GDP வளர்ச்சி மட்டுமே முன்னேற்றம் ஆகுமா?
ஆச்சாரிJul 15, 2012
முந்தைய பகுதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி அலசினோம். இந்தியாவின் சமீப கால பொருளாதார வளர்ச்சியில் ஒரு கணிசமான பங்கு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தோம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணிக்கும் எண்ணிக்கையாக விளங்குவது ‘GDP’ என்றும் அறிந்தோம். இந்த ‘GDP’ என்றால் என்ன? இது எப்படி உருவானது? இந்த எண்ணிக்கையை மட்டும் ஏன் உலக வங்கி மற்றும் பல சர்வதேச நிதி நிறுவனங்கள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணிக்கப் பயன்படுத்துகின்றன?
GDP எண்ணிக்கையின் வரலாறு
‘GDP’ என்பது அமெரிக்காவில் 1930-களில் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் ‘Great Depression’ என்று சொல்லப்படும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கித் தவிக்கும்பொழுது உருவாக்கப்பட்ட எண்ணிக்கைதான் இந்த ‘GDP’. ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கையை எடைபோட வேறு எந்த முறையும் அப்பொழுது உபயோகத்தில் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து வளர்ச்சி அடைந்த மேலை நாடுகளில் ‘System of National Accounts’ என்ற கணக்கெடுப்பு முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த கணக்கெடுப்பு முறையின் மூலமாக ஒரு நாட்டின் மொத்த தயாரிப்பு (Production), நுகர்வு (Consumption), ஏற்றுமதி (Export), இறக்குமதி (Import), சேமிப்பு (Savings) போன்ற எண்ணிக்கைகளை சேகரித்து வகைப்படுத்தி வைத்திருந்தனர்.
1929-இல் ஆரம்பித்த மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியின்போது இந்த எண்ணிக்கைகளை ஒருங்கிணைத்து ‘GDP’ மற்றும் ‘GNP’ போன்ற புதிய எண்ணிக்கைகள் உருவாக்கப்பட்டன .இதில் ‘GNP’ என்னும் எண்ணிக்கை ஒரு நாட்டின் பொருளாதார வலிமையையும் மற்றும் சர்வதேச அடிப்படையில் அந்நாட்டின் முக்கியத்துவத்தையும் குறிக்கும் எண்ணிக்கை ஆகும். ஆனால், ‘GDP’ எண்ணிக்கையோ ஒரு நாட்டின் உள்நாட்டு வணிகம் மற்றும் உள்நாட்டு பொருளாதார செயல்பாட்டினை மட்டுமே அளவீடும் எண்ணிக்கையாகும் – ஆகவே, ‘Domestic’ (உள்நாடு) என்ற குறிப்பு இந்த எண்ணிக்கையின் பெயரிலேயே இடம் பெற்றிருக்கின்றது.
GDPயின் அடிப்படையில் வளர்ச்சி திட்டங்கள்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா வல்லரசாக உருவெடுத்தது. அத்தருணத்தில், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் போன்ற இயக்கங்களை அமெரிக்கா உருவாக்கியது. இவற்றின் வெளிப்படை நோக்கம் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு உதவி செய்வது மற்றும் ஆலோசனை வழங்குவது என்றாலும் அடிப்படை நோக்கம் வேறு. நெருக்கடியில் தவிக்கும் நாடுகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக்கொண்டு பன்னாட்டு வணிகத்துக்கு சாதகமாக இந்நாடுகளை திசை திருப்புவதுதான் உலக வங்கி போன்ற அமைப்புகளின் தெரிவிக்கப்படாத அடிப்படை நோக்கம். அவர்களின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றுமாறு தீட்டப்பட்ட திட்டங்களை ‘GDP’ வளர்ச்சி என்ற கட்டமைப்புக்குள் வரையறுத்து நெருக்கடி நிலையில் இருக்கும் நாடுகளை கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கின்றனர்.
1960 களில் ஜப்பானில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவிடம் தோற்றுப்போன ஜப்பான், அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் வந்தது. ஜப்பானின் பிரதமராக இருந்த ‘யோசிடா’ ஏற்றுமதி மூலம் விரைவில் ‘GDP’ வளர்க்கும் திட்டத்தை முன்வைத்தார் – இது ‘Yoshida Doctrine’ யோஷிடாவின் கருத்து என்று வழங்கப்பட்டது. 1960களில் பிரதமரான இகேடா, யோஷிடாவின் சீடர். யோஷிடாவின் கருத்தைப் பின்பற்றி ஏழே ஆண்டுகளில் ஜப்பானிய வருவாயை இரண்டு மடங்காக்கினர். இந்த அபார சாதனையை கிழக்கு ஆசியாவின் மற்ற நாடுகள் கண்டு வியந்தன. கூடிய விரைவில் தைவான், ஹாங்காங் போன்ற நாடுகளும் இதே முறையைக் கையாண்டு விரைவில் ‘GDP’ வளர்ச்சி கண்டன. 1980களில் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் அதே பாணியில் விரைவில் வளரத்தொடங்கின. 1979இல் துவங்கி ஆசியாவின் மிகப்பெரிய நாடான சீனாவும் இந்த வழியை பின்பற்றி இன்று அமெரிக்காவிற்கு அடுத்த பொருளாதார வலிமை மிக்க நாடாக வளர்ந்து நிற்கிறது (நோக்க : சீனா தன்னை ஒரு கம்யூனிஸ்ட் நாடாக அடையாளம் காட்டிக்கொண்டாலும் பொருளாதார ரீதியில் ஒரு முதலாளித்துவ நாடாகத்தான் செயல்படுவது யதார்த்த உண்மை).
1990 களில் பொருளாதார வீழ்ச்சியைக் கண்ட ரஷியா, உக்ரைன் போன்ற நாடுகளும் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கண்ட இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளும் இதே முறையைக் கையாளுமாறு சர்வதேச நிதி நிறுவனத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டது. குறிப்பாக, 1991இல் துவங்கி இந்தியா இந்தப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. இந்தியாவின் திட்டக் குழுமம் ‘GDP’ வளர்ச்சியை ஊக்குவித்து பல கொள்கைகளை மாற்றியது. இதனால், இந்தியாவின் ‘GDP’ வளர்ந்தது உண்மைதான். அது மட்டுமல்லாது நகரங்களும் வளர்ந்து நகரங்களில் வேலை வாய்ப்புகளும் கூடியுள்ளதும் உண்மைதான். ஆனால், இது பொது சமுதாய வளர்ச்சி என்று கூற முடியுமா? இதனால், கிராமப்புறங்களும் வளர்ச்சி அடைந்துள்ளனவா? விவசாயத்தையும் கைத்தொழிலையும் நம்பியுள்ள கோடான கோடி மக்கள் வளர்ச்சியடைந்துள்ளனரா? ‘GDP’ வளர்ச்சி மட்டுமே பொது சமூக வளர்ச்சியாகுமா என்ற கேள்விகளுக்கு விடைகளை இந்த தொடரின் அடுத்த பகுதியில் காண்போம்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
I like there explanations..