மனநிறைவு (சிறுகதை)
ஆச்சாரிMar 1, 2013
“அம்மா அம்மா . . . அண்ணா! அண்ணா! . . . ’’ என்று அழைத்த படி வீட்டினுள் நுழைந்தாள் கமலா. “ யாரையும் காணோம்? எங்க போய்த் தொலஞ்சாங்கனு தெரியலையே ” என்ற முனுமுனுத்துக்கொண்டே தான் வீட்டின் பின்புறமுள்ள கொல்லைப்பக்கமாக வந்த கமலாவைப் பார்த்து “ வாம்மா எப்ப வந்த ? என ஒரு குரல் அழைக்க, குரல் வந்த திசையை நோக்கினாள் கமலா. அங்கே துணிகளை அலசிக் கொண்டிருந்த தன் அண்ணன் ராமுவைப் பார்த்து. எங்கண்ணா அம்மாவையும், அண்ணியையும் காணோம்? எங்க போய்ட்டாங்க?
இவன் அமைதியாக துவைத்த துணிகளை நீரில் முக்கித் துணியைப் பிழிந்து கொண்டிருந்தான். அடிக்கடி தான் மாமியாரிடம் சண்டை போட்டுவிட்டு தான் பிறந்த வீட்டுக்கு வரும் வாயாடிக் கமலா, வழக்கம் போல தன் புகுந்த வீட்டுப் புராணம் பாட ஆரம்பித்தாள். கதவருகே நின்றபடி “அண்ணா என் மாமியாரோட தொல்லயத் தாங்க முடியல. எப்பப் பாத்தாலும் ஏதாவது ஒரு வேல சொல்லிட்டே இருக்காங்க நிம்மதியா டீ.வி கூடப் பாக்க முடியல. நான் எது செஞ்சாலும் எம்மாமியா என்னக் குற சொல்லிட்டே இருக்காங்க. எனக்கு அந்த வீட்ல இருக்கவே பிடிக்கல..
இராமுவும் சற்றுச் சலிப்போடு அவளைப் பார்த்து, என்னம்மா உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது சண்டையா? என்றவனிடம் அதெல்லாம் ஒண்ணுமில்ல… “ சக்கர நோய் வந்த அவங்க அம்மாவத்தான் பாத்துக்க முடியல. நானே அவங்களுக்கு எல்லா வேலையும் செய்ய வேண்டி இருக்கு. நான் என்ன அவங்களுக்கு வேலைக்காரியா? பேசாம அவங்கள ஏதாவது முதியோர் இல்லத்துல சேர்த்துடலாம்னு எங்க வீட்டுக்காரர்கிட்டச் சொன்னேன். எங்க வீட்டுக்காரரு, இதக் காதுல வாங்குற மாதிரி தெரியல நீயே பாத்துக்கனு சொல்லிட்டாரு. என்ன பண்றதுன்னே தெரியலண்ணா.
கமலாவின் குணம் பற்றி அனைவருக்குமே தெரியும். இராமு கமாலாவிடம் “சரிம்மா உன் பிரச்சனையை என்கிட்ட விட்டுடு நான் பாத்துக்கிறேன்’’ என்றவனைப் பார்த்து “ ரெண்டு பேரையும் ரொம்ப நேரமா காணோமே ” என்றாள் கமலா. அண்ணி வேலைக்குப் போயிருக்காம்மா ,….அப்போ அம்மா? எங்க போயிருக்காங்க? என்றவளிடம், குரல் தழுதழுக்க… ராமு சொன்னான் “எம்மா இதச் செஞ்சுட்டேன்னு கோபப்படாத” அண்ணா என்னாச்சு சொல்லுணா . . அது வந்து. . . போன வாரம்தான் அம்மாவ நான் முதியோர் இல்லத்துல சேத்தேன், என்றவுடன் அவனை வெறுப்புடன் பார்த்து கமலா சொனனாள் “ ச்சீ . . . நீயெல்லாம் ஒரு மனுசனா? உன்னப் பெத்த பாவத்துக்கு அவங்கள இப்படி உசுரோட சாகடிச்சிட்டியே. . . . அம்மா இல்லாத வீட்டுல எனக்கென்ன வேல….?
உன்ன என்னோட அண்ணண்னு சொல்லவே வெக்கமா இருக்கு, இனி இந்த வீட்டுக்கும் வரமாட்டேன், உம் மூஞ்சிலையும் முழிக்கமாட்டேன். எனக்கூறி கோபமாகச் சென்றவளைப் பார்த்து… கோபமான ராமு “ நில்லு . . . நீ அங்க என்னா பண்ணிட்ருக்க, நீ பண்ணா சரி நான் பண்ணா தப்பா ? உனக்கு ஒரு ஞாயம் எனக்கு ஒரு ஞாயமா? என்றதும் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது.
கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் வேகமாக நடந்து போகும்போது மனதில் நினைத்துக் கொண்டாள் “ இனி செத்தாலும் எம்மாமியா வீட்லதான், எங்கண்ணன் பண்ண தப்ப, எம்மாமியாருக்கு நான் பண்ணமாட்டேன் ”. இவ்வாறு தனக்குள் பேசியவாறே தன் வீட்டுத் தெரு முனையைக் கமலா தாண்டும் போது, அவளைப் பார்த்தவரே வீட்டுக்குள் வந்தனர் கமலாவின் அண்ணியும், அம்மாவும்.
தூரத்தில் சென்ற கமலாவைப் பார்த்துவிட்டு வந்த ராமுவின் அம்மா ராமுவிடம் “ டேய் ராமு, கமலா இங்க என்ன விசயமா வந்தா? எதுக்கு இவ்ளோ வேகமாப் போறா . . நீ ஏதாவது சொன்னியா? என்றதும் தங்கச்சி அங்கேயே இருந்து சந்தோசமா இருக்கணும் நெனசுத்தான் சில விசத்தச் சொன்னேம்மா என நடந்ததைக் கூறினான். அதைக்கேட்ட அம்மா “இனியாவது அவ அந்த வீட்டுல நிம்மதியா இருக்கணும்” என கண்ணில் வந்த நீரைத் துடைத்துக் கொண்டு புன்னகித்துக்கொண்டே வீட்டுக்குள் சென்றாள். இராமுவின் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட மன நிறைவு பொங்கியது.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
nice story…..keep rocking