தமிழ் மரபில் தலைவன் இலக்கணம்
ஆச்சாரிDec 15, 2012
இலக்கணம் என்றால் பலரும் மொழியின் கூறுபாடுகளான ஒலி (எழுத்து), சொல், வாக்கியங்கள் போன்றவற்றின் இலக்கணம் மட்டுமே கூறும் என்று நினைப்பார்கள்; எனவே தலைவன் தலைவி இயல்புகளின் வரையறைபற்றி இலக்கணத்தில் என்ன பேசும் என்று ஐயுறலாம். ஆனால் தமிழ்மொழியில் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமன்றி அவற்றால் சொல்லும் இலக்கியப்பொருள் அல்லது கருத்துப் பற்றியும் இலக்கணம் உண்டு. எனவே நம்மரபில் மொழியிலக்கணம் என்றால் வாழ்க்கைச் செம்மையும் கலந்ததே என்று தேறலாம்.
தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்கள் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பவை. பொருளதிகாரத்திலேதான் நாம் அகம், புறம் போன்ற இலக்கணங்களைக் காண்கிறோம். அங்கே களவியல் என்ற படலத்தில் தலைவனுக்கு அமையும் இலக்கணம் கூறுவதைப் பார்ப்போம். களவியல் என்பது தலைவனும் தலைவியும் தத்தம் தோழி, தோழன் அன்றி வேறுயாரும் அறியாமற் மறைவாகக் காதலிக்கும் ஒழுக்கம் பற்றிய இயல். இங்கே மறைவாகப் பழகும்பொழுதுங்கூட அவர்கள் எத்தகைய பண்புள்ளவர்கள் என்று தொல்காப்பியம் சொல்வது வியக்கத்தக்கது.
தலைவனாகிய ஆடவன்மேல் அமைவன என்று இரண்டு பண்பின் தொகுதிகளைத் தொல்காப்பியம் கூறுகிறது:
“பெருமையும் உரனும் ஆடூஉ மேன” (தொல்காப்பியம்: பொருள்:களவியல்:7)
[பெருமை = பெரிய பண்பு, உரன் = உரம், உள்ளத்தின் வலிமை, ஆடூஉ = ஆடவன், மேன = மேல் அமைவன]
இங்கே பெருமை உரன் என்பவற்றிற்கு நுணுக்கமான பழைய விளக்கங்கள் உண்டு. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணரின் (கி.பி.11-12 ஆம் நூற்றாண்டு[1]) உரை[2] என்ன உரைக்கிறது?
“பெருமையாவது பழியும் பாவமும் அஞ்சுதல்; உரன் என்பது அறிவு. இவையிரண்டும் ஆண்மகனுக்கு இயல்பு என்றவாறு” என்கிறது. உரன் என்றால் உரம் அல்லது வலிமை என்று அடிப்படைப் பொருள். ஆனால் அறிவு என்பது எப்படி இங்கே பொருந்தும்? அறிவு என்பதனை இளம்பூரணர் “சென்ற இடத்தாற் செலவிடா, தீதொரீஇ, நன்றின்பால் உய்ப்பது அறிவு என்பவாகலின்.” என்று திருக்குறள் 422-இனை மேற்கொள் கூறி விளக்குகிறார். அதாவது “உள்ளம் சென்ற இடத்திலே தன் நடத்தையைச் செல்லவிடாமல் தீதிலிருந்து விலக்கி நல்லதன் வகையிலே செலுத்துவது அறிவு” என்று பொருள்படும் அந்தத் திருக்குறள் நன்னெறி நிறுத்தும் உள்ளத்தின் உரவலிமையை அறிவு என்று சொல்வதால் இளம்பூரணர் விளக்கமும் பொருந்துகிறது.
மேலும் உரன் என்பதற்குக் கட்டுப்பாட்டிலே உறுதியான அறிவு அல்லது உள்ளம் என்ற பொருள்வழக்கம் தொன்றுதொட்டே இருந்துள்ளது. திருக்குறள் நேரடியாகவே அறிவினை உரன் என்று சொல்கிறது. ஐம்புலன்களாகிய யானைகளை அடக்கும் தோட்டி என்கிற அங்குசம் போன்ற திண்மையான அறிவினை உரன் என்று சொல்வதை “உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்[i]” (குறள்:நீத்தார்பெருமை:4) என்பதனால் அறியலாம்; “திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; என்று பரிமேலழகர் உரைப்பார்; “அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன்” என்று மணக்குடவர் உரைப்பார்.
இளம்பூரணர் உரன் என்னும் பண்புக்குச் சான்றான நடத்தையாகக் களவுக்காதலிலேயே ஒருநிலை கூறுவார். “இதனானே மேற்சொல்லப்பட்ட தலைமகளது வேட்கைக் குறிப்புக் கண்ட தலைமகன், அந்நிலையே புணர்ச்சியை நினையாது வரைந்து எய்தும் என்பது பெறுதும்” என்கிறார்; அஃதாவது “ … தலைமகளது காமக்குறிப்பைக் கண்டறிந்த தலைமகன், அந்த நிலையிலேயே அவளைக் கூடுவதை நினையாது வரைந்து ( = திருமணச்சடங்கு செய்து) அடைவான் என்பது பெறுகிறோம்” என்கிறார்! தமிழ்த்தலைவன் காமுகனாக அலையாமல் ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்ட காதலனாய்த் திகழ்வது நமக்கு மெய்சிலிர்க்கிறாது.
அதே தொல்காப்பிய நூற்பாவிற்கு நாம் இன்னும் வியக்கும் வகையிலே மேலும் பல பண்புகளைச் சொல்லி நச்சினார்க்கினியர் (தோராயம் கி.பி. 1375[3]) உரை[4] அமைந்துள்ளது: “பெருமையும் – அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவங்கட்கு அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப்பகுதியும்” என்று சொல்கிறார். நண்பு என்றால் நட்பு.
உரனும் என்பதற்குக் “கடைப்பிடியும் நிறையும் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும்” என்கிறார் அவர். அங்கே வலி என்றால் வலிமை அஃதாவது உள்ளத்தின் வலிமை அல்லது நெஞ்சுரம். கடைப்பிடியும் நிறையும் என்னும் இரண்டும் தலைமகன் பண்புகளாக நச்சினார்க்கினியர்க்கு அறுநூறாண்டுகட்கு முன்பே களவியல் அல்லது இறையனார் அகப்பொருளுரை என்ற புகழ்பெற்ற நூலிலே சொல்லியுள்ளது. அங்கே அவற்றின் பொருளைக் கேட்போம்.
இறையனார் அகப்பொருளுரையிலே[5] சொல்வது என்ன? “தலைமகற்கு அறிவு,
நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன குணம்” (களவு: 2-இன் உரை) என்கிறது. அறிவு என்பது “எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று
அம் மெய்ம்மையை உணர்வது அறிவு” என்கிறது. எனவே எந்தப்பொருளானாலும் அந்தப்பொருளிடத்திலே அமைந்து அந்த உண்மைத்தன்மையை உணர்வது அறிவு ஆகும்.
அங்கே “கடைப்பிடி என்பது கொண்ட பொருள் மறவாமை” என்று விளக்குகிறது; அஃதாவது “நன்றென அறிந்த பொருளை மறவாமை”; ஆத்திசூடியும் “நன்மை கடைப்பிடி” என்கிறது. அடுத்து “நிறை என்பது என்னோ எனின், காப்பன காத்துக் கடிவன கடிந்து
ஒழுகும் ஒழுக்கம்” என்கிறது; கடிதல் என்றால் போக்குதல்; சான்றாக்க் கிளிகடிதல் என்றால் கிளியை ஓட்டுதல்; எனவே “தன்னிடம் காக்கவேண்டியனவற்றைக் காத்துப் போக்கவேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை” என்று பொருள். “ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பது” என்கிறது. ஆகவே ஓர்ப்பு என்பது ஆராயும் திறன், அறிவு உண்மையை உணர்தல்.
தமிழிறைவனார் என்று பாரதிதாசன்[6] சுட்டும் திருவள்ளுவரும் ஆண்மகன் என்ற வரையறையாகப் “பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு” (திருக்குறள்: பிறனில்விழையாமை: 148) என்கிறார்: “பிறன் மனைவியைக் கருதாத பெரிய ஆண் தகைமை அறிவுநிறைந்தோர்க்கு அறம் மட்டுமோ ; நிரம்பிய ஒழுக்கமுமாம்” (பரிமேலகர் உரை[7]) என்று அதன் பொருள். மனைவி என்று மணமானவள் மட்டுமன்றிப் பிறனைக் காதலிப்பவளும் இதிலடக்கமாகும்.
முடிவுரை:
நம் தமிழ்மரபில் தலைவன் என்பவனுக்குத் தெளிவான தேற்றமான நற்பண்புகளை மொழியின் இலக்கணத்தோடு வரையறுத்திருப்பது வியப்புக்குரியது; நம் பொறுப்புக்கும் உரியதாகும். இம்மரபுப்படியேதான் நம் இலக்கியங்கள் அமைந்துள்ளன; ஏன் திரைப்படங்களுங்கூட அண்மைக்காலம் வரை அப்படியே அமைந்தன; சிவாசிகணேசன், இராமச்சந்திரன், முத்துராமன் போன்ற நல்ல நடிகர்களின் படங்கள் இப்படித் தொல்காப்பியம் கண்ட தலைவன் இயல்போடு அமைந்தமை காணலாம். பிறகு இன்றைய நிலைக்கு மாறியுள்ளது நாணத்தக்கது. இதுவே நம் மொழிச் சிதைவுக்கும் குடும்பச் சமுதாயக் கோளாறுகளுக்கும் தமிழினப்படுகொலை போன்ற கேடுகளுக்கும் அறிகுறியும் காரணமும் ஆகும். எனவே நாம் அந்த நிலையை மாற்றவேண்டும்; அதற்கு முதற்கட்டமாக மேற்கொள்ளவேண்டியதும் நம் எல்லார் கட்டுப்பாட்டிற்கு முழுதும் உட்பட்டதுமான நடவடிக்கை ஒன்றுண்டு: அஃது என்னவென்றால் இந்த இலக்கணத்துக்குப் பொருந்தாத படங்கள் கதைகளை அருவருத்துச் சிறிதும் நுகராமையே ஆகும். பிறகு குடும்பநலனும் இனநலம் பிறப்பது தானே அமையும்.
[1] Zvelebil, Kamil., Tamil Literature, E.J. Brill, 1975, p195.
[2] தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், தொகுதி 2, பதிப்பாசிரியர் பேரா. சண்முகம்பிள்ளை, முல்லை நிலையம், சென்னை, 1999
[3] Zvelebil , 1975, p.196.
[4] தொல்காப்பியம் பொருளதிகாரம், முதற்பாகம், முன் ஐந்தியல்களும் நச்சினார்க்கினியமும், கணேசையர், 1948, பக்கம் 348. http://www.scribd.com/doc/21744815/தொல்காப்பயிம்-பொருளதிகாரம்-உரை
[5] இறையனார் அகப்பொருள், பதிப்பாசிரியர் ராவ்பகதூர் பவானந்தம் பிள்ளை, முல்லை நிலையம், 2006, பக்கம் 40-41.
[6] “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ”
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
எளிய வகையில் தலைவனின் இலக்கணத்தை விளக்கி பல்வேறு பாடல்களிலிருந்து வியக்கத்தக்க வகையில் மேற்கோள்களைக்காட்டிய தங்களின் அரும்பணிக்கு மிக்க நன்றி! தனிமனித ஒழுக்கம் சமுதாய முன்னெற்றத்தின் முதற்படி என்பதை கோடிக்காட்டுகிறது உங்கள் முடிவுரை…
நன்று. பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
சிறப்பு. தலைவியின் இலக்கணத்தையும், கற்பியல் பற்றியும் எழுதுங்கள்.
திருக்குறள் காமத்துப்பால் களவியல், கற்பியல்
இரண்டையும் அழகிய நாடகமாக தருவது. இளைஞர்கள்
படிக்க வேன்டிய ஒன்று !
நல்ல இலக்கிய கட்டுரை கொடுத்த பெரியண்ணன் அவர்களுக்கு நன்றி. தமிழர் இலக்கியத்தில் உள்ள கற்பு வாழ்க்கை, களவியல் வாழ்க்கை பற்றி கூறாமல் இந்த கட்டுரை முடிவடைவதாக ஏற்று கொள்ளமுடியவில்லை. களவியல் ஒழுக்கத்தில் அவர்கள் மனம் முடித்து கொள்வது சமூகத்தின் முன்பா அல்லது தாங்களாகவே காந்தர்வ மணம் (ஆரிய பண்பாட்டில் வருவது போல்) செய்துகொள்வதா?
மணம் முடிப்பது என்பது என்ன? சமூகத்தின் முன் பெற்றோர்களின் முன் வாங்கும் அங்கீகாரமே திருமணம். அப்படி இருக்கையில் தானாக மணம் முடித்து கொள்வது என்பதும் திருமணம் முடித்து கொண்டு வாழ்வதும் சேர்ந்து வாழ்வதும் சமூக அளவில் ஒன்றே அன்றி வேறு இல்லை. இப்படி தலைவனும் தலைவியும் தானாக மணம் முடித்து கொள்வதில் தலைவன் தலைவிக்கு கொடுக்கும் ஒரு காப்புரிமை என்று மட்டுமே கருதவேண்டும்.
- கார்த்திக்