மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செய்யுள்களை எளிதில் புரிந்து கொள்வது எப்படி? – 6

ஆச்சாரி

Jan 15, 2013

இகழ்தல் என்றால் மறத்தல் கவனமின்மை மதியாமை

[செய்யுள்களை நேரடியாகப் புரிந்துகொள்ளச் சில சீரான நெறிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று அன்றாடம் பழகிய சொற்கள்போல் ஒலித்தாலும் பல சொற்கள் எதிர்பாராத பொருள்களிலும் வழங்குவதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது.]

இன்று பலரும்  இகழ்தல் என்றால் ஒருவரை வாயாலே அவமதிப்பாகப் பேசுவதையே உடனே நினைக்கிறோம்:  பேச்சுக்கு முதன்மை தோன்றுகிறது பலருக்கும் .  ஆனால் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களில் இகழ்தல் என்பது மறத்தல், பாராமை, கவனமின்மை, புறக்கணிப்பு அல்லது மதியாமை என்ற அடிப்படைப் பொருளிலே நேரடியே வழங்கும்.  இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் பலசெய்யுள்களைத் தவறாகப் புரிந்துகொள்ளநேரிடும். ஏனெனில் அவற்றில் பேச்சுக்கே இடமில்லை.  இராக்காவலன் ஒருவன் பாதுகாப்பதில் கவனமின்மை போன்ற இடங்களில் கட்டாயம் குழப்பங்கள் நேரிடும்.

இகழ்தல் என்றால் மறதி:

சங்கப் பாடலாகிய அகநானூற்றில் களவுக்காதலில் ஈடுபட்டுள்ள தலைவன் தலைவியின் மாளிகையின் அருங்காவலையும் மீறி நழுவிஅவளோடு அளவளாவுவதைப் பாடும் ஒருபாட்டில்

நடுநாள் அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி …

நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக” (அகநானூறு:162:6,7,9)

[நடுநாள் = நள்ளிரவு; கடி= காவல்; இகழ் = கவனியாதிரு; பதம் = நிலைமை, சமயம், வாய்ப்பு; நகர் = மாளிகை; சிறை = பக்கம்]

இகழ்பதம் என்ற சொல் வழங்குகிறது. இங்கே “காவலர் இகழ்பதம் நோக்கி” என்றால் “காவலர்கள் கவனிக்காத நிலைமை அல்லது சமயம் பார்த்து” என்று பொருள்.  “நள்ளிரவில் அரிய காவல்காக்கும் காவலர்கள் கவனிக்காத சமயம்பார்த்துப் பெரியமாளிகையின் ஒருபக்கம் நின்றேனாக” என்று அந்தப் பாடலடிகளுக்குப் பொருள்.

நற்றிணையிலும்

துஞ்சாக் காவலர் இகழ்பதம் நோக்கி

இரவின் வரூஉம்” (நற்றிணை: 98:9-10)

என்பதுவும் அப்படியே “தூங்காத காவலர்கள் கவனிக்காத சமயம் பார்த்து இரவிலே வருவான்” என்று பொருள்கொள்க.

இகழ்தல் என்பதற்கு அசாக்கிரதையாக இருத்தல் என்று சென்னைப் பேரகராதி பொருள் சொல்லி மாணிக்கவாசகரின் “பிரியார் என இகழ்ந்தேன்” (திருக்கோவையார்: 340) (“பிரியமாட்டார் என்று கவனமின்றி இருந்துவிட்டேன்”) என்ற சொற்களைச் சான்றாகச் சொல்கிறது.

திருக்குறளில் பொச்சாவாமை என்ற அதிகாரத்திலே இரண்டு தடவை இகழ்தல் என்ற வினைச்சொல் பயில்கிறது; அங்கே அதன்பொருள் மறத்தலே யாகும். பொச்சாவாமை என்றால் மறவாமை என்று பொருள். பொச்சாத்தல் என்றால் மறத்தல் என்றும் அவன் பொச்சாந்தான் என்றால் அவன் மறந்தான் என்றும் பொருள்.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்; செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.” (குறள்: பொச்சாவாமை: 54:1)

என்ற இந்தக்குறளில் “செய்யாது இகழ்ந்தார்க்கு” என்பதற்குப் பரிமேலழகர் “செய்யாது மறந்தவர்க்கு” என்று பொருளுரைக்கிறார்.  எனவே அந்தத் திருக்குறளின் பொருள்: “[இன்றியமையாத உரிய கடமைகள் என்று] புகழ்ந்து கூறியவற்றைக் கவனித்துச் செய்தல்வேண்டும்; அப்படிச் செய்யாமல் மறந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மை இல்லை” என்பதாகும்.

அதே பொச்சாவாமை அதிகாரத்தில் இகழ்ச்சி என்ற சொல் வழங்குகிறது:

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக; தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து” (திருக்குறள்: பொச்சாவாமை: 54:9)

என்ற குறட்பாவின் “இகழ்ச்சியிற் கெட்டாரை” என்பதற்குச் “சோர்வால் கெட்டவர்களை” என்று பரிமேலழகர் உரைக்கிறார். அந்தச் சோர்வு என்பதற்கும் பொருள் மறதிதான்; அந்தச்சொல்லே அந்த அதிகாரத்தின் முதற்குறளில்

இறந்த வெகுளியின் தீதே, சிறந்த

உவகை மகிழ்ச்சியிற் சோர்வு” ” (திருக்குறள்: 54:1)

என்று மறதி என்ற பொருளில் வழங்குகிறது! பரிமேலழகரும் அதே குறளுக்கு “மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது” என்று உரைக்கிறார்.

மற்ற குறள்களிலும் இகழ்தல் என்றால் அவமதியாமை என்ற அடிப்படைப் பொருள்தான் உண்டு.  தேவையின்றி அவமதிப்பாகப் பேசுவதை மட்டும் பொருளாகக் கொள்ளக்கூடாது.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை” (திருக்குறள்: 16:1)

என்ற குறட்பாவுக்குப் பரிமேலழகர் இகழ்வார் என்பதற்கு “அவமதிப்பாரை” என்று பொருள்சொல்லி “இகழ்தல்  மிகையாயின செய்தலும் சொல்லுதலும்” என்று அவமதிப்பின் வெளிப்பாடுகளாகச் செயலையும் சொல்லையும் கூறுவதைக் கவனிக்கவேண்டும்.

மறத்தலும் அவமதிப்பும் ஒரே பொருட்குறிப்பே. அவமதிப்பு என்ற சொல் வடமொழியிலிருந்து பெற்றது. புறக்கணிப்பு என்று தமிழிலே சொல்லலாம்.  இரண்டுக்கும் பொருள் பாராமல், நினையாமல் அல்லது கண்டுகொள்ளாமல் இருத்தல் என்றே பொருள். மதி என்ற வடமொழிச்சொலின் பொருள் நினைப்பு.  ஒருவரை மதித்தல் என்றால் பெரிதாக நினைத்தல் என்று பொருள்; அவமதித்தல் என்றால் கீழாக அல்லது ஒதுக்கமாக நினைத்தல்.

இகழ்தல் என்ற சொல்லைப் போற்றல் என்ற சொல்லோடு ஒப்பிட்டால் ஒன்று தெளிகிறது. போற்றுதல் என்பது பழைய இலக்கியங்களில் நேரடியாகக் கவனித்தல் பாதுகாத்தல் மதித்தல் என்ற அடிப்படைப்பொருளிலேயே வழங்குவதைக் காண்கிறோம். (“பலர்நின்று போற்றினும்” (குறள்:47:8) = “பலர் இருந்து கவனித்தாலும்”) . அதுபோல் போற்றுதலுக்கு எதிர்மறையான இகழ்தல் என்பதுவும் மறதி, புறக்கணிப்புக், கவனமின்மை என்ற அடிப்படைப்பொருளிலேயே வழங்குவதையும் காண்கிறோம்.

முடிவுரை:

சங்கஇலக்கியங்களிலும் திருக்குறளிலும் இகழ்தல் என்ற சொல் மறத்தல் கவனமின்மை என்ற பொருள்களில் வழங்குவதைத் தெளிவாகக் கண்டோம். வாயாலே அவமதிப்பாகப் பேசுதல் என்று பழைய இலக்கியங்களில் காண்பதில்லை. எனவே இதனைச் சிறப்பாகக் கருத்திலே கொண்டு பழைய இலக்கியங்களை ஓதினால் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். பயனும் இன்பமும் பெறலாம்.

பொதுவாகவே அன்றாடச் சொற்கள்போல் ஒலிக்கும் பழக்கப்போலிச் சொற்களையும் விழிப்போடு கவனமாக ஓதவேண்டும் என்னும் நெறிமுறைத்தெளிவும் கிடைக்கும். மேலும் தமிழ்மொழிக் கல்விமுறையும் மாறித் தேர்வுகளில் இப்படிச் செய்யுள்களின் சொற்றொடர்களின் பொருளை வெளிப்படையாக வினாவி மதிப்பிடவேண்டும்; அப்பொழுதுதான் தமிழர்கள் இலக்கியப்பயன்பெற முடியும். மொழியும் வாழும்.

Then, the candidate is brought back into the room, the chairperson announces the committees decision, and a short http://writemypaper4me.org/ discussion ensues concerning the conditions attached to the decisions, if any

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “செய்யுள்களை எளிதில் புரிந்து கொள்வது எப்படி? – 6”
  1. வேம்பையன் தொல்காப்பியன் says:

    கட்டுரையாசிரியர் எடுத்துக் காட்டியுள்ள திருக்குறள்களின் பொருள் பொதிவை அறிந்து வைத்திருந்தாலும் ‘இகழ்தல்’ என்பதன் சங்க காலப் பயன்பாட்டை, பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவியமைக்கு நன்றி.

அதிகம் படித்தது