மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுற்றுச்சூழல் கல்வியின் அவசியமும், அதன் விழுமியச் சிந்தனைகளும் (கட்டுரை)

ஆச்சாரி

Aug 1, 2013

இயற்கை – இது நமக்குக் கிடைத்த வரம், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் இயற்கைக்கு மனிதனைப் போன்று சுயநலமில்லை. அனைத்திலும் பொதுநலம் பார்க்கும் இயற்கையானது நமக்கு தூய காற்றையும், நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, உறைவிடத்திற்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் நமக்கு வழங்கி நம்மை வாழ்விக்கிறது. இவ்வாறு நமக்கு உதவி வரும் இயற்கையை நாம் காக்கிறோமா? என்றால் இல்லை.

இந்த விசயத்தில் கல்வி நிறுவனங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இயற்கையின் அவசியத்தை உணர்த்தும் சுற்றுச்சூழல் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறதா? இதனைச் சரியாகக் கற்றுக் கொடுக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். தற்போது கணினியும், ஆடம்பரத்திற்குத் தேவையான உபகரணங்களும் பெருகி உள்ளதால் இதனைப் பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமே என்று எத்தனை பேர் அறிந்து செயல்படுகிறோம் என்று தெரியவில்லை.

இயற்கை அழிந்தும், சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்தும் வருவதால் பாதிக்கப்படுவது நம்மைச் சார்ந்தவர்களும், எதிர்காலச் சந்ததியினருமே.

சுற்றுச்சூழல் கல்வி:

ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவை, உலகின் உயிர்கள் நிலைத்தும், நீடித்தும் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கித் தருகிறது. 19ம் நூற்றாண்டிலும், இதற்குப் பிறகு நடந்த உலகப் போர்கள், தொழிற்புரட்சி, பொருளாதாரத்திலும் இதன் வளர்ச்சியிலும் ஏற்பட்ட பின்னடைவுகள் போன்ற நிகழ்வுகள், உலக நாடுகளை மிகவும் பாதிப்படையச் செய்தது. இதனால் அவர்கள் அனைவரும் காடுகள், கனிம வளங்கள், நீர், நிலம், காற்று என்று இயற்கை வளங்கள் ஒன்றையும் விடாமல் சுரண்டினர்.

இதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. தற்போது அமில மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன் படலம் பாதிப்பு, கதிரியக்கம், உயிர்களின் அழிவு போன்றவை மனிதர்களுக்குப் பெரும் சோதனையாகிவிட்டன. மேற்சொன்ன நிலையை மாற்றவும், ஆய்வுகள் நடத்தி தீர்வு காணவும் எண்ணிய ஐ.நா. சபை 1992-ல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டது. இதில் சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவர வேண்டும்’ என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு “அஜெண்டா-21” என்று பெயரிடப்பட்டது. இதன் மூலம் கல்வி, பொது விழிப்புணர்வுப் பயிற்சி போன்றவை சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டிய காரணிகளாகக் கொள்ள வேண்டும் என்று முடிவானது. மேலும் சுற்றுச்சூழல் கல்வி , கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்:

நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல்லது எதிர்கால உலகில், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வி தேவைப்படுகிறது. இக்கல்வியின் மூலம் இருக்கும் வளங்களைக் கொண்டு, முன்னேற்றத்திற்கான வழிவகைகளைச் சிந்திப்பதும், அவற்றைச் செயல்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.

கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் கல்வி என இம்மூன்றையும் ஒரே கற்றல் செயலாக இணைப்பதன் மூலம் கல்விப் பணியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இயலும். அன்றாட வாழ்க்கையில் இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்துத் தடத்திலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க இம்முறை உதவும் என சுற்றுச்சூழல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை நடைமுறைப்படுத்தும் அம்சங்களையும் கல்வியில் புகுத்தியுள்ளனர். ஆகவேதான் சுற்றுச்சூழல் கல்வி மிகவும் அவசியமாகிறது.

சுற்றுச்சூழல் மாசும் இதனால் ஏற்படும் பாதிப்புகளும்:

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கம், நவீன அறிவியல் வளர்ச்சியினால் குறுகிய கால வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் உருவாக்கம், போக்குவரத்தினால் ஏற்படும் மாறுதல்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் முக்கிய அங்கங்களாகிய இயற்கை வளங்கள் (நிலம்,நீர்,காற்று) பாதிக்கப்பட்டன. இப்பாதிப்பாதிப்புக்குப் பெயர் தான் ‘சுற்றுச்சூழல் மாசு’ என்கிறோம். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசிற்கு உள்ளாகியுள்ளனர்.

‘மாசு’ என்னும் சொல் இலத்தீன் மொழியில் ‘பொலுட்டோனியம்’ என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இச்சொல்லை முதலில் 1966-ம் ஆண்டு ‘ஹெனி’ என்பவரே கண்டறிந்து அறிமுகம் செய்தார்.

காற்று மாசு:

மாசு என்று கூறினாலே முதலில் நம் நினைவுக்கு வருவது காற்றில் கலக்கும் மாசு தான். ஏனெனேன்றால் நம் வாழ்வாதாரமே சுவாசத்தில்தான் அடங்கி உள்ளது. காற்றில் கலந்துள்ள நச்சுக்களையும் அவற்றினால் ஏற்படும் தீமைகளும் பின்வருமாறு.

நைட்ரஜன் ஆக்சைடு வாயு – சுவாசக் குழாய், நுரையீரல் பாதிப்பு

சல்பர் ஆக்சைடு வாயு -  இதய உபாதை, தலைவலி, வாந்தி

கார்பன் மோனாக்சைடு – ஆக்சிஜனை கெடுத்து ரத்தப் பண்பு குறைத்தல்

அம்மோனியா – மூச்சுக் குழாய் புண்

நைட்ரஜன் சல்பேட் – கண், தொண்டை எரிச்சல், மயக்கம்

நைட்ரோ பினால் – இரத்தப் புற்றுநோய்

இன்னும் இது போன்ற ஏராளமான நச்சுக்கள் காற்றில் கலந்து மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

நீர் மாசுபாடு:

‘நீரின்றி அமையாது உலகு’ நம் வாழ்வாதாரம் நிலத்தடி நீர். இது பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லாமல் மாசுபட்டு ஊறுவிளைவிக்கும் வகையில் இருக்கிறது. இதை நீர் மாசு என்கிறோம். மாசுபட்ட நீரை, அதன் வாசனை, சுவை, கலங்கல், நிறம் ஆகியவற்றின் மூலம் உணரலாம். நாம் அனைவரும் நிலத்தடி நீரையே சார்ந்து வாழ்கிறோம். ஆனால் இந்நீர் கசிவுக் குழிகள், ஆழமில்லாத சாக்கடைக்குழிகள், தொழிற்சாலைகள், உரக்குவியல், உரம், பூச்சிக்கொல்லித் தொழிற்சாலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்புகள், உருக்காலைகள், வேதியியல் தொழிலகங்கள் போன்ற காரணிகளால் பாதிப்படைந்துள்ளன.

மண் மாசு:

‘மண்’ என்ற சொல்லுக்கு புவி மூலப்பொருள் என்பது பொருள். கழிவு நீர் வாயுக்கள், தனிமங்களின் சிதைவு, வாகனக் கழிவுகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைக் கழிவுகள், மரத்தூள் போன்றவை மண்ணை மாசுபடுத்துகின்றன. மண்ணில் படிந்த மாசுக்கள் நச்சுக்களாக மாறுகின்றன. இது உணவுச் சங்கிலியால் பல்வேறு உயிரினங்களுக்கு உணவாக உட்கொள்ளப்படுவதால் நம்மால் அறியமுடியாத பல அபாயங்களை சந்திக்க நேரிடுகிறது.

கடல் மாசு:

உயிரினங்களின் தோற்றம் கடல் தான் என்ற ஒரு கூற்று நிலவுகிறது. உலகின் முக்கால் பகுதி நீரால் சூழப்பட்டது. இக்கடலால் நாம் பல வளங்களைப் பெற்று வந்தாலும் இதற்கு ஆபத்தை தொடர்ந்து நாம் விளைவித்தே வருகிறோம். இந்தியாவில் வற்றாமல் ஓடக்கூடிய ஆறுகளான கங்கை, யமுனை, சீலம், ரவி, காசி, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை, தபதி, காவிரி போன்ற முக்கிய ஆறுகளில் மாசு ஏற்பட்டுள்ளது. பல மாசுகள் அடைந்த சூழலில் செல்லும் இந்த ஆறுகள் இறுதியில் கடலில் கலக்கின்றன.

வீட்டு கழிவுகள், குப்பை கூலங்கள், வேளாண் கழிவுகள், தீங்குயிர் கொல்லிகள், பாதரசம் போன்ற கன உலோகங்கள், பெட்ரோலியக் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகளின் குவிப்பு இவைகளின் கலப்பால் கடல் மிக மோசமான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்திற்குள்ளாகின்றன. இதனை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வும் கேள்விக்குறியாகிவிடுகிறது.

கதிர்வீச்சின் பாதிப்பு:

புறஊதாக்கதிர்கள், காஸ்மிக் கதிர்கள், நுண் அலை, கட்புலக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் முக்கிய காரணிகளாகும். இக்கதிர்கள் மனிதர்களின் மரபணுவையே பாதிக்கும் அளவிற்குக் கொடியது. பொதுவாக காஸ்மிக் கதிர்வீச்சைக் காட்டிலும் ஓ கதிர்களிலிருந்து வெளிப்படும் 95மூ கதிர்வீச்சு பெரும் இடராக அமைகிறது. அணுகுண்டு, நைட்ரஜன் குண்டு, அணுக்கரு ஆற்றல் தொழில் நுட்பங்களின் விளைவாகச் சுற்றுச் சூழலைக் கதிர்வீச்சு மாசுபடுத்துகிறது.

கதிர்வீச்சினால் சுரங்கப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இக்கதிரியக்க மாசுபாட்டால் குறைப்பிரசவம், செத்துப் பிறத்தல், பிள்ளைப்பேறு குறைதல், கண்புரை, வாய்ப்புண், இரத்தக் குழாய் பாதிப்பு, சருமத்தில் செம்புள்ளிகள், இரைப்பைக் குடல் பாதிப்பு, ரத்தப் போக்கு, எலும்பு மஜ்ஜை பாதிப்பு வயதுக்குப் பொருந்தாத மூப்பு, ஆயுள் குறைப்பு போன்ற எண்ணற்ற குறைபாடுகளும் அவதிகளும் ஏற்படுகின்றன.

தமிழ் இலக்கியங்களில் சுற்றுச்சூழல் வலியுறுத்தல்:

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நெடுங்காலத்திற்கு முன்பே நம் பண்டைத் தமிழர்கள் சிறந்த முன்னோடிகளாக திகழ்ந்திருந்தனர். தொன்மையான தமிழ்க்குடியினரின் வாழ்வுமுறைகள் பெரும்பாலும் அவரவர் வாழ்விடத்தில் உள்ள நிலங்களையும், செழித்தோங்கிய மரஞ்செடி கொடிகளையும், பிற வனங்களையும் கொண்டே அமைந்திருந்தன.

“இடுமுள் வேலி எடுப்படு வரைப்பின்” (பெரும் -154) – என்ற பாடல் தனியிடங்கள் குப்பைகளை வெளியே போடக்கூடாது. அவற்றுக்கென தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததையும், குப்பைகள் கொட்டப்படும் இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு இருந்ததையும் அழகாக பெரும் பாணாற்றுப்படையில் கூறியுள்ளனர்.

மக்களின் வாழ்வும், தாழ்வும் ஐம்பூதமான இயற்கையை மையமாகக் கொண்டே அமைந்துள்ளதை நம் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்ததை பின்வரும் புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது.

“மண்டினிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீ முரணிய நீருமென்றாங்கு (புறநானூறு: 2=1.6)

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல

கேடு வராமலும் கேடு வந்தால் அதனைச் சரிசெய்து இயற்கை வளம் குன்றாமல் காத்துக்கொண்டு இருக்கின்ற நாடே நாடுகளுக்கெல்லாம் தலைமையானது  என்கிறார் வள்ளுவர்.

“கேடு அறியாக்கெட்ட இடத்தும் வளம்குன்றா

நாடு என்ப நாட்டின் தலை” – (குறள் – 736) –மேலும் மழை நீர், ஆற்று நீர் போன்றவையும் அலை, அரண் போன்றவையும் நாட்டிற்கு மிக முக்கிய உறுப்புகளாகத் திகழக் கூடியது. ஆகவே இயற்கைப் பாதுகாத்தல் அவசியம் என்கிறார்.

“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு – (குறள் – 737)

-அதே போல எலி, மயில், காளை, யானை, ஆடு, அன்னம், பாம்பு, காகம், கருடன், கிளி, எருமை, கழுதை போன்ற உயிரினங்களை இறைவனோடு தொடர்புபடுத்தி, வாகனங்களாகவும் கருதி வழிபடச் செய்தனர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக 1986ல் இயற்றப்பட்டுள்ள சட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை சார்ந்த அனைத்தும் குறிப்பாக நிலம், நீர், காற்று ஆகிய காரணிகளுடன் தொடர்புடைய அனைத்துக்கும் இச்சட்டம் பொருந்தும். பொருட்களைத் தயாரித்தல், செயல்படுத்துதல், கையாளுதல், பாதுகாத்தல், பயன்படுத்துதல் போன்ற எல்லாவற்றிற்கும் இச்சட்டம் ஏற்புடையதாகும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இயற்கையைப் பேணிக் காப்பதோடு கற்பித்தல்- கற்றல் இந்த இரண்டு முறைகளிலும் தொலைநோக்கும் பார்வையுடன் செயல்பட்டால் தான் முழுமை பெற முடியும். வருங்காலத் தலைமுறையினர் ஆற்றலோடும், ஆளுமையோடும், உயர்வோடும், உரிமைபோகும், தலைநிமிர்ந்து வாழ வேண்டுமாயின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம். இதனை நடைமுறைப்படுத்தும் கல்வி மிக மிக அவசியம். வருங்காலத் தலைமுறைக்கு கல்வியின் வழிச் சுற்றுச் சூழலை போற்றிப் பேணுவோம்.

If you are more comfortable starting on paper than on the computer, essaynara.com you can start on paper and then type it before you revise

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “சுற்றுச்சூழல் கல்வியின் அவசியமும், அதன் விழுமியச் சிந்தனைகளும் (கட்டுரை)”
  1. த சுந்தர் says:

    மிக்க நன்றி. அதிகமான தகவலை பெற முடிந்தது.

  2. sharin says:

    Good information

அதிகம் படித்தது