இலங்கைத் தமிழ்ச் சங்க 37வது ஆண்டு விழா – 2014
மறத்தமிழன் கன்னியப்பன்Nov 22, 2014
உடல் மண்ணிற்கு உயிர் தமிழிற்கு
அதை உரக்கச் சொல்வோம் உலகிற்கு
எனும் முழக்கத்துடன் அமெரிக்காவில் உள்ள நியூசெர்சி மாநிலத்தின் ‘மோன்றோ’ நகரில், 37 வது ஆண்டு இலங்கைத் தமிழ்ச் சங்க விழா, நவம்பர் 15, 2014 ஆம் நாள் நடைபெற்றது. தமிழர் சங்கமம் என்று வழங்கப்படும் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்களில் நடைபெறுவது வழக்கம். கடந்த ஐந்தாண்டுகளாக இவ்விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றது மகிழ்வளிக்கின்றது. இலங்கைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து உலகத் தமிழ் அமைப்பு (WTO), அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை (USTPAC), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) ஆகிய அமைப்புகள் இவ்விழாவினை ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் நடத்துகின்றன. ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டு உணர்வாளர்களும் சங்கமிக்கும் இவ்விழாவானது, மொழி கலை இலக்கியம் அரசியல் பண்பாடு என்று அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது. அரசியல் ஊழியால் தம் மண்ணையும் மக்களையும் விட்டுப் பிரிக்கப்பட்டு வாழும் ஈழத்தமிழர்கள், பல நாடுகளில் வாழும் தமது உறவுகளுடன் ஒன்றுகூடி தம்மைத் தேற்றிக்கொண்டு, தம் விடுதலைக்கான உரமேற்றிக்கொள்ளும் மறத்தமிழர் விழா இது.
காலை எட்டு மணியளவில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழர் சங்கம விழா இனிதாகத் துவங்கியது. விழாவிற்கு வந்தவர்களின் வயிற்றுக்கு சுவையான உணவும், அறிவுக்கு சிறப்பான ஆண்டு விழா மலரும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அவ்விழா மலர் மிகவும் சிறப்புற வடிவமைக்கப்பட்டு, தமிழ் – ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. உலகத் தமிழர் அமைப்புகளின் வாழ்த்துச் செய்திகளுடனும், தமிழரின் அரசியல் பண்பாடு சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளும், கவிதைகளும் இடம்பெற்றிருந்தது. மேலும் விழாவின் வரவேற்பறையில் பல நூல்களும் ஆய்வேடுகளும், அறிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன. அதில் முதன்மையானதாக ‘இனப்படுகொலை’ எனும் ஆங்கில நூலும், வடக்கு மாகாண அவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் திரு. போ. ஐங்கரநேசன் அவர்கள் எழுதிய ‘ஏழாவது ஊழி’ எனும் சூழலியல் நூலும் சிறப்பானவை. இலங்கைப் புறக்கணிப்பு தொடர்பான நூல்களையும், பொருட்களையும் அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவையும், இளந்தமிழகம் இயக்கம் வெளியிட்ட ‘வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி’ எனும் ஆவணப்படத் தகட்டை உலகத் தமிழ் அமைப்பும் வழங்கியது. மேலும் நாடு கடந்த தமிழீழ அரசு அதன் ‘தமிழீழ சுதந்திர சாசனம்’, ‘குற்றம் சுமத்துகிறோம்: போர்க்குற்றமும் இனப்படுகொலையும்’ போன்ற நூல்களை வழங்கினர்.
தமிழர்கள் இசுலாமியர்கள் உறவும் – எதிர்காலமும் எனும் தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. அதில் ஈழத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் இசுலாமியப் பேராளர்களும் கலந்துகொண்டு விவாதித்தனர். உறவுகளுக்கிடையில் நம்பிக்கையை வளர்ப்பதும், அனைவரும் தமிழ் மொழி அடையாளத்தின் அடிப்படையில் ஒன்றுபட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஈழமும் இந்திய வெளியுறவுக் கொள்கையும் எனும் தலைப்பில் நாடு கடந்த தமிழீழ அரசு அடுத்தக் கூட்டத்தை நடத்தியது. உலகில் உள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளுக்கும் இடையில் தொடர்பாடல்களை சிறப்புறப் பேண வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கடமை குறித்தும், அது ஒன்றுதான் இந்தியாவை ஈழத்தமிழர் சார்பாகத் திருப்பும் வலிமையுடையது என்றும் வலியுறுத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட அரசியல் அறிஞர்கள் எதிர்காலத்தில் எப்படித்திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததுடன், பொதுமக்களுக்கு எழும் ஐயங்களுக்கும் விடையளித்தனர்.
அறுசுவை நண்பகல் உணவுக்குப்பின், அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவையின் கூட்டம் நடைபெற்றது. இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மாவை சேனாதிராசா அவர்களும், திரு. சுமந்திரன் அவர்களும், வடக்கு மாகாண அவையின் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. ஐங்கரநேசன் அவர்களும் ஈழத்தில் இன்றைய நிலைமையை விளக்கினர். அங்கு பேசிய சிறப்பு விருந்தினர்கள், எப்படித் தமிழர்கள் கையறுநிலையில் உள்ளனர் என்றும், தமக்கான உரிமைக்குரலைப் பதிவு செய்ய வழியற்று உள்ளனர் என்றும் விளக்கிக்கூறினர். இராசபக்சேவுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்துவது, சிங்களரிடையே அவரின் செல்வாக்கை உயர்த்துவாதாக அமையும் சூழலையும், இதனைநோக்கமாகக் கொண்டு இராசபக்சேவின் திட்டமிடுதலில் கிழக்கில் உள்ள சிங்களர்களால் (தமிழர் போன்று உடையணிந்து, தமிழில் பதாகைகளை ஏந்தி) போலியாக சில எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டதையும் குறிப்பிட்டனர். தங்களால் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான கருத்துக்களை வெளிப்படையாகப் பதிய இயலாது என்றும், இயன்றவரை தங்களிடம் இருக்கும் (அதிகாரமற்ற) அதிகாரத்தால் தமிழருக்கு நன்மை செய்ய முயல்வதாகவும் பதிவு செய்தனர்.
பின்னர், உலகத் தமிழ் அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டம் நடைபெற்றது. அதன் செயலாளர் திரு. இரவிக்குமார் அவர்கள் அவ்வமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் குறித்தும் வருங்காலத்திட்டங்கள் குறித்தும் விவரித்தார். புலம்பெயர்ந்துள்ள தமிழர் அமைப்புகளுக்கும் தமிழ்நாட்டு இயக்கங்களுக்கும் ஒரு பாலமாக இருந்து செயற்படுவதையும், தமது தோழமை அமைப்புகள் மூலம் நிறைவேற்றிய பணிகளையும் எடுத்துரைத்தார். அண்மையில் நடந்த பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் உலகத் தமிழ் அமைப்பின் சார்பாகக் கலந்துகொண்ட முனைவர் திரு. தணி சேரன் அவர்கள், தமது பட்டறிவையும், அவ்விழாவின் சிறப்பையும் அனைவருக்கும் தெரிவித்தார். அவ்விழா மிகவும் நம்பிக்கையூட்டுவதாகவும், மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாகவும், தீர்மானங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பானதாக இருந்தது என்றும் கூறினார். அவ்விழாவில் கலந்துகொண்ட திருமதி. புட்பராணி அவர்கள் அத்தீர்மானங்களைப் படித்தார். முன்னாள் தலைவர் திரு. செல்வன் அவர்கள் தமிழரின் ஒற்றுமையை வேண்டியும், தமிழ் நாட்டில் செய்யவேண்டிய பணிகளை செய்யத் தேவையான ஒத்துழைப்பையும் அனைத்து அமைப்புகளிடமும் வலியுறுத்தினார். இக்கூட்டத்தின் முடிவில், சமூக வலைத்தளங்களின் தேவையை வலியுறுத்தியும், அதனைத் தமிழர்கள் எப்படித் திறம்படப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.
மாலை ஆறு மணியளவில், தமிழிசை பயிலும் தமிழ்க் குழந்தைகள் பலர் இணைந்து ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே’ எனும் வாழ்த்துப் பாடலைப் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தனர். இவ்வரங்கத்தின் சிறப்புப் பேச்சாளராக வடக்கு மாகாண அவையின் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. பொ. ஐங்கரநேசன் அவர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். திரு. ஐங்கரநேசன் அவர்களின் உரை பெரும்பாலும் அங்கு நிலவும் திட்டமிடப்பட்ட சூழலியல் (சாயத்தொழில்கள்) கேடுகளும், தன்னால் இயன்றவகையில் எவ்வாறு அத்திட்டங்களைத் தடுக்க முயல்கிறார் என்பது குறித்தும், மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களில் எவ்வாறு தமிழர்களுக்கு நன்மையளிக்குமாறு உறுதிசெய்ய முனைகிறார் என்பதையும் விளக்கினார். தமிழர் வாழும் பகுதிகளில் நிலவும் வறட்சியும், குடிநீர் பற்றாக்குறையும், கால்நடை வளர்ப்புச் சிக்கலும், வறுமையும், அரசப்படையினர் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதையும், நிலப்பறிப்பையும், மக்கள் நாள்தோறும் வாழ்க்கையை நடத்த அல்லலுறுவதையும், அதனால் கல்வியில் சிறார்கள் கவனம் செலுத்தாததையும் பகிர்ந்துகொண்டார்.
மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட அருட்தந்தை இம்மானுவேல் அவர்களுக்கு எண்பது அகைவை நிறைவடைவதை ஒட்டி, அவர் மானுடத்திற்கு ஆற்றிய வாழ்நாள் தொண்டைப் பாராட்டி அனைத்து நாட்டின் சார்பாகவும் பேராளர்கள் முன்வந்து, அவரின் தமிழ்மக்களுக்கானத் தொண்டைப் பதிவுசெய்தனர். அருட்தந்தை அவர்கள் தமிழீழத்தின் ஆன்மீக வடிவம் என்றும், தமிழீழ இறையியலின் தந்தை என்றும் தலைமையமைச்சர் திரு. உருத்திரகுமாரன் அவர்கள் குறிப்பட்டதை அனைவரும் வரவேற்றனர். மேலும் அருட்தந்தையின் நூறாவது பிறந்தநாளை நாம் அனைவரும் தமிழீழத்தில் கொண்டாடுவோம் என்றவுடன் அரங்கமே அதிரும் வகையில் அனைவரும் கையொலி எழுப்பி மிகிழ்ந்து வரவேற்றனர். அப்போது தமிழீழத்தைப் பற்றிய நினைவலையில் பலரின் உள்ளம் மூழ்கியது.
இறுதியில் ஏற்புரை வழங்கிய அருட்தந்தை இம்மானுவேல் அவர்கள், தன்னை எப்போதுமே அருட்தந்தை என்று தாம் வெளிப்படுத்திக்கொள்வதில்லை என்றும், முதல் தொண்டாளன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலேயே பெருமைகொள்கிறேன் என்றார். தான் பிறக்கும் போது தமிழனாகப் பிறந்ததாகவும், பின்பே கிறித்துவனானதாகவும் முன்பு கூறியதை நினைவுபடுத்தினார். தமிழ் மக்களின் துயரத்தை நம்முடன் பழகும் அக்கம்பக்கதினரிடம் முதலில் கொண்டுசெல்ல வேண்டும், மக்களாட்சி உலகில் வாழும் நாம் மனிதர்களின் வலிமையைப் புரிந்து செயல்பட வேண்டும் என்றார்.
நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையமைச்சர் திரு. உருத்திரகுமாரன் அவர்கள் இவ்விழாவில் சிறப்புரையாற்றியபோது, ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யபட்டனர் என்பதைத் தொடர்ந்து உலக நாடுகளிடம் வலியுறுத்த வேண்டும், அவர்களுக்கான தீர்வை அம்மக்களே முடிவுசெய்யும் வகையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் பலமுறை வலியுறுத்தினார்.
தமிழர் சங்கமத்தின் சிறப்பு விழா ஒருநாள்தான் என்றாலும் பல அறிஞர்களும், உணர்வாளர்களும் நட்புபாராட்டக் கிடைக்கும் ஒரே வாய்ப்பு என்பதால் ஒரு நாள் முன்பே வந்து, ஒரு நாள் கழித்து செல்வது வழக்கம். விழாவிற்கு முதல்நாளும், விழாவிற்கு அடுத்தநாளும் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில், தமிழரின் இன்னல்களைக் குறித்து தமது உள்ளக்குமுறல்களைப் பகிர்ந்துகொள்வதோடு நில்லாமல், பன்னாட்டுக் குமுகத்தையும், உலக அரசுகளையும் ஈழத்தமிழருக்கான தீர்வை முன்வைக்க, அவர்களின் கவனத்தை நம் அறப்போராட்டத்தின் பக்கம் ஈர்க்க எப்படிச் செயல்படுவது என்று தமக்குள் திட்டமிடும் வழக்கமும் உண்டு.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
பிரித்தானியத் தமிழர் பேரவையின் சார்பாக பன்னாட்டு அயலுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வுரை வழங்கியவர், உலகத் தமிழரின் பங்கு குறித்தும் அதிலும் தமிழ்நாட்டின் சிறப்பு பங்கு குறித்தும் விரிவாக விளக்கினார். தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறையினரால் நடத்தப்படும் இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக, ஈழப்போராட்டத்தை வெளிமாநிலங்களுக்குக் கொண்டுசெல்வதற்குத் தேவையான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும் என்றும், அவரவர் மொழிகளில் ஆவணங்களையும் செய்திகளையும் உடனுக்குடன் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு அழைப்பாளராக அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவையின் மூலம் அழைக்கப்பட்டிருந்த, ஐ.நா. அவையால் ஏற்கப்பட்ட அரசுசாரா அமைப்பான பசுமைத் தாயகத்தின் செயற்பாட்டாளர் திரு. அருள் இரத்தினம் அவர்கள், தமிழ்நாட்டின் அமைப்புகளுக்கிடையில் ஒத்திசைவு வேண்டுமென்றும், உலகத் தமிழர் அமைப்புகள் ஒத்த திசையில் விடுதலைப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதையொத்தக்கருத்தை அரங்கத்தில் இருந்த உலகத் தமிழ் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு. சங்கரபாண்டியன், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் திரு. நாஞ்சில் பீற்றர் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.
மாலை வேளையில் சிற்றுண்டியும், இரவு அறுசுவை விருந்தும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் தமிழரின் பண்பாடு வரலாறு குறித்த தலைப்பில் குழந்தைகளுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசு மக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. கனடா, இங்கிலாந்து, சுவீடன், செர்மனி போன்ற நாடுகளிலிருந்தும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ் அமைப்புகளைச் சார்ந்த இளைஞர்கள் பலர் விழாவில் ஆர்வத்துடனும், தமிழின உணர்வுடனும் பங்கேற்றனர். விழாவில் கலை நிகழ்ச்சியும், இன்னிசை குழுவினரின் பாடலும் மாலை நிகழ்ச்சியில் நடைபெறுவது வழக்கம் என்பதால், குழந்தைகளும் இளையவர்களும் அரங்கம் கொள்ளாத அளவிற்கு மிகுதியாகக் கூடியிருந்தனர். மேடையில் பாடப்படும் பாடலுக்கு ஏற்ப பலர் கூடி நடனமாடி மகிழ்ந்தனர். விழா அரங்கம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பதைக் காண்பதே பெரும்பேறு. விழா முடிவில், அடுத்த ஆண்டு தமிழர் சங்கமம் எப்போது வரும் எனும் சிறு ஏக்கமும் உள்ளத்தில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
மறத்தமிழன் கன்னியப்பன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கைத் தமிழ்ச் சங்க 37வது ஆண்டு விழா – 2014”