மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அயல்நாட்டு மாணவர்களை விரும்பும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்

தேமொழி

Dec 2, 2017

Siragu america university1

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயில விரும்புவது உலகம் முழுவதுமுள்ள மாணவர் பலரின் விருப்பமாகப் பலகாலம் இருந்து வருகிறது. உலக அளவில் அதிக அளவு அயல்நாட்டு மாணவர்கள் கல்வி கற்பதும் அமெரிக்காவில்தான், அடுத்த இரு இடங்களில் இருப்பவை இங்கிலாந்தும் பிரான்சும். இவ்வாறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் அயல்நாட்டு மாணவர்கள் குறித்து வெளியாகியுள்ள ஆய்வுக்  கட்டுரைகள் மற்றும் செய்திகள் வழி கிடைக்கும் சுவையான புள்ளிவிவரங்கள் பல. பொதுவாக அயல்நாட்டு மாணவர்கள் என எதன் அடிப்படையில் வரையறை செய்யப்படுகிறது?, அவர்கள் எந்த நாடுகளில் இருந்து வருகிறார்கள்? எந்தப் பாடங்களைப் படிக்க விரும்புகிறார்கள்?,  அவர்களுக்கு எந்தெந்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அதிக ஆதரவு தருகின்றன?,  நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் இவர்கள் அதிகம் சேருகிறார்கள்?, இவர்களைச் சேர்த்துக் கொள்ள விரும்பும் பல்கலைக்கழகங்களின் அடிப்படை நோக்கம் என்ன என்பது குறித்த தகவல்களின் தொகுப்பு இக்கட்டுரை.

அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்த காலகட்டத்தில் (2008-2010 ஆண்டுகள் துவக்கம்), பல வணிக நிறுவனங்களும் முடங்கிப்போன நிலையில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பெரிய சிரமங்களை எதிர் கொள்ளாது மீண்டுவரக் காரணமாக இருந்தது அயல்நாட்டுப் பல்கலைக்கழக மாணவர்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டதுதான் என்பதை பியூ ஆய்வு நிறுவனம் (Pew Research Center) வெளியிட்டுள்ள (நவம்பர் 13, 2017) அறிக்கை காட்டுகிறது. அமெரிக்காவில்  2016 ஆம் ஆண்டு படிக்க அனுமதியளித்து சேர்த்துக் கொள்ளப்பட்ட அயல்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 364,000. கடந்த பத்தாண்டுகளில் அயல்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இருமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  அத்துடன் இது 104% விழுக்காடு உயர்வு. அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் உயர்ந்தது வெறும்  3.4% மட்டுமே என்கிறது அமெரிக்க அரசின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு. அதிலும் தனியார் பல்கலைக்கழகங்களை விட மாநில அரசுகளில் அயல்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் மாநிலஅரசின் பல்கலைக்கழகங்கள் நிதிநெருக்கடியைச் சமாளித்தவிதம்: 

தனியார் பல்கலைக்கழகங்கள் அவற்றின் புகழ் காரணமாகவும், அளப்பரிய நிதியின் காரணமாகவும் பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் அதிக இன்னல்களை எதிர்கொள்ளவில்லை.  ஆனால் மாநிலஅரசுகளின் நிதியில் இயங்கும் பல்கலைக்கழகங்களின் நிலைமை வேறு. பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்களுக்கு வேலை இல்லை, அதனால் அரசுக்கு வரும் வரியின் அளவில் ஏற்படும் பாதிப்பு, இதன் தொடர்ச்சியாக மாநில அரசு நிதிநிலை குறைவால், அரசு பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கும் நிதியைக் குறைக்கும் நிலை, பொருளாதார வீழ்ச்சி காரணமாக மாணவர்களும் கல்விக்கட்டணம் செலுத்த வழியின்றி உயர்கல்வி குறித்தத் திட்டத்தைக் கைவிடுவது அல்லது தள்ளிப்போடுவது என்று ஒரு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மற்றொன்று எனத் தொடர்ந்ததில் பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியை எதிர் கொள்ளத் துவங்கின.

இந்த நிலையைக் கட்டுப்படுத்த அவர்கள் எடுத்த நடவடிக்கை அதிக எண்ணிக்கையில் அயல் மாநில மாணவர்களையும் (out-of-state students), அயல்நாட்டு மாணவர்களையும் சேர்த்துக் கொள்வது என்ற முறை. ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் தங்கள் மாநிலத்தில் வசிக்கும் மாணவரிடம் இருந்து வசூலிக்கும் கல்விக்கட்டணம் குறைவு. அது அந்த மாநிலத்திலேயே வாழ்ந்து, பணிபுரிந்து, வரிசெலுத்தி வாழ்ந்துவரும் குடும்பத்திற்கான சலுகை.  அவர்களது பங்களிப்பில்தான், அவர்களுக்காக அந்த அரசு இயங்குகிறது. அதனால் தங்கள் மாநிலத்தின் குடிமக்களுக்கே மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் முன்னுரிமை அளிக்கும், அளிக்க வேண்டும். ஆனால் வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தச் சலுகை கிடையாது. அவர்களிடம் இருந்து அதிக அளவில் இருமடங்கோ அல்லது மும்மடங்கோ கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும். அந்த அளவு பணம் செலவழிக்கத் தயாராக உள்ளவர்கள் அதிகக் கட்டணத்தையும் பொருட்படுத்த மாட்டார்கள்.  குறிப்பாகக்  கலிபோர்னியாவின் புகழ்பெற்ற பெர்க்லி பல்கலைக் கழகம் மாநில அரசு நிதியில் இயங்குவது.  வசதியுள்ள வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்களும் உலகத்தரம் வாய்ந்த பெர்க்லி பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குப் போட்டி போடுவது வழக்கம்.

Siragu america university3

பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் தங்கள் மாநில மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கி, அரசும் நிதியைக் குறைத்த பொழுது, அதிகக் கல்விக்கட்டணம் தரும் அயல்மாநில மாணவர்களும், அயல்நாட்டு மாணவர்களும் அரசுப் பல்கலைக்கழகங்களுக்குப் பணம் காய்க்கும் மரங்களாகத் தென்பட்டனர்.  அதுவரையில் முதுநிலை கல்விகளுக்கும் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கும் என்று அமெரிக்காவை நாடிய நிலையில் இருந்து மாறுபட்டு, இளநிலை படிப்பு, தொழில் பயிற்சி பட்டயப் படிப்புகளில் அயல்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அயல்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னணியும் இதுவே. மாநில மக்களுக்கு உதவும் நோக்கம் தவிர்க்கப்பட்டு, மக்கள் வளர்த்தெடுத்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் அயல்நாட்டு மாணவர்கள் அதிகரித்தனர். மாநில அரசுகளுக்கும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேறுவழி தெரியவில்லை, செலவைக் குறைப்பது, கல்விக் கட்டணத்தை உயர்த்துவது என்ற நடவடிக்கையின் தொடர்ச்சியாக அயல்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். மாநிலஅரசுப் பல்கலைக்கழகங்கள் எடுத்த இந்த நடவடிக்கைகளை உறுதி செய்யும் வண்ணம் மேலும் சில ஆய்வுகளும் முன்னரே வெளிவந்துள்ளன.

அயல்நாட்டு மாணவர்கள் குறித்த செய்திகள் சில:

எஃப்-1 விசா (F-1 visa) மூலம் அயல்நாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதால், பியூ ஆய்வு நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமெரிக்க அரசின் குடியேற்ற நிறுவனத்திடம் இருந்து தரவுகளைப் பெற்று ஆய்வு நடத்தியுள்ளது.  கடந்த ஆண்டு அயல்நாட்டு மாணவர்கள் அமெரிக்கக் கல்விக்காக செலவழித்த தொகையின் மதிப்பு  $15.5 பில்லியன். ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செலவிட்டதொகை இதில் மூன்றில் ஒரு பங்குதான். அயல்நாட்டு மாணவர்களில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்.  அனைத்து உலக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது ஆசிய நாடுகளில் இருந்து அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் அதிகம். குறிப்பாக அயல்நாட்டு மாணவர்களில் பாதிக்கும் மேல்  (54%) சீனா, இந்தியா, தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் மாணவர்கள். இந்தியாவில் இருந்து வந்த மாணவர்கள் 18% (66,000).

கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ்  ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களை இவர்கள் அதிக அளவில் தேர்வு செய்கிறார்கள். அதிக அளவில் அயல்நாட்டு மாணவர்கள் பயிலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் என்ற வகையில் முதல் ஐந்திடங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் முறையே:

1. யுனிவர்சிட்டி ஆஃப் சதர்ன் கலிபோர்னியா (University of Southern California -USC)

2. யுனிவர்சிட்டி ஆஃப் இல்லினாயிஸ் (University of Illinois – Urbana-Champaign -UIUC)

3. பர்டியூ யுனிவர்சிட்டி (Purdue University – Main Campus)

4. நியூயார்க் யுனிவர்சிட்டி (New York University – NYU)

5. கொலம்பியா யுனிவர்சிட்டி (Columbia University)

அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை என்று கூறப்படுகின்றன என அறிய விரும்புவோருக்கு உதவும் ஆய்வுக் கட்டுரைகளும் ஊடகங்களால் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன (http://siragu.com/அமெரிக்காவின்-சிறந்த-பல்/). பொறியியல், நிர்வாக மேலாண்மை, கணிதம்  மற்றும் கணினி தொடர்பான பாடங்களில் பட்டம் பெறவே அயல்நாட்டு மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களை நாடுகிறார்கள். குறிப்பாக இத்துறைகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுபவர்களில் பெரும்பான்மையோர் அயல்நாட்டு மாணவர்களே.

Siragu america university4

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருந்த அமெரிக்காவிற்குப் பயில வரும்  அயல்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, தற்பொழுது (2015-2017 ஆண்டுகளில்) குறைந்துள்ளதாக இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் எஜுகேஷன் (Institute of International Education, Inc.- www.iie.org) நிறுவனம் செய்த கருத்துக்கணிப்பு ஆய்வறிக்கை (நவம்பர் 13, 2017) காட்டுகிறது. ஆண்டுக்கு சுமார் 10,000 மாணவர்கள் எண்ணிக்கையில் குறைந்துள்ளது தற்போதைய நிலை. எண்ணிக்கை குறைவுக்கு காரணங்கள் பலவும் இருக்கலாம். அவற்றில் உலக நாடுகளுக்கிடையே கலாச்சார பங்களிப்பு நோக்கில் ஏற்படுத்தப்பட்ட மாணவர் உயர்கல்வி வாய்ப்புக்கான கல்வி பரிமாற்ற திட்டங்களுக்கு (educational exchange programs  – https://exchanges.state.gov/) ஒதுக்கப்பட்ட நிதியில் பாதியளவாகக் குறைத்துவிட டிரம்ப் அரசு போடும் திட்டத்தின் எதிரொலி இது என்பதும் ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது.

அத்துடன் அதிபர் பதவிக்கு குறிவைத்த நாள் முதலாக அதிபர் டிரம்ப் தனது உரைகளின் வழியே வெளிப்படுத்திய கடுமையான குடியேற்றக் கொள்கைகள், பயணத் தடை திட்டங்கள் (travel bans), அகதிகளை வெளியேற்றுவது (reject refugees), குடியேறியவர்களைக் குறித்து தெரிவிக்கும் விமர்சனங்கள் (criticize immigrants) என யாவும் அயல் நாட்டு மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அமெரிக்காவில் படிக்கும் எண்ணம் குறித்து மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு மாற்றியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.  அதாவது, ‘டிரம்ப் விளைவு’ (“Trump Effect”) என்பதன் தாக்கம் இப்பொழுது பல்கலை வளாகங்களின் தரவுகள் வழியாகத் தெரிவதாக இந்த நிறுவனம் கூறுகிறது.

___________________________________________

References:

New foreign student enrollment at U.S. colleges and universities doubled since Great Recession, Neil G. Ruiz and Jynnah Radford; November 20, 2017, Pew Research Center.

http://www.pewresearch.org/fact-tank/2017/11/20/new-us-foreign-student-enrollment-doubled-since-great-recession/

Facts on Foreign Students in the U.S.,  November 20, 2017, Pew Research Center.

http://www.pewglobal.org/fact-sheet/foreign-students-in-the-u-s/

Foreign students are saving America’s universities, but they’re mostly men, Preeti Varathan; November 30, 2017, Quartz.

https://qz.com/1141774/foreign-students-are-saving-americas-universities-after-the-recession-but-theyre-mostly-men/?

A Passage to America: University Funding and International Students, John Bound, Breno Braga, Gaurav Khanna, Sarah Turner;  December 2016, National Bureau of Economic Research

http://www-personal.umich.edu/~gkhanna/International_Students.pdf

Foreign Students Offer Lifeline to Cash-Strapped U.S. State Schools, Amid funding shortages, American colleges are turning to international recruits for cash, Jordan Yadoo; December 29, 2016, Bloomberg, https://www.bloomberg.com/news/articles/2016-12-29/foreign-students-offer-lifeline-to-cash-strapped-u-s-state-schools

Which countries are the top destinations for foreign students? Arwen Armbrecht; Jul 01, 2015.

https://www.weforum.org/agenda/2015/07/which-countries-are-the-top-destinations-for-foreign-students/

New International Enrollments Decline, Elizabeth Redden; November 13, 201, Open Doors survey.

https://www.insidehighered.com/news/2017/11/13/us-universities-report-declines-enrollments-new-international-students-study-abroad

Donald Trump may be scaring international students away from colleges in the U.S. Julia Glum; November 13, 2017, News Week

http://www.newsweek.com/trump-international-education-study-abroad-708667

50 of the most popular us universities and colleges for international students, College Choice.

https://www.collegechoice.net/50-of-the-most-popular-us-universities-and-colleges-for-international-students/


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அயல்நாட்டு மாணவர்களை விரும்பும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்”

அதிகம் படித்தது