தமிழரின் தனிப் பெரும் அடையாளங்கள்
ஆச்சாரிFeb 1, 2013
“ தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு”
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன் தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடியில் தோன்றிய தமிழரை மற்றோரிடமிருந்து வேறுபடுத்தி அடையாளம் காண்பது மிகவும் எளிது. அவர்கள் விசேசமானவர்கள். அவர்களின் அடையாளங்கள் கீழே கொடுக்கப்பட்டவையாக இருக்குமோ?
தொலைபேசி, கைபேசி(mobile), நுண்பேசி(microphone), ஏன் ஸ்கைப்(skype)பில் கூட மற்றோருடன் பொது இடத்தில் உரையாடும்போது மிக உரக்க பேசுபவர் நிச்சயம் தமிழரே!!
நூலகங்கள், உலக சினிமா திரையிடும் திரையரங்கங்கள், விவாத மேடை, தியானம் செய்யும் இடம், சதுரங்க விளையாட்டு அரங்கம் மற்றும் இலக்கியக் கூட்டங்கள் என்று எங்கு மிகுந்த அமைதி தேவைப்படுகிறதோ அங்கு ஒரு கைபேசி அலறினால் அது கண்டிப்பாக ஒரு தமிழருக்கு சொந்தமானது தான்.
கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும்போது அதை உண்டு களித்து, சாப்பிட்ட எச்சில் இலைகள், குப்பைத் தொட்டியில் போடப்படாமல் கோயில் பிரகாரங்களிலேயே போடப்பட்டிருந்தால் அது கண்டிப்பாக தமிழகக் கோயில் தான். பக்தர்கள் சாட்சாத் தமிழர்களே!!
இரண்டு இந்தியர்கள் பொது இடத்தில் எங்கு சந்தித்துக் கொண்டாலும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்களா? அப்படியானால் அவர்கள் நிச்சயம் தமிழர்கள் தான்.
ரயில்வே கிராசிங்கில் இரண்டு நிமிடங்கள் கூட காத்திருக்க முடியாமல், ரயில்வே கேட்டின்(railway gate) சிறு இடைவெளி வழியே தனது உயிரை துச்சமென மதித்து இருப்புப் பாதையை ஒருவர் கடக்கிறாரா? அந்த ஒருவர் தமிழராக இருக்க வாய்ப்பு கூடுதல்.
சாலையின் இருபுறங்களிலும் கடும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை “நோ பார்க்கிங்” விதிமுறையை கிஞ்சித்தும் மதிக்காமல் நிறுத்தி இருக்கிறார்களா? சட்டத்தை துச்சமென நினைக்கும் இவர்கள் உறுதியாய் தமிழர்களே!!
சிறு நகரங்கள், பெரு நகரங்கள் என்ற பாகுபாடு இல்லாமல், எந்த ஒரு நகர பேருந்து நிலையங்களின் கழிப்பறைகளும், பயணிகளால் எளிதில் அணுகமுடியாத அளவுக்கு முடைநாற்றமெடுக்கும் பகுதியாகவும், பேருந்து நிலையங்களின் சுற்றுச் சுவர்களிலிருந்து வீசும் சிறுநீர்க் காற்று குறைந்தது இரண்டு சதுரக் கிலோ மீட்டர் அளவுக்கு நகரத்தினுள் பரவி இருக்க வேண்டும் என்ற சுகாதார அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு அமுலில் உள்ள மாநிலம் உங்களுக்கு தெரியுமா? அது புகழ் வாய்ந்த தமிழ்நாடு மாநிலம் தான்.
ஒரு வீதியில் நல்ல தார்ச்சாலை, பொதுப்பணித் துறையால் போடப்படுவதுவரை காத்திருந்து, அப்பணி முடிந்தவுடன், தாமதிக்காமல், உடனே குடிநீர் குழாய் பதிப்பதற்காக நகராட்சி நிர்வாகம், அந்த நல்ல தார்ச்சாலையை குறுக்கும் நெடுக்குமாக தோண்டும் வினோதம் நடக்கும் பூமி, தமிழர் பூமி தான்.
மற்றோருடன் ஒரு இளம் பெண் உரையாடும்போது, சம்பந்தா சம்பந்தமில்லாமல் கபே காபிடே(café coffee day), கேஎப்சி(KFC) மற்றும் மேக் டொனல்ட்(Mc Donald) போன்ற பெயர்களை உங்களால் கேட்க முடிகிறதா? அப்படியானால், அந்த பெண் ஒரு சென்னை வாழ் தமிழச்சியாக இருக்கக் கூடிய சாத்தியகூறுகள் அதிகம்.
ஒரு இனமே அழிந்து போகிற பிரச்சனையாக இருந்தாலும் ஒன்றுபட்டு நிற்காமல் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார்களா? அந்த சிறு குழுக்கள் அனைத்தும் தமிழ் இனக் குழுக்களே!!
கடலிலே முத்து குளிப்பவன், மூச்சு முட்டி திரும்ப கரை திரும்ப எத்தனிக்கும்போது அவன் கண் முன்னே கைக்கெட்டிய தூரத்தில் ஒரு சிப்பி கிடக்கும். அதில் முத்து இருக்குமா என்பது நிச்சயமல்ல. எனினும், அதையும் ஒரே பாய்ச்சலில் கைப்பற்றி கரையேறவே அவன் துணிவான். ஆனால், தனது முயற்சியில் தோற்று மரணத்தைச் சந்திப்பான். இதேபோல் தான், ஒவ்வொரு மீனவனும். இந்திய கடல் எல்லை எது? இலங்கை கடல் எல்லை எது என்பது தெரியாமல், கவர்ந்திழுக்கும் மீன் கூட்டங்களை கடைசி முயற்சியாக ஒரு அள்ளு அள்ள ஆசைப்பட்டு, குண்டடிபட்டு சாவான். யாரும் கேட்பாரற்ற அந்த மீனவன் தமிழக மீனவனே.
“இங்கு” பெரும்பாலான பேருந்துகளில் இருக்கையின் அடியில் ஒரு பெரிய துவாரம் இருக்கும். ஒரு சிறுமி அந்த ஒரு ஓட்டைக்குள் விழுந்து பலியானதும், அம்மாநிலம் முழுவதும் உள்ள பேருந்துகளின் துவாரங்களை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி, ஒரு கொடூர சம்பவம் நடந்த பின் தான் “இங்கு” விழிப்புணர்வு வரும். இதில் “இங்கு” எனப்படுவது தமிழ்நாட்டைக் குறிக்கும்.
குற்றவாளிகளை விரைந்து பிடிக்க இங்குள்ள காவல் துறைக்கு “இன்னோவா” போன்ற நவீன வகைக் கார்கள் வழங்கப்படுகின்றன. எனினும், காவல் துறையினர் அந்த நவீன வகைக் காரில் பவனி வந்து, தெருவோர உணவகத்தில் “விலையில்லா” பரோட்டா வாங்குவதையே விரும்புவார்கள். அவர்களை தமிழக போலீஸ்க்காரர்கள் என வகைப்படுத்தலாம்.
உலகம் முழுக்க கணிசமான அளவுக்கு வியாப்பித்துள்ள ஒரு சமூகம், சுய வேலைவாய்ப்பு என்ற சிந்தனையே இல்லாமல், மற்றோருக்கு கீழ் அடிமை வேலை(Working Class) செய்யக்கூடிய சமூகமாகவே இருப்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது உங்களுக்கு தெரியுமா? அது தமிழ் சமூகம் தான்.
இந்தியத் துணைக்கண்டத்தில், ஆன்மத் தேடலுக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ எந்த வகையான சுற்றுலாவையும் மேற்கொள்ளாது, பணத்தை பெட்டியில் வைத்து பூட்டி பாதுகாக்கும் பெரும்பான்மை மக்கள் தமிழ் நாட்டில் தான் வாழ்வதாக சொல்லக் கேள்வி.
பணமே பிரதானம். அனுபவ அறிவு தேவை இல்லை. சினிமாவைத் தவிர வேறு எந்த கேளிக்கையும் வேண்டாம். தாழ்வு மனப்பான்மை, கடின உழைப்பில் ஆர்வமின்மை, தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல் அரைத்த மாவையே அரைப்பது என்று ஒரு சமுதாயமே இருக்க முடியுமா? எங்களால் முடியும் என்று சோம்பல் முறித்துக் கொண்டே சொல்கிறது தமிழ்ச் சமுதாயம்.
டீக்கடை பெஞ்சுகளை காலை பத்து மணிக்கே ஆக்கிரமித்து பழங்கதைகள், உப்புமா சினிமாக்கள், வெட்டி அரசியல் போன்றவற்றை கடுமையாய் விவாதித்து மதிய உணவுக்கு விடைபெற்று பிரிந்து செல்லும் ஒரு இளைஞர் சமுதாயம் எங்கே இருக்கிறது என்று யாராவது உங்களிடம் கேட்டால், நீங்கள் தாரளமாக தமிழ் நாட்டைக் கை காட்டுங்கள். யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள்.
பின் நவீனத்துவ – முன் நவீனத்துவ எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்கள், மறுமலர்ச்சி எழுத்தாளர்கள், புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள், பெண்களுக்கான நவீன எழுத்தாளர்கள் என திசைக்கொருவராய் நின்று கொண்டு, ஒருவர் மீது ஒருவர் கடும் வசை பாடி, குறைச்சொல்லி, சாகித்ய அகாடமி முதல் சாதாரண விருது வரை யாருக்கும் கிடைக்க விடாமல் தடுத்து குரூர திருப்தி கொள்ளும் சிற்றிதழ் கூட்டம் எங்கே இருக்க முடியும் என்று உங்களால் சரியாக சொல்ல முடியுமா?……… உங்கள் யூகம் சரிதான். தமிழ்நாட்டில் தான் அந்த கூட்டம் இருக்கிறது. தவிர தேர்தல் சமயத்தில் தனது விலை மதிப்பில்லா ஓட்டை குத்து விளக்கிற்கும்,வேட்டி சேலைக்கும், கோட்டருக்கும்,கோழி பிரியாணிக்கும்,ஆயிரம் ரூபாய்க்கும் விற்கும் மலிவு விலை வியாபாரிகள் உலவும் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு பகுதி எதுவென்றால் அது தமிழகம் தான்.
இவ்வாறான பல தனித்துவ குணங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழன் இப்படியான தனித்துவத்தில் இருந்து என்று மீளவேண்டும் என்ற கனவு வெகுநாட்களாய் எனக்கு உண்டு. இதுவரை செருப்பாய் இருந்த தமிழன், இனியாவது நெருப்பாய் இருக்க வேண்டுகிறேன் தமிழினமே! ! !
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
neengal solvathu (varalatrai thavira) ellam inthiya muzhuvathum allathu then inthiya muzhuvadhum kanappadum adayalangal, ithil ondrum thamizhargalukku endra thanipperum adayalangal ondrum illai.