மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இட ஒதுக்கீட்டினால் இந்தியாவுக்கு ஏற்றமா? இறக்கமா? – 2

ஆச்சாரி

Jul 15, 2012

நம் நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டதைப் போன்று அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் சில நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டிருந்ததை அறிவோம். அடிமைப்படுத்தப்பட்ட கருப்பு இன மக்களை வாழ்வில் முன்னேற்ற அமெரிக்க அரசு பல சலுகைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இருப்பினும் அமெரிக்காவில் நம் நாட்டில் இருப்பது போன்று நிச்சயமான விழுக்காட்டு அளவில் இட ஒதுக்கீடு கிடையாது. நம் நாட்டின் இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் பலர் அமெரிக்காவில் இருப்பது போன்று சலுகைகளை வழங்கலாமே, இட ஒதுக்கீடு தேவையற்றது என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

முதல் ஆப்பிரிக்க கறுப்பின மனிதன் அமெரிக்காவில் கால் வைத்த 1619 ஆண்டில் இருந்தே கறுப்பின மக்கள் அடிமைகளாகத்தான் நடத்தப்பட்டனர். வெள்ளையர்களின் விவசாயத்தை மேம்படுத்த ஆப்பிரிக்காவில் இருந்து கறுப்பின மக்கள் ஆயிரக்கணக்கில் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டனர். அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர்  1787 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பல மாகாணங்களில் அடிமைத்தனம் சட்டப் புறம்பானதாக  அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் பல ஆண்டுகளுக்கு அடிமைகள் வியாபாரமும், அடிமைத்தனமும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.

அமெரிக்க அரசியலில் அடிமைகள் விவகாரம் தொடர்ந்து புயலைக் கிளப்பிக்கொண்டு இருந்தது. அமெரிக்காவின் வட மற்றும் மேற்கு மாகாணங்கள் அடிமைத்தனத்தை முற்றிலுமாக ஒழிக்க முயன்றனர். தெற்கு மாகாணங்கள் அடிமைத் தனத்தை ஒழிக்க உடன்படாததால் அமெரிக்க மாகாணங்கள் இரு பெரும் குழுக்களாக பிரிந்து உள்நாட்டு போரில் ஈடுபட்டன. 1861 இல் தொடங்கிய அமெரிக்க உள்நாட்டு போரில் வட ஒன்றிய படை வெற்றி பெரும் இடம் எல்லாம் அடிமைகளை விடுதலை செய்து கொண்டே சென்றன. விடுதலையை விரும்பி ஆயிரக்கணக்கான கறுப்பின மக்கள் வட ஒன்றிய படையில் சேர்ந்து தென் கூட்டமைப்பை எதிர்த்து போரிட்டனர். 1865 இல் உள்நாட்டுப் போர் முடிவதற்குள் பல இலட்சம் கறுப்பின மக்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

போர் முடியும் தருவாயில் மேஜர் ஜெனெரல் செர்மன் விடுதலை செய்யப்பட்ட கறுப்பின மக்கள் உழைத்து முன்னேற  ஒவ்வொருவருக்கும் நாற்பது ஏக்கர் நிலமும் ஒரு கோவேறு கழுதையும் கொடுப்பதாக அறிவித்தார். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு அளிக்கப்பட்ட முதல் பெரிய சலுகை இதுவே. ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் நான்கு இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பிரித்து பத்தாயிரம் கறுப்பின மக்கள் குடியமர்த்தப்பட்டனர். ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்ட உடன் பதவிக்கு வந்த அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் பல சலுகைகளை ரத்து செய்தார். அதன் உச்சகட்டமாக கறுப்பின மக்களுக்கு கொடுக்கப்பட்ட நாற்பது ஏக்கர் நிலமும் கோவேறு கழுதைகளும் பறிக்கப்பட்டு மீண்டும் வெள்ளைக்கார முதலாளிகளிடம் கொடுக்கப்பட்டது.

விடுதலையாகிவிட்டாலும் வசிக்க வீடில்லாமல், தொழில் இல்லாமல், கல்வி அறிவில்லாமல், கையில் பணமேதும் இல்லாமல் வீதிகளில், காடுகளில் அலைந்தனர் கறுப்பின மக்கள். வேறு வழியின்றி பெரும்பாலானோர் மீண்டும் அடிமை முறையை ஒத்த வேலைகளில் சேர்ந்தனர். கறுப்பின மக்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியவில்லை. வெள்ளையர்களோடு பொது வண்டிகளில் பயணம் செய்ய முடிய வில்லை. சட்டப்படி சுதந்திரமாகவும் சமூகத்தில் அடிமைகளாகவுமே வாழ்ந்தனர் கறுப்பின மக்கள். சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1950களில் பல கறுப்பின தலைவர்கள் ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடினர். மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங் போன்ற பல தலைவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவர்களின் தொடர் போராட்டங்களால் 1964  மற்றும் 1968 ஆண்டுகளில் கடுமையான சட்டம் இயற்றி இனப் பாகுபாட்டை ஓரளவிற்கு முடிவிற்கு கொண்டுவந்தனர்.

இதை ஒட்டி 399 கறுப்பின மக்களை வைத்து நாற்பது ஆண்டுகளாக சோதனை செய்து வந்ததை முடிவிற்கு கொண்டு வந்தது அமெரிக்க சுகாதாரத்துறை. எலிகளை மருத்துவ சோதனைக்கு பயன்படுத்துவதையே எதிர்த்து வந்த மனித நேயமுடைய மக்களுக்கு அமெரிக்க அரசு கறுப்பின மக்களை சோதனைக்கு பயன்படுத்தியது அதிர்ச்சியை அளித்தது. உலகெங்கும் இருந்து அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த நாற்பது ஆண்டுகளாகத்தான் அமெரிக்காவில் வேலைகளிலும், கல்வியிலும் கறுப்பின மக்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. அதிலும் உறுதியான இட ஒதுக்கீடு கிடையாது. அந்தந்த அரசு நிறுவனங்களோ அல்லது கல்வி நிறுவனங்களோ அவர்களாகவே முடிவு செய்து சில இடங்களை கறுப்பின மக்களுக்கு கொடுக்கலாம். அரசைப் பொறுத்தவரை அனைத்து இன மக்களும் கலவையாக இருக்கின்றார்களா என்பதை மட்டும்தான் பார்க்கும். எத்தனை விழுக்காடு கலவை என்பதில் அக்கறை கிடையாது. சிறந்த கல்லூரிகள் என்று போற்றப்படும் கல்வி நிறுவனங்கள் ஐந்து முதல் ஏழு விழுக்காடு கறுப்பின மாணவர்களை சேர்க்கின்றது. நம் நாட்டில் இருப்பது போன்றே அங்கும் கறுப்பின மக்களை குறைந்த மதிப்பெண்களுடன் சேர்த்துக் கொள்வதால் வெள்ளையின மாணவர்களுக்கு வாய்ப்பு பறிக்கப்படுவதாக குரல்கள் எழாமலில்லை. ஒரு ஆய்வின்படி சராசரியாக ஆசியர்கள் 1550 SAT மதிப்பெண்கள் பெற்றால் கிடைக்கும் படிப்பிற்கு, வெள்ளைக்காரர்கள் 1410 மதிப்பெண்களும், லத்தீனர்கள் 1230 மதிப்பெண்களும், கறுப்பின மாணவர்கள் 1100 மதிப்பெண்களும் எடுத்தால் போதுமானதாக இருந்ததாக தெரிகின்றது. இதன்படி கல்லூரி சேர்க்கையில் நம் நாட்டில் இருப்பது போன்ற அல்லது அதைவிட பெரிய அளவிலான மதிப்பெண் இடைவெளிகள் இருப்பதை உணர முடிகின்றது.

அமெரிக்கா கொடுக்கும் சலுகைகளின் வெற்றியை கறுப்பின மக்களின் வாழ்க்கை நிலையைப் பார்த்தால் நன்கறிய முடியும். 73 விழுக்காடு கறுப்பின குழந்தைகள் மணமாகாத பெண்ணிற்கு பிறக்கின்றன (வெள்ளையர்களுக்கு இது 29 விழுக்காடுதான்). பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 13 கறுப்பின குழந்தைகள் பிரசவத்திலே இறக்கின்றன (வெள்ளையர்களுக்கு – ஆயிரத்திற்கு 6 குழந்தைகள் இறக்கின்றன). 35 விழுக்காடு கறுப்பின குழந்தைகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றன (வெள்ளையர்கள் – 10%). கல்லூரிகளில் ஐந்து விழுக்காடுதான் கறுப்பின மாணவர்களாக இருக்கின்றார்கள், ஆனால் சிறையில் 40 விழுக்காடு கறுப்பின மக்களாக இருக்கின்றனர். அமெரிக்க மக்கள் தொகையில் பனிரெண்டு விழுக்காடு இருக்கும் கறுப்பின மக்கள் எப்படி சிறையில் மட்டும் 40 விழுக்காடாக இருக்க முடியும்? அமெரிக்கா முழுவதுமே மொத்தமாக கல்லூரிகள் படிக்கும் கறுப்பின மாணவர்கள் ஆறு லட்சம் பேர், ஆனால் சிறையில் இருப்பவர்களோ எட்டு லட்சம் பேர். 20 வயது முதல் 29 வயது வரை உள்ள கறுப்பின ஆண்களில் மூவரில் ஒருவர் குற்றப் பின்னணி கொண்டவராக இருக்கின்றார்.

அமெரிக்காவின் மொத்த கறுப்பின சமூகமே ஏன் இந்த இழிநிலையில் வாழ்கின்றது? இதற்கு அமெரிக்க அரசு பொறுப்பேற்க வேண்டாமா? அரசின் பொறுப்பற்ற சலுகைகள் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேற உதவவில்லை என்பதை அமெரிக்கா எப்போது புரிந்து கொள்ளப் போகின்றது?

அமெரிக்கா பல துறைகளில் வியக்கத்தக்க வகையில் முன்னேறி இருக்கின்றதுதான். அவற்றில் பலவற்றை நாம் இந்தியாவில் பின்பற்றுவது அவசியம். இருப்பினும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு கொடுக்கும் சலுகைகளில் அமெரிக்காதான் நம்மிடம் பாடம் கற்க வேண்டும். அதற்காக நமது இட ஒதுக்கீட்டு திட்டங்கள் உலகில் தலைசிறந்தது, குறைகள் ஏதும் இல்லாதது என்றில்லை. நமது இட ஒதுக்கீட்டு திட்டங்களிலும் சில குறைகள் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட ஒருவர் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இந்திய ஆட்சிப் பணி (IAS) பணியில் சேர்ந்துவிட்ட பிறகும் அவரது அடுத்த தலைமுறை வாரிசுகள் இட ஒதுக்கீட்டை பயன்படுத்துவது மற்ற தாழ்த்தப்பட்டவர்களின் வாய்ப்பை தட்டிப் பறிப்பதாகும். ஒவ்வொரு வகுப்பினரும் தங்களுக்கு கிடைத்திருக்கின்ற இட ஒதுக்கீட்டை பகிர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல சாதிகளை உள்ளடக்கிய இட ஒதுக்கீடாக இருப்பதால் ஒரு சில முன்னேறிய சாதிகள் பெரும்பகுதியான இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்வதும், பல சாதிகள் இட ஒதுக்கீட்டின் பயனை இன்னும் அடையாத நிலையும் இருக்கத்தான் செய்கின்றது. இக்குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.

இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் இல்லாமல் குடும்பத்தின் பொருளாதார அடிப் படையில் இருக்க வேண்டும் என்ற கருத்து பல அரசியல் தலைவர்களாலும், இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களாலும் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றது. வறுமையில் வாடுபவர்கள் முன்னேற கல்வி மிக அவசியம். வறுமையால் கற்க முடியாமல் போவது முன்னேறிய சமுதாயத்திற்கு பெரும் இழுக்காகும். பல அரசுகள் வறுமையில் வாடுபவர்களை கை தூக்கிவிட பல நலத்திட்டங்களையும், இலவச திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன.

வறுமை தற்காலிகமானது என்பதாலே அதை அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட நாட்களில் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள். விவசாயத்தில் ஒரு வருடம் நல்ல மகசூல் கிடைக்கலாம், அடுத்த ஆண்டு மகசூல் பாதிக்கப்படலாம்.  தற்போது அது போன்று வருடத்திற்கு வருடம் பொருளாதார மாற்றங்கள் பெரியளவில் ஏற்படுவதில்லை என்றாலும், ஒரு தலைமுறையினர் வசதியானவர்களாகவும் அடுத்த தலைமுறையினரை வறியவர்களாகவும் இருப்பது போன்ற பல உதாரணங்களை நாம் பார்த்து வருகின்றோம். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டால் குடும்ப பொருளாதார நிலைமை ஆண்டுக்கு ஆண்டு கணக்கெடுக்கப்படவேண்டும். இந்தியாவில் மக்களின் வருமானத்தை கணக்கிட்டு வரி வசூலிக்கவே முடியவில்லை. இந்நிலையில் இட ஒதுக்கீட்டிற்காக எப்படி சரியான பொருளாதார தகவல்களை திரட்ட முடியும்?

பல சிரமங்களுக்கிடையே பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமல் படுத்தினாலும் தற்போதைய இட ஒதுக்கீட்டை பெரிய அளவில் மாற்றிவிடாது. இட ஒதுக்கீடு அடிப்படையில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் பட்டியலைப் பாருங்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள் – 31.64 %
பழங்குடியினர் – 44.2 %

பிற்படுத்தப்பட்டவர்கள் – 21.8 %
உயர் வகுப்பினர் – 12.78 %.

NSSO (National Sample Survey Organization) அமைப்பின் அறுபதாவது வட்ட ஆய்வுக் கணக்கெடுப்பின் படி (2003-2004) கிராமப்புற பகுதிகளில் தனி நபர் மாதாந்திர செலவின் (Monthly Per Capita Consumer Expenditure) அதிக வரம்பில் (ஒரு நபருக்கு ரூபாய் 1155 அல்லது அதிகம்) உயர் வகுப்பினர் 12%, பிற்படுத்தப்பட்டவர்கள் 5%, தாழ்த்தப்பட்டவர்கள் 3% பழங்குடியினர் 2% ஆகவும் உள்ளனர். இதே நகர் பகுதியில் பார்த்தாலும் (ஆய்வு வரம்பு – ஒரு நபருக்கு மாதம் ரூபாய் 2540 அல்லது அதிகம்) உயர் வகுப்பினர் 13%, பிற்படுத்தப்பட்டவர்கள் 3%, தாழ்த்தப்பட்டவர்கள் 3% பழங்குடியினர் 1% ஆகவும் உள்ளனர்.

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த பொழுது உயர் வகுப்பினரில் உள்ள ஏழை மக்களுக்காக 10% இடத்தை ஒதுக்கினார். பின்னர் 1992 ஆம் ஆண்டில் நடந்த இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம், வறுமை அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. வறுமையை நலத்திட்டங்களாலும், ஒடுக்குமுறையை இட ஒதுக்கீட்டாலும் தீர்ப்பது தான் சரியாக இருக்கும்.
இந்தியாவில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு அறுபது ஆண்டுகளாகவிட்டன. இட ஒதுக்கீட்டால் பிரச்சனைகள் ஏதும் தீர்ந்துவிடவில்லை. இப்படி வெற்றியடையாத திட்டத்தை பத்து பத்து ஆண்டுகளாக நீட்டிக் கொண்டே செல்வதால் என்ன பயன் என்ற கருத்து பல இடங்களில் முன்வைக்கப்படுகின்றது. இட ஒதுக்கீடு அறுபது ஆண்டுக ளாகியும் இன்னும் சமூகப் பிரச்சினையை முற்றிலுமாக தீர்க்கவில்லை என்பது உண்மையே. ஆனால் புள்ளி விவரங்களைப் பார்க்கையில் இட ஒதுக்கீடு சமுதாய மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகின்றது.

இந்தியாவின் நடுவண் அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டவர்களின் விழுக்காட்டை கீழே உள்ள அட்டவணையில் பாருங்கள்.

Class 1959 1965 1974 1984 1995
I 1.18 1.64 3.2 6.92 10.12
II 2.38 2.82 4.6 10.36 12.67
III 6.95 8.88 10.3 13.98 16.15
IV 17.24 17.75 18.6 20.2 21.26

முதல் நிலைப் பணிகளில் 1959 ஆம் ஆண்டு 1.18 விழுக்காடாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 1995 இல் 10.12 விழுக்காடாக உயர்ந்திருப்பது இட ஒதுக்கீட்டின் பங்கை வெளிக்காட்டுகின்றது. தற்போதைய எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 15 விழுக்காட்டை அடைந்திருப்பார்களா என்பது சந்தேகமே. புதிதாக எடுக்கப்படும் பணிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த முடியுமாகையால், பணி இடங்கள் காலியாவதைப் பொறுத்தே இட ஒதுக்கீடு பயனீட்டாளர்களின் எண்ணிக்கை உயர்கின்றது. ஒதுக்கப்பட்ட முழு விழுக்காட்டை அடைய ஒவ்வொரு பிரிவினருக்கும் இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

இட ஒதுகீட்டின் கால வரம்பைப் பற்றி கவலை கொள்ளவேண்டியதில்லை. இட ஒதுக்கீடு தன்னாலே காலாவதியாகிவிடும். உதாரணத்திற்கு சென்ற ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கைப் பட்டியலைப் பார்க்கலாம்.

திறந்த போட்டியில் (OC) சேர்ந்த வர்களின் கடைசி மதிப்பெண்- 198.50, பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ந்தவர்களின் கடைசி மதிப்பெண் 197.75. இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் முக்கால் மதிப்பெண்களே. வரும் ஒரு சில ஆண்டுகளில் இந்த முக்கால் மதிப்பெண் வித்தியாசமும் நீங்கிவிடும். பின்னர் மருத்துவ படிப்பு சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கென்று தனிச் சலுகை இருக்கப் போவதில்லை. இதுபோன்று படிப்படியாக தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங் குடியினர்களின் மதிப்பெண்களும் உயரும் பொழுது இட ஒதுக்கீடு தானாகவே அர்த்தமற்றதாகிவிடும்.

இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி இருவருமே எதிர்பார்ப்பது விரைவில் இட ஒதுக்கீடு தேவை இல்லாத இந்தியாவையே.

Some parents want to http://www.phonetrackingapps.com/ see everything, and choose to monitor their child’s texts and messages every day

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “இட ஒதுக்கீட்டினால் இந்தியாவுக்கு ஏற்றமா? இறக்கமா? – 2”
  1. Raman says:

    ஆசிரியர் பல நல்ல கருத்துக்களைக் கூறியிருந்தாலும், இறுதியில் ஒரு நியாயமில்லாத கருத்தைச் சத்தமில்லாமல் கூறியிருப்பதாகவே நினைக்கிறேன்.
    இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கைப் பட்டியலில், கடைசி மதிப்பெண்கள் அருகருகே வந்துவிட்டால், இட ஒதுக்கீட்டை நீக்குவதுதானே முறையாக இருக்கமுடியும்? இல்லையென்றால், ஒரு சிறு விழுக்காடு உயர் சாதியினரும், மற்றதெல்லாம் பிற வகுப்பினருக்கும் கிடைக்குமே இதுதான் சமூக நீதியா?
    இட ஒதுக்கீட்டில் ஒருமுறை பலன் கிடைத்தவரின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு இல்லை என்று சட்டத்தைத் திருத்தும் வரை, பலன்கள் அனைவருக்கும் சென்றுசேர வாய்ப்பில்லை. அது வரை சமூக நீதியும் முழுமையாகாது. இதை செயலாக்கும் திராணி எந்தக் கட்சிக்கும் இல்லை என்பதும், பலனடைந்த யாரும் மனச்சாட்சிப்படி இதற்கு இணங்கப்போவதில்லை என்பதுமே நம் தாய்த் திரு நாட்டின் அவல நிலை! கட்டுரையாளர் இதற்குப் பதிலுரைக்கும் வண்ணம் அடுத்த பகுதியை விரைவில் எழுதவேண்டும்!

    • Raman says:

      சென்ற கருத்தில், “அது சமூக நீதியும் முழுமையாகாது.” – என்பதை “அது வரை சமூக நீதியும் முழுமையாகாது.” என்று திருத்திக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதிகம் படித்தது