மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தற்காலக் கல்வி முறை பகுதி – 5

முனைவர் ஜ. பிரேமலதா

Sep 19, 2015

vaalkkaikkum vagupparaikkum6ஒவ்வொரு ஆசிரியரும் மாணவனுக்கு நம்பிக்கை தரும் வேர் போன்றவர். இந்த வேர் மாணவர்களிடத்தில் உள்ள ஆளுமைப் பண்புகளை வளரச் செய்ய வேண்டும். உளவியல் அறிஞர் வாட்சன் ‘என்னிடம் குறிப்பிட்ட குழந்தைகளைத் தாருங்கள். அந்தக் குழந்தைகளை நீங்கள் விரும்பும் வண்ணம் அறிஞராக, மருத்துவராக, குற்றவாளியாக மாற்றிக் காட்டுகிறேன்‘ என்று சவால் விட்டார். எனவே ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவர்களைப் பிறருக்குப் பயன்படும் வகையில் நிழல் தரு மரங்களாக, கனிகளாக மாற்றிக் காட்டும் மகத்தான பணியாகும். எனவேதான் ஆசிரியர் பணி அறப்பணி என்றார்கள் . அர்ப்பணிப்பு இதயம் உள்ளவர்களால் மட்டுமே இந்த மகத்தான பணியை மேற்கொள்ள முடியும். தற்போதைய நிலைமையில் ஆசிரியர் பணி ‘சேவை‘ என்ற நிலையிலிருந்து முழுக்க முழுக்க மாற்றமடைந்து தொழில் என்ற நிலைமைக்கு வந்து விட்டது.

ஆசிரியர்களை மட்டும் இதற்குக் காரணம் காட்டிவிடமுடியாது. கல்வி நிறுவனங்களும் சேவை என்ற நிலையிலிருந்து மாறி வணிகம் என்ற நிலைமைக்கு மாறி விட்டன. இந்நிறுவனங்களுக்கு பெற்றோர்கள் வாடிக்கையாளர்கள். வாடிக்கையாளர்களாகிய பெற்றோர்கள் விரும்பும் வகையில் மாணவர்களை உருவாக்கித் தர வேண்டிய நிலையில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. பாடத்திட்டங்களை அப்படியே மனனம் செய்து எல்லா மாணவர்களும் நூறு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆழமாகப் படித்து பொருள் புரிந்து கொண்டுதான்  மதிப்பெண் எடுத்தானா என்பதெல்லாம் தேவையில்லை. பாடத்திட்டம் எப்படியிருந்தாலும் புரிந்தாலும் புரியாவிட்டாலும் யாருக்கும் கவலையில்லை. நடைமுறைக்கு அப்பாடத்திட்டம் தொடர்புடையதாக இருக்கிறதா? அவனுடைய உள் ஆற்றலை வளர்க்கிறதா?  புரியும் மொழியில் தான் பாடத்திட்டம் உள்ளதா? அதையெல்லாம் குறித்து யாருக்கும் கவலையில்லை. பள்ளி மாணவன்விரும்பும் மேற்படிப்பை  எடுக்குமளவிற்கு மதிப்பெண் எடுக்க வேண்டும். கல்லூரி மாணவன் பன்னாட்டு நிறுவனத்தில் சென்று எடுக்குமளவிற்கு மதிப்பெண் எடுக்க வேண்டும். பணிபுரிய வேண்டும்.

aasiriyar fiஇவையெல்லாம் மாணவர்களின் சிந்தனையாற்றலைச் சிதைத்து விடுகின்றன. சுய சிந்தனையால் புதியனவற்றை கண்டுபிடிக்கும் ஆற்றலுடையவன்,  சொந்தத் தொழில் தொடங்கி முதலாளியாக வேண்டியவன் காலம் முழுவதும் ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாகியே மடிந்து போக விதிக்கப்படுகிறான். பன்னாட்டு நிறுவனமென்னும் Bulldozers பல விருட்சங்களை முளையிலேயே மிதித்து கொன்று விடுகின்றன.

அப்துல் ரகுமான் கூறுவது போல ‘குழந்தைகளைக் கிழித்துவிடாத பாடப்புத்தங்கள் தேவை’. படைப்பு மனதைப் பாழாக்கிச் சொன்னதைச் செய், சொல்லிக் கொடுத்ததைத் திரும்ப எழுது என்று கட்டளைக்கு அடி பணிந்து சேவகம் செய்யும் அடிமை மாணவர்களை உருவாக்கும் இன்றைய கல்வித்திட்டம் கண்டிப்பாக மாற்றப்படவேண்டும்.

பெரும்பாலான அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் பரந்து பட்ட இடங்களை அல்லது உயர்ந்த கட்டடங்களைக் கொண்டுள்ளன. இந்தியா போன்ற விவசாய நாடுகளில் எப்பாடத்திட்டமாயினும் வேளாண் சார்ந்த கல்விமுறையை இணைத்து பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். மண்சார்ந்த இடங்களில்  காய்கறிகளைப் பயிரிடவும், நல்ல மரங்களை, செடிகளை நடவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திட்டத்தை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கொண்டு செல்லலாம். மொட்டை மாடியில் பாதுகாப்பான முறையில் சாக்குப் பைகளில் மண்ணை நிரப்பி ஆழமில்லாத வேர்களையுடைய செடிகளை நட்டு பராமரிக்கச் செய்யலாம். இயற்கையோடு இணைந்த வாழ்வின் அவசியத்தை உணர்ந்து வாழச் செய்யலாம்.

உடல் உழைப்பைக் கேவலமாகக் கருதக் கூடிய கல்வி முறைதான் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு அடிப்படைக் காரணம்.

tharkaalak kalvi murai2கல்வி ஒருவருக்கு மற்றவரை வழி நடத்தும் தகுதியைத் தரவேண்டும். தன் படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் ஒருவன், தன் வாழ்வாதாரங்களை மட்டும் தேடுபவனாக இல்லாமல், குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய கடமை குறித்தும், சமூகத்தைப் பாதிக்காத நன்மை குறித்தும், அறியும் அறிவையும் விழிப்புணர்வினையும் கொண்டவனாக இருக்கவேண்டும்.

இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் வேளாண் தொழில் புறக்கணிப்பு, கைத்தொழில் புறக்கணிப்பு, எந்திரமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவை வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குகின்றன. காந்தியின் சுதேசி பொருளாதாரமுறை, எந்திரமயமாக்களைத் தவிர்த்தல், வேளாண் சார்ந்த கல்விமுறை போன்றவை வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வாகும்.

படித்தவர்    உடலுழைப்பில்    ஈடுபட்டால்   அவர்    மட்டுமின்றி,  அவர்   குடும்பமும் நாடும் உயரமுடியும். உடல் உழைப்பிற்குரிய மதிப்பும் மரியாதையும் கூடும். படிப்பும், உடல் உழைப்பும் இணைந்தால் அனைவருக்கும் வேலை கிடைக்கும், யாருக்கும் வேலை கொடுக்கவும் முடியும் என்ற நிலையை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். ‘உடலுழைப்பு கேவலம் என்று நினைத்துநம்மை நாமே பிணித்துக் கொண்டுள்ளோம். உடலுழைப்பைக் கேவலமாய்க் கருதி அந்த எண்ணமென்னும் விலங்கை உடைத்தெறிய உழைப்பு என்னும் ஆயுதம் தேவை. அதுவும் நம் கையில் தான் உள்ளது’ என ஒவ்வொரு இளைஞனும் நினைக்க வேண்டும்.

‘வாழ்க்கையைப் பூஞ்சோலையாக மாற்றுவதற்கு உடல் உழைப்புதான் உரம்’ என்கிறார். இதனால், அரசு வேலை கொடுத்து மக்களைக் காப்பாற்றும் என்ற நிலைமாறி, உடல் உழைப்பின் மேன்மையினால், இளைஞர்கள் இந்தியாவைக் காத்திடும் நிலை உருவாகிவிடும் என்கிறார்.

கல்வி வேறு, உடல் உழைப்பினால் உருவாக்கப்படும் கலைகள் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இரண்டையும் ஒன்று போலவே பாவிக்கும் மனநிலையை இளைஞர்கள் பெற வேண்டும். உடலுழைப்பின் இன்றியமையாமையை உணரந்துவிட்டால், உண்மையான சுதந்திரத்தின் மேன்மையை உணர்ந்திடுவர். பெற்றோர் மனநிலையிலும் மாற்றம் வரவேண்டும். கல்வியாளர்கள், நிறுவனங்கள், ஆசிரியர்கள், அரசு, மாணவர்கள் என்று ஒட்டு மொத்த சமுதாயமுமே ஒன்றிணைந்து செயல்பட்டால் எதையும் சாத்தியமாக்கலாம்.


முனைவர் ஜ. பிரேமலதா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தற்காலக் கல்வி முறை பகுதி – 5”

அதிகம் படித்தது