மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மக்கள் – ஆட்சி – அரசு (மீள்பதிவு)

ஆச்சாரி

Apr 30, 2016

தமிழகத்தின் மக்களாட்சி மக்களின் ஆட்சியா?

உலகில் அரசு தோன்றிய நாட்களிலிருந்து இன்று வரை அமைந்த அரசு அமைப்புகளிலே, மக்களாட்சி முறை தான் சிறப்பானதாகக் கருதப்படுகிறது 1970 ஆம் ஆண்டுகளில், நாற்பது நாடுகளில் மட்டும் பின்பற்றப்பட்ட மக்களாட்சி, முறை இன்று  நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மக்களாட்சி முறை பின்பற்றப்படாத நாடுகளில் வாழும் மக்களும் மக்களாட்சி முறைக்கு மாறிவிடவே விரும்புகின்றனர். இன்று பல நாடுகளில் அதற்கான போராட்டங்களும் நடந்து வருகின்றன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து நம் நாட்டிலும் மக்களாட்சி முறையைத்தான் பின்பற்றி வருகிறோம்.

மக்களுக்கான அரசு, மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்டு, நடத்தப்படுவது தான் மக்களாட்சியின் சிறப்பு. ஆனால் நடைமுறையில் நமது மக்களாட்சி அப்படி செயல்படுவது இல்லை. மக்களாட்சியில் மக்களாகிய நாம் தான் முதன்மையானவர்கள். ஆனால் ஆட்சி, அதிகாரம் கையில் கிடைத்தவுடன் தம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு விரோதமாகவே அரசாங்கங்கள் செயல்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசு மக்களுக்காக செயல்படுவது அரிதாகிவிட்டது. தவறான அதிகார பிரயோகம்,  ஊழல், நிர்வாக திறமையின்மை போன்றவை தலை தூக்குகிறது.

மக்கள் அரசை தேர்ந்தெடுத்தாலும், நடத்தப்படும் அரசாங்கத்தை கண்காணிக்காமல் முதல் படியான தேர்ந்தெடுப்பதோடு தமது கடமையை முடித்துக் கொள்வதால் வரும் பாதக விளைவுகளே மேலே குறிப்பிட்டவை ஆகும்.

ஐந்து வருடத்திற்கான அரசர்களைத் தேர்ந்தேடுப்பதையே, நாம் மக்களாட்சி என்று நடத்திக் கொண்டிருக்கிறோம். நாம் பின்பற்றும் பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை சுயநலம், பேராசை, தந்திரம் போன்ற தீய குணங்களிடம் தோல்வி அடைகிறது. நமது மக்களாட்சியில் ஏராளமான குறைகள் காணப்படுகின்றன, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய பெருங்கடமை நமக்கு உள்ளது. இன்றைய சூழ்நிலைகளுக்கேற்ப நமது மக்களாட்சி முறையை செப்பனிட வேண்டியிருக்கிறது. அரசை தேர்ந்தெடுப்பதோடு மட்டுமின்றி அரசின் செயல்பாடுகளிலும் மக்களுக்கு நேரடி பங்கு இருக்கும் போது தான் மக்களாட்சியின் பலனை முழுமையாக அடைய முடியும்.

“மக்களாட்சி என்பதில் ஆள்பவன் ஒரு சாதாரண குடி மகனாக இருக்க வேண்டும். அல்லாமல், பெரும் செல்வந்தனாக இருக்க கூடாது – கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில்” என்ன ஒரு தெளிவான சிந்தனை. இன்றைய நாளில் பெரும் செல்வந்தன் தான் தேர்தலில் நிற்க முடியும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. இன்றைய மக்களாட்சி உண்மையான மக்களாட்சியாக இல்லாமல், சில பத்திரிகைகள் குறிப்பிடுவது போல் போலி மக்களாட்சியாக இருப்பதற்கு, இதுவே முழுமுதற்காரணம். இன்றைய அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர் இதற்கு விதி விலக்கு. இவர்கள் மக்கள் படும் துயரங்களையும், மக்களின் அன்றாடத் தேவைகளையும் எங்ஙனம் அறிந்து பூர்த்தி செய்வார்கள் – விசா , கலிபோர்னியா.

ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது, ஐந்து ஆண்டிற்கான முக்கிய திட்டங்களையும் அரசியல் கட்சிகளிடம் இருந்து, தேர்தல் ஆணையம் பெற்று, தொகுத்து, மக்கள் வாக்கிற்கு விடவேண்டும். மக்களால் வரவேற்கப்பட்ட திட்டங்களை முன்னின்று செயல்படுத்துவதே தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் பணியாக இருக்கவேண்டும். மாநில, மாவட்ட, ஊரக அளவிலான முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்களை மக்களின் வாக்கிற்கு ஒவ்வொரு வருடமும் உட்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சதவிகித மக்கள் ஆதரவு கையொப்பத்துடன், மக்களாகவே முன்வந்து பரிந்துரைக்கும் திட்டங்களை அரசு அலசி, ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களை விலக்கி கொள்வதற்கும் மக்களுக்கு வாய்ப்புகள் இருப்பது அவசியம். (அப்ப கட்சி யாவாரத்தை கலைச்சுட்டு வேற யாவாரம் பாக்க போக வேண்டியது தான்).

இதைப் போன்று  மக்களுக்கு தேவையான திட்டங்களை மக்களே தேர்தெடுக்கும் அல்லது வல்லுனர்களால் பரிந்துரை செய்யப்படும் திட்டங்களுக்கு வாக்களிக்கும் முறை வரும் போது அரசியல்வாதிகள் சுயநலத்திற்காகக் கொண்டுவரும் பணவிரயமாகும் திட்டங்களை தவிர்க்க முடியும். மேலும் ஒரு அரசு கொண்டுவரும் திட்டங்களை பின்வரும் அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக கைவிடுவதையும் தவிர்க்க இயலும்.

நம் மக்களாட்சி முறையில் அதிகாரம் அதிகமில்லாத தொகுதிப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் தான், மக்கள் முடிவு செய்யமுடிகிறது. அதிகாரம் குவிந்து கிடக்கும் அமைச்சர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க முடிவதில்லை (பாக்கவே முடியலையாம்) அமைச்சர் பதவி மதிப்புமிக்க ஒரு வியாபார பொருளைப் போன்று பல காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற, அதிருப்தி தலைவர்களை அமைதிப்படுத்த, பெரும் வர்த்தக நிறுவனங்களின் லாபத்திற்கு உதவ, குடும்ப உறுப்பினர்களை திருப்திப்படுத்த என்று இது போன்ற காரணங்களின் அடிப்படைகளில் தான், நமது அமைச்சரவைகள் முடிவு செய்யப்படுகின்றன. தவறானவர்கள் அமைச்சராக்கப்படுவதால் ஏற்படும் எண்ணிலடங்கா பேரிழப்புகள் நாம் அனைவரும் அறிந்ததே. இதை அன்றே திருவள்ளுவர் அறிவுறுத்தியிருக்கிறார்.
“பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.”

(பொருள்: தவறான எண்ணம் கொண்ட ஒரு அமைச்சரை விட எழுபது கோடி எதிரிகளே மேல்)


தொகுதி பிரதிநிதிகளைப் போன்று அமைச்சர்களையும் மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வழி செய்யப்பட வேண்டும்.  அரசியல் கட்சிகளின் சார்பாகவும், சுயேச்சைகளாகவும் அமைச்சர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக போட்டியிடட்டும். மக்களே ஒவ்வொரு துறைக்கும் பொருத்தமான அமைச்சர்களை நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுத்து கொள்கிறோம். ஒரே அமைச்சரவையில் பல கட்சிகளை சார்ந்த திறமையான அமைச்சர்கள் அமைந்தால் நம் நாட்டிற்கு மிகுந்த பலனளிக்கும். இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசியல்வாதிகளின் அனுபவமற்ற வாரிசுகள் அமைச்சராகுவது போன்ற அவலங்களை தவிர்க்கலாம்.

தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தலில் தனித்து போட்டியிட விரும்புவதில்லை. கூட்டணி அமைத்தே அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றன. மக்களும் கூட்டணியின் அடிப்படையிலேயே கட்சிகளை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்கின்றனர். ஆனால் சில நேரங்கள் அரசியல் கட்சிகள் தேர்தல் முடிவிற்கு பின் ஆட்சியமைப்பதற்காக குதிரை பேர அடிப்படையில் கூட்டணிகளை மாற்றிக்கொள்கின்றன. இது கூட்டணிக்காக வாக்களித்த மக்களின் முடிவிற்கு எதிரானதாகும். தேர்தலில் போட்டியிட்ட கூட்டணியின் அடிப்படையிலேயே ஆட்சி நடப்பது தான் மக்கள் விருப்பமாக இருக்கும். கூட்டணி மாற்றங்கள் நிகழ்ந்தால் மீண்டும் தேர்தலை சந்திப்பதே நியாயம்.

மக்கள் நலனில் அக்கறையில்லாத பிரதிநிதிகளை மக்கள் திரும்ப பெறுவதற்கு வழி இல்லாமல் இருப்பது நம் மக்களாட்சியில் உள்ள பெரிய குறைபாடு. பத்து சதவிகித மக்கள் பிரதிநிதியை திரும்ப பெறுகிறோம் என்ற கையொப்பமிட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தால், தேர்தல் ஆணையம் அக்கோரிக்கையை பொதுவாக்கிற்கு விடவேண்டும். ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் ஒரு பிரதிநிதியை திரும்பப் பெறுவதற்கு வாக்களித்தால் அப்பிரதிநிதியின் பதவி முடிவடைய வேண்டும். ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளாகும் தொகுதி பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களை இதன் மூலம் உடனடியாக மக்களே பதவியிறக்க இயலும்.

நம் மக்களாட்சி முறையில் இது போன்ற மாற்றங்கள் தற்போது மிக அவசியமாக தேவைப்படுகின்றது. இன்றைய காலகட்டங்களில் ஆண்டுக்கொருமுறை மக்களை வாக்களிக்க வைப்பது சிரமமானதல்ல. நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இதை எளிதாகாவும் குறைந்த பொருட்செலவிலும் சிறப்பாக செய்யலாம். இது போன்ற முன்னேற்றங்கள் மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான இடைவெளியை வெகுவாகக் குறைக்க உதவும்.

மனிதனின் கண்டுபிடிப்பில் மகத்தானது மக்களாட்சி. சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்ய மக்களாட்சியே முறையானது. இதை உணர்ந்து, மக்கள் விழித்துக்கொண்டு தங்கள் வாக்குகளின் மூலம் உயர்ந்த எண்ணம் கொண்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பெரிய மக்களாட்சி நாடு என்பதை விடுத்து சிறந்த மக்களாட்சி நாடு என்று மாறுவதற்கு முயல்வோம். நல்லாட்சி அமைப்போம்.

ஜூன் 3, 2011 அன்று வெளிவந்த இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “மக்கள் – ஆட்சி – அரசு (மீள்பதிவு)”
  1. Thamizh Valan says:

    மிக அருமையானக் கருத்துகள், இதை எவ்வாறு செயல்படுத்துவது, இதற்கான விழிப்புணர்க்கு மக்களை ஆயத்தப்படுத்துவோம்.

  2. விசா says:

    முக்கியகாக, அமைச்சர்கள் பற்றிய உங்களது பார்வை கட்டுரையின் சிறப்பம்சமாக உள்ளது. வித்தியாசமான கோணத்தில் படிப்பவர்களின் சிந்தையை தூண்டும் விதத்தில் உள்ளது.

    அதேபோல் கூட்டணிகள் பற்றிய உங்கள் கருத்தும் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

  3. தியாகு says:

    கட்டுரை நன்றாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வக்காளிப்பர்களா , அதோடு மட்டும் இன்றி பண விரயமாகுமே ( ஆனால் ஊழல் பணத்தை விட இதில் ஆகும் செலவு பன் மடங்கு குறைவு )

    குற்றம் சட்ற்றபட்ட யாரும் மக்கள் பிரதி நிதியாகவோ அல்லது அமைச்சராகவோ இருக்க முடியாது , நீதி துறையிலும் மாற்றம் வேண்டும், வழக்குகளை 2 மதத்திற்குள் கட்டாயம் முடிக்க வேண்டும் என்ற சட்டம் வேண்டும். அப்படி இருப்பின் அமைச்சரை நீக்க, மக்கள் ஓட்டு தேவை இல்லை. நீதி துறையில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும் . அனைத்திற்கும் மக்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை ( குறிப்பாக ஊழல் பேய்களை விரட்ட).

  4. gandhi says:

    ஆணியடித்தாற்போல கருத்துக்கள்.
    ௧) ஆட்சியைப் பிடிப்பதற்காக கூட்டணி என்றால் மறு தேர்தல்.
    ௨) மக்கள் விரும்பினால் தேர்தெடுத்த உறுப்பினரை நீக்கலாம்.
    ௩) மக்கள் ஆட்சியில் மக்கள் தான் எசமானர்கள்.

அதிகம் படித்தது