மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

“பேரறிவாளனை மீட்டுத்தாருங்கள்” வேண்டுகோள் விடுக்கும் அற்புதம் அம்மாள்

ஆச்சாரி

Sep 1, 2013

சிறிது காலத்திற்கு முன்பு தமிழகத்தையே பரபரப்பாக்கிய போராட்டம்  எதுவென்றால் மூவர் தூக்கு போராட்டமே. பேரறிவாளன், சாந்தன், முருகன் என்ற மூன்று  தமிழர்கள் இருபத்து மூன்று வருடமாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இப்போது என்ன நிலை இருக்கிறது?  எந்த மாதிரியான சூழலில் இந்த பிரச்சனையைக் கொண்டு செல்கிறார்கள்? என்பதை, அந்த மூவரில் ஒருவரான பேரறிவாளன் என்பவரின் தாயாரான அற்புதம் அம்மாள் அவர்களிடம் வினவினோம்.

கேள்வி: உங்கள் குடும்பம், பூர்வீகம் பற்றி கூறுங்கள்?

பதில்: நான் பிறந்தது வேலூர். திருமணமாகி வாழ்வது  ஜோலார்ப்பேட்டையில். என்னுடைய குழந்தைகள் பிறந்ததும், படித்ததும் இந்த ஊரில்தான். இப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறோம். என்னுடைய பெரிய பெண் பெயர், அன்பு மணி, அடுத்து பேரறிவாளன், அடுத்து அருட்செல்வி என்ற பெண். அனைவரையுமே ஜோலார்ப்பேட்டை அரசாங்கப் பள்ளியில் படிக்க வைத்தோம். பெரிய மகளும், மகனும், தொழிற்கல்வியை அரசாங்க தொழிற்நுட்ப கல்லூரியில் படித்தார்கள். இரண்டாவது மகளை வல்லத்தில் இருக்கும் பெரியார் மணியம்மை கல்லூரியில் இளங்கலை படிக்கவைத்தோம்.

என்னுடைய கணவருடைய சொந்த ஊர் ஜோலார்ப்பேட்டை என்பதால் பெரும்பாலும் நாங்கள் அனைவரும் அங்கேயே வாழ்ந்தோம். நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் மண்ணை நேசித்து, தமிழ் நாட்டிலேயே வாழுகிற தமிழர்கள். என்னிடம் சிலர் கேட்பார்கள் இலங்கையில் இருந்து எப்பொழுது இங்கு வந்தீர்கள் என்று. அந்த மண்ணையே நான் மிதித்தது கிடையாது. இலங்கையைப் பற்றி படங்களில் கேள்விப்பட்டது தான். நாங்கள் தாய் தமிழ்நாட்டு தமிழர்கள்.

கேள்வி: உங்களுடைய மகன் பற்றி கூறுங்கள்?

பதில்: எங்களுடைய ஊர் ஜோலார்ப்பேட்டை நகராட்சியில் ஐயா தந்தை பெரியாருக்கு வரவேற்பு கொடுத்தோம். அப்போது என்னுடைய மூத்த மகளை அவரிடம் பெயர் வைக்கச்சொல்லி கொடுத்தோம். குழந்தையை கையில் எடுத்து முத்தமிட்டு அன்பு மணி என்று பெயர் வைத்தார்.  இது யாருக்குமே கிடைக்காத அரிய பேறு எங்களுக்கு கிடைத்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அடுத்து பிறந்தவன் பேரறிவாளன். ஆண் குழந்தையாக இருந்தால் நான்தான் பெயர் சூட்டுவேன் என்று எண்ணி என் கணவர் வேண்டுகோளுக்கிணங்க அந்த ஆண் குழந்தை தனித்து புகழெல்லாம் பேசப்பட வேண்டும் என்று  சூட்டிய பெயரே பேரறிவாளன். அப்பொழுதே இந்தப்பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்றனர் .

அடுத்த பெண்  வயிற்றில் இருக்கும் பொழுதே என்னுடைய கணவர் ஆணாக இருந்தால் அருட்செல்வன் என்றும், பெண்ணாக இருந்தால் அருட்செல்வி என்றும் பெயர் வைக்க வேண்டும் என்றார். காரணம் ஐயா தந்தை பெரியார் தி.மு.க – வை ஆதரித்த காலம். கருணாநிதி என்ற பெயரின் மறு விளக்கந்தான் இந்த பெயர். அதே போல் பெண் பிறந்த பொழுது அருட்செல்வி என்று பெயர் சூட்டினோம். என்னுடைய பிள்ளைகள் மூன்று பேருமே இரக்கமானவர்கள் தான். படிக்கும் காலத்தில் சக மாணவர்களில் யாரேனும் வருத்தப்பட்டாலோ அல்லது அழுதாலோ, இவர்களும் அவர்களுடன் அழக்கூடிய இளகிய மனம் என்னுடைய குழந்தைகளுக்கு. இவர்களுக்கு தந்தை பெரியாரின் கொள்கையான மனித நேயத்தை கற்றுக் கொடுத்திருக்கிறோம்.

என்னுடைய மகன் பேரறிவாளன் படித்த எல்லா காலங்களிலும், படித்த மாணவர்கள் யாரிடம் கேட்டாலும் இவன் யாரிடமோ சண்டை செய்தான் அல்லது தாக்கினான் என்று யாருமே சொல்லமாட்டார்கள். ஏன் என்றால் சக தோழர்களிடம் நட்பாகத்தான் பழகியிருக்கிறான். அடுத்தவர்கள் மனம் நோகும் படி பேசக்கூடக் கூடாது என நினைப்பவன். அதனால் பயன் என்ன?

மனித நேயத்தைச் சொல்லுகிற ஐயா தந்தை பெரியார் கொள்கையில் வாழ்கிற நாம் எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று கூறுவான். சகோதரிகளிடம் அன்பாக இருப்பான், அவர்களும் இவனிடம் அன்பாக இருப்பார்கள். பிள்ளைகள் மூன்று பேரும் ஒரு நண்பர்கள் போல் தான் பழகினார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் பெரியாரோடு நாங்கள் இணைந்து செயல்பட்ட காலங்களில் அவரின் ஆர்ப்பாட்டம், போராட்டம், மாநாடு, கூட்டம் எதுவாக இருந்தாலும் நாங்கள் எங்களின் குழந்தைகளுடன் செல்வோம். எனவே இயல்பாகவே பார்த்து, கேட்டு உயர்ந்த கொள்கையில் வளர்ந்ததால் அடுத்தவர்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் வளர்ந்தார்கள்.

தொழிற்கல்வி படிக்கும் காலத்தில் பேரறிவாளன் இப்பிரச்சனையில்  பாதிக்கப்பட்டவுடன், இந்த வழக்கின் தீவிரம் தெரியாமல், சக மாணவர்கள் சிறைக்கு வந்து பார்த்தார்கள். அவர்கள் கண்ணீர் விட்டு, இப்படி ஒரு நல்ல பையனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது விட்டதே? என்று வருத்தப்படும் அளவுக்கு என் மகனின் வாழ்க்கை இருந்தது.

கேள்வி: இந்தப் பிரச்சனை எங்கே, எப்போது ஆரம்பித்தது?

பதில்: 1983ல் விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு பெருகியது   எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தக் காலத்தில். புலிகளுக்கு உதவிகள்  செய்வது எல்லாம் வெளிப்படையாக நடந்ததால் அனைவரும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். அந்த ஆதரவை தீவிரவாதிக்கு ஆதரவா  என்று கொச்சைப்படுத்தி விட்டார்கள். அவ்வாறு கிடையாது. ஒரு இனம், அந்த இனத்தை அழிக்க மாற்றான் முயலும் பொழுது, அந்த இனம் தன்மானத்தைக் காப்பாற்ற போராடுகிறது. நாமும் அந்த இனத்தைச் சார்ந்தவர்கள், ஆதலால் நாம் அவர்களுக்கு தார்மீக ஆதரவு தர வேண்டியது கடமை என்ற உணர்வோடுதான் எல்லாருமே செயல்பட்டார்கள்.

அக்காலத்தில் திராவிடக் கழக மாநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கென கண்காட்சி அரங்கத்தைத் தனியாக நடத்துவார்கள். அதில் என் குடும்பமே பராமரிக்கின்ற வேலையை எடுத்துக் கொண்டோம். முதலில் எல்லாம் அய்யா தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றி கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு என பல தளங்களில் ஈடுபட்டு வந்தோம். இந்த ஈழப் பிரச்சனையில் பற்றுதல் வந்த பிறகு புலிகளுடைய கண்காட்சியை கண்காணிப்பது, அவர்களுடைய பிரச்சாரத்தை முன்னெடுப்பது, அதற்கான பிரசுரங்களை விற்பது என நாங்கள் இந்த மாதிரியான செயலைச் செய்து வந்தோம். எங்களுக்கு திராவிடக் கழகத்தின் மூலமாக புலிகள் அறிமுகமானார்கள். அவர்களுக்கு உதவி செய்வது என்று ஒரு இயக்கம் முன்னெடுக்கும் பொழுது அவர்களுக்கான எல்லா வித ஒத்துழைப்பையும் நாங்கள் தந்தோம். அன்று அனைவருமே புலிகளை ஆதரித்த காலம்.

மத்திய அரசாங்கம், அரசாங்க ஊழியர்கள் ஆகியவர்கள் இணைந்து தங்களின் ஒரு நாள் ஊதியத்தை புலிகளுக்குத் தரவேண்டும் என்று கட்டுப்பாடு வைத்து  புலிகளுக்கு உதவி செய்த காலத்தில், இந்திராகாந்தி அம்மையார் அவர்களும் விடுதலை புலிகளுக்கு பயிற்சி கொடுத்த அந்த கால கட்டத்தில் தான்  நாங்களும் ஆதரித்தோம்.

அதன் பிறகு இந்திய அரசாங்கம் புலிகளைத் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிப் போகச் சொன்னார்கள். அப்போது இங்கிருந்தவர்களும் சென்றுவிட்டார்கள். ஆனால் 1991ல் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலையான பின்பு தான் இந்தச் சிக்கலே உருவானது.

ராஜீவ் காந்தி படுகொலை ஆன மறுநாள் காலையில்  சுப்ரமணிய சுவாமி, புலிகள்தான் ராஜீவ்காந்தியை கொன்றுவிட்டார்கள் என்றும் பத்திரிக்கைகளில்  கூறினார் . இதனால் தமிழ்நாட்டில் புலிகள் ஆதரவாளர்கள் அனைவரும் பயந்து நடுங்கி இருந்த நிலைமையில், இந்த விசாரணை வந்தது. அதாவது 1991,மே 21 அன்று குண்டு வெடித்தது. ஜூன் 10 ஆம் தேதி தான் என் வீட்டிற்கு சி.பி.ஐ அதிகாரிகள் வந்தார்கள்.

ஈழ ஆதரவாளர்கள், திராவிட கழகத்தின் குடும்பங்கள் தான் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தவர்கள். எனவே இவர்களை எல்லாம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறோம். அந்த விதத்தில் உங்களை விசாரிக்க வந்திருக்கிறோம் என்று சி.பி.ஐ அதிகாரிகள் கூறினார்கள். (இந்த கொலை வழக்கிற்காக என்று கூறவில்லை).

எங்களுடைய குடும்பத்தைப் பற்றி விசாரணை செய்தார்கள். பெரிய மகள் பெரியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள், மகன் மாலை நேரக் கல்லூரி படிப்பிற்காக பெரியார் திடலில் இருக்கிறான் என்றோம்.  எங்களுடைய கடைசி மகள் கல்லூரி படிக்கிறவள் விடுமுறைக்கு வந்திருக்கிறாள் என்று கூறினோம். வந்தவர்கள் எதை எதையோ எடுத்துப் பார்த்தார்கள். எங்களிடம்  என்ன எதிர் பார்த்து வந்தார்கள் என்று தெரியவில்லை. இறுதியில் உங்கள் மகன் எங்கு இருக்கிறார்? என்று கேட்டார்கள். என் மகன் பெரியார் திடலில் இருக்கிறான் என்றதற்கு இரண்டு நாளில் உங்கள் மகன் இங்கு வந்தால் நாங்கள் இங்கேயே வந்து விசாரிக்கிறோம் இல்லை என்றால் சென்னைக்கு அழைத்து வாருங்கள் என்று ஒரு துண்டுச் சீட்டில் முகவரியைக் கொடுத்துச் சென்றுவிட்டார்கள்.

நீ உடனடியாகச் சென்னைக்குச் சென்று நம் மகனை அழைத்து வந்துவிடு சி.பி.ஐ இங்கேயே விசாரணை செய்யட்டும் என்று, அவர்கள் வந்துபோன  மறுநாள் சென்னைக்கு என்னை மட்டும் அனுப்பினார் என் கணவர். முதல் முறையாக தனியாக நான் பயணப்பட்டது அன்றுதான். ஒரு வழியாக சென்னை வந்து என் மகனைச் சந்தித்து சி.பி.ஐ வந்த விபரத்தைக் கூறினேன். எங்கே வரச்சொன்னார்கள் என்றான் அந்த விலாசத்தைக் காட்டினேன். நீங்களே பார்த்து பேசிவிடவேண்டியது தானே எனக் கூறியவன் சிறிது நேரத்தில் நாம் கிளம்பலாம் என்று கிளம்பும்போது இயக்கத் தோழர்கள் இரவு ஆகிவிட்டது ஆதலால் இங்கேயே தங்கிவிட்டு காலையில் செல்லலாம் என்றனர்.

நாங்களும் சரி என ஒப்புக் கொண்டு கடற்கரையைச் சுற்றிப் பார்க்க சென்று விட்டோம். இரவு பெரியார் திடலுக்கு வரும் போது பெரியார் சிலையின் கீழ் என் கணவரும்  C.B.I  அதிகாரிகளும் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர். என் மகனை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார் என் கணவர். பின் அவர்கள் என் மகனிடம் நாங்கள் கேட்பதற்கு மட்டும் பதில் கூறினால் போதும் என்றனர். என் மகனிடம் அவர்கள் நளினி எங்கே என்று சொல்? என்ற  ஒரே கேள்வியைக் கேட்டனர். அதற்கு எனக்கு அதைப் பற்றி தெரியாது என்றான். அதன் பின் நாங்கள் கூட்டிச் சென்று விசாரிக்கிறோம் என்றனர். அதற்கு நான், நீங்கள் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லிவிட்டானே, என்ன கேட்பதாக இருந்தாலும் இங்கேயே கேளுங்கள் என்றேன். இரவு விசாரித்து விடுகிறோம்.

 நீங்கள்  காலை 6 மணிக்கு மல்லிகை என்ற இடத்தில் வந்து அழைத்துச்செல்லுங்கள் என்று கூறித்தான் கூட்டிச் சென்றவர்கள் அதன் பின் என்னிடம் என் மகனை காட்டவில்லை. மறுநாள் நான் அங்கு சென்ற பொழுதும் காட்டவில்லை. அடுத்த நாள் ஏன் மகனுக்கு மாற்றுத்துணி எடுத்துச் சென்ற பொழுதும் அந்தத் துணியை மட்டும் வாங்கிக் கொண்டார்களே, தவிர என் மகனைக் காட்டவில்லை. இப்படி என்னை அலைக்கழித்தனர்.  அதன் பின் 18 ஆம் தேதி வந்த பத்திரிகைகளில்  பெரியார் திடலில் இவனை தேடிப் பாய்ந்து கைது பண்ணியதாக சி.பி.ஐ  அறிக்கை விட்டது.

 அப்பொழுதுதான் எங்களுக்கு பயம் வந்தது. காவல் துறை அதிகாரிகள் சரியாக விசாரிக்கமாட்டார்கள் ஆனால் C.B.I.  நேர்மையாக விசாரிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் இவர்கள் அநியாயமாக எங்களிடமிருந்து அழைத்துச்சென்று விட்டு, தேடிக் கைது செய்ததாக அறிவித்தவுடனே எங்களுக்கு மிகவும் பயமாகிவிட்டது. எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நாளை அனுப்பிவிடுகிறோம் என்று என் மகனை எங்களிடமிருந்து அழைத்துச்சென்றார்கள். அப்படியே சிறிது சிறிதாக அவனை இந்த வழக்கிற்குள் கொண்டு வந்து விட்டார்கள். எங்களுடைய குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலை வரும் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

ராஜீவ் காந்தியைக் குண்டு வைத்துக் கொன்று விட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் என்னுடைய குடும்பமே வருத்தப்பட்டோம். என் வீடு துக்க வீடு போல் இருந்தது. இப்படியொரு கொடுமையான செயலைச் செய்தது யாரென்று தெரியவில்லையே? தமிழ் நாட்டில் இப்படி செய்துவிட்டார்களே என்று நாங்கள் அச்செயல் செய்தவர்களைத் திட்டிக்கொண்டிருந்தோம். கடைசியில் என் மகனையே இந்த வழக்கினுள் கொண்டு வந்து எங்களுடைய குடும்பத்தையே  இப்படிச் சிதைப்பார்கள் என்று நாங்கள் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை.

கேள்வி: துரோகம் என்று எதை நினைக்கிறீர்கள்?

பதில்: 22 ஆண்டு முடிந்து 23 வது ஆண்டு இந்த வழக்கிற்காக இந்த வீதிகளில் நான் நடக்கிறேன். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு தரப்பினரும், எனக்கு நம்பிக்கை தான் கொடுக்கிறார்கள். சிலர், கண்டிப்பாக உங்கள் மகனை வெளியே கொண்டு வந்துவிடுகிறோம் என்கிறார்கள். அந்த நம்பிக்கையில் அவர்கள் பின்னாலேயே சென்றுகொண்டிருப்பேன். ஆனால் முதன் முதலில் என் மகனை விசாரணை என்று அழைத்துச் சென்றதை  அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வேண்டியவர்கள் அதைப் பற்றி கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் எங்கள் இனத்திற்கே அதாவது எங்கள் வாரிசுகளுக்கே செய்த துரோகங்கள் எல்லாம் நான் சொல்லக் கூடிய நிலைமையில் இல்லை.

ஆனால் உண்மையில் நான் நிறைய துரோகங்களைத்தான் இங்கு சந்தித்திருக்கிறேன். அந்தத் துரோகங்கள் எல்லாம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் எனக்கு நடந்தது விட்டது. அந்தத் துரோகங்களை எல்லாம் எனக்கான வாய்ப்புகள் வரும் பொழுது நான் நிச்சயமாக வெளிப்படுத்துவேன். யாரால் இந்த வழக்கு இவ்வாறு இவ்வளவு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதை நான் கூறுவேன், ஆனால் இப்போது அதை எல்லாம் கூறுவதற்கான  காலம் இல்லை. அதனால் மன்னிக்கவேண்டும். இன்று நான் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடிய நிலையில் இல்லை.

கேள்வி: மூவர் தூக்கு போராட்டத்தில் பின்னடைவு ஏற்படும் பொழுது அதை ஈடுகட்ட ஊன்றுகோலாக உங்களுக்கு இருந்தது எது?

பதில்: என் மகனின் முகம் தான். என் மகனை நினைக்கும் பொழுது எனக்குள் இருக்கும் எல்லா வேதனை, வலி எல்லாவற்றையும் மறந்துவிடுவேன். என்னுடைய குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு நாம் நடமாடித்தான் தீரவேண்டும். எனக்கு என்ன நிலைமை வேண்டுமானாலும் வரட்டும். மேற்கொண்டு இதற்கான அடுத்த முயற்சி என்ன? அவனை வெளியே கொண்டு வர என்ன செய்யலாம்? யார் யாரைப் பார்க்கலாம்? யார் யாரிடம் கெஞ்சலாம்? இந்த நிலைமையை என் மனதிற்குள்ளேயே நான் உருவாக்கிக் கொள்வேன். ஆரம்ப காலத்தில் இந்த வழக்கிற்கான நகல்களை எடுத்துக் கொண்டு கொடுத்தேன்.

26 பேருக்குமான வழக்கு  தொடர்பான நகல்களை நான் மட்டுமே சுமந்து போய் கொடுத்திருக்கிறேன். பூந்தமல்லியில் வழக்கு நடக்கும் பொழுதெல்லாம் நான் தான் வழக்கு நகல்களை எடுத்துக்கொண்டு கொடுத்திருக்கிறேன். இரண்டு கைகளிலேயும், தோழிலேயும்  தூக்க முடியாத அளவுக்கு சுமையை நான்  தூக்கும் பொழுது எனக்கு அழுகையே வந்துவிடும்.

நான் ஜோலார் பேட்டையில் இரவு 2 மணிக்கு, 3 மணிக்கெல்லாம் பேருந்திலேயோ அல்லது தொடர்வண்டியிலோ இறங்கி  தனிமையில்தான் நடந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது, இந்த சுமையைத் எல்லாம் தூக்கிக்கொண்டு செல்வது தேவைதானா? என்ற அளவுக்கு எனக்கு ஆகிவிடும்.  உடனே என்னுடைய குழந்தையைத்தான் நினைத்துக் கொள்வேன்.  யார் செய்வது இந்த வேலையெல்லாம் நம்மைத்தவிர, என்று நினைத்துக் கொண்டு நாம் கண்டிப்பாகச் செய்யவேண்டும், குழந்தைக்காகச் செய்ய வேண்டும், மகனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எப்பவுமே எனக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது.

கேள்வி: இந்த பிரச்சனை உங்களது வாழ்க்கையில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்திருக்கிறது?

பதில்: பாதிப்பு என்கிற வார்த்தையே சாதாரண வார்த்தை என்ற அளவுக்குத்தான் எங்களது குடும்பம் இன்று சிதைந்திருக்கிறது. நாங்கள் எல்லாருமே ஒன்றாக இருந்துதான் பழக்கப்பட்டவர்கள். நல்ல மாதிரியாக திருமணம் நடந்தோ, வேலைக்கு சென்றோ மகிழ்ச்சியாக இருக்கிறவர்கள் பிரிந்தார்கள் என்றால் அது வரவேற்கக்கூடிய பிரிவுதான். ஆனால் எங்களுக்கு அவ்வாறு நடக்கவில்லை. என் மூத்த மகள், என் இளைய மகள் இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கும் பொழுதும் என்னுடைய ஒரே மகன் அந்த குதூகல நிகழ்ச்சிகளில் இல்லாமல் போய்விட்டான். அவன் இல்லாமல் அழவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் நாங்கள் எங்களுடைய இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்தோம்.

பேரன், பேத்தி என்று நல்ல வீட்டில், நன்றாக வாழ்கிறேன். என்னுடைய மருமகன்கள் நல்லவர்கள், வசதி வாய்ப்போடு இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை என்றாலும் நடுத்தர வர்க்கத்தினர் எப்படிச் சிறப்பாக இருப்பார்களோ அவ்வாறு சிறப்பாக இருக்கிறார்கள். ஆனால் என் மகனுக்கு அது எதுவுமே இல்லை. எதுவுமே அவனுக்குக் கிடைக்கவில்லை.

2011 செப்டம்பர் 9 முடிவு செய்து 30 ஆம் தேதி தமிழக அரசின் முதல்வருக்கு நான் நிறைய நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவர்கள் அந்தத் தீர்மானம் போட்டு, இந்தத் தீர்ப்பை நிறுத்தி வைத்த பிறகு வழக்கறிஞர்களோடு சென்று நான் என் மகன் சிறையில் இருக்கும் அறையைப் பார்த்தேன். அவன் காலை நீட்டிப் படுக்கிற அளவுக்குக் கூட அந்த அறை இல்லை. அவ்வறைக்குள்ளேயே ஒரு கழிப்பறை. அதையே சுத்தம் செய்து விட்டு, அதற்குள்ளேயே சாப்பிட்டுக் கொண்டு, அதற்குள்ளேயே படுத்துக்கொண்டு இருக்கிறான்.

அந்தத் தரையில் நான் நடக்கும் பொழுது என் மனதிற்குள் முள் குத்தியது போல் இருந்தது. என் மகன் இத்தனை ஆண்டு இந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கின்றானே! இவனுக்கு எதற்கு இந்த மாதிரி நடந்தது? எனக்கு ஒன்றுமே சொல்ல தோன்றவில்லை. மகனைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் என் கணவர் எப்படி இருகிறான் மகன்? என்று கேட்டார். அதற்கு  நான், சென்றேன் மகன் இருந்த அறையைப் பார்த்தேன், அவன் எப்படி இருந்தால் என்ன, அவன் இருக்கிறான் சிறையில், என்று மட்டும் கூறிவிட்டு என் கணவரிடம் விளக்கமாக எதுவும் சொல்லவில்லை. என்னுடைய மன வேதனையை என் துணைவரிடமும், குழந்தைகளிடமும் கூறியது கிடையாது.

ஆனால் அதை நினைக்கும் பொழுதெல்லாம் வருத்தமாகத்தான் இருக்கிறது. அவனுக்கு ஒரு தலை வலி என்றால், ஒரு தாயாக இருந்து கவனித்திருக்கேனா? இல்லை, பசி நேரத்தில் ஒரு வாய் சோறு ஊட்ட  முடிந்ததா? 22 ஆண்டுகள் என் குழந்தை வலியோடும், வேதனையோடும் சிறையினுள்ளேயே கழித்துவிட்டான். எந்த வயதில் என் மகன் வெளியில் இருக்க வேண்டுமோ அது சிறையில் கழிந்து விட்டது. இதை நினைத்து  22 ஆண்டு முடிந்து 23 வது ஆண்டு வரை வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.  இதை விட எங்களுக்கு என்ன பாதிப்பு இருக்கிறது. எங்களால் நிம்மதியாக உறங்க முடிகிறதா? மனதார சிரிக்க முடிகிறதா? எந்த நல்ல நிகழ்ச்சியில் சென்று அமர்ந்தாலும் நெருஞ்சி முள் போல் மனம் உறுத்துகிறது. நம் குழந்தை உள்ளே வாடுகிறானே, நம் குழந்தை எப்பொழுது வெளியில் வந்து இந்த மாதிரியான நிகழ்ச்சியை கண்ணால் பார்ப்பான்?, இந்த இன்பங்களை எல்லாம் எப்பொழுது அனுபவிப்பான்? என்ற வேதனையில் இருக்கிறோம்.

இத்தனை ஆண்டுகளாக யாரிடமும் நான் உதவி கேட்டதில்லை. ஆனால் இந்த வழக்கிற்கு உதவி செய்யுங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறோம். இப்பொழுதும் கூடத் தொடர்ந்து எல்லாவற்றுக்காகவும் வழக்கு போடுகிறோம், எல்லாவற்றுக்காகவும் கேள்வி கேட்கிறோம். ஒரு மரணதண்டனை சிறை வாசி, எனக்கு எப்படி இந்த மரண தண்டனையை உருவாக்கினார்கள்?, யார் உறுதிப்படுத்தினார்கள்?, ஏன் உறுதிப்படுத்தினார்கள்?, எனக்கு தெரிந்தே ஆகவேண்டும் என்று போராடுகிற ஒரே ஆள் என் மகனாகத்தான் இருப்பான்.

இந்த மரண தண்டனையை எதிர்த்துக் கண்டிப்பாகக் குரல் கொடுக்க வேண்டும். இது ஒரு அநியாய தண்டனை என்பதால் அவன் போராடிக்கொண்டிருக்கிறான். இதெல்லாம் நினைத்து வேதனைப் பட்டுக்கொண்டு, பொருளாதார இழப்பு ஒரு பக்கம், மன நிம்மதி போனது ஒரு பக்கம். இன்று எதுவுமே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஏன், பிடிவாதமாகவே வாழ்கிறோம். அவனை வெளியில் கொண்டுவருவதற்கு நான் வாழ்ந்தாக வேண்டும். வேறு வழியில்லாமல் வாழ்வது போல்  வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதை விட வேறு என்ன பாதிப்பு இருக்கிறது எங்களுக்கு. நிம்மதியில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிற நாங்கள் பாதிப்பு என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் சொல்வது என்று தெரியவில்லை.

கேள்வி: இந்த உலகமயமாக்கால் கொள்கைக்குப் பிறகு மனித உரிமை, மனித நேயம் என்பது நீர்த்துப் போயிருக்கிறதா?

பதில்: நீர்த்துப்போனது என்பது கூட  மேம்போக்கான வார்த்தை தான். இன்று இறந்தே போய்விட்டது என்று தான் கூறவேண்டும். இன்று மனித நேயம்  இறந்த நிலைமையில் தான் இருக்கிறது. அந்த புதிய பொருளாதாரக் கொள்கை, உலகமயமாக்கல் எல்லாம் வந்த பின்னால் மனிதர்களுக்குள் இரக்க உணர்வு இறந்து போய் விட்டது. பணம், காசு என்று மனிதர்கள் பேயாய்ப் பறக்கிற நிலைதான் உருவாகிவிட்டது.

யார் யாரை ஏமாற்றிவிட்டு மேலே செல்லலாம் என்ற துரோகங்கள் வளர்ந்து விட்டது. எல்லாமே தேவையில்லை என்கிற திட்டத்தைக் கொண்டு வந்து மக்களிடம், அதுவும் வறுமையில் இருக்கும் மக்களிடம் திணிக்கும் பொழுது மக்கள் தவறான வழிக்குச் செல்கிறார்கள். நிறைய பேர் தவறு செய்வதற்கும், குற்றங்கள் பல்கிப் பெருகுவதற்கும் கூட இந்தக் கொள்கை கூடக்  காரணம் என்று அறிஞர்கள் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். ஆக இந்தக் கொள்கை நமக்குத் தேவையில்லாத கொள்கை என்று தான் நான் நினைக்கிறேன்.

கேள்வி: இந்த பிரச்னையை வைத்து அரசுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்க இருந்த தூக்குத் தண்டனையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒரு தீர்மானம் கொண்டு வந்து, அதை அறிவித்து இவர்களுடைய உயிரைக் காப்பாற்றினார்கள். அவ்வாறு காப்பாற்றியும் அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள். எனக்கு அதுதான் இப்பொழுது வருத்தமாக இருக்கிறது.

22 ஆண்டு என்பது ஒருவனுடைய வாழ்க்கையில் அதுவும் 19 வயது வரைக்கும் வெளியில் இருந்த என் மகன் 19 வயது முடிவதற்கு முன்பே  சிறைக்குச் சென்றான். இன்று அவனுக்கு 42 வயது முடிந்து 43 வயது தொடங்குகிறது. இந்த 22 ஆண்டு கால இளமைக் காலம் எந்த பருவத்தில் வெளியில் இருக்க வேண்டுமோ அது எதுவுமே அவனுக்கு கிடைக்க வில்லை. இது ஒரு அநியாயம். இப்பொழுது இந்த ராஜீவ் படுகொலை பற்றிய பல உண்மைகள் வெளியில் வருகிறது. ரங்கோத் மனையா என்பவர் தூக்குத் தேவையில்லை என்று கூறுகிறார், கார்த்திகேயன் என்பவர், இவர்களுக்கு இந்தத் தண்டனையே போதும் என்று கூறுகிறார்.

இந்த மூன்று நபர்களுக்கும்  மரண தண்டனையை உறுதிப்படுத்திய கே.டி.தாமஸ் தவறு நடந்து விட்டது என்று கூறுகிறார். இவர்களுக்கு மரண தண்டனை தேவையில்லை 22 ஆண்டுகள் ஆடு, மாடுகள் போல அடைத்து வைத்ததே பெரும் தண்டனை என்று கூறுகிறார். ஆயுள் என்றால் இத்தனை ஆண்டு ஆயுள் என்று முடிவு செய்து அரசு வெளியில் விட்டிருக்கலாம் என்று கூறுகிறார். இப்படிப் பல வித கருத்துக்கள் உச்சநீதிமன்றத்தில் மரண தண்டனை குறித்து நிறைய விவாதங்கள் நடக்கிறது.

பதினான்கு நீதிபதிகள் தாங்கள் கொடுத்த தீர்ப்பே தவறான தீர்ப்பாக இருக்குமோ? என்று வருத்தப்படுகிற நிலைமை சமீபத்தில் உருவாயிற்று. இந்த மரண தண்டனை, காந்தி, மனித நேயம், இறையாண்மை பற்றிப் பேசுகிற நம் இந்தியா, ஏன் பிடிவாதமாக அவர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற பின் நிறைய நபர்களுக்குத் தூக்குதண்டனையை உறுதிப் படுத்துகிறார். எங்கே போகிறது இந்த மனித நேயம்? இறையாண்மை? இதெல்லாம் ஒன்றுமே விளங்கவில்லை.

இந்த நிலைமைக்குச் சென்று கொண்டிருந்தால் அரிதினும் அரிதான வழக்கெல்லாம் மரணதண்டனை என்று சொல்கிறார்கள். அந்த அரிதினும் அரிதான வழக்கு ராஜீவ் கொலை வழக்கு என்றுதான் இங்கே தடா நீதிமன்றத்தில் விசாரித்தார்கள். விசாரித்து 26 நபர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுத்தார்கள். அய்யா பழ. நெடுமாறன் தலைமையில் ஒரு குழு அமைத்து உலகம் முழுவதும் பரந்து வாழுகின்ற இரக்கமுள்ள மனிதர்களிடம் பணம் வசூல் செய்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்றோம். ஏன் என்றால் நாங்கள் எவருமே வசதியானவர்கள் இல்லை.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 13 ஈழத் தமிழர்களும், 13 இந்தியத் தமிழர்களும் மூச்சுப் பிடித்து வாழ்கிற நிலைமையில் இருப்பவர்கள் தான். இந்நிலைமையில் என் கணவர் ஒரு ஆசிரியர். பத்மா அம்மா குடும்பம், செவிலியர் குடும்பம். இவர்கள் இரண்டு பேரைத் தவிர மற்ற எல்லாருமே விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள், இப்படி உள்ளவர்கள் தான் இதில் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இப்படி என்றால்  ஈழத் தமிழர்களைச் சொல்லவே தேவையில்லை. அகதிகள் பல நபர்கள் இருந்தார்கள். ஆக இவர்களுக்கெல்லாம் வருமானம் ஏது? இப்படிப்பட்டவர்கள் மட்டுமே ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்க முடியுமா? வசதி வாய்ப்போ, அரசியல்வாதிகளோ இந்த வழக்கில் ஏன் சேர வில்லை. அந்தக் கேள்வி எல்லாம் அப்பொழுதே கேட்கப்பட்டது. ஆனால் அதெல்லாம் புறந்தள்ளிதான் இந்த 26 நபர்களுக்கும் தடா நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது. இது தடாவின் கீழ் வராது, இது ஒரு தனி மனிதக் கொலை, இது பயங்கரவாத செயல்.

Comparison with other studies may be organized as your main finding other studies findings in agreement with it, differing from www.pro-academic-writers.com it, contradicting it

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- ““பேரறிவாளனை மீட்டுத்தாருங்கள்” வேண்டுகோள் விடுக்கும் அற்புதம் அம்மாள்”
  1. kasi visvanathan says:

    தாய் சொல் கேளீர்………

    தூங்காத இரவுகளை விழியில் சுமந்து,
    ஆறாத ரனங்களை மனதில் சுமந்து
    தீராத பழியினை வாழ்வில் சுமந்து
    பாராமல் வாழ்ந்தழியும் இனத்திற்கு – முகம்
    கோணாமல் செய்த சீர் திருத்தம் எல்லாம்- நம்
    புத்தியிலே ஏராமல் போனாலும் – பொய்யுரைத்த
    சட்டவாதிகளின் கொடுவாளுக்கு முன் நின்ற
    தாயுள்ளம் இன்றுவரை தன்னந்தனியாய் – நீதி
    கேட்ட பேய்களிடம் தன் மகனுக்கு அல்ல,
    அறம் பழித்து இனம் அழிக்கத் துடிக்கும்
    ஈனப் பேய்களிடம் நமக்காகப் போராடும்
    நாம் தாய்க்கு நாம் என்ன செய்வோம் ?
    பெற்ற மகனை பிள்ளைக் கறி கேட்ட
    சனாதனிகளுக்கும், காவற் கோட்டம் அமைத்த
    கொடுங்கோலர்களுக்கும் கனப்பொழுதும் சிந்திக்காமல்
    தன் மகனை வழியனுப்பிய தாயுள்ளம்
    வழி தோறும் விழி வைத்து காத்திருந்த காலங்கள்
    ஒன்றல்ல இருபத்தியிரண்டு ஆண்டுகள்.
    போனவனைக் காணாமல் காத்திருக்கும் தாயின் கண்களில்
    கனவுகள் மிச்சமுண்டு, கருவறுக்கும் கழுகுகளுக்கும்
    கொத்தித் திண்ண எச்சங்கள் வேண்டுமென்று
    ஒற்றைக் கால் தவம் கொண்டார்…. என் தாயின்
    மௌன அரற்றல் எல்லாம் பேரிரைச்சல் கொண்ட
    நடைப் பிணங்கள் காதுகளை எட்டிடுமோ ?
    தன் தாயிடம் கன்றும் சேர்ந்திடுமோ ?

அதிகம் படித்தது