்ட சில முயற்சிகளைப் பற்றிய குறிப்புகள்:
- மனித இருப்புக்கான போராட்டத்தை ஒரு சிறப்பான குறியீட்டு மொழியில் வெளிப்படுத்திய ஆறுமுகத்தின் கருஞ்சுழி, நாடகத்தின் களனாகக் கையாளப்பட்டது ஒரு துணி மட்டுமே.
- மேடைப் பொருட்களைக் கொண்டு கற்பனை எவ்வளவு தூரத்துக்குப் பாய முடியும் என்பதை நிரூபித்தது ஆறுமுகத்தின் ஊசி நாடகம்.
- சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள் மற்றும் புதுமைப் பித்தனின் சிற்பியின் நரகம் கதைகள் குறித்த அ.ராமசாமியின் புதிய வாசிப்பு.
- விளையாட்டும், குதூகலமும், படைப்புணர்வும் பிரதிபலிக்கும் வேலுசரவணனின் பனிவாள், கொடி அரளி நாடகங்கள், Fragmented துளிகளாக சிறுசிறு அம்சங்களை மெல்லிய சரடுகளால் இணைப்பது. பல குழந்தை நாடக முயற்சிகள்.
- முருகபூபதியின் இறுக்கம் மிகுந்த புதிய கற்பனை வெளி சரித்திரத்தின் அதீத மியூசியம், மரண வீட்டின் குறிப்புகள், தனித்திருக்கப்பட்டவர்கள் நாடகங்களில் உணர்வுகளின் ஊடாக ஒரு தீவிரமான நாடக இருப்பின் சலனங்கள் – ஒரு பரந்த landscape – நினைவுகளைத் தோண்டி எடுப்பது – சுயமுகத்தின் பல்வேறு கண்ணாடிகள்.
- பிரேமின் உடல் சார்ந்த புதிய புனைவுகள். ‘ஆதியிலே மாம்சம் இருந்தது’. நாடகத்தின் புதிய சொல்லாடல்- விளக்கப் பட்டவை குறித்த தீவிர கவனம்.
- மு.ராமசாமியின் ஸ்பார்ட்டகஸ் நாடகத்தின் உடல்மொழி.
- கூட்டுக்குரலின் சிறு சிறு நாடகங்கள்.
- மதுரை சுந்தரின் ‘இன்பமயமான இந்திய வரலாறு’ நாடகம் (பாதல் சர்க்கார்) மாற்று நாடகம் குறித்த உரையாடல்கள்.
- திருச்சி நாடக சங்கத்தின் ஹயவதனா (கிரிஷ் கர்னாட்) – நாடக classics பற்றிய உணர்வு.
- பாண்டி நாடகப் பள்ளி மாணவரான ராஜ்குமார் ‘ நடுக்கடலில்’ நாடக ஆக்கத்தில் செயல்படுத்திய உத்தி.
- ஷிபு கோத்தாராமின் ’சதி பர்வம்’. மகாபாரதப் போர் பற்றிய வித்தியாசமான பார்வை.
- டில்லியில் யதார்த்தா குழுவின் யதார்த்த நாடகப் படைப்புகள்- ‘முறைப்பெண்’, ‘எப்போ வருவாரோ’ நாடகங்களில் செயல்பட்ட தெளிவான நம்பகத்தன்மை.
- தலித் உணர்வுகளின் புத்தெழுச்சி- கே.ஏ.குணசேகரன், ஜீவா.
- சென்னையில் சிறு குழுக்களின் புதிய முயற்சிகள். நிஜந்தனின் ‘அரூபம்’ நாடகக்குழுவின் ‘ஒரு நடுக்கமான மீட்சிக்கு’ மற்றும் சாட்சியின்மையைத் தோண்டியெடுத்தல்’ நாடகங்களில் செயல்பட்ட சிதறுண்ட வாழ்க்கைக் கூறுகள் – அவலங்கள் குறித்த ஒரு உணர்வு.
- ஆடுகளம் குழுவின் ஆறாவது வார்டு (செகாவ்) , காட்டு நகரம் (பிரெக்ட்) நாங்கள் நியாயவாதிகள் (கறுப்பு நாடகம்) நாடகங்களில் செயல்பட்ட படைப்பு உணர்வு – தீவிர விழைவுகள்.
- முத்ராவின் விசாரணை, இடிபஸ், காத்திருத்தல் – classics தழுவிய படைப்புகள்.
- ஐக்யாவின் ‘எளிய நல்ல நாடகங்கள்’ பார்வையில் வெளிப்பட்ட ‘சூரியனின் கடைசிக்கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை’ ‘சேவல் பண்ணை’ நாடகங்கள்.
இவை புதிய நாடக உணர்வுகள் பல்வேறு தளங்களில் வெளிப்பட்டிருப்பதின் அடையாளங்கள். ஆனால் இவையும் விமர்சனங்களுக்கு உட்பட்டவை. பொருளாதாரக் காரணங்களால் இவை தொடர்ந்த நிகழ்விப்பையும், பரவலான கவனத்துக்குரிய சாத்தியங்களையும் பெறமுடியாவிட்டாலும் ஒரு அர்த்தமுள்ள நாடக இயக்கமாக இவையே தம்முடைய இருப்பை இன்று உணர்த்தி வருபவை. ஆனால் பார்வையாளர்களிடம் ஒரு அர்த்தமுள்ள உரையாடலை சாத்தியப்படுத்தும் போது தான் இத்தகைய நாடக இயக்கம் உறுதிபட முடியும். கூத்துப்பட்டறை நாடகங்கள் சென்னையைத் தாண்டி வெளியே சென்றதில்லை. மற்ற பெரும்பாலான நாடகங்கள் ஒரு தடவைக்கு மேல் நிகழ்த்தப்படவில்லை.பொதுவாக நம்முடைய சூழலில் உணர்ச்சிப்பூர்வமான கலைக்கு மரியாதை இல்லை. இங்கு வெளிப்பட்டுள்ள கூர்மையான சிந்தனையையும், உணர்வையும் கூட வெளியே எடுத்துச் செல்ல நம்மிடம் உத்தி இல்லை. குறைவான படைப்புச் சக்தி கொண்டவை பல இடங்களில் பரவலாகக் கவனத்துக்கு வருகின்றன.
ஆனாலும் மாற்றங்கள் நுண்ணிய அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்று நாடகப் பிரதியின் தளம் விரிவடைந்துள்ளது. கொடுக்கப்பட்ட பிரதியிலிருந்து நாடகம் தனக்கான பிரதியைத் தேர்வு செய்து கொண்டே இருக்கிறது. உடலும் மனமும் பயிற்சி பெற்றே இன்று நாடகத்துக்குத் தயாராக முடியும். நாடகத்துக்காக உடல்கள் நெகிழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்று பார்வையாளர் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். ஆனால் நாடகத்தின் தேவையை நாம் இழந்து விடவில்லை.
நாடகங்களின் அடிப்படையில் இந்த காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட முக்கிய நாடக நிகழ்வுகளின் விவரங்கள்:
1. நாற்காலிக்காரர் (கூத்துப்பட்டறை)
2.காலம் காலமாக (கூத்துப்பட்டறை)
3.சுவரொட்டிகள் (கூத்துப்பட்டறை)
4.கட்டியங்காரன் (கூத்துப்பட்டறை)
5.உந்திச் சுழி (கூத்துப்பட்டறை)
6. விறகு வெட்டி (கூத்துப்பட்டறை)
7. ஏவம் இந்திரஜித் (கூத்துப்பட்டறை)
8.நிரபராதிகளின் காலம் (கூத்துப்பட்டறை)
9.இங்கிலாந்து (கூத்துப்பட்டறை)
10.தூத கடோத்கஜம் (கூத்துப்பட்டறை)
11.மீள முடியுமா? (கூத்துப்பட்டறை)
12.கோணிக்காரன் (கூத்துப்பட்டறை)
13.பகவத்ஜ்ஜுகீயம் (கூத்துப்பட்டறை)
14.நற்றுணையப்பன் (கூத்துப்பட்டறை)
15.மூன்று பண்டிதரும் மாண்டதொரு சிங்கமும் (கூத்துப்பட்டறை)
16.அமைதி! கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது (கூத்துப்பட்டறை)
17.வெள்ளை வட்டம் (கூத்துப்பட்டறை)
18.காளி (கூத்துப்பட்டறை)
19.டான் ஜுவான் (கூத்துப்பட்டறை)
20.Gas II (கூத்துப்பட்டறை)
21.தலை (கூத்துப்பட்டறை)
22.காந்தியின் கடைசி 5 வினாடிகள் (கூத்துப்பட்டறை)
23.ஹெலேனாவின் தியாகம் (கூத்துப்பட்டறை)
24. அண்டோரா (கூத்துப்பட்டறை)
25. காலிகுலா (கூத்துப்பட்டறை)
26. காண்டாமிருகம் (கூத்துப்பட்டறை)
27. நீண்ட சிறகுகளுடன் வயோதிகள் (கூத்துப்பட்டறை)
28. சவால் (கூத்துப்பட்டறை)
29. சகஜீவி (கூத்துப்பட்டறை)
30. Gita – an Imagery (கூத்துப்பட்டறை)
31. ஜெர்மி (கூத்துப்பட்டறை)
32. போர்வை போர்த்திய உடல்கள் (பரீக்ஷா)
33. பிறகொரு இந்திரஜித் (பரிக்ஷா)
34. ஊர்வலம் (பரிக்ஷா)
35. பலூன் (பரிக்ஷா)
36. மனுஷா மனுஷா (பரிக்ஷா)
37. கமலா (பரிக்ஷா)
38. பயங்கள் (பூமிகா)
39.மழை (பரிக்ஷா)
40.பெல்ச்சி (மக்கள் கலை இலக்கியக் கழகம்)
41.தண்ணீர்! தண்ணீர் (கோமல் சுவாமிநாதன்)
42.வெறியாட்டம் (பேராசிரியர் ராமானுஜம்)
43. கால எந்திரம் (பேராசிரியர் ராமானுஜம்)
44. மௌனக் குறம் (பேராசிரியர் ராமானுஜம்)
45. கடலோடிகள் (பேராசிரியர் ராமானுஜம்)
46. செம்பவளக் காளி (பேராசிரியர் ராமானுஜம்)
47.துர்க்கிர அவலம் (நிஜ நாடக இயக்கம்)
48. புரட்சிக்கவி (நிஜ நாடக இயக்கம்)
49. சாபம்! விமோசனம்? (நிஜ நாடக இயக்கம்)
50. முனி (மு.ராமசாமி)
51.ஸ்பார்ட்டகஸ் (நிஜ நாடக இயக்கம்)
52. நந்தன் கதை (அரங்கம் – ராஜு)
53. கொங்கைத் தீ (அரங்கம் – ராஜு)
54. சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை (அரங்கம்–ராஜு)
55. மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும் (ராஜு)
56. மீதி சரித்திரம் (அ.ராமசாமி)
57.சிற்பியின் நரகம் (அ.ராமசாமி)
58. பல்லக்குத் தூக்கிகள் (அ.ராமசாமி)
59. இன்பமயமான இந்திய வரலாறு (சுதேசிகள்)
60. உருளும் பாறைகள் (சுதேசிகள்)
61. மிருகம் (வேலு சரவணன், காந்திமேரி)
62.பனிவாள் (வேலு சரவணன்)
63. கொடி அரளி (வேலு சரவணன்)
64.சரித்திரத்தின் அதீத மியூசியம் (முருகபூபதி, பிரசாத்)
65. மரண வீட்டின் குறிப்புகள் (முருகபூபதி, பிரசாத்)
66. தனித்திருக்கப்பட்டவர்கள் (முருகபூபதி, பிரசாத்)
67. முறைப்பெண் (யதார்த்தா, டில்லி)
68. எப்போ வருவாரோ (யதார்த்தா, டில்லி)
69. ஆறாவது வார்டு (ஆடுகளம்)
70. காட்டு நகரம் (ஆடுகளம்)
71. நாங்கள் நியாயவாதிகள் (ஆடுகளம்)
72. விசாரணை (முத்ரா)
73. காத்திருத்தல் (முத்ரா)
74. குட்டி இளவரசன் (ஐக்யா)
75. ஒரு நடுக்கமான மீட்சிக்கு (அரூபம்)
76. சாட்சியின்மையைத் தோண்டி எடுத்தல் (அரூபம்)
77. ஒரு பயணத்தின் கதை (பல்கலை அரங்கம்)
78. தீனிப்போர் (பல்கலை அரங்கம்)
79. ஏகலைவன் (பல்கலை அரங்கம்)
80. நதியைக் கடத்தல் (கே.எஸ்.ராஜேந்திரன்)
81. Death Watch (கே.எஸ்.ராஜேந்திரன்)
82. Lesson (கே.எஸ்.ராஜேந்திரன்)
83. Zoo Story (கே.எஸ்.ராஜேந்திரன்)
84. ஆதியிலே மாம்சம் இருந்தது (பிரேம்)
85. ஹயவதனா (திருச்சி நாடக சங்கம்)
86. வயிறு (புவியரசு, கோயம்புத்தூர்)
இவை சில நம்பிக்கைக் கீற்றுகள். ஆனால் தொடர்ந்த நாடகச் செயல்பாடுதான் நாடகத்துக்கு ஒரு நம்பகத்தன்மையையும் இயக்கத்தையும் அளிக்க முடியும்.ஒரு உயிர்ப்புள்ள நாடகத்துக்காக நாடகக்கலைஞன் மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழில் நாடக நிகழ்விப்புகள் – ஒரு பார்வையாளனின் பதிவுகள் (கட்டுரை)”