மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முல்லை பெரியாறுக்கு முன்

ஆச்சாரி

Jan 1, 2012

கேரளாவின் எந்த மூலையில் சென்றும் அங்கிருக்கும் ஒரு குழந்தையிடம் முல்லைப் பெரியாறு அணை பற்றி கேட்டுப் பாருங்கள், விரைவில் ஒரு நாள் அணை உடைந்து விடும், நாங்கள் எல்லோரும் வெள்ளத்தில் சிக்கி இறந்துவிடுவோம் என்று படபடப்புடன் கூறும். அந்த அளவிற்கு கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை பற்றிய விழிப்புணர்வு பரப்பப்பட்டிருக்கிறது. அவர்களின் பரப்புரையை 1979 இல் மலையாள மனோரமா பத்திரிக்கையில் வெளிவந்த “மேற்கு தொடர்ச்சி மலையில் மற்றொரு மார்வி” என்கிற கட்டுரையிலிருந்து தொடங்கிவிட்டனர். குஜாரத்தில் மார்வி அணை உடைந்ததைப் போன்று முல்லைப் பெரியாறு அணையும் உடையப்போகிறது என்று அன்று அவர்கள் பற்ற வைத்த தீ இன்று கொழுந்து விட்டு எரிகிறது. தொடர்ந்து செய்திகளாலும், கேலிச் சித்திரங்களாலும், குறும்படங்களாலும், அரசியல் கட்சிகளின் போராட்டங்களாலும் மக்களின் மனதில் பயத்தை ஆழமாகப் பதிய வைத்திருக்கின்றனர். அவர்களின் பரப்புரையின் உச்சகட்டமே டேம்999 திரைப்படம். இரண்டு மணி நேர திரைப்படத்தால் இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கியிருக்கின்றனர். இன்று கேரளாவின் எந்த பகுதியிலும் பொது இடத்தில் உரக்கத் தமிழில் பேச அஞ்ச வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விட்டனர்.

தமிழகத்தில் ஆண்டுக்கொரு முறை செய்தித்தாள்களில் அடிபடும் சுவாரசியமற்ற செய்தியாகவே முல்லைப் பெரியாறு அணை இதுவரை பார்க்கப்பட்டு வந்தது. தற்போதும் கூட கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதன் எதிர்வினையாகத்தான் எல்லையோர மாவட்ட மக்கள் கொதித்தெழுந்திருக்கின்றனர். இன்னும் மற்ற மாவட்டங்களில் மக்கள் போராட முன்வரவில்லை. முல்லைப் பெரியாறு பாசனத்தால் பயன்பெறும் பல பகுதிகளில் கூட இன்னும் மக்கள் முழுமையாக களம் இறங்கவில்லை. நம் மாநில அரசின் அதிகாரமும், உச்ச நீதி மன்ற தீர்ப்புகளும் தோல்வி அடைந்துவிட்ட இந்த சூழ்நிலையில், நமது கடைசி ஆயுதம் பெருந்திரள் மக்கள் சக்தியே. ஏழு கோடி தமிழர்களும் ஒன்றாகக் களம் இறங்கினால் தான் மத்திய அரசு சிக்கலின் தீவிரத்தை உணரும். ஒரு மாவட்டத்தில் மக்கள் கேரளாவிற்குச் செல்லும் பேருந்துகளை மறித்துக் கொண்டிருக்கையில், மற்ற மாவட்டங்களில் இருந்து தொடர் வண்டிகளிலும், சரக்கு வாகனங்களிலும் கேரளாவிற்கு உணவுப் பொருட்கள் செல்வது நம் மக்கள் இன்னும் முழுமையாக சிக்கலின் தீவிரத்தை உணரவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழர்கள் அனைவரும் முல்லைப் பெரியாறின் அவசியத்தை உணர்ந்திருந்தால் இன்று கேரளாவின் சந்தைகளில் என்ன விலை கொடுத்தாலும் உணவு கிடைக்காது. கேரள மக்களுக்கு அணையை விட அரிசி முக்கியம் என்பதை இந்நேரம்  உணர்த்தியிருக்கலாம்.

தமிழர்களிடையே விழிப்புணர்வை ஊட்ட கடைசி சந்தர்ப்பம் இது. தற்போது ஏற்பட்டிருக்கும் எழுச்சி அலையைப் பயன்படுத்தி எளிதாக மற்ற மக்களும் அணையின் முக்கியத்துவத்தை உணரும் வண்ணம் பரப்புரை செய்யவேண்டும். தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், சமுக இயக்கங்களும், விவசாய சங்கங்களும், தொண்டு நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் தங்களால் இயன்ற வழிகளில் மக்களுக்கு முல்லைப் பெரியாறு அணையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதற்காக மலையாளிகளைப் போன்று கோடிகளைக் கொட்டி பொய்களை கலந்து திரைப்படம் தயாரிக்க வேண்டியதில்லை. நம் பக்கம் இருக்கும் உண்மையை நம்மைச் சுற்றி இருப்போருக்கு உரக்கச் சொன்னாலே போதும். முல்லைப் பெரியாறு அணை இல்லாவிடில் நாம் சந்திக்க வேண்டியிருக்கும் பஞ்சத்தை எடுத்துரைத்தாலே போதும். அணை உடைக்கப்பட்ட பின் எதிர்காலத்தில் வரப்போகும் பஞ்சத்தை கற்பனையோடு கூறவேண்டிய அவசியம் கூட இல்லை. அணை கட்டப்படுவதற்கு சற்று முன் நம் முன்னோர்கள் சந்தித்த பஞ்சத்தை விளக்கினாலே கல் மனம் கூட கண்ணீர் விடும். இந்த பெரும் பஞ்சத்தின் பாடமாகவே ஆங்கில அரசு நூறு ஆண்டுகளாக கருத்தளவில் இருந்த முல்லைப் பெரியாறு அணை கட்டும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முடிவு செய்தது.


மாதம் மும்மாரி பொழிகிறதா அமைச்சரே என்று கேட்கும் மன்னர் ஆட்சியில் வாழும் மக்களைப் போன்றே 1800 களில்  ஆண்டுதோறும் தவறாமல் வரும் மழையை நம்பியே மக்கள் வாழ்ந்தனர். உபரியாக வழியும் மழை நீரை சேகரிக்கவும் அதிகமாக விளைந்த தானியத்தை பதப்படுத்தி சேகரிக்கவும் பெரிய அளவிலான வசதிகள் இல்லாத காலம் அது. ஒவ்வொரு பகுதி மக்களும் அந்தந்த பகுதிகளில் விளையும் தானியங்களையும், தொழில்களையும் கொண்டு தன்னிறைவாக வாழ்ந்தனர். அக்கால மக்களின் கட்டமைப்பையும் வாழ்க்கை முறையையும் சோதிக்கும் ஆண்டாக 1876 வந்தது. வழக்கமாக தாராளமாகப் பெய்யும் தென்மேற்கு பருவமழை அந்த ஆண்டு சில மாவட்டங்களில் வெறும் தூரலுடனும், பல மாவட்டங்களில் அதுவும் கூட இல்லாமல் பொய்த்துப் போனது. தென்மேற்கு பருவமழை அவ்வப்போது இது போன்று பொய்த்துப் போகும்போது குளிர் காலத் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை வந்து காப்பாற்றும். ஆனால் அந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துப் போனது மக்கள் எதிர்பாராதது. 1876 ஆம் ஆண்டு முழுமைக்கும் 6.3 அங்குலம் மழையே பெய்திருந்தது. அதற்கு முந்தைய வருடங்களில் சராசரியாக 27.6 அங்குலம் மழை பெய்வது வழக்கம். அடுத்த ஆண்டும் பருவமழைகள் மிகவும் குறைந்த அளவே பெய்தது தமிழர்களை வரலாறு காணாத வறட்சியில் ஆழ்த்தியது. அளவிற்கதிகமான வெப்பம், வறண்ட நிலங்கள், காய்ந்த புதர்கள், அனல் காற்று வீசி எங்கும் புழுதி மண் பறக்க சென்னை மாகாணத்தின் பல பகுதிகள் பாலைவனம் போன்று காட்சியளித்தன.

விவசாயம் பொய்த்துப் போகவே உள்ளூர் சந்தைகளில் தானியங்களின் வரத்து முற்றிலுமாக நின்று போனது. விற்க தானியமற்று கடைகள் மூடிக்கிடந்தன. பெருமுதலாளிகள் ஆங்கிலேயரின் உதவியுடன் வடமாகாணங்களில் இருந்து தொடர்வண்டிகளிலும், பர்மாவிலிருந்து கப்பல்களிலும் தானியங்களை கொண்டுவந்திறக்கினர். ஆனால் அவற்றைப் பதுக்கி கள்ளச்சந்தையில் மூன்று, நான்கு மடங்கு கொள்ளை விலையில் விற்றனர். உயர்ந்த விலைகளில் விற்பதற்காக மிக குறைந்த நேரமே பெரு முதலாளிகள் கடைகளை திறந்தனர். சாதாரண காலங்களில் ஒரு ரூபாய்க்கு பதினனைந்து கிலோ அரிசி கிடைத்தது போய், நான்கு கிலோ மட்டுமே வாங்கமுடியும் என்ற நிலை வந்தது. அதேபோன்று ரூபாய்க்கு நாற்பது கிலோ கிடைத்த சோளம், விலை உயர்வால் ரூபாய்க்கு ஆறு கிலோ மட்டுமே கிடைத்தது. (எளிதாக புரிந்து கொள்வதற்காக எடையை மாற்றி கிலோ கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது). இறக்குமதி பண்ணப்பட்ட தானியங்களை அனைத்து ஊர்களுக்கும் கொண்டு செல்வதில் பெரும் சிக்கல்கள் நிறைந்திருந்தன. அதனால் பல இடங்களில் பணம் இருந்தாலும் தானியங்கள் வாங்க இயலாத சூழ்நிலைகள் இருந்தன. சென்னை நகர நெரிசலான சாலையில் பசியால் வாடி உயிர்விட்டிருந்த ஒருவரின் சடலத்தில் பல ரூபாய் நோட்டுக்களை (அந்த காலத்தில் இது மிக அதிக பணம்) கண்டறிந்ததாக காவல் துறை வெளியிட்ட செய்தி, பணமிருந்தாலும் உணவு வாங்க இயலாது என்கிற அச்சத்தை மக்கள் மனதில் உருவாக்கியது.

மூன்று வேளை தினம் உணவருந்திய மக்கள், படிப்படியாக உணவைக் குறைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு வேளை உணவருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிலும் தானியங்கள் வாங்க இயலாத மக்கள் காடு மலைகளில் கிடைக்கும் கிழங்கு கொட்டைகளைத் தேடி சமைத்து உண்டனர். நஞ்சு என்று ஒதுக்கப்படும் ஒரு வகையான காட்டு கூம்புக் கிழங்குகளை (ஆங்கிலத்தில் இதை Sauci root என்று எழுதியிருக்கிறார்கள்) கூட மூன்று நாட்கள் வேக வைத்தால் நச்சுத்தன்மை இறங்கி விடும் என்ற நம்பிக்கையில் வேகவைத்து உண்டனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மெக்குகே மக்கள் எறும்பு புற்றுகளைத் தேடி அதிலிருந்து தானியங்களை எடுத்து உண்பதைப் கண்டதாக வருத்தத்துடன் கூறி இருக்கிறார். பழக்கமில்லாத உணவினாலும், சில நச்சுள்ள காய், கொட்டை, கிழங்குகளை உண்டதாலும் பலர் நோயுற்று இறந்தனர்.

வயல் வேலைகள் அற்ற நிலையில், கடைகளனைத்தும் மூடப்பட்ட நிலையில், பருத்தி, நூல் சார்ந்த தொழிற்சாலைகளும் முடங்கிய நிலையில் மக்கள் வேலை வாய்ப்பினை முழுதாக இழந்தனர். வருமானமற்ற நிலையில் நகைகள், பாத்திரங்கள், ஆடு மாடுகள், துணிகள், வீட்டு கதவு, ஜன்னல்கள் என்று அனைத்தையும் விற்று பெரும்பாலான மக்கள் நாடோடிகளாயினர். கிராமங்களை காலி செய்து மக்கள் சாரை சாரையாக நடை பயணமாக பெரு நகரங்களை நோக்கி வேலைதேடிச் சென்றனர். கொடிய வெப்பத்தில் உணவும் நீரும் இன்றி நெடு நாட்கள் நடப்பது அனைவருக்கும் இயன்ற செயலல்ல. வயதானவர்களும், குழந்தைகளும் பாதி வழியிலே ஆங்காங்கே விழுந்து இறந்தனர். சாலையோரங்களில் கிடந்த சடலங்களை நாய்களும் நரிகளும் கடித்து குதறிக் கொண்டிருப்பதை பார்த்தாலும், எதுவும் செய்ய ஆற்றலின்றி மக்கள் மௌனமாக கடந்து சென்று கொண்டிருந்தனர்.

சில இடங்களில் வெள்ளைக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களின் தானியக்கிடங்குகளை சூறையாடி மக்கள் பகிர்ந்துகொண்டனர். சந்தைகளில் பூட்டியிருந்த கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பசியின் கொடுமை தாளாமல் சிறுவர்களும் பெரியவர்களும் பல இடங்களில் வன்முறையுடன் கூடிய கொள்ளைகளில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பல இடங்களில் ஆங்கிலேய அரசிற்கு பெரும் சிக்கலானது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த வெள்ளைக்கார அதிகாரிகள் ஆங்காங்கே வேலைத் திட்டங்களை செயல்படுத்த முன்வந்தனர். மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சம் பிழைக்க இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாம்பன் துறைமுகத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தினம் ஆயிரக்கணக்கானோர் படகுகளில் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேயிலைத்தோட்டங்களில்  கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

பல இடங்களில் தண்டவாளம் அமைக்கும் பணிகளையும் சாலைகள் அமைக்கும் பணிகளையும் ஏற்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வெள்ளைக்கார அதிகாரிகள் முயன்றனர். ஆண்களுக்கு 2 அணா, பெண்களுக்கு 1 1/3 அணா, சிறுவர்களுக்கு ¾   அணாவும் கூலியாக கொடுக்கப்பட்டது. (ஒரு அணா ஒரு ரூபாயில் 1/16 க்கு சமம்.) சாதாரண நாட்களில் ஆண்களுக்கான கூலி ஐந்து அணாவாக இருக்கவேண்டியது பஞ்சத்தால் குறைத்து இரண்டு அணாவாக கொடுக்கப்பட்டது. இந்த கூலிக்கு தானியங்கள் வாங்க இயலாததால் பல இடங்களில் கூலிக்கு பதில் தானியங்களே கொடுக்கப்பட்டன. விலை உயர்ந்த ஆடைகளை உடுத்திய பெண்கள் பழக்கமில்லாத குழி தோண்டும் வேலைகளை சிரமத்துடன் புழுதியில் புரண்டு செய்து கொண்டிருந்தது பஞ்சம் அனைத்துத் தர மக்களையும் ஆட்டிப்படைத்ததையே காட்டுகிறது. பல நாட்கள் பட்டினியுடன் நோய்வாய்ப்பட்டு பலவீனமான உடல் நிலையில் சிரமமான பணிகளில் ஈடுபட்ட மக்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிர்விட்டனர்.

சாலைப்பணிகளை சுற்றிப்பார்த்த ஓல்டுஹேம் என்ற வெள்ளைக்காரர் சாலையோரம் கிடந்த இறந்த உடல்களையும், ஆங்காங்கே உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களையும் பார்த்து- சாலைகள் போர்க்களங்களை போன்று காட்சியளிப்பதாக எழுதி இருக்கிறார். வயநாடு மலைக்கணவாயைக் கடக்கும் போது 29 இறந்த உடல்களை சாலையோரம் பார்த்ததாக ஒரு வெள்ளைக்காரர் குறிப்பிட்டுருக்கிறார்.சாலையோரம் மட்டுமல்ல, வீடுகள், சத்திரங்கள், கோயில்கள், வயல்கள், காடுகள் எங்கும் இறந்த உடல்கள் பரவிக்கிடந்தன. சேர்வராயன் மலைப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற ஒரு வெள்ளைக்காரர் காடெங்கும் இறந்த உடல்களைப் பார்த்ததாகவும், ஒரு முட்புதருக்குள் மூன்று குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் குடும்பமாக இறந்து கிடந்ததை பார்த்ததாகவும் பதிவு செய்திருக்கிறார். ஊரெங்கும் சாத்தியிருக்கும் வீடுகளுக்குள் வயதானவர்கள், நடக்க இயலாதவர்கள் இறந்து அழுகிக்கிடந்தனர்.

அப்போது இந்தியாவை ஆண்ட வைஸ்ராய் லைட்டன் பிரபு சென்னை மாகாணத்தின் பஞ்சத்தைப் பற்றி கவலைப்படும்  மனநிலையில் இல்லை. இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா பொறுப்பேற்கும் விழாவில் டில்லியில் 68000 பிரபுக்களும், மகாராஜாக்ககுளும், அதிகாரிகளும் கூடி மாபெரும் விருந்துண்டு கொண்டிருந்த நேரத்தில் பல இலட்சம் தமிழர்கள் உணவின்றி மரணத்தின் பிடியில் இருந்தனர். மகாராணி விக்டோரியாவின் விருப்பமான கவிஞர் என்ற ஒரே தகுதியால்  இந்தியாவை ஆள வந்திருந்த லைட்டன் பிரபுவால் வேறென்ன செய்திருக்க முடியும்; எந்த காலத்தில் கலைத்துறையினர் நல்லாட்சி கொடுத்திருக்கின்றனர்?

இரண்டு வருடம் ஆட்டிப்படைத்த பஞ்சம் 1878 ஆம் ஆண்டில் பெய்த மழையோடு முடிவிற்கு வந்தது. இந்த இரண்டு வருட பஞ்சத்தில் ஆங்கில இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துவிட்டதாக பஞ்ச நிவாரணங்களை ஆய்வு செய்த ஆங்கில அதிகாரி வில்லியம் திக்பி அவரது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இதில் பெரும்பாலானோர்கள் அந்த பஞ்சத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை மாகாணத்தைச் சேர்ந்த நம் தமிழர்கள்.

இந்தக் கொடிய பஞ்சத்தின் பாடமாக இது போன்றதொரு பஞ்சம் மீண்டும் நேரக்கூடாது என்பதற்காக கட்டப்பட்டதே முல்லைப் பெரியாறு அணை. அந்த அணையின் சுவற்றை பஞ்சத்தில் உயிரிழந்த பல இலட்சம் தமிழர்களின் நினைவுச் சின்னமாகத் தான் பார்க்கிறோம் இன்று. இந்த மாபெரும் நினைவுச் சின்னத்தை காப்பது நமது கடமை. அணை உடைக்கப்பட்டால் பஞ்சத்தில் இறந்த நம் முன்னோர்களின் உயிரிழப்புகள் அனைத்தும் அர்த்தமற்றதாகி விடும். பின்னர் மீண்டும் ஒரு பஞ்சத்தில் நம் குழந்தைகளோ, வருங்கால சந்ததியினரோ வாடி உயிர் விட நேரிடும். முல்லைப் பெரியாறு அணையின் அவசியத்தை உணர்ந்தும் அணை உடைபடுவதற்கு மெளனமாக துணை போனால் நாம் மனசாட்சியற்றவர்களாகி விடுவோம்.  உங்களால் இயன்றவரை அனைவருக்கும் அணையின் அவசியத்தை எடுத்துரையுங்கள். நேரில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், தொலைபேசியில் உரையாடும் தூரத்து நபர்களிடமும், இணையத்தில் இணையும் முகம் தெரியாத நண்பர்களிடமும் ஒரு முறையேனும் முல்லைப் பெரியாறு அணையின் அவசியத்தைப் பகிருங்கள்.

But I have read books on, and memoirs important company by, other generals from cromwell to eisenhower

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

18 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “முல்லை பெரியாறுக்கு முன்”
 1. உண்மை விளம்பி says:

  தமிழகத்தில் உற்பத்தி ஆகும் இந்த ஆற்றை தமிழன் பயன்படுத்தும் வகையில் வழி செயாமல் கேரளக்காரனிடம் கெஞ்சி கொண்டு இருக்கிரோம்.((பெரியாறு தமிழகத்திலுள்ள சிவகிரி மலையின் சுந்தரமலை பகுதியில் உற்பத்தியாகிறது))

 2. Rasendhiran says:

  திடுக்கைடவைக்கும் தகவல்கள்! பஞ்சத்தின் கொடுமையை படங்கள் கண்முன் நிறுத்துகின்றன. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் தமிழனுக்கு இனி பஞ்சம் நேரவிடமாட்டோம்.

 3. பால்பாண்டி says:

  முல்லைபெரியார்அணை மற்றும்அதன்சுற்றுவட்டராபகுதிகள்அனைத்தும்மேற்குபகுதிதமிழ்மக்களுக்குசெந்தமானவைஆனால்அன்று1956ல்இருந்தகாங்கிரஸ்கட்சியில்இருந்த,பெரு,முக்கியபுள்ளியின்சுயநாலத்தல்மேற்குபகுதிதமிழன்வாழ்வுபறிபோனது

 4. க. தில்லைக்குமரன் says:

  தேவி குளம், பீர்மேடுப் பகுதிகள் தமிழகத்திற்கு சொந்தமானது என்பதை விவரிக்கும் கட்டுரை
  http://www.thenseide.com/cgi-bin/Details.asp?selNum=24&fileName=Jan1-12&newsCount=3

 5. ASHOK KUMAR says:

  மிகவும் அருமையான பதிவு , காலத்தின் சுவடுகளை மிகவும் அருமையாக வரிசைபடுத்தி சரித்திர பின்னணியோடு எளிமையான தமிழ் நடையில் அருமையாக புரியவைத கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்,
  “சிறகு” – இது போன்ற நல்ல பதிவுகளை தந்து இன்னும் அதிகமாய் சிறகு அடித்து உயரமாய் பறக்க வாழ்த்துகிறேன்

 6. shanavas says:

  மிகவும் அருமையன, அவசியமான கட்டுரை.

 7. Dennis Surendar says:

  Good eye opener..!

 8. jagan says:

  அருமையான கட்டுரை

 9. அ.வேலுப்பிள்ளை says:

  தாது வருசத்திய பஞ்ச காலம்,,,, மீண்டும்,தமிழகத்திற்க்கு வரவேண்டுமா ?,,வாய் மூடி மெளனியாக இருக்கிற தமிழா ?,,,
  இனியாவது விழித்தெழு !
  இனி பொறுப்பதில்லை தம்பி !
  எரி தழல் கொண்டு வா !,,,,
  முல்லையை உடைத்தால்,,,,,,,,,,,? இனி,, தமிழ்நாட்டிற்கு வரவேண்டுமென்றால்,,,,,,,,விசா வங்க வேண்டியிருக்கும் ? டில்லி,,, கேரள,,வாலாக்களே ?,,,,,,

 10. அ.வேலுப்பிள்ளை says:

  தாது வருசத்திய பஞ்ச காலம்,,,, மீண்டும்,தமிழகத்திற்க்கு வரவேண்டுமா ?,,வாய் மூசடி மெளனியாக இருக்கிற தமிழா ?,,,
  இனியாவது விழித்தெழு !
  இனி பொறுப்பதில்லை தம்பி !
  எரி தழல் கொண்டு வா !,,,,
  முல்லையை உடைத்தால்,,,,,,,,,,,? இனி,, தமிழ்நாட்டிற்கு வரவேண்டுமென்றால்,,,,,,,,விசா வங்க வேண்டியிருக்கும் ? டில்லி,,, கேரள,,வாலாக்களே ?,,,,,,

 11. பிரபாகர் says:

  புரியும்படி அழகாய் எழுதியுள்ளீர்கள். எல்லாத் தமிழர்களும் படித்து தெளிந்துகொள்ள வேண்டிய இடுகை.

  // எந்த காலத்தில் கலைத்துறையினர் நல்லாட்சி கொடுத்திருக்கின்றனர்?//

  இந்த வரி நிறையவே யோசிக்க வைத்தது. நன்றி.

  பிரபாகர்…

 12. rajan says:

  அருமையான கட்டுரை

 13. nallavan says:

  முல்லை பெரியார் ஐந்து மாவட்டன்களின் வாழ்வாதாரம் அனை உடைக்கப் பட்டால் தென்மாவட்டன்கலில் பாலைவனம் உருவாகிவிடும்.ஒரு போதும் கேரளா அரசின் செயலுக்கு துனை போக விடக் கூடாது

 14. kasi visvanathan says:

  ஒரு நூற்றாண்டிற்கு முந்தைய உண்மை வரலாற்றை வரிசையான சான்றுகளுடன் எடுத்துக்காட்டி, நமது கடமை என்ன என்பதியும் விளக்கி உள்ள கட்டுரை ஆசிரியருக்கு மிக்க நன்றி. நாம் நம் கடமை உணர வேண்டும். கடமை மறந்தவர் வாழ்வில் உடமை மிஞ்சிய வரலாறு இல்லை. விழித்தெழுவோம், உரிமை காப்போம். நன்றி.

 15. kandhavel says:

  தமிழா ஒன்ரு சேர் ,முல்லைப்பெரியாரைக் காப்பது நமது கடமை.இப்பொழதாவது விழிதெழு.இல்லைஎன்ட்ரால் தமிழ் இனம் அழீந்து விடும்.

 16. ராஜபாலயத்தன் , says:

  செய்தி தொகுப்பில் வரும் புகைப்படங்கள் எங்கிருந்து சேகரிக்கப்பட்டது? மிகவும் அருமை !!!

 17. ummar moosa says:

  இது தமிழ் நாட்டின் சோக சரித்திரம். முல்லைப்பெரியாரைக் காப்பது நமது கடமை. ஒரு கோடி தமிழனின் உயிர் த்யாகம். காப்போம் முல்லைப்பெரியாரை.

 18. rakshana says:

  மிகவும் அருமையான கட்டுரை, நம் குழந்தைகளுக்கு பாட திட்டத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டிய வரலாறு.

அதிகம் படித்தது