மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மனிதநேயம் கூறும் ஓர் அறிவியல் புதினம்

தேமொழி

Dec 7, 2019

தமிழில் அறிவியல் படைப்புகள் வெளியிடுபவர் எண்ணிக்கை குறைவு. அறிவியல் அடிப்படையில் கற்பனை செய்து அறிவியல் புதினம் உருவாக்குவோர் எண்ணிக்கை அதனினும் மிக மிகக் குறைவு. ஜூல்ஸ்வெர்ன், எச்.ஜி. வெல்ஸ் போன்ற மேலைநாட்டு அறிவியல் புதின எழுத்தாளர் போன்ற ஒரு படைப்பாளிகள் வரிசை தமிழ் மொழியில் இல்லை. அறிவியல் புதினம் என்றால் எழுத்தாளர் சுஜாதா பெயர் மட்டுமே அனைவருக்கும் சட்டென நினைவு வரும் அளவிற்கு ஒரு வறட்சி நிலை தமிழ் இலக்கியத்தில்.

siragu 13aam-ulagil-oru-kadhal-book-cover

தனது “13ஆம் உலகில் ஒரு காதல்” என்ற நூலின் மூலம் இக்குறையை நீக்க முயன்றுள்ளார் இ.பு.ஞானப்பிரகாசன். இவர் ‘நமது களம்’ இணைய இதழில் துணையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பல இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டில் நடத்தும் ‘Pen to Publish 2019′ போட்டியில் கலந்துகொண்டு ஆசிரியர் எழுதியுள்ள இந்த நூலை அவர் தமது முதல் புதினம் என்று குறிப்பிட்டாலும் விறுவிறுப்பாகக் கதை சொல்லும் எழுத்தின் நடையும், தொய்வில்லாது கதையை நடத்திச் செல்லும் பாங்கும் ஒரு சிறந்த அறிவியல் புதின எழுத்தாளர் தமிழ் இலக்கிய உலகில் உருவாகியுள்ளார் என்றே கட்டியம் கூறுகின்றன.

உலகம் தழுவிய மனிதநேயம் கொண்டாட விரும்பும் ஒரு தமிழ்ப்பற்றாளரின் அறிவியல் கற்பனை அதையன்றி வேறெதைக் கதையின் கருவாகக் கொண்டிருக்கும்? கதையின் தலைவி மகிழினி எடுக்கும் முடிவு உலகம் கடந்த மனிதநேயத்திற்கான ஓர் எடுத்துக்காட்டு. ஞானப்பிரகாசனின் தாய்மொழிப் பற்றும் தமிழினக் கனவுகளும் அத்துடன் இணைந்ததில் 13ஆம் உலகமான வேற்றுலகில் வாழும் மனிதர்களின் நலனுக்காக, அவர்களின் அறிவியல் ஆய்வுகளுக்காகத் தன்னையே ஒப்புக்கொடுக்கவும் தயங்காதவளாக மகிழினி உருவாகியுள்ளாள்.

siragu author

“மகிழினி அவன் கையை உதறி விட்டுப் பறக்கும் தட்டின் உடைந்த சன்னல் வழியாக வெளியே பாய்ந்தாள்!” என்று ஆர்வமூட்டும் துவக்கத்துடன் கதை துவங்கிப் பின்னோக்கிச் சென்று அவள் அந்த முடிவெடுக்க என்ன காரணம் என்று கூறும் கதை அமைப்பு.

துறு துறுப்பும், அறிவுக்கூர்மையும், துணிச்சலும் நிரம்பிய இதழியல் மாணவி மகிழினி தனது பயணத்தின் இடையில் பல ஆண்டுகளாகச் சென்றிராத தனது சொந்த கிராமமான கோட்டைப்பட்டினத்தில் உள்ள தாத்தா பாட்டியின் வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு இயற்கை உழவில் ஈடுபாடு கொண்டுள்ள விவசாயக் கல்லூரிப் பட்டதாரியான தனது சிறுவயதுத் தோழன் மதியைச் சந்தித்து, அவனுடன் சென்று ஊரில் உள்ள தனது மற்ற சிறுவயது தோழர்களையும் சந்தித்து அளவளாவி மகிழ்கிறாள். “முதல் கேள்வியே தப்பு. ஏலியன்ஸ் இருக்காங்களான்னு கேக்கக்கூடாது. எங்க இருக்காங்கன்னு கேளு!” என்று கூறும் ஓய்வுபெற்ற அறிவியல் பேராசிரியரான மதியின் தாத்தாவையும் சந்திக்கிறாள்.

மீண்டும் அவள் தொடர்வண்டியில் தனது பயணத்தைத் தொடர்கையில் மகிழினி வேற்றுலகில் வாழும் மனிதர்களால் கடத்தப்பட்டுவிட்டாள் என்பதை மதியின் தாத்தா கண்டுபிடித்து மகிழினியைக் காப்பற்ற முயல்கிறார். அவருடன் சென்ற மதி தனது காதலி மகிழினியைக் காப்பாற்ற தானும் வேற்றுலகிற்குக் கடத்தப்படும் திட்டத்திற்கு முன்வருகிறான். வேற்றுலகின் அரசியல் போராட்டத்திலும் சிக்கிக்கொண்டு இருவரும் பகடைக்காய்களாகவும் மாறுகிறார்கள்.

மகிழினியின் நோக்கம் நிறைவேறுகிறதா? மதியின் காதல் வெற்றிபெறுகிறதா? என்பதுதான் கதையின் முடிவு. மகிழினியைக் காதலிக்கும் மதி அவள் நலனுக்காகத் தன்னையும் தனது வாழ்வையும் பணயம் வைக்கத் தயங்காத வீரத் திருமகனாகச் சுடர் விடுகிறான். கதை மாந்தர்களின் பெயர்கள் நல்ல தமிழ்ப் பெயர்களாக மகிழினி, மதி எனவும், அதிலும் வேற்றுலக மனிதர்களின் பெயர்கள் ழகரன், கொற்றவன், இன்முகை, கமழ்நன், செழினி, மின்மதி என தூய தமிழ்ப் பெயர்களாக அமைந்தாலும் அவையாவும் கதையின் கருவினால் சிறப்பாகக் கதையில் பொருந்தி விடுகிறது.

“மனித இனம் இங்க பாதுகாப்பா வாழறதுக்காக, பல காலத்துக்கு முன்னாடியே யாரோ அணுகுண்டு வீசி அதுங்களை அழிச்சிருக்காங்க” என்று அறிவியல் தாத்தா கூறும் டயனோசார்களின் அழிவு குறித்த ஊகம் பரிணாமவியல் காலக்கோட்டில் நெருடுகிறது. டயனோசார்களின் அழிவுக்குப் பிறகு சுமார் 65 மில்லியன் ஆண்டுகள் கடந்த பின்னரே புவியின் மனித இனம் தோன்றியது என்பதே அறிவியல்.

தமிழி எழுத்து, சீன அதிபரின் மாமல்லை வருகை, ஐயப்பன் கோயிலில் நுழையப் பெண்களுக்குத் தடை, ஈழப்போர் என்ற தற்கால நிகழ்வுகளை ஒட்டிய செய்திகள் இடம் பெறுவது ஆர்வத்தைக் கதையில் ஊன்ற வைக்கிறது. “பேரலல் வேர்ல்டுங்கிறீங்க? அப்புறம் எப்படி இவ்ளோ பெரிய டிஃபரன்ஸ்?” என்று மகிழினி கேட்கையில், தமிழ்பேசும் வேற்றுலகின் மனிதர், “அதற்குக் காரணம் தாய்மொழிப் பண்பாட்டை மறக்காத எங்கள் வாழ்க்கை முறை. சாதி, சமயம் எல்லாம் வேண்டா என்று பெரியார் என்று ஒருவர் வந்து சொல்லும் வரை நீங்கள் கேட்கவில்லை” என்று விளக்கம் கூறுவது கருத்தைக் கவரும் ஒரு குறிப்பு.

“இரவு வானம், பஞ்சு மெத்தை மேலே மறந்து விட்டுப் போன கைப்பேசி போல் முழு நிலா மேகத்தில் படுத்துக் கிடக்க” என்ற கற்பனையும், “ஒரே நேரத்தில் அத்தனை பேரையும் கொத்தாகக் கைது செய்யுங்கள்! குண்டுகள் தீர்ந்து போனால் அப்புறம் துப்பாக்கியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. எளிதாகக் கைப்பற்றலாம்” என்ற உவமையும் ஆசிரியரின் எழுத்துத் திறனுக்குச் சான்றுகள்.

மனிதர்கள் வேற்றுலகிற்குக் கடத்தப்படும் நோக்கம் குறித்து மகிழினியும் மதியும் வேறு வேறு மனிதர்களால் விளக்கம் பெறும்பொழுது அதைத் திரைப்படப் பாணியில் வெட்டி வெட்டி வெவ்வேறு காட்சிகளாக அமைக்கும் பாணியை ஆசிரியர் பயன்படுத்தியுள்ள முறை, இக்கதை திரைப்படமாக உருவாக்கப்பட்டாலும் சிறப்பாகவே அமையும் என்ற எண்ணத்தை எழுப்பத் தவறவில்லை. கதையும் தமிழ்ப்பட மசாலாக் கூறுகளுடனும் சிறப்பான கதைமாந்தர்கள் உருவாக்கமும் கொண்டுள்ளதாகவே அமைந்துள்ளது.

கற்பனைக்கு எடுத்தாண்ட கதையின் திருப்பங்களும் நிகழ்வுகளும் ஏரண அடிப்படையிலும் அறிவியல் அடிப்படையிலும் பொருந்துகின்றன. மேலும் நமக்கு வரக்கூடிய ஐயங்களைக் கதை மாந்தர்களே கேட்டுத் தெளிவு பெறும் வகையில் விளக்கம் தரும் முறையும் ஒரு சிறப்பான முயற்சி. நம்பிக்கை தரும் வகையில், பாராட்டப்படவேண்டிய எழுத்து நடையில், சிறப்பாகக் கதை கூறும் அறிவியல் புதின எழுத்தாளர் ஒருவர் உருவாகியுள்ளார் என நாம் மகிழலாம், இ.பு.ஞானப்பிரகாசனுக்குப் பாராட்டுகள்.

புதினம் குறித்து:

13ஆம் உலகில் ஒரு காதல்

ஆசிரியர்​​: ​இ.பு.ஞானப்பிரகாசன்

பக்கங்கள்​​:​89

பதிப்பகம்​​: ​கிண்டில்

முதல் பதிப்பு​​: ​நவம்பர் 2019

விலை: $0.99 / ₹49.00

https://amzn.to/2qFuL4z


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மனிதநேயம் கூறும் ஓர் அறிவியல் புதினம்”

அதிகம் படித்தது