மேலையெழுத்தும் தமிழெழுத்தும் – ஓர் இயலுமைத் தொடர்பு (பாகம்-1)- கட்டுரை
ஆச்சாரிMay 17, 2013
உலகில், தொன்மையான, குறிப்பிடத்தக்க நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகம் வியத்தகு மொழித்தொன்மையோடு பெருமையுறும் வகையிற் தொடர்ச்சியுங் கொண்டுள்ளது. இதை ஒப்புக்கொள்ளும் உலகத்திலோ, அதேபொழுது, தமிழிற் தனித்த ஆய்வுகள் மேற்கொள்வதைக் காண்பது அரிதாகவேயுள்ளது. மேலை உலகின் தொல்மொழி ஆய்வுகள் பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்கிலிருந்தே தொடங்குகின்றன. அவை ஒருபோதும் விந்தியமலையைத் தாண்டுவதேயில்லை. குறிப்பாக, நடுத்தரைக் கடற்கரையிற் தோன்றிய மொழிக்குடும்பங்களே உலகின் பெரும்பாலான மொழிகளின் மூலமொழிகளாகக் கருதப்படும் போக்கும், அதையும் தாண்டி, ”அங்கிருந்தே தமிழெழுத்துகளும் வந்தன” என்று போகிற போக்கில் மேம்போக்காகச் சொல்லும் நிலையையும், அச்சொல்லையே தலைமேற் தாங்கி எழுதும் ஒரு சில இந்திய, தமிழக ஆய்வாளர் நிலையும் எழுவது வருந்தத்தக்கதாய் உள்ளன. நமது ஆராய்ச்சிகளும், முடிவுகளும் இன்னும் ஆழவேண்டிய தேவையும், உயர்ந்த உலகத்தளங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டிய தேவையும் இருப்பதை மறுக்க முடியாது.
உரோம எழுத்துகளின் வரலாற்றை, உலகம், நடுத்தரைக்கடலைச் சுற்றிய நாடுகளில் அமைத்துக் கொண்டிருக்கிற சூழலில், இதில் முக்கியப் பங்குபெறும் நாடுகளாகக் காணப்படுபவை பழைய மெசபொடோமியா, எகிப்து, பொனீசியா, கிரேக்கம் ஆகியனவாகும். வணிக வல்லமையையும், பேரரசு வல்லமையையும் வரலாற்றில் காட்டிய இந்நாடுகள் தம் மொழி வல்லமையைக் காட்டுவதும், அவற்றைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வதும் வியத்தகு விசயமில்லை. இவ்வல்லமையின் தொடர்ந்த ஆதிக்கம் உலகின் பல மொழிகளின் தொன்மைகளை மறைப்பதொடு அவை பற்றிய கவலையற்ற தன்மையையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றின் வீச்சுக்குத் தமிழ்மொழியும் தப்பவில்லை. இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை விந்திய மலைக்கு வடக்கே விளங்க வைப்பதும், அதில் நாயகமாயிருக்கும் சமற்கிருதத்திடம் இருந்து பல்வேறு சொற்களைத் எடுத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகின்ற வல்லாண்மை மொழிகள் ”சமற்கிருதத்திற்கு இத்தகை வளங்கள் எங்கிருந்து வந்தன?” என்பதைப் பற்றி சிந்திக்கவே தயங்கும் காட்சியும் உலக மொழியாய்வுக் களத்தில் காணப்படுகிறது.
மெசபொடோமியா, எகிப்து, கிரேக்கம், அரேபியா போன்ற தொன்மையான நாகரிக நாடுகள் தம் முதுகுடிகளின் காலத்திலிருந்து பேசிப் புழங்கி வளர்ந்த மொழிகளைப் பற்றி நன்கறிந்திருந்தும், அதுபற்றி வியந்து பேசாது, ”எங்கும் பேச்சு வழக்கில்லாதிருந்த சமற்கிருதத்திடமிருந்து சொற்களைக் கடன்பெற்றதாகப் பெருமைப் பட்டுக்கொள்வது”, இன்னும் வியக்கத்தக்க போக்காய்க் காணப்படுகிறது. தமிழ் மக்கள் எவ்வளவு தான் ஓங்கி உரத்துச் சொல்லி தம் மூலத்தை விளக்கினாலும், ”சமற்கிருதம் எந்த அளவிற்குத் தமிழிடம் கடன்பட்டிருக்கிறது?” என்பதைச் சொன்னாலும், உலக மொழிக்களம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையிலில்லை. இதற்குப் பல்வேறு வல்லாண்மைக் காரணங்களிருந்தும், தமிழர்கள் அதையுணர்ந்து வலுவான உலகளாவிய ஆய்வுக்களத்தை இன்னும் ஏற்படுத்தாமையும் ஒரு காரணமாகிறது. ”பரந்துபட்டுக் கிடக்கும் பொதுவான உலகத்தாரும், தில்லி அறிவுலகமும் நேர்மையுடன் இதை ஆராய்ந்து தமிழ்மொழிக்குக் கிடைக்கவேண்டிய இடத்தைப் பெற்றுத் தந்துவிடுவார்கள்” என்ற தவறான நம்பிக்கை கொண்டு, ”தமது மொழிக்கான ஆய்வுக்களத்தை மிகப் பரந்துபட்ட நிலையில் ஏற்படுத்த வேண்டிய முனைப்பைத் தமிழர் தடுக்கிக் கொள்கிறாரோ?” என்று அஞ்சவேண்டியிருக்கிறது.
தொல்தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும்.
- எழுத்துத் தமிழி (Alphabetic Thamizhi)
- படத்தமிழி (Picto-Thamizhi)
இவை முறையே பிராமி, சிந்துவெளி எழுத்துகள் என்று இருவேறு கூறாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. (இக்கட்டுரையில், “தமிழி” என்ற சொல்லாட்சி எழுத்துத் தமிழியையும், ”படத்தமிழி” என்ற சொல்லாட்சி சிந்துவெளி எழுத்துகளையும் குறிக்கின்றன. இந்தியாவில் அசோகன் பிராமியை முதலெழுத்தாகக் கூறி தமிழெழுத்தைத் தமிழ்-பிராமி என்று கூப்பிடும் வடபுலப்போக்கை மறுத்து, தமிழியே முதலெழுத்து, அசோகன் பிராமி வழியெழுத்து என்ற கொள்கையில் இவ்விரு சொற்களும் கையாளப்படுகின்றன.) எழுத்துத்தமிழி கண்டுகொள்ளப் படாமலும், படத்தமிழி இன்னும் முழுமையாக உடைபட்டு அடையாளம் காணப்படாமலும் இருக்கின்றன. இவை ஒருபுறமிருக்கத் தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கி.மு 500ஐ கடக்க முடியுமெனினும் ஏதோ ஒரு தடைக்கல்லால் கடக்க முடியாமல் அமுங்கிப் போய்க் கிடக்கின்றன. (ஆதிச்ச நல்லூர் தொல்லாய்வு முழுவீச்சுடன் இன்னும் நடைபெறாதிருக்கிறது. 2004 இல் மீண்டும் புத்துயிர் பெற்ற ஈமத்தாழிகளுக்குள் புகுந்துவந்த அந்த ஆய்வு அதற்கப்புறம் வாழிடங்களைத் தேடி விரிவு காணாது தொய்ந்து போய்க் கிடக்கிறது. இந்த நிலையில் தமிழியின் தொன்மை வெளிவராமல் கிடப்பதில் வியப்பேதுமில்லை. தமிழக ஆய்வுகள் தொய்ந்திருக்கையில், உலக மொழி ஆராய்ச்சிகள் நடுத்தரைக்கடல் நாகரிகத்தைச் சுற்றி சமற்கிருதத்தை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டு வெள்ளமெனப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டுரை மேலை மொழியெழுத்துகள் தமிழியுடன் கொண்டிருந்த கொள்ளக்கூடிய தொடர்புகளை ஆழமாக ஆராய்கிறது. குறிப்பாக இக்கட்டுரை,
1) தமிழி அகரமே உரோம-A எழுத்துக்கு மூலமாகக் கூடும் என்ற கருதுகோளை வைக்கிறது
2) உரோம எழுத்து இணவுகளில் (Roman letter concordances) உள்ள இடைவெளிகள், சார்புத்தன்மைகளை எடுத்துரைக்கிறது
3) விவிலியம் பழைய ஏற்பாட்டில் வரும் சாலமன் பற்றிய ஆவணங்களிற் குறிப்பிடப்படும் ஓபிர் (Ophir) என்ற இடம் எதுவாக இருக்கலாம் என்று கருதுகோளையும் முன்வைக்கிறது.
4) அவிழ்க்கப் படாமல் (அல்லது படிக்கப் படாமல் இருக்கின்ற) எழுத்துமுறைகளின் முகன்மையை உணர்த்துகிறது.
உரோம எழுத்து இணவுகளில் தேவையான மீள்பார்வை
இன்றைக்கு உலகமே பயன்படுத்தும் உரோம நெடுங்கணக்கு,
1. கி.மு 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எகிப்திய சான்றுகளில் தொடங்கி,
2. கி.மு 10ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் உருவாகிய பொனீசிய நெடுங்கணக்கை மையமாக்கி,
3. பின்னர் கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் பொனீசியரிடம் இருந்து கிரேக்கராற் கடன்பெற்று, உயிரெழுத்துகளை உருவாக்கிச் சேர்த்து,
4. கிரேக்க, இலத்தீன் மொழி வளர்ச்சிகளில் நிலைபெற்று,
5. கி.பி.113ல் கிடைக்கப் பெற்ற டிராசன்-தூண் கல்வெட்டுச் சான்றில் நிறைவான வடிவம் பெற்றது;
என்ற வரலாறு உலகின் பல ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலே சொன்னதில் அழுத்திச் சொல்லவேண்டியது: ”பொனீசிய நெடுங்கணக்கு மெய்யெழுத்துகளை மட்டும் கொண்டது. மெய்யெழுத்துகளின் அமைப்புக்கு ஏற்றவாறு உயிரொலிகளைக் கூட்டிப் படிப்பதே அவரின் வழக்கமாக இருந்தது. பொனீசியர்களின் எழுத்துமுறையை வலமிருந்து இடமாகப் படிப்பதே முறையாகும் கிரேக்கரின் எழுத்துமுறை வல-இடம், இட-வலம் என இரண்டு முறைகளிலும் இருந்திருக்கிறது. கி.மு 800ல் உயிரெழுத்துகளை நெடுங்கணக்கில் சேர்த்ததோடு, இட-வல எழுத்துமுறையையும் கிரேக்கர் நிலைநிறுத்தி உள்ளனர்.”
அட்டவனை-1: எழுத்து இணவு – A (Concordance of letter A)மேலையெழுத்துக்களில் இன்று காணும் முதலெழுத்து A என்பதையொட்டியதாகும். இந்த எழுத்தைப் புழங்கியதில், எகிப்தில், வாடி எல்-ஆல் (Wadi El-Hol) என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட, கி.மு2000-1800 காலத்தைச் சேர்ந்த, ஒரு கல்வெட்டு உலகத் தொல்லியற் சான்றுகளில் முகன்மை இடம் வகிக்கிறது. அக்கல்வெட்டில் காளை அல்லது எருதின் முகவடிவம் கொண்ட ஒரு படவுரு உள்ளது (காண்க அட்டவணை1, முதற்பெட்டி). எகிப்திய மொழியில் Aleph என்ற சொல் காளையைக் குறிக்கும். அதுவே 2000 ஆண்டுகளில் மெல்ல மாற்றமடைந்து கி.பி 113ல் A என்ற உரோம எழுத்தாக படைக்கப்பட்டதென்று பல நூல்களும் ஆராய்ச்சிகளும் சொல்கின்றன. அதேபொழுது, கி.மு 1750 ஐச் சேர்ந்த எகிப்தின் செராபிட்டுக் கல்வெட்டும்காளை வடிவத்தின் மாறிய வடிவத்தையே காட்டுகிறது. இக்கல்வெட்டும் உலகின் முக்கியத் தொல்லியற் சான்றுகளில் ஒன்றாகும்.
கி.மு1000ன் பொனீசியர் உருவாக்கிய நெடுங்கணக்கு Aleph என்ற எழுத்தை மெய்யொலியாகக் கொண்டது. இந்த எழுத்தை பொனீசியர்கள் என்ற வடிவத்தில் காட்டியிருக்கிறார்கள் (அட்டவணை -1, பெட்டி-3). கொம்புகளுடைய காளை முகத்திற்கும் மேலே இரண்டு வரிக்கு முன்வரும் இந்த எழுத்துருவுக்கும் அப்படி ஒரு வடிவ ஒற்றுமை சட்டென்று புலப்படுவதில்லை. காளைமுகத்தில் இருந்து இந்த வடிவம் வந்திருக்கலாம் என்ற பெருத்த ஊகம் ஆய்வாளர்களாற் சொல்லப்படுகிறதே தவிர, இடைப்பட்ட 800 ஆண்டுகளில் எப்படியான மாற்றங்கள் என்ற வடிவத்தை காளைமுகத்திலிருந்து உருவாக்கின என்பதற்கான சான்றோ, விளக்கமோ இதுவரை கண்டேனில்லை. இது சுருக்கப்பட்டக் காளைமுக வடிவம் என்றும் மூன்று கோடுகளால் எழுதுமாறு இது மாறியிருக்கிறது என்பதே விளக்கமாக உள்ளது.
அண்மையில் பழனிக்கு அருகில் பொருந்தல் என்னுமிடத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது தமிழி என்னும் எழுத்து கி.மு.490க்கு ஒத்த காலத்தே முற்றிலும் பண்பட்ட நிலையில் பயன்பாடு கொண்டிருந்தது தெரியவந்தது. இது முகன்மையான கண்டுபிடிப்பாகும். இதுவரை இந்தியாவிற் கிடைத்த எழுத்துப் பொறிப்புகளை வைத்துப் பார்த்தால், இந்தியத் துணைக்கண்டத்தில் எழுத்துத் தமிழியின் பழம் பொறிப்பு தமிழகத்திலேயே முதன்முதலிற் கிடைத்திருக்கிறது என்ற உண்மை புலப்படும். [இன்னும் அசோகன் பிராமி முதலென்று சொல்லும் போக்கு மாறவேண்டிய காலம் வந்தாயிற்று.] இதோடு சேர்த்து மீளாய்வு செய்யப்படும் நிலையில், உறுதி செய்யப்படாத கொற்கை எழுத்துப் பொறிப்பு கி.மு.700ஐ ஒட்டிக் காணப்பட்டிருக்கிறது. ” கொற்கை எழுத்துப் பொறிப்புகள் எந்தக் காலத்தைச் சேர்ந்து முதலிற் தோன்றின?” என்பது இன்னும் ஆய்விற்குரியது. இதே கால எல்லை தான் (கி.மு.800) கிரேக்கர் பொனீசியர் எழுத்தைக் கடன்வாங்கிய காலமாகும். இதற்குச் சற்று முன்னர் தான் (கி.மு.1000) பொனீசிய எழுத்துச் சான்றுகள் எழுந்த காலமாகும். இந்நிலையில் தமிழி எழுத்தையும், பொனீசிய எழுத்தையும், கிரேக்க எழுத்தையும் ஒருபாற் கோடாது திசைபொருத்திப் பார்க்க வேண்டியது எந்த ஆய்வாளரும் செய்யக் கூடியதாகும். பொனீசியர் எழுத்தை மட்டுமே முன்னீடாகக் கொண்டு, ”பொனீசியர், எபிரேயர், கிரேக்கர், அராமிக்குகள் வழி பிராமி வந்து அதன்வழி தமிழர் எழுத்தறிந்தார்” என்பது முன்முடிவுகளுக்கு உரியதாகும். இந்தக் கட்டுரை ”எழுத்து நகர்ச்சி தலைகீழாய் தமிழகம் – கிரேக்கம்,பொனீசியா என்றிருந்திருக்கக் கூடும்!” என்ற தேற்றத்தை முன்மொழிகிறது.
சற்று ஆழமாய்ப் பார்ப்போம். மேலே அட்டவணை 1 இல் வெவ்வேறு பெட்டிகளிற் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துககள், தமிழியில் உள்ள அகர எழுத்து வடிவத்தோடு ஒத்திருப்பதைப் பார்த்தால் என்ற எழுத்து வடிவம் ஒருவேளை எழுத்துத் தமிழியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாகாதா என்று சிந்திக்க வைக்கிறது. வடிவியற் படி ஆராய்ந்தால், இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை பெரிதும் வியக்க வைக்கிறது. பழந்தமிழியில் இடப்பக்கம் திறந்திருக்கும் அகர எழுத்து, பொனீசியத்தில் வலப்பக்கந்திறந்திருப்பது, பொனீசியர்களின் எழுத்து முறை வலமிருந்து இடம் எழுதும் பழக்கமுடையவர்களாக இருந்ததால், தமிழியின் அகரம் வலம் இருந்து இடமாக எழுதப்பட்டிருக்கிறதோ என்று எண்ணவைக்கிறது. இன்னும் விளக்கமாய்ச் சொன்னால், தமிழியின் அகரத்தை தமிழ் எழுதுமுறையில் (இட-வலம்) எழுதும்போது இரண்டு சாய்கோடுகளை எழுதி, வலப்பக்கத்தில் குத்துக்கோட்டை எழுதுவது வழக்கம். அதேபோலத் தான் பொனீசியர்கள் தமிழி அகரத்தை, தமது வல-இட முறையில் எழுதும்போது, முதலில் சாய்கோடுகளை எழுதி அதற்கு இடப்பக்கத்தில் குத்துக்கோடு இட்டிருக்கிறார்கள். இதற்கு அடுத்து, இரண்டு கோடுகளால் எழுதுமாறு சுருங்கியதென்று கி.மு 800 கால பொனீசியக் கல்வெட்டுச் சான்றைக் கொண்டு குறிப்பிடுகிறார்கள் (பார்க்க: அட்டவணை -1, பெட்டி-4,5). ஒரே காலத்தைச் சேர்ந்த இந்தச் சான்றுகள், ”கி.மு.1000த்தில் அவர்கள் உருவாக்கிய Alephன், பலரால் சிறிய மாறுபாட்டோடு எழுதப்பட்ட வடிவமே அன்றி வேறில்லை” என்று புரிய வைக்கின்றன. [இதனை வரிவடிவ-வேறு (Allograph) என்று சொல்வார்கள். இவையும் தமிழி அகரத்தை வலமிருந்து இடம் எழுதிய முறையையே காட்டுகிறது.]
பின்னர், கி.மு 800க்கும் 740க்கும் இடைப்பட்ட 60 ஆண்டுகளில் பொனீசியர்களிடம் இருந்து கிரேக்கர்கள் பெற்றுக்கொண்டு உருவாக்கிய நெடுங்கணக்கில் இவ்வெழுத்து 180 பாகை திரும்பிக் காட்சியளிக்கிறது(அட்டவணை -1, பெட்டி-6). இது ஏனென்றால், கிரேக்கர்கள், பொனீசிய நெடுங்கணக்கை எடுத்துக்கொண்டு தமது நெடுங்கணக்கை உருவாக்கியபோது (கி.மு 800-740), தமது எழுதுமுறையையும் இட-வலமாக மாற்றிக்கொண்டார்கள் என்பதுதான். அதுவரை, வல-இடம், இட-வலம் என்ற இருமுறைகளையுமே பயன்படுத்தி வந்த கிரேக்கர்கள், நாலாவட்டத்தில் இட-வல முறையில் மட்டுமே நிலைத்து நிற்கும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது தமிழி எழுதுமுறையை முழுவதும் ஒத்ததாகும். ஆகவே, பொனீசிய Aleph என்பது, வல-இட தமிழி அகரமே இருக்கக்கூடும் என்று ஓர் ஏரணங் காட்டி நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அதாவது, பொனீசியர்களால் கி.மு 1000ல் வல-இடமாக எழுதப்பட்டு, பின்னர் கி.மு 800-740ல் கிரேக்கர்களால் Alpha என இட-வலமாக எழுதப்பட்டது தமிழியெழுத்தின் தாக்கமாக இருக்கலாம். அடுத்த 20 ஆண்டுகளின் பின்னர், கிரேக்கத்திலும், கிரேக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், (எத்துருக்கன்) 90 பாகை திரும்பி, Alpha குத்தாக நிற்கும் மாற்றத்தினைப் பெற்று இறுதியில் உரோம-A ஆக நிலைபெற்றிருக்கிறது.
படவெழுத்து என்பது ஒரு பொருளையோ, சூழலையோ, உணர்வையோ, கருத்தையோ வெளிப்படுத்துமாறு அமையும். ஈரோகிளிபிக்கின் (Hieroglyph) காளைமுகம் படவெழுத்து ஆதலால் அது குறித்த பொருள் வேறு. உயிரெழுத்து இல்லாத பொனீசியத்தில், Aleph என்று சொல்லப்படுகிற எழுத்தானது “Ah” என்ற நிறுத்தொலியைக் (Glottal Stop/Breathing Stop) குறித்தது. இந்த ஒலியைக் குறிப்பதற்கு, அதற்கு முன் 1000 ஆண்டுப் பழைமையான காளைமுகப் படம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது ஏரணத்தால் ஏற்குமாறில்லை. வடிவ ஒப்புமை, ஒலி ஒப்புமை, பொருள் ஒப்புமை என்ற மூன்றுமே இல்லாத ஈரோகிளிபிக்கின் காளைமுகம் எங்ஙனம் பொனீசிய நிறுத்தொலிக்குப் பகரியாகும்? “காளைமுகத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன் எப்படியென்று தெரியவில்லை” என்று டேவிட் சாக்சு என்பாரும் கூறுவது இக்கருத்தை உறுதி செய்கிறது. பொனீசியர்கள், “Ah” என்ற தங்கள் நிறுத்தொலிக்கு, தமிழி அகர ஒலியமைப்பு ஒத்திருப்பதைப் பார்த்து, அவ்வெழுத்தைத் தங்கள் வல-இட எழுதுமுறைக்கு ஏற்ப எழுதி உள்வாங்கிக் கொண்டார்கள் – என்பதே சரியாகத் தோன்றுகிறது. ஆகவே, என்ற பொனீசிய Aleph, என்ற தமிழ் அகரத்தின் வல-இடமுறை படைப்பாகும் என்றே நான் கருதுகிறேன். பொனீசியர்கள் இதனை நிறுத்தொலியாகப் பயன்படுத்த, கிரேக்கர்கள் இட-வலமாகத் திருப்பி Alpha என்ற உயிரெழுத்தாக உள்வாங்கிக் கொண்டார்கள்.
மேலும், மிக முகன்மையாகக் கவனிக்க வேண்டியது, பொனீசியாவின் தலைநகரமாக இருந்த பிபிலோசு (Byblos) நகரில் கிடைத்த கி.மு 2000 த்தைச் சேர்ந்த 10 கல்வெட்டுகள் இன்னும் படிக்கப்படாமலேயே இருக்கின்றன என்பதாகும். (பிபிலோசுக்குப் பின்னர் பொனீசியர்கள் டயர்[Tyre] நகரிற்குத் தங்கள் தலைநகரை மாற்றிக் கொண்டார்கள்). பின்னிணைப்பு-1ல், அவற்றுள் ஒரு கல்வெட்டின் படம் இடப்பட்டிருக்கிறது. அதில் ஏறத்தாழ 270க்கும் மேற்பட்ட எழுத்துகள் உள்ளன. அவற்றில் 75க்கும் மேற்பட்ட எழுத்துகள் (28%) எழுத்துத் தமிழியாகவோ, அன்றிப் படத்தமிழியாகவோ இருக்கின்றன. அவற்றுள், தமிழி அகரத்தை அப்படியே காணமுடிகிறது. எகிப்திய ஈரோகிளிப்புகளும் அதில் காணப்படுகின்றன. அதில், உரோம-B எழுத்துக்கு மூலமாகச் சொல்லப்படும் ஈரோகிளிப்பு எழுத்தும் இருக்கிறது. ஈரோகிளிப்பை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, அதே கல்வெட்டில் இருக்கின்ற தமிழியை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாதது எப்படிச் சரியாகும்? ஆகவே, ”இந்தப் படிக்கப்படாத கல்வெட்டுகள் ஏன் இன்னும் படிக்கப் படவில்லை?” என்பது ஒருபுறம் இருக்க, ”தமிழி அகரம் உள்ளிட்டப் பல்வேறு தமிழி எழுத்துகளைப் பொனீசியர்கள் கி.மு 2000லேயே நன்கு அறிந்திருக்கக் கூடும்” என்பதை எண்ணிப் பார்க்கலாமே? பொனீசியர்கள் உருவாக்கிய Aleph-ன் மூலத்திற்கு, எகிப்திய வாடி எல்-ஆல், செராபிட்டு கல்வெட்டுகளைச் சுட்டாமல், அதே காலத்தைச் சேர்ந்த பொனீசியர்களின் பிபிலோசு கல்வெட்டையேச் சுட்டி, அதிலிருக்கும் தமிழியை மேற்கோள் காட்டினால் மிகச் சரியாக இருக்கும் என்பது நம் முன்வைப்பாகும்.
அட்டவனை -2: எழுத்து இணவு – B (Concordance of letter B)
அடுத்து இரண்டாவது எழுத்திற்கு வருவோம். உரோம-B எழுத்தின் மூல எழுத்து, எகிப்திய ஈரோகிளிப்பின் சிறு-மரவீட்டுப் படத்தில் தொடங்குகிறது. இப்படம் “h” என்ற ஒலியைக் குறித்திருக்கிறது. பின்னர், அதே போன்ற படம், பொனீசியாவில், பொனீசியர்களின் முன்னோர்களான கானர்களின் (Cananites) கல்வெட்டில் (கி.மு 1200) காணப்பட்டிருக்கிறது. பொனீசியர்கள் அப்படத்தை “b” (bayt) என்ற ஒலியைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை இரண்டுமே B யின் ஆதி மூலமாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், பின்னிணைப்பு-1காட்டும் கி.மு.2000 பொனீசியப் பிபிலோசு கல்வெட்டிலும் இந்த வடிவத்தை ஒத்த படம் இருக்கிறது (). இதன் வடிவம் கி.மு 1000ல் உருவான வடிவத்துடன் (அட்டவணை -2, பெட்டி3) பெரிதும் ஒத்திருப்பதைக் காணமுடிகிறது. பிபிலோசு கல்வெட்டு, படத்தமிழியில் இருந்து பெற்ற, இதே வடிவத்தை ஒட்டிய படவுருக்களையும் ( ) கொண்டிருக்கிறது. இக்கல்வெட்டு படிக்கப்பட்டால் மட்டுமே, பொனீசியர்கள் உரோம-B யின் மூலத்திற்குத் தங்கள் நாட்டிலேயே கிடைத்த கல்வெட்டைச் சான்றாகக் காட்டமுடியும் என்பதொடு, இந்த மூலவடிவம் படத்தமிழியில் இருந்து வந்ததா? அல்லது ஈரோகிளிப்பில் இருந்து வந்ததா ?என்று தெளிவாகச் சொல்லமுடியும்.
அட்டவனை -3: எழுத்து இணவு – C (Concordance of letter C)
அடுத்து, மூன்றாம் எழுத்திற்கு வருவோம். உரோம-C எழுத்திற்கு மூலமாக, கி.மு 800க்கு முன்பு ஏதும் சான்றுகள் இல்லை என்பதாக அதன் எழுத்திணவு காட்டுகிறது. கி.மு 800ச் சேர்ந்த பொனீசிய கல்வெட்டில் கண்ட படம் (அட்டவணை -3, பெட்டி4) ஒட்டகத்தைக் (gimel) குறித்ததாகவும் அதுவே உரோம-Cக்கு மூலம் என்றும் சொல்லப்பட்டிருந்த முந்தையக் கருத்தை இப்பொழுது பலரும் ஏற்பதில்லை. பல்வேறு மேலாய்வுகளுக்குப் பின்னர், ”அது ஒட்டகம் அல்ல பூமராங்கு என்று இப்போதைய அறிஞர்கள் முடிவு செய்திருக்கின்றனர். பூமராங்கின் படம் பிபிலோசு கல்வெட்டில் பல இடங்களில் காணப்படுகிறது. அந்தப் படம் படத்தமிழியிலும் இருக்கின்றது. பூமராங்கு என்னும் ஆயுதம், தமிழில் “வளைதடி”, “பாராவளை”, “வளரி”, “வட்டத்தவை” என்று பல்வேறு சொற்களால் அழைக்கப்பட்டுப் புழக்கத்தில் இருக்கிறது. “புகரினர் சூழ் வட்டத்தவை” (பரிபா. 15), “பூநீர்பெய் வட்டமெறிய” (பரிபா. 21, 42) என்ற பரிபாடல் வரிகளைச் சான்றாக சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி மேற்கோள் காட்டுவது இங்கு நோக்கத்தக்கது. வளரி என்பது தமிழரின் தொன்மையான ஆயுதம் என்பர் அறிஞர். தொண்டியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு வளரியைச் சான்றாகக் காட்டுவார் மலேசிய அறிஞர் செயபாரதி. வளரி பற்றிய ஆய்வு தமிழிற் பெருக வேண்டும்.
மேலும், ஆத்திரேலிய மேற்குப் பகுதியைச் சேர்ந்த பழங்குடிகள் 10000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமராங்கைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்று பல அறிஞர் சொல்லிவருகின்றனர். ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய ஈனியற் (genetics) தொடர்பு உண்டு என்று இற்றைக்கால ஆய்வுகள் காட்டுவது இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கது. அண்மைய ஆய்வுகள், பூமராங்குகள் ஐரோப்பாவிலும் இருந்திருக்கின்றன என்று காட்டுகின்ற போதிலும், பல்வேறு பெயர்களிலும் வகைகளிலும் இருந்த தமிழ்ப் பூமராங்குகளின் தொன்மை கருத்தில் கொள்ளப்படவில்லை.
ஆகவே, உரோம-Cக்கு மூலமாக, பிபிலோசு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பூமராங்குக் குறியீடு படத்தமிழியைச் சேர்ந்தது என்று கொண்டு, ”வேறெந்த கல்வெட்டையும் எழுத்திணவு மூலமாகக் காட்டவில்லை” என்பதால், அதுவே பொனீசிய நெடுங்கணக்கிற்கு மூலமாக அமைந்திருக்கிறது என்று கருதுவது பொருத்தமாகும். அதொடு, கிரேக்கர்களின் இட-வல எழுதுமுறை மாற்றமும் இங்கு முக்கியம் பெறுவது கவனிக்கத்தக்கது. ஆக, இங்கேயும் தமிழியை உள்ளடக்கிய பிபிலோசு கல்வெட்டே முகன்மையுறுகிறது என்பதும், அக்கல்வெட்டு படிக்கப்படும்போது, மூலம் படத்தமிழியாக இருக்க வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அட்டவனை -4: எழுத்து இணவு – D (Concordance of letter D)
கிரேக்கர்கள் டெல்டா என்பதைக் குறிக்க இரண்டு வகையான சின்னங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒன்று முக்கோண வடிவம். இன்னொன்று உரோம-D வடிவத்தை ஒத்த சின்னம். பொனீசியர்கள் காட்டுகிற கி.மு 1000த்தைச் சேர்ந்த சின்னம் Daleth என்ற பெயரில் கதவினைக் குறித்திருக்கிறது என்றே இதுநாள்வரை வந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன் முதலெழுத்தான D ஒலியே பின்னர் உரோம-D க்கு நிலைபெற்றிருக்கிறது என்ற கருத்து ஆய்வுகளில் காணக்கிடைக்கிறது. பொனீசியர்களின் வல-இட எழுதுமுறையில் இருந்து கிரேக்கர்களிடம் நிலைபெற்ற இட-வல முறை உரோம-D எழுத்தின் வடிவத்திற்கு மூலமாக இருந்திருக்கிறது என்பதும், முக்கோண வடிவம் படத்தமிழி எழுத்துகளில் நிறையக் காணப்படுகிற படவுருவாக இருப்பதும், பிபிலோசு கல்வெட்டில் காணப்படுகிற படவுருவாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இங்கும் தமிழி மேலையெழுத்துக்களுக்கு மூலமாய் இருந்திருக்கலாம்.
அட்டவனை -5: எழுத்து இணவு – E (Concordance of letter E)
அடுத்த எழுத்து உரோம E எழுத்தாகும். இந்த உரோம-E எழுத்து ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்தாகும். முந்தையக் காலத்து சினாய்ட்டிக்கு எழுத்து வகையான வாடி எல்-ஆல் கல்வெட்டில் காணப்படும் குச்சி மனிதன் படம் “he” எனப்பட்டு, அதில் உள்ள “h” ஒலியைக் குறிப்பிட்டிருக்கிறது. பொனீசியத்தின் “h” ஒலி வடிவம் மேலே அட்டவணை -5, பெட்டி3ல் இருக்கும் வடிவத்துக்கு ஆகியிருக்கிறது. இது குச்சி மனிதனின் சுருங்கிய வடிவம் என்றும் தலைப்புறம் கோடாக மாற்றி எழுதப்பட்டது என்பதாகவும் விளக்கங்கள் சொல்கின்றன. பொனிசீயர்களின் ஒலிப்பு “hey”, “hay” என்பதில் உள்ள எகரம் ஏறிய மெய்யொலியாக இருக்க, கிரேக்கர்கள் “hey” என்பதில் உள்ள உயிர் எகர ஒலியாக அமைத்தனர்.
குச்சிமனிதப் படம் வாடி எல்-ஆல் கல்வெட்டில் மட்டுமல்ல, படத்தமிழியில் பல வடிவங்களில் காணப்படுகிறது. குச்சி மனிதன் படத்தில் கண்ட வியப்பொலியே பொனீசிய, கிரேக்க ஒலிகளுக்கு மூலம் என்று இதன் ஒலிமூலத்தைக் குறிப்பிடுகின்றனர். கோடுகளை உடைய பொனீசியப் படம் படத்தமிழியிலும், பிபிலோசு எழுத்துகளிலும் காணப்படுகின்றன. இப்படியிருக்க, எகிப்திய-பொனீசியத்தில் மட்டுமே ஒலி ஒப்புமையையும், வடிவ ஒப்புமையையும் இருப்பதாகச் சொல்லப்படுவது சரியா? – என்ற கேள்வி நம்முன் எழுகிறது.
எழுத்துத் தமிழியை நோக்குங்கால், தமிழ் யகர வடிவம் இன்றைய கிரேக்க-epsilon (), உரோம-E வடிவுடன் ஒப்புமை கொண்டுள்ளது. யகரம் தமிழில் அரை-உயிர் எழுத்தென்று சொல்லப்படும். யகரத்தின் தமிழி வடிவம் ஆகும். இவ்வடிவத்தை எப்சிலானுக்கு ஒப்புமையாக எளிதில் கூறலாம். ஆயினும், படத்தமிழியின் எழுத்தும், ஒலியும் படிக்கப் படவேண்டியது முக்கியமாகிறது. கூடவே யகரச் சான்று பிறநாட்டுக் கல்வெட்டுகளில் தேடப்படவேண்டியதும் அவசியமாகிறது. உரோம-E, இ/ஈ ஒலிப்பு உள்ளிட்ட 15 வகையான ஒலிகளைக் கொண்டுள்ளதாக மொழி அறிஞர் கூறுகின்றனர். Ear, eat, education, they, europe, ape, pseudo, queue, pie என்ற இந்தச் சொற்கள் ஒவ்வொன்றிலும் ‘e’ யின் ஒலிப்பு மெல்லிய, வல்லிய வேறுபாடுகளைக் கொண்டிருப்பது கவனிக்கத் தக்கது.
அந்த ஒலிகளைக் குறிப்பிட எகிப்திய குச்சி மனிதனின் வியப்பொலி மட்டுமே மூலக் காரணம் என்பது போதுமான சான்றாக இல்லை. E என்ற எழுத்தின் உருவாக்கம், பல்வேறு ஒலிகளுக்குப் பயன்பட்டிருக்கிற அதே வேளை, அது இகர, எகர, யகர, ஐகார ஒலிப்புகளையும், சில நெடிலோசைகளையும் உள்ளடக்கியிருக்கிறது என்பது முக்கியமானது. (கிரேக்கத்தில் நெடிலோசைகளுக்கு எழுத்துகள் உண்டு). இத்தனை உயிர் ஒலிகளை இது குறிப்பிட வேண்டுமானால், நுண்ணிய உயிரொலிப்பு கொண்ட ஒரு மொழியின் தாக்கமாக அது இருக்க முடியுமே தவிர, வெறும் வியப்பொலி மட்டும் கொண்ட மொழியின் தாக்கமாய் இருக்க முடியாது. நுண்ணிய உயிரொலிப்புகளைக் கொண்ட தமிழியின் அடிப்படைகளை எடுத்துக் கொண்டு, இகரத்துடன் பிற எழுத்துக்களைச் சோடியாக்கி(letter pairs), அவர்களின் சொற்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன என்று கருத இடமுண்டு. ஆகவே, உரோம-E யின் எகிப்திய மூலமும் பொருத்தமானது இல்லை.
மேற்சொன்ன ஐந்து எழுத்துகளைப் பார்க்கும் போது தமிழி, படத்தமிழியின் தாக்கம் செமித்திய மொழிகளில் நிறைய இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகளைப் புலப்படுகிறது. கிரேக்கர்கள் கி.மு 800-600 காலத்தில் உயிரெழுத்தை உருவாக்க தமிழி முகன்மையான பங்கு வகித்திருக்கலாம். இதற்குச் சான்றாக இருக்கும் முக்கிய எழுத்துகளான பிபிலோசு, படத்தமிழி எழுத்துகள் போன்றவை இன்னும் படிக்கப் படாமல் இருப்பது துல்லியமான எழுத்திணவு வரலாற்றை மறைக்கிறது. வாடி எல்-ஆல், செராபிட்டு கல்வெட்டுகளை ஆராய்ந்த தொல்லியல் அறிஞர் டேர்னல் (J.Darnell) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“The writing indeed proved to be alphabetic. The symbols are letters closely related to those of Sinai and Canaan. The two inscriptions cannot be deciphered confidently due to the absence of word breaks and our familiarity with some of the letters. Nobody knows for sure if the writing runs left to right or right to left.”
டேர்னலின் கருத்து இதுவாகினும், பின்னர் இக்கல்வெட்டுகள், பல ஆய்வாளர்களால் மூலமாக, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பொனீசிய, கிரேக்க, உரோம நெடுங்கணக்குக்கு மூலமாகக் காட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளே துல்லியமாகப் படிக்கப் படாமல், ஊகங்களை அதிகங் கொண்டதாக இருக்கின்றன. அதே வேளையில் படிக்கப்படாத கல்வெட்டுகளும் நிறைய இருக்கின்றன. ஆகவே, சினாய், கானன் கல்வெட்டுக்கள் ஆழ்ந்து படிக்கப்படுமானால், தமிழில் இருந்து செமித்திய மொழிகள் பெற்றுக் கொண்ட தொடர்பு மேலும் வெளிவர வாய்ப்புண்டு என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது.
பல்வேறு வணிக, அரசத் தொடர்புகளை இந்நாடுகள் தமிழகத்துடன் கொண்டிருந்ததற்கு சான்றுகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் சிலவற்றையேனும் இங்கு தொடர்ந்து காண முடியும்.
தமிழியின் இயல் பாதைகளும் பயணங்களும்
வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய உலகப்படம்
இந்த நிலப்படத்தில், தொன்மையான நாகரிகங்களின் முக்கிய இடங்களும், அவை தமிழோடு தொடர்பு கொள்ளக் கூடிய பாதைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. பாதை-1 என்பது தமிழர் வடநாடுகளோடு (இந்தியாவின் வடமாநிலங்களோடு) தொடர்பு கொண்ட மிக அடிப்படையான தக்கணப் பாதையாகும். இது தமிழ் நிலங்களை எல்லாம் ஒரு சரத்தில் கோர்க்கும் பாதையாகும். அது தகடூர் வழியாக மூவேந்தர் நிலத்தை நூற்றுவர் கன்னர் தலைநகரான படித்தானம், அசந்தா, எல்லோரா, அவந்தியின் தலைநகரான உஞ்சை , தொழுனை (யமுனை) ஆற்றங்கரையில் உள்ள கோசாம்பி வழியாக மகதத்தின் பாடலி/இராசகிருகத்தோடு சேர்க்கும் பாதையாகும். கி.மு.600 களில் இருந்து கி.பி.300 வரை தமிழருக்கு வணிகம் நடத்த உகந்த பாதையாக இருந்தது அதுவேயாகும். தமிழ் நிலத்தை வடபுலத்துடன் இணைக்கும் இந்தப் பாதை மூலமே முதல் தமிழ்ப் பரவல் நிகழ்ந்திருக்க வேண்டும். இந்தப் பாதையின் வழியாக மராட்டியத்தில் இருக்கும் சோப்பாராவையும் (இற்றை மும்பைக்கு அருகில் உள்ள துறைமுகம்), கூர்ச்சரத்தில் இருக்கும் பிருகுகச்சத்தையும் (நர்மதையாற்றின் கழிமுகத்தில் இருக்கும் பரூச்) எளிதில் அணுக முடியும். சோப்பாராவும், பிருகு கச்சமும் நூற்றுவர் கன்னரின் துறைமுகங்களாகும். கிரேக்கரின் “Periplus of the Erythrean Sea” என்ற நூலிற் பேசப்படும் துறைமுகங்களும் இவையேயாகும்.
பாதை-2 என்பது, வடபுலத்தில் சிந்துவெளியையும் வடமேற்கில் மெசபடோமியாவையும் இணைக்கும் நிலப்பாதையாகும். பாரசீக வளைகுடா வழியேயும் மெசபடோமியாவின் பாபிலோனை அடையலாம். (இது தான் பாபிரு என்று புத்த சாதகக் கதைகளில் சொல்லப்படுகிறது. பாபிலோனிற் கிடைத்த பல்வேறு ஆப்பெழுத்து முத்திரைகள் மேலகம் (Meluhha) என்றழைக்கப்பட்ட சிந்து சமவெளி பற்றிக் குறிப்பிடுகின்றன). பாபிலோனில் இருந்து பொனீசியக் கடற்கரை நகரங்களுக்குப் பொருள்கள் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகள்/நகரங்களுக்குப் பெருவணிகம் நடந்திருக்கிறது. சிந்துச் சமவெளி நாகரிகத்தையும் யூப்ரடீசு-டைகிரிசு பாயும் மெசபடோமிய நாகரிகத்தையும் இணைக்கும் பாரசீகக் கடல்வழியேயும் பெருவணிகம் நடந்திருக்கிறது. ஆயினும், கடலோடும் நுட்பம் முதிர்ச்சி அடைவதற்கும் முந்தைய நாகரிகம் கொண்ட இரு வெளிகளுக்குமான போக்குவரத்து நிலப்பாதை வழியாகவே முந்தி நடந்திருக்க வேண்டும். ஆகவே, தமிழியின் தொடர்பு மேற்காசியப் பகுதிகளுக்கு நிலவழியாகவே முதலில் நிகழ்ந்திருக்கலாம். திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பிராகி, குருக்கு போன்ற மொழிகள் பேசுவோர் பாக்கித்தான், பலுசித்தான் பகுதிகளில் இன்றும் இருக்கின்றார்கள். சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் படத்தமிழி எழுத்துகள் நிறைவாகப்படிக்கப்படாமல் இருப்பினும் பிராகி, குருக்கு போன்ற மொழிகளில் படத்தமிழியின் தாக்கம் இருக்கின்றது என்று அறிஞர்கள் உறுதியாகக் கருதுகின்றனர். தற்போதைய பிராகி வரிவடிவம் அரபியாக இருப்பினும் அந்த மொழி திராவிட மொழி என்பதில் உலகம் ஒத்துப் போகிறது. இம்மொழி பேசும் மக்கள் 40 இலக்கங்களுக்குள் இருந்தாலும் தமிழியின் பாதையில் இன்றும் பெரிய சான்றுகளாக நிற்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, இன்றைய ஈரான் பகுதியில், மெசபொடோமியாவின் கிழக்கே, கி.மு3200-1100 காலத்தில் இலாமித்துகளின் அரசு (Elamite Kingdom) அமைந்திருந்தது. அதன் தொடர்ச்சியும் கி.மு 6ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்கிறது. மெசபொடோமியாவிற்கு இணையாக, போட்டியான பேரரசாகவும் இது திகழ்ந்திருக்கிறது. சிந்துவெளிப் பகுதியில் இருந்து பாரசீக வளைகுடா வழியோ, நிலவழியாகவோ மெசபொடோமியாவிற்குச் சென்றால் இலாமித்து நாட்டைக் கடந்துதான் செல்ல முடியும். அப்படி முக்கியம் வாய்ந்த இலாமித்துகளின் இலாமித்து மொழியைத் தாங்கிய தொல்லியற் சான்றுகள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. ஆனால் இன்றுவரை அவை முழுமையாகப் படிக்கப் படாமல் இருக்கின்றன. ஆராய்ச்சியாளர்களின் தொடர்ந்த முயற்சிகள் மெல்ல முன்னேறுகின்றன என்று சொல்லலாம். டேவிட் மெக் ஆல்ப்பின் அவர்களின் மொழியாய்வு இலாமித்துகளின் மொழி இலாமோ-திராவிட மொழிக்குடும்பத்தைச் (Elamo-Dravidian) சார்ந்தது என்றும், “இலாமித்து வினைச்சொற்களும் திராவிட மொழிக்குடும்ப வினைச்சொற்களுக்கும் வேரில் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டு இருக்கின்றன” என்றும் நிறுவுகிறது.
அறிஞர் எலாக்கு (Hallock) உருவாக்கிய இலாமிய அகராதியில் இருந்து, அயற் சொற்களை நீக்கி, தூய இலாமித்துச் சொற்களாக 270 சொற்களை எடுத்து (அதில் வினைச்சொற்கள் பெரும்பகுதி), திராவிட வேர்ச்சொல் அகராதியில் உள்ள சொற்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், 25% சொற்களின் மூலம் ஒன்றே என்று நிறுவியிருக்கிறார் டேவிட் மெக் ஆல்ப்பின். மேலும் 12% சொற்களில் தொடர்பிருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் தென்திராவிட மொழிக்கும் மேற்காசிய இலாமித்து மொழிக்கும் இருக்கும் தொடர்பினைக் கண்டு வியக்கும் மெக் ஆல்ப்பின், “By training, I am a dravidianist linguist; very much aware of the horrendous errors that non-Dravidianists have made using Dravidian Materials (cf. the Scandinavions and Indus Valley scripts), I have tried to be very cautious on Elamite Materials.”, என்று சொல்வது பொருள் பொதிந்தது. இலாமித்து, அருகில் உள்ள மெசபடோமியாவின் ஆப்பெழுத்து (cuniform) வரிவடிவை ஏற்றிருந்தாலும், அதன் மொழி அமைப்பு மூன்றில் ஒரு பகுதிக்கும் மேல் தொல் தமிழ் மூலத்தைக் கொண்டிருப்பது, தமிழின் தாக்கம் வலுவாக இருக்குமளவிற்கான தொடர்பினைக் கொண்டிருந்ததையே காட்டுகிறது. மேலும், மேற்காசியப் பகுதிகளில் முக்கிய இடம் வகித்த இந்த நாடு, தமிழோடு கூடிய தொடர்பை மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிகளுக்குக் கொண்டுபோகும் முக்கிய இடமாக இருந்திருக்கிறது.
மெசபடோமிய பாபிலோன், இலாமிய சூசா, அன்சான் போன்ற நகரங்களில் இருந்தே, பாரசீக வளைகுடாவின் நீர்வழியாகவோ, சிந்து வெளிப் பகுதிகளில் இருந்து நிலவழியாகவோ போகும் பொருள்களை, சிரியா, பாலத்தீனம், பொனீசியா, பாமிரா(Palmyra) போன்ற பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் இடங்களாக இருந்திருக்கின்றன. இலாமித்து நெடுங்காலம் வலுவான நிலமாக இருந்திருந்தாலும், அதன் பழம்-இலாமியக் காலமான (கி.மு 2600-1500) மிகவும் குறிப்பிடத்தக்கக் காலமாகும். படத்தமிழியாக, அசைத்தமிழியாக செழித்திருந்த சிந்து சமவெளி நாகரிகம் ஓங்கியிருந்த காலம் கி.மு2500-1900 என்பர் அறிஞர்.
பொனீசியாவின் பிபிலோசு கல்வெட்டு எழுத்துகளின் காலம் கி.மு2000 என்று பார்த்தோம்; அவற்றில் பல பழந்தமிழ் எழுத்து வரிவடிவங்கள் காணப் படுகின்றன; அவற்றில் உள்ள உண்மைகள் தற்போது வெளிவராமல் இருக்கின்றன. பிபிலோசுக்கும் சிந்துவெளிக்கும் இடையில் உள்ள இலாமித்தின் பழம்-இலாமிய சொற்களில் 37% அளவுக்கு தமிழோடு மொழி ஒப்புமை இருக்கிறது; ஆனால், இலாமித்துக் கல்வெட்டுகளும் அதிகமாகக் கண்டுகொள்ளப் படாமல் இருக்கின்றன. இந்தப்புறம், சிந்துவெளி எழுத்துகளும் இன்னும் ஆய்வுகள் நிறைவடையாமல் இருக்கின்றன. இப்படி, சம காலத்தில் ஓங்கி இருந்த மூன்று முக்கிய இடங்களின் தொல்பொருள்கள் ஆயப்படாமல், எகிப்திய, பாபிலோனிய எழுத்துகள் மட்டுமே முன்வைக்கப்பட்டு, கிரேக்க, உரோம, பொனீசிய எழுத்துகள் ஒன்றோடொன்று தொடர்புப் படுத்தப்பட்டு, அவை இந்தை-ஈரோப்பியம் என்ற பெயரில் சமற்கிருதத்தோடு தொடர்பு படுத்தப்பட்டு, ஒருசார்பு உடைய ஆய்வுகளாகப் போய்க் கொண்டிருக்கின்றன. மற்றவைகள் கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றன என்ற ஐயத்தை, இப்போக்கு வலுவாக ஏற்படுத்துகிறது.
தமிழெழுத்து படவுருக்களாகத் தொடங்கி, அசையுருக்களாக வளர்ச்சியடைந்து பின்னர் அகரவரிசை எழுத்துக்களாக மாறின என்பார் இரா.மதிவாணன். ஆண்ட்ரூ இராபின்சன் தனது நூலில், சிந்துவெளியை ஆராய்ந்த அறிஞர் எசு.ஆர்.இராவ் தனது நூலில்குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டி, சிந்துவெளி எழுத்துகளின் முகன்மையை பின்வருமாறு கூறுவார்.
“Rao postulates the eventual development of an even smaller set of signs, about 20 in all. Indeed, he assumes that the Indus script became alphabetic, and that it was the Indus Valley Civilization (or at least it’s successor culture) which invented the alphabet. Rao believes, it was then tramsmitted to Palestine in the mid 2nd Millenium B.C”.
எசு.ஆர்.இராவ் அவர்கள், சிந்துவெளி படவுருக்கள் எழுத்துகளாக வளர்ச்சியடைந்தன என்றும், அவ்வெழுத்துகள் பாலத்தீனத்திற்கு கி.மு-2000-1500 காலத்தில் சென்றன என்றும் கூறுவது மிக முகன்மையானது. பாலத்தீனமும், பொனீசியாவும் பக்கத்துப் பக்கத்து நாடுகள் ஆகும். படிக்கப்படாமல் இருக்கும் பொனீசிய பிபிலோசு கல்வெட்டில் தமிழி வடிவங்கள் இருக்கின்றன என்பதை நோக்கும்போதும், இலாமியத்தில் மொழி ஒப்புமையை நோக்கும்போதும், தமிழ் மொழியின் பரவலும் தாக்கமும் பொனீசியாவிலும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் சிந்துவெளி நாகரிகம் ஓங்கியிருந்த காலத்திலேயே, அதாவது கி.மு 2500-1900 காலத்திலேயே நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணவைக்கிறது. அவையே, பொனீசிய, கிரேக்க, உரோம நெடுங்கணக்குகளில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கக் கூடும். மேலுள்ள நிலப்படத்தில் உள்ள பாதை-2, தமிழ் எழுத்துகளை, மொழிக்கூறுகளை மேற்காசிய, நடுத்தரைக்கடற்பகுதிகளைச் சென்றடைய வைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
பாதை-3 என்பது, தமிழகத்துக்கும் மேலை உலகிற்கும் இடையிலான செங்கடற்பாதை ஆகும். கிரேக்கர்கள், பொனீசியர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள் உள்ளிட்ட நடுத்தரைக் கடலைச் சுற்றிய நாடுகள் அனைவரும் தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்த பாதை இதுவாகும். கி.மு 1000 ஆன சாலமன் காலத்தில் ஆப்பிரிக்காவைச் சுற்றி ஐரோப்பியர் இந்தியாவிற்கு வந்தனர் என்ற கருத்துகள் நிலவினாலும், பாரசீக நீர்ப்பாதையை அறிந்திருந்த மேலை உலகத்திற்கு, அரேபியர்களால் மிக அருகில் அணுகப்பட்ட இந்தியக் கடற்கரையையும் குறிப்பாக முசிறியையும் நன்கு தெரிந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது. இப்பாதை தமிழகத்தின் முசிறித் துறைமுகத்தையும் தென்பாண்டி நாட்டுத் துறைமுகங்களையும், தமிழீழத் துறைமுகங்களையும் இணைத்தது. தென்மேற்குப் பருவக் காற்றையும் வடகிழக்குப் பருவக் காற்றையும் அறிந்து கடலோடிய தமிழ் நிலங்களின் பரதவர்களையும் வணிகர்களையும் கண்டு மேலை உலகமும் இத்துறைமுகங்களைத் தேடி வணிகத்திற்கு வந்தது. முத்து, மணி, தங்கம் போன்றவை இந்திய உள்நாட்டு வணிகத்தையும், மிளகு, வெள்ளி, கார்ணலியன், செந்நீலச் சாயம் போன்ற பொருட்கள் வெளிநாட்டு வணிகத்திற்கும் தூண்டுகோல்களாய் அமைந்தன. மிகத் தொன்மையான இவ்வெளிநாட்டு வணிகப் பாதைக்கு, மேலை உலகம் மிகப் பிற்காலங்களில், அதாவது கி.மு 1ஆம் நூற்றாண்டு வாக்கில், இப்பலாசு பாதை/காற்று என்றும் பெயரிட்டுக் கொண்டது.
பொனீசியா வணிக வல்லரசாக கி.மு 1200-300 காலங்களில் திகழ்ந்தது. கி.மு 1500க்குப் பின்னர் எகிப்தின் ஆளுமை அந்தப் பகுதியில் வற்றத் தொடங்கியது. கி.மு 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த (கி.மு967) இசுரேலின் அரசன் சாலமன் மெசபடோமியாவிலிருந்து எகிப்து வரை ஆண்ட பேரரசனாக இருந்திருக்கிறான். பொனிசீயாவும் இசுரேலும் வணிகப் பங்காளர்களாகவும், நேயநாடுகளாகவும் இருந்திருக்கின்றன. நடுத்தரைக் கடற் பகுதிகளில், தொலைதூரக் கடலோடும் நுட்பத்தை வளர்த்தவர்கள் பொனீசியர்களாகும். கிரேக்கர்கள், பொனீசியர்களிடம் கடன்பெற்றவைகளில் முக்கியமானவையாக இரண்டு செய்திகளை உலகம் சொல்கிறது:
ஒன்று, பொனீசியர்களின் எழுத்துகள்,
மற்றொன்று தொலைதூரக் கடலோட்ட நுட்பம்.
பொனீசியர்கள் இந்தக் கடலோடும் நுட்பத்தை எங்கிருந்து பெற்றார்கள் என்பது தனியே ஆயப்படவேண்டியதாகும். பொனீசியர்கள், யூதர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள், கிரேக்க-உரோமர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு வந்தது, பொனீசியர்கள் அந்தப் பகுதியில் வளர்த்து விட்ட “தொலைதூரக் கடலோடும் நுட்பத்தைக்” கைக்கொண்டேயாகும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
மேற்கண்ட 3 கருத்துகளுக்கும்(ஈழம்-முசுலீம்), மேலையெழுத்தும் தமிழெழுத்தும் தொடர்பான கட்டுரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வேறு ஏதோ கட்டுரைக்கு வந்த மறுமொழிகள் இதில் சேர்ந்திருக்கக் கூடும்.
அய்யா,தங்கள் ஆய்வு மிகவும் பாராட்டத்தக்கது.விவிலியம் பழைய ஏற்பாட்டில் வரும் சாலமன் பற்றிய ஆவணங்களிற் குறிப்பிடப்படும் ஓபிர் (ஓப்ஹிர்) என்ற இடம் எதுவாக இருக்கலாம் என்று தாங்கள் தெரிவிக்கவில்லையே!
ஓர் இனத்தையே அடையாளம் தெரியாமல் முற்றிலும் கண்மூடித்தனமாக அழித்து விட்டு, கொஞ்சம்கூட மனசாட்சியின்றி சொல்லுகிறார் ராஜபக்சே. The Largest Humanitarian Rescue Operation in Human History – மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களைக் காக்கும் மகத்தான நடவடிக்கையை ராஜபக்சே மேற்கொண்டாராம். இத்தகைய கொடூரர்களை நம்பி தமிழ் மக்களை மறுபடியும் ஒப்படைக்க முடியுமா? 180 நாட்களில் முகாம்களில் உள்ளவர்களைக் குடியமர்த்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்தாரே – மூன்று ஆண்டுகள் ஆகியும் முடிக்கவில்லையே!
“நான் தமிழனல்ல. முஸ்லீம். புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவர்கள் வேறு ஆட்கள். அவர்கள் சுதந்திரத்திற்காக அவர்கள்தான் போராடுகிறார்கள். நாங்கள் போராடவில்லை” என்பதை சிங்கள ராணுவத்திற்கும் அரசிற்கும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் புலிகளினால் அதிகமான கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதனால் தங்களைத் தனிச் சமூகமாகக் காட்டிக்கொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். புலிகளின் மீதான வெறுப்பை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. மத அடையாளத்தைக் காட்டிக்கொண்டு தங்களின் உயிரையும் சொத்தையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இனப்பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பெல்லாம் பெண்கள் வெளியில் செல்லும்போது ஃபுர்கா அணிந்து செல்லமாட்டார்களாம். ஆனால் இப்பாதெல்லாம் ஃபுர்கா அணியாமல் முஸ்லீம் பெண்கள் வெளியில் செல்வதே இல்லை. அதனால் தனி ஒரு இனமாகக் காட்டிக் கொள்கிறார்கள். வீட்டிற்குள் இருக்கும்போது எப்படியிருந்தாலும் வெளியில் வரும்போது முஸ்லீம் என்ற அடையாளத்துடன்தான் வருகிறார்கள். “தமிழர்களல்ல நாங்கள். முஸ்லீம்கள்” என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் தாய்மொழி தமிழ்தான். “புலிகள்மீது எங்களுக்குச் சிறிதளவும் நம்பிக்கையில்லை. அவர்களிமிடருந்து தனித்து நிற்கவே விரும்புகிறோம்” என்பதே அவர்கள் நிலை.