மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உதவி இயக்குநர்கள் – உடைந்த வாழ்வு உடையாத உறுதி

ஆச்சாரி

May 1, 2012

திரைப்படத்துறை. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்கள் மீது ஆளுமை செலுத்திவரும் துறையாகும். திரைப்படத்தால் சமூகத்திற்கு முன்னேற்றமா, சரிவா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் தயாரிப்பாளர் முதல் மின்னும் விளக்குகளை சுமக்கும், ( light boys) தொழிலாளர் வரை லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் துறை, திரைப்படத்துறை என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழக திரைப்படத்துறையில் இருந்து  ஒரு மாநிலத்தையே ஆளும் முதல் அமைச்சர் பதவிக்கு வந்தவர்கள் பலர். உதாரணம் யாருக்கும் சொல்லி விளக்க வேண்டியதில்லை. இத்தனை முக்கியத்துவம் கொண்ட திரைத் துறையில் இயக்குநர் எனப்படுவோர் முதன்மையானவர்கள்.

ஒரு திரைப்படத்திற்குத் தேவையான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒரு பெரிய குழுவை ஒருங்கிணைத்து அவர்களிடம் இருந்து அந்தத் திரைப்படத்திற்குத் தேவையானதைப் பெற்று அதை சீர்படுத்தி, ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்குள் இயக்குநர் பணி பெரும் மனச் சுமையை ஏற்படுத்தும் பணி.  இன்று திரைத்துறையில் இருக்கும் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காட்டு இயக்குநர்கள் உதவி இயக்குநர்களாய் இருந்தவர்களே. இயக்குநர் ஆகி வெற்றிப் படங்கள் தந்து கோடிகளைப் பார்க்கும் இயக்குநர்கள் உதவி இயக்குநர்களாக இருந்தபோது சந்தித்த துயரங்கள் பலப் பல.

என்ன திரைப்பட இயக்குநர்களுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகிறீர்களே என்று யாரும் கருத வேண்டாம். ஒரு இயக்குநர் கதாநாயகனை உருவாக்குகிறார். அந்தக் கதாநாயகனைத்தானே தமிழக மக்கள் மாநில முதல்வர் நிலைக்குக் கொண்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட திரைத்துறையில் உள்ள இன்றைய உதவி இயக்குநர்கள் வருங்கால இயக்குநர்கள் பற்றி அறிய முற்பட்டு, சென்னை வடபழனி பிரசாத் படப்பிடிப்பு அரங்கம் சென்றோம். காரணம் அந்த பிரசாத் அரங்கின் அருகில் உள்ள ஒரு தேநீர் கடைதான்  உதவி இயக்குநர்களின் வேடந்தாங்கல்.

முதலில் உதவி இயக்குநர்  நண்பர் திம்மராயன் சாமி  என்பவரிடம் பேசினோம். இவரது சொந்த ஊர் கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம். திரைப்பட இயக்குநர் ஆவதற்காக பதினாறு வருடங்களுக்கு முன்பு சென்னை வந்தவர். சென்னை வந்தவுடன்தான் இவருக்குப் புரிந்தது, இயக்குநர் ஆவது அவ்வளவு எளிதில்லை என்பது. இருக்க இடம், உண்ண உணவு இவை இருந்தால்தானே சென்னை வந்த லட்சியம் நிறைவேறும் என்று உணர்ந்த இவர், உணவுக்கும் இருப்பிடத் தேவைக்கும் ஒரு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளராக சேர்ந்து நேரம் கிடக்கும்போதெல்லாம் இயக்குநர்களை சந்தித்து உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ‘புன்னகை தேசம்’ என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடனே இருந்த வேலையையும் விட்டு விட்டு உதவி இயக்குநராகிவிட்டார். அதன் பிறகு அவர் பட்ட துயரங்கள் நிறையவாம். பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியும் இன்னும் இவர் இயக்குநராகவில்லை.

உதவி இயக்குநராக விரும்புபவர்கள் முதலில் வயிற்றுப் பசிக்கு முதன்மை இடம் தரக்கூடாது என்பதை அவர்கள் அடிக்கடி தேநீர் அருந்தி பசியாற்றுவதில் அறிந்தோம். இப்படித்தான் எல்லா உதவி இயக்குநர்களும் வாழ்கிறார்கள். ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தவுடன் அவர்களுக்கு ஊதியம் எல்லாம் தருவது கிடையாது. படப்பிடிப்பு நடைபெறும் நாட்களில் மூன்று வேளை உணவுக்கு உத்திரவாதம் கிடைத்துவிடுகிறது. இதுவே உதவி இயக்குநர்களுக்கு பெரும் நிம்மதி தருகிறது. ஏனென்றால் கிடைத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதால் இவர்கள் உணவு கிடைத்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இந்த உதவி இயக்குநர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. உணவுக்கும் இருக்கும் வாடகை வீட்டுக்கும் பணம் திரட்ட வழியைத் தேடுகின்றனர். இவர்களுக்குத் தோன்றிய வழி திருமணம். ஆம். திருமணங்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்கும் முகவர்களை உதவி இயக்குநர்கள் நாடுகின்றனர். அந்த முகவர்கள் இவர்களை உணவு தயாரிக்கும் பணிக்கு உதவியாக காய்கறி நறுக்கித் தருதல், பாத்திரங்கள் கழுவுதல், உணவு பரிமாறுதல் போன்ற பணிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இந்தப் பணிக்குச் செல்வதை உதவி இயக்குனர்கள்,  ஒரு சங்கேத  வார்த்தையில் சொல்லி ‘என்னடா நேற்று எங்கே அ.உ.வேலைக்கு சென்றாய்’ என்று கேட்டு சிரித்துக் கொள்கிறார்கள். (அ.உ.என்றால் அண்டா உருட்டி வேலை என்று பொருளாம்)  முகவர்கள் சொல்லும் திருமண மண்டபத்திற்கு இரவே சென்று தங்கி அதிகாலையில் உணவு தயாரிக்கும் பணிக்கு உதவி செய்து கொடுத்து ஒரு நாளைக்கு 300,350 ரூபாய் ஊதியம் பெற்று வருகின்றனர் உதவி இயக்குனர்கள். இந்த வேலை மாதத்தில் பத்து நாள் கிடைத்தால் போதும் அந்தப் பணத்தில்தான் மூன்று நான்கு பேர் சேர்ந்து தங்கி இருக்கும் வாடகை வீட்டிற்கு பங்கு அடிப்படையில் வாடகை தருகின்றனர்.

உதவி இயக்குனர்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைப்பது குதிரைக் கொம்பு. வீட்டு உரிமையாளர் இவர்கள் வீடு கேட்டுப் போனால் ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டு, சினிமாக்காரனுக்கு வீடு கிடையாது என்று கூறி வீடு தர மறுக்கின்றனர். அதிலும் திருமணமாகதவராக இருந்தால் அவ்வளவு சீக்கிரம் வீடு கிடைக்காது. வீடு கிடைக்கும் வரை நண்பர்கள் வீடு, பூங்காக்கள் போன்ற இடங்களில் தங்குகின்றனர். உதவி இயக்குனர்களைப் பொருத்தவரை வாடகை வீடுப் பிரச்சினையில் இன்னும் இந்த நிலைதான் நீடிக்கிறது.

இந்தக் கல்யாண வேலையும் கிடைக்காத நாட்களிலும் (ஆடி மாதம் போன்ற காலங்களில்) படப்பிடிப்பு திடீரென்று நடக்காத நாட்களிலும் உதவி இயக்குர்களின் மூன்று வேளை உணவும் தேநீர்தான். அவர்களில் பலர் புகைப் பிடித்தே பசி மறக்கின்றனர். இப்படி பசியாலும் தேநீர் மட்டுமே அருந்துவதாலும் புகைப் பிடிக்கும் பழக்கத்தாலும் பலருக்கு வயிறு தொடர்பான நோய்கள் வந்தாலும் மருத்துவமனைக்கு செல்ல பணம் இருக்காது. வயிற்று வலியுடனே இருக்கிறார்கள். இப்படி அவர்கள் துயரப்படும் போதெல்லாம் ஒருநாள் நாமும் இயக்குனராகிவிடுவோம் என்ற நினைவுதான் ஆறுதலாய் இருக்கிறது. பெரும்பாலான உதவி இயக்குனர்களுக்கு 35,40 வயது ஆகியிருக்கிறது. அவர்களுக்கு திருமணம், கிராமத்தில் உள்ள தன் குடும்பத்தினர் இவைகளைப்பற்றி எல்லாம் நினைப்பதில்லை. காரணம் இயக்குனராக வேண்டும் என்ற ஒரே சிந்தனைதான்.

உதவி இயக்குனர்கள் பெரும்பாலோர் கிராமத்தினரே. இவர்கள் ஆண்டுகள் பலவாய் சென்னையில் இன்னல்கள் பட்டும் இயக்குனர் ஆகாமல் வெறுங்கையுடன் சொந்த ஊர் திரும்பினால் ஊராரிடம்  பெருத்த அவமானம் ஏற்படுகிறது. குடும்பத்தினரிடம் இவர்கள் மீது சலிப்பு ஏற்படுகிறது. அதனால்தான் இயக்குனராக வெற்றி பெற்றே தீரவேண்டிய கட்டாயத்திற்கு இவர்கள் ஆளாகின்றனர். இளமையை இழந்து குடும்பத்தை இழந்து எதிர்காலத்தை மட்டுமே நம்பி உதவி இயக்குனர்கள் வாழ்கிறார்கள்.

வெளியூர் படப்பிடிப்புக்கு செல்லும்போது தங்குவதற்கு இரண்டு பேருக்கு ஒரு அறை என்று உதவி இயக்குனர்களுக்கு தருகிறார்கள். இந்த செலவுகளை தயாரிப்பாளர் கவனித்துக் கொள்கிறார். சில படப் பிடிப்புகளில் தயாரிப்பாளர் உதவி இயக்குனர்களை அடிமை போல நினைத்து. உணவு போன்ற செலவை இயக்குனர் பார்த்துக் கொள்வார் என்று இருந்துவிடுகிறார்கள். இயக்குனர் தயாரிப்பாளர் பார்த்துக் கொள்வார் என்று நினைத்துக் கொள்வார். இந்தச் சூழ்நிலையில் உதவி இயக்குனர்கள் என்ன செய்கிறார்கள். தயாரிப்பு நிர்வாகியை சந்தித்து நிலைமையை கூறி பசியாறுகிறார்கள்.

ஒரு திரைப்படம் முழுமை பெற்றுவிட்டால் குறிப்பிட்ட தொகை உதவி இயக்குனர்களுக்குத் தரவேண்டும். ஆனால் சில தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களுக்கு பணம் எதுவும் கொடுப்பதில்லை. பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப்படும் இந்தத் துறையில் சில ஆயிரம் ரூபாயை உதவி இயக்குனர்களுக்கு தந்தால் என்ன என்று அவர்கள் கேட்கிறார்கள். சரிதானே. இன்று இப்படி அவமானப்படும் உதவி இயக்குனரிடம் நாளை இந்த தயாரிப்பாளர்கள் வரமாட்டார்களா?  இப்போது இவர்களை கண்டும் காணாததற்குக் காரணம் சிறிய இயக்குனரின் உதவியாளர்கள் என்பதால். இதனால் மாதக் கணக்கில் பணியாற்றியதற்கு உணவு மட்டும்தான் உதவி இயக்குனர்கள் பெற்றது.

புகழ்பெற்ற பெரிய இயக்குனர்களிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கு படப்பிடிப்பு இருந்தாலும் இல்லை என்றாலும் மாதம் ஒரு தொகை கிடைத்து விடுகிறது. ஆனால் சிறிய இயக்குனர்களிடம் உள்ள உதவி இயக்குனர்களுக்குத்தான் இத்தனை இன்னல்களும். சமீபத்தில் திரைப்பட இயக்குனர்களிடையே உதவி இயக்குனர்களின் ஊதியப் பிரச்சினை எழுந்தது. பெரிய இயக்குனரும் சரி சிறிய இயக்குனரும் சரி அவர்களும் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள்தான். ஆனால் கோடம்பாக்கம் செவிகளுக்கு வெற்றி பெற்றவன் குரல்தான் கேட்கும்.

ஒரு இயக்குனரிடம் உதவியாளராக இணைந்தவுடன் உதவி இயக்குனராக முன்நிகழ்வு இருந்தால் காட்சித் தொடர் பலகை  (கிளாப் அடித்தல்) அடிக்கவும் இன்னபிற பணிகளையும் செய்கிறார்கள். புதிதாக உதவி இயக்குனராக பணிக்குச் சேர்ந்தால், சூழலை சரிப்படுத்துதல், இயக்குனரின் திரைக்கதை பெட்டியை எடுத்து உதவுதல் போன்ற பணிகள்தான் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட வேலைகளை அடுத்த புதிய உதவி இயக்குனர் பணிக்கு யாரேனும் சேரும் வரை செய்ய வேண்டும். உதவி இயக்குனர் தகுதிக்குப் பிறகு துணை இயக்குனர், அதன் பின் இணை இயக்குனர் இப்படி தொடர்ந்து பணியாற்றி இயக்குனர் ஆகிறார்கள்.

நாம் அறிந்த ஒரு உதவி இயக்குனர் ஒருவர் பல ஆண்டுகளாய் சமணர்கள் பற்றி- தமிழகத்தில் உள்ள சமணக் குகைகளுக்குச் சென்று ஆராய்ந்து ஒரு திரைக்கதையை வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களை அணுகிக் கொண்டிருக்கிறார். கதையைக் கேட்கிறார்கள் ஆனால்  இன்னும் யாரும் அதைப் படமாக்க முன்வரவில்லை. அப்படியே யாரேனும் படம் எடுக்க முன்வந்தாலும் அவர் சொல்லும் கதாநாயகனைத்தான் ஒப்பந்தம் செய்யவேண்டும் என்று நிர்பந்திப்பார். ஏனெனில் திரைப்படத்துறை குதிரைப் பந்தயம் போன்றது. முதலில் வென்ற குதிரையின் மேல்தான் பணம் கட்ட விரும்புகின்றனர். அதேபோல திரைத்துறையில் சகுனம் பார்க்கும் முறையால் எத்தனையோ உதவி இயக்குனர்கள் முன் நிகழ்வு நிறைய இருந்தும் சிறந்த திரைக்கதைகளை வைத்திருந்தும்  இயக்குனராக வாய்ப்பு கிடைக்காமல் வாடிக் கிடக்கின்றனர். காரணம் வெற்றி பெறாமல் அவர்களுக்கு எங்கும் செல்ல மனம் ஒவ்வவில்லை.

உதவி இயக்குனர்களின் துயர நிலையை நாம் இவ்வளவு விவரிக்க வேண்டிய அவசியம் ஏனென்றால், திரைப்படத் துறையில் இயக்குனராக ஆசைப்பட்டு எத்தனை ஆயிரம் இளைஞர்கள் தங்கள் வாழ்வை கால வெள்ளத்தில் கரைத்துவிட்டு கடும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கின்றனர் என்பதை வெளிக்கொணரவே. இதில் எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள், எத்தனை பேர் விரக்தியின் விளிம்பில் கடைசி வரை நின்று நிம்மதி இழப்பார்கள் என்று தெரியாது. திரைத் துறை பணம் கொழிக்கும், செல்வத்தை அள்ளித் தரும் களமாக எண்ணி வந்து வாடிக்கொண்டிருக்கின்றனர்.

பல துறைகளில் சாதிக்கும் திறமை இருந்தும் திரைப்படம் என்னும் மாய வலையில் உதவி இயக்குனர்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் தமிழக மக்கள் திரைத்துறையை ஆளுமை நிறைந்த துறையாக உருவாக்கி வைத்துள்ளனர். இந்த ஆளுமைத் துறையில் ஆளுமை செலுத்துவதே தமது லட்சியம் என்று ஒவ்வொரு உதவி இயக்குனரும் காத்திருக்கின்றனர். தமது இளமையைத் தொலைத்து வாழும் இவர்களை நினைத்து வருந்தும் அதே வேளையில் திரைப்பட மோகத்தில் இருந்து இன்னும் மீளாமல்- நாட்டை ஆளும் தலைமையையே திரையின் நாயகரைத் தேர்வு செய்யும் தமிழக மக்களையும் எண்ணி வருத்தம் வரத்தான் செய்கிறது.

It also means putting a lot of trust in the hands of your children, which oftentimes they don’t deserve not because they’re bad kids, but because they don’t have the coping mechanisms to deal with certain situations in a safe, mobile spy app for http://topspyingapps.com rational manner

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “உதவி இயக்குநர்கள் – உடைந்த வாழ்வு உடையாத உறுதி”
  1. தியாகு says:

    நல்ல பதிவு

    என் நண்பர் அருள் அவர்கள் விஜயகாந்த் படம் ஒன்றில் உதவி இயக்குனாராக வேலை செய்தார் , அவர் ஒரு அறையில் 5 அல்லது 6 நண்பர்களுடன் தங்கி இருந்தார் , இயக்குனர் ஆனாரா என்பது இன்று வரை தெரியவில்லை .

    ஆனால் அவர் குடும்ப கஷ்டத்தால் படும் பாடு என்னை மிக வேதனைக்குல்லாக்கியது , இந்த கட்டுரை உதவி இயக்குனர் ஆவோம் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும்

அதிகம் படித்தது