மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?

தேமொழி

Jul 18, 2015

americaavin2உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில வேண்டும் என்பது படிப்பில் முனைப்பாக இருக்கும் ஒவ்வொரு மாணவரின் கனவாக இருக்கும். தங்கள் பிள்ளைகளைப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பாத பெற்றோர்களும் இருப்பது அரிது. ஆனால், ஒரு கல்வி நிறுவனம் மிகவும் சிறந்ததாக இருப்பதால் சராசரி மதிப்பெண் பெற்ற மாணவருக்கு என்ன பயன், அவரது தகுதி அடிப்படையில் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் அவருக்கு எட்டாக் கனியாக இருக்கும். அந்த மாணவர், ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக தனது தகுதிக்கு ஏற்ற கல்வி நிறுவனத்தைத்தான் கணக்கில் கொள்ள முடியும். அதே போல, எம்.ஐ.டி ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக இருக்கலாம். ஆனால், தொழில்நுட்பக் கல்வி பயில விரும்பாத மாணவர் அங்கு சென்று பயில வேண்டும் என்று கனவு காண மாட்டார்.

மேலும், மிகப் பெரிய புகழ் பெற்ற சில கல்வி நிறுவனங்களில், பள்ளிகளில் முதல் மாணவர்களாகத் தேறிய மாணவர்களுக்கும் கூட இடம் கிடைக்காது. இதற்கு சில கல்வி நிறுவனங்கள் சமத்துவம் கடைப்பிடிக்கும் நோக்கில் பல்வேறு பின்புலம் உள்ள மாணவர்களையும் ஆதரிக்கும் நோக்கில், மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் கொள்கைகளைத் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ற வகையில் வகுத்துக் கொள்வது காரணமாகும். சமீப காலமாக ஆசிய நாட்டுப் பின்புலம் கொண்ட மாணவர்கள், குறிப்பாக சீன மற்றும் தெற்காசிய நாட்டினை பூர்வீகமாகக் கொண்டவர்களின் வாரிசுகள், புகழ் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் இது போன்ற கொள்கைகளினால் நல்ல திறமையும், தகுதியும், மதிப்பெண்களும் இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற வழக்கும் அமெரிக்க நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

americaavin1இதனால் உயர்கல்விக்காக மாணவர்கள் பலவித தரவுகளைக் கொண்டு கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க முயல்கிறார்கள். அமெரிக்காவின் சிறந்த பல்கலைக் கழகங்கள் எவை என்று முடிவு செய்வது… அவரவர் தேவையைப் பொறுத்து அமைவது என்பதை பத்திரிக்கை ஊடகங்கள் வெளியிடும் தரவரிசைப் பட்டியல்களின் அடிப்படையில் பொதுவாக முடிவு கட்டலாம். இதில் ஒவ்வொரு ஆய்வுக்குழுவினரும் ஆய்வுக்கான அடிப்படை வரைமுறைகளாகக் கொள்பவை வெவ்வேறு என்றாலும், பல காரணிகள் பொதுவானவையே. அவற்றில் குறிப்பாக, நான்காண்டு இளநிலைப் படிப்பிற்காகும் கல்விக் கட்டணம், மாணவர் – ஆசிரியர் விகிதம், ஆசிரியரின் கற்பிக்கும் திறமை, கல்வியின் தரம், கல்வி கற்கும் சூழ்நிலை, கல்வி நிறுவனத்தின் நிதிநிலை, உதவித்தொகை வழங்கும் நிலை, மாணவர்களின் கல்வித்திறமை (நுழைவுத் தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படை), மாணவர்கள் வெற்றிகரமாக பட்டம் பெறும் விகிதம், பட்டம் பெற்ற பின்னர் அவர்களுக்கு வேலை கிடைக்கும் சூழல், அவர்கள் பணியில் முதலாண்டே பெரும் ஊதியம், தொடர்ந்து அக்கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்களின் எதிர்கால முன்னேற்றம், பிற்கால ஊதிய நிலை, அக்கல்விநிறுவனம்   தனியார் அல்லது மாநில அரசின் கல்வி நிறுவனமா   எனப் பற்பல காரணிகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மதிப்பிடப் படுகின்றன. ஆனால் ஒவ்வொரு காரணிக்கும் கொடுக்கும் முக்கியத்துவமும் மதிப்பெண் நிறையும் ஒவ்வொருவர் ஆய்விலும் மாறுபடும். அதன் விளைவாக இத்தரவரிசைகளிலும் மாறுதல்கள் இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் “யூ.எஸ். நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட்” (U.S. News & World Report) சிறந்த அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை தீவிர ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஏறத்தாழ 1,800 கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் யூ.எஸ். நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் ஆய்வுக்குள்ளாகின்றன.

americaavin42015 ஆம் ஆண்டிற்கான யூ.எஸ். நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் வழங்கும் சிறந்த அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்:

முதல் பத்து இடங்களில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் —

1. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்

2. ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

3. யேல் பல்கலைக்கழகம்

4. கொலம்பியா பல்கலைக்கழகம்

4. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

4. சிக்காகோ பல்கலைக்கழகம்

7. எம். ஐ. டி.

8. டியுக் பல்கலைக்கழகம்

8. பென்சில்வேனியா பல்கலைக்கழகம்

10. காலிடெக்

“யூ.எஸ். நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட்” போலவே, “ஃபோர்ப்ஸ்” (FORBES) இதழும் கடந்த ஏழாண்டுகளாக வாஷிங்டன் டி சி யில் உள்ள ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து 650 அமெரிக்க கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தி வருகிறது. அவர்களது ஆய்வுக்குழு கூறுவது; பிற பத்திரிக்கைகளின் தரவரிசைப்படுத்தும் முறையில் இருந்து நாங்கள் வேறுபடுகிறோம். கல்விநிறுவனங்கள் தரம் எப்படி என்று பார்ப்பதைவிட, அந்தக் கல்வி நிறுவனங்களில் படித்ததால் மாணவர்கள் என்ன நன்மை அடைந்தார்கள் என்பதே எங்கள் ஆய்வின் அடிப்படைக் குறிக்கோள், என்கிறார்கள்.   “போட்ட முதலீட்டிற்கு ஏற்ற பலன்” (ROI: Return on Investment) என்ற பொருளாதார அடிப்படையில் இவர்கள் அலசுகிறார்கள். ஒரு கல்வி நிறுவனம் சேர்த்துக் கொள்ளும் மாணவர்களின் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணிற்குக் கொடுக்கும் முக்கியத்தைவிட, அங்கு பட்டம் பெற்ற மாணவர்களின் வருமானத்திற்கு ஃபோர்ப்ஸ்சின் ஆய்வில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே, 1. மாணவர்களின் திருப்திகரம், 2. படித்து முடித்த பின்னர் வேலையில் பெறும் ஊதியம், 3. அந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்களின் கல்விக்கடன், 4. பட்டம்பெறும் மாணவர்களின் விகிதம், 5. மேற்கல்வி கற்க உதவும் நிலை என ஐந்து பிரிவுகளில் 12 காரணிகளை ஆராய்ந்து தரவரிசைப் படுத்துகிறார்கள்.

“ஃபோர்ப்ஸ்” இதழ் வழங்கும் சிறந்த அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்:

americaavin6முதல் பத்து இடங்களில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் —

1. வில்லியம்ஸ் கல்லூரி

2. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

3. ஸ்வார்த்மோர் கல்லூரி

4. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்

5. எம். ஐ. டி.

6. யேல் பல்கலைக்கழகம்

7. ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

8. பொமோனா பல்கலைக்கழகம்

9. யூ. எஸ். மிலிட்டரி அக்காடெமி

10. ஆம்ரெஸ்ட் பல்கலைக்கழகம்

அடுத்து, “மனி மாகசின்” (Money Magazine) இதழும் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தி வருகிறது. இவர்களது ஆய்வின் அடிப்படை ஒரு கல்வி நிறுவனம் மாணவரின் கல்விக்கான “விரலுக்கேற்ற வீக்கமா” என்ற கோணத்தில் ஆய்வை முன்னெடுக்கிறது. மாணவரின் தகுதிக்கேற்ற கல்வி நிறுவனம் என்பதுடன், அக்கல்வி நிறுவனம் மாணவரின் குடும்பத்தின் நிதிநிலைக்கும் ஏற்றதா? அவர்களால் அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தில் பயிலலாம் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க இயலுமா? என்ற கோணத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே கொடுக்கும் கல்விக் கட்டணத்திற்குச் சிறந்த கல்வி தரும் நிறுவனத்தை தெரிவு செய்ய விரும்புபவர்கள் மனி மாகசின் கொடுக்கும் தரவரிசைப் பட்டியலை கருத்தில் கொள்ளலாம்.

இந்த ஆய்வுக் குழுவால் 1,500 பல்கலைக்கழகங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, 21 காரணிகளை 1. கல்வி நிறுவனம் வழங்கும் கல்வியின் தரம், 2. செலவு செய்யக் கூடிய அளவில் உள்ள கல்விக் கட்டணம், 3. பட்டம் பெற்றவர்களின் வருமானம் என்ற மூன்று பிரிவுகளில் அமைத்து மதிப்பெண் அளித்து, ஒவ்வொரு பிரிவிலும் அலசப்பட்டு, தகுதி அடிப்படையில் தரவரிசையில் முதலில் வரும் பாதி பல்கலைக் கழகங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் எந்தப் பல்கலைக் கழகத்திற்கும் உச்ச மதிப்பெண்ணான A+ மதிப்பெண் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. எனவே, இவர்களின் தரவரிசைப் படுத்தல் முறையில் பட்டம் பெற்ற ஐந்தாண்டுகளில் 55,000 டாலர் வருமானத்தில் மாணவர்கள் வேலையில் அமர்வது, பட்டம் பெறும் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 80% உள்ள கல்விநிறுவனங்கள் முன்னிலையில் இடம் பிடிக்கின்றன.

இந்த அடிப்படையில், கல்விக்காகச் செலவழித்த தொகைக்கேற்ற பலன் (நல்ல பணியில் அமர்தலும், அதற்கேற்ற ஊதியமும், கல்வித்தரமும்-VALUE-ADDED GRADE) பெற உதவும் கல்வி நிறுவனங்களாக A, A- பிரிவில் [ A (44), A - (76)] என 120 பல்கலைக்கழகங்கள் மட்டுமே “வேல்யூ” என்ற பிரிவில் அடங்குகின்றன. முக்கியமாக இவை மற்றவர்களின் தரவரிசைப்படுத்துதலில் பின்தங்கியவையாகக் கூட இருக்கும் வாய்ப்பிருக்கிறது. பொதுவாக, குறைந்த செலவு, நிறைந்த பலன் அடிப்படையில் மாநில அரசு பல்கலைக் கழகங்களே பெரும்பாலும் A, A- பிரிவில் இடம் பிடித்துள்ளன. பெரும்பாலான கலிபோர்னியா மாநில பல்கலைக் கழகங்கள் இப்பிரிவில் இருப்பது கலிபோர்னியா மாநில மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது. தரவரிசையில் 9 வது இடத்தில் இருக்கும் பெர்க்லியில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக் கழகம் A – மதிப்பெண் பெற்றிருக்கிறது.

ஆனால், உலகப் புகழ் பெற்ற, யாவரும் படிக்க இடம் கிடைக்க வேண்டும் என்று கனவு காணும் ஐவி லீக் (Ivy League) பல்கலைக் கழகங்களும், மற்றும் சில புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களும் B +, B, B- என்ற வகையில் பலன் தரும் நிலையிலேயே உள்ளன. குறிப்பாக, B+, B, B- [B+ (185), B (61), B- (222)] என 468 பல்கலைக்கழகங்கள் B பிரிவில் உள்ளன, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட், எம். ஐ. டி, யேல், ஸ்டான்ஃபோர்ட், பிரின்ஸ்டன், டியூக், கொலம்பியா, கார்னெல், பிரவுன் என யாவும் இந்த B பிரிவுகளில் அடங்கிவிட்டன. இது போல வேல்யூ என்ற A, B, C என வகைப்படுத்துவதோடு நில்லாமல்;வழக்கமான மதிப்பெண் தரவரிசைப்படியும் பட்டியல் தரப்படுகிறது, அதன்படி,

மனி மாகசினின் சிறந்த அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்:

americaavin7முதல் பத்து இடங்களில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் —

1. ஸ்டான்ஃபோர்ட்

2. பேப்சன்

3. எம்.ஐ.டி

3. பிரின்ஸ்டன்

5. காலிடெக்

6. ஹார்வி மட்

6. ஹார்வர்ட்

8. மெய்ன் மாரிடைம் அக்காடெமி

9. ஆம்ரெஸ்ட்

9. யூ சி பெர்க்லி

இந்த இரண்டு வகைத் தகவல்களினால், சிறந்த கல்வி நிறுவனமாக ஒரு கல்வி நிறுவனம் இருக்கலாம், ஆனால் அது நமது குறிக்கோளுக்கு பொருத்தமானதா எனவும் மாணவர்கள் முடிவு செய்யும் உதவி கிடைக்கிறது.

பொதுவாக இவர்கள் ஆய்வில் கிடைக்கும் பிற சுவையான தகவல்கள்:

ஹார்வர்ட், யேல், பிரின்ஸ்டன் போன்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர் விழுக்காடு 97 % வரை இருப்பதில் வியப்படைய எதுவுமே இல்லை. பொறுக்கியெடுத்த நன்கு படிக்கும், படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் அங்கு நுழையும் பொழுது, முடிவும் அதற்கேற்றவாறுதான் இருக்கும். பெயர் கேள்விப்படாத சில கல்லூரிகளில் ஐந்தில் ஒருவர் படிப்பை முடிக்கும் நிலைகூட இருக்கிறது (Rust College: 19%). பொதுவாக “சராசரி பட்டம் பெறும் விகிதம்” மூன்றில் இருவர் (67%) என்ற நிலை அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் இருக்கிறது.

americaavin3ஐம்பதாயிரம் டாலர் தொகையில் ($ 49,343, Berea College, தரவரிசையில் 52 வது இடம்) நான்காண்டு பட்டப்படிப்பை முடிக்கும் நிலையம் உள்ளது, $ 264,346 செலவு செய்து பட்டம் பெற வேண்டிய நிலையும் உள்ளது (New York School of Interior Design). சராசரியாக ஒரு பட்டப்படிப்பை முடிக்க $136,361செலவு செய்யும் நிலையை இன்றைய அமெரிக்க மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

மாணவர்கள் படித்து முடித்த பின்னர் சராசரி ஆண்டு வருமானம் என்ன பெறுகிறார்கள் என்று பார்க்கும் பொழுது, தொழில்முறைக் கல்வி தரும் பல்கலைக்கழகங்கள் முன்னணியில் இருக்கின்றன. எம். ஐ. டி, காலிடெக், ஹார்வி மட் போன்றவற்றின் மாணவர்களின் சராசரி ஆண்டு வருமானம் $ 70,000 க்கும் அதிகம். புகழ்பெற்ற கல்லூரியில் பொறியியல் படித்து, அதனால் அதிக ஊதியமும் பெறும் மாணவர்கள் இவர்கள். ஆண்டுக்கு $ 25,000 ஊதியம் பெறுபவர்கள் பெரும்பாலும் C பிரிவு பலன் தரும், தரவரிசையில் 700 க்கும் கீழ் இருக்கும் கல்லூரிகளில் படிப்பை முடிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பாடமும் சமூகவியல் போன்றவையாக இருக்கவும் கூடும்.

இதில் வியப்பளிப்பது என்னவென்றால் இவர்களும் $100, 000 க்கும் அதிகமாக செலவழித்துப் படித்து பட்டம் வாங்கி ஆண்டுக்கு சராசரி $ 30,000 ஊதியம் தரும் வேலையைத் தேர்ந்தெடுக்கும் நிலைமை இருப்பதுதான். சராசரி வருமானமே $ 30,000 என்றால் கல்வி கற்ற பின்னரும், பட்டம் பெற்ற பின்னரும் கூட அரசு நிர்ணயித்த குறைந்த அளவு ஊதியம் வாங்கும் நிலையில் இவர்களில் பலர் இருப்பதும் தெரிகிறது. இளங்கலை பட்டம் படித்த அமெரிக்க மாணவர்களின் சராசரி ஆண்டு வருமானம் $ 44,500. இது அமெரிக்க மக்கட்தொகை தொகை ஆய்வு குறிப்பிடும் சராசரி ஆண்டு-குடும்ப வருமான அளவையே ஒத்திருக்கிறது.

எனவே உதவித்தொகை கிடைக்காத சராசரி மாணவர்கள், படித்து முடித்து தலைமூழ்கும் அளவிற்கு கல்விக் கடன் இருக்கக்கூடாது என்று விரும்பும் மாணவர்கள் மாநிலப்பல்கலைக் கழகங்களை நாட வேண்டியதுதான். பணம் ஒரு பொருட்டல்ல என்ற வகையில் வளரும் மாணவர்களும், பணம் இல்லாவிட்டால் தலையை அடகு வைத்தாவது என் பிள்ளையை புகழ் பெற்ற பல்கலைக் கழகத்திற்குத்தான் அனுப்புவேன் என்ற மனப்பான்மை உள்ள ஆசிய, குறிப்பாக இந்தியப் பெற்றோர்கள் பணத்திற்கேற்ற பலன் என்ற மனி மாகசினின் இந்த மதிப்பிடும் முறையைப் பொருட்படுத்த வேண்டியத் தேவையில்லை. பல இந்தியக் குடும்பங்களைப் பொறுத்தவரை, அவர்களது பிள்ளைகள் புகழ் பெற்ற கல்லூரிகளில் படிக்காமல் மாநில பல்கலைக் கழகங்களில் படிப்பது கௌரவக் குறைவானது என்ற மனப்பான்மை இருப்பதும், பிள்ளைகள் அதனால் மதிப்பெண் குறைவாக இருப்பின் மனமுடைந்து போவதும் நாம் வழக்கமாகக் கேள்விப்படும் கதைகள்.

புகழ் பெற்ற கல்விநிறுவனங்களை மட்டுமே நம்பி இருப்பது தவறு, அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை தேர்வு செய்யும் கொள்கைகளை மாற்றிய வண்ணமே உள்ளனர், எந்த அடிப்பையில்தான் தேர்வு செய்கிறார்கள் என்பதும் தெளிவாகப் புரியவதில்லை, பள்ளியில் முதல் மாணவர் ஒருவர், அவர் நுழைவுத் தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்றவர், அவரிடம் பற்பல போட்டிகளில் பெற்ற பல விருதுகள் இருந்தாலும், கல்வியைத் தவிர பிறதுறைகளிலும், தொண்டிலும் ஆற்றலும் அனுபவமும் இருந்தாலும் கை விரித்து விடுகிறார்கள். எனவே எதற்கும் முன்னெச்சரிக்கையாக மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் ஒன்றிலும் விண்ணப்பித்து வைப்போம் என்று இந்தியக் குடும்பங்கள் மட்டுமல்ல, பொதுவாக அனைவருமே முயற்சி செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அந்த சிறப்பான மாணவர்களின் திறமையை மதித்து மாநிலக்கல்விநிறுவனம் உதவித்தொகை கொடுத்தாலும், ஒரு செண்ட் செலவழிக்கக் கூடத் தேவையின்றி இருந்தாலும், ஐ வி லீக் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்துவிட்டால், இந்தியக் குடும்பங்கள் உதவித்தொகை என்பதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, நாட்டின் மறு கோடியில் இருக்கும் ஐ வி லீக் கல்வி நிறுவனதிற்குத்தான் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் நிலை இருந்துவந்தது.

சமீப காலமாக இதிலும் எதிர்பாராத ஒரு மாற்றம். மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும் நிதியைக் குறைக்கத் தொடங்கியவுடன், மாநில அரசின் உதவியில் நடக்கும் கல்வி நிறுவனங்களும் பிற மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை தரும் நிலை உருவாகிவிட்டது. பிற மாநில மாணவர்களிடம் ‘அவுட் ஆஃப் ஸ்டேட் ஸ்டூடெண்ட்’ என்று அதிக அளவு கல்விக் கட்டணத்தை வசூலித்து கல்லாவை நிரப்பும் நிலைக்குத் தள்ளப்படுவதால், சிறப்புச் சலுகை அடிப்படையில் குறைந்த கல்விக் கட்டணத்தை தரப்போகும் தங்களது மாநில மாணவர்களையே மாநில அரசுக் கல்வி நிறுவனங்கள் புறக்கணிக்கும் நிலையை மேற்கொள்ளத் துவங்கியும் உள்ளன.

High Tech Industry Offices in Silicon Valleyசிலிக்கன் பள்ளத்தாக்கு தொழில்நுட்ப நிறுவனங்களின் வேலைக்குக் குறிவைக்கும் மாணவர்களுக்காக, எந்தக் கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் சிலிக்கன் பள்ளத்தாக்கு நிறுவனப் பணியில் அமர்கிறார்கள் என்ற கோணத்தில் மற்றொரு உதவிகரமானத் தகவலைத் தந்துள்ளது “ஜாப்விட்” (Jobvite) வேலைவாய்ப்பு நிறுவனம். கீழுள்ள கல்வி நிறுவனங்களில் கல்வி பெற்ற மாணவர்கள் சிலிக்கன் பள்ளத்தாக்கு தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவது இந்த வேலைவாய்ப்பு உதவி நிறுவனம் வழங்கும் ஒரு தகவல்.

1.   சான் ஒசே யுனிவெர்சிட்டி

2.   யுனிவெர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா – பெர்க்லி

3.   சான் ஃபிரான்சிஸ்கோ ஸ்டேட் யுனிவெர்சிட்டி

4.   ஸ்டான்ஃபோர்ட் யுனிவெர்சிட்டி

5.   யுனிவெர்சிட்டி ஆஃப் வாஷிங்டன்

6.   யுனிவெர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா – டேவிஸ்

7.   யுனிவெர்சிட்டி ஆஃப் டெக்சாஸ் அட் ஆஸ்டின்

8.   யுனிவெர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா – சாண்டா பார்பரா

9.   யுனிவெர்சிட்டி ஆஃப் சதர்ன் கலிபோர்னியா

10. யுனிவெர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா – லாஸ் ஏஞ்சலஸ்

11. சாண்டா கிளாரா யுனிவெர்சிட்டி

12. கார்னகி மெலான் யுனிவெர்சிட்டி

13. யுனிவெர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா – சாண்டா க்ருஸ்

14. யுனிவெர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா – சான் டியாகோ

15. யுனிவெர்சிட்டி ஆஃப் இல்லின்னாய்ஸ் அட் அட் அர்பானா – சாம்பெய்ன்

16. கலிபோர்னியா பாலிடெக்னிக் ஸ்டேட் யுனிவெர்சிட்டி – சான் லூயி ஒபிஸ்போ

17. யுனிவெர்சிட்டி ஆஃப் மிக்சிகன்

18. அரிசோனா ஸ்டேட் யுனிவெர்சிட்டி

19. யுனிவெர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா – இர்வின்

20. கார்நெல் யுனிவெர்சிட்டி

இந்தத் தரவரிசைப் பட்டியலில் இருக்கும் பல்கலைக் கழகங்கள் பெரும்பாலும் கலிபோர்னியா மாநிலத்தில் இருப்பவையே. அத்துடன் பிற தரவரிசைப் பட்டியல்களில் உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவன வரிசையில் இடம் பிடிக்கும் “மாநிலக் கல்வி நிறுவனங்களில்” பெரும்பாலும் கலிபோர்னியாவில் இருப்பவையே. எனவே கலிபோர்னியா தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களைப் பெற்றிருப்பது கலிபோர்னியாவிற்கும் பெருமை தருகிறது, அங்கு வாழும் மக்களுக்கும் உதவிகரமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.

பள்ளி படிப்பை முடித்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் இது போன்ற நிறுவனங்கள் ஆய்வு செய்து வெளியிடும் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல்களை தக்கபடி பயன்படுத்தி தங்கள் தகுதிக்கேற்ற கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

__________________________________________________________________________________

Sources:

Money’s Best Colleges 2015

https://best-colleges.time.com/money/full-ranking#/list

U.S. News & World Report Announces the 2015 Best Colleges

http://www.usnews.com/info/blogs/press-room/2014/09/09/us-news-announces-the-2015-best-colleges

America’s top-colleges

http://www.forbes.com/top-colleges/list/

The 20 universities that are most likely to land you a job in Silicon Valley

http://www.businessinsider.com/silicon-valley-hiring-most-popular-universities-2015-7?op=1#ixzz3g82Ac7zg


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?”

அதிகம் படித்தது