தற்காலக் கல்வி முறை: பகுதி -10
முனைவர் ஜ. பிரேமலதாDec 26, 2015
கல்வித்துறையில் தற்போது தேவைப்படும் மாற்றம் எதுவெனில், மதிப்பிற்குரிய ஆழ்ந்த அறிவினை உருவாக்கும் கோட்பாடு மட்டுமேயாகும். அனைத்துத் தரப்பு மாணவர்களின் பின்புலத்தையும் கருத்தில் கொண்டு இக்கோட்பாட்டை வடிவமைக்க வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்விச் சூழலில், சமக்கல்வி வாய்ப்பளித்து அவரவர் திறமை ஆற்றலுக்கேற்ப முழுமையான வளர்ச்சி பெற உதவுவதுதான் கல்வியின் முக்கியச் சவாலாகும். பழங்காலக் கல்வியைவிட இக்காலக் கல்வி முறை சவால் நிறைந்தது. காரணம் அனைவருக்கும் வேலை தருவது என்பது இயலாத நிலை. இக்கால சமூகச் சவால்களை எதிர்நோக்கும் அளவில் அனைவரையும் உருவாக்குவது கல்விக்கு விடுக்கப்பட்ட அறைகூவல். இந்தியாவில் தற்போது பல்வேறு வகையான கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன.
மத்திய நடுவண் அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் தங்களுக்கு என்று தனித்த கல்விக் கொள்கையைக் கொண்டு செயல்படுவதால் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. இதனால் மக்களிடையே எந்த கல்விமுறை சிறந்தது என்ற குழப்பம் நிலவுகிறது.
மாநில கல்வித்திட்ட முறையில் பயிலும் மாணவர்களுக்குமிடையே உயர்வு தாழ்வு மனப்பான்மை தோன்றுகிறது. இவ்வாறன்றி மொழிப் பாடங்களைத்தவிர மற்ற அனைத்துப் பாடங்களையும் நாடு முழுமைக்கும் ஒரே பாடத்திட்டமாக வகுப்பதென்பது உயர்வு-தாழ்வு மனப்பான்மையைப் போக்கும். இதனால் போட்டித் தேர்வுகள் என்பது சிக்கலுக்குரியதாக இருக்காது. அதேபோல மாணவர்கள் கல்வி கற்கும் இடங்களில் வேறுபாடு எதன் பொருட்டும் காணக்கூடாது என்பதும் சமூக நீதிக்கொள்கையாகும்.
என் மாணவர்களிடம் கல்வியில் என்ன சிக்கல் உள்ளது என்று கேட்டபோது ‘கல்வியே இன்று சிக்கல்தான்’ என்று பதில் தந்தார்கள். ‘ஏன் அப்படி?’ என்று கேட்டபோது புரியாத மொழியில் கல்வி, என்ன படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம் என்பது தெரியாமலேயே எதையோ படிப்பதாக அந்நியப்பட்டு நிற்கும் வேலையில்லா சூழல்என்றார்கள்………
உலகமயமாக்கலுக்குப் பின்னர், அனைத்து செயல்களும் உலகளவில் நிலைப்படுத்தப்பட்டு வருகின்றன. தரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கல்வித்துறை மட்டும் நமது நாட்டில் பின்தங்கியே உள்ளது. வேறுபாடுகள் நிறைந்த பல்வேறு இந்திய மாநில அரசுகளின் முரண்பட்ட கல்விக்கொள்கைகள் ஒரு விசித்திரமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது. கலாச்சார மாற்றம் கல்வியோடு இணைந்தே சமுதாயத்திலும் உணவிலிருந்து உடை வரை பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதற்கேற்றவாறு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டியது கல்வித்துறையில் பெரிய சவாலாக உள்ளது. கற்றுத்தரும் முறைகளில் பழங்கால முறை பொருந்தாத ஒன்றாகும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், தொலைக்காட்சி, கணினியின் வளர்ச்சியும் பயன்படுத்தப்படுவதில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி தேவையாக உள்ளது.
அதே சமயம் தொழில்நுட்ப ஊடகங்கள் மாணவர்களைத் திசைதிருப்பவும் செய்கின்றன. தீயவை தரும் ஊடகங்களை நீக்கி, கல்வியில் நாட்டம் செலுத்த ஆசிரியர் திசை காட்டும் மாலுமியாக, அறிவூட்டும் ஆலோசகராகத் திகழ்தல் வேண்டும். இன்றைய தலைமுறை எல்லாவற்றிலும் நவீனமாக இருக்க விரும்புகின்றார்கள். அவர்களின் பண்பாட்டிற்கும் ஒழுக்க நெறிக்கும் ஆசிரியர்களே பொறுப்பாகின்றனர். மாணவர் உளவியல், பெற்றோர் உளவியல், நிர்வாகத்தின் உளவியல் போன்ற உளவியல் நுட்பங்களை அறிந்தவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டிய சூழலில் உள்ளனர். பாடத்திட்டம் தொடர்பான அரசின் கல்விக்கொள்கையில் தேவைப்படும் மாற்றங்களை இந்திய சமூக மாணவர்களின் நிலையுணர்ந்து ஆசிரியர்கள் நிகழ்ந்திடவும் மனம் வைத்திட வேண்டும். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க கல்வி ஒன்றுதான் வடிகால். கல்விதான் சமூகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. கல்வி நிலையங்களில்தான் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய இயலும். கடமையுணர்வுடைய பொறுப்புணர்வுடைய சமுதாயத்தைக் கல்விக்கூடங்களிலிருந்து தான் உருவாக்கிட முடியும். அனைத்துத் தரப்பினரும் மனம் ஒன்றி முயன்றால் வெற்றி நிச்சயம்.
அடுத்த மாற்றம் கழிப்பறை வசதியாகும். நாடு விடுதலையடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனபின்பும் பல அரசு கல்லூரி, மற்றும் பள்ளிகளில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை என்பதே நம் நாட்டின் கல்வி நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தியே ஆகவேண்டிய அடிப்படை தேவைகளில் கழிப்பறையும் ஒன்று. உடல்நலம் காப்பதில் உடல் கழிவு அகற்றுதல் மிகவும் அவசியமானதாகும். அரசு மாணவர்களுக்குக் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் செய்து தரவேண்டிய அடிப்படை உரிமை கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியதாகும். தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதிகளே கிடையாது. கழிப்பறை இருந்தாலும் நீர்வசதி இருப்பதில்லை. குடிநீரும்கூட கிடைப்பதில்லை. இவற்றையெல்லாம் முறையாகப் பராமரிப்பதுமில்லை. பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்ற வசதிகள் இல்லாததால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் வளர்இளம் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற அரசின் கொள்கை இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
பல பள்ளிகளில் மாணவர்கள் திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் பெண்கள் பள்ளியை இடையில் விட்டு விலகுவது அதிகரிக்கிறது. பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுவதற்கு இதுவும் காரணமாகும். சுற்றுப்புறச்சூழல் கல்வியை மாணவர்களுக்குப் பாடமாகப் போதிக்கும் அரசு, பள்ளிகளின் சுற்றுச்சூழல் பற்றியோ, கழிப்பிட வசதிகளைப் பற்றியோ சிந்திப்பதில்லை. ஒரு பள்ளிக்கோ, கல்லூரிக்கோ கட்டிடங்களை உருவாக்கித்தரும் அரசு தொடர்ந்து அதை பராமரிப்பதற்கான, சீரமைப்பதற்கான பணிகளைப் பெரும்பாலும் செய்வதில்லை. அடிப்படைப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதுமில்லை. மேலும் அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆண்டுதோறும் கூடும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் உருவாக்கப்படுவதில்லை. தூய்மையற்ற கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதன்மூலம் நோய் தொடர்ந்து ஏற்படும். தொலைநோக்கில் பார்க்கும்பொழுது பள்ளி, கல்லூரிகளின் தூய்மையற்ற கழிப்பிடம் என்பது மாணவர்களின் உடல்நலம், உளநலம், கல்வி, எதிர்காலம் போன்றவற்றைப் பாதிப்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.
உலக அளவில் நவம்பர் 19 உலகக் கழிவறை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இச்சிக்கலின் முக்கியத்துவத்தை உணர்ந்தே இந்நாள் கொண்டாடப்படுகிறது. இதில் உண்மையான அக்கறை கொண்டு சீர்படுத்தினால் கல்வி என்பது உள்ளும் இனிமையாக இருக்கும். புறமும் இனிமையாக இருக்கும். புதிய ஆரோக்கியமான உலகம் உருவாகும்.
முனைவர் ஜ. பிரேமலதா
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தற்காலக் கல்வி முறை: பகுதி -10”