மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மீத்தேன் எரிவாயுத் திட்டமும் அதன் எதிர்கால வினைகளும் (கட்டுரை)

ஆச்சாரி

Aug 1, 2013

தென்னை மரத்தில தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு சொல்லாடல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அது இப்போது  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை விடயத்தில் உண்மையாகி போய் இருக்கிறது.

தேவையில்லாத பாதுகாப்பு துறை செலவீனங்கள் , இமயம் அளவு ஊழல்கள், இந்தியாவுக்குப் பொருந்தாத சந்தைப் பொருளாதாரம் என சூறையாடப்பட்ட இந்தியாவின் பொருளாதாரம் இப்போது அதல பாதாளத்திற்குப் போய்  கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதில் இருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா தனது மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க முடிவு செய்து விட்டது. “என்னடா சிக்கும்” என அது தேடும் போது அதற்கு சிக்கி இருப்பது தான் தஞ்சை திருவாரூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் மீத்தேன் எனப்படும் இயற்கை எரிவாயு.

இந்தப் பகுதியில்  மக்கள் மிக அதிகமாக  வசிக்கிறார்கள் என்ற உணர்வு சிறிதும் இன்றி, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்பது குறித்த அக்கறை சிறிதும் இன்றி, தமிழகத்தின் நீர் ஆதாரம் அடியோடு சீர்குலையும் என்ற கவலையும் இன்றி மத்திய அரசு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் முழுக்க  ஆழ்கிணறுகளைத் தோண்டி மீத்தேன் எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும் அனுமதி  மூன்று நிறுவனங்களுக்கு   கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பெயர்கள்

1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் ( Oil and Natural Gas Corporation Ltd  ONGC ) ,

2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் ( Gas Authority  of  India Ltd GAIL ) 

3.கிழக்கத்திய எரிசக்தி  நிறுவனம் ( Great Eastern Energy Corporation Ltd  GEECL  ).

இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. இந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும் , அந்த நிலத்தில் எத்தனை  மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அந்த நிலத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.

இந்தத் திட்டம் எண்ணிலடங்கா சிக்கல்களை உருவாக்கும். சில முக்கியப் பிரச்சினைகளை மட்டும் இங்கே பட்டியலிடுகிறோம்.

1

நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக உறிஞ்சப்படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச நீரும் கிடைக்காது.

2

மீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விட பன்மடங்கு உப்புத் தன்மையுடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும் , குளங்களிலும் கலக்கும் போது விவசாய நிலம் உப்பளமாக மாறும்.

3

மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில் எற்படும் மாற்றங்களால் குடிநீரோடு இந்த மீத்தேன் எரிவாயு கலக்கும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணைக் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் குழிகளில் வந்த நீர் தீப்பற்றி எரிந்ததை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அது ஒரு சிறிய எண்ணைக் கசிவால் ஏற்பட்ட விளைவு. மாவட்டங்கள் முழுக்க எண்ணைக் குழாய்கள் அமைக்கப்பட்டால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்.மீத்தேன் எடுக்கும் பணியில் குழாயில்  கசிவு ஏற்பட்டு மீத்தேன் வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது.  (அத்துடன் மீத்தேன் என்பது எளிதில் தீ பற்றக் கூடிய வாயு – அதாவது அதன் பண்பு நிலையானது மிகக் குறைந்த வெப்பத்திலேயே, தானே தீ பற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இதனை ஆங்கிலத்தில் – Highly inflammable, Lower flash point  என்பர்.) அப்படிக் கலந்தால் தஞ்சை திருவாரூர் ஒட்டு மொத்த  மாவட்ட மக்களின் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். நாம் சுவாசிக்கும் காற்று முழுக்க நஞ்சாக மாறும்.

4

நிலத்தின் அடியே குறுக்கும் நெடுக்குமாக தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை , திருவாரூர் மாவட்டம் முழுவதும் பூகம்ப ஆபத்து உருவாகும்.

5

இந்தத் திட்டத்தின் மூலம் நமது வழிபாட்டுத் தலங்கள் ,  தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட சரித்திர சின்னங்கள், பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்டவை பெரும் ஆபத்துக்குளாகும்.

6

மீத்தேன் எடுக்கும்  நிறுவனங்கள் உள்ளூரில் வேலை கொடுப்பதாகச் சொன்னாலும் அவர்கள் இந்த எரிவாயு எடுக்கும் அனுபவம் உள்ளவர்களையே  பணியில் அமர்த்த முடியும்.இதன் மூலம் தஞ்சை , திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு வெளிமாநில மக்கள் குடியேற்றப்படுவார்கள். 

7

தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின்   மக்கள்   தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.

8

இந்த நிறுவனங்கள் தங்கள் எரிவாயுவை கொண்டு செல்லக் குழாய் பதிப்பது , சாலை அமைப்பது போன்ற பணிகளைச் செய்யும் போது ஏற்கனவே விவசாயம் செய்ய நமக்கு இருக்கும் கட்டமைப்புக்களான ஆறுகள், குளங்கள் போன்றவை இந்த நிறுவனங்களால் அழிக்கப்படும்.

9

இந்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக மாறுவது மட்டுமல்ல , இந்தக் குழாய்களில் ஏற்படும் சேதத்திற்கு நம்  மீது தவறுதலாக  தீவிரவாத வழக்குப் போடவும் வாய்ப்பு இருக்கிறது.


(அது மட்டுமல்ல நமது நாட்டில் உள்ள கால் நடைகள் அதாவது குறிப்பாக மாடுகளும், பசு,எருது,எருமை) போன்றவைகளின் சாணம் என்பது ஏற்கனவே மீத்தேன் எரிவாயுவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இது தான் சில வேளைகளில் நமது தட்வெட்ப நிலைகளில் கிராமப் புறங்களில் அதனில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவானது திடீரென்று தானே தீப்பற்றிய அந்த நாட்களில் மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்தேன் என்பர். இதனை இன்று ஓரளவு விஞ்ஞானத்தின் வாயிலாக உண்மை உணர்த்தி கோபார் காஸ் என்று மக்களிடம் விளக்கி அதனையே சாணத்தை சேகரித்து அந்தத் தொட்டியிலிருக்கும் மீத்தேன் வாயுவிலிருந்து வீட்டிற்கான சமையல் வாயுவாகப் பயன்படுத்த 1970 -களில் இந்திரா காந்தி அம்மையாரின் அரசாங்கம் முயன்று ஓரளவு வெற்றி பெற்றது. மண்ணிற்குள் பதிக்கப்படும் குழாய்கள் நம் போன்ற  Tropical நாடுகளில் மிக எளிதில் துருப்பிடித்து மண்ணுக்கடியிலேயே துருப்பிடிக்கும் வெறும் சாணத்திலிருந்து வெளியேறும் மிகச் சிறிய வாயுவிற்கே தீப்பிடிக்கும் ஆற்றல் இருக்கும் போது பாதிக்கப்பட்டு கசிவு பெரும் குழாய்களில் வரும் பேராபத்து என்பது ….?????

இவையெல்லாம் அதிமேதாவி விஞ்ஞானிகளால் 15 நாளில் சரி செய்யப்படும் என்பது நமது நாட்டு மேதைகள் தரும் உத்திரவாதம், இதற்கு நாம் ஒப்புக்கொண்டு என்னதான் நடக்கும் என்று பார்க்க முனைந்தால் அதனை விட மிகக் கொடியதொரு தவிர்க்க இயலாத பின் விளைவு, இல்லை. உடனடிப் பக்க விளைவு என்பது என்ன தெரியுமா ? ஒட்டு மொத்த இந்திய துணைக்கண்டத்திலேயே மிகப் பரந்துபட்ட விளை  நிலங்களும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாய் குறுக்கு நெடுக்காய் பாசனக் கால்வாய்களைக் கொண்ட நெற்களஞ்சியம், நெற்பயிர் சாகுபடி, தொன்று தொட்ட விவசாயப் பண்பாடு என்பதெல்லாம் தமிழ் நாட்டிலும், குறிப்பாக சோழ மண்டலத்திலும் தான். ஆகவே தான் சோழ நாடு சோறு உடைத்து என்றனர். இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மலைகளும் குன்றுகளும் இடைமறிக்காத ஒரு பரந்துபட்ட சமவெளி என்பது காணக்கிடைக்காது. இதனை உணர்ந்த கரிகால்பெருவளத்தான் நமக்கு சோழமண்டலத்தை வலைப் பின்னலாக மிகப்பெரிய பாசனக் கால்வாய்த்திட்டம் அன்றே செயல்படுத்தி அவனது குடிமக்களுக்கு மிக நீண்ட செயல் திட்டத்தை விட்டுச் சென்றான். அதுதான் இன்றுவரை சோறு போடுகின்றது. விதி அவன் சமைத்த பாசனக் கால்வாய்களில் இன்று எரிவாயு அரக்கர்கள் உவர் நீர் இறைத்து ,மீண்டும் நிலத்தடி நீரையும்,பாசனக் கால்வாய்களையும் ஒரு சேரச் சுற்றுச் சூழல், நிலத்தடி பாதிப்பினை ஏற்படுத்தப் போகின்றனர். வரும் முன் காப்பது மனித இயல்பு. வந்த பின்பு ஊரைக் காலி செய்தால் நாம் எல்லாம் வெறும் அகதிகளே. இற்றைக் காலங்களில் அகதிகளுக்கும் பெரும் சோதனை என்பதனை மறக்க வேண்டாம். அதனை நம் பிள்ளைகள் சந்திக்க நாம் காரணமாய் இருக்க வேண்டாம்.

 மீத்தேன் எரிவாயுவின் பண்புகள் குறித்த சிறிய கண்ணோட்டம்: 

கரிம நீரதை எனப்படும் Hydrocarbon வகையினைச் சார்ந்த மூலக் கூற்றினைக் (Molecular Formula) கொண்டதாக அறியப்படுவதே இந்த மீத்தேன் அல்லது மெத்தேன் எனப்படும் எரிவாயு.

பொதுவாக புவி வெப்பமடைதல் குறித்த அச்சம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலக விஞ்ஞானிகளிடம் மேலோங்கி வருவதும், இதனால் கடல் மட்டம் உயர்ந்து உலகின் பல குட்டித் தீவுகளும், கரையோர நிலப் பகுதிகளும் காணாமல் போகும் அபாயம் இருப்பது தெளிந்த உண்மை. இதற்கு முதன்மைக் காரணம் நமது வளி மண்டலத்தை எரிபொருட்களின் புகையினால் நிரப்புதலே. அதாவது கூடுதல் கரியமில வாயு (Co2) வெளியேற்றம் இதனாலேயே இற்றைக் காலங்களில் இதனை வெளியேற்றும் வானூர்திகளின் பயணச் செலவும் பன் மடங்கு அதிகரித்துள்ளது. இந்த  கரியமில வாயு (Co2) வை விட 10 மடங்கு மிக கூடுதலாய் புவி மண்டலத்தை துளையிட்டு புவி வெப்பமடைய அசுர வேகத்தில் செயல்படும் தன்மை மீத்தேன் வாயுவிற்கே உண்டு. இது கடலுக்கடியிலும் அதிகமாய் இருக்கின்றது. (குறிப்பாக தூந்திரப் பகுதிகளில் நீருடன் உறைந்த நிலையில் மீத்தேன் வாயு பன் மடங்கு படிவங்களாய் இருப்பதால் உலக வல்லரசுகள் எல்லாம் தூந்திரப் பகுதியில் கூடாரமிட்டு வரம்பு கட்டி கொடி நாட்டி வருகின்றனர். இனி வரும் காலங்களில் இதற்கான அரசியல் போர் உறுதி.) இது தவிர்த்து அனைத்து நாடுகளிலும் எண்ணெய் மற்றும் எரி வாயு உற்பத்தித் தொழிலகங்களில், ரசாயன தொழிற்சாலைகளில் என அனைத்திலும் நெருப்புடன் கூடிய வேலை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் அதற்கு முன் பிரத்தியேக கருவியின் மூலமாக (Explosive Meter), மீத்தேன் வயுவின் வெடிப்பு நிலைக்கு உட்படாத விழுக்காடு % இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்பே (Welding) – பற்ற வைப்பு, (Mettal cutting) – உலோகம் வெட்டுதல், (Crinding / Polishing) – சாணை பிடித்தல், கூர் செய்தல் போன்ற ஆபத்தான பணிகளைத் துவக்குகின்றனர். இதற்கு மேற்கூறிய கருவியின் மூலமாக (Explosive Meter) மீத்தேன் வாயுவின் விழுக்காடு 5% ல் இருந்து 15% ற்குள் இருக்கும் போது மேற்கூறிய நெருப்பு/சாணை பிடித்தல்/ அல்லது உராய்வுத் தனமையினால் ஏற்படும் தீபொறி வரும் வேலைகளைச் செய்வதை தவிர்த்து மீத்தேன் அளவு, 5% விழுக்காட்டிற்கு குறைவாக இருப்பதனை உறுதி செய்து கொண்ட பின்பே, அந்த வேலையினை துவக்குவர்.

இப்படியெல்லாம் முன் எச்சரிக்கை தேவைப்படுவது மீத்தேன் வாயுவிற்கு மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் கண் போன போக்கிலே குழாய் பதித்து, மனம் போன போக்கிலே வாயுவை உறிஞ்சுகிறேன் என்பது தொழில் வளம் பெருக்கும் நோக்கமாக அல்ல. ஆள் இல்லாத தூந்திரப் பகுதிகளை ஆக்கிரமிக்க வல்லரசுகள் முயலும் போது, ஒட்டு மொத்த ஆசிய கண்டத்திற்கே வல்லரசாக இருக்கும் நமது பாரதம் ஏன் பன் நாட்டு முதலாளிகளுக்கு மக்கள் அடர்ந்து வாழும், விவசாயம் நங்கு செழிக்கும் பகுதியினை விலை பேச வேண்டும் ?

எல்லாவற்றிற்கும் மேலாக மீத்தேன் வாயுவின் உருகு நிலை மைனஸ்  - 182.5 டிகிரி செல்சியஸ் , அதன் கொதி நிலை என்பதும் மைனஸ் – 161.6 டிகிரி செல்சியஸ். அதாவது உலகின் மிக இயல்பு நிலையில் கூட (ரஷ்யா, அலாஸ்கா போன்ற பனி படர்ந்த இடங்களிலும் கூட) இது வாயு நிலையிலேயே இருக்கும். எந்நேரமும் எளிதில் தீ பற்றிக் கொள்ளக் கூடியது என்பதும் இயற்கையான பச்சை உண்மை.  தூந்திரப் பகுதியிலும் கூட இது நீருடன் கலந்து திட நிலையாக இருக்கின்றது. அவ்வளவுதான்.

எல்லாம் சரி இது போன்று தானே சமையல் எரிவாயு? இதனை நம் மக்கள் பயன் படுத்துகின்றனரே ஆபத்து இல்லையே என்றால் அதுவும் ஆபத்து தான். ஆனால் அதனை நாம் கையாளும் விதத்தில் சில அபாயங்களை தவிர்க்கின்றோம். உருளையில் வரும் வாயுக்கள் மிகக் கூடுதல் உயர் அழுத்தத்தால் அடைத்து, திரவ நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். ஆகவே உருளைக்குள் இருப்பது முழுவதும் திரவமாக்கப்பட்ட எரிவாயு. இதனையும் மிகக் கவனமாகவே கையாள வேண்டும். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இதனைச் சிறிய குழாய்கள் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்வதனால் உருளையினை விட மிக அதிக பேரழிவுகளும், விபத்துகளும் பதிவாகி வருகின்றன. ஆகவே அவர்களும் உருளை முறைக்கு மாறத் துவங்கி உள்ளனர். இதுதான் உண்மை. சாலை விபத்துகள், நிலச் சரிவுகள், நில அதிர்வுகள் – பூகம்பம் ஆகியவற்றில் பெரிதும் உடைப்பெடுத்து வாயு வெளியேறி கூடுதல் உயிர் இழப்புகளும், பொருட் சேதங்களும் தருவது இவ்வகை எரிவாயு குழாய்கள் தான். அதுவும் நம் நாட்டில் மண்ணிற்குக் கீழ் பதிக்கும் குழாய்கள் எளிதில் இயற்கை வேதியல் மாற்றத்தால் துருப் பிடிப்பது, அரிப்பெடுப்பது ஆகையால் விரைவாக நடந்தேறும். சாலைகளைப் பராமரிக்கும் நமது நாட்டின் லட்சணம் நமக்குத் தெரியும். மேலும் மிகக் கூடுதல் ஆழத்திலிருந்து இறைக்கப்படும் நீர் அங்கு உள்ள  நிலக்கரிப் படிவங்களையும் சேர்த்து இழுத்து வெளிக்கொணரும். சோடியம் போன்ற உவர் நிலைத் தாதுக்கள் மிகுதியாக வெளியேறும் போது அது நிலத்தின் அடியில் நிலத்தின் தன்மையினை மாற்றிவிடும். இவ்வகை இயற்கை மாற்றம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் எந்நாளும் பயன் தாராது. நாம் மீண்டும் அதனை பழைய நிலைக்குக் கொண்டு செல்லவும் முடியாது. சரி வெளியேற்றப்பட்ட உவர் நீர் வெளியில் மேற்பரப்பில் உள்ள  நிலத்தை அடியோடு அழிக்கும். இந்த நிலையும் வந்து விட்டால் மண்ணில் விதை போட்டால் நச்சு கூட விளையாது. மண் முழுவதும் நச்சு தான். பிறகு மீத்தேன் வாயுவிற்கு நிலத்தைத் கொடுத்த மக்கள் சொந்த நிலத்தில் கூட அகதி நிலையில் வாழ முடியாது. பின்பு வெளி மாநிலங்களில் சாலையோர வாழ்க்கை தான். இது மிகையல்ல. நிலமற்றவர்களின் நிலை இதுதான். அகதிகள் ஆவதற்கும் ஒரு தகுதி வரையறை உண்டு. அது தஞ்சை மாவட்ட மக்களுக்கு வருமா? மீத்தேன் வாயுவினைக் குழாய்களில் அடைத்துக் கொண்டு செல்வதும் கடினம். இது இரும்புக் குழாய்களை எளிதில் துருப்பிடிக்கச் செய்துவிடும். இதனை அவ்வப்போது ஆய்விற்கு உட்படுத்திப் புதுப்பிக்க வேண்டும்.

பொதுவாக மக்கள் வாழ்விடங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது  இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக உண்டு உடுத்தி, உறைந்து, விவசாயம் செய்து வாழ்ந்து வரும் தொல்குடி மக்கள் சமுதாயத்தை, உடமையற்றவர்களாகவும், அவர்கள் சந்ததியினர் நிலமற்றவர்களாகவும் ஆக்குவது என்பது அறிவுடைமை ஆகாது. மேலும் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே படிவங்கள் உள்ள இந்த நிலத்தைச் சூரையிடுவது உள் நோக்கம் கொண்டதாகவும் உள்ளதாகவே தெரிகின்றது. காவிரியை வறண்டுவிடச் செய்து அந்த நிலையில் மக்கள் மீது இந்தத் திட்டத்தைத் திணிப்பது என்பதை என்ன சொல்வது? மக்கள், கட்சி வாரியாகப் பிரிந்து சிந்திக்காமல் தங்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் குறித்து சிந்தித்தால் நல்லது.

இதுவரை நடைமுறை அனுபவங்களுடன் மீத்தேன் எரிவாயுவின் பண்புகளையும் அதனைக் கையாளும் தன்மைகள், எதிர்வினைகள், பக்க விளைவுகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளோம்.  நம் நாட்டு நலம் கருதியும், மக்கள் நலன் கருதியும் இவ்வகைச் சிந்தனைகளை விவாதத்திற்கு வைத்துள்ளோம்.

இத்திட்டத்தை எதிர்த்து நம்மாழ்வார் போன்ற பெரியவர்கள் மற்றும்  தமிழர் நலன் சார்ந்த அரசியல் கட்சிகள் போராட ஆரம்பித்து இருப்பது ஒரு  ஆறுதல். இந்தத் திட்டத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது  ஒவ்வொரு தமிழனின் கடமை.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழினம் உணவிற்காக நிரந்தரமாக அடுத்த நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும். ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு மட்டுமல்ல, முழுமையாகவும்  இந்தத் திட்டத்தை எதிர்த்து வேலை செய்வோம்.

We e-mailed our contact who said that they would check with his boss, eduessayhelper.org/ she said that the project could afford a delay as long as they wouldnt have to make any edits or changes to the file our new deadline is next friday

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “மீத்தேன் எரிவாயுத் திட்டமும் அதன் எதிர்கால வினைகளும் (கட்டுரை)”
  1. Manigandan says:

    நீங்க என்ன பனரிங்க உங்க ஊர் உள்ள இயற்கை எல்ல அலிந்துவிடும்
    எதாவது பன்னுங்க இயற்கையை காபாத்துங்
    உன்கள வெண்டி கெட்டுக்கர

  2. kondraivendhan says:

    //ஒட்டு மொத்த இந்திய துணைக்கண்டத்திலேயே மிகப் பரந்துபட்ட விளை நிலங்களும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாய் குறுக்கு நெடுக்காய் பாசனக் கால்வாய்களைக் கொண்ட நெற்களஞ்சியம், நெற்பயிர் சாகுபடி, தொன்று தொட்ட விவசாயப் பண்பாடு என்பதெல்லாம் தமிழ் நாட்டிலும், குறிப்பாக சோழ மண்டலத்திலும் தான். ஆகவே தான் சோழ நாடு சோறு உடைத்து என்றனர். இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மலைகளும் குன்றுகளும் இடைமறிக்காத ஒரு பரந்துபட்ட சமவெளி என்பது காணக்கிடைக்காது. இதனை உணர்ந்த கரிகால்பெருவளத்தான் நமக்கு சோழமண்டலத்தை வலைப் பின்னலாக மிகப்பெரிய பாசனக் கால்வாய்த்திட்டம் அன்றே செயல்படுத்தி அவனது குடிமக்களுக்கு மிக நீண்ட செயல் திட்டத்தை விட்டுச் சென்றான். அதுதான் இன்றுவரை சோறு போடுகின்றது.// இந்த உண்மை உணரப்பட வேண்டும். நன்றி.

அதிகம் படித்தது