மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜாங்கோ – திரைப்பட விமர்சனம் (DJANGO UNCHAINED)

ஆச்சாரி

Apr 15, 2013

அமெரிக்காவின் இருண்ட பக்கங்களை இவ்வளவு நேர்மையாக இதுவரை யாரும் புரட்டிப் போட்டதில்லை. வெள்ளையர்கள் அமெரிக்க கறுப்பின மக்களை எந்த அளவுக்கு, அடிமைகள் என்ற பெயரில் மிருகவதைக்கு உள்ளாக்கி வைத்து இருந்தனர் என்பது இதுவரை வந்த ஆங்கிலப் படங்களில் இலைமறை காயாகத்தான் சொல்லப்பட்டுவந்தது. ஆனால், ஜாங்கோ என்ற இந்தப் படத்தின் இயக்குனர் குயிண்டின் டாரண்டினோ வெள்ளையர்களின் கறுப்பினக் கொடுமைகளை இந்த படத்தில் தோல்உரித்து உப்புக் கண்டம் போட்டிருக்கிறார்.

டாரண்டினோ எடுத்த படங்களிலேயே உலக அளவில் அதிகமான வசூலை இப்படம் வாரிக்குவித்து இருக்கிறது. ஆனால், பெரம்பூர் சத்யம் திரையரங்கில் நான் இரண்டு முறை படம் பார்க்கச் சென்றபோதும், என்னுடன் பார்த்தவர்கள் இருபதுக்கும் குறைவு தான்.

ஹாலிவுட் இயக்குனர்கள் உலகின் பல முக்கியமான பிரச்சனைகள் குறித்தெல்லாம் படம் எடுப்பார்கள். கடும் விமர்சனத்தை முன் வைப்பார்கள். அரேபியா முதல் வாடிகன் வரை கதை சொல்வார்கள். ஆனால், அதே அமெரிக்கர்கள் வெறும் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பர்களுக்கு செய்த கொடுமைகளைப் பற்றி குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு திரைப்படங்கள் வெளிவரவில்லை. சேற்றை வாறி எதற்கு தன்மீதே இறைத்துக் கொள்ளவேண்டும் என்பதே அதற்குக் காரணம்.

கறுப்பர் இனத்தவர் வெள்ளையர்களுக்கு அடிமையாக இருந்த காலம். வெள்ளை அமெரிக்கனின் ஒவ்வொரு வீட்டிலும் கறுப்பர் குடும்பம் அடிமையாக வேலை செய்து வந்த காலம். வெள்ளையர்களின் மனதில் கருப்பர்களும் மனிதர்கள்தான் என்பது பற்றிய எண்ணம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. ஆடு, மாடுகள் போல கருப்பர்களும் இவர்களுக்கு ஒரு சொத்து, அவ்வளவு தான். தான் வைத்திருக்கும் ஒரு கோழியையோ அல்லது ஆடு, மாடுகளையோ எப்படி ஒருவர் கொன்றால் குற்றமில்லையோ அதுபோல, கருப்பர்களை, வெள்ளையர்கள் அடித்துக் கொன்றால்கூட, அந்தக் காலத்தில் கேட்க ஆள் கிடையாது.

இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க உள்நாட்டுப்போர் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தின் கதை நிகழ்கிறது.

பணத்திற்காகக் குற்றவாளிகளைக் கொலை செய்து அவர்களின் உடல்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்து சன்மானமாக ஏகப்பட்ட டாலர்களை பெறும் பவுண்டி ஹண்டர் டாக்டர் கிங் வால்ட்(கிறிஸ்டோப் வால்ட்), அடிமை ஜாங்கோ(ஜாமீ பாக்ஸ்) -வைத் தேடி வருகிறார். அவர் தேடும் மூன்று குற்றவாளிகளை ஜாங்கோவுக்கு தெரியும் என்பதால் அடையாளம் காட்ட ஜாங்கோ தேவை என்பதால் அந்த அடிமையை மருத்துவர் விலைக்கு வாங்குகிறார். அப்போது நடக்கும் மின்னல் வேக துப்பாக்கிச் சண்டை நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். அடிமையும், மருத்துவரும் சேர்ந்து அருகில் உள்ள நகருக்குள் நுழையும்போது, ஒரு உணவு விடுதிக்கு வெளியே  நடக்கும் இன்னொரு சிறிய துப்பாக்கிச் சண்டையில் நாம் மிகுந்த ஆர்வத்துடன் படம் பார்க்க ஆரம்பித்து இருப்போம்.

டாக்டர் வால்ட், ஜாங்கோவை ஒரு அடிமையாக நடத்தாமல் ஒரு நண்பனாக பாவிக்கிறார். ஒரு கருப்பன் குதிரை மீதேறி வருவதைப் பொறுக்காமல் ஒவ்வொரு நகரத்தவர் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். இந்த மாதிரிக் காட்சிகள் படம் முழுக்க வந்தாலும் பார்க்க நன்றாகத்தான்  இருக்கிறது.

பனிக்காலம் தொடங்குகிறது. மருத்துவருக்கும், ஜாங்கோவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுகிறது. அதன்படி, இந்தப் பனிக்காலம் முழுவதும் இருவரும் சேர்ந்து தேடப்படும் குற்றவாளிகளைக் கொலை செய்து பணம் சம்பாதிப்பது, பின்பு, ஜாங்கோவின் மனைவியைத் தேடிச் சென்று மீட்பது என்று கதை நீள்கிறது .

பனிக் காலத்தின் கொழுத்த வேட்டைக்குப் பிறகு, மிசிசிப்பி மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் ஜாங்கோவின் மனைவி ப்ரூம்ஹில்டா விற்கப்பட்டு இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். அதன் உரிமையாளர் டி காப்ரியோ. “மண்டிங்கோ சண்டைகள்” என்று அந்தக் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய சண்டைகளை நடத்துபவர். திடக்காத்திரமான பயிற்சி பெற்ற கருப்பர்களை ஒருவர்க்கொருவர் மோதவிட்டு,  அதில் ஒருவர் சாகும் வரை சண்டையிடுவது. இந்தக் கொடூரமான உரிமையாளரிடம் சொத்தாக இருக்கும் ஜாங்கோவின் மனைவியைத் திரும்ப ஒப்படைக்க டி காப்ரியோ கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டார் என்பதால் வேறு ஒரு திட்டம் தீட்டுகின்றனர் மருத்துவரும், ஜாங்கோவும்.

“மண்டிங்கோ சண்டைக்கு” ஒரு வலிமையான கருப்பனை வாங்க, மிக அதிகமான தொகையாக 12000 டாலருக்கு விலை பேசி, கூடவே ஒரு சிறிய தொகைக்கு ஜாங்கோவின் மனைவி ப்ரூம்ஹில்டாவை வாங்கிவிடுவது என்று இருவரும் திட்டமிடுகின்றனர். அதன்படி எல்லாம் நன்றாகவே நடக்கிறது. ஆனால், டி காப்ரியோ வீட்டில் வேலை செய்யும் கறுப்பின மூத்த வேலையாள் சாமுவேல் ஜாக்சனுக்கு மருத்துவர் மற்றும் ஜாங்கோ மீது சந்தேகம் வருகிறது. ப்ரூம்ஹில்டாவின் கண்கள் ஜாங்கோவை சந்தித்து மீள்வதை காணும் சாமுவேல் ஜாக்சன் சதி நடப்பதை உரிமையாளர் டி காப்ரியோவிடம் போட்டுக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு எல்லாமே வன்முறைதான். காட்சிகள் ரத்த வெள்ளத்தில் மிதக்கின்றன.

பொதுவாகவே டாரன்டினோவின் படங்கள் வன்முறை மிகுந்தவை. ஆனாலும் அதில் ஒரு உத்வேகமான ரசனை இருக்கும். காட்சிக்கு அது மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கும். நீதிக்காகப் போராடும் ஒரு நல்லவன், பகைவர்களைத் துவம்சம் செய்யும்போது வன்முறை காட்டப்படத்தான் வேண்டும். அதைப் பார்க்கும்போது பார்வையாளர்கள் அந்த வன்முறையை மறந்து, நீதி நிலை நாட்டப்பட்டதை தான் எடுத்துக் கொள்வார்கள். இந்தப் படத்தில் அதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன.

கோழியைத் திருடி சமைத்ததற்காக தனது மனைவி ப்ரூம்ஹில்டாவை சவுக்கால் ஒரு வெள்ளையன் அடிக்கும்போது, மண்டியிட்டு அவனிடம் ஜாங்கோ கெஞ்சுகிறான். அப்போது, அந்த வெள்ளையன் சொல்லும் வசனம், I love the way you beg my boy”.  சில காலம் கழித்து, அதே வெள்ளையன், வேறொரு கறுப்பினப் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து சவுக்கால் அடிக்க முற்படும்போது அதைத் தடுத்து, ஒரு சிறிய துப்பாக்கியால் அவனைச் சுட்டு, அந்த வெள்ளையன் கீழே விழும்போது, ஜாங்கோ சொல்லும் வசனம்,” I love the way you die my boy”. இப்படிப் பார்வையாளர்களை உணர்ச்சி வசப்படுத்தும் பல காட்சிகள் படத்தில் காணக்கிடைக்கின்றன.

பண்ணை உரிமையாளர் டி காப்ரியோ வீட்டில் மண்டிங்கோ சண்டைக்கு ஒரு கருப்பனை வாங்கும் பேரம் பற்றிய ஒரு காட்சி உணவு மேஜையில் தொடங்குகிறது. அந்தக் காட்சி சுமார் பதினைந்து நிமிடம் தொடர்கிறது. அப்போது ஒவ்வொருவரின் முக பாவனையும், வசனங்களும் மிகவும் நன்றாக இருக்கின்றன. நவ நாகரீக உடையணிந்து பண்பட்ட மரபுகளை, உணவு உண்ணும்போது வெளிப்படுத்தும் இந்த வெள்ளையர்களின் மனதில் எப்படிப்பட்ட குரோதங்கள் நிரம்பி இருக்கின்றன என்பதை நன்றாக அந்த காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

கறுப்பின அடிமையாக ஜேமீ பாக்ஸ், பணத்திற்குக் குற்றவாளிகளைக் கொல்லும் பவுண்டி ஹன்டராக கிறிஸ்டோப் வால்ட், பண்ணை அதிபராக லியனார்டோ டி காப்ரியா, மூத்த வீட்டு மேற்பார்வையாளராக சாமுவேல் ஜாக்சன் மற்றும் ப்ரூம்ஹில்டாவாக கெர்ரி வாஷிங்டன் என நடிகர்களின் தேர்வு மிக அருமை.

இந்தப் படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான அகாடமி விருது, படத்தின் இயக்குனர் டாரண்டினோவுக்கும், சிறந்த குணசித்திர நடிகருக்கான அகாடமி விருது டாக்டர் கிங் வால்ட்சாக நடித்த கிறிஸ்டோப் வால்ட்டுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. டாரண்டினோ இயக்கிய “இன்க்ளோரியஸ் பாஸ்டர்ஸ்” படத்தில் ஒரு ஜெர்மானிய நாஜி அதிகாரியாக நடித்தமைக்காக கிறிஸ்டோப் வால்ட் இதற்கு முன்பும் அகாடமி விருது பெற்றுள்ளார்.

ஒரு வழக்கமான ஆங்கில படம் போல் இல்லாமல், வித்தியாசமான பின்னணி இசை, கதைத் தேர்வு, சண்டைக் காட்சிகள் மற்றும் நடிகர்களின் அருமையான உடல் மொழி எனத் தனித்து நிற்கிற இப்படம், பொழுதுபோக்குக்கான சிறந்த படமாகவும் இருப்பது தான் இப்படத்தின் இயக்குனர் குயண்டின் டாரன்டினோவின் வெற்றி.

Another way to get the discussion moving is to actively http://cellspyapps.org/ ask them to talk to you

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “ஜாங்கோ – திரைப்பட விமர்சனம் (DJANGO UNCHAINED)”
  1. Kiruba says:

    EXcellent review.

அதிகம் படித்தது