திரு. சி. மகேந்திரன் நேர்காணல்
ஆச்சாரிJun 30, 2012
(சிறகு வாசகர்களுக்காக நாம் நேர்காணல் செய்யவிருப்பவர். திரு. திரு. சி. மகேந்திரன் அவர்கள். இளம் வயதிலேயே பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளைத் துவங்கி தன் இளமைக் காலத்திலேயே பொதுப்பணி ஆற்றியவர். இப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளராக செயலாற்றி வருகிறார். சுற்றுப்புறச் சூழலைக் காப்பதில் அதிக அக்கறை கொண்டவராகவும் திகழ்கிறார். தமிழக ஆறுகள் அழிந்து வருவது குறித்து ‘ஆனந்த விகடன்’ இதழில் இவர் எழுதிய தொடர் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தொடர் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது. இனி அவரது நேர்காணல்.)
சிறகு: உங்களின் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்’ புத்தகம் –சுற்றுச் சூழல் கெடுதலுக்கு எதிரான ஒரு அருமையான படைப்பு. தமிழகத்தில் சுற்றுச் சூழலைக் காக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
திரு. சி. மகேந்திரன்: ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்- தமிழக ஆறுகளின் அழிவைப் பற்றி எழுதியது. அதை வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால் ‘ஆறுகளின் மரண சாசனம்’ என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். ஆனந்த விகடன் பத்திரிகையில் அது தொடராக வெளிவந்தபோது அந்த நண்பர்கள், வண்ணத்துப் பூச்சி என்று புது வகையில் பெயர் வைக்கலாம் என்று அவர்கள் சொன்னதன் காரணமாக ‘வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்’ என்று வைத்தேன். ஆனால் உண்மையில் வண்ணத்துப் பூச்சி ஆறுகளின் குறியீடாகக் கூறப்பட்டிருந்தாலும் உள்ளபடியே அந்த நூல் ஆறுகளின் மரண சாசனம்தான்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில்- தமிழகத்தின் வாழ்வாதாரம் ஆறுகளில் இருந்துதான் தோன்றியது. ஆசியாவின் மூத்த நதிகளெல்லாம் தமிழகத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தாமிரபரணி நதி. அந்தத் தாமிரபரணி நதி- கடற்கோள்களால் இந்தியாவும் இலங்கையும் இரண்டாகப் பிரிந்ததற்கு முன்னால் அது ஓடியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. கல்வெட்டு ஆய்வுகள், இன்னும் பல ஆய்வுகள் இருக்கிறது. இன்றுகூட நீங்கள் பார்த்தால் உலகத்திலேயே எங்கும் கிடைக்காத அரிய மூலிகைகள் பொதிகை மலையில்தான் கிடைக்கிறது. தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இவைகளில் அரியவை அங்குதான் கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு உலகின் மூத்த மலை என்ற கருத்தைச் சொல்கிறார்கள். அந்த மலையில் இருந்து தோன்றியதுதான் தாமிரபரணி நதி.
அதைப்போல வைகை. வைகையின் வரலாறு – பாண்டியரின் வரலாறோடு தமிழகத்தின் வரலாறோடு இணைந்து நிற்பது. அதைப்போல காவிரி ஆறு. உலகமெல்லாம் ஆண்ட சோழ மண்டலத்துக்கு – சோழப் பேரரசுக்கு- சோழனுக்கு காவிரி நாடான் என்று பெயருண்டு. அந்த அளவுக்கு காவிரியும் சோழ மண்டலமும் தமிழகமும் இணைந்து இருக்கிறது. இன்னொரு முக்கியமான நதி தென்பெண்ணை. இந்த ஆறு மைசூரில் பிறந்து தமிழகத்தின் தொண்டை மண்டலத்தின் பல பகுதிகளில் ஓடி ஒரு நீண்ட வரலாற்றையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வளர்த்தது. தொண்டை மண்டலம் சான்றோருடைத்து என்று சொல்வார்கள். அறிவாளிகள் நிறைந்த பகுதி தொண்டை மண்டலம். அந்த தொண்டை மண்டலத்தின் முழு சிறப்புக்கும் பெண்ணை நதி – தென் பெண்ணை ஒரு முக்கியமான காரியமாக இருக்கிறது.
அதைப்போல பாலாறு. ‘நாலாறு ஓடிய பாலாறு’ என்று சொல்வார்கள். அத்தனை ஆறுகளின் சங்கமம்தான் பாலாறு. அந்தப் பாலாற்றின் வரலாற்றைப் படிக்கும்போது நான் மிகவும் அதிர்ந்து போனேன். வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டுமென்றால்- ஆசியாவிலேயே மூத்த நதி எது என்று ஒரு ஆய்வு நடைபெற்றது. அந்த ஆய்வில் அவர்கள் சொல்கிறார்கள்- ஆசிய கண்டத்திலேயே பாலாறுதான் முதலில் தோன்றிய நதியாக இருக்க வேண்டும் என்று. அதற்கான காரணம் என்ன என்று கேட்கிறபோது, எந்த ஆற்றிலே கூடுதலான மணல் இருக்கிறதோ அந்த ஆறுதான் மூத்த ஆறு என்று வரையறுக்கப்படுகிறது. அந்த வகையில் தொண்ணூறு அடி ஆழமுள்ள மணலை இன்றும் பாலாறு பெற்றிருக்கிறது. இந்த ஆறுகள் எல்லாம் மனிதத் தவறுகளாலும், தொழில் வளர்ச்சியாலும், பேராசைக்காரர்களாலும் மிக மோசமாக அழிக்கப்படுகிறது.
3000, 4000 ஆண்டு காலம் நம்மோடு வாழ்ந்து நம்மை செழிக்க வைத்த – தாய் போன்ற ஒரு நதியை, கொலை செய்வதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் ‘வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்’ இதற்கான தீர்வுகள் என்ன என்பதைப் பற்றி அந்த நூலில் நான் மிகத் தெளிவாக வைத்திருக்கிறேன். தமிழக மக்கள் அனைவரும் எந்தெந்தப் பகுதியில் வாழ்கிறார்களோ, அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் அந்த நதிகளின் ஒரு நாள் கொண்டாட்டத்தைக் கொண்டாட வேண்டும். ஆடிப் பெருக்கு மிகப் பெரிய விழாவாக எப்படி காவிரியில் கொண்டாடப்படுகிறதோ அதைப்போல வைகையிலும் அப்படி ஒரு விழா இருக்கிறது. தாமிரபரணியிலும் விழா இருக்கிறது. அப்படிப்பட்ட விழாக்களை சமூக நல நோக்கங்களோடு- அரசு விழா என்றால் அது ஏதோ ஒரு பொழுதுபோக்காக- அரசு அதிகாரிகள் கணக்குக் காட்டுவதற்கு என்று நடத்துகின்ற விழாவாக அது இருக்கிறது. மக்கள் பெரு விழாவாக நடத்த வேண்டும் என்பதை அந்த நூலில் நான் முன்வைத்திருக்கிறேன்.
அண்மைக் காலத்தில் நம் தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் அழிந்துபோய் விட்டது. அழிவென்றால் பேரழிவு. மணல் கொள்ளைக்கு அளவே இல்லை. கேரள மாநிலத்தில் ஆற்று மணலை அள்ளக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்திலிருந்து திருடி செல்லக்கூடிய மணல், காவிரி ஆற்றின் மணல் இன்ன விலை, தாமிரபரணி ஆற்றின் மணல் இன்ன விலை என்று விலை வைத்து விற்கிறார்கள். அரிசியில் ஐ.ஆர். இருபது, பொன்னி அரிசி என்று விற்பதைப்போல நம் தமிழகத்தின் மணல் அங்கு விற்கப்படுகிறது.
அதைப்போல கிரானைட். மலைகளைப் பிளந்து, உடைத்து அதை சின்னாபின்னமாக்கி சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய பாதிப்பை உருவாக்குகிறார்கள். அந்நிய மூலதனங்கள் வந்து குவிகிறது, புதிய தொழிற்சாலைகள் வருகிறது. உலகத்தில் தடை செய்யப்பட தொழில்கள் எல்லாம் தங்கு தடையற்ற முறையில் இந்தியாவுக்குள் நுழைய முடிகிறது. உதாரணமாக உலக தொழில் அமைப்புகளில் ஸ்டெர்லைட் என்ற நிறுவனம், அதாவது தாமிரத்தை உருக்கி அதிலிருந்து உருவாகும் பொருள்கள் செய்யும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். காவல் நிலையங்களில் ரவுடிகள் பட்டியல் வைத்திருப்பார்கள். அதைப்போலத்தான் வளர்ச்சி அடைந்த அல்லது சுற்றுச் சூழலோடு நட்புறவு கொண்ட நாடுகள் எல்லாம் இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலைகள் எங்கள் நாட்டுக்கு வரக்கூடாது என்று தடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வருகிறார்கள். குறிப்பாக தூத்துக்குடியில் அமைய இருந்தது ஸ்டெர்லைட். அதனால் பல்வேறு விதமான தீமைகள் ஏற்படுகிறது. இப்போது தமிழகத்தின் மிக முக்கியமான கடமை என்னவென்றால், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுதான். அதனால்தான் என்னைப் போன்றவர்கள், பொதுவுடைமை இயக்கத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி, ‘தமிழக இயற்கைப் பாதுகாப்பு முன்னணி’ என்ற ஒரு அமைப்பை – இன்றைய நடைமுறை அரசியல் கட்சிகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் – சுற்றுச் சூழலுக்கென்றும் பசுமைக்கென்றும் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த அரசியலைக் கட்டி அமைப்பதற்கு இளைஞர்கள், மாணவர்கள், எதிர்கால சந்ததியினர் நாளை வாழப் போகிறவர்கள். அவர்களுக்கு நல்ல காற்று வேண்டும், நல்ல நீர் வேண்டும், இயற்கை வளத்தோடு வாழ்ந்த அவர்களின் முன்னோர்களின் வாழ்க்கை அவர்களுக்கு வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கை அவர்கள் வாழ வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்ற போராட்டத்தை இப்போதே அவர்கள் துவங்கினால்தான் நல்லது. அதற்கான முன்னோட்டமாக ‘தமிழக இயற்கை பாதுகாப்பு முன்னணி’ என்ற ஒன்றை உருவாக்கலாம் என்று ஆலோசனைகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சிறகு: உங்களை சமீபத்தில் மிகவும் பாதித்த அரசியல் நிகழ்வு?
திரு. சி. மகேந்திரன்: அரசியல் நிகழ்வு என்று சொல்லும்போது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில், ஒரு குடும்பம். அது தலித் குடும்பம். அந்தக் குடும்பத்தின் நிலத்தை அங்கு இருக்கும் சிலர் அபகரித்துக் கொண்டார்கள். அந்தக் குடும்பத்திற்காக தொடர்ந்து பல அமைப்புகள் போராடியது. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தலைவர் வி.பி. குணசேகரன் மற்றும் விவசாய சங்கங்கள் போராடின. அப்படிப் போராடும்போது அரசாங்கம் ஆட்சி அதிகாரம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவர்களுக்கு எதிராகவே இருந்தது. அரசாங்கம் உத்தரவு போட்டது, நீதிமன்றம் உத்தரவு போட்டது, அதை நிறைவேற்றக்கூடிய அதிகாரிகள் யாரும் அதற்குத் துணையாக இல்லை. ஆனாலும் விடாமல் போராட்டத்தை நடத்திக் கொண்டே இருந்தார்கள். அந்தப் பகுதியில் ஒரு தாசில்தார், பெண் தாசில்தார் அங்கு புதிதாகப் பொறுப்பேற்று வந்தார். அவரிடம் அணுகி, இவ்வளவு அநியாயம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது, யாராலும் கேட்க முடியவில்லை, ஆதிக்க சாதிக்காரர்கள் அடக்கி ஒடுக்கி விடுகிறார்கள் என்றெல்லாம் அந்த அம்மையாரிடம் சொன்னபோது, நான் நிறைவேற்றித் தருகிறேன் என்று சொல்லி, தண்டோரா போட்டு, அதைப் பிரிக்கப் போகிறேன் என்று சொன்ன உதவியாளர் ஒருவரையும், இன்னும் இருவரையும் அழைத்துக்கொண்டு நேரிடையாக அந்த தாசில்தார் சென்று – ஆதிக்க சாதிகள் போட்டிருந்த வீட்டையும் ஆக்கிரமிப்பையும் அகற்றினார். பிறகு அரசு ஊழியர்கள், மற்றவர்கள் எல்லாம் உதவினார்கள். இந்த நிகழ்ச்சி, என்னை வெகுவாகப் பாதித்தது. காரணம் என்னவென்றால் ஒரு தனி மனிதர்- அரசு அதிகாரியாக இருக்கலாம், அரசியலாக இருக்கலாம் எங்கும் இருக்கலாம். தீர்க்க முடியாத பிரச்சினைகளை மன வைராக்கியத்தோடு களத்தில் இறங்கி நின்றால் தீர்க்கக் முடியும் என்பதற்கு அந்த வட்டாட்சியர் மிகச் சிறந்த உதாரணம். அரசியல் நிகழ்ச்சி என்பது யார் அதிகாரத்திற்கு வருகிறார்கள் என்பதெல்லாம் இப்போது முக்கியமில்லை. முன்பு இருந்த அரசு என்ன செய்ததோ அதைத்தான் அடுத்த அரசாங்கமும்- ஆயிரம் விமர்சனம் செய்தாலும் செய்துகொண்டிருக்கிறது. பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால் அடித் தளத்தில் இருக்கும் அரசுப் பணியாளர்கள் – அடித்தளத்தில் இருக்கும் மக்கள், சமூக ஆர்வலர்கள் –வைராக்கியத்தோடு சமூகத்தை மாற்றுவதற்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பயன் கிடைப்பதற்குப் போராடுகிறார்கள் என்பதுதான் மிக முக்கியம். இது என்னை மிகவும் பாதித்த நிகழ்வாக நான் கருதுகிறேன்.
சிறகு: தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள் நீங்கள். இப்போது தமிழக அரசியல் எதை நோக்கிப் போகிறது?
திரு. சி. மகேந்திரன்: தமிழக அரசியல் மட்டுமல்ல, இந்திய அரசியல் எல்லாமே குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது. குழப்பத்திற்கு என்ன காரணம் என்றால், அரசியல் சட்டம் பல கட்சிகள் கொண்ட அரசியல் சட்டமாகக் கருதுகிறது. Multi party democracy. பல கட்சிகள் கொண்ட ஜனநாயகம்தான் இந்திய ஜனநாயகம். எத்தனை கட்சி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். உலகத்தில் சில நாடுகளில் இரண்டு கட்சிகள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை பல கட்சிகள் இங்கே செயல்படலாம். பல கட்சிகள் செயல்பட்டாலும் நடைமுறையில் தந்திரமாக இரண்டு கட்சிகள் மட்டும்தான் தேர்தலில் வெற்றிபெற அல்லது ஆட்சி அமைக்கலாம் என்ற விதத்தில் அரசியலே கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தி.மு.க. அல்லது அ.தி.மு.க., மத்தியில் காங்கிரஸ், அல்லது பா.ஜ.க. கட்சி. எல்லாக் கட்சிகளும் சேர்ந்தாலும் கூட அந்த இரண்டு கட்சிகளுக்குள் கடைசியில் அடக்கமாகிவிடுகின்றன. அவர்கள் தெளிவாகத் தெரிவதில்லை. தெளிவாக தெரியாமல் போவதற்கு என்ன காரணம்- என்னவென்றால் – பல கட்சிகளைக் கொண்ட ஜனநாயகம் என்று சொன்னால், பல கட்சிகளின் முகமும் தெரிய வேண்டும். பல கட்சிகளின் கொள்கைகள் மக்களுக்குத் தெரிய வேண்டும். பல கட்சிகள் ஒவ்வொன்றும் எத்தனை சதவிகிதம் வாக்கு பெற்று இருக்கின்றன என்று மக்களுக்குத் தெரிய வேண்டும். சதவிகித வாக்குகள் எப்படி போடுகிறார்கள் என்றால், தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள். நாங்கள் போட்டியிட்டு ஒன்பது தொகுதியில் நாங்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் என்று கணக்கிடுகிறார்கள். அது அல்ல. தமிழகம் முழுதும் இருக்கும் எங்கள் தோழர்கள் வாக்களிக்கிறார்கள். அதைப்போல அனைத்துக் கட்சிகளுக்கும் வாக்களிக்கிறார்கள். நம் இன்றைய தேர்தல் முறை ஆளுங் கட்சியும் எதிர்க் கட்சியும் மட்டும்தான் ஆதாயம் பெறும் வகையில் மட்டும்தான் இன்றைய தேர்தல் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். இது அவசியமானது. விகிதாசார தேர்தல் முறைதான் அவசியம் என்று நான் கருதிகிறேன்.
தமிழ்நாட்டின் அரசியலில் பெரிய மாற்றம் என்று இல்லை. தமிழ்நாட்டின் மையம் என்ன? தமிழ் மக்களின் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. உலகத்தில் ஒரு தேசிய இனம் தன் மொழி பேசும் மக்களை அல்லது தம் மொழி தேசிய இனம் சார்ந்தவர்கள் படுகொலை செய்யப்படும்போது மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். நமக்குப் பக்கத்தில் இருக்கும் – நான் முதலில் கூறிய கடற் கோள்களால் நம்மிடம் இருந்து பிரிக்கப்பட்ட நிலம்தான் ஈழமும் இலங்கையும். கடற்கோள் பிரிக்காமல் இருந்தால் தமிழகத்தின் ஒரு பகுதியாக அவர்களும் இருந்திருப்பார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து உரிமைகளிலும் அவர்களுக்கும் பங்கு இருந்திருக்கும். ஆனால் கடற்கோள் பிரித்த காரணத்தால் தனியாகப் போய் அங்கு பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள இனத்தால் தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டு 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இரண்டு ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலின் துயரம் என்பது- இரண்டாம் உலகப் போரின்போது கூட தனிப்பட்ட நிகழ்வுகள் இவ்வளவு கொடுமையாக நடைபெறவில்லை. இரண்டாம் உலகப் போரில் இரண்டு கோடி மக்கள் இறந்தார்கள் என்றால் குண்டுகள் போட்டு அழித்து இப்படியெல்லாம் இறந்தார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் – உங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் தன்று கூறி சிறப்புப் பாதுகாப்பு வளையங்கள் அமைத்து மூன்று வளையங்கள் அமைத்து – கடைசி வளையத்திற்கு வரச் சொல்லி, சாட்சிகள் அற்ற முறையில் கொன்று குவித்தார்கள். இந்தக் கொடுமை மிக மோசமானது. இந்தக் கொடுமைக்கு இந்திய அரசு கவலைப்படவில்லை. ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறார்கள். உலகம் கவலைப்படவில்லை. ஆனால் தமிழகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகம் எதிர்கால அரசியலில் தவிர்க்க முடியாமல் முள்ளிவாய்க்காலின் நியாயமும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தமிழ் மக்களின் அரசியல் விடுதலை, அதுவும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் அடுத்த அரசியல் என்பது, தமிழகத்தின் இயற்கை வளம் பாதுகாப்பு. கேரளாவைப் போல ஆந்திராவைப் போல ஒரு மாநிலமல்ல தமிழ்நாடு. தமிழகத்தில் சமவெளிகள் அதிகம். பயிர் செய்யும் நிலங்கள் அதிகம் இருக்கிறது. தொன்மையான கலாச்சாரம், பண்பாடு எல்லாம் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் இணைந்த தமிழகத்தை அரசியல் ரீதியாக – தமிழக இயற்கை வளங்களை பாதுகாப்பது, அரசியல் உரிமைகளை பாதுகாப்பது, தமிழ் மக்களின் பண்பாட்டைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் எதிர்கால அரசியல் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது. இந்த அரசியல், கட்சி அரசியலால் சேதப்பட்டுவிடக்கூடாது. அதை மக்கள் அரசியலாக மக்களின் கூட்டு அரசியலாக, மக்களின் குடிமை அரசியலாக அதை மாற்ற வேண்டும்.
சிறகு: இன்றைய சந்தைப் பொருளாதாரம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?
திரு. சி. மகேந்திரன்: சந்தைப் பொருளாதாரம் என்பது- சந்தை என்பதை தவிர்க்க முடியாது. மாற்ற முடியாது. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு முன்பே சந்தை இருந்தது. சந்தைக்கு ஒரு தொன்றுதொட்ட மரபு நம் தமிழ் சமூகத்தில் உள்ளது. பொருளை உற்பத்தி செய்து பொது இடத்தில் விற்பது, பொருளை விநியோகிக்க சந்தை அவசியம். ஆனால் இந்த சந்தை என்பது யாரால் நிர்ணயம் செய்யப்படுகிறது? ஒரு காலத்தில் ஈரோடு சந்தை நிலவரப்படி, பொள்ளாச்சி சந்தை நிலவரப்படி, வந்தவாசி சந்தை நிலவரப்படி, விருதுநகர் சந்தை நிலவரப்படி என்றுதான் போடுவார்கள். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் சந்தை நிலவரப்படி விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இப்போது முன்பேர வர்த்தகம் (online trade) வந்த பிறகு, சிகாகோ சந்தை நிலவரப்படி என்று இந்தியாவில் பொருள் விற்கிறது. ஜப்பானின் டோக்கியோ நிலவரப்படி இங்கு விற்கப்படுகிறது. சந்தையை உலகச் சந்தையாக மாற்றியதால் மிகவும் பின்தங்கிய அல்லது ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு மோசமான சூழ்நிலைகள் உருவாகிறது. இதற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும். உலகத்தோடு நாம் இணங்க வேண்டும் என்றாலும் நம்மைப் பாதுகாத்துக் கொண்டு – உலகத்தில் இருக்கும் காட்டு யானைகள், காட்டு எருமைகள் நம் தோட்டத்தில் புகுந்து அழித்து விடாமல் வேலியைப் பலப்படுத்தி நம் விவசாயத்தையும் வேளாண்மையையும் சிறப்புற செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சந்தைப் பொருளாதாரம் எதிர்காலத்தில் தேவைப்படுகிறது. உலகத்தின் பல நாடுகளில் செய்கிறார்கள். அவ்வாறான ஒன்றை எதிர்காலத்தில் நாம் செய்யலாம்.
சிறகு: மத்திய அரசின் சட்டங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் மாநில அரசுகளின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது. இதைத் தடுப்பதற்கு வழி என்ன?
திரு. சி. மகேந்திரன்: இந்திய அரசைப் பொறுத்தவரையில் கூட்டாட்சி. அது வார்த்தையில்தான் இருக்கிறதே தவிர உண்மையில் கூட்டாட்சி இல்லை. மத்தியில் டெல்லி ராஜா போல- அந்தக் காலத்தில் சுல்தான் சிற்றரசுகளை ஆண்டது போல இப்போது இப்போது டெல்லி சுல்தான்கள் மாநிலங்களை ஆளுகிறார்கள். அவர்களுக்கு காவடி தூக்கும் கட்சிகள் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தின் தனித்தன்மையைப் பேணக்கூடிய அரசியல் என்பது இல்லை. அதனால் மத்திய அரசு, மாநிலங்களை தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கவே விரும்புகிறது. அதன் விளைவுதான் சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். எந்த சட்டம் போட்டாலும். மத்திய அரசு என்று ஒன்று இருக்கிறதா? மாநிலங்கள் எல்லாம் தனித்தனியாக பிரிந்த பிறகு மத்திய அரசுக்கு என்று ஒரு இடம் இருக்கிறதா? அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா என்றால் கிடையாது. மாநிலங்கள் எல்லாம் இணைந்ததுதான் மத்திய அரசு. எல்லாவற்றையும் பிரித்து விட்டால் மத்திய அரசு என்று ஒன்று கிடையாது. எல்லாமே இணைத்திருக்கும் கூட்டாட்சியை மறந்து – மாநிலங்களின் தோள்களில் உட்கார்ந்து சவாரி செய்யும் வசதிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கக் கூடியது மட்டுமல்ல, இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்கக்கூடிய ஆபத்துகள் இதில் அடங்கி இருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் தங்கள் உரிமைகள்- அந்த உரிமைகளுக்கு எதிராக எந்த சட்டங்கள் வருகிறதோ அவற்றை எதிர்ப்பது போராடுவது – புதிய அரசியல் அமைப்புச் சட்டம் என்பது மாநிலங்களின் உரிமைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து உருவாக்குவது போன்றவற்றில் முதல் கவனம் செலுத்த வேண்டும்.
சிறகு: தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி வளர நாம் இன்னும் என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும்?
திரு. சி. மகேந்திரன்: அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது. மக்கள்தான் செய்ய வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் தாய்மொழி கல்வி என்பதுதான் சிறப்பானது. எங்கள் தலைவர் ஜீவா சொல்லுவார், ‘தாய்மொழிக் கல்வி என்பது தாய்ப்பால் போன்றது. அந்நிய மொழிக் கல்வி என்பது புட்டிப் பால் போன்றது’ என்று. அதுதான் உண்மை. தாய்ப்பால் இருக்கும்போது நாம் ஏன் புட்டிப் பால் வாங்க வேண்டும்? தமிழ் மொழி உலகத்தின் எல்லா ஞானங்களையும் தன்னிடம் ஈர்த்துக் கொண்டு தன் மக்களுக்கு போதித்து வளர்க்கக்கூடிய அனைத்து தகுதிகளையும் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அதனால் இது தேவை. தேவை என்பதை முதலில் உணர வேண்டும். இரண்டாவது ஆங்கிலம் படித்தால்தான் மேன்மை என்ற நிலை போக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்புகளில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் தருவதால் அதற்குப் போகிறார்கள். இதை மாற்ற வேண்டும். அதை மாற்ற மக்கள் விழிப்புணர்வுதான் தேவை.
சிறகு: சமீபத்தில் நீங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டீர்கள். அந்த அனுபவம் பற்றி?
திரு. சி. மகேந்திரன்: ஐரோப்பிய நாடுகள் நார்வே, ஜெர்மன், பிரான்ஸ். நார்வேயில்தான் அதிக நாள் இருந்தேன். நார்வேயில் ஆஸ்லோ நகரத்தில் முள்ளிவாய்க்கால், அதில் கொல்லப்பட்ட மக்கள் – அந்த மக்களுக்காக அஞ்சலிக் கூட்டம், வீர வணக்க நாள் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டேன். புதிய எழுச்சியைப் பார்க்க முடிந்தது. தமிழகத்தில் கூட பல பேர், முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு அது சோர்ந்து போய்விடும் என்று நினைக்கிறார்கள். அது சோராது. சோராதது மட்டுமல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த மக்கள் போராடுவார்கள் என்ற உணர்வை நேரடியாக என்னால் அங்கே பார்க்க முடிந்தது. அதைப்போல ஜெர்மன், பிரான்சிலும் கூட பார்த்தேன். அந்த நாடுகளின் பயணங்களில் எனக்குக் கிடைத்த மற்றொரு அனுபவம்- இடதுசாரி கட்சிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்டு கட்சி, லெப்ட் லீ ஜெர்மன், அதைப்போல நார்வேயில் சந்தித்தேன். அவர்கள் அத்தனை பெரும் ஈழத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஈழ அரசியலில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் அரசியல் உரிமையோடும் உணர்வோடும் வாழ வேண்டும் என்பதை உளப்பூர்வமாக அவர்கள் விரும்புகிறார்கள். இதையெல்லாம் கண்டேன். பல புதிய நண்பர்கள், போற்றுதற்குரிய புதிய நட்பு இவையெல்லாம் அந்தப் பயணத்தில் கிடைத்தது.
சிறகு: நீங்கள் மதிக்கும் சமகால அரசியல் தலைவர்கள் யார்?
திரு. சி. மகேந்திரன்: சமகாலத்தில் என்னை உருவாக்கியதில் எனக்கு பல ஊக்கங்களைக் கொடுத்ததில் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களுக்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. குறிப்பாக தோழர் ப. மாணிக்கம் அவர்கள். அவர் இறந்துவிட்டார். தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு. அவரோடு நான் 1992லிருந்து அவர் செயலாளராகவும் நான் துணைச் செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றி இருக்கிறேன். இப்போது தா. பாண்டியனுடன் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறேன். சிறந்த பேச்சாளர், சிறப்பானவர், செயல்பாட்டாளர் என்ற முறையில் தா. பாண்டியன் அவர்கள் போற்றுதலுக்குரியவர். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களால் மதிக்கத்தகுந்த நேர்மை, அர்ப்பணிப்பு என்ற வகையில் நான் அய்யா நல்லகண்ணு அவர்கள் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளேன். கம்யூனிஸ்டு கட்சியின் வட்டத்தைத் தாண்டி நான் மிகவும் மதிக்கும் அரசியல் தலைவர் யார் என்றால், அய்யா பழ.நெடுமாறன் அவர்கள்தான். ஈழ மக்களின் விடுதலை என்பது மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் குறிப்பாக ஒடுக்குமுறை, இயற்கை வளத்தை பாதுகாப்பது, தமிழரின் பண்பாட்டைப் பாதுகாப்பது போன்ற எல்லா பிரச்சினைகளையும் நாடாளுமன்ற, சட்டமன்ற நடைமுறைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் அதை மக்கள் இயக்கமாக அவர் மாற்றுகிறார். மற்ற தமிழகத்தின் தலைவர்களை நான் மதிக்கவில்லை என்று அல்ல. பல அரிய தலைவர்கள் இருக்கிறார்கள், இளைய தலைவர்கள், முதிய தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அத்தனை பேர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் இவர்கள் நான் மிகவும் மதிக்கக் கூடிய அவர்களால் ஈர்க்கப்பட்டவனாக இருக்கிறேன்.
சிறகு: உங்களின் பொன்னான நேரத்தை சிறகுக்காக தந்தமைக்கு நன்றி.
திரு. சி. மகேந்திரன்: சிறகு இதழுக்கும் அதன் வாசகர்களுக்கும் மிக்க நன்றி.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
அனைவரும் இயற்கையை பேணி பாது காக்க வேண்டும் என்பது தெளிவாகிறது