மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மதிப்பெண் வாங்கிக் குவிக்கும் இயந்திரமல்ல மாணவர்கள்

சித்திர சேனன்

Jul 4, 2015

madhippen1அது என்னவோ தெரியவில்லை, சில வருடங்களாகவே மாணவர்களுக்கு, பெற்றோராலும், ஆசிரியர்களாலும், உறவினர்களாலும், கூடப் பழகும் நண்பர்களாலும் அறிவுரை என்ற பெயரில், “நீ பத்தாவது படிக்கப் போகிறாய்?, நீ பன்னிரெண்டாவது படிக்கப்போகிறாய்?, இதுதான் உன் வாழ்வை முடிவு செய்யும் படிப்பு. ஆதலால் கண்டிப்பாக நீ பத்தாவதில் 500க்கு 501ம், பன்னிரெண்டாவதில் 1200க்கு 1201ம் எடுத்தால்தான் நல்ல நிலைமைக்கு (அதாவது எதிர்காலத்தில் நோகாமல் கோடி கோடியாய் உட்கார்ந்து சம்பாதிக்கும் வேலையைப் பெற முடியும்) வர முடியும். ஆதலால் படி படி படி” என்ற முழக்கத்தில் மாணவர்களின் மூளையே குழம்பி, அவர்களை மூலையில் கூட படுக்கவிடாமல் செய்துவிடுகின்றனர்.

முன்பெல்லாம் ஒருவர் 100க்கு 60, 70 மதிப்பெண் பெற்றாலே, ‘அடேயப்பா.. நீ பெரிய படிப்பாளிதான்!’ என மூக்குமேலே விரலை வைத்து, நாக்கு நோகப் பேசுவார்கள். அதன் பிறகு மதிப்பெண் ஏறுமுகமாக… இப்போதெல்லாம் மாணவர்கள் சர்வ சாதாரணமாக 95% மேல் வாங்குகிறார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு வரை 85% எடுத்தால் இருந்த மதிப்பு, இப்போது அவ்வளவாக இல்லாமல் போனது.

madhippen2நூற்றுக்கு 99 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவரின் தந்தை, ஏன் இன்னும் ஒரு மதிப்பெண் பெறவில்லை என்று கூறி மேலும் அம்மாணவனை நோகடிக்கும் செயல்கள் பல இடங்களில் நடக்கிறது. ஒரு வகுப்பில் எல்லா மாணவர்களுமா 100க்கு 100 எடுக்க முடியும்? இதில் சுமாராகப் படிப்பவர்களும் இருப்பார்களே. அப்படி என்றால் 50 மதிப்பெண் பெற்றவன் எதற்கும் உபயோகமில்லாதவன் எனக் கூறிவிடமுடியுமா?. ஒரு மாணவன் ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண் எடுக்காமல் இருக்கலாம், ஆனால் ஓவியத்தில் அவன் முதல் மாணவனாக இருப்பான், விளையாட்டில் முதல் மாணவனாக இருப்பான். இந்த ஒரு திறமையைக் கொண்டு அவனால் அவன் எதிர்காலத்தை சிறப்பானதாக்கிக் கொள்ள முடியும்.

“இன்றைய நிலையில் மாணவர்கள் பெறும், வெறும் மதிப்பெண்களை மட்டுமே வைத்து ஒருவர் திறமைசாலியா? இல்லையா? என முடிவு செய்யக்கூடாது. “100 மதிப்பெண் எடுப்பதனாலேயே ஒருவர் வாழ்வில் முன்னுக்கு வந்துவிட முடியாது” என்ற ஒரு கருத்தை மும்பையைச் சேர்ந்த ப்ரத்தமேஷ் ஜெயின் என்ற மாணவர் கூறியுள்ளார். இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 தேர்ச்சி பெற்ற பத்து மாணவ-மாணவியரில் ஒருவர். இவர் கூறும் கருத்தில் எவ்வளவு ஆழம் உள்ளது, சமூக அவலம் உள்ளது என்பதை நாம் சற்றே சிந்திக்க வேண்டும்.

தம் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிரமப்படாமல் கைநிறைய சம்பாதிக்க வேண்டும், வெளிநாடு சென்று செல்வந்தர்களாக வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடே “ஒழுங்காப்படி, நல்ல மதிப்பெண் எடு” என பெற்றோரும் ஆசிரியரும் உதிர்க்கும் வசனங்கள்.

madhippen4இன்று வெறும் மதிப்பெண்களை மட்டும் வைத்தே ஒரு மாணவன் அறிவாளி என்று முடிவு செய்யலாமா?, என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இந்த மதிப்பெண் மனநோய், இன்று நாடெங்கும் பலரின் சிந்தனையில் கொழுந்து விட்டு எரிகிறது. இதன் விளைவால் இன்று தமிழகத்தில் உள்ள பல தனியார் கல்விக்கூடங்களில், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 10வது பாடம் நடத்தப்படுகிறது. 11வது வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 12வது பாடம் நடத்தப்படுகிறது. இதில் தினந்தோறும் தேர்வு வைக்கின்றனர். மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்தாலும் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் இரவு 7,8 மணி வரை பாடம் நடத்தியும், தேர்வு வைத்தும் இன்றைய மாணவர்களின் மூளையையும், மனதையும் கசக்கிப் பிழிந்து விடுகின்றனர்.

சரி, பள்ளி சிறப்பு வகுப்பு முடிந்துவிட்டதே என மாணவர்கள் வீட்டிற்குச் சென்றதும், தயாராக இருக்கும் பெற்றோர்கள், “எங்கே இன்று என்ன பாடம் நடத்தினார்கள்?, என்ன பரீட்சை எழுதினாய்?, மதிப்பெண் என்ன?” எனக்கேள்வி கேட்பதோடு நிற்காமல், “தொலைக்காட்சி பார்க்காதே, பாட்டு கேட்காதே, விளையாடாதே, போய் படி” என ஒரு தனி அறையில் சிறைப்படுத்தி வைத்து விடுகின்றனர். அவ்வப்போது தேநீர், பால், Boost, Bournvita, Complan என சுறுசுறுப்பு குழம்பிகள் கொண்டு வந்து நீட்டுவார்கள். இரவு 11 மணி வரை படித்து முடித்து தூங்கியதும் மீண்டும் காலை 4 அல்லது 4.30 மணிக்கு எழுப்பி “ம்..  பல் துலக்கு, தேநீர் குடி” என அதட்டல் வசனங்கள் அவனை தொந்தரவுபடுத்தும்.

இவ்வாறு 10வது, 12வது படிக்கும் மாணவர்களை, சிறைக்கைதியை விட மோசமாக நடத்தி வரும் கொடிய செயல்களின் கூடாரமாக வீடும், பள்ளிக்கூடமும் மாறி வருகிறது. இந்தக் கொடிய தொல்லைகள் வருடம் முழுதும் தொடரும். தேர்வுக்குப் பின் தேர்வுமுடிவு அன்று இவன் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா? இதோ இப்படித்தான்.

madhippen5

குறிப்பு: (இவை ஊடகங்களில் வந்த உண்மையான செய்திகள்)

  • கணித பாடத்தில் தோல்வி, 10ம் வகுப்பு மாணவி தற்கொலை.
  • தலைமை ஆசிரியர் கண்டித்ததால், 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை.
  • 10ம் வகுப்புத் தேர்வில் தோல்வி- மாணவி வீட்டை விட்டே ஓட்டம்.
  • 2வில் தோல்வி விரக்தியில் மாணவன் தற்கொலை.
  • 10ஆம் வகுப்பு மாணவர் தேர்வில் தோல்வி – நச்சு அருந்தி தற்கொலை.
  • 2வில் இரண்டு பாடத்தில் தோல்வி- மாணவி தூக்கிட்டு தற்கொலை.
  • 10வதில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை.

பெற்றோரும் ஆசிரியரும் ஒரு வருடம் படுத்தி எடுத்த கொடுமையின் பரிசே மேற்கண்ட நிகழ்வுகள். மாணவர்களை மனத்தால் பயமுறுத்தி, எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை ஏற்படுத்தி, மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இறுதியில் இறக்க வைக்கும் இம்சை மாணவர்களுக்குத் தேவையா? என பெற்றோரும் ஆசிரியரும் சற்றே சிந்திக்க வேண்டும். மதிப்பெண் எடுத்தால்தான் மறுவாழ்வு உண்டு என்ற மாயையை தோற்றுவித்த அறிவாளி யார்? தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவனே முன்னேறுவார், தோல்வி அடைந்தவர் அறிவற்றவர்கள் எனவும், வாழத்தகுதி இல்லாதவர்கள் எனவும் இச்சமூகம் ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் கூறியிருந்தார்…

madhippen7பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடன் படித்த மாணவர்களைப் பார்க்கும் போது… வகுப்பில் முதல் மாணவனாக வந்த மாணவர் உள்ளுரில் அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தாராம், சுஜாதா சுமாராகப் படிக்கும் மாணவராம். இவர் BHEL-இல் மிக உயரிய பணியில் இருந்தாராம். ஆனால் அடிக்கடி தேர்வில் தோல்வி அடைந்து மிக மோசமாக படிக்கும் மாணவன் ஒருவன் ஐ.நா. சபையில் வேலை பார்க்கிறாராம். அவ்வளவு ஏன்? உலக பணக்காரர் பில்கேட்ஸ் கல்லூரியை நிறைவு செய்யவில்லை, ஆனால் அவர் வாழ்வில் அடைந்த இலக்கோ மிகப்பெரியது.

நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்தான். தெருத்தெருவாக செய்தித்தாள் போட்டவர்தான். பின்னாளில் குடியரசுத் தலைவராக இந்திய அளவில் உயர்ந்தார்.

“படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு

பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு”

என படிக்காத மேதை திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகளில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் அறிந்துகொண்டு, படிப்பு மட்டுமே வாழ்வல்ல, வாழ்வில் ஓர் அங்கமே படிப்பு என்பதை உணர்ந்து, படிக்கும் மாணவர்களை மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாற்றாமல், அந்த வயதில் அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தோடு படிக்கவைத்தால், மாணவர்கள் இயந்திரங்களாக இல்லாமல் மனிதனாக வாழ்பவர்கள் ஆவார்கள். அதற்கு இச்சமூகம் ஒத்துழைப்பு நல்கி உதவினால் உலகில் தொடமுடியாத எல்லையை தமிழ் மாணவன் தொடுவான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதிப்பெண் வாங்கிக் குவிக்கும் இயந்திரமல்ல மாணவர்கள்”

அதிகம் படித்தது