மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூளையின் செயல்பாட்டைக் குறைக்கும் நீர்ப்பாசியின் வைரஸ்கள்

தேமொழி

Nov 1, 2014

moolai4ATCV-1 (Acanthocystis turfacea chlorella virus 1) என அழைக்கப்படும் வைரஸ் நீர்வாழ் பாசிகளில் வசிக்கும் நுண்ணுயிர்கள். சமீபத்தில் இந்த வைரஸ்கள் மனிதர்களிலும் வாழும் என்றும், அந்த வைரஸ்கள் மூளையின் குறிப்பிட்ட சில செயல்பாடுகளைக் குறைக்கவும் செய்யும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இறந்தவர் உடலைப் பரிசோதித்த பொழுது, இறந்தவரின் மூளையின் திசுக்களில் இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் அப்பொழுது இந்த வைரஸ் ஏற்கனவே இந்த இறந்தவரைத் தாக்கியிருந்ததா அல்லது அவர் இறந்த பிறகு மூளைத் திசுவை சென்றடைந்ததா என்ற குழப்பம் காரணமாக ஆய்வாளர்கள் உறுதியாக சொல்ல இயலாத நிலையில் இருந்தார்கள்.

moolai2ஆனால் சமீபத்தில் ‘ராபர்ட் யோல்கென்’ என்ற அமெரிக்காவின் ஜான்ஸ்ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைகழக ஆராய்ச்சி மருத்துவர் (Robert Yolken from Johns Hopkins University School of Medicine in Baltimore, Maryland), மூளையின் செயல்பாட்டைப் பற்றி ஆராய்ந்த பொழுது, தற்செயலாக மீண்டும் இந்த வைரஸ்களை அவர் பரிசோதித்தவர்களின் தொண்டையில் இருப்பதைக் கண்டறிந்தார். அத்துடன் இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கும், சோதனைகூட விலங்குகளுக்கும் நோய் உண்டாக்குவது இல்லை என்பதையும், ஆனால் மூளையின் செயல் திறனைக் குறைப்பதையும் கண்டறிந்துள்ளார். முதலில் இந்த வைரஸ்களை என்ன வகை என்று அவராலும் அவரது குழுவினராலும் கண்டறிய இயலவில்லை. மனிதர்களில் முன்னர் காணப்படாத வகை என்பதால் அடையாளம் காண சிரமம் ஏற்பட்டது. பின்னர், வைரஸ் பற்றிய நிபுணர்கள் இவற்றை குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் வாழும் பாசிகளில் காணப்படும் வைரஸ்கள் என்று அடையாளம் கண்டு அவருக்கு உதவினர்.

புரோசீடிங்ஸ் ஆஃப் நேஷனல் அக்காடமி ஆஃப் சயின்சஸ் (Proceedings of the National Academy of Sciences) ஆய்வு சஞ்சிகையில் இந்த வாரம் (அக்டோபர் 27, 2014) வெளியான இந்த ஆய்வின் மையக் கருத்தும், கண்டறியப்பட்ட முக்கிய முடிவுகளும்:

moolai8நல்ல உடல்நலமுள்ள 92 பேர்களின் சிந்திக்கும் திறன் பற்றிக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவர்களது வாய் மற்றும் தொண்டைப்பகுதியில் உள்ள செல்கள் சில மரபணு சோதனைக்காக சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இவர்களில் 40 பேர்களின் தொண்டைப்பகுதியில் இந்த நுண்ணுயிர் இருப்பது தற்செயலாகக் கண்டறியப்பட்டு, மனிதர்களில் இதுவரை காணப்படாத நுண்ணுயிர் என்ற சந்தேகத்தில் மேலும் தேடியதில், அந்த வைரஸ்கள் நீர்ப்பாசியில் காணப்பெறும் வைரஸ்கள் என்று அடையாளம் காணப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சிந்திக்கும் திறனைப் பற்றி அறியும் ஆய்வு என்பதால், வைரஸ் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் சிந்திக்கும் திறனில் வேறுபாடு உள்ளதா என்ற கோணத்தில் முதலில் திட்டமிடப்பட்ட ஆய்வு மேலும் விரிவாக்கப்பட்டு ஆராயப்பட்டது.

இரு பிரிவினரின் சிந்திக்கும் திறனிலும் புள்ளியியல் அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதும் உறுதியான முடிவு செய்யப்பட்டது. வைரஸ்களைக் கொண்டவர்களின் சிந்திக்கும் திறன் 10% அளவிற்கு பார்வை வழியே பெரும் தகவலைப் புரிந்து கொள்வதில் ( infected with the virus performed 10% worse than uninfected people on tests requiring visual processing) குறைவாக இருப்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்டவர்களின் வயது, பாலினம், இனம், பொருளாதார வளம், கல்வி நிலை, பிறப்பிடம், புகைப்பிடிக்கும் பழக்கம் போன்ற வேறுபாடுகளையும் மீறி வைரஸ்களினால் சிந்தனைத்திறன் மந்தப்படுத்தப்படுவது உறுதியானது (this difference couldn’t be explained by other factors like age, sex, race, socioeconomic status, education, place of birth, or smoking status). பாதிக்கப்பட்டவர்களுக்கு எண்களை வரிசையில் இணைத்து படம் வரையும் திறன் சிக்கலாகி இருப்பதும், அவர்களுக்கு கவனச் சிதறல் அதிகரித்திருப்பதும் கண்டறியப்பட்டது.

moolai11ஆய்வாளர்கள் இதனை மேலும் உறுதிப்படுத்த இந்த ஆய்வினை எலிகளிலும் தொடர்ந்து நடத்தினர். சில எலிகளின் உடலில் இந்த வைரஸ்களை அறிமுகப்படுத்தி, ஆறு வாரங்கள் கழித்து அவற்றின் சிந்திக்கும் திறனை, வைரஸ்கள் அற்ற எலிகளின் சிந்திக்கும் திறனுடன் ஒப்பிட்டார்கள். வைரஸ் உள்ள எலிகளுக்கு சிந்திக்கும் திறன் குறைந்திருந்தது, அவைகளுக்கு சிக்கல் நிறைந்த பாதையில் தடம் கண்டுபிடித்து செல்வதிலும், புதிய பாதைகளை கண்டுபிடிப்பதில் ஆர்வம் குறைவாக இருப்பதுவும் தெரிந்தது. இந்த வைரஸ் உள்ள எலிகள் மறதியால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட எலிகளின் மூளைப் பகுதியை மேலும் சோதனைக்கு உட்படுத்தியதில், மூளையின் மரபணுக்களில் 1000 க்கும் மேற்பட்ட மாற்றங்கள் நேர்ந்திருப்பதும், கற்பதற்கும், நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவும் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. எலிகளை வைரஸ் பாதிப்பிற்கு முன்னரும், பாதிப்பிற்கு பின்னரும் செய்த சோதனைகளினால் இந்த சிந்தனைத்திறன் பாதிப்பு வைரஸ்களால்தான் ஏற்பட்டது என்பது ஆய்வாளர்களின் முடிவு. இது போல மனிதர்களும் வைரஸ்களால் பாதிக்கப்படவும், பாதிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் இருந்தாலும் அதை எலிகளை ஆய்வுக்கு உட்படுத்தி சோதித்தது போல மனிதர்களிடம் சோதனை நடத்தி உறுதியாகச் சொல்ல இயலாது. அது போன்ற மனித சோதனை ஆய்வுகள், அறிவியல் ஆய்வு நெறிமுறைகளுக்குப் புறம்பானது என்பதால், ஆய்வாளர்கள் இது போலவும் மனிதர்கள் பாதிக்கப்படக் கூடும் என்ற கவன ஈர்ப்பினை மட்டும் தற்பொழுது கொண்டு வந்துள்ளனர்.

moolai9எலிகளின் மூலையில் மரபணுக்கள் மாறியது போல மனிதர்களுக்கும் மாறியுள்ளதா என இப்பொழுது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. நம்மிலும், நம்மைச் சுற்றியும் கோடானகோடி வைரஸ்கள் உள்ளன.அவற்றுடன்தான் நாம் வாழ்ந்தும் வருகிறோம். நரம்பியல் ஆய்வுகளும் உளவியல் ஆய்வுகளும் இது போன்று நுண்ணுயிர்களும் மூளையின் செயல்திறனை பாதிக்கும் என்ற கோணத்தில் மருத்துவ சிகிச்சைகளை அளிக்க இதுவரை முயன்றதில்லை. அந்த வகையில் இந்த ஆய்வு அறிக்கை சிகிச்சையில் புதிய கோணத்தை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் எதிர்பார்க்காத வகையில் நம் உடலில் வாழும் வைரஸ்கள் இவ்வாறு நம் மூளையின் செயலாற்றும் திறனை பாதிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்க புதிய தகவல் என்று மருத்துவ ஆய்வாளர் ராபர்ட் யோல்கென் கூறியுள்ளார்.

Research Article: “Chlorovirus ATCV-1 is part of the human oropharyngeal virome and is associated with changes in cognitive functions in humans and mice.” Robert H. Yolken, et al. PNAS 2014 ; published ahead of print October 27, 2014, DOI: 10.1073/pnas.1418895111

http://www.pnas.org/content/early/2014/10/23/1418895111.

Supporting Information: http://www.pnas.org/content/suppl/2014/10/23/1418895111.DCSupplemental/pnas.201418895SI.pdf

News: Researchers identify algae-virus DNA in humans, by Scott Schrage, Oct 28, 2014, Phys.org

http://phys.org/news/2014-10-algae-virus-dna-humans.html


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூளையின் செயல்பாட்டைக் குறைக்கும் நீர்ப்பாசியின் வைரஸ்கள்”

அதிகம் படித்தது