முதல் எழுத்து – கையெழுத்து- தமிழ் எழுத்தில் உள்ளதா?
ஆச்சாரிAug 15, 2012
தாய் நிலமாகிய தமிழகத்திலேயே தமிழுக்கு எதிலும் மதிப்பில்லாச் சூழல் தான் பல காலமாக உள்ளது. கல்வியிலும் பணியிலும் நிர்வாகத்திலும் ஆலய வழிபாட்டிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. பெயர் சூட்டுவதில் இருந்து ஆரம்பமாகும் இந்த வேதனையான உண்மை தமிழர்களின் பல நிலைகளில் தொடர்கிறது.
பெயருக்கு முன்னால் குறிக்கப்படும் முதல் எழுத்து (இனிஷியல்) என்பது தமிழகக் கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஒன்றாகும். குடும்ப உறவு முறை இன்னும் சிதையாமல் கட்டிக் காப்பாற்றப்படும் இந்தியாவில் இந்த முதல் எழுத்து என்பது இல்லாமல் ஒருவர் பெயர் எழுதினால் அவரை ஒவ்வாமைப் பார்வைகள் சூழும். இனிசியல் என்பதற்குத் தலையெழுத்து, தலைப்பெழுத்து ஆகிய சொற்களை முன்னோர் சிந்தித்திருக்கின்றனர். தலை என்பது முதன்மை என்னும் பொருளில் வரும் சொல். ‘எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்பது போல பெயருக்கு தலைப்பெழுத்தே முக்கியமாகக் கருதப்படுகிறது.
தந்தை பெயரின் முதல் எழுத்தை பெயரின் அடையாளமாகக் குறிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒன்றாகும். அந்த முதல் எழுத்தை தற்போதுள்ள நம் தமிழர்கள் பலர்- வேகமான முற்போக்கு வாதிகள்- அதனால்தான் தப்பித் தவறி தமிழில் தன் பெயரை எழுதிவிட்டாலும் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில், அரசு ஆவணங்களில் எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதி தங்கள் பெயரை எழுதுகின்றனர். தமிழில் பெயர் எழுதுபவர்கள் கூட முன்னெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி விடுகின்றனர்.
ம.குமார் என்ற தனது பெயரை M.குமார் என்று எழுதுகின்றார்கள். பள்ளிக்கூட வருகைப் பதிவேடு தொடங்கி அனைத்து இடங்களிலும் இதே நிலைதான். உலகில் வேறு எந்த மொழியினரும் அவர்கள் தலைப்பெழுத்தை வேற்று மொழியில் எழுதுவதில்லை. தங்கள் தாய்மொழியில்தான் எழுதுகிறார்கள். ஆனால் தமிழர்கள் மட்டுமே தன் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதி அகமகிழ்கிறார்கள். மு.murugan என்பதைத் தவறென உணரும் தமிழர் M.முருகன் என்பதை தவறென அறியாமல் எழுதுகின்றனர்.
இந்தத் தவறுகளை செய்வதில் சில அரசியல்வாதிகளும் திரைப்படத் துறையினரும் முன்னணியில் உள்ளனர். காரணம் எண் கணிதம் முறை. ஒரு நடிகர் தன் பெயரையே சுருக்கி S.T.R. என்று மாறிவிட்டார். அரசியல்வாதிகளும் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டு மூன்று நான்கு ஆங்கில எழுத்துக்களாக தங்கள் பெயரை அழைப்பதில் பெருமை கொள்கிறார்கள். இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக உள்ளது.
ஆங்கிலத்தில் தலைப்பெழுத்து எழுதுவதால் நேரும் இன்னொரு குழப்பத்தை பலரும் அறிவதில்லை. K என்று ஆங்கில எழுத்தை எழுதி ஒருவர் தன் பெயரை எழுதுகிறார். K என்பது கண்ணனையும் குறிக்கும் காத்தமுத்துவையும் குறிக்கும். குறிலுக்கும் நெடிலுக்கும் ஆங்கில எழுத்து ஒன்றுதான். பெயர்கள் வேறு வேறாக இருந்தாலும் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் எழுதினால் ஒரே எழுத்துதான். க. அமுதன் என்றும் கா. எழிலன் என்றும் தமிழில் முதல் எழுத்தை குறிப்பிட்டால் இந்தக் குழப்பம் வராதே. ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதும் தமிழர்கள் இதை பரிசீலிப்பார்களாக.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. என்னவென்றால் ‘உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், தங்கள் முதலெழுத்தை, தமிழில்தான் எழுத வேண்டும்’ என்பதாகும். ஆனால் இதனை எத்தனை அரசு ஊழியர்கள் பின்பற்றினார்கள் என்று தெரியாது. சட்டம், உத்தரவு, ஆணை இவையெல்லாம் தான், தமிழர்க்கு தமிழ் உணர்வை ஊட்ட உதவும் கருவிகள் என்று எண்ணும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் உணர்வு இயல்பாய் எழ வேண்டும். உணர்வில் கலந்த தமிழை கையெழுத்தாய், கையெழுத்தின் முதல் எழுத்தாய் வெளிப்படுத்த வேண்டும்.
முதல் எழுத்தையே தமிழில் எழுதாதவர்கள் எப்படி தமிழில் கையெழுத்து போடுவார்கள்? தமிழில் கையெழுத்திடுவது ஏளனம், ஆங்கிலக் கையொப்பம்தான் நமக்கு அறிவு இருப்பதைக் காட்டுகிறது என்று ஆங்கிலத்தில் கையொப்பமிட்டு பெருமிதப்படுகிறார்கள். இப்படி தன் ஆங்கில அறிவை வெளிக்காட்டிக்கொள்ள தமிழை ஒதுக்கிவைத்து விட்டு வங்கிக் காசோலைகள், கடவுச் சீட்டு, அலுவலக ஆவணங்கள், பிற விண்ணப்பங்கள், ஓட்டுநர் உரிமம் என்று எல்லாவற்றிலும் ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இடுகிறார்கள் நம் தமிழகத்துத் தமிழர்கள்.
படிப்பறிவு இல்லாதவர்கள் கைநாட்டு வைக்கும்போது கொஞ்சம் படித்தவர்கூட அதை கேலியாகப் பார்ப்பார்கள். இப்போது தமிழில் கையெழுத்திட்டால் அது மதிப்புக் குறைவு என்று எண்ணிக் கொள்கிறார்கள். படிப்பறிவு இல்லாதவரையும் தமிழில் கையெழுத்திடுவோரையும் ஒரே கோட்டில் நிறுத்திப் பார்க்கும் சூழல் இன்னும் அகலவில்லை.
நாம் தேசத் தந்தை என்று போற்றும் காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர் தாயார் உடல் நலமில்லாமலிருந்தபோது 1915 ஆம் ஆண்டு, காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய் பண உதவி அனுப்பினார். அதில் காந்தி அடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது, பெருமிதம் கொள்ள வேண்டியது.
“தாய்மொழியினை மதித்து வீழ்ந்த நாடுமில்லை
தாய்மொழியினை மிதித்து வாழ்ந்த நாடுமில்லை” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இதை நினைவில் நிறுத்துவோம்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
அருமை.
கட்டுரை நன்றாக உள்ளது. முழு பெயரையும் தமிழில் எழுதத் தூண்டும் விதத்தில் யாரையும் நையான்டி செய்யாமல் அருமையாக விளக்கப்பட்டுள்ளது. நன்றி.