மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூழ்கடிக்க வருகிறது மூன்றாம் திரை

ஆச்சாரி

Mar 15, 2012

வெள்ளித் திரை வெளி வந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சின்னத் திரை உதித்து  ஐம்பது ஆண்டுகள் ஆகி விட்டது.  இப்பொழுது வருகிறது மூன்றாம் திரை.

அது என்ன மூன்றாம் திரை?   இது கொஞ்சம் அறிவு சார்ந்த சமாச்சாரம்.  சிவபெருமானின் மூன்றாம் கண் ஞானத்தைக்  குறிக்கும்.  அதைப் போன்று அறிவு பொருந்திய அல்லது மிகுந்த திரை தான் மூன்றாம் திரை.

அமெரிக்காவில் கணிதத்திறன் கொண்ட எந்த கருவிக்கும் “smart” என்ற அடைமொழி  கொடுத்து விடுவார்கள். முதலில் கணினி வந்தது.  பிறகு கணினியின் செயல் திறனை அலை பேசியில் புகுத்தி “smart phone” என்று வித்தார்கள்.  அதன் பிறகு கணினித்துவத்தை தொடுமான பலகை கருவிகளில் (tablets) ஆக்குவித்து “smart device” என்று அறிமுகப்படுத்தி, மிகவும் பிரபலமாக்கி, அமோக வெற்றி அடையச்  செய்தார்கள்.  இப்பொழுது “smart tv” என்று ஒரு நுகர்வோர் சாதனத்தின் மூலம் தொலைக்காட்சி சந்தையையே திரும்பிப் பார்க்கவைக்கப் போகின்றார்கள் என்று தொலைக்காட்சி சந்தை ஆய்வாளர்கள் (analysts of the television industry) கூறுகின்றனர்.

இவர்கள்  வேறு யாரும் அல்ல – ஐபோன், ஐபாடு, ஐபேடு என்ற சாதனங்களை தயாரித்து விற்பனை செய்யும் ஆப்பிள் கணினி நிறுவனம் தான்.  ஒரு கணினி நிறுவனம் ஏன்  தொலைக்காட்சி சாதனத்தை செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்டால், “ஏன் கூடாது” என்று பதில் அளிப்பார்கள்.  அனைத்து நுகர்வோர் சாதனங்களையும் கணினித்திறன் கொண்டவைகளாக மாற்றுவதுதான் இவர்களின் நோக்கம்.  இதற்கு ஏதுவாக கணித நுன்னேந்திரம் (microprocessor) மற்றும் இதர இயக்குமானங்கள் செயல் திறன் மிகுந்தும், அளவில் சிறியதாகவும், மலிவாகவும் கிடைக்கின்றன.  கணினி த்துறையின் அபார தொழில்நுட்ப வளர்ச்சியினால் இந்த முன்னேற்றங்கள் உருவாகி,  அவற்றின் பலனை இன்று அனுபவிக்கின்றோம்.  அதனால் தான் கணினித்தன்மை அறிந்து, “i” என்ற முனைப்பெயர் வைத்து, அறிவு மிகுந்த நுகர்வோர் சாதனங்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த அறிவுத்திறனால் நமக்கு என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம். வழக்கமான  நுகர்வோர் சாதனங்கள் மிகவும் இயந்திரத்தனமான சிந்தனையின் மூலம் உருவானவை.  அதாவது, ஒரு சராசரி இயந்திரம் அதனை இயக்குபவர்களை பற்றி அறிய வாய்ப்பில்லை. உதாரணத்திற்கு, ஒரு வாகனத்திற்கு அதன் ஓட்டுனர் யார் என்று தெரியாது.  அவர் உயரமா,  குள்ளமா, பருமனானவரா அல்லது மெலிதானவரா,  ஆணா அல்லது பெண்ணா என்று எல்லாம் தெரிய வாய்ப்பில்லை.  ஒட்டுனரைப்ப்றி தெரிந்தால், அவருக்கேற்ப வாகனம் இயங்கியது என்றால், எவ்வளவு வசதியாக இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள்.  இப்படி இயக்குவோர் வசதிக்கேற்ப சாதனங்கள் மாற்றி இயங்காததின் காரணம், வழக்கமான  சாதனங்களுக்கு, ஞாபக சக்தி (memory), ஞாபகம் வைத்துள்ள தரவுப் புள்ளிகளை  (data points) அலசி ஆராயும் திறன், அதிலிருந்து பயனளிக்கும் தகவல்களை சேகரிக்கும் சாமர்த்தியம் போன்றவை இல்லாதுதான்.  மேற்கூறிய  திறன்களை பெற்ற சாதனங்கள், இயக்குவோரின் விருப்பங்களுக்கு இணங்க செயல் படுவதுதான் அறிவுத்திறன் (smartness).

ஒரு சாதனத்தின் அறிவு அதிகமாக  கணினித்தன்மை மட்டும் போதாது – தொடர்பு திறனும் (communication) அவசியமானது.  கணினித்தன்மை வாய்ந்த அனைத்து சாதனங்களுமே இணையத்துடன் தொடர்பு கொண்டு தான் இயங்குகின்றன.  இணையத்தின் வாயிலாக தான் மின்னஞ்சல், இணைய தள உலாவுதல் போன்ற நடவடிக்கைகள் சாத்தியமாகின்றன.  மட்டுமொரு முக்கிய வசதி – “apps” என்று சொல்லப் படுகின்ற மென்பொருள் சாதனங்கள். இவை ஒவ்வொன்றும் ஒரு பயனை அளிக்கின்றன.  சில கேளிக்கைக்காக உருவாக்கப்பட்டவை.  மற்றும் சில பயண வழித் தடங்களை தேடுவதற்கும், வழி காட்டுவதற்கும் உதவுகின்றன.  இது போன்ற மென்பொருள் சாதனங்கள் “smart phone” அலை பேசிகளில் மிகவும் பிரபலம்.

அதே போன்று இப்பொழுது மூன்றாம் திரையிலும் மென்பொருள் வகைகள் வரும்.  மூன்றாம் திரை சாதனங்கள் கணினித்துவம் கொண்டவையாகவும், இணைய தொடர்புடையவையாகவும் இருப்பதினால், இவற்றை பயன்படுத்தி, மென்பொருள் வாயிலாக மூன்றாம் திரை நுகர்வோருக்கு ஒரு புதுமையான தொலைக்காட்சி அனுபவத்தை வழங்க, மென்பொருள் படைப்பாளிகள் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்குவர்  என்பதில் ஐயமில்லை.  உதாரணத்திற்கு, ஒரு திரைப்பட பாடலை காணும் பொழுது அதில் வரும் நடிகை அணிந்திருக்கும் துணிவகை பற்றி விவரிக்கும் ஒரு மென்பொருள் சாதனம் வரக்கூடும்.  அதே மென்பொருள், அவ்வகையான துணிவகை  தொலைக்காட்சி இருக்கும் இடத்திற்கு அருகில் எங்கு கிடைக்கும் என்ற தகவலும் கொடுக்கும் (இந்த தகவலை அந்த மென்பொருள் இணையத்திலிருந்து தேடி பிடித்திருக்கலாம்).  உடனே, தொலைக்காட்சி நுகர்வோர், ஒரேயொரு மென் விசையினை  சொடுக்கி, அந்த துணியை வாங்கும் வசதியும் இருக்கும்.  ஆக, தொலைக்காட்சி சாதனம் வாயிலாக தகவல் மற்றும் வணிகம் நடை பெறும் வாய்ப்பு  இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தொலைக்காட்சியே கதி என்று மாயையில் இருக்கும் தமிழர்கள்  மேலும் மாயையில் மூழ்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?   இளைய தலைமுறையினருக்கு உபயோகமாக இருக்குமே என்று இத்தகவல் சொல்லப்பட்டது. சமூக சிந்தனை இல்லாத வரை தொலைக்காட்சியே திரைப்படமே கதி என்று இருக்கும் தமிழர்களை என்ன சொல்லி மாற்ற முடியும்?

The oia recommended that the university offer , compensation, improve its appraisal and upgrade procedures, and show how it would monitor those procedures to ensure compliance http://www.essayprofs.com in the future

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “மூழ்கடிக்க வருகிறது மூன்றாம் திரை”
  1. முத்துக்குமார் says:

    நல்ல நடை. கட்டுரையாலருக்கு நன்றி.

அதிகம் படித்தது