மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாம் வாழ யானைகள் வாழவேண்டும்!

சா.சின்னதுரை

Jun 25, 2016

Siragu elephant2கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானையும், வனத்துறையால் பிடிக்கப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண் யானையும் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நம் கண் முன்னே செழித்து வாழ்ந்த ஓர் உயிரினம் நம் வாழ்நாள் காலத்திலேயே உலகத்திலிருந்து முற்றிலும் மடிவதை சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? நாட்டின் வளம் காட்டு வளத்தில் அடங்கியிருக்கிறது. அந்த காட்டின் வளம், யானைகளிடம்தான் அடங்கியிருக்கிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. மற்ற உயிர்கள் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்க நமக்கு அதிகாரம் கிடையாது. அதையும் மீறி காட்டுயிர்கள் மீது இப்படி வன்முறை நிகழ்த்துவது, நமக்கு கூடுதலாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆறாவது அறிவைப் பற்றி கேள்வியை எழுப்புகிறது.

Siragu elephant3யானை ஒரு விலங்கு. அதன் மனதில் உணவுத் தேடலும், தண்ணீர் நாடலும், காட்டு வழித்தடத் தேவையும்தான் ஒரே நோக்கமாக இருக்கும். சொத்து சேர்ப்பதல்ல, அகப்பட்டதைச் சுருட்டுவதல்ல. காட்டுத் தீவனம் கிடைக்காத வகையில் தடுக்கப்படும்போது, பசியால் உந்தப்பட்டு, வேறு வழியின்றி, உயிரைப் பணயம் வைத்து துணிவான முயற்சியை எடுக்கிறது யானை. இதில் குறுக்கீடு செய்யும் மனிதனுடன் மோதும் நிலையில் இரு தரப்பிலும் தற்செயலாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனே, சிறிதும் பகுத்தறிவின்றி பிரச்சனை ஊதிப் பெரிதாக்கப்பட்டு “யானைகள் அட்டகாசம்’’ எனத் தூற்றப்படுகின்றன.

நாம் திட்டமிட்டு காடுகளை அழிக்கும்போது, அதன் வழித்தடங்களை ஆக்கிரமிக்கும்போது, அந்த யானைகள் என்ன செய்யும்…? உண்மையில் பாரம்பரியமாக அவை உலவி வந்த பகுதியிலேயே காட்டுயிர்கள் இன்றும் உலவி வருகின்றன. ஆனால், நாமோ அவற்றின் இடத்தைப் பிடித்துக் கொண்டு அவற்றின் மீதே குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறோம். இங்கே நாமும் நிம்மதியாக வாழ வேண்டும், யானைகளும் வாழ வேண்டும்.

காடுகள் பெரிதாக இருந்தபோது போதுமான உணவு கிடைத்தது. சுருங்கிய பிறகு உணவு பற்றவில்லை. தண்ணீர் போதவில்லை. அதனால்தான் அவைகள் காட்டைவிட்டு கிராமத்துக்குள் வருகின்றன. வாழ்வதற்கு மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தனை உரிமைகளும் விலங்குகளுக்கும் இருக்கின்றன. அவை மறுக்கப்படும்போது மனிதனின் உரிமையை விலங்குகள் பறிக்க நேரிடுகிறது. மனித தொல்லைகளுக்கு உள்ளாகும் காட்டு விலங்குகளில் யானையே முதலிடம் வகிக்கிறது என்று ‘ஆசிய யானைகள் பாதுக்காப்பு அமைப்பு’ கூறுகிறது.

Siragu elephant4உயிர்ச் சேதம் ஈடு செய்ய முடியாதது. மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் இன்று நேற்று அல்ல, காலங்காலமாக இருந்து வரும் ஒன்று. சமீப காலமாக இந்த எதிர்கொள்ளல் அதிகரித்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கான காரணங்களில் முக்கியமானவை மக்கள் தொகைப் பெருக்கம், காடழிப்பு, விவசாய முறைகளில் மாற்றம், கள்ள வேட்டைமுதலியவைதான் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

யானைகள் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் காட்டும் அடையாளமாகக் கருதப்படுகிறது. காட்டு விலங்குகள் அழியாமல் பாதுகாக்க வேண்டுமானால் காடுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில் காடுகளில் யானைகள் தான் வழித் தடங்களை உருவாக்குகிறது. இதனை பயன்படுத்தியே மற்ற விலங்குகள் காட்டின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் சென்று தங்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. மேலும் இந்த வழித் தடங்களை பயன்படுத்தியே அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பான பகுதிகளுக்கு எல்லா காட்டு விலங்குகளும் இடம் பெயர்கின்றன. காட்டின் உருவாக்கத்திலும் அதன் உயிர்ப்பிலும் யானைகளின் பங்கு மகத்தானது.

காடுகளை ஆக்கிரமிக்கும் மனிதனின் பேராசையால் ஒரு இனமே அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. காடுகள் அழிவதால் மழை குறைந்து மனித இனமே அழியும் ஆபத்து இருந்தாலும் யாரும் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

Siragu elephant1யானைகள் ஊருக்குள் புகுந்து இடையூறு செய்வதாக வெளியிடப்படும் செய்திகளில், மனிதர்கள் காடுகளில் நுழைந்து செய்யும் இடையூறுகள் எதுவும் சொல்லப்படுவதில்லை. யானைகளின் வாழ்க்கையில் ஒரு பெரும் பிரச்சனையே மனிதன்தான். இதை யானைகளும் புரிந்து கொண்டிருக்கின்றன.

மனிதர்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பில் அதற்கு இல்லை, மாறாக மனிதர்களிடம் இருந்து விலகிச் செல்லவே விரும்புகின்றன.

காட்டுவிலங்குகளின் அழிவு காடுகளை மட்டும் பாதிப்பதில்லை. மனிதனையும் பாதிக்கிறது. ‘ஒரு யானை அழிந்தால், அதனைச் சுற்றியுள்ள காடுகளில் 16 வகையான முக்கிய தாவரங்கள் அழிந்து போகும்’ என யானை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காடுகளை அழிவில் இருந்து காப்பற்றி வரும் ஒரே உயிரினம் யானைகள் மட்டும் தான் . யானைகளின் இனம் அழியும் என்றால் அது இந்த உலகத்தின் மூச்சு காற்றை நிறுத்துவதற்கு சமம்.

யானை இனப் பாதுகாப்பில் ஊடகங்களின் நிலை, வருந்தத்தக்க நிலையே. பொது ஊடகங்கள் மக்களை கொல்ல வந்த கொடூர மிருகமாக யானைகளை சித்தரித்து மிகைப்படுத்தாமல், பிரச்சினையை அறிவியல்பூர்வமாக உணர்ந்து பொறுப்புடன் செய்தியை வெளியிடவேண்டும்.

காடுகளையும், காட்டுயிர்களையும் காக்க வேண்டியது நம் கடமையும் அரசின் கடமையும்தான். அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநில அரசு, தனது மாநிலத்தில் வசிக்கும் மக்களை மட்டுமல்லாது விலங்குகளையும் பராமரிக்க வேண்டும்.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாம் வாழ யானைகள் வாழவேண்டும்!”

அதிகம் படித்தது