சுற்றுலாவும் சுற்றுச் சூழலும்!
ஆச்சாரிAug 15, 2012
சுற்றுலா, மனித அவசர ஓட்டங்களுக்குக் கொஞ்சம் ஒத்தடம் தரும் ஒன்று. இயற்கை மடியில் ஓய்வுகொண்டு, பசும் புல்வெளிகளில் கண்களை குளிரூட்டிக் கொண்டு மனதுக்கு புத்துணர்ச்சியை ஏற்றிக் கொண்டு வழக்கமான பணிக்குத் திரும்புவது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு. அந்தச் சுற்றுலாத் தலங்கள் இப்போது அதிக மாசுபட்டுக் கொண்டு வருகிறது. மனதுக்கு இதம் தரும் இயற்கையை நாம் சிதைக்கலாமா என்று சிந்திக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த உதகமண்டலம், கொடைக்கானலின் இயற்கை எழில் இப்போது இல்லை. காரணம் மனித அலட்சியம்.
சுற்றுலா வளர்ச்சியால் உலக நாடுகளின் இயற்கைச் சூழல் பெரிதும் பாதித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச் சூழல் இயல் வல்லுனர்களும் கருதுகின்றனர். சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடங்களில் சூழல் மாசு அடைவதாக அப்பகுதிகளில் வாழும் மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். வரைமுறையற்ற ஒழுங்குபடுத்தப்படாத சுற்றுலாவினால் பல பாதிப்புகள் நேருகின்றன என்று எதிர்ப்புக் குரல் ஒலித்து வருகிறது.
சுற்றுலா வளர்ச்சியும் விளைவுகளும்
உலகப் பயணங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனம் (W.T.T.O.) இதுபற்றி தீவிரமாக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர். இவ்வமைப்புகள் சுற்றுச் சூழல் வல்லுனர்களிடம் ஆலோசனை பெறத் தொடங்கியுள்ளது. 1993 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெற்ற மாநாட்டில் சுற்றுச் சூழலுக்குப் பங்கம் விளைவிக்காமல் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பிற நாடுகளைப் போன்றே இந்திய அரசும் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றியது. மத்திய அரசின் வனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை, சுற்றுலா வளர்ச்சிக்காக நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என கண்காணித்து வரும். எந்தவொரு சுற்றுச் சூழல் கட்டமைப்பும் இந்த அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலா வளாகத்தை நிறுவ முடியும். ஒரு நாட்டின் இயற்கைச் சூழலை மாற்றி அமைக்க சுற்றுலா நிறுவனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
19 ஆம் நூற்றாண்டு வரை இயற்கை மனிதனது தேவைகளுக்காகவே படைக்கப்பட்டுள்ளது. அதனை மனித இனம் தனது விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்து இருந்து வந்தது. பெருந் தொழிற்சாலைகள் கட்டப்பட்டன, விண்ணை முட்டும் அடுக்குமாடி வீடுகள் எழுந்தன. நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. நாடுகளும் நகரங்களும் நீண்ட ரயில் பாதைகளால் இணைக்கப்பட்டன. இவையெல்லாம் இயற்கையின் கொடைகளான காடுகளையும், கடற்கரைகளையும் நீர்நிலைகளையும், நீரூற்றுகளையும் அழிப்பதன் மூலம் உருப்பெற்றன. இந்தியாவில் சுற்றுச் சூழலை அழிப்பது தாமாகவே நடந்தது.
கானகம் என்பது எல்லையற்ற அன்பினையும், தயவினையும் வழங்கிடும் ஓர் இயற்கை அமைப்பு. அது தனக்கென தேவை என்று மனிதரிடம் எதுவும் கேட்பதில்லை. தனது உற்பத்திப் பொருட்களை மனித குலத்திற்கு கொடையாக வழங்குகிறது. உயிரினங்களுக்கு வாழ்வளிக்கிறது. தனது மரங்களை வெட்டிட கோடரியுடன் வருவோருக்குக் கூட நிழல் அளிக்கும் நற்குணம் படைத்தது கானகம் என்று கௌதம புத்தர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புவியுலகு அனைவருக்கும் தேவையான அனைத்தையும் வழங்கவல்லது, ஆனால் பேராசைக்காரர்களை இப்புவியால் திருப்தி செய்ய இயலாது என தேசத் தந்தை காந்தி கூறியுள்ளார்.
மனித இனம் இயற்கைச் சூழலின் மீது நடத்திய படையெடுப்புகளை தொழிற் புரட்சி என்று அழைக்கப்படுகிறது. இப்புவியில் புதைந்துள்ள இயற்கை வளங்களான கனிமங்கள், தாதுப் பொருட்கள், நிலக்கரி, எண்ணெய்கள், வாயுக்கள் ஆகியவற்றை உறிஞ்சி எடுத்து தேவைக்கு அதிகமாக பயன்பாட்டுப் பொருட்களாக உற்பத்தி செய்யப்படுவதை தொழிற் புரட்சி என்றும், பொருளாதார வளர்ச்சி என்றும் கூறி வருகிறோம். பெட்ரோலியத்தைப் பெற புவிப் பந்தின் மீது ஆழ்துளைகள் போடப்பட்டன. தொழிற்சாலைகள் உலகின் மேற்பரப்பை மொய்த்தன. நீரும் காற்றும் மாசு அடைந்துள்ளது. நஞ்சு கலந்த கழிவோடைகளும், தொழிற்சாலை குப்பைகளும் பெருகி வழிந்து கடலைச் சென்றடைகிறது.
ஒழுங்குபடுத்தப்படாத சுற்றுலாவும் இயற்கைச் சூழலை பெரிதும் பாதித்துள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் கடற்கரைகளையும், மலைப் பாதைகளையும், வனவிலங்கு சரணாலயங்களையும் மொய்த்து அசுத்தப்படுத்தி விடுகின்றனர். புராதன நினைவுச் சின்னங்களும், கலைப் பொருட்களும் சுற்றுலாவினரால் சிதைக்கப்படுகின்றன.
பாதுகாப்பு முயற்சிகள்
சுற்றுலா மேலாண்மை என்பது தற்போது சுற்றுலாவையும் சுற்றுச் சூழலையும் இணைத்து பாதுகாக்கும் ஓர் செயல்பாடு ஆகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எல்லோ ஸ்டோன் தேசியப் பூங்கா (Yellow Stone National Park) மக்கள் வருவதைத் தடை செய்தது. இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஏரிகள் மாவட்டத்தின் (Lake District) இயற்கை அழகினைக் காத்திட ஒரு பாதுகாப்புக் குழு செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஏரிகளின் சூழலையும், நீரையும் மாசுபடாமல் சுற்றுலாவினரிடம் இருந்து இக்குழு பாதுகாக்கிறது.
பல காடுகள் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக (Protected Area) அறிவிக்கப் பட்டுள்ளன. வனவிலங்கு சரணாலயங்களும், இத்தகைய சுற்றுச் சூழல் காப்பு மையங்களே ஆகும். காடுகளிலும் கடற்கரைகளிலும் சுற்றுலா விடுதிகள் கட்டிட இந்திய அரசு பல விதிகளை வகுத்துள்ளது. கடற்கரையோரக் கட்டிடங்கள் தென்னை மரங்களின் உயரத்திற்கு மேல் அமையக்கூடாது. மாநகர சுற்றுலா விடுதிகள் கட்டிடும் பணி அரசு அனுமதி பெற்ற பிறகே தொடங்கப்பட வேண்டும். அழகிய கடற்கரைகளைக் கொண்ட ஸ்பெயின் நாட்டின் கடற்கரைச் சுற்றுலா, மிகவும் புகழ்பெற்றதாகும். ஆனால் அக் கடற்கரையோரம் எழுந்துள்ள ஏராளமான பல மாடி கான்கிரீட் கட்டிடங்களாலும் சுற்றுலா விடுதிகளாலும் அங்கு இயற்கைச் சூழல் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இந்தியக் கடற்கரைகளில் விடுதிகள் கட்ட விதிமுறைகள் உள்ளன. கடலோரத்தில் இருந்து 250 மீட்டருக்கு அப்பால்தான் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது இந்திய அரசின் விதி. தற்போது இந்த தூரம் 500 மீட்டர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை அப்படியே பின்பற்றுகிறார்களா என்றால் கிடையாது.
சுற்றுச் சூழல் என்பது நிலமும், நீரும், காற்றும் அதில் வாழும் உயிரினங்களான தாவரங்களும், பறவைகளும், விலங்கினங்களும் சேர்ந்த அமைப்பு ஆகும். மேலும் சுற்றுச் சூழல் மக்களின் வாழக்கையோடு நெருங்கிய தொடர்புடையது. அவர்களது ஆக்கங்களும் இச் சூழலை மாற்றி அமைத்துள்ளன. சுற்றுச் சூழல் மனித இனத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலையினை மாற்றிடும் தன்மை கொண்டது. இயற்கைச் சூழலும், மனித ஆற்றலால் உருவாக்கப்பட்ட செயற்கை சூழலும் சுற்றுலாவின் அடிப்படைத் தேவைகளாகும். சுற்றுலாவினை மேம்படுத்த இயற்கைச் சூழலை மாற்றி அமைத்தல் தவிர்க்க இயலாதது, ஆயினும் இத்தகைய மாற்றங்கள் அழகுணர்வோடும் இயற்கைச் சூழலை பாதிக்காத வகையிலும் அமைய வேண்டும். மனிதனின் பேராசைக்கு இயற்கை பலியாகக் கூடாது.
சுற்றுச் சூழல் மாசுபடல்
இயற்கைச் சூழலின் மீது தாக்கம் நிகழாவண்ணம் சுற்றுலாவினை வளர்ச்சியுற செய்த நாடுகள் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை. சுற்றுலாவினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கியபோதும் இந்நாடுகள் சுற்றுச் சூழலையும் பாதுகாத்துள்ளன. மக்கள் தொகை பெருக்கத்தாலும், தொழில்நுட்பக் குறைபாடுகளாலும் சுவிட்சர்லாந்து பல ஆண்டுகளுக்கு முன்பு பெரிதும் மாசு அடைந்த இயற்கைச் சூழலைக் கண்டது. தற்போது இந்தியாவும் இமயமலைப் பகுதிகளில் இத்தகைய நிலைமையைக் காண நேர்ந்துள்ளது. மலைச் சாரல்களில் உள்ள அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு சுற்றுலாத் தலங்கள் எழுந்துள்ளன. இதனால் மண் அரித்தல், நிலச் சரிவு, மழை வெள்ளம், சமவெளிகளில் பேரழிவு ஆகிய விளைவுகள் ஏற்பட்டன. இந்தியாவிலும் நேபாளத்திலும் மலைச் சாரல்களின் நிலைமை இதுவே.
ஒரு நாட்டின் இயற்கைச் சூழலையும் அழகிய தோற்றத்தையும் பாதுகாப்பதோடு அதன் இயற்கைச் செல்வத்தை திறமையாக மனித இனம் பயன்படுத்திக் கொள்வதை சுற்றுச் சூழல் பாதுகாப்பு (Conervation Of Ecology) என்கிறோம். மனிதனின் ஆக்கப் பணிகள் இயற்கைச் சூழலின் தனித்தன்மையை காத்திட உதவ வேண்டும். ஒரு நாட்டின் நில அமைப்புக்குக் குந்தகம் விளைவிக்காத நிர்மாணப் பணிகள் சுற்றுச் சூழலைக் காத்திடும் வழிகளில் ஒன்றாகும்.
சுற்றுலாவினர் கழிவுப் பொருட்களை அதற்கென நிறுவப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும், மலைப் பாதைகளில் பயணம் செய்வோர் சாலையின் மருங்கில் எவ்வித கழிவுப் பொருளையும் எறியக் கூடாது என்பன போன்ற பல விதிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளாக அரசுகள் வகுத்து வைத்துள்ளது. இதனை எத்தனை சுற்றுலாப் பயணிகள் பின்பற்றுகிறார்கள்? ஆகையால் சுற்றுச் சூழல் கெடாமல் இருந்தால்தான் சுற்றுலா சிறக்கும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும். அந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும்
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
சுற்றுலாவும் இயற்கை குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வும் கொண்ட நல்ல கட்டுரை. இந்தியாவில் சுற்றுலா இடங்கள் மட்டுமல்ல அனைத்து இடங்களும் மாசுபட்டுள்ளது. இது தவிர பேரிரைச்சல் தரும் சாலைகளும் வாகனங்களும் மனித வாழ்விற்கு ஒவ்வாத நிலைக்கு கொண்டு செல்கின்றது.
very good & i like tis profie