மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவியலின் தத்துவம்- தொடர்ச்சி

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Aug 23, 2014

லாகடாஸ் (Lakatos)

                 ariviyal1பாப்பர் விளக்கிய முறையிலிருந்து வேறுவழியில் அறிவியல் அறிவின் முன்னேற்றத்தைக் கூன் விளக்கியதை முன்பு பார்த்தோம். இவர்கள் இருவரின் இருவேறுபட்ட பார்வைகளையும் ஒன்றிணைக்கும் முயற்சி இம்ரேலாகடாஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. கூனின் அறிவியல் சட்டகம் என்ற கருத்திற்கு பதிலாகத் தமது முன்னோக்கி நிகழும் அறிவியல் திட்டம் என்ற கருத்தாக்கத்தினால் இரண் டையும் இணைக்க முயன்றார் அவர்.

      தவறாக்கல் என்ற முறையினைப் பற்றிப் பாப்பர் கூறியதை முன்னர்க் கண்டோம். கூன் அதனை இலட்சியவாதமாகக் கருதினார், அறிவியலின் வரலாறு இயல்நெறி முறையில் செல்கிறது, அதில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் சோதனைகளும் கொள்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். சில சமயங்களில் இம்மாதிரி ஆதிக்கத்திலிருக்கும் சட்டகம் தலைகீழாக்கவும் படுகிறது. அப்படிப்பட்ட சட்டகப் பெயர்ச்சி நிகழ்ந்தாலும் அது பகுத்தறிவினால் மட்டும் நிகழ்வதில்லை என்றார் கூன்.

                இந்த இரு பார்வைகளுக்கும் இடையில் அமைகிறது லாகடாஸின் கருத்து. காலப்போக்கில் ஒரு பொதுவான திடக் கருத்துநிலைப்பாட்டின் அடிப்படையில் சிறிதளவு மாறுபட்ட கோட்பாடுகளும், சோதனைமுறைகளும் மாறிவருகின்றன. இந்தக் கருத்துநிலைப்பாட்டிற்கு லாகடாஸ் அறிவியல் ஆய்வுத் திட்டம் என்று பெயரிட்டார். ஓர் அறிவியல் ஆய்வுத்திட்டத்திற்குள் பணிபுரியும் அறிவியலாளர்கள், தங்கள் பொதுக் கருத்தாக்கத்தினைத் துணைக்கருதுகோள்களின் தொகுதி ஒன்றினால் தவறாக்கலிலிருந்து தடுக்க முற்படுகிறார்கள். ஒரு குறித்த உலகக் கருத்து மெய்யா பொய்யா என்பதற்கு பதிலாக அது முற்போக்கானதா, சீர்கெடக்கூடியதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. முன்னோக்கி நிகழும் கருத்துத் திட்டமாக இருந்தால், அந்தக் காலத்தில் அறிவியல் வளர்ச்சி, புதுமைகள் கண்டுபிடிப்பு, துல்லியமான கணிப்புகள் ஆகியவை நிகழ்கின்றன. சீர்கெடக்கூடிய கருத்துத்திட்டமாக இருந்தால், வளர்ச்சியின்மை, புதுமைகள் கண்டுபிடிக்கமுடியாமை ஆகியவை நிகழ்கின்றன.

             லாகடாஸின் அறிவியல் திட்டம் என்ற கருத்து பாப்பரின் கருத்தினை மேலும் துல்லியப்படுத்துவதாக அமைந்தது, இதற்கு அவர் பாப்பரின் மாணவர் என்பதும் ஒரு காரணம். ஆனால் கூனின் கருத்திலிருந்து மிகவும் வேறுபட்டது இது. சட்டகம் என்ற கருத்துக்கு பதிலாக, திடமான கருத்தை மையமாகக் கொண்ட ஆய்வுத்திட்டம், துணைக்கருதுகோள்களின் தொகுதி போன்ற கருத்துகளை முன்வைத்தார் லாகடாஸ். இது பகுத்தறிவுக்கு ஒத்த செயல்முறையைக் கூறுவதாக அமைந்தது. சட்டகப் பெயர்ச்சி ஏற்படும்போது, ஒரு சீர்கெடக்கூடிய கருத்துத் திட்டத்திலிருந்து முற்போக் கான திட்டத்திற்கு மாறுவதாகவே உள்ளது. எனவே கூன் கூறியதுபோல அது பகுத்தறிவுக்கு மாறானதன்று, பகுத்தறிவுக்கு ஒத்ததே என்று வாதிடுகிறார் லாகடாஸ்.

                பாப்பர் போலவே கூன் போலவோ லாகடாஸ் பிரசித்தி பெறவில்லை. ஆனால் அவர் கருத்துகள் பாப்பரின் கருத்துகளை மேலும் நுண்மைப் படுத்துவ தாகவும், கூனின் கருத்துகளை விட ஏற்புடையனவாகவும் அறிவுக்கு ஒத்தவையாகவும் அமைந்தன.

                ஆனால் இவரது கருத்துகளை மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்தவர் ஃபெயரபெண்ட்.

ஃபெயரபெண்ட்:

                ariviyal2ஆஸ்திரியத் தத்துவவியலாளரான ஃபெயரபெண்டும் பாப்பரிடம் கற்றவர்தான். முறையியலுக்கு எதிராக (அகெய்ன்ஸ்ட் மெதாட்) என்ற அவரது நூலில் அவருடைய முக்கியமான கருத்துகளைக் காணலாம். சுருக்கமாக இங்கு அவற்றைக் காண்போம்.

1, தவறாக்கல் என்ற பாப்பரின் கருத்தைக் கூன், லாகடாஸ் இருவரும் ஏற்பது போலவே ஃபெயர பெண்டும் எதிர்க்கிறார். எந்தக் கோட்பாடும் எந்த ஒரு காலத்திலும் எல்லா ஏற்புடைய மெய்ம்மைகளுக்கும் இசைந்திருப்பதில்லை. அவ்வக் காலத்தில் ஆதிக்கம் பெற்றிருக்கக்கூடிய சட்டகத்தினைக் காப்பாற்ற அவ்வப்போதான கொள்கைகளைப் பயன்படுத்துவது அறிவியல் முன்னேற்றத்திற்கு அவசியம். ஆனால் அவ்வப்போதான கருத்துகளை (இவை பின்னர்தான் கொள்கையினால் நியாயப் படுத்தப்படுகின்றன) அறிவியலாளர்கள் பயன்படுத்தும்போது அவர்கள் அறிவியல் முறையிலிருந்து முற்றிலும் விலகிப்போகிறார்கள். ஃபெயரபெண்ட் கருத்தின்படி, இம்மாதிரி தற்காலிகக் கருத்துகள், அறிவியல் ஆய்வில் மையமான இடத்தை வகிக்கின்றன. காணும் மெய்ம்மைகளுக்கு ஒத்துச்செல்லக்கூடிய தற்காலிகமான ஒரு புதிய கொள்கையை அவை உருவாக்குகின்றன. பின்னர் அந்தக் கொள்கை, பிற கொள்கைகளால் ஆதரிக்கப்பட்டு நிலைபேறு அடைகிறது.

2. சட்டகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை, ஆதிக்கத்திலுள்ள சட்டகம், காணக் கூடிய நிகழ்வுகளை விளக்குவதில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்ற கூனின் கருத்தை ஃபெயரபெண்ட் ஏற்கிறார். சட்டக மாதிரியில், ஆதிக்கச் சட்டகம், புதிதாக வரும் கொள்கையை நெறிக்கவும் செய்கிறது. உற்று நோக்கல்களுக்கு ஒத்துச் செல்வதோடு அல்லாமல், பழைய கொள்கையுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிய கொள்கை ஒத்துச்செல்லவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

3. மேற்கண்ட இரு கருத்துகளையும் இணைத்து, அறிவியலாளர்கள் பயன்படுத்தும் ஒரேவித முறையியல் விதிகளால் அறிவியலின் முன்னேற்றத்தை நோக்குவது சாத்தியமற்றது என்கிறார் ஃயெரபெண்ட். அப்படிப்பட்ட அறிவியல் முறை, அறிவியலாளர்களின் செயல்பாட்டை எல்லைக்குட்படுத்தி, அறிவியல் முன்னேற்றத்தையும் தடுக்கும் என்கிறார். பொதுவான, வரையறுக்கப்பட்ட விதிகளின்படி செயல்படுவதைக் கைவிடவேண்டும். ஏற்கெனவே உள்ள விதிகளை உடைக்கக்கூடிய அவ்வப்போதைய கருத்துகளினால்தான் அறிவியல் முன்னேற்றம் நிகழ்கிறது. எல்லாக் கருத்துகளின் உருவாக்கமும் இப்படித்தான் நிகழும் என்ற ஃபெயரபெண்டின் பார்வை, அறிவியல் அராஜகம் எனப்படுகிறது.

4. அறிவியல் அராஜகம் என்ற நோக்கு, ஃபெயரபெண்டின் முக்கியப் பங்களிப்பு. அதேசமயம், அறிவியலுக்கும், சமூகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியும் அவர் பேசுகிறார். உலகளாவிய (யாவருக்கும் பொதுவான) ஒற்றை அறிவியல்முறை என்பது கிடையாது என்பதிலிருந்து தொடங்குகிறார், மேற்கத்திய சமூகத்தில் அறிவியல் பெற்றிருக்கும் மிக உயர்ந்த அந்தஸ்தினைப் பெறுவதற்கு அது தகுதியுடையது அல்ல என்ற நிலைப்பாட்டுக்குச் செல்கிறார். உலகளாவிய முறையன்றிலிருந்து எழுபவை அல்ல என்பதால் அறிவியல் நோக்குகள் உயர்தரமான முடிவுகள் என்று கூற முடியாது, ஆகவே அறிவியலைப் பிற மானிடவியல்களுக்கு மேலாகவோ, மதத்திற்கு உயர்வாகவோ கூற இயலாது. சோதிடம், மாற்றுமருத்துவம் போன்றவை பற்றி அறிவியலாளர்கள் மிகக் கீழான அபிப்பிராயம் வைத்திருப்பது சரியன்று. சமூகத்தில் விடுதலைக்கான இயக்கமாகச் செயல்படுவதற்கு மாறாக, ஒடுக்குமுறைக்கான கருத்திய லாக அறிவியல் பல சமயங்களில் செயல்படுகிறது. எனவே பன்மைத்தன்மை வாய்ந்த ஒரு சமூகத்தில் பிற கருத்தியல்களிலிருந்து அறிவியலுக்குப் பாதுகாப்பளித்து அறிவியலை மிக உயர்வான ஒரு துறையாக ஆக்கக்கூடாது.

                இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுகளில், ஃபெயரபெண்ட் கூறிய பன்மைவாதக் கருத்து-அதாவது உண்மையின்மீது அறிவியலுக்கு ஒற்றை அதிகாரம் இல்லை, சமூகத்தில் அதன் அதிகாரமிகுந்த அந்தஸ்து கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்-என்பது, மிக முக்கியமான அடிப்படை நோக்காக ஏற்கப் பட்டுள்ளது.

                ஃபெயரபெண்டின் கருத்து, தீவிரமானது, ஆர்வத்தைத் தூண்டக்கூடியது என்று பிற அறிவியல் தத்துவவாதிகள் கருதுகிறார்கள். அவருடைய கருத்துகள் தீவிரமான விமரிசனத்துக்கும் ஆளாகியுள்ளன. சான்றாக, அறிவியலையும் மதம் போன்றவற்றையும் ஒரே தட்டில் வைத்து நோக்குவது சரியன்று என்று பலர் கூறுகிறார்கள். அறிவியல், சோதனைகள் வாயிலான சான்றுகள் கிடைக்கும்போது தன் கருத்தை மாற்றிக்கொள்வதுபோல, மதம் செய்வதில்லை. உற்றுநோக்கலுக்கு முரண் பாடான கருத்துகளை அறிவியல் வைத்திருந்தால் அது காலத்தில் நிலைப்பதில்லை.

                கலீலியோவின் வாழ்க்கைச் சான்றையும் அறிவியலையும் ஃயெரபெண்ட் மிகுதியாகப் பயன்படுத்துகிறார் என்பது அறிவியல் வரலாற்றாசிரியர்களின் மற்றொரு குற்றச்சாட்டு. தனது கால அறிவியலுக்கு எதிராகப் புரட்சி செய்தவராக மீண்டும் மீண்டும் கலிலியோ காட்டப்படுகிறார். இன்று நாம் கையாளும் அறிவியல் முறை என்பது கலிலியோவின் காலத்துக்குப் பிறகு உருவான ஒன்று. தொலைநோக்கி, நுண்ணோக்கி போன்ற ஏராளமான அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்பு இன்றைய அறிவியல்முறை உருவாக வழிவகுத்துள்ளது. எனவே கலிலியோவை மட்டுமே சான்றுக்கழைப்பது ஏற்கத்தக்கதன்று.

                அசாதாரணமான ஆய்வுமுடிவுக்கு வர அசாதாரணமான சான்றுகள் தேவை. ஃபெயரபெண்டின் அசாதாரணமான முடிவுகளுக்கு ஏற்ற அசாதாரணமான சான்றுகள் அவரால் அளிக்கப்படவில்லை என்பது இன்னொரு விமரிசனம். அவர் காட்டும் சில சான்றுகள் அறிவியலாளர்களால் சரியானவை என ஏற்கப்படுவதில்லை. உதாரணமாக, கலீலியோவுக்கு முரண்படுவதால், நியூட்டனின் புவிஈர்ப்பு வேகமுடுக்கக் கொள்கை புரட்சிகரமானது என்கிறார் ஃபெயரபெண்ட். இது தவறானது. பூமிக்கு அருகிலுள்ள ஒரு பொருளைப் பொறுத்தவரை, கலீலியோவின் கொள்கைக்கு நியூட்டனின் கொள்கை முரண்படவில்லை.

                பொதுவாக, அறிவியலின் வரலாற்றில் காணப்படும் தனிப்பட்ட சான்று களிலிருந்து (கேஸ்-ஸ்டடிகளிலிருந்து) தத்துவவாதிகள் பொதுவான முடிவுகளுக்கு வருகிறார்கள். இது தத்துவத்தன் இலட்சியத்துக்கு உகந்தது அன்று, மேலும் கையாளப்படும் சான்றுகள் கேள்விக்குரியவையாக இருந்தால், சிக்கலுக்கு இடங் கொடுப்பவையும் ஆகும்.

                அறிவியலின் தனியாதிக்கம் பற்றிய ஃபெயரபெண்டின் விமரிசனம், மிக முக்கியமானது என்று கருதப்படுகிறது. சமூகத்தில் அறிவியலின் பயன்பாடு எல்லாச் சமயங்களிலுமே பயன்தருவதாக இருந்ததில்லை என்பதைக் கணிக்கின்ற பல ஆய்வுகளுக்கு இக்கொள்கை இட்டுச் சென்றுள்ளது. போர்க்கருவிகளின் உருவாக்கம், பயன் பாடு போன்றவை மட்டுமின்றி, மக்கள் தொகுதியின்மீது தேவையற்ற, சற்றும் பிரசித்த மற்ற, பயனற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவும் அறிவியலின் ஆதிக்கம் காரணமாக அமைந்துள்ளது என்பதைப் பல ஆய்வுகள் காட்டியுள்ளன. (நமக்கு மிகவும் நெருக்கமான சான்றாக, இந்திய அறிவியலாளர்கள், அரசாங்கத்தின் சார்பாக, கூடங்குளம் அணுமின்திட்டத்தை ஆதரித்ததைக் கூறமுடியும். அறிவியலின் பலமான ஒற்றை அதிகாரத்தைக் கூடங்குளம் திட்டம் காட்டுகிறது.)

லாத்தூ(ர்)

            ariviyal3 ஃபெயரபெண்டிற்குப் பிறகு இன்று மிகப் பிரபலமாக விளங்கும் அறிவியல் தத்துவவாதி மற்றும் வரலாற்றாசிரியர், ப்ரூனோ லாத்தூ(ர்) (Bruno Latour). ஆய்வக வாழ்க்கை: அறிவியல் மெய்ம்மைகளின் கட்டமைப்பு என்பது அவருடைய முக்கிய மான நூல். ஸ்டீவ் உல்கர் என்பவர் இதன் உடனாசிரியர். அறிவியல் ஆய்வகச் செயல்முறை என்பது எழுத்துப்பதிவு முறை. அதாவது எல்லாவித அளவீடுகளும் எழுத்துருவில் பதிவுசெய்யப்படுகின்றன. அவை எவருக்கும் அளிக்கப்பட முடியும். இவற்றின் அளவீடுகள் நேரடியாக வாதிக்கப்படுவதில்லை, அவற்றின் பிரதிநிதிகளான வரைபடங்கள், ஆவணங்கள் போன்றவற்றினாலே மட்டுமே வாதிக்கப்படுகின்றன. மேலும் ஜாக்கிரதையான சோதனைகளின் விளைவாகவே கோட்பாடுகள் உருவாக் கப்படுகின்றன அல்லது அழிகின்றன என்னும் அறிவியல் முறை பற்றிய பொதுப் புரிந்துகொள்ளலுக்கு ஆய்வகச் செயல்முறைகள் இடமளிப்பதில்லை. ஆய்வகச் சோதனைகள் பெரும்பாலும் சரியான முடிவுக்கு வருவதற்கு இடம் தராத தரவு களைத்தான் தருகின்றன. அவை தரும் தரவுகளில் எவற்றை வைத்துக்கொள்வது, எவற்றை விட்டுவிடுவது என்பது பெரும்பாலும் அகவயமான முடிவே ஆகும். எனவே ஆய்வக ஆராய்ச்சிகள் மெய்ம்மைகளை வெளிப்படுத்துவதற்கு மாறாக, அவற்றைச் செயற்கையாகக் கட்டமைக்கின்றன அல்லது உருவாக்குகின்றன.

                ஆய்வகத்தில் பயன்படும் பொருள்கள், கருவிகள், அவற்றில் செயல்படுவோர், ஆய்வகத்தில் பணியாற்றும் அறிவியலாளர்கள் எல்லாவற்றையும், எல்லோரையும் செயல்புரிவோர் (ஆக்டர்) என்று லாத்தூகூறுகிறார். இவர்களுடைய வலைப்பின்னல்தான், ஆய்வகம் தரும் மெய்ம்மைகளைக் கட்டமைக்கிறது.

                சமூகமே சில மெய்ம்மைகளைக் கட்டமைக்கிறது என்பது யாவருக்கும் தெரியும். உதாரணமாகப் பணம். பணம் என்பது வெறும் காகிதம், நம் நாட்டு எல்லைக்கு அப்பால் சென்றால் அதற்கு எவ்வித மதிப்புமில்லை, சர்வதேசப் பரிமாற்றங்களில் காகிதப்பணம் பயனற்றது என்பது எல்லாருக்கும் தெரியும். இருப்பினும் அதன் பயன்பாடு கருதி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அதை உண்மையென ஏற்றுக் கொள்கிறோம். ஆகவே பணம் என்பது சமூகம் கட்டமைத்த ஒரு மெய்ம்மை. (மெய்யான மெய்ம்மை அல்ல). அதுபோலவே, ஐன்ஸ்டீனின் E = Mc2 என்ற கருத்தும் ஒரு கட்டமைக்கப்பட்ட மெய்ம்மையே. அது இயற்கையின் உண்மையன்று. ஓர் அழகான கட்டடம் எப்படி வடிவமைக்கப்பட்டதோ, ஓர் இசையமைப்பாளரின் இசை எப்படிக் கட்டமைக்கப்பட்டதோ, அது போலவே அறிவியல் மெய்ம்மைகளும் கட்டமைக்கப்பட்டவையே என்பது லாத்தூரின் கருத்து.

                அறிவியல் மெய்ம்மைவாதத்திற்கு (Scientific realism–அறிவியல், இயற்கையின் உண்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துகிறது என்ற நோக்குக்கு) லாத்தூரின் கட்டமைப்புவாதம் எதிரானதாக உள்ளது. பொதுவாக அறிவியலாளர்களும், அறிவியல் தத்துவவாதிகளும் இதை ஏற்றுக்கொண்டாலும், சில சான்றுகளுக்கு இதனை நேரடியாகப் பயன்படுத்த இயலாது. உதாரணமாக அணுக்கதிர்வீச்சு என்பது கட்டமைக்கப்பட்ட மெய்ம்மை மட்டுமே, உண்மையன்று என்று வாதிடுவது மிகவும் கடினம்.

                1976இல் பிரெஞ்சு அறிவியலாளர்கள், எகிப்திய ஃபாரோ அரசன் ராமீசஸ் மிமிஇன் பாதுகாக்கப்பட்ட சவத்தை (மம்மியை) ஆராய்ந்தபோது, அவன் காசநோயால் இறந்தான் என்று கண்டுபிடித்தார்கள். எகிப்திய ஃபாரோக்களின் காலத்தில், காச நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்படவில்லை, ஆகவே அந்த மன்னன் காசநோயால் இறந்திருக்க இயலாது என்ற லாத்தூரின் கருத்து கடும் விமரிசனத்துக்குள்ளாகியது. எல்லா மெய்ம்மைகளுமே கட்டமைக்கப்பட்டவை என்ற பின்நவீனத்துவக் கொள்கையை லாத்தூரின் கொள்கை ஒத்துள்ளது. சான்றாக ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கின்மீது அமெரிக்கா படையெடுத்துப் போரிட்டபோது ஏவுகணைகள் வீசப்பட் டதையும், கச்சாஎண்ணெய் சிதறிக் கடலில் கலந்து, அதிலிருந்த உயிரினங்கள் மடிந்ததையும் நாம் ஊடகங்களின் ஒளிபரப்பில் காணமுடிந்தது. நம் காலத்தில், நம் கண்ணெதிரே நிகழ்ந்த இந்தப் போரே அமெரிக்க ஊடகங்கள் கட்டமைத்த ஒன்று, அது உண்மையாக நடந்ததல்ல என்றார், பின்நவீனத்துவத் தத்துவவாதியான பூத்ரியார்!


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவியலின் தத்துவம்- தொடர்ச்சி”

அதிகம் படித்தது