மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விட்டுச்செல்லும் சுற்றுச்சூழல்..

செல்வக்குமார் சங்கரநாராயணன்

May 28, 2016

Environment2அழகிய மலைத்தொடர்கள், சமவெளி எங்கும் விளைச்சல்கள், ஆங்காங்கே பருவம் தவறாத மழைப்பொழிவு என்று அழகுறச் செழித்திருந்தது தான் நமது பாரதத் திருநாடு.

கடுங்குளிர், கடும் வெப்பம், அதிக மழைப்பொழிவு, குறைந்த மழைப்பொழிவு, மிதமான வெப்பநிலை, சீரான பருவ நிலை மாற்றம், பாலைவனம் மற்றும் பனி மலை இவ்வாறாக ஒரு கண்டத்தில் நிலவும் கால நிலை அனைத்தும் நம் நாட்டில் நிலவுவதால் தான் நமது நாட்டிற்கு துணைக்கண்டம் என்று பெயர். இயற்கை அன்னை அளித்த பெரும் கொடைதான் நாம் இங்கு பிறந்திருப்பது. அத்தகைய நாட்டை பேணிக் காத்தல் என்பது நம் தலையாய கடமை!

Changing Environmentபெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு காரணங்களால் இன்று நமது சுற்றுச்சூழல் பெருவாரியாக மாசுபட்டு வருகிறது.

மக்களிடம் எவ்வளவு தான் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டு வந்தாலும் அதை ஒரு அலட்சியப்போக்கோடு கடந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே மக்கள் தான் சமூக வலை தளங்களில் சமுதாயத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்று பக்கம் பக்கமாக வசனமும் பேசி வருகிறார்கள். சிலர் எழுதுவதோடு நில்லாமல் செயலிலும் ஈடுபடுகிறார்கள், இது பாராட்டத்தக்க விடயம்.

மக்கள் போக்குவரத்திற்கு பொது வாகனத்தை பயன்படுத்துவது மிகச்சிறந்தது. எரிபொருளை உபயோகம் செய்யும் வாகனம், 30% மட்டும் தனது இயக்கத்திற்கு எடுத்துக் கொள்கிறது. மாறாக 70% கார்பன் மோனாக்சைடு எனும் நச்சு வாயுவை வெளிவிடுகிறது. ஏன் பொதுவாகனப் போக்குவரத்து அவசியம் என்ற உங்கள் கேள்வியை எளிமையாக விளக்குகிறேன். 60 நபர்கள் பயணம் செய்யும் பேருந்தில் 50 பேர் சென்றாலும் சரி 10 பேர் சென்றாலும் சரி ஒரே அளவு மாசு தான் அந்தப் பேருந்தால் ஏற்படும். இதுவே, நீங்கள் பேருந்தில் செல்பவராக இருந்து பிறகு ஒரு மகிழுந்தை வாங்கி தினமும் அதில் பயணம் செய்தால்?? இத்தனை நாள் உங்களால் சுற்றுச்சூழலுக்கு நேரடியாக இல்லாத பாதிப்பு தற்பொழுது ஏற்படுத்தப்படுகிறது. இதற்குத் தான் பொதுப் போக்குவரத்தை உபயோகிக்க அறிவுறுத்தப்படுகிறது.

Environment4அலுவலகத்தில் பணிக்குச் செல்லும் அனைவரும் பெரும்பாலும் இரு சக்கர வாகணங்களிலும், சிலர் மகிழுந்தில் செல்வதும் வாடிக்கையாக இருக்கிறது. இம்முறையிலும் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தலாம். இரு சக்கர வாகனத்தில் இருவர் பயணிப்பதற்கு பதில் ஒரு நண்பருடன் அவரது இரு சக்கர வாகனத்தில் ஒரு வாரம் ஒன்றாக சென்று, பின் உங்கள் வாகனத்தில் இருவரும் அடுத்த வாரம் செல்வது என்ற பொதுச் சிந்தனையை வளரச் செய்யலாம். அதே போல மகிழுந்து வைத்திருப்பவர்கள் இதைப் பின்பற்றலாம். அலுவலகம் அருகில் இருக்கும் பட்சத்தில் நடந்து செல்வது மிகவும் நலம்.” நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று நடையைக் கட்டுங்கள். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். மிதிவண்டிப் பயணமும் மிகவும் சிறந்தது தான். அதுவும் ஒரு வகை உடற்பயிற்சியில் சேர்ந்ததுவே.

Environment5“கேரி -பேக்” இந்த வார்த்தையை அடிக்கடி நாம் மளிகைக் கடைகளில் கேட்பது உண்டு. நீங்கள் வாங்கும் அந்தப் பையை மண்ணில் புதைத்து வைத்து நூறு ஆண்டுகள் கழித்து திரும்ப எடுத்தால் முழுவதும் மட்கியிருக்காது. பாருங்கள்! இவை தான் மண் வளத்தைக் கெடுத்து மழை நீரை உள்ளே இறங்க விடாமல் செய்து நீர் ஆதாரத்தைச் சிதைத்து விடுகின்றன. இதற்கு மாற்றாக வெளியில் பொருட்கள் வாங்கச் செல்லும் பொழுது துணிப் பைகளை உபயோகிக்கலாம். அவையே நிரந்தரமானவை, அத்துடன் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு தீங்கும் விளைவிக்காதவை.

மரம் நடுதலைப் பற்றி அதிகம் சொல்ல அவசியமில்லை என்று நினைக்கிறேன். மக்கள் இப்பொழுது மரம் நடுதலின் அவசியத்தை நன்குணர்ந்து செயலாற்றுகிறார்கள் என்பது வரவேற்கத்தக்க விடயம். மரம்தான் நமக்கெல்லாம் கடவுள்!

Environment12ஒரு ஏக்கரில் இருக்கின்ற மரங்கள் ஒரு மனிதனுக்கு பதினெட்டு ஆண்டுகள் சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் வாயுவைக் கொடுக்கிறதாம். கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது தானே.. இதே போல நாம், தேவையில்லை என்று வெளிமூச்சின் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை மரங்கள் தன் சுவாசத்திற்காக எடுத்துக்கொள்கிறது. இப்பொழுது புரிகிறதா? மரம் வளர்ப்பு பற்றி ஏன் எங்கும் குரல்கள் ஒலிக்கின்றன என்று. நீங்களும் மரம் நடுங்கள், நட்டதோடு விட்டுவிடாமல் அன்புடன் பராமரியுங்கள்.

Environment11வீட்டில் குழந்தைகள் இருந்தால் அல்லது அருகில் இருக்கும் குழந்தைகளை அழைத்து அவர்கள் கையால் மரம் நடச்செய்து அன்றாடம் நீர் விடுமாறு அறிவுரை வழங்குங்கள். ஒரு குழந்தை செய்வதைப் பார்த்து தெருவில் இருக்கும் மற்ற குழந்தைகள் மரம் நடுவார்கள். பின்பு உங்கள் பகுதி முழுவதும் அது பெரிதாக மாறும். ஏன் குழந்தைகளை வைத்து மரம் நடச் சொன்னேன் என்றால், குழந்தைகளுக்கு பொதுவாகவே ஆர்வமும் மற்ற குழந்தைகள் செய்வதைத் தானும் செய்யும் நாட்டமும் அதிகம். பக்கத்து வீட்டில் மிதிவண்டியைப் பார்த்த காரணத்திற்காகவே நம் வீட்டுக் குழந்தைகளும் மிதிவண்டி கேட்டும் அடம் பிடிப்பார்கள்.. அந்தச் சூத்திரம் தான் மரம் நடுதலுக்கும் உதவப்போகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுக்குத் தெரிந்த வரையில் உங்களால் முடிந்த வரையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு அடிஎடுத்துவையுங்கள்.

நல்ல பண்புகளோடு பிள்ளைகளை வளர்த்து அவர்கள் நலமுடன் வாழ்வதற்கு நல்ல சுற்றுச்சூழலை விட்டுச் செல்வோம். அதுவே இன்றைய தேவையும்!


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விட்டுச்செல்லும் சுற்றுச்சூழல்..”

அதிகம் படித்தது