மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவியலின் தத்துவம் – ஓர் எளிய தொடக்கம்

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Aug 2, 2014

pooranachandran1நமது காலத்தில் பிற எல்லாத் துறைகளையும் விட அறிவியலே மிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. அதன் செயற்படுதுறைகளாகப் பொறியியல், மருத்துவம் போன்றவை உள்ளன. அறிவியல் கருவிகள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளன. எனவே கல்லூரிப் படிப்பிலும் ஆதிக்கம் மிகுந்த துறையாக அறிவியல் விளங்குகிறது. அறிவியல் மிக முக்கியமான கல்வித்துறை என்பதோடு பலவேறு கிளைகளையும் கொண்டது. இன்று அறிவியலின் வரலாறு, அறிவியலின் சமூகவியல், அறிவியலின் தத்துவம் போன்ற துறைகளில் சிந்தனை தொடங்கியிருக்கிறது. இதுவரை இந்தத் துறைகளில் பெருமளவு ஆர்வம் காட்டப்பட்டதாகச் சொல்லமுடியாது. 1950கள் வரை கலைத்துறைகள், மானிடத் துறைகள் கருத்தாதிக்கம் மிகுந்தவையாக நம் நாட்டில் இருந்தன. அறிவியல், கணிதம் கற்றவர்களுக்குக்கூட பி.ஏ. (கலைத்துறை இளையர்) என்றே அக்காலத்தில் பட்டம் தரப்பட்டது. இன்றோ தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கலைத்துறைகளில் படிப்பவர்களும் இன்று தங்கள் துறை அறிவியல் என்று வாதிடுகின்றனர். சான்றாக, எம்.எல்.ஐ.எஸ் (நூலக, தகவலியல் முதுகலைத் துறை) படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஓர் அறிவியல் துறையையே கற்பதாகக் கூறுகின்றனர். கல்லூரிப் படிப்புகளில் பி.ஏ. என்ற பட்டப்படிப்பு இருபதாண்டுகள் முன்புவரை பொருளாதாரம், வரலாறு, அரசியல் போன்ற துறைகளிலாவது இருந்தது. இப்போது அத்துறைகளில் அறவே அது இல்லை. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்படிப்புகளில் மட்டுமே இன்று பி.ஏ. உள்ளது. பிற பி.ஏ. படிப்புகள் காணாமல் போய்விட்டன. இந்த மாற்றங்கள் நல்லவையா, தேவையானவையா என்பவை சமூகவியலாளர்களால் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டியவை. இவ்வளவு ஆதிக்கம் பெற்றுள்ள அறிவியல் கல்வி பற்றிச் சில குறிப்புகள்.

ariviyalin thaththuvam4அறிவியல் வரலாறு, அறிவியலின் சமூகவியல், அறிவியலின் தத்துவம் போன்ற துறைகள் இதுவரை அனுபவவாத விளக்கத்தின்பாற்பட்டவையாகவே இருந்தன. குறிப்பாக முதல் இரு துறைகள். இவை அறிவியல் இதுவரை அடைந்துவந்துள்ள மாற்றங்களைப் பற்றி எடுத்துரைக்க முயலுகின்றன. அறிவியல் என்பதன் அர்த்தம், அதன் முறைகள் போன்றவை எவ்வாறு மாறி வந்துள்ளன என்பதையும் விளக்க முயலுகின்றன. அறிவியலில் கருத்தியலின் பங்கு பற்றி ஆராயவும் முனைகின்றன. ஒரு காலத்தில் அறிவியல் என்பதே சித்தாந்தத்திற்கு (கருத்தியலுக்கு) முரணாக நிறுத்திப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, அறிவியலே சித்தாந்தத்தின் அடிப்படையிலானது, கருத்தியல் வடிவமானது என்று நோக்கப்படுகிறது.

அறிவியல் பற்றிய சிந்தனைகளில் புதிய மாற்றம் ஏற்படுத்தியவர்கள், எடின்பரோ சிந்தனைக்குழுவினர். ரேஷனலிஸ்டுகளுக்கு (பகுத்தறிவுவாதிகளுக்கு) எதிர்நிலையில் இயங்கிய இவர்கள், 1970களில் மான்ஹீம் என்பவரின் சிந்தனைகளைப் பின்பற்றி, “அறிவியல் சமூகவயமானது, சமூகவயமானது மட்டுமே” என்ற கோட்பாட்டை முன்வைத்தனர். தூய அறிவியல் ஆய்வு என்ற பெயரால், அறிவியலாளர்கள் சமூகப் பொறுப்பின்றி இயங்கக்கூடாது என்றனர்.

அறிவியலின் தத்துவம், அடிப்படையான சில வினாக்களை மூன்று தளங்களில் எழுப்புகிறது.

1. கருத்தாக்கம், உற்றுநோக்கல், கொள்கை, விதி, மாதிரி, இவையெல்லாம் உண்மையில் யாவை? (கருத்தாக்கக் கேள்விகளின் தளம்)

2. கொள்கைகள் எவ்விதம் உருவாக்கப்படுகின்றன? எவ்விதம் மதிப்பிடப்படுகின்றன? அடுத்தடுத்து வரும் இரண்டு கொள்கைகள் எப்படித் தொடர்புபடுத்தப்படுகின்றன? (இது வழிமுறை- methodology-பற்றிய கேள்விகளின் தளம்.)

3. அறிவியல் சார்பான மதிப்புகள் (values), மதிப்பீடுகள் (evaluations) எப்படி உருவமைக்கப்படுகின்றன? அறிவியல் என்பது உண்மையில் முற்போக்கானது தானா? இல்லை என்றால் ஏன் அப்படி? அறிவியல் பகுத்தறிவு அடிப்படையிலானதுதானா? பொதுநோக்கு (அப்ஜெக்டிவிடி) உடையதுதானா? எப்படி அறிவியல் மதிப்புகள் சிலருக்குச் சார்பாகவும் சிலருக்கு எதிராகவும் அமைகின்றன? (இது மதிப்புகளியல்-ஆக்சியாலஜி-பற்றிய கேள்விகளின் தளம்).

இன்று நவகாலனியத்தன்மை பற்றி நாம் நன்றாக அறிவோம். மேற்கத்திய நாடுகள் எவ்விதம் திட்டமிட்டு தெற்கு, கிழக்கு நாடுகளைச் சுரண்டுகின்றன என்பது பற்றியும் அறிவோம். இவையாவும் மேற்கத்திய அறிவியல் பற்றிய கேள்விகள். இன்றுவரை, மேற்கத்தியப் பாணியிலான அறிவியல் மட்டுமே அறிவியல் என்ற பெயரால் கற்றுத்தரப்படுவதால், இந்தக் கேள்விகள் பெரிய முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்றுவரை, கல்லூரிகளிலும், பொறியியல், மருத்துவ நிறுவனங்களிலும், அறிவியல் பற்றிய ஒரு குறிப்பிட்ட படிமம் மாணவர்களுக்குத் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வந்துள்ளது. இந்தப் படிமம், அறிவியல் என்பது அறிவார்த்தமானது, பொதுநோக்குடையது, முற்போக்கானது என்று சொல்கிறது. இப்போது இவை அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

அறிவியல் X அறிவியல் அல்லாதது என்பதன் எல்லைக்கோடுகள் என்ன? இவற்றிற்கிடையில் தெளிவான எல்லை உண்டா? எந்த அளவு இந்த எல்லை தெளிவானது? இந்தக் கேள்விகளும் இன்று எழுப்பப்பட்டுள்ளன. அறிவியல், அறிவியல் அல்லாதது என்று பிரிக்கும் எல்லைக்கோடு ஒரு மாயை என்பது இன்றைய நோக்கு. இக்கேள்விகளை ஆராயும்போது, அறிவியலின் தத்துவம், இலக்கியத்திற்கு விமரிசனம்போலச் செயல்படுகிறது. எனினும் இக்கேள்விகள் எழுப்பப்படுகின்ற நிலை, அறிவியலின் தகுதியை மாற்றிவிடவோ குறைத்துவிடவோ இல்லை. காரணம், இன்றும் இக்கேள்விகளை அறிவியலாளர்கள் எழுப்ப முனையவில்லை, தத்துவவாதிகள், சமூகவியலாளர்கள், வரலாற்றாளர்களே எழுப்புகின்றனர்.

1950கள் வரை அறிவியலில் நேர்க்காட்சிவாதம் (பாசிடிவிசம்) வலுவானதாக இருந்தது. 1950களுக்குப் பின்னர்தான் வேறு புதிய நோக்குகள் எழுந்தன. அறிவியலின் தத்துவத்தில் நவ-காண்ட்டிய நோக்கு, இப்பிரபஞ்சம் எப்படி அறிவியல் வாயிலாக அர்த்தம் கொள்ளப்படுகிறது, காலம்/வெளி பற்றிய கருத்தாக்கங்கள் அமைவது எவ்விதம், போன்ற கேள்விகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறது. ஆங்கில நோக்கு, அறிவியல் அறிவின் ஏற்புடைமையை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளது. இயற்கை அறிவியல்கள் தரும் அறிவு, பிற துறைகள் அளிக்கும் அறிவினின்றும் மாறுபட்டவை, முற்றிலும் நம்பகமானவை என நிறுவுவதில் ஆர்வம் காட்டிவந்துள்ளது. இவ்விரு நோக்குகளிடையே ஆட்பட்ட அறிவியலின் தத்துவம், அறிவியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வரையறை கட்டுவது, எவ்வாறு இருக்கிறது என்று வரையறுப்பது என்ற இரு நோக்குகளுக்கும் இடையில் சிக்கித் திணறித் திண்டாடிவருகிறது.

நேர்க்காட்சிவாதம்:

அறிவியல் துறை, பொதுநோக்குக் கொண்டதாக, உற்றுநோக்கல் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே அமைகிறது என்று சொல்வது நேர்க்காட்சிவாதம். ஃப்ரான்சிஸ் பேகன், டே கார்ட்டே காலம் முதலாக முன்வைக்கப்பட்ட கோட்பாடு இது. அறிவியல் பற்றிய பொதுப்புத்தி நோக்கிற்கு இது மிகவும் இணக்கமானது. உற்றுநோக்குதல்களை எந்த அளவு மிகுதிப்படுத்த வேண்டுமோ அந்த அளவு மிகுதிப்படுததவேண்டும், பின்னர் தானாகவே அவற்றிலிருந்து வருவித்தல் (இண்டக்ஷன்) முறையில் விதிகள், கொள்கைகள் உருவாகும் என்கிறது. “தரவுகளின் சேகரிப்பிலிருந்து விதிகள் தாமாகவே விளைகின்றன.”

வருவித்தல் முறை (இண்டக்ஷன்), விதிபின்பற்றல் (டிடக்ஷன்) முறை என்பவற்றை இங்கே சற்றே விளக்குவோம்.

கோழிக்கு இரண்டு கால்கள்தான் உள்ளன. புறாவுக்கும் இரண்டு கால்களே. மயிலுக்கும் இரண்டு கால்களே. காக்கைக்கும் இரண்டு கால்களே. இப்படித் தரவுகளை அடுக்கிக்கொண்டே சென்று, இவை எல்லாமே பறவைகள், ஆகவே பறவைகள் எல்லாவற்றிற்கும் இரண்டு கால்கள் என்று முடிவுக்கு வருவது இண்டக்ஷன்.

பறவைகள் எல்லாவற்றிற்கும் இரண்டு கால்கள் தான் என்பது இப்போது விதி ஆகிவிட்டது.

நான் காண்பது ஒரு புதிய நீலநிறப் பறவை. பறவை என்பதால் அதற்கும் இரண்டு கால்கள் மட்டுமே இருக்கவேண்டும் பொது விதியிலிருந்து தனிப்பட்ட சான்றுக்கான முடிவை அடைவது விதிபின்பற்றல் (டிடக்ஷன்).

“வெள்ளைக்காரர்கள் யாவரும் ஆதிக்கம் செய்தவர்கள். சென்ற நூற்றாண்டுவரை உலகில் பல காலனிகளை ஏற்படுத்தியிருந்தார்கள்”-இது கருதுகோள் (ஹைபோதீசிஸ்). இது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். (மேற்கண்ட கருதுகோள் தவறு. ஏனெனில், போலந்து, ஹங்கேரி, ஸ்வீடன் போன்ற நாடுகளில் இருப்பவர்களும் வெள்ளைக்காரர்கள்தான். அந்நாடுகள் ஆதிக்கம் செய்யவில்லை.)

உற்றுநோக்கலை ஆங்கிலத்தில் Observation என்பார்கள். அறிவியல் சோதனைகளின் அடிப்படை உற்றுநோக்கல்தான். உற்றுநோக்கலினால் பெறப்படும் விவரங்களைத் தரவுகள் (data) என்பார்கள்.

இனி, நேர்க்காட்சிவாதத்தின் அடிப்படைகளைக் கொஞ்சம் பகுத்துப்பார்க்கலாம்.

1. உற்றுநோக்கல் தரவுகள், கோட்பாட்டுக் கலப்பற்றவை.

உற்றுநோக்கல் தரவுகள், புலன் அனுபவங்களால் பெறப்படுகின்றன. எனவே இவை அடிப்படையானவை, எவ்விதக் கோட்பாட்டுக் கலப்பும் அற்றவை, புலன் அனுபவங்களிலிருந்து பெறப்படுவதால் இவை, மெய்ம்மைத்தன்மை கொண்டவை என்ற அனுபவவாத அடிப்படையில் எழுந்தது இது.

இயற்கை அறிவியல்கள் அனுபவவாத அடிப்படை கொண்டவையாக இருக்கும் போது, கணிதம் போன்ற சில அறிவுத்துறைகள் மட்டும் தருக்கவாத அடிப்படை கொண்டவையாகவும், ஆதிமெய்ம்மைகள் (a priori facts)என்பவற்றில் நம்பிக்கை வைப்பவையாகவும் இருந்துள்ளன.

2. மெய்ம்மை X மதிப்பு இருமைத்தன்மை

மெய்ம்மைகள் அடிப்படையிலான தீர்ப்புகள் வேறு. மதிப்புகள் அடிப்படையிலான தீர்ப்புகள் வேறு. அறிவியல் முன்னவற்றைத் தருமே அன்றிப் பின்னவற்றைப் பற்றிப் பேசாது.

3. அறிவியல் என்பது மெய்ம்மை காணலில் புறச்சட்டக     வடிவு (வாய்பாட்டு வடிவம்) கொண்டது.

4. அறிவியல் கொள்கைகள் உற்றுநோக்க இயலாதவை பற்றி எதுவும் சொல்வதில்லை. அவற்றுக்குத் தொடர்பற்றவை.

5. அறவியல் முறை என்பதே வருவித்தல் (இண்டக்ஷன்) முறைதான்.

6. சரிபார்த்தல் என்பது அறிவியலின் அடித்தளம்.

7. அறிவியல் பிற படைப்பாக்கத் துறைகளிலிருந்து வேறுபட்டது. (அதாவது கலை, இலக்கியம் போன்றவற்றினும் மேம்பட்டது.) ஏனென்றால் அதன் வழிமுறை தனித்தன்மை கொண்டது. (இக்கோட்பாடு விஞ்ஞான முதன்மை வாதம்-சயண்டிஸம் எனப்படும்.)

8. எல்லா அறிவியல்களுக்கும், அதன் பல்வேறு கிளைகளுக்கும், அறிவியல் முறை என்பது ஒன்றேதான். (methodological monism).

9. அறிவியல் வளர்ச்சி என்பது தடுக்கவியலாதது. நிர்ப்பந்தமானது. ஏனெனில் அது மேலும் மேலும் பல்வேறு அறிவியல் கிளைகளிலிருந்து பெறும் தொகுப்பான வளர்ச்சியைக் கொண்டது. மேலும் மேலும் காலத்தால் நுண்ணிய தரவுகள், அதாவது உற்றுநோக்கல்கள் பெருகப் பெருக, அதன் அடித்தளம் வலுவடைகிறது. அதிலிருந்து வருவிக்கப்படும் மேற்கட்டுமானமாகிய கொள்கைகளும் அதனால் உறுதிபெற்றவை ஆகின்றன.

10. அறிவியலில் மாற்றம் எப்போதும் வளர்ச்சி நோக்கிய திசையிலானதே.

(நேர்க்காட்சிவாதக் கொள்கைகளை ஏற்க மறுக்கும் கார்ல் பாப்பர் போன்றவர்களும் இக்கருத்தை ஏற்கின்றனர்.)

NPG P370; Sir Karl Raimund Popper by Lucinda Douglas-Menziesமேற்கண்ட நேர்க்காட்சிவாதக் கருத்துகளுள் ஒன்றிரண்டு முன்னரே மறுக்கப்பட்டுள்ளன. காரணகாரியக் கோட்பாட்டை முன்வைத்த டேவிட் ஹ்யூம், அறிவியல் உற்று நோக்கல்களின் நிச்சயத் தன்மையை மறுத்தார். வருவித்தல் முறை (இண்டக்ஷன்) என்பதே முன்யூகங்கள் சார்ந்தது, எனவே அதை நியாயப்படுத்த முடியாது என்பது அவர் கோட்பாடு. இதற்குச் சற்று மாறாக, தே கார்த்தே, கருதுகோள் முறையை (ஹைபோதெடிசிஸம்) என்பதை முன்வைத்தார். இதுவம் தர்க்கவாத அடிப்படை கொண்டதுதான்.

வருவித்தல் முறைக் கோட்பாடு, அறிவியலின் நிச்சயத்தன்மை, பேரளவிலான அறிவு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருந்தது. கருதுகோள் முறைக் கோட்பாடு, ஆழ்ந்த உண்மையைத் துருவி வெளிப்படுத்துதல் என்பதை இலக்காகக் கொண்டது. இவையிரண்டிற்கும் மாறாக அறிவியல் தர்க்கத்துக்கு மாறாக, நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது என்று கூறுவது ஹ்யூமின் கோட்பாடு. எங்கு கருதுகோள்களும், வருவித்தலும் முடிகின்றனவோ, அங்கிருந்துதான் அறிவியல் தொடங்குகிறது என்றார் ஹ்யூம். கலை, இலக்கியம், மானிடவியல் போன்றே அறிவியலும் புலனால் அறிய ஒண்ணாதவற்றைப் பற்றிப் பேசுகிறது; அது ஆழ்ந்துள்ள, மறைந்துள்ள உண்மை களைத் தேடுகிறது; அதிலும் கலையைப் போலவே புதுமையும் படைப்பாற்றலும் உள்ளன என்பது ஹ்யூமின் கருத்து.

1950க்குப் பின் அறிவியலை நேர்க்காட்சிவாத அடிப்படையில் நோக்குவது குறைந்துவந்தது. இதற்கு அமைப்புவாதம். பின்னமைப்புவாதம் போன்றவற்றின் எழுச்சியும் துணைபுரிந்தது. நேர்க்காட்சி வாதத்தின் அடிப்படையில் அறிவியலை நோக்காதவர்களைப் பிந்திய நேர்க்காட்சி வாதிகள் (போஸ்ட்-பாசிடிவிஸ்டுகள்) எனலாம். இவர்கள் மூவகைப்படுவர்.

1. நேர்க்காட்சிவாதத்தை அரைமனத்தோடு ஏற்பவர்கள்/மறுப்பவர்கள்.

(சான்று, கார்ல் பாப்பர்).

2. நேர்க்காட்சிவாதத்தை அறவே புறக்கணிப்போர். (சான்று, டி.எஸ். கூன்).

3. நேர்க்காட்சிவாதத்தை மறுப்பவர்கள். (சான்று, பெயரபெண்ட்).

இனி, பாப்பர், கூன், பெயரபெண்ட் ஆகிய அறிவியல் தத்துவவாதிகள் முன்வைத்த கருத்துகளைச் சுருக்கமாகக் காணலாம்.

(இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த சிறகு இதழில் வெளியாகும்.)


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவியலின் தத்துவம் – ஓர் எளிய தொடக்கம்”

அதிகம் படித்தது