மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அன்புடை நெஞ்சங்களில் நிகழும் மாறுதல்கள்

தேமொழி

Oct 4, 2014

காதல் நோயின் அறிகுறிகள்:

காதல் அணுக்கள்

உடம்பில் எத்தனை

நியூட்ரான் எலெக்ட்ரான்

உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை

உன்னை நினைத்தால்

திசுக்கள் தோறும் ஆசைச் சிந்தனை

ஐய்யோ

[- கவிஞர் வைரமுத்து, படம்: எந்திரன்]

என்று காதலில் விழுந்த இக்காலக் காதலன் புலம்புகிறான்.

சங்ககாலத்தில் தலைவியைச் சந்தித்துவிட்டு வரும் தலைவனிடம் தோன்றிய மாறுதல்களைக் கண்ட அவனது தோழன் அந்த மாற்றத்திற்குக் காரணம் கேட்கிறான். ஏன் என்னதான் நேர்ந்தது உனக்கு என்று கேட்டு வியப்படைகிறான்.   மலைச்சாரலில் தினைப்புனத்தில் குருவியோட்டிக் கொண்டிருந்த காதலியின் அழகில் மயங்கி எனக்கு காமநோய் ஏற்பட்டது என்று கூறி கீழ் வருமாறு பாடுகிறான் தலைவன் …

பூவொத் தலமருந் தகைய வேவொத்

தெல்லாரு மறிய நோய்செய் தனவே

தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்

பரீஇ வித்திய வேன்ற்

குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே.

[குறுந்தொகை 72, மள்ளனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது]

(கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் …)

பருத்தியை விதைத்த தினைமுதிர்ந்த புனத்தில் அத்தினையை உண்ணவரும் குருவியினங்களை ஓட்டுகின்றவளும், இனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோளினையும் உடைய என்னுடைய காதலியின் பெரிய குளிர்ச்சியையுடைய கண்கள் பூவினை அழகில் ஒத்துச் சுழலுந் தன்மையை உடையன. இருப்பினும், அவை கொடிய அம்பினைப் போன்றவை. உன்னைப் போன்ற அனைவரும் என்னிடம் ஏற்பட்ட மாறுதலை அறியும்படி எனக்குத் (நோய்) துன்பத்தை உண்டாக்கின எனது காதலியின் கண்கள் என்கிறான் தலைவன்.

தலைவன் மட்டும் இவ்வாறு காதலில் விழுந்து காதல் நோயால் பீடிக்கப்படுவதிலை. காதலியின் நிலையும் காதல் நோய் தாக்கினால் அவ்வாறே. தலைவியிடம் தோன்றிய மாறுதல்களுக்குக் காரணம் கேட்கும் தோழியிடம், தலைவனைப் பிரிந்ததை தாளமுடியாமல் என் உள்ளம் வருந்துகிறது, என் கண்களும் அழகிழந்து பசலையை அடைந்துவிட்டது என்று சொல்கிறாள் தலைவி …

மாசறக் கழீஇய யானை போலப்

பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்

பைத லொருதலைச் சேக்கு நாடன்

நோய்தந் தனனே தோழி

பசலை யார்ந்தன குவளையங் கண்ணே.

[குறுந்தொகை 13, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது]

(கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் …)

தோழி, (மேலே படிந்த புழுதி முற்றிலும் நீங்குமாறு பாகனால் நன்கு கழுவப்பட்ட யானையைப் போல, பெரும் மழை பொழிந்ததால் தூய்மை அடைந்திருந்த கடினமான கற்பாறையையினாலான குன்றுகள் உள்ள மலை நாட்டில் என்னைச் சேர்ந்த) என்னுடைய தலைவன் எனக்கு காம நோயைத் தந்தான். அதனால், முன்பு நீல வண்ண குவளை மலரைப் போன்று இருந்த என்னுடைய அழகிய கண்கள், இப்பொழுது பசலை நிறம் படர்ந்து காணப்படுகின்றன.

காதலில் ஒன்று கலந்த அன்புடை நெஞ்சங்களை வருத்தும் காதல் நோய் அல்லது காமநோய் ஏற்படுவதன் அறிவியல் பின்னணி என்ன என இனிக் காண்போம்.

anbudai1நம் உணர்வுகளுக்கு மூல காரணமாக இருப்பது மனம் அல்லது நெஞ்சம் என்று நாம் நமது நெஞ்சைக் காட்டிப் பேச்சு வழக்கில் சொன்னாலும், உண்மையில் அது சிந்தையையும் செயலையும் கட்டுப்படுத்தி நம்மை வழிப்படுத்தும் மூளையின் செயல்பாடு ஆகும் என்பதையும் நாம் அறிவோம். காதல், காமம், அன்பு ஆகியவற்றிற்கும் மூளைக்கும் உள்ள தொடர்புக்கும், அது அன்புள்ளங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் அறிவியல் பின்னணி உள்ளது.

காதலில் வீழ்வது உடலில் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது. பலருக்கு அது இதயத் துடிப்பை அதிகரிக்கும். வயிற்றைப் பிசைவது போன்ற வேதனையை ஏற்படுத்துவதாகவும், வயிற்றில் வண்ணத்துப் பூச்சிகள் பல சிறகடிப்பது போல உணர்வு ஏற்றப்படுவதாவும் தோன்றும். ஒரு நிமிடம் போதை கலந்த மகிழ்ச்சியையும், மறுகணம் ஆற்றொண்ணா கவலையையும் உணர்வதாகவும் அமையும். இந்த உணர்வுகளுக்குக் காரணம் மூளை.

Stony Brook, NY; Stony Brook University: Arthur Aron, Ph.D., Psychology Dept.ஆய்வு ஒன்றில் ஒரு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் காலம் வரை தீவிரமாக காதலில் மூழ்கி இருந்தவர்களிடம் ஆய்வு செய்த பொழுது, அவர்களிடம் அவர்களது காதல் துணையின் படத்தையும், அந்த துணையின் சாயலை ஒத்த மற்றொருவரின் படமும் காண்பிக்கப்பட்டது. அவர்களிடம் ஏற்படும் மாறுதல்கள் காந்த அதிர்வலை சோதனைப் படங்களில் (Magnetic Resonance Images/MRI) பதிவு செய்யப்பட்டது. தங்கள் காதல் துணையின் படத்தை பார்ப்பவர்களுக்கு உணர்ச்சி தூண்டப்படுவது அந்தப்படங்களில் பதிவானது. பொதுவாக ஊக்குவித்தலும் வெகுமதியும் (motivation and reward) தூண்டிவிடும் உணர்வுகளை மூளையின் எப்பகுதி செயல்படுத்துகிறதோ, அப்பகுதியே காதல் உணர்வுகளைத் தூண்டிவிடும் இடமாகவும் அமைந்திருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது. போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு மூளையின் எப்பகுதி அவர்களின் செயல்முறைகளுக்கு அடிப்படையாக அமைகிறதோ அந்தப் பகுதியே உணர்வு மயமான காதலுக்கும் அடிப்படையாக அமைகிறது என்பதை இந்த ஆய்வின் அறிவியலாளர் ஆர்தர் ஏரான் (Arthur Aron, a psychologist at the State University of New York at Stony Brook) தெரிவித்தார். சுருக்கமாகக் கூறுவதென்றால் காதல் வயப்பட்டவர்கள் தங்கள் துணையை விரும்புவது போதைப்பொருளுக்கு அடிமையானவர் அப்பொருளை நாடிச் செல்வதற்கு ஒப்பானது.

மனித உணர்வுகளில் மிகவும் சக்திவாய்ந்தது காதல் உணர்வு. தனது துணையை அடைவதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று எண்ணும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. மூளையில் வெகுமதி வழி நடக்க வைக்கும் பகுதியே மகிழ்ச்சிக்கும் காரணமாக அமைவதால், அந்த வெகுமதியை அடையும் நோக்கில் வாழ்கைத்துணையை கவரும் நடவடிக்கைகளில் இறங்குவது மகிழ்ச்சியை அடைவதற்கான காதலர்களின் செய்கைகளாக மாறுகிறது.

காதல் ஏன் இந்தப் பாடு படுத்துகிறது என்று காதலர்களுக்குப் புரியாமல் இருக்கலாம், அல்லது அதைப்பற்றி ஆராயும் மனநிலையோ நேரமோ அவர்களுக்கு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நரம்பியல் வல்லுனர்கள் நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்களும், சில வேதிப் பொருட்களுமே காதல் உணர்வுகளுக்கான அறிவியல்சார் அடிப்படைக் காரணங்கள் எனக் கூறுகிறார்கள். குறிப்பாக ஆக்சிடோசின் (Oxytocin Hormone) என்பது அன்புப் பிணைப்பிற்கு அடிப்படையான ஹார்மோன். இது ‘காதல் ஹார்மோன்’ (love hormone) என்றும் அழைக்கப்படுகிறது. இன்பத்திற்கும், ஈர்ப்பிற்கும், கருத்து மாறா அதே சிந்தனைமுனைப்பும் ஏற்படக் காரணம் இந்த நாளமில்லாச் சுரப்பிகள் வெளியிடும் ஹார்மோன்களே. தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் இதே ஆக்சிடோசின் ஹார்மோன் வாழ்க்கைத் துணையுடன் காதல் உணர்வை வலுப்படுத்துவதிலும் துணை புரிகிறது. மூளையின் மகிழ்ச்சி உணர்வுக்குக் காரணமான பகுதியில் ஆக்சிடோசின் ஹார்மோனை ஏற்கும் ( oxytocin receptors) பல நரம்பு செல்கள் நிறைந்தது. காதல் உணர்வில் மூளையின் இந்தப் பகுதியில் இரத்தம் அதிகம் பாய்கிறது.

நரம்பியல் ஆய்வாளர்கள் காதலின் நிகழ்வை காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு என மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளனர். முதலில் உள்ள காம நிலையில் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கப்படும் பொழுது தீவிர ஆசை ஏற்படுகிறது. அட்ரீனலின், நார்எபிரெஃப்ரின் (Adrenaline and norepinephrine) ஹார்மோன்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கிறது, உள்ளங்கைகள் வேர்த்துப் போகிறது. டோப்பமைன் என்ற மூளையின் வேதிப்பொருள் அதிகரித்தது பரவச உணர்வு ஏற்படுகிறது.

வலியைக் குறைக்கும் மார்ஃபின் எனப்படும் ஓபியாய்ட் வகையைச் சார்ந்த டோப்பமைன் மூளையின் வேதிப்பொருள் பார்ப்பவையாவும் அழகு என்ற மயக்க நிலைக்கு எண்ணத்தை மாற்றுகிறது. ஒப்பியாய்ட் வலிநிவாரணிகள் தூண்டும் அதே மூளையின் பகுதியையே காதல் உணர்வும் தூண்டுகிறது. இப்பகுதியே ஒருவரை ‘விரும்பும்’ மனநிலைக்கும் காரணமான பகுதி. இதனால் தான் காணுபவரை தனது துணையாக, தன்னைக் கவர்ந்திழுப்பவராக எண்ணத் தூண்டும் மூளையின் இப்பகுதி தூண்டப்படுகிறது.

ஒருவரை ஒருவர் ஈர்த்து அந்த எண்ணமே மனதில் முழுவதும் நிலைத்துவிடும் நிலையில், மகிழ்ச்சிக்கான மையமாக விளங்கும் ‘நியூகிளியஸ் அக்கும்பன்ஸ்’ (the nucleus accumbens) என்ற மூளையின் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளை ஊக்குவித்தலும் வெகுமதியும் வழங்கும் வகையில் செயல்படத் தொடங்குகிறது. காந்த அதிர்வலை சோதனைப் படங்களின் வழியாக மூளையின் இப்பகுதியின் இந்த இரத்த ஓட்ட அதிகரிப்பது தெரியவருகிறது.

anbudai2டோப்பமைன் அளவு அதிகரிக்கும் அதே வேளையில் செரட்டோனின் (Serotonin) என்ற மூளையின் வேதிப்பொருளின் அளவும் குறைந்துவிடுகிறது. பொதுவாக ஒரு மனநிலையில் இருந்து விடுபட முடியாது செய்வதையே மீண்டும் மீண்டும் காரணமின்றிச் செய்து, மனத்தைக் கட்டுப்படுத்த இயலாத ‘மனதை அலைக்கழிக்கும் சீர்கேடுகள்’(obsessive-compulsive disorders) பாதிப்புள்ளவருக்கு செரட்டோனின் அளவு மூளையில் குறைவாக இருக்கும். இந்த செரட்டோனின் அளவின் குறைவே காதலின் ஆரம்ப கால நிலைகளில், ஒரே முனைப்பாக தங்கள் துணையை அடையும் எண்ணத்தை தோற்றுவிப்பதற்கும், தன்னை ஈர்த்தவரிடம் உள்ள குற்றம் குறைகள் அவர்கள் கண்ணுக்குப் படாது போவதும், கண்மூடித்தனமான காதலுக்கும் காரணமாகிறது. தங்கள் துணையின் நிறை மட்டுமே மனதை ஆக்கிரமிக்கும் இந்தக் காரணத்தினால் ‘காதலுக்கு கண்ணில்லை’ என்ற சொல்வழக்கு புழங்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

காதலில் தொடர்ந்த சில நாட்களுக்குப் பிறகு, உடல் இந்த வேதிப்பொருட்கள் விளைவிக்கும் மாற்றத்திற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையில் காம ஈர்ப்பின் அளவு குறைந்து, அது காதல் பிணைப்பாக மாறுகிறது. தொடர்ந்து சுரக்கும் ஆக்சிடோசின் மற்றும் ‘வாசோப்ரெசின்’( vasopressin) ஹார்மோன்கள் மூளையில் அமைதி, பாதுகாப்பு போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

anbudai3மேலும் இந்த உணர்வு காதல் துணையுடன் நீண்ட நாள் வாழ்வதால் குறைவதில்லை என்பதும் தெரிகிறது. முதலில் எழும் உணர்வுமயமான அல்லது காம இச்சை வழியில் துவங்கும் தொடர்பு பின்னர் உறவை உறுதிப்படுத்தும் அன்பு என்ற கோணத்தில் மாறுகிறது. இந்த மாறுதல் தனது துணையைப் பிரிய மனமில்லாத மனநிலைக்கு வழி வகுக்கிறது. மனித இனத்தில் தங்கள் குழந்தைகளை சேர்ந்து வளர்க்கும் சமூக அமைப்பு முறை இருப்பதற்கு இந்த அன்பால் இணைந்துவிடும் உறவு துணை செய்கிறது. காதல் உணர்வு மாறி அன்பு உணர்வு மேலோங்கும் வகையில் மூளையின் உணர்வின் செயல்பாடுகளில் மாறுதல் நிகழ்கிறது. தனது துணை தன்னை விட்டு நீங்கப் போவதில்லை என்ற எண்ணம் காம இச்சையில் கவனத்தை செலுத்துவதைக் குறைத்துவிடுகிறது.

பாசத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட நெகிழ்சியான அன்பு (Compassionate love) என்ற நிலையை அடைந்து உறவு தொடர்கிறது. உணர்சிக்காட்பட்ட காம இச்சை போன்ற நிலை (passionate love) பொதுவாக துணையை அடைந்த இரு ஆண்டுகளுக்குப் பின்னர் குறைந்துவிடுகிறது. காதல் துணைகளுக்கிடையேயான உறவு ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்ற நிலையைக் கடந்து, ஒருவருக்கொருவர் கொள்ளும் நம்பிக்கை அடிப்படையிலான அன்பு, பாசம் என்ற நிலையை அடைந்து தொடர்கிறது.

காதலில் மூழ்கிவிடுவதற்குக் காரணமாக மூளையின் செயல்பாடுகளையும் அது விளைவிக்கும் பற்றிப் பொருட்படுத்தாமல்தான்,

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.

காலம் காலமாக மக்கள் காதலில் விழுந்து வருகிறார்கள்.

___________________________________________________________________________

மேலும் தகவலுக்கு: -

5 Ways Love Affects the Brain, By Tanya Lewis

http://www.livescience.com/43395-ways-love-affects-the-brain.html

What Falling in Love Does to the Brain, Linda Thrasybule

http://www.livescience.com/18430-falling-love-brain.html

‘Romantic Love Is an Addiction,’ Researchers Say, Rachael Rettner

http://www.livescience.com/6695-romantic-love-addiction-researchers.html

Secret of love boils down to chemistry in new study

http://seattletimes.com/html/health/2008735005_brain12.html

The Experimental Generation of Interpersonal Closeness: A Procedure and Some Preliminary Findings, Aron et al., 1996, Personality and Social Psychology Bulletin, (363-377)

http://www.stafforini.com/txt/Aron%20et%20al%20-%20The%20experimental%20generation%20of%20interpersonal%20closeness.pdf

குறுந்தொகை 72, மள்ளனார் பாடல்

http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=72

குறுந்தொகை 13, கபிலர் பாடல்

http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=13

___________________________________________________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்புடை நெஞ்சங்களில் நிகழும் மாறுதல்கள்”

அதிகம் படித்தது