மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முகநூல்(facebook) மற்றும் கட்செவி அஞ்சல் (whatsapp) பயன்படுத்தலாமா?

சௌமியன் தர்மலிங்கம்

Apr 30, 2016

nalla kaalam1

“மனித மூளையை ஒடுக்கி சிந்தனைத் திறனை மழுங்கச் செய்பவை – முகநூல்(facebook) மற்றும் கட்செவி அஞ்சல் (whatsapp)“

நான் மேலே எழுதியிருக்கும் அந்த இரட்டை மேற்கோள் இட்ட  வரிகளைத் தொடர்ந்து  மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்து உங்கள் மூளையில் பதிவேற்றிக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளில்  என்ன அவ்வளவு சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா, அது தான் அறிவியல் விஞ்ஞானம் தற்போது நமக்குக் கொடுத்துள்ள சமீபத்திய ஆய்வின் முடிவு. நமது அன்றாட வாழ்க்கையை பாதிப்பதிலும் இவை பெரும்பங்கு வகிக்கிறது என்ற உண்மையை எவரும் மறுக்கமுடியாது.

உலகத்தில் இந்த இரண்டு செயலியையும் முதலில் அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் நம் இந்தியாவும் இருக்கிறது. இரண்டாம் இடம் என்றவுடன் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டாம், ஏனென்றால் இது பொருளாதார வளர்ச்சியோ, வளர்ச்சியில் தன்னிறைவோ  கிடையாது. சரி, நாம் விடயத்திற்கு வருவோம்.

இந்த இரண்டும் ஒரு “உயிரற்ற நுண்செயலி மென்பொருள்”. நன்றாக யோசித்துப் பாருங்கள் இந்த facebook மற்றும் whatsapp இரண்டும் உயிரற்றவை. இதை நாம் நன்கு உள்ளும் புறமும் அறிவோம். ஆனால் அப்படி இருந்தும் கூட இவை இரண்டும் மனித மனங்களுக்கு பெரிய அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது, அதே போல யாரும் அறியா வண்ணம் நமது வாழ்வில் தேவையற்ற பழக்கத்தைப் புகுத்திக்கொண்டு இருக்கிறது.

nalla kaalam2

தூக்கம் கெடுப்பது, குடும்ப உறவில் விரிசல், மனச்சோர்வு, கோபம், வெறுப்பு, தெரியாதவரிடம் பேசக்கூடாது எல்லாம் பேசி நமக்கு நாமே வினையை உருவாக்கி துன்பப்படுவது என்று மேலும் சில ஆபத்துக்களுக்கு நம் அறியாமையால் இவற்றைப் பயன்படுத்துவதே காரணம். இந்த இரண்டும் தகவல் பரிமாற்றம் என்ற ஒரு நோக்கத்தில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் அதைத்தவிர எல்லாம் அங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

நமக்குக் கிடைத்த சொற்ப ஓய்வு நேரங்களில் அதை பயன்படுத்த ஆரம்பித்து, பிறகு அவை நமது நேரங்களை சாப்பிட ஆரம்பித்துவிடும் அளவிற்கு நேரவிழுங்கி, அவை இரண்டும். சரி விடுங்கள் கவலை வேண்டாம், அதில் இருந்து நாம் எளிதில் வெளியில் வந்துவிடலாம் அல்லது அந்தக் குறைகளை இப்பொழுதே நிவர்த்தி செய்தாகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்த வரை தெரிந்த நண்பர்களை மற்றும் உறவினர்களை மற்றும் அதில் இணைப்பில் வைத்திருங்கள். தெரியாத நபரிடம் குடும்ப விடயங்களையும், உங்கள் விபரங்களையும் தெரிவிக்காமல் இருப்பது நலம். கவிதையோ, கதையோ, அரசியலோ  உங்களுக்கு எந்தவிதமான பொழுதுபோக்கு பிடிக்குமோ அவ்வித எழுத்தாளுமை கொண்ட நண்பர்களை இணைப்பதற்கு பதிலாக, அதில் பல பக்கங்கள் தகவலுக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் அதில் விருப்பம் தெரிவித்தல் நலம். இதே போல அமைப்புகளை மாற்றி அமையுங்கள், அதாவது உங்கள் புகைப்படம் மற்றும் தகவல்களை பிறர் பார்க்காவண்ணம் செய்யலாம். அதே போல அதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நாளோ அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரமோ செலவழியுங்கள். நேரம் முடியும் தருவாயில் ஒரு அலாரத்தை வையுங்கள் அதே நேரம் அலாரம் அடித்தவுடன் கண்டிப்பாக வெளிவர முயற்சி செய்து பழகுங்கள்.

அங்கு நேர விரயம் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க விடுமுறை நாட்களில் தங்கள் ஒருவாரத்திற்கான வேலை நிமித்தமான தரமான ஒரு காலஅட்டவணையை தயார் செய்யலாம். அதே போல செடி நட்டுப் பராமரியுங்கள். பிடித்த துறை ரீதியான புத்தகங்கள் படிக்கலாம், ஏனென்றால் ஒருவருக்கு அறிவையும் சிந்தனையும் பெருக்குவதில் புத்தகத்திற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை. வீட்டில் உள்ளவர்களோடு நாட்டுப் பொருளாதாரம் பற்றிப் பேசி அப்படியே மெதுவாக வீட்டு நிதி நிலைமையையும் பட்டியலிட்டு வீண் செலவுகளைக் குறைக்க அட்டவணை தயாரியுங்கள். குடும்பத்தில் உள்ள நபர்களின் தேவைக்கு அதிகமாக ஏற்படும் செலவுகள் அவ்வாறு பட்டியலிடுவதின் மூலம் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. மனம் விட்டுப் பேசுவது இதற்குப் பெரும் தீர்வையும் கொடுக்கும். பாருங்கள் சமூகத்தில் ஆரம்பித்து உளவியல் வரை வந்தாயிற்று. இது தான் நியதியும் கூட. ஒரு சமூகம் என்பது பல  குடும்பத்தைச் சேர்ந்ததுதான், மேலும்  நீங்கள் குடும்பத்தை சரி வர கவனிக்காததன் விளைவுதான் உடல்நலத்தில் குறைவு, மன நலத்தில் குறைவு, பொருளாதாரம், நிதி என எல்லா பிரச்சனைகளையும் உங்களை வந்தடைவதற்கு முக்கியக் காரணம். ஏனென்றால் குடும்பம் அனைத்துடனும் நேரடித் தொடர்பு கொண்டது.

“சமூகத்தைக் காப்போம் சமூக வலைத்தளத்தை சரியாகப் பயன்படுத்தி”.


சௌமியன் தர்மலிங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முகநூல்(facebook) மற்றும் கட்செவி அஞ்சல் (whatsapp) பயன்படுத்தலாமா?”

அதிகம் படித்தது