உலகத் தமிழர் பேரவை தலைவர் திரு. இம்மானுவேல் நேர்காணல்
ஆச்சாரிJul 15, 2012
(சிறகு வாசகர்களுக்கு வணக்கம். நாம் நேர்காணல் செய்யவிருப்பவர் அருட்தந்தை பேராசிரியர் திரு. இம்மானுவேல் அவர்கள். ஏறத்தாழ முப்பது நாற்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் மிகப் பெரிய தலைவர். உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 1997 முதல் இன்று வரை ஜெர்மனி நாட்டில் வசித்து வருகிறார். பல ஆண்டுகளாக பல நாடுகளுக்குச் சென்று தமிழர் பிரச்சினையை உலக மக்கள் மத்தியில் பரப்பி வந்தார். இந்தியாவில் பல பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். சென்னை பல்கலைக் கழகம், லயோலா கல்லூரி மற்றும் பல பலகலைக் கழகங்கள். உலகம் முழுதும் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு சென்று கிருத்துவ மதம் பற்றி பேசியிருக்கிறார். சிறகு சார்பாக நேர்காணலில் உரையாடியவர் திரு. தில்லைக்குமரன்.)
சிறகு: உலகத் தமிழர் பேரவையின் நோக்கம் – அதன் பின்னணி, அதன் கொள்கைகள் பற்றி…?
திரு. இம்மானுவேல்: உலகத் தமிழர் பேரவை 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூர சம்பவத்துக்குப் பிறகு வெற்றிடம் ஒன்று தோன்றியது. அதுவரை அந்தப் போராட்டத்தை வழி நடத்தி வந்த எல்.டி.டி.ஈ. தலைமை அழிக்கப்பட்டு உலகம் முழுதும் மக்கள் அதைத் தாங்க முடியாமல் அழுதோம். விழுந்தாலும் எழுவோம். முள்ளிவாய்க்கால் முடிந்தது, ஆனால் போராட்டம் தொடரும். முதல் கட்டப் போராட்டம் ஜனநாயக முறையில் 1948 ஆம் ஆண்டு தொடங்கி 76 வரை நடந்தது. இரண்டாவது கட்டப் போராட்டம் விடுதலைப் புலிகள் தலைமையில் 2009 வரை நடந்தது. மூன்றாவது கட்டம் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இப்போது நடக்கிறது. ஏனென்றால் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் தமிழ் மக்கள் மிகவும் வேதனைப்பட்டு அழுதனர். ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து கலிபோர்னியா வரை. கனடா போன்ற நாடுகள். இதுவரை அந்தந்த நாடுகளில் அந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களை இணைத்து அமைப்புகள் இயங்கி வந்தன. இப்போது எங்கள் போராட்டம் சர்வதேச ரீதியில் முன்னெடுக்க வேண்டும். அதற்கு அந்த அமைப்புகளை ஒன்றிணைத்து அவர்கள் சார்பாக நாங்கள் சர்வதேச சமூகத்துக்கு குரல் கொடுக்கிறோம். இதற்கு ஆயத்த கூட்டங்கள் 2009 ஆம் ஆண்டு பாரீசில் நடந்தது. அப்போது நாங்கள் இந்த அமைப்புக்குத் தேவையான அறிக்கை தயாரித்து லண்டன் நகரில் பாராளுமன்றதுக்குள்ளே- எங்கே எங்கள் பிரச்சினை தொடங்கியதோ அங்கேதான் புதிய போராட்டத்திற்கான சர்வதேச அளவில் ஆரம்பிக்க வேண்டும் என்று நாங்கள் உலகத் தமிழர் பேரவையை தொடங்கினோம்.
அதற்கு லேபர் பார்ட்டி அரசாங்கம் ஒத்துழைப்பு கொடுத்தது. நாங்கள் அத்துடன் நின்றுவிடவில்லை. எல்லோரையும் அழைத்து- இந்தப் போராட்டத்தில் நீங்கள் எல்லோரும் முன்னணியில் நிற்கவேண்டும் என்று வேண்டுகோளையும் வைத்தோம். இந்தப் போராட்டத்தை இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச அரசில் ஒன்றாக இணைத்து நாங்கள் நடத்துவோம் என்ற நம்பிக்கையோடு தொடங்கினோம். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. உலகத் தமிழர் பேரவைக் கூட்டங்களை அடிக்கடி நடத்த முடியாது. ஒரு மாதத்திற்கு இரண்டு முறை தொலைபேசி வழியாக நாங்கள் அளவளாவுகிறோம். ஆகவே எங்களுடைய பரிமாற்றங்கள், அந்தந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தொலைபேசி வழியே பகிரப்படுகிறது. ஆகவே எங்களுடைய பொறுப்பு அந்தந்த நாடுகளில் வாழும் எங்கள் மக்களுக்கு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான சேவைகள் செய்ய வேண்டும் என்பதற்காக முதல் கடமையாக – இந்தப் போராட்டம் தொடர்வது அவர்களுக்காகத்தான். அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், அத்துடன் அரசியல். கொடூரமான கொலைகளுக்கு அவர்கள் பொறுப்பெடுக்க வேண்டும். அதே நேரத்தில் சர்வதேச ரீதியில் நாங்கள் போராட வேண்டும் என்றால் ஒளிவுமறைவற்ற முறையில் நாங்கள் நடந்துகொள்ள வேண்டும். நான் தலைவராக இருக்கிறேன். எங்கள் காரியாலயம் லண்டனில் இருக்கிறது. அதற்கு போதிய நபர்களை நியமித்து ஆராய்ச்சியாளர்கள் நியமித்தோம். தொடக்கத்தில் எங்களுக்கு பணக் குறைபாடு இருந்தது. நாங்கள் பயணம் செய்வதாய் இருந்தாலும் சொந்த பணத்தில் போக வேண்டி இருந்தது. மக்களிடம் நாங்கள் பணம் வசூலிக்க முடியவில்லை. ஏனென்றால் அதற்கு முன்பாக நடந்த போராட்டத்தில் சில குறைகள் நடந்திருக்கின்றன. அதனால் நாங்கள் பணம் சேர்க்க முடியவில்லை. இருந்தும் சில நண்பர்கள் பண உதவி செய்தார்கள். உலகத் தமிழர் பேரவை ஒரு நாட்டு அமைப்பு அல்ல, சர்வதேச அமைப்பு. அதற்கு ஜெர்மனியில் இருக்கும் நான் ஒவ்வொரு மாதமும் லண்டன் சென்று அல்லது தொலைபேசி மூலம் செயலாற்றுகிறோம். அந்த அடிப்படையில்தான் நான் கலிபோர்னியா வந்திருக்கிறேன். இந்த எங்கள் முயற்சிகளில் ஊக்கம் கொடுத்து உதவ வேண்டும்.
சிறகு: உலக நாடுகளில் உள்ள பல அமைப்புகள் இந்தப் பேரவையில் இருப்பதாக சொன்னீர்கள். எந்தெந்த அமைப்பு எந்தெந்த நாடுகளில் உள்ளது, இந்த அமைப்பு ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மட்டும் உருவாக்கப்பட்டதா, உலகத் தமிழர்களுக்கு பல பிரச்சினைகள் அந்தந்த நாடுகளில் இருக்கின்றன. அதையெல்லாம் ஒருங்கிணைத்து செயல்பட வருங்காலத்தில் ஏதேனும் திட்டம் உள்ளதா?
திரு. இம்மானுவேல்: வருங்காலத்தில் இந்தப் பிரச்சினையை விரிவாக்கிக் கொண்டு போகலாம். தொடக்கத்தில் நாங்கள் செய்த முயற்சிகள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்காக இருந்தன. அதற்கு அப்பால் தமிழ் நாட்டுத் தமிழர்கள், தென் அமெரிக்கத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் இவர்கள் எல்லோருக்கும்தான். ஆனால் தொடக்கத்தில் ஈழத் தமிழர்கள் பங்கைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். பதினைந்து நாடுகள் ஆரம்பக் கூட்டத்தில் பங்குபெற்றன. ஒவ்வொரு நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளையும் நங்கள் எதிர்பார்க்க முடியாது. எல்லா நாடுகளின் அமைப்புகளும் தங்கள் அங்கத்தை செலுத்தி – சில நாடுகளில் சில குறைகள் இருக்கின்றன. நாங்கள் எங்கள் இரண்டாம் கூட்டத்தில் எங்கள் யாப்பை செலுத்தி சில அமைப்புகளை உள் வாங்க முடியும். இந்த அங்கத்துவத்தை விரிவாக்கிக் கொண்டு போக விரும்புகிறோம். எல்லா அமைப்புகளும் எங்களுக்குள் வந்தால்தான் எங்கள் குரலும் உரக்க ஒலிக்கும். எல்லா அமைப்புகளையும் இணைத்து கூட்டத்தில் ஆலோசித்து விட்டுத்தான், எங்கள் அபிப்ராயம் கூறுவோம். அபிப்ராயம் கூறும்போது இதற்கென்று சுரேந்தர் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். எங்கள் பொதுச் செயலாளர் சிட்னியில் இருக்கிறார். லண்டனில் அலுவலகம் இருக்கிறது. வருங்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் பேசும் மக்கள் இருக்கும் மற்ற நாடுகளிலும் ஒரு அங்கத்துவத்தை சேர்க்க முயற்சி எடுப்போம். கடந்த காலத்தில் அவ்வளவாக செய்ய முடியாமல் போனதற்கு- இந்தியாவிற்கு போகும்போது ஈழத் தமிழராக நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். தகவல்களைக் கொடுத்தோம். அவர்களும் நாங்கள் இதை மும்முரமாக செய்கிறோம் என்று உதவிகள் செய்தார்கள். அரசியல்வாதிகளும் அறிவாளர்களும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். கடையாக நடந்த ஜெனீவா கூட்டத்தில் இந்தியா எங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு மும்முரமாக டெல்லியில் அழுத்தமாகக் குரல் கொடுத்து தாக்கத்தை ஏற்படுத்தியது.
நேரடியாக நாங்கள் அரசியல்வாதிகளோடு நெருக்கமாகப் பழகவில்லை. இந்திய மக்களை பொருத்தமட்டில் அவர்களை தொப்பூழ் கொடி உறவு. நாங்கள் வேறு நாடுகளில் இருந்தாலும் அவர்களுக்கு எங்களுடைய பிரச்சனையில் இந்திய அரசின் ஜனநாயக முறையில் பெரிய தொல்லைகள் இருப்பதில்லை. ஆனால் வறுமை சாதிப் பிரச்சினை, ஒடுக்குமுறை போன்ற பிரச்சினைகள் உண்டு. நான் இதைப்பற்றி கூறினேன். அதற்கு என்னை குற்றவாளியாகப் பார்த்தனர். ஒருவர் என்னிடம் இந்தியத் தமிழர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று. அதற்கு நான், இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு எதிரான அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தொடங்கி விட்டார்கள். ஆனால் இந்தியத் தமிழர்கள் அப்படி எதுவும் தொடங்கவில்லை. என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்று அவற்றை இனம் காணத் தெரியவில்லை. வறுமை, மக்களிடையே வேறுபாடு இருக்கின்றன. இதைத்தான் நான் சென்றமுறை தமிழ்நாட்டில் சொற்பொழிவு ஆற்றியபோது கூறியிருந்தேன். எங்களுக்காக கண்ணீர் விட வேண்டும் என்பது முள்ளிவாய்க் காலோடு ஒரு பகுதி முடிந்துவிட்டது. ஆனால் உங்களுடைய மக்களுக்காக எழுந்து நிற்கவேண்டும் என்று அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். எல்லா பிரச்சனைகளையும் அரசியல்வாதிகள் மட்டும் தீர்த்து விட முடியாது. அவர்கள் தங்கள் அரசியல் நயத்திற்காகப் பார்ப்பார்கள். அதனால் அதிலே மதத் தலைவர்கள் பங்கேற்க வேண்டும்.
இந்தியத் தமிழர்கள் அவர்களுக்கு பிரச்சினைகள் இருப்பதால் அவர்களிடம் நாங்கள் நெருக்கமாக போவதைவிட- கருணாநிதியாகட்டும் ஜெயலலிதாவாகட்டும் அவர்கள் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றவேண்டும் என்பது முதல் பணி. அவர்களிடம் கடந்த காலத்தில் நாங்கள் நடந்துகொண்ட முறையில் சில குறைகள் இருக்கின்றன. இலங்கை மலையகத் தமிழர்களை –அதாவது பிரிட்டன் காலனித்துவம் இந்தியத் தமிழர்களை தோட்டத் தொழிலாளர்களாக அமர்த்தியபோது அவர்கள் மிகவும் நசுக்கப்பட்டவர்களாக உரிமை அற்றவர்களாக வாழ்ந்து வந்தார்கள். அந்த மக்களுக்கு போதிய கல்வியோ வசதியோ எதுவும் இருக்கவில்லை. நாங்கள் அதைப்பற்றி கரிசனை காட்டவில்லை. நாங்கள் ஈழத் தமிழர்கள். அதாவது வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து வந்த இந்தியத் தமிழ் மக்களை எங்கள் சொந்த வேலைக்காக அமர்த்தி அவர்களிடம் வேலை பெற்றுக்கொண்டோமே தவிர அவர்களுடைய நலனுக்காக பெரிதாகப் போராடவில்லை. ஒருக்கலம் அங்குள்ள கன்னியாஸ்திரிகள் பாடசாலைகள் ஆரம்பித்து கற்பித்தார்கள். நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டியில் பணிபுரிந்தபோது இந்தியத் தமிழ் பிள்ளைகளுக்கு ஒரு ஸ்தாபனம் ஆரம்பித்து உணவளித்து கல்வி வழங்கினேன். ஆனால் பெரிதாக செய்யவில்லை. இப்போது நடைபெற்ற பிரச்சினைகளில் இந்தியத் தமிழர்கள் எங்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களும். தமிழ் மக்களோடு நாங்கள் நெருக்கமாக வந்து விட்டோம். நெருக்கமாக வேலை செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. அதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதற்காக நாங்கள் தமிழ்நாட்டுடனும் மத்திய அரசுடனும் முயற்சி எடுக்க வேண்டும். சில சில கஷ்டங்கள் இருக்கின்றன. அதற்கு நாங்கள் முயற்சி எடுக்க வேண்டும். எனக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னை செல்வதற்கு அனுமதி மறுத்து விட்டார்கள். காரணம் சொல்லவில்லை. மேலதிகாரிகளிடம் சொல்லியும் மறுத்து விட்டார்கள். எனக்கு இலங்கை போக விருப்பமில்லை. அங்கு எனக்கு ஆபத்து. ஆனால் இந்தியாவுக்கு போக விருப்பம். ஏனென்றால் இந்தியா எனக்கு இரண்டாவது தாயகம். அங்கு போனால் கல்லூரிகளுக்குப் போகலாம், கலாசாலைகளுக்குப் போகலாம். கடந்த முறை டெல்லியில் ஜவஹர்லால் பல்கலைக் கழகத்திற்கு செல்ல முடியில்லை. புத்தக வேலை இருந்தது அதையும் செய்ய முடியவில்லை. எங்களுடைய அமைப்பு அங்கே காலூன்ற வேண்டும் என்று விரும்புகிறோம். குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகள்- தேவைகளுக்கு அரசியல்வாதிகளற்ற மற்றவர்கள் குரல் கொடுப்பதில்லை. அது தேவையாய் இருக்கிறது. இரண்டு கட்டம் இருக்கிறது. ஒன்று பொருளாதாரம் படித்தவர்கள், கலாசாலைகளில் வேலை செய்பவர்கள், அறிவாளிகள் அவர்கள் மக்கள் பிரச்சினைகளை சொல்ல வேண்டும். இரண்டாவது ஊடகங்கள். தமிழ் ஊடகங்களை விட ஆங்கில ஊடகங்கள். ஏனென்றால் அது டெல்லிக்குப் போக வேண்டும். உலகத்திற்குப் போக வேண்டும். இந்தியா ஒரு பெரிய நாடு. தமிழ்நாட்டில் விழிப்பு ஏற்பட்டு அது டெல்லி போய் அடைந்தால்தான் எங்களுக்கு மாற்றங்கள் ஏற்படும். அதற்கு நாங்கள் வருங்காலத்தில் முயற்சிகள் எடுப்போம். இந்தியாவில் எத்தனையோ பாடங்கள். சென்றமுறை நான் சென்றபோது, பெரியாரிடம் நான் போயிருந்தேன். அவரிடம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள். அந்த சந்தர்ப்பங்களை தமிழ்நாட்டு தலைவர்கள் கைநழுவ விட்டு விட்டார்கள். 1960களில் பெரியாரின் தாக்கத்தில் ஊக்கமாய் இருந்தவர்கள் தங்களுடைய அரசியல் பாதையில் போய் அவர்கள் அவைகளை மறந்து விட்டார்கள். எத்தனையோ பாடங்கள். அவைகளை நாங்கள் உள்வாங்கி செயல்படவேண்டும். தமிழ்ச் சமூகம் இலங்கையில் இருந்தாலும் சரி தமிழ்நாட்டில் இருந்தாலும் சரி அதை மேம்படுத்த, முன்னேற்ற, விடுவிக்க முயற்சிப்போம். எல்லோருக்கும் விடுதலை தேவை.
சிறகு: தமிழீழத்திற்கு ஆதரவாக, தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய எழுச்சி உருவாகி இருக்கிறது. அரசியல்வாதிகளை நம்பாமல் பல அமைப்புகளை ஏற்படுத்தி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
திரு. இம்மானுவேல்: சிறப்பாக. கடந்த காலத்தில் எங்கள் பிரச்சினைகளை இந்தியாவில் வாழந்து கொண்டிருப்பவர்களுக்கு போதிய அளவு கூறவில்லை. இலங்கையில் வாழும் சிங்கள மக்களுக்குக் கூட ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைக் கூறவில்லை. எங்களுக்குள்ளேயே நாங்கள் அழுது கொண்டிருந்தோம். அதை கொழும்பு ஊடகங்கள் வாயிலாக வெளியே ஆங்கிலத்தில் கொடுக்கவில்லை. 1949 ஆம் ஆண்டுகளில் சுதந்திரம் தொடர்பாக ஒரு ஆங்கில ஊடகம் ஆரம்பித்து வெளி உலகத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். இனியும் அந்தப் பிழை நேரக்கூடாது. எங்களைப் பற்றிய உண்மைகளை அவர்களிடம் போதிய அளவுக்கு சொல்வோம். முதல் கட்டத்திலேயே ஈழத் தமிழ் தலைவர்கள் இந்தியாவில் சென்று தங்களைப் பற்றிக் கூறவில்லை. இலங்கை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராடிக் கொண்டிருந்தார்கள். செல்வநாயகம், பொன்னம்பலம் போன்றவர்கள் இந்திய அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பை வேண்டி அங்கே சென்றிருந்தால் ஒரு வகையில் நாங்கள் திடப்பட்டிருப்போம். அதனால் இரண்டாம் கட்டத்தில்தான் இந்திரா காந்தி ஒத்துழைப்புடன் நடந்தது. அதில் கூட எங்களை சில சம்பவங்கள் பிழையான வழியில் பார்க்கச் செய்துவிட்டது. ராஜீவ் காந்தி கொலை மூலம். ராஜீவ் காந்தியை பொருத்தவரை – உலகத்திற்கு வலிவாகத் தெரியும். இந்திரா காந்தி எப்படி ஒரு சீக்கியரால் கொல்லப்பட்டாரோ அந்த சீக்கியர் இன்று நாட்டை ஆளலாம். ராஜீவ் காந்தியை அடித்தது ஒரு சிங்களர். அதைப் பற்றி கவலைப்படுபவர் ஒருவருமில்லை. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பெரிதாக்கி டெல்லியில் உள்ளவர்கள் பெரிதுபடுத்தி அது மலையாளியாக இருக்கலாம் அல்லது வேறு யாராக இருக்கலாம், தமிழக மக்களை மௌனமாக்கிவிட்டார்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் இலங்கைப் பிரச்சினையில் கொஞ்ச காலம் மௌனமாகி விட்டார்கள். பயங்கரவாதப் பிரச்சனை, இந்தியப் பிரதமரைக் கொன்ற பிரச்சினை என்று. அது பின்னடைவாக இருந்தது. நாங்கள் போதிய அளவு அரசியல்வாதிகளுடன் பேசமுடியவில்லை. 2009 –ல் கொடூரமான கொலைகள் நடந்த பிறகு அந்த பயம் தணிந்து, இந்தியப் பிரதமரைக் கொன்ற குற்றவாளிகள் என்ற பயம் தணிந்து- இத்தனை லட்சம் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு இந்தியாவும் துணை போய் இருக்கிறது என்ற கொடூர செய்தி- அதாவது உலக நாடுகள் சேர்ந்து இலங்கை அரசுக்கு பலத்தையும் ஆயுதங்களையும் கொடுக்கும்போது அவர்கள் பயங்கரவாதமாக பார்க்கிறார்கள்.
ஆனால் எங்கள் உறவினர்- டெல்லி அரசு இலங்கை அரசுக்கு ராடார்களையும் உபகரணங்களையும் கொடுத்து இந்தக் கொலைகளை ஊக்குவித்தது என்று சொல்லும் போது மிக வேதனையாக இருகிறது. அதனால்தான் இந்தியா கடைசி கட்டத்தில் நடந்துகொண்ட முறை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. நார்வே அரசின் உதவியுடன் பேச்சுவார்த்தை நடந்தபோதும் – இந்தியா எப்படி பார்த்துக் கொண்டிருந்தது என்பது வலிவாகத் தெரியும். பயங்கரவாதம் அல்ல, அதற்குப் பின்னால் இனப் பிரச்சினை இருக்கிறது, அது தீர்க்கப்பட வேண்டும், அதைத் தீர்ப்பதற்கு இந்தியா முழு மூச்சாக வேலை செய்யவில்லை. அவர்களின் நிலைப்பாடு என்னவென்றால் இலங்கை அரசு சிறிய தீவு அரசாக இருந்தாலும் இந்தியாவுக்குத் தொல்லைகள் கொடுக்கக் கூடாது, இலங்கையை நல்ல நண்பனாக வைத்துக் கொள்ளவேண்டும். இந்தியா பாகிஸ்தான் போர் நடந்தபோது பாகிஸ்தான் விமானங்கள் கொழும்பில் பெட்ரோல் நிரப்ப உதவி செய்தது. அதுபோல் இந்தியா சீனா போர் வந்தால்- நாங்கள் சீனா, பாகிஸ்தான் பக்கம் போய்விடுவோம் என்று ஒரு பயமுறுத்தல். எனவே இந்தியா இலங்கையை திருப்திப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. ஒருமுறை இந்தியா சொன்னது, நாங்கள் உங்களை பாதுகாக்கிற ஆயுதங்கள்தான் தருவோம், தாக்கும் ஆயுதங்கள் தரமாட்டோம் என்று. உடனே இலங்கை அரசு நாங்கள் பாகிஸ்தானிடம் பெறுவோம் என்று சொன்னதும் இல்லை இல்லை நாங்களே தருகிறோம் என்று இந்தியா சொல்லியது. எனவே பயமுறுத்தி வாங்கும் நிலைமை இருக்கிறது. இப்படி இரண்டு மூன்று நாடுகளுக்குள் உள்ள குரோதத்தை இலங்கை அரசு தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. எனவே இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் அது இருக்கும் இடம் சர்வதேச கப்பல்கள் சென்று வரவும் எண்ணை கப்பல்கள் செல்லும் இடமாக உள்ளது. இப்படி தமிழர் வாழ்ந்த இடம் இன்றைக்கு சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதில் இந்தியாவுக்கு ஆர்வம் இருக்கிறது, அமெரிக்காவுக்கு ஆர்வம் இருக்கிறது, சீனாவுக்கு ஆர்வம் இருக்கிறது. ஆகவே யானைகள் சண்டை பிடித்துக் கொள்ள எறும்புகள் செத்துக்கொண்டிருக்கின்றன. உள்நாட்டு சண்டை இன்று சர்வதேச போராக மாறி இருக்கிறது. எனவே இந்தியாவின் நிலைப்பாடு சிக்கலாய் இருக்கிறது.
இந்தியா நேரம் காலத்துடன் செயல்படாத காரணத்தால் சீனா உள்ளே புகுந்து வட பகுதியில் யாழ்ப்பாணம் வரை போய் சீன மொழியையும் சீன வழக்கங்களை ஆரம்பித்துள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறோம், நாங்கள் வேரோடு அறுந்து கொண்டிருக்கின்றோம். இந்தியா தன் லாபத்துக்காக எங்களை அழியவிடுமா? இந்த நிலையில்தான் தமிழ்நாட்டு மக்களும் இதை உணர்ந்து டெல்லிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சர்வதேச போராட்டத்தில் நாங்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய அணுகுமுறைகள் மிகவும் நிதானமாக, கவனமாக செய்யவேண்டி உள்ளது. எங்களுக்கு எல்லோரும் உண்மையான நண்பர்கள் இல்லை. ஒரு காலத்தில் எங்களை அழித்தவர்களுடன் இன்று பேச வேண்டிய தேவை இருக்கிறது. அமெரிக்காவுக்கு டெல்லிக்குப் போகவேண்டும் என்று ஆசை இருக்கிறது. நாங்கள் ஒரு இனமாக வாழ்வதற்கு எங்கள் பிரச்சினைகளை தீர்க்க அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.தங்கள் சொந்த லாபத்திற்காக மட்டும் அவர்கள் அரசியல் நடத்துவார்கள் என்றால் அது முடியாது. சீனா தங்களை விஸ்தரித்துக் கொண்டுள்ளார்கள். அவர்களிடம் உங்களுக்கு எதிராக நாங்கள் அல்ல. ஆனால் எங்களை அழித்து நீங்கள் வாழ வேண்டுமா என்று உண்மையை விளக்க வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியம். முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு இந்தியா செய்ய முயற்சித்த மனிதாபிமான முயற்சிகளைக் கூட இலங்கை அரசு சரியாக பயன்படுத்தவில்லை. ஆயிரம் வீடுகள் கட்டவேண்டும் என்றால் ஐம்பது வீடுகள் கட்டக் கூட ஊக்கம் கொடுக்கவில்லை. இலங்கை அரசைப் பொருத்தவரை இந்தியா தமிழர்களிடம் வைக்கும் உறவை குலைக்கத்தான் விரும்புவார்கள். ஆகவே நாங்கள் நிதானமாக இந்தியாவின் உதவியை நாடுகிறோம். ஏனென்றால் இந்தியாவின் உதவி இல்லாமல் நாங்கள் வாழமுடியாது. அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து ஜெனீவா தீர்மானத்தில் முயற்சி எடுத்தார்கள். 2009 ஆம் ஆண்டு வரை எங்களை சர்வதேசம் முழுவதும் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் பயங்கரவாதிகளாகத்தான் பார்த்தார்கள். இனப் பிரச்சினை என்று பார்க்கவில்லை. அவர்களை அழித்து முடித்து விடுவோம் என்று இலங்கை அரசுக்கு உதவினார்கள். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியல் தீர்வைக் கொண்டுவர நினைத்தார்கள். இலங்கை அதிலே ஏமாந்துவிட்டார்கள். தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். அது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பெருமையாக உள்ளது. உதவிகள், ஆயுதங்கள், பணம் எல்லாம் பெற்றார்கள், வெற்றி பெற்று விட்டார்கள், இப்போது சீனா பக்கம், ஈரான் பக்கம் இலங்கை அரசாங்கத்தினர் திரும்பிவிட்டார்கள். அப்படி அவர்கள் திரும்பியது இவர்களுக்கு தோல்வியாகப் போய்விட்டது. அந்தத் தோல்வியை மறைப்பதற்குத்தான் ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டுவந்தார்கள். 2009 ஆம் ஆண்டு தீர்மானத்தை எப்படி தோற்கடித்தது என்றால் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான சகல நாடுகள் எல்லாவற்றையும் இலங்கை ஒன்றாக சேர்த்து இவர்கள் காலனித்துவத்தில் எங்களை ஆளப் பார்க்கிறார்கள். அமெரிக்கா அப்போது இலங்கை அரசின் அரசியல் தீர்வின் உள்ளடக்கத்தைப் பார்க்க வில்லை. இப்போது அமெரிக்காவின் முயற்சியில் முதல் முறையாக ஐ.நா.வின் ஜெனீவா கூட்டத்தில் அமெரிக்கா ஒரு சிறிய விண்ணப்பம் (பிரேரணை) முன்வைக்கப் பட்டுள்ளது. சர்வதேசமும் இப்போதுதான் கண்விழித்து மெல்ல மெல்லமாக உண்மையை உணரத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில்தான் ஜெனீவாவில் நடந்ததை வரவேற்றோம்.
சிறகு: ஐ.நா.சபையில் அண்மையில் கொண்டுவரப்பட தீர்மானம் பற்றி கூறினீர்கள். அந்தத் தீர்மானத்தில் உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றம். இந்தியா அதை வலுவிழக்கச் செய்தது என்று குற்றச்சாற்று இருக்கிறது. தமிழகத்தில் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள். அமெரிக்கா முன்வைத்த தீர்மானமே வலு இல்லாதது. அதையும் வலுவிழக்கச் செய்தது இந்தியா. உலகத் தமிழர் பேரவையின் முயற்சி இங்கு நிச்சயமாகக் குறிப்பிட வேண்டும். அதன் அங்கமான பல அமைப்புகளின் முயற்சியால் தீர்மானம் நிறைவேறியது. அது ஒரு நல்ல துவக்கம்தான். ஆனால் அந்தத் தீர்மானத்தில் இன அழிப்பு என்ற வார்த்தையை- இலங்கை அரசு கொண்டுவந்த எல்.எல்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்த வேண்டும், அதையும் இலங்கை அரசின் ஒப்புதலோடு செய்யவேண்டும் என்பது எமாற்றுத் திட்டங்கள். அதுபற்றி உங்கள் கருத்து?
திரு. இம்மானுவேல்: உண்மைதான். இந்திய அரசாங்கம் தன்னுடைய தீர்மானத்தை ஆதரிக்கக் கூடாது என்று இலங்கை அரசு முயற்சித்தது. தமிழ்நாட்டுக் கட்சிகள் எல்லாம் ஒன்றாகத் திரண்டு அங்கே குரல் கொடுத்து டெல்லியிலும் குரல் கொடுத்ததை நான் பார்த்தேன். இந்திய அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுக்கும்போது இலங்கைக்கு மிக கஷ்டமாக இருந்தது. ஒரு பக்கம் இந்தியா இவ்வளவு உதவிகள் செய்துவிட்டு இப்படி செய்கிறார்களே என்று. ராஜபக்சே ஒரு முறை சொல்கிறார், இந்தியாவின் போரைத்தான் நான் நடத்தினேன். இந்தியாவுக்காக நடத்தினேன் என்று. அதற்கு மன்மோகன் சிங் பதில் சொல்லவில்லை. மௌனம் சம்மதம். அவ்வளவு கர்வம் மகிந்தவுக்கு. அப்படி இருந்தும் இவர்களுக்கு எதிராகப் போவது கஷ்டம். அதற்காக இந்திய அரசும் அமெரிக்க அரசும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தார்கள். அதாவது இலங்கையின் நிலைமைக்கு எதிராகவோ, இலங்கைக்கு புதிதாக அழுத்தங்கள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அதை மொட்டடோவாக செய்தார்கள். இந்தியா வந்தால் மற்ற நாடுகள் வரும் என்பதற்காக. அது எல்லோருக்கும் தெரியும். அதன் பின்னணியில் வேறு காரணம் இருக்குமென்று கூறப்படுகிறது. கூடங்குளம் சம்மதம் தொடர்பாக என்று அறிகின்றேன். இருந்தும் இந்தியாவின் சம்மதம் ஒரு லிமிடேட் சம்மதம். அதற்குப் பின்னரும் மன்மோகன் சிங் இலங்கைக்கு விளக்குகிறார். இலங்கையை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முழு முயற்சி எடுக்கிறார். என்ன சின்ன நாட்டுக்கு இந்தியா பயப்படுகிறதே என்று தோன்றும். என்ன செய்வது நாங்கள் பிரேரணையை பார்க்கும்போது அதிலே எங்களுக்கு எதுவும் கிடைத்து விட்டதாக நினைக்க முடியாது, ஒரு புதிய கட்டத்தில் ஒரு ஆரம்பம். அதற்குப் பின்னால் பல பெரிய காரியங்கள் செய்யவேண்டும். நாங்கள்தான் செய்யவேண்டும். அதன் தொடக்கமாகப் பார்த்தோம். எங்களுக்கு war crimes இருந்தது genocide இருந்தது. இந்தக் குற்றசாட்டுகளை அமெரிக்காவே முன்பு சொன்னது, அப்படி இருந்து இப்படி பிரேரணை வந்தால், அவர்கள் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்று நாங்கள் தொடர்ந்து பார்க்க வேண்டும். இப்போதைக்கு பிரிட்டன் அரசும் ஐரோப்பிய அரசும் ஒரு வகையில் தங்கள் கரிசனையை நாளுக்கு நாள் தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள். இலங்கையைப் பொருத்த வரை தன் ஏமாற்றுப் படலத்தை தொடர்ந்து செய்வது, பொய்களை சொல்வது – பிரேரணையில் கூறப்பட்டதை நாங்கள் ஆராய வேண்டும் என்று கூறுகிறார்கள், இன்னொரு முறை நாங்கள் அந்த பிரேரணையில் கூறப்பட்டுள்ளதை ஏற்கனவே செய்து விட்டோம் என்று கூறுகிறார்கள். இவ்விதம் பொய் பேசும் இலங்கையை சர்வதேசம் எப்படி அழுத்தம் கொடுத்து உண்மை பேச வைக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. சர்வதேசத்தை ஏமாற்றும் சிறிய நாடாக இலங்கை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டத்தில்தான் நாங்கள் உலகத் தமிழர் பேரவை மூலம் புலம் பெயர்ந்தவர்கள் வாழும் நாடுகள் முழுதும் அந்ததந்த நாடுகளின் அரசுகளை விழிப்பாக வைத்திருந்து அழுத்தம் கொடுத்து, இன்றைக்கு மகிந்த ராஜபக்சே பிரிட்டன் மாகாராணி பிறந்த நாளுக்காக இங்கிலாந்து போகிறார். அதற்கு எதிர்ப்புகளை தெரிவிக்க நாங்கள் முயற்சிகள் எடுக்கிறோம். அடுத்த காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆஸ்திரேலியாவில் நாங்கள் தொடங்கி வைத்தோம். இப்படி புலம் பெயர்ந்த மக்கள் விழிப்பாக இருந்து உள்நாட்டில் வாழும் மக்களுக்கு குரல் கொடுக்க வழி இல்லை, நாங்கள்தான் அதை செய்ய வேண்டும். குறிப்பாக நான் சொல்லும் செய்தி என்னவென்றால், புலம் பெயர்ந்த மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள், சர்வதேச ரீதியில் வேலை செய்யக் கூடியவர்கள் ஒரு அழுத்தத்தைக் கொடுக்க நீங்கள் உங்களித் திரட்டிக் கொள்ள வேண்டும். அரசியல் வாதிகளை மட்டும் நாங்கள் நம்பி இருக்க முடியாது, அவர்களுக்கு வேலை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது, நாங்கள் உண்மை நீதிக்காக- உலகத் தமிழர்களின் இடையே செயல்படும் இளைஞர்களை மதித்து உங்கள் பத்திரிகை மூலம் அவர்களின் சக்தியைத் திரட்டி அவர்களை செயல்பட வைக்க வேண்டும். ஏனென்றால் இளைஞகர்களுக்கு தெளிவான பார்வை இருந்தால், ஆழமான உறுதி இருந்தால் அவர்கள் செயல்படுவார்கள். பெரியவர்கள் தங்கள் கலை கலாச்சாரங்களைக் கூற முடியும் அல்லது உணர்ச்சி வசப்பட்டு சில வசனங்களைக் கூற முடியும். ஆனால் திட்டமிட்டு செயல்பட சக்தி இளைஞர்களுக்கு உண்டு. அதற்காகத்தான்அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இருபது ஐம்பது வயதிற்குட்பட்டவர்கள் தங்களின் மொழியை, திறமைகளை பாவித்து ஊடகம், கணிப்பொறி மூலம் உலகம் முழுதும் இந்த உண்மைகளைப் பரப்ப வேண்டும். உங்களின் சிறகின் ஊடாக தமிழர்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும். இந்தவிதமான அவர்கள் மற்ற நாடுகளுக்கும் இவற்றை அனுப்பி ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு பக்கத்தில் நாங்களே பலம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம் அந்த வலிமையின் ஊடாக வெளியில் நாங்கள் செயல்படவேண்டும்.
சிறகு: முள்ளிவாய்க்கால் துயரத்திற்குப் பிறகு முள்வேலியில் அடைக்கப் பட்டுள்ள தமிழர்கள் மறு குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள் என்று இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. முழுமையாக குடியமர்த்தப் பட்டு விட்டார்களா? அல்லது சிங்களர்கள் குடியேறுகிறார்களா? அதைப் பற்றி?
திரு. இம்மானுவேல்: முள்ளிவாய்க்கால் போர் முடிந்து மக்களை மீள் குடியமர்த்தி விடுவார்கள், சரண் அடைந்தவர்களை விடுவிப்பார்கள் இப்படி எல்லாம் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் எங்கள் எதிர்பார்ப்புகள் சிதைக்கப்பட்டு அங்கு புலிகள் இல்லாததன் காரணமாக- அதாவது எதிர்ப்பு இல்லாததன் காரணமாக- வடக்கு கிழக்கு பகுதியை சிங்கள மயமாக்கும் திட்டத்தில் செயல்பட்டு புத்த கோயில்களை அங்கே நிறுவி, தமிழர்களின் மொழி, கலை, கலாசாரம் அவற்றின் வேர்களை அழிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அங்கே நடைபெற்றுக் கொண்டிருப்பது மிகவும் கொடூரமாக உள்ளது. அங்கிருந்து ஒருவர் சொன்னார், எங்களுக்கு மதம் முக்கியமில்லை, இலங்கைதான் முக்கியம் என்று. அந்த இலங்கையை புத்த நாடாக மாற்றுகின்ற முயற்சி அங்கு நடக்கிறது. இன்று அங்கே நடக்கும் கொடூரமான செயல்களை வெளிநாட்டவர்களுக்கு விளங்க வைப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. போர் முடிந்து விட்டது, வெளிநாட்டில் போராட்டம் தொடருகிறது. ஆனால் இலங்கை அரசின் கொடூர இன அழிப்பு ஆழமாகப் போகிறது.
சிறகு: உங்கள் பொன்னான நேரத்தை சிறகு வாசகர்களுக்காக செலவிட்டதற்கு நன்றி. நிறைய செய்திகளை தமிழ் இளைஞர்களுக்கு கொண்டுசெல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. நிச்சயம் இந்த நேர்காணல் உலகத்தில் உள்ள அனைவர்க்கும் சென்று சேரும். அருட்தந்தை திரு. இம்மானுவேல் அவர்களின் பணி தொடர நமது வாழ்த்துகள். உலகத் தமிழினம் மீண்டும் அமைதியுடன், வளமாக வலிமையாக சுதந்திரம் பெற்ற நாடாக அமையும் என்ற நம்பிக்கையோடு நேர்காணலை நிறைவு செய்கிறோம்.
திரு. இம்மானுவேல்: உங்கள் முயற்சி தொடரட்டும். நன்றி.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
அறவழியில் ஈழம் விடுதலை பெறும் நாளே பொன்னாள் ! அதற்கு தயாராவதற்கு உலகத்
தமிழர்கள் பொருளாராதர உயர்வும், சமூக நீதியும், அறிவுக் கூர்மை பெற்ற இனமாக உருபெருவது அவசியம். எம்மானுவல் ஐயாவின் இந்த நேர்காணல் தெளிவான பாதையை நமக்கு காட்டுகிறது.
Sir,
I am Xavier Raja from kanyakumari DIST,
NEW NATION & THE WORLD TELESCOPE IN MY WEB
http://www.xavierraja.com