எலும்புப் புரை நோயை வருமுன் காப்போம்!
ஆச்சாரிJun 30, 2012
நம் வீடுகளில் உள்ள முதியோர்கள் அறுபதுகளுக்கு மேல் கூன் போட ஆரம்பித்துவிடுகின்றனர். அவர்களால் ஏன் கூன் போடாமல் வளையாமல் நேரே நிமிர்ந்து நிற்க முடிவதில்லை என்று என்றாவது நாம் யோசித்து பார்த்ததுண்டா? அப்படி யோசித்தோமானால் அதற்கு பதில் ஆஷ்தியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு புரை நோய்தான் காரணம். இந்நோய் வந்தால் எலும்பு வலுவிழந்து நாளடைவில் காய்ந்த மாவு போல் நொறுங்கி உதிர ஆரம்பிக்கும். முதுகெலும்பில் ஏற்படும் தொடர் மயிரிழை முறிவுகளே மனிதனை அறுபதுகளுக்கு மேல் கொக்கி வடிவில் வளைத்து விடுகிறது. பொதுவாக இந்நிலை அதிக அளவில் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடையே காணப்படுகிறது. வயது ஏற ஏற நம் உடலில் உள்ள புதிய எலும்புகள் உருவாகும் வேகம் தளர்வடைகிறது. புதிய மாற்று எலும்புகள் உருவாகும் வேகம் குறைய ஆரம்பிக்கும் அதே சமயம் பழைய எலும்புக் கூறுகள் உடலில் இருந்து வேகமாக நலிவடைய ஆரம்பிக்கிறது. இத்தருவாயில் எலும்புகள் வலுவிழந்து எலும்புப் புரை நோய் ஆரம்பம் ஆகிறது.
நம் எலும்பு வலுவிழக்கும்போது முதுகுத்தண்டு எலும்புகள் மட்டும் இன்றி உடம்பில் உள்ள அனைத்து எலும்புகளும் நொறுங்க ஆரம்பிக்கிறது. ஆஷ்தியோபோரோசிஸ் முற்றிய நிலையில் சில சமயங்களில் சும்மா உட்கார்ந்து எழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படும். இந்நிலை வந்தால் படுத்த படுக்கையில் ஓய்வாக இருக்கும் நிலை வந்துவிடும். வாழ்வின் அன்றாட நிகழ்வுகளைக்கூட மிக கடினமாக்கிவிடும். பிறர் உதவி இன்றி வாழமுடியாது. இதை கவனத்தில் கொண்டு நாம் இளம் வயதிலேயே பேணுதல் வேண்டும்.
பெண்கள் சந்திக்க கூடிய முக்கிய சிக்கல்:
எலும்புரை நோய் யாரை வேண்டுமானாலும் தாக்கக் கூடியது, எனினும் இது பெண்களையே பெரும்பாலும் தாக்கக்கூடியதாக உள்ளது. அறுபது வயதுடைய பெண்களை எடுத்துகொண்டோமானால் (4:1) நான்கில் ஒரு பெண்ணுக்கு இந்நோய் ஏதாவது ஒரு நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது (எலும்பு புரை நோய் முற்றிய நிலையிலோ அல்லது ஆரம்ப, நடு நிலையிலோ கண்டறியப்படுகிறது). இவ்வாறு பெண்கள் தாக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஆண்களின் எலும்பு அடர்த்தியைவிட பெண்களின் எலும்பு மிகவும் அடர்த்தி குறைவானது, சிறியது, எடை குறைவானது. மேலும் பேறு காலத்திற்குப் பின் குழந்தைக்கு பால் புகட்டுவதால் பெண்களின் எலும்பு வலுவிழக்கிறது. மாதவிடாய் இறுதிக் காலங்களில் (மெனோபாஸ்) பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு நீர் சுரப்பது நின்றுவிடுகிறது. ஈஸ்ட்ரோஜென் எலும்பு இழப்பை தவிர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு ஒரு பெண் எழுபது வயதை எட்டும்போது கிட்டத்தட்ட அவளுடைய மூன்றில் ஒரு பங்கு எலும்பு அடர்த்தியை இழந்து விடுகிறாள். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்த்தோமேயானால் எலும்பு புரை நோய் பெண்களையே பெரும்பாலும் தாக்கக்கூடியதாக உள்ளது பெரிய வியப்பை அளிப்பதிற்கில்லை.
மேற்கூறிய காரணங்கள் தவிர்த்து இன்னும் சில காரணங்களும் உள்ளன.
- எலும்பு புரை நோய் குடும்பத்தில் முன்னதாக யாருக்கும் இருக்குமேயானால்.
- மெல்லிய , திண்ணமான எலும்பு அமைப்புடைய பெண்கள்.
- குழந்தைக்கு பால் புகட்டிய அல்லது குழந்தை பேறு அடையாத பெண்கள்.
- நாற்பத்தி ஐந்து வயதிற்குள்ளாகவே மாதவிடாய் இயற்கையாக நின்றுவிடல் அல்லது கர்ப்பப் பையை அகற்றி விடுவதால் மாதவிடாய் நின்றுவிடும் பெண்கள் எலும்பு புரை நோயால் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர்.
- மேலும் நாம் தவறாக கடைப்பிடிக்கும் பழக்கங்களும் இந்நோய் வருவதற்கு அதிக வழிவகுக்கிறது.
- போதுமான அளவு உடல் பயிற்சி மேற்கொள்ளாதது.
- புகை பிடித்தல். அதிக அளவு மது அருந்துதல்.
- போதுமான அளவு சுண்ணாம்பு சத்து உடலுக்கு கிடைக்காதது போன்றவைகள் பாதிப்பை உண்டாக்குகிறது. சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை குழந்தை பருவம் முதல் இந்நாள் வரை நாம் உட்கொண்ட சுண்ணாம்பு சத்து அளவு வரை கூட இதில் சேர்த்தி. எனவேதான் குழந்தையானாலும் பெரியவர்களானாலும் உணவில் பால், தயிர், சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள காய், கனிகளை சேர்த்துக்கொள்ளல் அவசியம்.
ஆனால் நம் குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் சிலர் எல்லாம் தெரிந்தது போல் அதுதான் காபி, டீயில் பால் உள்ளது எனக்கு உறுதியான எலும்பு தானாக அமையும் என்பர். இவர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டியது காபியினால் எலும்புகளுக்கு ஏதும் நன்மை கிடைக்காது. அதிக அளவு காபி வேதிப் பொருள் உடலில் சேருவதால் எலும்புகள் நாளடைவில் வலுவிழந்துவிடும்.
கூடுதலாக நீரிழிவு நோய், அதி தைராய்டிசம், பசியின்மை, மூச்சுப்பாதை அழற்சி மற்றும் எம்பிசீமா போன்ற மருத்துவ நிலைகளும் ஆஷ்தியோபோரோசிசை எளிதில் சுலபமாக உண்டாக தூண்டுதல் செய்யலாம்.
ஆஸ்துமா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டெராய்டுகள் (steriods), மற்றும் கீல்வாதம் என்னும் ஆர்த்ரைட்டிஸ், வலிப்பு நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து (antivconvulsants), நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, அலுமினியம் கலந்த மருந்துகள், சிறுநீர் நீக்க ஊக்கிகள் (diuretics) ஆஷ்தியோபோரோசிஸ் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மிக அதிக தைராய்டு ஹார்மோன்கள் எடுத்துக் கொள்வது மற்றொரு காரணியாகும்.
நோய் ஆரம்பகால அறிகுறிகள்:
எலும்பு புரை நோய் ஆரம்ப கால அறிகுறி எதையும் வெளி காண்பிப்ப தில்லை. அறிகுறிகள் காண்பிக்கும் நேரம் நோய் அநேகமாக முற்றி எலும்புகள் உடையும் தருவாயை அடைந்திருக்கும். எனவே வரும் முன் காப்பதே சமயோசிதம். எலும்பு புரை நோய் வந்ததற்கான சந்தேக அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவது சாலச் சிறந்தது.
நோய் வந்ததற்கான அறிகுறிகள்:
உயர இழப்பு:
ஆஸ்டியோபோரோசிஸ் மேம்பட ஆரம்பித்த உடன் ,உயரம் குருக, சுருங்க ஆரம்பிக்கும், வயிறு பிதுங்கி வெளியே துருத்த ஆரம்பிக்கும், அல்லது மணிக்கட்டு , இடுப்பு எலும்பு முறிவுகள் ஒரு அறிகுறியாக தென்படும். நாளடைவில் இருமும்போது, தும்மும் போதுகூட முதுகு வலிக்கும், அதிக நேரம் நின்றால், உட்கார்ந்தே இருந்தால் முதுகு வலிக்கும், சற்று படுத்து ஓய்வு எடுத்தால் உடனே இடுப்பு, முதுகு வலி போய்விடும்.
பிற அறிகுறிகள்: அதிகம் நடக்கும், வேலை பார்க்கும் நாட்களில் அவ்வப்போது நம்மையும் அறியாமல் கூனல் போட தோன்றும். பின் கொஞ்சம் கொஞ்சமாக முதுகெலும்பு முன்னோக்கி வளைந்து நிரந்தரமாக பின்கூனல் விழுந்துவிடும். வெளி நாடுகளில் இக்கூனலை அறுவை சிகிச்சை செய்து உலோக தகடு கொடுத்து நிமிர்த்துகின்றனர்.
எலும்புப் புரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சில சோதனைகள் உள்ளன, அதனால் எலும்புப் புரை ஆபத்து காரணிகள் தென்பட்டவுடன் மருத்துவரை கலந்து பேசுவது மிகவும் முக்கியமானது. எடுத்துக்காட்டாக மருத்துவர் அளவுக்கு அதிகமாக சுண்ணாம்பு (கால்சியம்) சத்து சிறுநீரில் இருந்து வெளியேறுகிறதா என்று சோதனை செய்து பார்க்கலாம். பின் எக்ஸ்ரே மூலம் எலும்பின் அடர்த்தியை கண்டறிய முடியும். இப்பரிசோதனையை போதிய இடைவெளியில் அடிக்கடி செய்து மருத்துவர் எலும்பு இழப்பு விகிதத்தை கண்காணிக்க முடியும்.
சிகிச்சை முறைகள்:
பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் எலும்பிழப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது. சில சிகிச்சையின் மூலம் எலும்பிழப்பு வேகத்தை குறைக்கலாம், சில நேரங்களில் எலும்பு இழப்பை மருந்துகளின் மூலம் தலைகீழாக மாற்றி நிறுத்திவிடலாம். இவை அனைத்தும் நோயாளிகளின் உடல் நிலவரத்தை பொறுத்து உள்ளது. எனவே தான் சிகிச்சைக்கு முன் மருத்துவரை கலந்து விளக்கம் பெறுவது மிக முக்கியம். சில மருந்துகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளும், எளிதில் பலன் தரும், சிலருக்கு வேலை செய்யாது.
வருமுன் காப்பதே எளிய வழி. அப்படியே வந்துவிட்டால் எலும்பிழப்பை நிறுத்த, தொய்வுப்படுத்த நாம் கைக்கொள்ள வேண்டிய சில எளிய வழிமுறைகள் சிலவற்றை கீழே காண்போம்:
நாம் உண்ணும் உணவு சமச்சீரான உணவா, அதில் சரியான அளவு சுண்ணாம்புச் சத்துள்ளதா என்று கவனம் கொள்ள வேண்டும். பால், பால் பொருட்கள், கொட்டை பருப்பு வகைகள், சில கடல் உணவுகள், கீரை வகைகள் சுண்ணாம்பு சத்து நிறைந்தது. கொழுப்பு(concern about cholesterol and weight ), எடையை கவனத்தில் கொள்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர், பாலாடை கட்டி உட்கொள்ளலாம். சுண்ணாம்பு சத்தை உறிஞ்சுவதற்க்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது, எனவே சுண்ணாம்பு சத்தைப் போன்று தாது உப்பு , வைட்டமின்களும் உடலுக்கு அவசியம் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- உடல் இயக்கத்தை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். நடைப் பயிற்சி, மிதமான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி போன்றவை உடலை சுறுசுறுப்பாகவும், எலும்புகளை திடமாக வைத்துக்கொள்ளவும் உதவும். ஆனாலும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகி, தான் செய்யப்போகும் பயிற்சி அவரவர் உடல் நிலைக்கேற்ப உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- புகை பிடிப்போர் புகைத்தலை நிறுத்தவேண்டும்.
- குடிப் பழக்கம், காபி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளவராயின் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்தல் வேண்டும். காபீன் வேதிப்பொருள் எலும்பை வலுவிழக்கச் செய்யும்.
சரி ஆஸ்டியோபோரோசிஸ் இருப்பதைக் கண்டறிந்த பின் எப்படி பாதுகாப்புடன் நடந்துகொள்வது?
கீழே விழுந்துவிடாமல் கவனமாக இருப்பது மிக முக்கியம். கீழே விழுந்து எலும்பு உடைந்தால் மீண்டும் சேருவது கடினம், அப்படி விழுந்து விட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட பல எலும்புகள் நொறுங்கி ஊனமாக கூட வாய்ப்பிருக்கிறது, இது பல சமயங்களில் படுத்த படுக்கையில் கொண்டு போய்விடும்.
கீழே விழும் விபத்தை தவிர்க்க கடைப்பிடிக்கக் கூடிய சில எளிய வழிமுறைகள்:
- குளியல் தொட்டிக்கு பதில் உட்கார்ந்து குளிப்பதற்கு ஏதுவாக குளியலறை அமைக்க முடியுமானால் நல்லது.
- குளியல் அறை சுவற்றில் கைப்பிடி அமைத்தல்.
- கூடுமான அளவு படிகளில் ஏறும்போது இறங்கும்போது கைப்பிடி சுவற்றை, கம்பியை உபயோகிப்பது.
- வீட்டில் பளிச்சென்று மின்விளக்கேற்றி வெளிச்சமாக வைக்கவேண்டும்.
- நடக்கும் பாதையை இடறுகள் இன்றி, பொருட்களை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- முடியும் வரை இவ்வசதி இருந்தால் (elevator or escalator ) மின் தூக்கியை உபயோகப் படுத்துதல் நல்லது.
- காலுக்கு பொருந்தும், சரியான அளவு காலணியை தேர்ந்தெடுத்து அணிவது அவசியம்.
- உயரமான நாற்காலியில், ஏணியில் ஏறுவதை தவிர்ப்பது நல்லது. உயரத்தில் உள்ள பொருட்களை எடுக்க பிறர் உதவியை தேடிக்கொள்ளலாம்.
- தரையில் கீழே உள்ள பொருட்களை எடுக்கும்போது குனிந்து எடுப்பதை தவிர்த்து உட்கார்ந்து, குத்துக்காலிட்டு எடுப்பது நல்லது.
- துணி துவைத்து அலசும்போது நின்றவாறே குனிந்து அலசுவதை தவிர்த்து உட்கார்ந்து குத்துக்காலிட்டு அலசுவது நல்லது, இது முதுகு வழி, இடுப்பு வழி வருவதை தவிர்க்கும். முக்கியமாக கனமான போர்வை, துண்டு, மிதியடிகளை இவ்வாறு குத்துக்காலிட்டு அலசுவது நல்லது.
- எப்பொழுதுமே கனமான பொருட்களை தரையிலிருந்து உயரே தூக்க முயல வேண்டாம்.
- தூக்கம், மயக்கம் தரும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது, அப்படி எடுத்துக்கொள்ளும் நேரங்களில் ஓய்வில் இருத்தல் நல்லது அல்லது மருத்துவரை அணுகி மாற்று மருந்து பெறுவது தகும். கீழே விழும் வாய்ப்பை குறைக்கும் முறைகளை கையாண்டால் ஓரளவு விபத்தைத் தவிர்க்கலாம்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
பயனுள்ள கட்டுரையை தருவித்த சிறகுவிற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்…
மிகவும் நன்றி.