நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம் (கட்டுரை)
ஆச்சாரிJul 15, 2013
சென்னை நகரத்தின் பெரும்பாலான வீதிகளில் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கள் பயணத் தொகையை ஏற்றிக் கூறுவதும், பயண நேரத்தில் பயனிகளுக்குக் கொடுக்கும் தொல்லையும், இதனால் பயணிகள் நொந்து போவதும், அதனால் விளையும் ஏச்சும், பேச்சும் சென்னையில் வாடிக்கையாக நாம் அனுபவித்த நிகழ்வுகளில் ஒன்று.
இனி இது போல் நாம் பேசவும், தேவையில்லாமல் ஏசவும் தேவை இல்லை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டு, மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது “நம்ம ஆட்டோ” (சென்னையின் கெளரவம்) – என்ற பெயருடைய மூன்று சக்கர வாகன நிறுவனம். அப்படி என்ன இங்கு புதிதாக நடக்கிறது? இதைத் தொடங்க வேண்டிய அவசியமென்ன? என்று மனதிற்குள் பல கேள்விகளுடன், தேனாம்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் “நம்ம ஆட்டோ” நிறுவனர்களைச் சந்திக்கச் சென்றோம்.
இந்நிறுவனத்தின் பொது மேலாளரான மூசா சபீர்கான் என்பவரைச் சந்தித்தோம். அவர் கூறியதாவது.
அப்துல் கஜிப், மன்சூர் அலிகான் ஆகிய இருவரும் இணைந்தே இத்திட்டத்தைக் கடந்த மே மாதம் 19ம் தேதி ஆரம்பித்தனர். ‘நம்ம ஆட்டோ’வின் நிர்வாக இயக்குனராக இருக்கும் அப்துல் கஜிப் அவர்கள் சென்னையில் கடந்த 10 வருடமாக மூன்று சக்கர வாகனம் ஓட்டும் ஒட்டுனர்களிடமிருந்து பெற்ற பல்வேறான கசப்பான அனுபவத்தின் விளைவாகவே இதைத் தொடங்கினார். இவர் தொழில் நுட்பத் துறையில் (ஐ.டி) பணியாற்றியவர். இவர் தொடங்கிய இந்த “நம்ம ஆட்டோ” என்ற நிறுவனத்திற்காக கடந்த நான்கு வருடமாக உழைத்தார். காரணம் சென்னையின் உயிர் இந்த மூன்று சக்கர வாகனம். இதை அதிகம் பயன்படுத்தும் நடுத்தர மக்களின் பணம் வீண் விரயமாகக் கூடாது. நேர்மையான முறையில் அவர்களுக்கு சிறந்த பயணத்தை இந்த மூன்று சக்கர வாகனம் மூலம் அளிக்க வேண்டும் என எண்ணினார்.
இந்நிறுவனம் எப்படி இருந்தால் மக்கள் விரும்புவார்கள் எனப் பல நாள் என்னோடு பேசுவார். அரசு கூறியது போலவே மீட்டர் பொருத்தி ரசீது வழங்க வேண்டும் என முடிவெடுத்தார். சென்னையில் கடந்த 15 வருடமாக மீட்டர் என்றால் என்னவென்றே தெரியாமல் மூன்று சக்கர வாகனத்தில் பயணப்பட்ட நம் மக்களுக்கு இன்று ‘நம்ம ஆட்டோ’வில் மீட்டர் பொருத்தி ரசீது வழங்குவதும், நியாயமான முறையில் பணம் வசூலிப்பதும் மிகவும் பிடித்த ஒன்றாகி விட்டது. இதைத் தொடங்கிய சில நாட்களிலிருந்தே தினமும் எங்களுக்கு 150 அலைபேசி அழைப்புகள் வருகிறது. இன்று நகருக்குள் மொத்தம் 66 மூன்று சக்கர வாகனங்கள் ஓடுகின்றன. கடந்த 45 நாட்களாக 8 ஆயிரம் பயணச்சேவை செய்துள்ளோம். இதுவரை மக்களின் கட்டணத் தொகையாக 7 லட்ச ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளோம் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
நம்ம ஆட்டோவின் சிறப்பு:
‘நம்ம ஆட்டோ’வில் ஜி.பி.ஆர்.எஸ் என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியின் துணையால், எங்களின் தலைமை இடமான தேனாம்பேட்டையில் இருந்து நகருக்குள் ஓடுகின்ற ஒவ்வொரு மூன்று சக்கர வாகனத்தையும் கண்காணிக்கின்றோம். ஒரு கிலோமீட்டருக்கு 10 ரூபாயும், 2 கிலோமீட்டருக்கு 25 ரூபாயும் வசூலிக்கிறோம். இரண்டு கிலோமீட்டருக்கு மேல் ஓடும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வசூலிக்கின்றோம்.
இதில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் செல்லும் தூரத்தையும், அதற்கான கட்டணத்தையும் மீட்டரில் பார்த்துக் கொண்டே பயணிக்கலாம். மீட்டர் காட்டும் கட்டணத்திற்கு மேல் ஒரு பைசா கூட வாங்கக் கூடாது என ஒவ்வொரு ஓட்டுனர்களுக்கும் கண்டிப்பான முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் செலுத்தும் கட்டணத்திற்கு தேதி, நேரம், மூன்று சக்கர வாகன எண்ணுடன் கூடிய ரசீது பயணிகளுக்குத் தரப்படும்.
பயணிகள் எங்கள் வாகனத்தில் பயணிக்கும் போது ஓட்டுனர்கள் பயணிகளிடம் தவறாக நடந்தாலோ, மரியாதை இன்றி பேசினாலோ அல்லது வேறு ஆபத்துகள் என்றால் உடனே பயணிகள் டிஜிட்டல் மீட்டர் அருகில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால் போதும், உடனே தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலிக்கும். இது எதற்காக என்றால் பயணிகள் தங்கள் குறைகளை எங்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இந்த ஏற்பாடு. தவிர சாதாரணமாக நகருக்குள் ஓடும் மூன்று சக்கர வாகனத்தில் வசூலிக்கும் கட்டணத்தை விட நாங்கள் 50 சதவீதம் குறைவாகவே கட்டணம் வசூலிக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் மக்களின் பணம் 50 சதவீதம் மிச்சம் ஆகிறது என்ற திருப்தி எங்களுக்கு நிறைவைத் தருகிறது.
ஒட்டுனர்களுக்கான விதிகள்:
*. “நம்ம ஆட்டோ” – ஓட்டும் பணிக்கு வரும் ஓட்டுனர்கள் முதலில் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தையும், பேட்ஜயும் எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். பின்பு அவர்களுக்கு நாங்கள் தரும் மூன்று விதிகளாவன
*. முதல் விதி: 4500 ஆயிரம் சம்பளம், 30% கமிசன், கால அளவு 36 மாதம்.
*. இரண்டாம் விதி: 12 ஆயிரம் சம்பளம், 10% கமிசன், கால அளவு 40 மாதம்.
*. மூன்றாம் விதி: 15 ஆயிரம் சம்பளம், 5% கமிசன், கால அளவு 42 மாதம்.
*. நான்காம் விதி: 18 ஆயிரம் சம்பளம், கமிசன் இல்லை, கால அளவு 42 மாதம்.
இந்த விதிகளில் ஏதேனும் ஒரு விதிக்கு உட்பட்டு ஓட்டுனர்கள் பணியில் இணையலாம். இவர்கள் இந்தக் கால அளவு முடியும் வரை எந்தக் குறைபாடு இல்லாமலும், பயணிகள் பாராட்டும் விதத்திலும் வாகனம் ஓட்டினால் அதற்குப் பரிசாக, இக்கால அளவு முடியும் தருவாயில் இவர்களுக்கு புதிதான மூன்று சக்கர வாகனம் ஒன்று எங்கள் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும்.
ஓட்டுநர் பணிக்கு வருபவர்களுக்கு நாங்கள் வழங்குவது
- எங்களின் மூன்று சக்கர வாகனம் தருகிறோம்.
- இலவச ஓட்டுநர் சீருடை தருகிறோம்.
- ஓட்டுவதற்கு எரிபொருள் தருகிறோம்.
- “நம்ம ஆட்டோ” என்ற விளம்பரப் பலகையும், மீட்டரும் தருகிறோம்.
இங்கு இத்தனை மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும் என்ற கால அளவு எதுவும் கிடையாது. அவரவர் மனசாட்சிப்படி வாகனம் ஒட்டினாலே போதும். அல்லது அவர்கள் ஓட்டும் நேரத்தை ஓட்டுனர்கள் விருப்பம் போல் மாற்றிக் கொண்டு பணியாற்றலாம்.
தினமும் மக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளால் எங்களின் பொறுப்புணர்வு மேலும் மேலும் கூடுகிறது.
நம்ம ஆட்டோ ஓட்டுனரின் தகுதிகள்:
- ஓட்டுநர் சீருடை அணிந்தே வாகனம் ஓட்ட வேண்டும்.
- மீட்டர் போட்ட பின்பே வாகனம் ஓட்ட வேண்டும்.
- மீட்டருக்கு மேல் 1 ரூபாய் கூட வசூலிக்கக் கூடாது.
- போதைப் பொருட்களை உபயோகிக்கக்கூடாது.
- பயணிகளிடம் கனிவான முறையில் பேச வேண்டும்.
- மிதமான வேகத்திலே செல்ல வேண்டும்.
இந்தத் தகுதிகளைக் கண்டிப்பாக ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும். இதில் பயணம் செய்பவர் ஓட்டுநர் மீது ஏதும் குறை கூறினால்,அன்று பயணிகள் பயணம் செய்த அந்தப் பயணத்திற்குக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அப்பயணம் இலவசமே.
இந்த விதிகளைக் கொண்ட துண்டுச்சீட்டு ஒன்று பயணிகள் பார்வைக்காக வாகனத்தில் உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும்.
ஓட்டுநர் சலுகைகள்:
- ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
- இவர்களின் குழந்தைகளுக்கு கல்வித் துறையில் வழிகாட்டுதல்.
- சிறப்பாகப் பணியாற்றுவதற்காகச் சிறப்பு ஊக்கத்தொகை அளித்தல்.
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏற்படுத்திக்கொடுத்தல்.
- வாரம் ஒரு நாள் விடுமுறை.
நம்ம ஆட்டோ அடையாளம்:
மூன்று சக்கர வாகனத்தில் மேற்புறத்தில் ஒரு புறம் தமிழிலும், மறுபுறம் ஆங்கிலத்திலும் “நம்ம ஆட்டோ” என்று எழுதப்பட்டிருக்கும். என மூசா சபீர்கான் கூறி முடித்தார்.
இது போல மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சென்னை நகரில் தேனாம்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டுமே இயங்கி வரும் “நம்ம ஆட்டோ” சென்னை நகர் முழுக்க இருந்தால் இன்னும் பல மக்கள் எங்களைப் போல பயனடைவார்கள் என்று நம்ம ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியதைக் கேட்கும் போது நமக்கும் இந்த எண்ணம் வரத்தான் செய்கிறது.
மேலும் தொடர்புக்கு : 044-65554040 & 65552020
மின்னஞ்சல் முகவரி : info@nammaauto.com
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
அய்யா நல்ல முயற்சி பாராட்டுகள் பணி சிற்க்க் வாழ்த்துகள்
மற்ற மாநிலத்திலிருந்து ஒவ்வொரு முறை தமிழகம் வ்ந்து போனபோதும் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றவர்களுக்கு இனிமேல் ஏற்படாது என்று அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தங்கள் நற்பணி தொடர்ந்து வளர எங்கள் அனைவரது வாழ்த்துக்கள்.
This plan will be really beneficial for both the auto drivers and passengers.
Guiding auto driver’s children in education, and gifting three wheeler for the sincere, honest and successful auto drivers, are really appreciable and selfless service.