ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

நேர்காணல் – திரு.உதயகுமார்

ஆச்சாரி

Dec 31, 2011

கூடங்குளம் போராட்டம் மக்கள் போராட்டம் எனக் கூறும்  போராட்டக் குழுவின் முதன்மையானவர் உதயகுமார் அவர்களுடனான நேர்காணல்

சிறகு – கூடன்குளம் போராட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

உதயகுமார் - கூடன்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் – அந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே நடந்து வருகிறது. 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருவதையே தவிர்த்தார். 1989 ஆம் ஆண்டு   மே ஒன்று அன்று கன்னியாகுமரியில் ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடந்தது. இப்படி இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே மக்கள் எதிர்த்து வருகிறார்கள். அதன் பிறகு பல இயக்கங்களில் பல்வேறு வழிகளில் இந்தத் திட்டம் எதிர்க்கப்பட்டது. மதுரையைச் சேர்த்த பெரியவர் டேவிட் அவர்கள் தலைமையில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது, கல்லூரி மாணவனாக இருந்த நான் group for peacefull Indian occen என்ற ஒரு அமைப்பில் செயல்படத் தொடங்கி அதன் மூலம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து, பல விதமான போராட்டங்களில் கலந்து கொண்டோம்.

2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டேவிட் அவர்கள் தலைமையில் மதுரையில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அமைப்பினைத் தொடங்கினோம். அதற்கு முன்பும் பல போராட்டங்கள் நடந்தன. ஆனால் அப்படிப் போராடிக்கொண்டிருந்த மக்களை ஒன்று திரட்டி இந்த மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது, இன்றைக்கு 10 வருடங்கள் கழித்து அந்த இயக்கம் பேரியக்கமாக வளர்ந்திருக்கிறது. மத்தியிலோ மாநிலத்திலோ எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் நாங்கள் இந்தக் கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து வந்திருக்கிறோம். காரணம் கூடங்குளம் அணு மின் நிலையம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய பெரும் நிலையம். இந்தியாவில் உள்ள மற்ற அணு மின் நிலையங்கள் எல்லாம் 200 , 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கின்ற சிறிய நிலையங்கள். இந்த கூடங்குளம் அணு மின் நிலையம் இந்தப் பகுதி மக்களின் வாழ்வுரிமையை – வாழ்வாதாரத்தை நசுக்கிவிடும் என்ற எண்ணத்தால் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்,

உண்ணா நோன்புகள், துண்டு பிரசுரம் விநியோகித்தல், ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் என பல போராட்டங்களை நாங்கள் நடத்தி வந்திருக்கிறோம். 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் எதுவுமே நடக்காமல் இருந்து திடீரென்று இந்த அணு மின் நிலையம் வேலை செய்யப்போகிறது என்று சொன்னார்கள். சமீபத்தில்தான் ஜப்பானில் புக்குஷிமா என்ற இடத்தில் அணு பதிப்பு ஏற்பட்டு மக்களெல்லாம் அலறித் துடித்தனர். இந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது மக்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எங்கள் இயக்கமும் மக்களோடு கை கோத்து இந்தப் போராட்டம் இரண்டு மூன்று மாதங்களாக நடத்திக் கொண்டிருக்கிறோம். இதைப் பார்க்கிறவர்கள் – ஏன் இதற்கு முன் எதிர்க்கவில்லை என்று ஆகாயத்தில் பந்தல் கட்டியது போல பேசுகிறார்கள். ஆழமான அடித்தளத்தை உருவாக்காமல் மக்கள் மத்தியில் சிறந்த பரப்புரை செய்யாமல் இப்படிப்பட்ட ஒரு வலிமையான போராட்டத்தை நடத்துவது முடியாது என்பது அரசியலில் ஈடுபட்டவர்களுக்குத் தெரியும்.

எங்கள் போராட்டத்தை மீனவ மக்கள் கலந்து கொள்ளும் போராட்டம் சொல்லி கொச்சைப்படுத்தினார்கள். அருகே உள்ள ஊர்களில் இருந்து  போல சாதி மக்களும் வந்த பிறகு அந்த பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது. அதைப் போல  கிறிஸ்தவர்கள் நடத்துகின்ற போராட்டம் என்று சொன்னார்கள் – இன்று பல மதத்து மக்களும் கலந்து கொள்ளும் சர்வ மதப் போராட்டமாக மாறியிருக்கிறது. இது. தி.மு.க.- அ.தி.மு.க. அரசுக்கு எதிராக தூண்டுகின்ற போராட்டம் என்று  சொன்னார்கள் அதையும் நாங்கள் முறியடித்தோம். பின்னர் தொண்டு நிறுவனங்கள் நடத்துகின்ற போராட்டம் என்றார்கள். இந்தியாவிலோ எந்த சர்வதேச தொண்டு நிறுவனத்திடமோ நாங்கள் பணம் வாங்கவில்லை என்று சொல்லி உறுதியாக மறுத்து நாங்கள் நிலைப்படுத்திய பிறகு அந்த வெற்றுப் பேச்சும் வீணாகிப்போனது. அதன் பின்னர் , அந்நிய நாட்டு சக்திகள் எங்கள் பின்னால் இருந்து ஆட்டுவிக்கிறார்கள் என்று பலரும் பேசினார்கள். இந்திய அணுமின் கழகத்தின் தலைவர் டாக்டர் ஜெயின் அவர்களும் – இது போன்ற ஒரு குற்றச்சாற்றை நான்கு நாடுகள் பெயர் சொல்லி –பிரான்சு, பின்லாந்து, ஆஸ்திரேலியா, அமேரிக்கா, இந்த நான்கு நாடுகள் எங்களுக்கு உதவுவதாகவும் அங்கே இருப்பவர்கள் எங்களை ஆட்டுவிப்பதாகவும் ஒரு அப்பட்டமான- அவர் வகிக்கும் பதவிக்குப் பொருத்தமற்ற ஒரு குற்றச்சாற்றை எங்கள் மீது வீசியிருக்கிறார். அண்மையில் இந்தப் பகுதிக்கு வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அந்நிய சக்திகள் தூண்டுவதாக ஒரு குற்றச்சாற்றைக் கூறியிருக்கிறார்.

அமேரிக்கா, ருசியா, பிரான்சு, தென்கொரியா, கசகஸ்தான், நமீபியா என்று ஏறக்குறைய 15 நாடுகளோடு ரகசிய ஒப்பந்தம் இயற்றியது மத்திய அரசு. இங்கே போராடும் நாங்கள் எந்த நாட்டு நிறுனங்களோடும் இணைந்து செயல்படவில்லை. எந்த நாட்டிலிருந்தும் பத்து காசு கூட வாங்கவில்லை என்பதை நான் திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன். வெளிநாட்டு நண்பர்கள் கூட எங்களுக்கு உதவவில்லை. நாங்கள் பெறுவதில்லை. எங்கள் போராட்டத்தை இந்தப் பகுதியில் உள்ள சாதாரண சாமானிய மக்கள் வழி நடத்துகிறார்கள். அதற்கு வேண்டிய பொருளாதார உதவிகளை அவர்கள்தான் செய்கிறார்கள். அந்த மக்கள் –தங்களின் வாழ்வுரிமையும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடாது – எதிர்கால சந்ததிகள் எந்த மண்ணில் அவர்களின் பேரைச் சொல்லி  வாழ வேண்டும் என்பதற்காக போராடுகிறார்கள்.

மக்கள் அரசியலை புரிந்து கொள்ளாத அல்லது மறந்துவிட்ட சில அரசியல்வாதிகள் அழுக்கான அசிங்கமான குற்றச்சாற்றுகளைச் சொல்லி அடக்க முடியாதா என்று கொக்கரிக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. வருத்தமும் பரிதாபப்படவும் வேண்டியது. மக்கள் தெளிவடைந்துவிட்டார்கள். இது ஒரு புரட்சி. பாரதி சொல்வானே ‘’ எழுந்தது பார் யுகப் புரட்சி’’ என்று. அதைப் போல ஒரு யுகப் புரட்சி தொடங்கியிருக்கிறது. சாமானிய மக்கள் எழுந்து நிற்கிறார்கள் . அவர்களை சாதி, மதப் பெயர்களைச் சொல்லிப் பிரித்தாள்வது நிச்சயமாக முடியாது. இந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் –அவர்களின் தேவை என்ன என்று அவர்களிடம் நேரடியாகப் பேசி அவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்துகொடுத்தால் நல்லது.

இந்தப் போராட்டம் சாதாரண மக்களால் தொடங்கப்பட்டு சாதாரண மக்களால் நடத்தப்படுகிறது. பல தொழில்நுட்பம் வாய்ந்த நாடுகள் அணு உலையை மூடிவிட்டு இயற்கை வழிகளிலே மின்சாரம் தயாரிக்க முற்படுகிறார்கள். ஜெர்மனி, இத்தாலி நாடுகளில் 95 சதவித மக்கள் அணு உலை வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். சுவிட்சர்லாந்தில் இரண்டு லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு அணு சக்திக் கொள்கையை மாற்று என்கிறார்கள். பெல்ஜியம் நாட்டில் ஆறு அணு உலைகளை கடந்த வாரம் மூடியிருக்கிறார்கள். அமெரிக்காவிலோ ருசியாவிலோ இதுவரை புதிய அணுமின் நிலையம் கட்டப்படவில்லை. இப்படி உலகம் ஒரு வழியிலே போய்க் கொண்டிருக்கும்போது எங்களை நசகாரமான வழியில் இழுத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது,

இங்கே வந்திருந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்- மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் – அணு சக்திதான் வளமான இந்தியாவுக்கு வழிகோலப் போகிறது என்று சொல்லி – அவர் உயர்ந்த இடத்தில் இருந்தவர் இப்படிப் பேசலாமா? அரசியல்வாதிகளும் தேசிய தலைவர்களும் மக்களின் எண்ணங்களை- உணர்வுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். மாற்று வழியில் மின்சாரம் தயாரிப்போம். இந்தியாவை வெளிநாடுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமையாக்காதீர்கள். இந்தியாவை உலக அரங்கில் தலைமை நாடாக மாற்றுங்கள். மாற்று வழியில் மின்சாரம் தயாரிப்போம். சூரிய ஒளி மூலமும் காற்றாலைகள் மூலமும் மின்சாரம் தயாரிப்போம். காலனி சித்தாந்தங்களை விடுத்து இந்தியவை உலக தலைமை நாடாக எடுத்துச் செல்லுங்கள்- நாங்கள் உறுதுணையாக இருப்போம். எங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம். எங்களோடு பேசுங்கள். எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பிரான்சுக்கும் அடிமையான இந்தியா வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

சிறகு-

கல்பாக்கம் மற்றும் உலகம் எங்கிலும் உள்ள அனைத்து அணு உலைகளும் போதிய பாதுகாப்பின்றி ஆபத்துடந்தான் இயங்கிக்கொண்டுள்ளனவா?

உதயகுமார்-

இந்தியாவில் பல அணுமின் நிலையங்களில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. விபத்துகள் நடந்திருக்கின்றன. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் எத்தனையோ பேர் இறந்திருக்கிறார்கள். சிறிய சிறிய விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆபத்து இல்லாத அணுமின் நிலையம் இருக்க முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற அணுமின் நிலையங்கள் சிறியவை. அங்கே விபத்து நடந்தால் கூட பெரிய இழப்பு வராது. கூடன்குளம்தான் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கின்ற அணுமின் நிலையம்.

கல்பாக்கம் நான் போயிருக்கிறேன். கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து வெளியிடப்படுகின்ற குளிர்விப்பான் நீர் கடலுக்குள் கொட்டப்படுகிறது. அங்கு கடலின் வெப்பம் அதிகமாகி மீன் வளம் குறைந்திருப்பதாக அங்குள்ள மீனவர்கள் சொல்கிறார்கள். அங்கு கிடைக்கும் மீனுக்கு விலையே கிடையாது. காரணம் மக்கள் விரும்பி வாங்கவில்லை. அங்கிருக்கும் மீனவ சகோதரிகளை நான் சந்தித்தேன். பலருக்கும் தைராய்டு நோய் பாதித்திருக்கிறது. ஒரு சகோதரி – தன் கழுத்தைத் தொட்டுப் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். அந்த கழுத்துப் பகுதி கல் போல இருந்தது. அந்த சகோதரியை நல்ல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கும் நிலை கூட இல்லை. ஏராளமான புற்று நோய்கள். ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கின்றன. இப்படி அந்த கல்பாக்கம் பகுதி மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அங்கு போனால் எல்லோருக்கும் தெரியும். கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள் – இங்கு எதுவுமே நடக்கவில்லை, ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லி தொலைக்காட்சிகளில் கூறுகிறார்கள். நான் அவர்களோடு விவாதித்து இருக்கிறேன். பல தொலைக்காட்சி  அங்கு போய் மக்களை சந்தித்து அதைப் பரப்பியிருக்கிறார்கள். எனவே அணுமின் திட்டம் என்பது ஆபத்தான திட்டம். அதில் சந்தேகமில்லை. உலக நாடுகளெல்லாம் அதைத்தான் சொல்கின்றன. மாற்று வழியில் மின்சாரம் தயாரியுங்கள் மாற்று இந்தியாவை உருவாக்குங்கள்.

சிறகு-

அணு சக்திக்கு எதிராக தீவிரமாகக் களமிறங்கியிருக்கும் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்வில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா?

உதயகுமார்-

நிச்சயமாக. நான் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு காரணமே- என்னுடைய நான்கு தத்தா பாட்டிகளில் மூன்று பேர் புற்று நோயால் இறந்தார்கள். குறிப்பாக என் அம்மாவின் அம்மா. நான் சிறுவனாக இருக்கும்போது அந்த பாட்டியுடன்தான் உறங்குவேன். அந்தப் பாட்டி கன்னத்தில் புற்று நோய் வந்து அது முற்றிப் போய் தவறான அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கன்னத்தில் ஓட்டை விழுந்து அது புண்ணாகி நாற்றமெடுத்து வீட்டுக்குள்ளேயே பாட்டி இருக்கும் அறைக்குள் என்னை விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இப்படிப் பல வடுக்களை மனதிலே ஏற்படுத்தியிருக்கிறது.

எந்த பாட்டியுடன் நான் தூங்குவேனோ அந்த பாட்டியின் அருகிலே கூட செல்ல முடியாத நிலையில் அவர் இருந்தார். அது என்னை மிகவும் பாதித்தது. அன்றுமுதல் புற்று நோயால் வேதனைப்படுபவர்களைப் பார்க்கும்போது நான் குலைநடுங்கிப் போவேன். அந்த நோயால் இனி யாரும் துன்புறக்கூடாது என்று நான் ஆழமாக நினைப்பவன். இந்த அணுமின் நிலையத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாழும் குழிக்குள் விழக்கூடாது என்று இந்தப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியிருப்பதற்கு ஒரு காரணம்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “நேர்காணல் – திரு.உதயகுமார்”
 1. pirabu says:

  பல ஆண்டுகள் என்கிறார். 1989க்கு பிறகு 2001 -க்கு தான் ஆரம்பிக்கிறார். //

  எந்த நெரத்தில் அறிவு வந்தால் என்ன?.

  தனது சொந்த எம்.பிக ளுக்கு லஞ்சம் கொடுத்து அணு மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு பண பலத்தில் இயஙுகுகிறதா?. இல்லை உதயகுமார் பணபலத்தில் இயன்குகிறதா?

  முரளிதரன் போன்றவர்கள் அணு உலையை பாராளுமன்றத்திற்கு அருகில் வைக்க போராடுன்கள்.

 2. kondrai vendhan says:

  அணு உலையில் பாதுகாப்பு என்பது பம்மாத்து தான். மீண்டும் மீண்டும் பாதுகாப்பு என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தான். செர்னோபில் சொல்வது என்ன ? அதற்கு நம் விஞானிகள் சொல்வது என்ன ? அதை மட்டும் பாராமல் சோவியத் வல்லரசு சொல்வதையெல்லாம் கேட்டால் எப்படி இன்னும் 20 ஆண்டுகளில் உங்கள் வல்லரசு கனவு மெய்ப்படும் ? அணு உலைகளால் பெறப்படும் மின் அளவை விட காற்றாலைகள் அதிகம் தருவது இந்திய அரசு ஆவணங்கள் சொல்லும் உண்மை. இதை மறைத்து அணு ஆயுத உற்பத்திக்கு முயலும் கயமைக்கு நாம் பலியாகக்கூடது. நண்பர்கள் உணர வேண்டும்.

 3. நீச்சல்காரன் says:

  அணு உலையை மூடச் சொல்வதைவிட பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி போராடலாம்.

 4. muralitharan says:

  இதில் உள்ள பதிலை நன்கு படித்தால் ஒரு உணமை விளங்கும்.
  எதையுமே அவரால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. எல்லாம், பல, பல எனக்கூறுகிறாரே தவிர அந்த பல என்ன எனக்கூறவில்லை.

  பல ஆண்டுகள் என்கிறார். 1989க்கு பிறகு 2001 -க்கு தான் ஆரம்பிக்கிறார். இதன் இடையில் எத்தனைப் போராட்டம், எது எதற்காக நடத்தினார். பத்லில் இல்லை. மேலும் அந்த ஆரம்ப கால போரட்டங்கள் எல்லாம்,அவர்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீட்டிற்கானததுதான். வேறல்ல.

  மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு பற்றிக் குறிப்பிடுகிறார். அது எவ்வாறு இதன் தொடர்புடையது என தெளிவில்லை. கன்யாகுமரியில் நடந்த துப்பாக்கிச் சூடு இதன் பொருட்டல்ல.இரு மீனவ குழுவிற்கு இடையே நடந்த ஒரு கலவரமே காரணம்.

  திரு.அப்துல் கலாம் அவர்களைப் பற்றியும் இன்னபிற நபர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.அவர்கள் கூறியதில் தவறு என்ன என அவரால் சுட்டிக்காண்பிக்கப் படவில்லை.

  புற்றுநோய் பற்றிக் குறிப்பிடுகிறார்.ஆனால் அந்த புற்றுநோய் அணு உலையால்தான் உண்டானது என சான்றிட்டு கூறமுடியவில்லை.

  வலுவற்ற வாதங்களைக் கொண்டு, பண பலத்தின் பின்னணியில் அவ்விடத்து மக்களை இயக்குகிறார் என புலனாகிறது.

அதிகம் படித்தது