திரு.பழ. நெடுமாறன் சிறப்பு நேர்காணல் (காணொளி)
ஆச்சாரிMay 17, 2013
1.கேள்வி: உங்களைப் பற்றியும், உங்கள் பூர்விகக் குடும்பம் பற்றியம் கூறுங்கள்?
பதில்: நான் மதுரையில் பிறந்து வளர்ந்தேன். எனது பாட்டனார் மு.கிருஷ்ணபிள்ளை என்பவர் அந்த நாளில் புத்தகங்கள் பதிப்பித்து வந்தார்கள். புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகளின் அத்தனை நாடகங்களையும் முதன் முதலாக புத்தகமாக வெளியிட்டவர் எனது பாட்டனார் ஆவார். அதே போல பல்வேறு புலவர்கள் அந்தக் காலத்தில் எழுதிய நூட்களையெல்லாம் வெளியிட்டு அவர்களுக்கு ஆதரவு தந்தவர் அந்த வழியிலேயே எனது தந்தையார் அவர்களும் பின்பற்றினார்கள். மதுரையிலே புகழ்பெற்ற திருவள்ளுவர் கழகத்தை நிறுவியவர் எனது தந்தையார் பழனியப்பனார் ஆவார். மதுரை தமிழ்ச்சங்கத்திற்கும் அவர் செயலாளராக இருந்து செந்தமிழ் கல்லூரி ஒன்றை உருவாக்கினார்கள். அந்தக் காலத்தில் அரசு உதவி இல்லாமல் மதுரை தமிழ்ச்சங்க பொன்விழாவை ஒரு பெரிய உலக மாநாடு நடப்பது போல நடத்திக்காட்டிய பெருமை அவருக்கும், மறைந்த பி.டி.ராஜன் அவருக்கும் உண்டு. இருவரும் இரட்டையர்களாக இருந்து செயல்பட்டார்கள். அப்போது எனது தந்தையாரை சந்திப்பதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழறிஞர்கள் வருவார்கள். ஆக என்னுடைய சிறு வயதில் அவர்களுடனெல்லாம் நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு தமிழ் சூழலில், தமிழுக்கு தொண்டாற்றுகிற சூழலிலே நான் வளர்ந்த காரணத்தினால், என் உள்ளத்தில் ஆழமாக அவைகள் இன்றளவும் படிந்திருக்கின்றன. இன்றைக்கு தமிழ் நாட்டிலுள்ள முக்கியமான தலைவர்களானாலும் அல்லது தமிழரிஞர்களானாலும் என் மீது அன்பு செலுத்துகிறார்கள் என்று சொன்னால் அதற்கு என் தந்தையார் செய்த தமிழ் தொண்டுதான் அடிப்படைக் காரணமாகும். அதற்குப் பிறகு நான் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் படிப்பதற்காகச் சென்றேன். அங்கு நான் தமிழ் சிறப்பு வகுப்பு எடுத்து படித்தேன். அந்த நாளில் B.A.Honourse என்ற சிறப்பு வகுப்பு பிரிவு இருந்தது அதில் சேர்ந்து படித்தேன். அண்ணாமலைப் பல்கலைகழகம், அங்கேயே மாணவர்கள் முழுமையாக தங்கி படிக்கிற ஒரு பல்கலைக்கழகம். விரல் விட்டு எண்ணக்கூடிய சில மாணவர்கள் மட்டுமே சிதம்பரத்திலிருந்து வந்து போய்க்கொண்டிருந்தார்கள். மிகப் பெரும்பாலான மாணவர்கள் மாணவர் விடுதிகளிலேயே தங்கிப் படிக்கிற சூழலில் அந்தக் காலத்தில் சிதம்பரத்திற்குத் தெற்கே உள்ள எந்த மாவட்டத்திலும் சிறப்பு வகுப்புகளும் கிடையாது, பட்டமேற்படிப்பு வகுப்புகளும் கிடையாது எனவே அங்கு சகல மாவட்ட மாணவர்களும் வந்து படித்தார்கள். எல்லோரிடமும் நெருங்கிப் பழகக்கூடிய ஒரு நல்லவாய்ப்பு கிடைத்தது. நான் படிக்கிற காலத்தில் என்னுடன் படித்த பல நண்பர்கள் இன்றைக்கு அரசியலிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றார்கள். பலர் பேராசிரியர்களாக, பொறியாளர்களாக, இன்னும் பல விதத்திலும் சிறந்து விளங்குவதை நான் இன்றைக்கு பார்க்கிறேன். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் படிக்கின்றபோது மாணவர் பிரச்சனைக்காக ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அந்த போராட்டத்தில் நானும் வேறு சில மாணவர்களும் அன்றைக்கு கைது செய்யப்பட்டோம். எங்களை சிதம்பரம் காவல் நிலையத்தில் வைத்திருந்தார்கள். மறுநாள் நீதிமன்றம் எங்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தது. படிக்கும் பொழுதே மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்காவலில் வைக்கக்கூடிய ஒரு நிலைமை என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு ஆரம்பமாக அமைந்தது. அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் நான் படித்த பொழுது என்னுடைய அறிவுக்கண்களைத் திறந்த பெரும் பேராசிரியர்கள் அங்கே பணியாற்றினார்கள். எங்களுடைய பேராசிரியராக டாக்டர்.ஆர்.சிதம்பரனாதனார் இருந்தார். அதற்குப் பின்னால் நம்முடைய தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் பெரும் தமிழறிஞர், அவருக்கு கீழே படிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. எங்களுடைய துறையிலும் பெரும் பெரும் பேராசிரியர்களெல்லாம் இருந்தார்கள். அவர்களிடம் கற்றதுதான் இன்றளவுக்கும் எனக்கு துணை நிற்கிறது என்று சொன்னால் மிகையாகாது. எங்களுடைய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அவர்கள் பிற்காலத்தில் மதுரை பல்கலைகழகத்தில் முதல் துணை வேந்தராககூடிய பெருமைக்கு உரியவராக திகழ்ந்தார்கள் அவர்கள்.
2. கேள்வி: ஈழத்தமிழர்கள் பலமிழந்த நிலையில், புலம் பெயர்ந்தோர் அமைப்புகள் அந்தந்த நாடுகளிடம் தமது கோரிக்கைகளை வைத்து, அந்நாடுகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் எந்த நாடும் தனித்தமிழீழத்தை ஆதரிக்க முன்வரவில்லை அப்படி இருக்கும் நிலையில் வெளிநாட்டுத் தமிழர்கள் தனிநாடு கோரிக்கையை முன் வைக்காமல் பன்னாட்டு விசாரணை, அரசியல் தீர்வு, என சிங்களவர்களின் காலணியாகத் திட்டத்தை எதிர்த்துச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்குத் தங்கள் அறிவுரை என்ன?
பதில்: எந்த நாட்டின் விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் ஒரே தளத்தில் மட்டும் அது நடைபெறக்கூடாது. அது பல்வேறு தளங்களில் நடைபெற வேண்டும். அப்போதுதான் இறுதி வெற்றியை அடைய முடியும். தனித்தமிழ் ஈழம் வேண்டுமென்று ஜனநாயக ரீதியில் போராடுபவர்களாக இருந்தாலும் சரி, ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும் சரி ஆயுதம் தங்கிய போராட்டத்தில் ஈடுபடுவர்களாக இருந்தாலும் சரி லட்சியம் ஒன்றுதான். இதில் ஒருவரை ஒருவர் குறைசொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரவர்கள் வழியில் இறுதி லட்சியத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அதுபோல் புலம் பெயர்ந்த தமிழர்கள், ஆற்ற வேண்டிய கடமை என்பது வேறு தளத்தில் ஆற்ற வேண்டும். அப்போதுதான் நம் லட்சியத்திற்கு துணையாக இருக்க முடியும், புலம் பேர்ந்த தமிழர்கள் அந்தந்த நாடுகளில் தனிநாடு கோரிக்கையை ஆதரித்து அங்கே போராட முடியாது. அதுவேறு நாடு. ஆனால் தங்களுடைய தாயகத்தில் நடைபெறக்கூடிய தனிநாடு போராட்டத்திற்கு வெளிநாடுகளின் ஆதரவைத் திரட்டுகின்ற பெரும்பணி புலம் பெயர்ந்த தமிழர்களையே சார்ந்தது.
அதிலும் போருக்குப் பிற்பட்ட இந்த சூழ்நிலையில் அந்தப் போரின் பொது இழைக்கப்பட்ட மனிதப் படுகொலைகளைப் பற்றி சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பது அவர்கள் கடமையாகும். ஈழத்தில் உள்ள தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்களைக் கொண்டு வந்து திட்டமிட்டு கொடி கட்டுகிற சிங்கள காலணியாக்கத் திட்டத்தைப் பற்றி அந்த நாட்டு மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் சொல்லி அதைத் தடுத்து நிறுத்துவதற்கு அந்த நாடுகளின் உதவியைப் பெறுவது போன்ற பல்வேறு வேலைகளை புலம் பெயர்ந்த தமிழர்கள் செய்வது தவறல்ல அதைத்தான் அவர்கள் செய்யவேண்டும். அவ்வாறு செய்வது சரியானது தான்.
பாலஸ்தீன் விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்று சொன்னால் இந்தப் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவு திரட்டப்படுகிறது. யூதர்கள் செய்கின்ற இனப்படுகொலைகள் பற்றி பிரச்சாரம் தொடர்ந்து நடக்கிறது. ஆக அங்கு தாய் மண்ணில் வாழ்கிறவர்கள் போராட வேண்டிய முறைகள் வேறு, போராடுகிற களங்கள் வேறு. வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் போராட வேண்டிய முறைகள் போராடுகின்ற களங்கள் வேறாகும். இதை வேறுபடுத்தித்தான் பார்க்க வேண்டும்.
உதாரணமாகச் சொல்ல விரும்புகிறேன், இந்தியா சுதந்திரம் பேராத காலகட்டத்தில் அடிமை நாடாக இருந்த பொது 1945ம் ஆண்டு உலகப் போர் முடிந்து ஐ.நா. பேரவையை அமைக்க வேண்டும் என்ற முயற்சி நடந்து அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரிலே உலகத்தில் உள்ள 45 நாடுகள் அன்று கூடின. அந்த காலகட்டத்தில் இலண்டனில் வாழ்ந்த வி.கே.கிருஷ்ண மேனன் அவர்களும், விஜயலட்சுமி பண்டிட் (பாண்டிய ஜவர்ஹர்லால் அவர்களின் சகோதரி) ஆகிய இரண்டு பேரும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐ.நா. நடைபெறுகின்ற மன்றத்திற்கு வெளியே நின்றனர். ஏனென்றால் மன்றத்தினுள் போக முடியாது காரணம் ஐ.நா பிரதிநிதிகள் அல்ல இவர்கள். அவ்வாறு வெளியே நின்று இக்கூட்டத்திற்கு பங்கேற்க வருகிற பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களிடம் இந்தியாவின் சுதந்திரத்தை வலியுறுத்தும் துண்டறிக்கைகளை கொடுத்து, எங்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
மேலும் இவர்கள் தங்கி இருந்த இடங்களுக்கும் சென்று, இந்திய சுதந்திரத்திற்கு, இவர்களின் ஆதரவை நாடி பிரச்சாரம் செய்தார்கள். கிருஷ்ண மேனனோ, விஜயலட்சுமி பண்டிட்டோ இந்தியாவில் நடைபெறுகின்ற சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குப் போவது தான் நம் நோக்கமாக இருக்க வேண்டும் என்று போராட்டக் களத்தில் குதிக்கவில்லை. ஆனால் இவர்கள் வெளிநாட்டில் செய்த பணி என்பது மிக முக்கியமான பணி, அந்தப் பணியும் கிட்டத்தட்ட இங்கே உள்நாட்டிலே போராடுகிறவர்கள் செய்கிற பணிக்கு நிகரானதுதான். இப்படிப் பல்வேறு தளங்களில் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையிலே வெளிநாட்டுத் தமிழர்கள் இன்றைக்கு மேற்கொண்டிருக்கின்ற இந்தப் பணிகள் மிகச் சிறந்தவை. அதை இவர்கள் தொடர்ந்து செய்வதே நல்லது.
3.கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவர் இறந்து விட்டதாகப் பலர் நம்பி, தம் பணிகளைச் செய்யத் துவங்கி விட்டனர். ஆனால் தாங்கள், தலைவர் வந்துவிடுவார் என்று கூறிவருகிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம் உள்ளது. அப்படியே தலைவர் தப்பி இருந்தாலும் இதுவரை அவர் வெளிவராமல் இருப்பது ஏன் என்பது பற்றிக் கூறுங்கள்?
பதில்: தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்னமும் இருக்கிறார். பத்திரமாக இருக்கிறார். அடுத்தகட்ட விடுதலைப் போராட்டத்திற்கு ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறார் என்று நான் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். எனக்குக் கிடைத்த மிக நம்பகமான, உறுதியான செய்திகளின் அடிப்படையில் தான் இதை நான் சொல்லி வருகிறேன். என்னுடைய பொது வாழ்க்கையில் இந்தியாவில் உள்ள தமிழர்களிடம் மட்டுமல்ல, உலகமெல்லாம் உள்ள தமிழர்களிடம் ஒரு நன்மதிப்பையும் நான் ஒரு நெர்மையாளன் என்ற பெயரையும் பெற்றிருக்கிறேன். அதைக்கெடுத்துக் கொள்ளும் வகையில் எதையும் சொல்லவும் பட்டேன், செய்யவும் மாட்டேன்.
அந்த வகையில் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார். எப்போது வெளிவர வேண்டுமோ அப்போது வெளிவருவார் என்பதை உறுதியாகவும் திட்டவட்டமாகவும், அழுத்தமாகவும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
4.கேள்வி: என்ன ஆதாரத்துடன் தலைவர் உயிருடன் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள்?
பதில்: இதற்கென்ன ஆதாரங்கள் என்று கேட்பது உலகம் அறியாதவர்களின் கேள்வி. ஆதாரம் சொன்னால் என்ன நடக்கும், உடனடியாக பிரபாகரன் இருக்கும் இடத்தை அறிந்து அவரைத் தீர்த்துக் கட்ட முயற்சி நடக்கும். இந்தியாவின் “ரா” உளவுத் துறையும், சிங்கள அரசும் இந்த உண்மையை அறிந்து தான் இருக்கின்றன. ஆகவேதான் அவர்கள் பதறுகிறார்கள். போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டி விட்டோம், பிரபாகரனையும் ஒழித்துக்கட்டி விட்டோம் என்று கொக்கரிக்கிரவர்கள், ஏற்கனவே 3 லட்சம் பேர் சிங்கள ராணுவத்திடம் இருக்கிறார்கள். பிரிட்டனில் இருப்பதை விட அதிகமான எண்ணிக்கையில் இந்த சிறு நாட்டிலே ராணுவம் இருக்கிறது. இப்போது புதிதாக ஒரு லட்சம் பேரை ஏன் இந்த ராணுவத்தில் சேர்க்க வேண்டும்?
நீங்கள் தான் புலிகளை ஒழித்து விட்டீர்கள், பிரபாகரனையும் ஒழித்துவிட்டீர்களே, அப்புறம் எதற்காக ஒரு லட்சம் பேரை புதிதாகச் சேர்க்கிறீர்கள்? அப்புறம் எதற்கு இந்திய அரசு சிங்கள ரானுத்திற்கு இன்னமும் தொடர்ந்து இந்தியாவில் ராணுவப் பயிற்சிகளை கொடுக்கிறது?
இந்திய அரசுக்கும் தெரியும், சிங்கள அரசுக்கும் தெரியும். மீண்டும் பூகம்பம் வெடிக்கும் , எரிமலை கொதித்துக் கிளம்பும் என்பது இவர்களுக்குத் தெரியும். எனவேதான் இவர்கள் உலகம் பூராவும் வலைவீசித் தேடுகிறார்கள். உலக நாடுகள் பூராவும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் முடிந்துவிட்டது என்றால் நீங்கள் எதற்கு இந்த வீணான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள்? இப்படி ஈடுபட வேண்டிய அவசியமே இல்லையே?
பிரபாகரன் இன்று இல்லை என்று சொன்னால் இவர்கள் எதற்காக அவரை வேட்டையாடுகிற முயற்சியைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இரண்டாவதாக அவர் இறந்து போனதாக ஒரு உடலைக் காட்டினார்கள், பிரச்சாரம் செய்தார்கள். அது உண்மையாக இருந்திருக்குமானால் ராஜபக்சே என்ன செய்திருப்பார்? அந்த உடலைக் கொண்டு வந்து பத்திரமாகக் கொழும்பில் வைத்து சர்வதேசப் பத்திரிக்கயாளர்களை மட்டுமல்ல, கொழும்பில் இருக்கக் கூடிய வெளிநாட்டுத் தூதர்களையும் அழைத்துக் காட்டிருப்பார்.
இதை ஒரு பெரிய வெற்றியாகக் கொண்டாடி இருப்பார். ஆனால் மறுநாளே என்ன அறிக்கை வெளியிடுகிறார்கள், உடலை எரித்து சாம்பலாக்கி அந்த சாம்பலை கடலில் வீசிவிட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அதுமட்டுமல்ல இது பிரபாகரனின் உடல்தான் என்று நிர்ணயம் செய்து கொள்ள மரபணு சோதனை செய்தோம் என்று சொன்னார்கள். இந்தியாவில் புகழ்பெற்ற மரபணு சோதனை விஞ்ஞானி டாக்டர்.சந்திரசேகரன் ஒரு தமிழன். இப்போது ஓய்வு பெற்று பெங்களூரில் வாழ்கிறார். இவர் என்ன சொன்னார் “ மரபணு சோதனை செய்கிற வசதி இலங்கையிலேயே கிடையாது. மரபணு சோதனை செய்ய வேண்டுமானால் குறைந்த பட்சம் பத்து நாட்களாவது ஆகும். இது ஒரு நாள், இரண்டு நாளில் செய்கிற வேலை அல்ல இது என்றார்.
மரபணு செய்து கொள்ளும் வசதி சென்னை, டெல்லி போன்ற நகரில் இருக்கிறது. இலங்கையிலே இந்த வசதி இல்லை என்றார். இப்படி கூறுகிற போது ஏன் இவர்கள் இப்படியொரு பொய்யைச் சொன்ன்னர்கள்? சரி சாட்சிக்கு யாரை அவர்கள் கொண்டுவந்தார்கள். பிரபாகரனின் உடல் இதுதான் என்று கூற? துரோகியான கருணாவைக் கூட்டி வந்து காட்டுகிறார்கள். பிரபாகரனின் பெற்றோர்கள் அப்போது அங்கே தானே இருக்கிறார்கள். அப்போது ராணுவக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இவர்களைக் கொண்டு வந்து காட்டியிருக்கலாம் வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப் போல இவர்கள் துரோகி கருணாவைக் கொண்டு வந்து காட்டி உறுதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஆக எல்லாமே நாடகம். இதை உலக மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். இது தான் உண்மை.
5.கேள்வி: தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்திய அரசு இதுவரை இலங்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அரசை அடிபணிய வைக்க என்னென்ன செய்ய வேண்டும்? தவிர, தமிழகத்தில் இந்திய அரசு, மக்களுக்கு எதிரான திட்டங்களையே (அதாவது கூடங்குளம் பிரச்சனை) செய்து வருகிறது. இதற்கு எப்படி நாம் இந்திய அரசை அணுக வேண்டும்?
பதில்: தமிழக அரசும், தமிழ் நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்கள், செயல்பட்டும் வருகிறார்கள். ஆனால் இந்திய அரசு இதுவரை தன்னுடைய போக்கை கொஞ்சமும் மாற்றிக்கொள்ளவில்லை. அதற்கு என்ன காரணம்? இந்திய அரசு கொஞ்சமும் தொலைநோக்குப் பார்வை இல்லாமலும், அதே நேரத்தில் இதற்கு முன்னாள் இருந்த இந்திரா காந்தியின் அரசோ? அல்லது நேரு அவர்களின் அரசோ? இதுபோன்ற பிரச்சனைகளில் எத்தகைய அணுகுமுறைகளைக் கையாண்டார்கள் என்பதைக் கூட எண்ணிப் பார்க்காமல் அவர்கள் கையாண்ட முறைகளுக்கு எதிரான முறையிலே கையாண்டு இந்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
யானை தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் என்பது பழமொழி. அதே போல இந்திய அரசின் இந்த அணுகுமுறை என்பது, இந்தியாவுக்கே எதிரானதாக இன்றைக்கு முடிந்திருக்கிறது. அவர்கள் என்ன நொண்டிச் சமாதானம் சொன்னார்கள்? நாம் இலங்கைக்கு உதவி செய்யாவிட்டால் அவர்கள் சீனா பக்கம் போய்விடுவார்கள். ஆகவே நாம் உதவி செய்யத்தான் வேண்டும் என முடிவு செய்து ஈழத்தமிழர்களை பலிகாடாக்கி, சிங்கள அரசை தாஜா செய்கிற முயற்சியிலே இந்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறது.
சரி, இந்த முயற்சியாவது வெற்றி பெற்றதா? என்றால் இல்லை. இன்றைக்கு சீனா ஆழமாக இலங்கையில் கால் ஊன்றியாகிவிட்டது. இனி எந்தக்காலத்திலும் சீனாவின் பிடியில் இருந்து இலங்கை விலகிவிட முடியாது. அந்த அளவிற்கு எல்லா வகையிலும், அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக ராணுவ ரீதியாக சீனாவின் பிடிக்குள் இலங்கை சிக்கியாகி விட்டது. இந்தியாவின் தெற்கு வாயிலில் ஒரு பெரிய அபாயத்தை இந்திய அரசு தனது தவறான கொள்கையின் விளைவாகக் கொண்டு வந்து விட்டது.
நேரு அவர்கள் பிரதமராக இருந்த பொது 1962-ம் ஆண்டில் சீன ஆக்கிரமிப்பு ஏற்பட்ட பொது நேரு அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு ஒரு முக்கியமான முடிவு எடுத்தார். வடக்கே சீனாவும், மேற்கே பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நிலையை எடுத்திருக்கும் பொழுது நாளைக்குப் போர் மூளுமேயானால் வட இந்தியாதான் குறிப்பான தாக்குதலுக்கு உள்ளாகும். எனவே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகளையும், வட இந்திய மாநிலங்களில் அமைக்காதீர்கள். தென்மாநிலங்களில் அமையுங்கள் என்று நேரு உத்தரவு போட்டு அதற்கிணங்க இன்று வரை தென்மாநிலங்களில் 600 – க்கும் ஏற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
காரணம் என்ன? தெற்கே இந்துமாக்கடலில் இலங்கையைத் தவிர வேறு எந்த நாடும் கிடையாது என்றும், இலங்கை, இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு ஒரு போதும் எதிராகச் செயல்படாது என்ற நம்பிக்கையிலே அது செய்யப்பட்டது ஆனால் இன்றைக்கு என்ன ஆகியிருக்கிறது? இந்தியாவின் தெற்கே சீன அபாயம் தலை தூக்கி நிற்கிறது. இது யாருடைய தவறால் நடந்தது? இமையமலையைத் தாண்டி வந்து சீன இந்தியாவைத் தாக்க வேண்டிய அவசியம் இல்லை. இலங்கையிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள தென்னிந்தியாவை உடனடியாக இலங்கையின் மன்னார் கரையில் இருந்து அவர்களாலே தாக்க முடியும். அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி இந்திய அரசுக்கு இருக்கிறதா? என்றால் இல்லை. ஆக இந்திய அரசு, இந்தியாவை ஒரு பெரும் அபாயத்திற்கு கொண்டு வந்து விட்டு விட்டது. இதே ஒரு சூழ்நிலையில் 1983-ம் ஆண்டில் ஜெயவர்த்தனா ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்தார் அன்றைக்கு இந்திரா காந்தி அவர்கள் ஜி.பார்த்தசாரதியை அனுப்பி ஜெயவர்த்தனாவுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்கள் பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தும்படி செய்த போது, அவருக்கு கோபம் வந்து வெளிக்காட்ட முடியாமல் அமெரிக்காவுடன் ரகசியப் பேச்சு வார்த்தை நடத்தி, திரிகோண மலையிலே அமெரிக்க கடற்படைத் தளத்தைக் கொண்டு வந்து வைப்பதற்கு முயற்சி செய்தார். அதன் மூலம் தன்னை இந்தியாவின் நெருக்கடியிலிருந்து காத்துக் கொள்ள முடியும் என்று நிச்சயமாக நம்பினார். ஆனால் இந்திரா காந்தி அவர்களுக்கு இந்தச் சேதி தெரிந்தவுடனே எச்சரிக்கை செய்தார்.
இந்துமாக்கடலில் எந்த அந்நிய வல்லரசாவது ராணுவ தளம் அமைக்க முயற்சி செய்யுமானால் அதை இந்தியா தனக்கு எதிரான செயலாகவே கருதும், இதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொன்னார். இதன் விளைவாக ஜெயவர்த்தனா பயந்து நடுங்கி அம்முயற்சியை நிறுத்தி விட்டார். இன்றைக்கு நாம் உதவி செய்யா விட்டால் இலங்கை சீனாவுடன் போய்விடும் என்று சொல்பவர்கள், இந்திரா காந்தி ஆண்டு பின்பற்றியதை ஏன் இவர்கள் பின்பற்றத் தவறிவிட்டார்கள்? இலங்கை இந்தியாவில் மீறி செயல்பட்டு விடுமா? இந்திய அரசின் கையாலாகாத்தனம், இலங்கையை இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்திருக்கிறது மதிக்கிறார்களா கொஞ்சமாவது?
டெல்லியில் இருப்பவர்கள் இன்றைக்கு என்ன சொல்கிறார்கள்? இலங்கை நமக்கு நட்பு நாடு. ஆகவே அதைக் கண்டித்துத் தீர்மானம் போடா முடியாது என்று வாதாடுகிறார்கள். எது நட்பு நாடு? 1962 –ம் ஆண்டு சீனா இந்தியாவின் மீது படையெடுத்த பொது ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பாலானவை இந்தியாவின் நிலைக்கு ஆதரவு தெரிவித்துச் சீனாவைக் கண்டித்தன. ஆனால் இலங்கை அன்றைக்கு என்ன செய்தது? தான் நடுநிலைமை வகிப்பதாகச் சொல்லி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே இந்தச் சுண்டைக்காய் நாடு சமரசம் செய்கிறேன் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே மறுபக்கம் சீனாவின் நிலைக்கு ஆதரவு தெரிவித்த நாடு தானே இலங்கை. இதுவா உங்களுக்கு நட்பு நாடு?
1971 – ல் வங்காள தேசப்போர் மூளுகிற காலகட்டத்தில் மேற்கு பாகிஸ்தானிலிருந்து ராணுவ விமானங்கள் இந்தியாவின் வான்வெளியிலே பறந்து போய் வங்காள தேச மக்கள் மீது குண்டு வீசுவதை இந்தியா அனுமதிக்கவில்லை. இந்திய வான்வெளிக்கு மேலே எந்த பாகிஸ்த்தான் விமானமும் பறக்கக் கூடாது என்று இந்தியா தடை போட்டவுடன், ஏராளமான விமானங்கள் அரபிக்கடல் வழியாக பறந்து வந்து இலங்கையிலே இறங்கி எண்ணெய் நிரப்பிக் கொண்டு வங்காளக் கடல் வழியாகப் போய் வங்க தேசத்திலே குண்டுவீசுவதற்கு அனுமதித்த நாடுதானே இலங்கை. இதுவா உங்களுக்கு நட்பு நாடு?
அன்றைக்கு ஈழத்தமிழர்களின் தந்தையான செல்வா, சீனா ஆக்கிரமித்த பொது சொன்னார்கள் “சீனப்படைகளை எதிர்த்து ஈழத்தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் தமித் தொண்டர்களை திரட்டிக் கொண்டு இந்திய- சீன எல்லைக்குச் செல்லுவோம். நாங்கள் அறவழியிலே போராடுவோம் எம் மார்புகளை சீனத் துப்பாக்கிகளுக்கு எதிராக நாங்கள் நிமிர்த்துக் காட்டுவோம். இந்தியாவின் எல்லையைப் பாதுகாப்பதற்காக உயிர்த்தியாகம் செய்வோம்” என்று சொன்ன ஈழத்தந்தை செல்வா உங்களுக்குப் பகைவர். சீனாவுக்கு ஆதரவு கொடுத்த சிங்களவர்கள் உங்களுக்கு நண்பர்களா? யார் நண்பர்கள்? யார் பகைவர்கள்? என்பது கூடத் தெரிந்துகொள்ள முடியாத புத்திசாலிகள் டெல்லியில் இருக்கும் வரை இந்த தேசம் ஒருபோதும் உருப்படாது என்பதை நான் வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்த இந்திய அரசைப் பணியவைக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இன்றைக்கு தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டும் ஆபத்து வந்துவிடவில்லை. இலங்கை அரசு செய்த காரியத்தின் விளைவாக ஈழத்தமிழர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதைவிடப் பேருண்மை தமிழ்நாட்டு மக்களுக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கூடங்குளம் அணு உலை இங்கே தெற்கே இருக்கிறது. அதிலிருந்து 20 கடல் தொலைவிலே தான் மன்னார் என்ற இடத்தில் சீனர்கள் இருக்கிறார்கள். கூடங்குளம் அணு உலை அவர்களால் தாக்கப்படுமேயானால் அது வெடித்துச் சிதருமேயானால் அநேகமாகத் தென்தமிழ்நாடு முழுவதுமாக அழிந்து போகும் இந்த அபாயம் தென் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பிற்பகுதி மக்களும் சீனாவினால் தாக்கப் படக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதை, குறிப்பாக தென் மாநில மக்கள் உணர வேண்டும். அதை உணர வைக்கின்ற பொறுப்பு தமிழ் நாட்டு மக்களைச் சார்ந்தது. நாம் அதைச் செய்தாக வேண்டும்.
இந்திய அரசின் தவறான கொள்கையின் விளைவாக ஒரு பெரும் அபாயம் தெற்கே உருவாக்கப்பட்டு விட்டது. இந்த அரசை (காங்கிரஸ்) உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் இந்தியா முழுவதும் பரப்பியாக வேண்டும். மற்ற மாநில மக்களுக்கும் இந்த அபாயத்தைச் சுட்டிக்காட்டி, அவர்களை ஒன்று திரட்டி இந்த அரசை வீழ்த்துவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டாக வேண்டும். இதன் மூலம் மட்டுமே இப்போதுள்ள இந்திய அரசை பதவியிலிருந்து அகற்ற முடியும்.
6.கேள்வி: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது குறித்து உங்கள் பதில் என்ன?
பதில்: தமிழ்நாட்டு மீனவர்கள் கடந்த முப்பது ஆண்டு காலத்திற்கு மேலாக சிங்களக் கடற்படையினாலே சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் அங்கீகனமாக்கப்பட்டு இருக்கிறார்கள். பல கோடி ரூபாய் பெறுமான மீனவர்களின் படகுகள், வலைகள் நாசப்படுத்தப்பட்டு இருக்கின்றன. 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் உயிர்களை இழந்திருக்கிறார்கள். உலகத்தில் எந்த நாட்டிலும் மீனவர்கள் எல்லை கடந்தார்கள் என்பதற்காக சுடுவதே கிடையாது. குஜராத் மீனவர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் போய்விட்டால் எச்சரித்து திருப்பி அனுப்புகிறார்கள். மேற்கு வங்க மீனவர்கள் எல்லை தாண்டி வங்க தேசத்திற்கோ, பர்மாவின் எல்லைக்கோ சென்று விட்டால் எச்சரிக்கை செய்கிறார்கள், திருப்பி அனுப்புகிறார்கள் சுடுவதே கிடையாது. ஆனால் வேண்டுமென்றே இவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினாலே சிங்கள அரசு வேட்டை ஆடுகிறது. இந்தியா இதை வேடிக்கை பார்க்கிறது.
உலகில் ஐந்தாவது பெரிய கடற்படைக் கொண்ட நாடு இந்தியா. சின்னஞ்சிறிய சிங்கள கடற்படை அத்துமீறுவதை அவர்களாலே தடுக்கமுடியவில்லை என்று சொன்னால் அது ஏன்? ஒரு முறை கூட இந்தியக் கடற்படை, சிங்களக் கடற்படையை சுட்டு விரட்டியடித்திருக்கிறதா? அவன் சுடுகிறான் இவர்களும் வேடிக்கை பார்க்கிறார்கள். ஆக எந்த அளவுக்கு சிங்கள அரசு தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான அரசு என்பதை நாம் உணர வேண்டும். இந்த அரசைப் பதவியிலிருந்து அகற்றுவது தான் நம்முடைய முதன்மையான பணி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். மற்ற மாநில மக்களுக்கும் இந்த உணர்வை ஊட்டுகிற மகத்தான கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
7.கேள்வி: காங்கிரசும், பா.ஜ.கவும் தமிழர்களுக்கு எதிரான கொள்கையையே கொண்டுள்ள நிலையில் காங்கிரசு தோற்று, பா.ஜ.க. ஆட்சியேற்றால் தமிழர்களுக்கு என்ன பயன்?
பதில்: இந்தக் கருத்து தவறான கருத்தாகும். பா.ஜ.க ஆட்சியில் இருந்த பொது பிரதமராக வாஜ்பாய் அவர்களும், அன்றைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும் பதவி வகித்தார்கள். அவர்கள் பதவியில் இருந்த அந்தக் காலம் முழுவதிலும் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார்கள். இந்தியாவில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் கூடாது என்று தடுத்துவிட்டார்கள். விலைக்கு ஆயுதம் கொடுக்கும்படி இலங்கை கேட்டபோது கூட கொடுக்கவில்லை. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அழகாகச் சொன்னார். இலங்கைக்கு அருகில் பகைநாடு எதுவும் இல்லை. இந்தியா மட்டும் தான் இருக்கிறது. இந்தியா உங்களுக்கு நட்பு நாடு. பின்பு உங்களுக்கு எதற்கு ஆயுதம்? எதற்காக ஆயுதம் வாங்குகிறீர்கள்?
உள்நாட்டில் உள்ள அந்தத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குத் தானே நீங்கள் ஆயுதம் கேட்கிறீர்கள். அதற்கு எப்படி இந்தியா கொடுக்க முடியும்? கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார். இக்கொள்கையோடே ஐந்தாண்டு காலமும் உறுதியாக இருந்தார்கள். எந்த ஆயுதமும் கொடுக்கவில்லை. பல பிரச்சனைகளில் இவர்கள், தமிழர்களுக்கு ஆதரவான நிலையே எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இப்போது பா.ஜ.க. வில் உள்ள சில தலைவர்கள் வேறு மாதிரிப் பேசினாலும் முக்கியமான தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அண்மையிலே யஸ்வந்த்சின்கா அவர்கள் பா.ஜ.க.வின் முக்கியமான தலைவர்களில் ஒருவர். வெளிநாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் “தமிழீழம் மலரப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை” என்று உறுதியாகச் சொன்னார். இது போன்ற தலைவர்கள் பா.ஜ.க.வில் இருக்கிறார்கள். சில தலைவர்கள் எதிராகப் பேசினாலும் இறுதியிலே தலைமைக்குக் கட்டுப்பட்டுச் செல்ல வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. ஆக இந்த அம்சங்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது பா.ஜ.க. கூட்டணியில் இருக்கக்கூடிய சிவசேனா, இவரின் தலைவராக இருந்த பால்தாக்கரே போன்றோர் ஈழத்தமிழர்களுக்கு உறுதியான ஆதரவாளராக இருந்தார். இவரை பலமுறை சென்று சந்தித்திருக்கிறேன். தெளிவாகவும், உறுதியாகவும் இவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார். தமிழீழம் மலர வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தார். பா.ஜ.க. தலைவர்கள் ஆட்சியிலே இருந்தபொழுது, இலங்கையிலே நடைபெறுகிற இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதை மறுக்க முடியாது. ஆனால், இந்தப் பிரச்சனையில் அவர்கள் இன்னும் தீவிரமான அக்கறை எடுக்க வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள் ஆகும். இந்தப் பிரச்சனையை அவர்கள் அணுகுகின்ற முறையிலே வேறுபாடு இருக்கலாம். இது தமிழினத்தின் போராட்டம், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என்று எங்களைப் போன்றவர்கள் அனுகுவதிலே அவர்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனாலும் கூட ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் என்பதையும், ராஜபக்சேவின் ஆட்சியிலே இந்துக் கோவில்கள் ஆயிரக்கணக்கில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் தீர வேண்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் இல்லை. அதையும் அந்தத் தலைவர்கள் பேசும் போது வருத்தத்துடன் சொல்கிறார்கள். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இப்படியும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற இந்த தேசத்தில், எல்லோரும் நம்மைப் போலவே சிந்திப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவரவர்கள் வேறுவேறு கோணத்தில் சிந்தித்தாலும் இறுதியிலே இந்தப் பிரச்னைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோளாக இருக்க வேண்டும்.
அந்த முறையிலே இவர்களை நாம் மேலும் மேலும் அணுக வேண்டும். இவர்கள் ஒரு முப்பது சதவீதம் தான் ஆதரவாக இருக்கிறார்கள் என்று சொன்னால் இதை அறுபது சதவீதம் ஆக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டுமே தவிர, அவர்களைப் பற்றிப் பழித்துப் பேசி இருக்கின்ற ஆதரவையும் நாம் கெடுத்துக் கொள்ளக்கூடாது. இப்போது எந்தக்கட்சி இப்பிரச்சனைக்கு ஆதரவு கொடுத்தாலும் நமக்கு அந்த ஆதரவு தேவை. அந்தக் கண்ணோட்டத்துடன் நாம் அணுக வேண்டும். என்று நான் வேண்டிக்கொள்கிறேன்.
8.கேள்வி: தனித்தமிழ்நாடு கோரிக்கையினால் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா எதிராக இருக்கிறது. இந்திய நாட்டை (அரசை அல்ல) எதிர்ப்பது நமக்கு நல்லதல்ல. மற்ற மாநில அரசியல்வாதிகளுடன் நாம் நல்லுறவை வைத்துக் கொள்ளாததும், இந்த நிலைக்கு நம்மைத் தள்ளியுள்ளது என்று பலர் கூறுகின்றனர், குறிப்பாக நடுநிலையோர்களும், பல வெளிநாட்டுத் தமிழர்களும் கூறுகின்றனர். இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: இந்தியாவில் இருப்பது ஒரு Unitry Form of Government இது ஒரு Federal Government அல்ல. இது மாற்றப்பட்ட வேண்டும். இந்தியாவிலுள்ள எல்லா தேசிய இன மக்களுக்கும், சுய நிர்ணய உரிமை அளிக்கப்பட்டு, மத்தியிலே குவிக்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்கள் எல்லாம் மாநிலங்களுக்கு மாற்றப்பட வேண்டும். எல்லா மாநிலங்களும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். மதத்திலே வெளிநாட்டு உறவு, இராணுவம் இது போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே இருக்க வேண்டுமென வலியுறுத்துகிற என்னைப் போன்றவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கிறார்கள்.
தனித்தமிழ்நாடு கேட்பவர்கள் ஒருபக்கம் இருக்கிறார்கள் என்பது உண்மை என்றாலும் கூட, பஞ்சாபிலும், காஷ்மீரிலும், நாகலாந்திலும், மிசோராமிலும், திரிபுராவிலும், அஸ்சாமிலும் இப்படிக் கேட்பவர்கள் இருக்கிறார்கள். அதனால் அந்த மாநில பிரச்சனைகளில் இந்திய அரசோ, அகில இந்தியக் கட்சிகளோ வேறு நிலை எடுத்துவிட்டன என்று சொல்ல முடியாது. இது ஒரு தவறான அணுகுமுறையாகும். கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் அதாவது கிழக்கு வங்க மக்கள், உருது மொழித் திணிப்பை எதித்து வங்காளம் தனியாகப் பிரிய வேண்டும், வங்கதேசம் தனியாக உருவாக வேண்டும் எனப் போராடிய போது மேற்கு வங்க சட்ட சபையில் அவர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசுக்கு மேற்கு வங்க முதல் அமைச்சர் நெருக்கடி கொடுத்தார். உடனே இராணுவத்தை அனுப்பி எங்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், இல்லை என்றால் நான் எனது ரிசர்வ் போலிசை அனுப்புவேன் என்று அன்றைக்கு மேற்கு வங்கத்தில் இருந்த காங்கிரசு முதலமைச்சரான சித்தார்த் திசங்கரே பகிரங்கமாக அரைகூவல் விடுத்தார்.இப்படிக் கேட்டதினாலே கிழக்கு வங்கம் பிரிந்து தனி நாடானால், நாளை மேற்கு வங்கமும் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகிவிடும் என்ற சந்தேகம் யாருக்கும் வரவில்லையே. இவ்வளவுக்கும் இந்த இரண்டு வங்கமும் வெள்ளைக்காரன் ஆண்ட போது ஒரே நாடாக இருந்தவை கிழக்கு வங்கம் பிரிந்தால் மேற்கு வங்கமும் பிரிந்துவிடும் என்ற சந்தேகம் இயற்கையானது. ஆனால் அந்த சந்தேகம் இந்தியாவில் அன்றைக்கு யாருக்கும் வரவில்லை. எல்லாரும் இந்திய ராணுவத்தை அனுப்பும் படியே பிரதமர் இந்திய காந்தியை வலியுறுத்தி அனுப்பவைத்து கிழக்கு வங்க மக்கள் விடுதலை பெறுவதற்கு உதவி செய்தார்களா? இல்லையா?
ஆனால் வரலாற்றின் எந்தக்காலகட்டத்திலும் ஈழமும், தமிழகமும் ஒரே நாடாக இருந்ததே இல்லை. கடல் நம்மைப் பிரிப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மனித இனமே இந்தப் பகுதியில் தோன்றுவற்கு முன்னால் இரண்டும் ஒரே நிலமாக இருந்தது, கடல் பிரிந்தது. மனித இனம் அங்கு தோன்றிய பிறகு அதுவும், இதுவும் ஒரே நாடாக இருந்தது இல்லை. மொழியாலும், இனத்தாலும் மற்றும் பண்பாட்டினாலும், கலையாலும் நாங்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஈழத்தமிழர்கள் தனிநாடு, தமிழ்நாட்டு மக்கள் தனி நாட்டைச் சேர்ந்தவர்கள். இரண்டும் ஒன்றாக இணைந்து தனிநாடாக வேண்டும் என்ற எண்ணம் ஒரு போதும் வரவில்லை. அது வருவதற்குத் தூண்டுவதே இந்திய அரசின் போக்குதான்.
மேற்கு வங்காளத்து வேண்டுகோளை மதித்து இந்திய ராணுவத்தை அனுப்பி, கிழக்கு வங்க மக்கள் சுதந்திரம் பெறுவதற்கு உதவி செய்த இந்தியா, இலங்கைப் பிரச்சனையிலே மட்டும் வேறு விதமான நிலை எடுத்து ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்ய மறுத்து, இந்திய ராணுவத்தை அனுப்பி அவர்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் இந்திய அரசு செய்த போது எங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? இதே இந்திய அரசு கிழக்கு வங்கத்திற்கு செய்தது போல், இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை விடுதலை செய்திருக்குமானால் தமிழ் நாட்டு மக்கள் என்ன நினைப்போம். இந்தியா என்ற பெரிய நாட்டுக்குள் ஒரு அங்கமாக நாம் இருக்கின்ற காரணத்தினாலே தானே, நம்மாலே ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் உதவி செய்ய முடிந்தது.
நாளை மலேசியத் தமிழர்களுக்கோ, தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கோ, இன்னும் பிற நாடுகளில் வாழ்கிற தமிழர்களுக்கோ அபாயம் ஏற்படுமேயானால் இந்தியாவின் உதவியுடன் அவர்களுக்கு உதவ முடியும் என்று எங்களின் நம்பிக்கையும், விசுவாசமும் அதிகமாக இருக்குமா? இல்லையா?
அதற்கு மாறாக எங்களின் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதற்கு இந்திய ராணுவம் சென்றதும், இப்போது சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி செய்வது எங்கள் மனதில் என்ன எண்ணத்தை ஏற்படுத்தும். எங்கள் மனதில் இத்தகைய எண்ணத்தை விதைப்பவர்கள் இந்திய அரசே தவிர நாங்களாக இல்லை, தயவு செய்து இதை உணர வேண்டும். ஈழத்தமிழர்கள் தனிநாடு கேட்பதைப் பார்த்து நாங்கள் தனிநாடு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் ஒரே நாடு, தேசிய ஒருமைப்பாடு என்று வரிக்கு வரி பேசிக்கொண்டு, உச்சநீதிமன்றம் சொன்னாலும், நடுவர் மன்றம் சொன்னாலும் காவிரியில் ஒரு சொட்டுத் தண்ணீர் விட மாட்டோம் என்று சொல்லுமேயானால் அன்றைக்கு தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்திற்கும் இடையே ஆழமான வெட்டு விழுந்தது.
முல்லைப் பெரியார் அணைப் பிரச்சனையிலே, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னாலும் மதிக்கமாட்டேன் என்று கேரள அரசு சொன்ன போது மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே அன்றைக்கு இன்னொரு வெட்டு விழுந்தது. ஈழத்தமிழர்கள் பிரிந்துபோவதைப் பார்த்து, நாங்களும் பிரிந்து போக வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டிய அவசியம் இல்லை. கர்நாடகமும், கேரளமும் செய்கின்ற வஞ்சகம், அவர்களுக்குத் துணையாக இந்திய அரசு செய்கிற துரோகம் எங்கள் எண்ணத்திலே பிரிவினை வாதத்தை ஊட்டுமே தவிர, ஈழத்தமிழர்களின் போராட்டம் ஊட்டவே ஊட்டாது என்பதை டெல்லியில் இருப்பவர்கள் உணர வேண்டும். உணர்ந்து தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
9.கேள்வி: ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடிய மாணவர்கள் மீது காவல் துறையின் அடக்குமுறை பற்றி உங்கள் கருத்து என்ன? மற்றும், மாணவ ர் போராட்டத்தில் அரசியல் கலக்காமல் காப்பது எப்படி?
பதில்: ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடிய மாணவர்கள் எந்த அரசியல் கட்சியின் பின்னணியோ, தூண்டுதலோ இல்லாமல் அவர்களாகவே முடிவு செய்து போராடினார்கள். தமிழீழ ஆதரவு, மாணவர் கூட்டமைப்பு என்று பேர் வைப்பதிலிருந்து அவர்கள் முன் வைத்த கோரிக்கைகள் வரை அவர்களாகவே சிந்தித்துச் சரியாக செயல்பட்டார்கள். அந்தப் போராட்டத்தின் வெற்றிக்கும், மக்கள் அளித்த பேராதரவிற்கும் அடிப்படை என்னவென்று சொன்னால் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை அந்தப் போராட்டம் நடைபெற்றாலும் கூட எந்த ஒரு இடத்திலும் வேண்டாத நிகழ்ச்சி அல்லது ஒரு வன்முறை நிகழ்ச்சி நடைபெறவே இல்லை. அந்த அளவிற்கு சிறப்பாக அந்த மாணவர்கள் செயல்பட்டார்கள். ஒன்றிரண்டு இடங்களில் அவர்களுக்கும், போலீசுக்கும் மோதல் ஏற்பட்டது உண்மைதான். இருந்தாலும் அதைப் பின்னர் சரி செய்தோம்.பெரும்பாலான இடங்களில் மாணவர்களின் போராட்டத்திற்கு எந்த ஒரு இடத்திலும் தடைபோடுவதற்கு காவல் துறை முனையவில்லை. ஏனென்றால் மாணவர்கள் வன்முறைக்கே இடம் கொடுக்காமல் போராடியதால் அதில் தலையிட வேண்டிய அவசியமும் நேரவில்லை. இந்தப் போராட்டம் பல வெற்றிகளை ஈட்டியதற்குக் காரணமே அமைதியாக, வன்முறை இல்லாமல் கட்டுப்பாடாக இந்தப் போராட்டம் நடந்ததுதான் காரணம் ஆகும். இந்தப் போராட்டத்தின் விளைவு டெல்லியில் எதிரொலித்தது.
டெல்லி நாடாளுமன்றம் நான்கு நாட்கள் ஸ்தம்பித்தது இந்தப் போராட்டத்தின் விளைவாக இதுவரை ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிப் பேசாத காட்சிகள் கூட, இதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது மாணவர்கள் போராட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். அதுமட்டுமல்ல மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக எந்தெந்த கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்துப் போராடினார்களோ அதே கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஏற்றுக்கொன்று தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உட்பட முக்கியமான கோரிக்கைகளை சட்டமன்றத்திலே கொண்டு வந்து அனைத்துக் கட்சியனரின் ஆதரவோடு இதை நிறைவேற்றினார். இது மாணவர்கள் போராட்டத்திற்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி.
மாணவர்கள் போராட்டத்தின் விளைவாகத்தான் தி.மு.க. மத்திய அரசில் இருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் உருவாக்கப்பட்டது. 2009 –ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட மத்திய ஆட்சியில் இருந்து வெளியேற மறுத்தது தி.மு.க. இந்த முறை வெளியேற வேண்டிய அவசியமும் ஏற்பட்டது என்று சொன்னால் மாணவர்கள் போராட்டம் அளித்த நிர்பந்தம், இவர்களை வெளியேரவைத்தது இல்லாவிட்டால் இவர்களும் வந்திருக்க மாட்டார்கள். இது மாணவர்கள் போராட்டத்திற்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும். ஆக மாணவர்கள் போராட்டம் மிகக் கட்டுப்பாட்டோடு, சிறப்பாக எந்த வேண்டாத நிகழ்ச்சியும் இல்லாமல் நடைபெற்றது. அதற்காக இம்மாணவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒரு காலகட்டத்தில் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி அவர்கள் தேர்வுகளை எழுதிவிட்டு மீண்டும் தங்கள் போராட்டத்தை துவங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இது அவர்களின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. மாணவர்களுக்கு இந்தப் பொறுப்புணர்வை அரசியல் கட்சிகளை நாடவில்லை. அவர்களாகவே சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாவகையிலும் துணைநிற்க வேண்டியது தமிழ் நாட்டு மக்களின் மகத்தான கடமையாகும்.
மாணவர்களின் போராட்டத்தோடு தமிழ் மக்களின் போராட்டமும் இணைந்து வெடிக்குமேயானால் இந்திய அரசைப் பணிய வைக்க முடியும். என நான் உறுதியாக நம்புகிறேன்.
10.கேள்வி: விடுதலைப் புலிகளின் மனித நேயத்தைப் பற்றிக் கூறுங்கள்?
பதில்: விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய காலத்தில் இருந்து, அவர்கள் தனி ஆட்சி நடத்திய காலம் வரையிலும் கூட ஒரு கட்டுப்பாடற்ற ராணுவமாக ஒரு போதும் திகழவில்லை. சிங்கள ராணுவம் உலகத்திலேயே மிக மோசமான, கட்டுப்பாடற்ற ராணுவமாகி அப்பாவித் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகளைப் பிரயோகிப்பதும், அப்பாவி இளைஞர்களை எடுத்த எடுப்பிலேயே சுட்டுக் கொள்வதும், சித்ரவதை செய்வதும் வழக்கமாகக் கொண்டிருக்க, இதற்கு நேர்மாறாக புலிகள் எந்த ஒரு இடத்திலும் சிங்கள மக்களுக்கு ஒரு சிறு தீங்கு கூட இழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏதாவது ஒரு புலி சிங்களப் பெண்மணியிடம் தவறாக நடந்து கொண்டான் என்று இதுவரை சிங்கள அரசே கூட குற்றம் சாற்றியதில்லை. அந்தளவிற்கு கட்டுப்பாடான ஒரு அமைப்பை பிரபாகரன் ஏற்படுத்தியிருக்கிறார். அந்தளவிற்க்கு மனிதநேயமிக்கவர்களாகவும் ஆக்கி இருக்கிறார். நானே அதை நேரில் பார்த்தேன். 1990ஆம் ஆண்டு சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அங்கு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த பொது நான் அங்கே சுற்றுப் பயணம் செய்தேன். விடுதலைப் புலிகள் என்னை எல்லா இடங்களுக்கும் அழைத்துக் கொண்டு போனார்கள். மன்னாருக்கு நான் சென்றபோது, அந்த மன்னார் மடுமாதா தேவாலயத்தின் ஆயர் ஆர்ச் பிஷப் அவர்கள் என்னிடம் பேசினார். அவர் சொன்னார்” இந்த இலங்கையிலேயே மிகப்பெரிய கிறித்தவ தேவாலயம் இது. சிங்கள கிறித்தவர்களும் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவிற்கு வருவார்கள் ஆனால் நான்கைந்து ஆண்டு காலமாக போர்ச்சூழலில் அவர்கள் வரவில்லை. இந்த முறை அமைதி நிலவுகிற அந்த சூழலில் இந்த திருவிழாவிற்கு அவர்கள் வர வேண்டுமென்று விரும்புகிறார்கள். நீங்கள் பிரபாகரனிடம் சொல்லி அதை அனுமதிக்கும்படி சொல்லுங்கள் என்று சொன்னார். அதன்படியே நானும் பிரபாகரனும் சொன்ன போது, பிரபாகரன் அவர்கள் எந்த மறுப்பும் சொல்லவில்லை. உடனடியாகச் சொன்னார் “ அவர்கள் தாராளமாக வரட்டும். ஆதலால் எங்கள் எல்லைக்குள் வருகிற அவர்களுக்கு நாங்கள் பாதுகாப்புக் கொடுப்போம். அவர்களைப் பாதுகாக்க சிங்கள ராணுவம் எல்லை தாண்டி வரக்கூடாது. இதுதான் அவர் விடுத்த நிபந்தனை. இதை மீண்டும் நான் அந்த ஆயரிடம் சொல்ல, அவர் இதை சிங்களர்களுக்குத் தெரிவித்து, பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் பிரபாகரனின் நிபந்தனையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
5 நாட்கள் திருவிழாவில் திருவிழாவின் முதல் நாள் அன்று எல்லையில் போய் நான் நின்று என்ன நடக்கிறது என்று கவனிப்பதற்காகச் சென்றேன். அப்போது சிங்களப் பொதுமக்கள் ஒரு 15வேன்களில் வந்தார்கள். புலிகள் எல்லை வரைக்கும் சிங்கள ராணுவம் வந்ததும் நின்றுவிட்டார்கள். தமிழர் பகுதிக்குள் நுழைந்த சிங்கள ராணுவ வேங்கைகளுக்கு புலிகள் பாதுகாப்பாக, வேனுக்கு இரண்டு புலிகள் துப்பாக்கியோடு ஏறிக்கொண்டார்கள். அந்த வேன்கள் தொடர்ந்து மடு தேவாலயம் நோக்கிச் சென்றபோது, நானும் பின்னாலேயே போனேன். வழி நெடுக தமிழ் மக்கள் அந்த வேன்களை நிறுத்தி சிங்கள மக்களுக்கு குளிர்பானங்கள், இளநீர் போன்றவைகளைக் கொடுத்து உபசரித்த காட்சிகளை பார்த்தேன். அவர்கள் திருவிழாவிற்கு போய்விட்டு மாலை திரும்புகிற போது கூட புலிகள் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து பத்திரமாக எல்லை தாண்டி அவர்கள் செல்ல அனுமதித்தார்கள்.
இந்த செய்தி பரவ பரவ ஏராளமான சிங்களவர்கள் வரத்தொடங்கினார்கள். கடைசி நாளில் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் வந்து குவிந்தார்கள். இதில் அவர்களில் ஒருவருக்குக் கூட சிறு தீங்கை தமிழர்களோ அல்லது விடுதலைப் புலிகளோ இழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இந்த மனிதநேய மாண்பினை புலிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் உணர்த்தி இருக்கிறார் பிரபாகரன் என்பதற்கு இந்தச் சம்பவம் சரியான எடுத்துக்காட்டாகும்.
11.கேள்வி: இங்கே இருக்கும் பல தமிழர் அமைப்புகள், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். கட்டுரை எழுதுகின்றனர். இவர்கள் ஏன் வெளிமாநிலத்தவரிடம் ஆதரவு திரட்ட மறுக்கிறார்கள் அவ்வாறு ஈடுபட்டிருந்தால் அந்த முயற்சிகளைக் கூறுங்கள்.
பதில்: என்னைப் பொருத்தவரை ஆரம்பத்தில் இருந்தே, இந்தியாவின் பிற பகுதியைச் சேர்ந்தவர்களின் ஆதரவும் வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறேன். சிவசேனா தலைவர் பால்தாக்கரே, சீக்கிய மக்களின் தலைவராக இருந்த சிம்ரஞ்சித்சிங்மான் , மிசோரம் மக்களின் தலைவரான லால்டெங்கா இதைத் தவிர வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டியிருக்கிறேன். குறிப்பாக பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டியிருக்கிறேன். குறிப்பாக ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்கள் இந்தப் பிரச்னைக்கு முழுமையான ஆதரவு கொடுத்தார். அவருடைய கட்சியும், ஒரு அகில இந்தியக் கட்சியும் இவர் எதிர்கட்சியாக இருந்த போது டெல்லியில் தமிழீழ ஆதரவு மாநாடு ஒன்றை நடத்தினார்.
இந்த மாநாட்டிற்காக இவர் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிலே கலந்து கொண்டார்கள். ஒரு சிறப்பான பெரிய மாநாடாக அது நடந்தது. அதிலே பேசிய சமுதாயக் கட்சியினர் பலரும் தங்கள், தங்கள் மாநிலங்களில் இந்த மாநாடு நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். பின்னாலே அவர் 1987க்குப் பிறகு இந்திய அமைதிப்படை அங்கே சென்று அட்டூழியங்கள் செய்தபோது வல்வெட்டுத்துறையிலே நூற்றுக்கணக்கான மக்களை இந்தியப்படை கொன்று குவித்த போது, அந்த வல்வெட்டுத்துறைக்கு முக்கியமானவர்கள் வந்தார்கள். பெர்னாண்டஸ் அவர்களை ரகசியமாகச் சந்தித்துப் பேச உதவி செய்தேன் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் கூறியதை எல்லாம் கேட்டு இவர் மிகவும் நெகிழ்ந்து போனார். இதை எல்லாவற்றையும் தொகுத்து, புகைப்படங்களையும் தொகுத்து “ இந்தியா இஸ் மைலை” என்ற புத்தகம் போட்டார்.
வியட்நாமிலே மைலை என்ற இடத்திலே அமெரிக்க ராணுவம் புகுந்து எப்படி அப்பாவி மக்களை சுட்டுக் கொன்று குவித்ததோ அதே போல இந்திய ராணுவம் வல்வெட்டுத்துறையிலே அட்டூழியம் செய்தது என்பது தான் இந்த நூல். இதை ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இவரே தான் சொந்தச் செலவில் அச்சடித்து இந்தியா முழுவதும் அனுப்பினார் திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள், இவர் தமிழ் நாட்டில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளிலே ஜார்ஜ் பெர்னாண்டசும், மற்ற மாநிலத்தலைவர்கள் பலரும் ஈழ ஆதரவு மாநாட்டிலே கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இது ஒரு கட்டம் நடந்தது. இதற்குப் பின்னால் பெர்னாண்டஸ் அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது அப்போதும் இதே உணர்வுடன் செயல்பட்டார். இந்தியக் கடற்படை இலங்கைச் சுற்றிலும் காவல் காத்துக் கொண்டிருந்ததை இவர் நிறுத்தினார். இந்தியாவின் கடற்கரையை பாதுகாப்பதுதான் உங்களுக்கு கடமையே தவிர, இன்னொரு நாட்டின் கடற்கரையை காவல் காப்பதல்ல எனக் கூறி நிறுத்தினார். அதுமட்டுமே இவர் ஆட்சியிலே இருந்த போது “ இலங்கைக்கு எந்த ஆயுத உதவியும் செய்யக் கூடாது” என்று கூறி உறுதியாக இறுதிவரை இருந்தார். அமைச்சராக இருக்கும் போது கூட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அவர் பேசுவதை ஒரு போதும் நிறுத்திக் கொள்ளவில்லை. பல தலைவர்களும், சீக்கியத் தலைவரான சிம்ரஞ்சித்சிங்மான், மிசோரம் மக்களின் தலைவரான லால்டெங்கா போன்றவர்கள் பிரபாகரன் மீது , பெருமதிப்பு கொண்டிருந்தார்கள். எப்படியாவதை பிரபாகரனைச் சந்திக்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆக இந்தியாவின் பிற பகுதிகளில் எல்லாம் ஆதரவாக நமக்குத் திருப்புகிற முயற்சியிலே ஈடுபட வேண்டும். அந்த வேலையைத் தமிழகம் தான் செய்ய வேண்டும்.
12. கேள்வி: கொள்கை உடையவர்கள் வெகுசன மக்களிடத்தில் இல்லை, வெகுசன மக்களிடம் இருப்பவர்கள் கொள்கையோடு இல்லை, ஏன் இந்த முரண்பாடு?
பதில்: கொள்கை உடையவர்களுக்கு செல்வாக்கு இல்லை, செல்வாக்கு உடையவர்களுக்குக் கொள்கை இல்லை என்று சொல்வது முழுமையாகப் பொருந்தாது. இன்றைக்கு தமிழ்நாட்டில் சந்தர்ப்பவாத கட்சிகளுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம். கொள்கை இல்லாமல் பதவியைப் பிடிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சந்தர்ப்பவாத அரசியல் பண்ணுகிற கட்சிகள் வேண்டுமானால் இவ்வாறு இருக்க முடியும். எப்படியாவது பதவிகிடைத்தால் போதும் என்பதற்காக இந்தக் கட்சிகளுடன் ஒப்புக் கொள்பவர்களுக்கு வேண்டுமானால் செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் கொள்கை மீது ஆழமான பிடிப்பு வைத்திருப்பவர்களுக்கு மக்கள் மத்தியிலே பெருமதிப்பு இன்றளவும் இருக்கிறது. மக்கள் இவர்களை மதிக்கிறார்கள் போற்றுகிறார்கள். இந்த நிலையை மக்கள் மாற்றிக் கொள்ளவில்லை. மாற்றிக்கொள்ளவும் மாட்டார்கள். யாரோ சிலர் செய்வது தவறாக இருந்தாலும் எல்லாரும் செய்வது அப்படித்தான் செய்கிறார்கள் என்று கருதுவது அடிப்படையிலே பிழையாகும், அப்படி அல்ல.
13. கேள்வி: இறுதியாகத் தமிழர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?
பதில்: இவ்வளவு நேரம் கூறியதெல்லாம் தமிழர்களுக்குத்தான் கூறினேன். இருந்தாலும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மறைந்த மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் சொன்னார்கள் தமிழினம் உலகத்தில் மூத்த இனம், தமிழ் மொழி உலகத்தின் முதன் முதல் தோன்றிய மொழி என்று சொன்னார்கள். இந்தப் பெருமைக்குரிய தமிழினம் இன்றைக்கு எப்படி இருக்கிறது. உலகம் முழுவதும் பரவி இருக்கிற ஓர் இனம் தமிழினம். சங்க காலத்தில் பிற இனங்கள் எல்லாம் நாகரீக முதிர்ச்சி அடைவதற்கு முற்பட்ட காலத்தில், மேற்கே ரோமாபுரி வரையிலும், கிழக்கே சீனம் வரையிலும் வாணிபம் நடத்தி செல்வம் கொழிக்க வாழ்ந்தவர்கள் தமிழர்கள். பிற மொழிகள் எல்லாம் உருவாகாத காலத்திலே செவ்விலக்கியங்களை உருவாக்கியவர்கள் தமிழர்கள். திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். அதே போல் சங்க இலக்கியங்களில் உலகக் கண்ணோட்டம் மிகுந்து காணப்படுகிறது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
-என்று சங்கப் புலவனான கவிஞன்.பூங்குன்றன் கூறினார். எந்த ஊராக இருந்தாலும் என்னுடைய ஊர், எந்த நாடாக இருந்தாலும் என்னுடைய நாடு, யாராக இருந்தாலும் எந்த இனத்தவராக இருந்தாலும் என்னுடைய உறவினர்கள் என்று கருதுகிற ஒரு பெருமை நோக்கு தமிழனுக்கு இருந்தது, இன்னமும் இருக்கிறது. உலகம், உலகம் சென்றுதான் தமிழ் இலக்கியங்கள் தொடங்கப்பட்டன. சங்க இலக்கியங்களிலே 200 க்கும் மேற்பட்ட இடங்களில் “உலகம்” என்ற சொல் எடுத்தாளப்பட்டிருக்கிறது. வள்ளுவர் பேராசான் எழுதிய 1330 அருங்குறட்களில் எந்த ஒரு இடத்திலும் தமிழ் என்றோ, தமிழன் என்றோ இல்லை. இது எதைக் காட்டுகிறது திருக்குறள் தமிழ் இனத்திற்காக மட்டும் எழுதப்பட்ட நூல் அல்ல. உலக மாந்தர் இனத்திற்கு எழுதப்பட்ட நூல் என்பதை இது எடுத்துக்காட்டவில்லையா?
இவ்வளவு பெருமைக்குரிய தமிழினம் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட போது யாதும் ஊரே யாவரும் மகளிர் என முழங்கிய தமிழினம் அங்கு கொன்று குவிக்கப்பட்ட போது உலகம் நமக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை. அதைத் தடுத்து நிறுத்த உலகம் தவறிவிட்டது. ஏன்? ஏன்? என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழனும் தன் நெஞ்சில் எழுப்பி கொள்ள வேண்டும்.
மொழியாலும், பண்பாட்டாலும் இலக்கிய செறிவினாலும் சிறந்து விளங்கிய இந்தத் தமிழினம், இப்படி ஆதரவற்ற நிலைமையிலே கேவலம் மிருகங்களைப் போல படுகொலை செய்யப்பட்டு சீரழிந்த நேரத்தில் இந்த உலகம் வேடிக்கை பார்த்ததே ஏன்? நாம் வலிமையாக இருந்தால் தான் இந்த உலகம் நம்மை மதிக்கும். எந்த ஒரு இனம் உலகத்தில் வலிமையற்ற இனமாக இருக்கிறதோ அந்த இனத்தை உலகம் மதிக்காது. நீங்கள் எவ்வளவோ உயர்ந்தவர்களாக இருக்கலாம். நாகரீத்திலே, பண்பாட்டிலே, மொழியிலே எல்லா வகையிலும் உயர்ந்து இருக்கலாம். ஆனால் வலிமையற்றுப் போனால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள்.
இன்றைக்கு யூத இனம் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலே ரோமர்களின் ஆட்சிலே யூதர்கள் வதைக்கப்பட்ட போது உலகம் முழுவதும் சிதறி ஓடினார்கள் யூதர்கள். அவர்கள் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க நாடுகளிலும் போய் தஞ்சம் புகுந்து வாழ்ந்தார்களா? இல்லையா? அந்த யூத இனத்தை 2-ம் உலகப் போருக்கு முன்னால், ஹிட்லர் ஜெர்மனியிலே மட்டும் வேட்டயாடவில்லை, அவன் போரிலே எந்தெந்த ஐரோப்பிய நாட்டைப் பிடித்தானோ அந்த நாடுகளில் உள்ள யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பது உலக வரலாறு. அந்த அழிவுக்குப் பின்னால் யூதர்களுக்கு புத்தி வந்தது, ஞானோதயம் வந்தது. நாம், நமது மொழியை இழந்தோம், இனத்தை இழந்தோம், எல்லாவற்றையும் இழந்ததினால்தான் இந்த நிலைக்கு ஆளானோம் என்று உணர்ந்துதான் உலகம் முழுதும் இருக்கக்கூடிய யூதர்கள் ஒன்றுபட்டார்கள். இவர்களுடைய மொழியான ஏசுபிரான் பேசிய எபிரேய மொழி செத்துப் புதைக்குழிக்குள் போய்விட்டது. இதைப் பேசுவர் இல்லாமல் இருந்த இந்த மொழியை, சவக்குழியிலிருந்து தோண்டி எடுத்து புத்துயிர் ஊட்டினார்கள். யூதக் குழந்தைகள் கட்டாயமாக நம்முடைய மூதாதையர்களின் மொழியான எபிரேய மொழியைக் கற்க வேண்டும், நமது பண்பாடுகள் அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்தார்கள். இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை தங்கள் வலிமையினாலே உருவாக்கினார்கள். இன்றைக்கு உலகத்தில் வலிமை வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் திகழ்கிறது. உலகம் அதை மதிக்கிறது. இதைத் தமிழர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். என்னதான் நாம் நமது பலம் பெருமைகளைப் பற்றிப் பேசினாலும், சங்கத்தமிழைப் பற்றி, செம்மொழியைப் பற்றி, நம்மை நாமே மெச்சிக் கொண்டாலும் உலகம் மதிக்கவே மதிக்காது. நம்முடைய கைகள் தான் நமக்கு உதவி, ஈழத்தமிழ் மக்கள் மட்டுமல்ல, உலகம் முழுதும் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அழிவின் விழிம்பிலே தமிழினம் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
இன்று ஈழத்தமிழனுக்கு ஏற்பட்ட நிலை நாளை மலேசியத் தமிழனுக்கு வரலாம், தென்னாப்பிரிக்கத் தமிழனுக்கு வரலாம், பிற நாடுகளிலே வாழக்கூடிய தமிழனுக்கு வரலாம். ஏனென்றால், தமிழினம் கேள்வி கேட்பாரற்ற ஒரு அனாதையான இனம் என்று உலகத்தில் பரவியிருக்கிறது. இந்த எண்ணத்தை மாற்றியாக வேண்டும். உலகத்தமிழர்கள் ஒன்றுபட்டு, உலகத்தின் எந்த மூலையிலும் தமிழனுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதை எதிர்த்துப் போராடுகிறவர்களாக தமிழர்கள் மாற வேண்டும். அப்படி மாறினால் ஒழிய அழிவின் விழிம்பில் இருந்து தமிழினத்தை மீட்க முடியாது. நம்மையும், நம்முடைய மொழியையும் நாம் காப்பாற்ற வேண்டுமானால் நாம் வலிமை வாய்ந்தவர்களாக, தொலைநோக்குப் பார்வை உள்ளவர்களாக, ஒற்றுமை நிறைந்தவர்களாக இருந்தால் ஒழிய நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதை உலகத் தமிழர்கள் உணர வேண்டும் என்று பணிவோடு வேண்டிக்கொள்கிறேன்.
14.கேள்வி: சிறகு இணைய இதழ் பற்றிக் கூறுங்கள்?
பதில்: 2011 – ம் ஆண்டு மே17 அன்று தொடங்கப்பட்ட சிறகு இணைய இதழ் இரண்டாம் ஆண்டை முடித்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் இதை நான் மனமார வாழ்த்துகிறேன். உலகத்தமிழர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் சிறகு, தமிழ் மொழியின் சிறப்பை மட்டுமல்ல, தமிழர்களின் பிரச்சனைகள் குறித்தும், அதைத் தீர்க்கும் வழிவகைகள் குறித்தும், உலகத்தமிழர்களின் ஒற்றுமையைக் குறித்தும் எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அந்த நாடுகளில் அவர்கள் மதிக்கப்படுகிற ஒரு இனமாக வாழ்வதற்கு உண்டான வழிவகைகள் குறித்தும் சிறகு இதழ் தொடர்ந்து தொண்டாற்றும் என நம்புகிறேன் நன்றி, வணக்கம்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா என்ன? இந்தியா அமைதியாக இருக்க ஆசைப்பட்டாலும் சீனா விடுவதாக இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் தனது கபளீகர வேட்டையை நடத்திவருகிறது. குறிப்பாக அருணாசலப் பிரதேசத்தைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தப் பகுதிக்கு சீனா வைத்திருக்கும் பெயர் தெற்கு திபெத். பிரதமர் மன்மோகன்சிங் அவ்வப்போது அருணாசல பிரதேசத்திற்கு விஜயம் செய்து ‘இது எங்கள் நாடுதான்’ என்று முழங்குவதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை.
சண்டிகர் : பவன் குமார் பன்சால் பதவி விலக வேண்டும்,என்று பா.ஜ.க வலியுறுத்தி வருகின்றது. இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பா.ஜ.க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ரயில்வே வாரிய உறுப்பினருக்கு முக்கிய பொறுப்பு வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றார், மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சாலின் உறவினர். இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று பன்சால் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க., சார்பில் கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றது.
Friday, May 03, 2013புதுடில்லி::சரப்ஜித்சிங் மரணம் குறித்து பாகிஸ்தான் நாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திரும்ப அழைக்க வேண்டும் என்றுஇது குறித்து நிருபர்களிடன் பேசிய அவர் கூறியதாவது:இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் தொடராதபடி, பாகிஸ்தான் மீது, இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திரும்ப அழைக்க வேண்டும். அந்த நாட்டுடன் உள்ள தூதரக உறவை முறிக்க வேண்டும். இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை கடுமையாக்க வேண்டும்.காங்கிரஸ் கூட்டணி அரசின் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை மங்கச்செய்கிறது. இந்தியாவை பலவீன நாடாக காட்டுகிறது.சரப்ஜித்சிங் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகையும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு பாரதீய ஜனதா கட்சி முழு ஒத்துழைப்பு வழங்கும்.இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.