மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குப்பைகளிலிருந்து கோமேதகம்-கழிவுகளின் பயன்பாடுகள்

சிறகு நிருபர்

Sep 17, 2022

kazhivugal1உலகமயமாக்கலின் தொடக்கத்திலிருந்து தமிழகம் வேகமாக நகரமயமாகி வருகிறது. அப்படி உருவாகும் நகரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அன்றாடம் துயில் எழுந்ததிலிருந்து அன்றைய நாள் முழுவதும் தூய்மையாக இருக்கவேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். தன்னையும், தான் இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருப்பதில் யாரும் அக்கறை காட்டாமல் இருப்பதில்லை, அது அன்றாட வேலைகளில் ஒன்றாகவே நாம் நினைத்து நடந்துகொண்டிருக்கிறோம்.

நாம் வெளியில் செல்லும்பொழுது தூசிபரவிய, கழிவுநீர் நிறைந்த தெருக்களை கடந்துதானே செல்லவேண்டி உள்ளது. தான் சுத்தமாக இருந்தாலும் மாசுபட்ட காற்றினாலோ, மாசுபட்ட நீரினாலோ நோய்கள் அதிகம் பரவுகிறது. நகரெங்கும் குப்பைகள் பெருகி வருகின்றன.

நகர்ப்பகுதிகளில் ஆங்காங்கே சாலை ஓரங்களிலும், சாக்கடைப் பகுதிகளிலும், நீர் தேங்கியுள்ள குட்டைகளிலும் அன்றாடம் பயன்படுத்தியதில் உண்டான கழிவுப்பொருட்களை கொட்டுவதால் அந்த நகர் பகுதி முழுவதும் சுகாதாரம் சீர்கேடு அடைந்து பல்வேறான தொற்றுநோய்களும் ஏற்பட்டு வருகிறது.

ஒரு நாளைக்கு ஒருவரால் சராசரியாக 600 கிராம் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகிறது. ஆக மொத்த இந்திய மக்களிடமிருந்து 200 இலட்சம் டன்கள் கழிவுகள் ஒரு நாளைக்கு. அப்படியென்றால் உலகம் முழுவதும் எவ்வளவு கழிவுகள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக பயன்படுத்தப்படாத நிலையில் ஒவ்வொரு மாதமும் 6 லட்சம் டன் கழிவுகள், மறுசுழற்சி செய்யப்படாமல் வீணாகி வருவதுடன் சுற்றுப்புற சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

kazhivugal4நம் நாட்டில் கழிவுகளை நிர்வாகம் செய்வதற்காக அரசு நிதி ஒதுக்குகிறது. என்ன பயன்? அந்த நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லையே. கழிவுகளை திரட்ட 70%, அதனை எடுத்துச் செல்ல 25%, அழிக்க மற்றும் சுத்தம் செய்ய 5%. இந்தக் கழிவுகளை எவ்வாறு அழிக்க முடியும். இவ்வாறு உலகம் முழுவதும் நெருக்கடியைக் கொடுக்கிற இந்த குப்பைப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? நாம் பயணிக்கும் பொழுது இந்தக் குப்பைகளைக் கண்டாலே மூக்கை மூடிக்கொள்கிறோம், அருவருப்பாக நினைக்கிறோம். ஆனால் அக்கழிவுகளிலிருந்து அதிக நன்மை தரக்கூடிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. இக்கழிவிலிருந்து பல பயன்தரக்கூடிய பொருட்கள் உள்ளன. அதாவது இந்த குப்பைகளில் இருந்து பலர் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள் மேலும் குப்பைகளும் அகற்றப்படும் அதன்மூலம் வருவாய் மற்றும் பல பயன்பாடுகள் ஏராளம், அவற்றைக் காண்போம்.

மக்கும் மற்றும் மக்காத என்றுள்ள கழிவுகளில் மக்காத கழிவுகளினால் அதிக ஆபத்து ஏற்படுகிறது. இவ்வாறான கழிவுகளில் “யூஸ் அண்ட் த்ரோ” என்று சொல்லப்படும் நெகிழி புட்டிகள், நெகிழியால் பயன்படுத்திய பைகள் மற்றும் இதர நெகிழிப் பொருட்களும் அடங்கும்.

kazhivugal3தற்பொழுது உற்பத்தி செய்யப்படும் நெகிழியில் 7 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. மற்ற 93 சதவிகிதமும் மட்காத பொருளாய் தேங்கி நின்று நோயை பரப்புவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இது மட்டுமல்லாமல் கடலில் அதிகமாக நெகிழி பொருட்கள் மிதக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களான திமிங்கலம், சீல் மற்றும் பறவைகள், வனவிலங்குகள், கால்நடைகள் இந்த மக்காத கழிவுகளான நெகிழியால் அழிகின்றன. ஆனால் இவ்வளவு தீங்கு தரக்கூடிய இக்கழிவுகள் நல்ல முறையில் பயன்படுத்தினால் கழிவுகளும் அகற்றப்படும், சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படும்.

சாலை பயன்பாட்டில்:

kazhivugal9ஒரு டன் நெகிழி கழிவு என்பது 10லட்சம் நெகிழி பைகளுக்கு சமம். “ஷெல்டிங்” என்ற இயந்திரத்தைப் பயன்படுத்தி இந்த நெகிழி கழிவுகளைப் கூழாக்கி, சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரில் கலந்தால் சாலையின் ஆயுட்காலம் அதிகரிக்கும், விரிசல் ஏற்படுவதும் குறைகிறது. மற்றும் குண்டு, குழி, மழைநீர் தேங்குதல் போன்ற பிரச்சனையிலிருந்து சாலை பாதுகாக்கப்படுகிறது. சாதாரண சாலை 1000 டன் எடை தாங்கும், என்றால் இந்த நெகிழியைப் பயன்படுத்தி செய்த சாலை 2500 டன் எடை தாங்கும். சிலர் இந்த பயன்பாட்டைப் புரிந்துகொண்டு இந்த நெகிழி கழிவுகளை பொடியாக்கி விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். இதன் மூலம் நெகிழி கழிவுகள் அனைத்தையும் அகற்றி சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கலாம்.

இயற்கைஉரம் தயாரிப்பில்:

kazhivugal7அதிக விலை கொடுத்தாலும் இயற்கை உரம் கிடைப்பதில்லை. காய்ந்த சாணம், மக்கிய இலை மற்றும் இதர கழிவுகளை தண்ணீர் சேர்த்து ஈரப்பதம் ஏற்படுத்தி அதில் மண்புழுக்களை வளர்க்கலாம். மண்புழுக்கள் ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி பல்கிப் பெருகும். மண்புழு இக்கழிவுகளை உண்டு வெளியேற்றப்படும் கழிவுதான் உரமாக மாறுகிறது. மூன்று மாதத்தில் மண்புழு உரம் மற்றும் மண்புழுக்கள் உற்பத்தியாகி விற்பனைக்குத் தயாராகிறது. இந்த உரத்தை பதப்படுத்தி பைகளில் அடைத்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து அதிக வருவாய் ஈட்டலாம்.

எரிவாயு தயாரிப்பில்:

kazhivugal8ஒரு சில மாதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் முற்றிலுமாக எரிவாயுவிற்கு வழங்கப்பட்டுவரும் மானியத்தை நிறுத்தப் போகின்றது. இதனால் நாம் உபயோகிக்கும் 14.2 கிலோ எடையுள்ள உருளையின் விலை சுமார் ரூபாய்.850-ஐ தொடும். அதாவது இரட்டிப்பு விலையாகி விடும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட நாம் தினமும் வெளியே தூக்கியெறியும் சமையல் கழிவுகளாகிய, அழுகிய காய், பழம், பழத்தோல், சமைத்த உணவு பொருட்களில் மீதியவை போன்றவற்றிலிருந்து நமக்கு தேவையான சமையல் எரிவாயுவை நம் வீட்டிலிருந்தே தயாரிக்க முடியும். சமையலறை கழிவிலிருந்து எரிவாயுவை உற்பத்தி செய்ய பயன்படும் சாதனத்தின் பெயர் “பயோ கேஸ் சிஸ்டம் (ANAEROBIC DIGESTER SYSTEM)”  ஆகும். வீட்டிலிருந்தே தயாரிக்கலாம் என்றால் நாட்டிலுள்ள குப்பைகள் அனைத்தையும் சேர்த்து எரிவாயு தயாரிக்கும் எண்ணம் வந்து விட்டால் உருளையின்ன் தட்டுப்பாடு குறைந்து விடும், குப்பைகளும் குறையும்.

மின்சாரம் தயாரிப்பில்:

kazhivugal10தாமிரத்தை பாசிட்டிவாகவும், செம்பை நெகட்டிவாகவும் தொடர் இணைப்பாக இணைக்கும் பொழுது ஏற்படும் எலக்ட்ரான்களின் நகர்வினால் மின்சாரம் உருவாகிறது. இந்த விதியை இந்த விதியை தாவர கழிவுகள், சாக்கடைக் கழிவுகள், ஈரமான மணல், சமையல் கழிவுகள், உப்பு தண்ணீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். இந்த மக்கும் கழிவுகளை (உரமாக்கிய பிறகு, மீதியுள்ள கழிவுகளை) மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம். பிரித்தெடுக்கப்பட்ட, அழிக்க முடியாத திடக்கழிவுகளில் இருந்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டு திடக்கழிவுகளில் உள்ள உயிரி பொருட்களை வெப்பப்படுத்துவதன் மூலம், பதப்படுத்தி, அதிலிருந்து மின்சாரம் தயார் செய்யலாம். இன்றைய சூழலில் மின்சாரம் எவ்வளவு அத்தியாவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. அத்தனை அத்தியாவசியமான மின்சாரத்தை வீணாகும் கழிவிலிருந்து நாமே தயாரித்தால் மின்பற்றாக்குறை குறையும்.

வளர்ந்த நாடுகளில் அன்றாடம் குப்பைகள் மக்கும் குப்பைகள் ஒரு புறம், மக்காத குப்பைகள் ஒரு புறம் என்று தரம் பிரித்து வாங்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால்தான் என்னென்ன பயன்பாடுகளுக்கு எதை பயன்படுத்த முடியுமோ அதை பயன்படுத்தி பயன் பெறலாம். ஆனால் நம் நாட்டிலோ அவ்வாறு இல்லை. அனைத்தையும் அதாவது மக்கும் மக்காத குப்பைகள் அனைத்தையும் ஒரு பையில் கொட்டிச்செல்கின்றனர். இதனால் தரம் பிரிக்க முடியாத சூழலில் அந்தந்த பயன்பாட்டிற்கு தகுந்தவாறு பலன் இல்லாமல் போய் விடுகிறது எனலாம்.

வேலூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் குப்பைகளை சுத்தம் செய்வதற்காக மண்புழு, வாத்து, மாடு என்று பல விலங்குகளை பயன்படுத்தி வருகிறார்.

பசு பால் கொடுக்கிறது. ஒரு சில வருடங்களுக்குப் பிறகு பால் கொடுப்பது நின்றுவிடும். மக்கள் அந்த பசுவை வீண் என்று நினைக்கிறார்கள் ஏனென்றால் அது பால் கொடுப்பதில்லை. வீண் என்று நினைக்கின்ற அந்த மாதிரியான பசுக்களை குப்பைகளை சுத்தம் செய்வதற்கான முக்கிய பங்கு வகிப்பதுடன் உரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

4 மணி நேரத்திற்கு ஒரு முறை காய்கறி மண்டிகள், பழக்கடைகள் இது போன்ற இடங்களிலிருந்து கழிவுகளை சேகரித்து ஒவ்வொரு முப்பத்தைந்து கிலோ காய்கழிவுகளுக்கும் ஒரு பசுவை வைத்திருக்கிறார். இந்த பசுவின் வேலையே அதை சாப்பிட வேண்டியது, சாணம் போட வேண்டியது, தொழுவத்தில் சென்று தூங்க வேண்டியது. ஆனால் அதன் மூலம் கிடைக்கும் பலன் அளவற்றது. 8 மணி நேரத்தில் அதாவது குப்பை என்று சொல்லுகிற அந்தக் கழிவுப் பொருட்கள் கால் பங்கு சாணமாக வெளிவருகிறது. அந்த சாணத்தில் நமக்குத் தேவையான மீத்தேன் இருக்கிறது. சாணத்தை பயோ காஸ் பிளான்ட்-ல் செலுத்தி விடுகிறார், அதிலிருந்து 99% மீத்தேன் நிறைந்த சாணமாக வெளிவருகிறது, அதனை புழுக்களுக்கு சேர்த்துவிடுகிறார். 72 மணி நேரத்திற்குள் உரமாக வெளிவருகிறது. இந்த உரம் விவசாயிகளுக்கு அதிக சத்துக்கள் நிறைந்த இயற்கை உரம் என்கிற உயிர் உரம்.

அடுத்து வாத்து, இதனால் முக்கியமான பயன் ஒன்று உண்டு என்றால் அது முட்டை. இந்த வாத்துக்களுக்கு கழிவுகள் என்கிற மீன் கழிவுகளை இந்த வாத்துக்களுக்கு கொடுத்தால் சாதாரணமாக 8 லிருந்து 10 முட்டைகள் இடும் இந்த வாத்துக்கள் மாதத்திற்கு 24 முட்டைகள் கொடுக்கிறது.

கோயம்புத்தூரில் 10 கிராம பஞ்சாயத்துகளை ஒரு குழுவாக சேர்த்து செயல்படுகிறார். இது ஒரு நகராட்சிக்கு சமம். ஒரு தனி மனிதர் பல நோயை உண்டாக்கும், சுற்றுப்புறத்தை சீரழிக்கும் வீணான கழிவுகளை பயனுள்ள வகையில் உபயோகித்து அபரிமிதமான பலன்களை அடைவதுடன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்குகிறார்.

kazhivugal5நம் நாட்டில் சிலரேனும் இம்மனிதரைப்போல் சிந்தித்தால் நிச்சயமாக நாட்டையே சுத்தமாக்கலாம். அவ்வாறு இல்லையேல் குறைந்தபட்சம் நம் வீட்டிலிருக்கும் குப்பைகளையாவது தரம் பிரித்து (மக்கும்,மக்காத குப்பைகள்) குப்பைவண்டிகளுக்கு கொடுத்து, அதை அரசு முறையாக பயன்படுத்தி, நாட்டை வளம் பெற செய்யலாம். குப்பைகளை முறையாக கையாள்வது நம் ஒவ்வொருவரின் கடமை. நமது வீடு மட்டுமன்றி நகரமும் சுத்தமாக இருப்பது நம் கரங்களில்தான் உள்ளது. பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு குப்பைகளிலிருந்து பலன் பெறுவோம், சுற்றுப்புறச்சூழலைப் பேணுவோம்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குப்பைகளிலிருந்து கோமேதகம்-கழிவுகளின் பயன்பாடுகள்”

அதிகம் படித்தது