மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நுழைவுத் தேர்வுகள்

T.K.அகிலன்

May 7, 2016

Entrance-Examination4மருத்துவப்படிப்புக்காக, இந்தியா முழுமைக்கும் பொதுவாக ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண். அதன் மூலம் விரும்பும் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர்வதற்கு தகுதி பெறலாம் – GMAT, GATE, SAT போன்ற தேர்வுகளைப் போல. பொறியியலுக்கும் இத்தகைய ஒரு பொதுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவானால், தமிழகத்தில் தரம் தாழ்ந்து செல்லும் கல்வியை மீண்டும் மீட்க முடியலாம்.

அரசியல்வாதிகள் அவர்களின் சுயலாபத்திற்காக மாணவர்களிடையே ஒரு பிரிவினையை கற்பிதம் செய்து, அதை உரக்கச் சொல்வதன் மூலம் உண்மை என நிறுவி இருக்கிறார்கள். எவ்விதக் கருத்துக்களையும் உரக்கச் சொல்வதன் மூலம், பெரும்பாலானவர்களை நம்பும்படி வைத்தால் அவையே உண்மையாகி விடுகிறது. அரசியல்வாதிகளின் அர்த்தமற்ற கூச்சல்கள், இதன் அடிப்படையில்தான் நாள்தோறும் அதிகரிக்கிறது. சுமார் பத்து வருடங்களாக நுழைவுத் தேர்வு குறித்து இத்தகைய அர்த்தமற்ற கூச்சல்களை எழுப்பி, பெரும்பாலானவர்களை நம்பும்படி செய்திருக்கிறார்கள். இந்தக் கூச்சல்களுக்கிடையே, உண்மையென நம்ப வைக்கப்பட்டவற்றின் போதாமையை, தர்க்கமின்மையை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல கல்வியாளர்கள் முயன்றாக வேண்டும். தமிழகத்தின் கல்வியை மீட்டெடுக்க, இது மிகமிக அவசரமானத் தேவை.

Entrance-Examination7நுழைவுத் தேர்வுக்கு எதிராகக் கூறப்படும் காரணம், கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்கள் என்னும் பிரிவினை. கிராமப்புற மாணவர்களால் நுழைவுத் தேர்வுகளில் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட இயல்வதில்லை என்னும் கருத்தை திரும்பத் திரும்பக் கூறி, அதை உண்மையென மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எதன் அடிப்படையில் இந்தக் கருத்தாக்கம் கூறப்படுகிறது?. கிராமப்புறப் பள்ளிகள் தரமற்றவை என்னும் அர்த்தத்திலா?, அவ்வாறெனில் அவற்றின் தரத்தை உயர்த்துவதும், உயர்த்தக் கோருவதும்தானே இயல்பான செயல்களாக இருக்க முடியும்?

நகரத்தை போலிச்செய்ய முயலும் சில கிராமத்து உயர்\நடுத்தர குடும்பங்களில் உள்ள மாணவர்களைத் தவிர்த்து விட்டு, ஒரே மதிப்பெண் வாங்கும் ஒரு கிராமத்து மாணவனையும் நகரத்து மாணவனையும் ஒப்பிட்டால், கிராமத்து மாணவன் அதிக நுண்ணறிவுடன் இருப்பான். காரணம் எளிமையானதுதான். சூழலை அவதானிப்பதற்கான வாய்ப்பும் கட்டாயமும் நகரத்து மாணவனை விட, கிராமத்து மாணவனுக்கு அதிகமாக இருக்கும். கல்வி என்பது சூழலை அறிந்து கொள்ளும் இயக்கம்தானே!

நுழைவுத்தேர்வுகள் இல்லாமல் ஆகிவிட்ட கடந்த பத்து ஆண்டுகளில், மதிப்பெண்களை வாங்க வைப்பதற்காக மாணவர்களை பயிற்றுவிக்கும் முறை, மாணவர்களுக்கு எஞ்சியிருக்கும் கொஞ்சம் நஞ்சம் நுண்ணறிவையும் இல்லாமல் செய்து விடுகிறது. தற்போது தமிழ்நாட்டில் பொறியியல் படித்து வெளிவரும் மாணவர்களில், 70% பேர் பொறியியல் துறையில் வேலை செய்வதற்கு தகுதியில்லாதவர்களாக வருகிறார்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மீதி 30% பேர் கூட, அவர்கள் கற்ற கல்வியின் அடிப்படையில் வேலைக்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்களா அல்லது பள்ளிக் கல்வி முறையின் நுண்ணறிவை அழிக்கும் இயக்கத்தில் தங்கள் நுண்ணறிவின் சிறுபகுதியையாவது இழக்காமல் பாதுகாத்ததன் மூலம் தகுதி பெறுகிறார்களா? மருத்துவத் துறையில், மருத்துவர்களின் தேவை அதிகமாக இருப்பதால் இத்தகைய புள்ளிவிபரங்கள் இன்னும் வரவில்லை.

Entrance-Examination2பல பள்ளிகளில், பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்புப் பாடங்கள், வகுப்புத் தொடங்கிய பின் சில மாதங்கள் மட்டும்தான் நடத்தப்படும். அதன் பின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் 12-ம் வகுப்புப் பாடங்களை மாணவர்கள் படிக்க வைக்கப்படுகிறார்கள். அறிவியல் பாடங்களைப் புரிந்துக் கொள்வதற்கு அடிப்படைகளை அறிந்திருப்பது அவசியம். 11-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களைப் படிக்காமல் செல்லும் மாணவன், 12-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒன்றரை வருடங்களில் அவற்றைத் தகவல்களாக பெரும்பாலான மாணவர்களால் மனனம் செய்துவிட முடியலாம். மனனம் செய்விக்கப்படுகிறார்கள். அதாவது மாணவர்களின் நினைவு சக்தியையும், நினைவிலிருந்து எடுத்து வார்த்தைப் பிறழாமல் விடைத்தாளில் எழுதும் திறனையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு தற்போதைய மருத்துவர்களும், பொறியாளர்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 12-ம் வகுப்பில் அடிப்படைகளைப் பயிலாமல் செல்லும் மாணவர்கள், மேற்படிப்புகளில் எவற்றையும் புரிந்துக் கொள்ள முடியாது. மனனம் செய்யும் பயிற்சியில் நுண்ணுணர்வை முழுவதும் இழக்காத வெகு சில மாணவர்களால் மட்டும்தான், மேற்கல்வியை கல்வியாக அணுக முடியும்.

சரியாக வடிவமைக்கப்படும் நுழைவுத் தேர்வுகள், கற்பவற்றிலிருந்து மாணவர்கள் எவ்வளவு புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சோதிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் மேற்கல்விக்கு பள்ளிகளில் படித்தவைதான் அடிப்படையாக அமைகின்றன. நுழைவுத்தேர்வு இல்லாத நிலையில் புரிந்து கொண்டவைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மனனம் செய்யும் திறமை மட்டுமே சோதிக்கப்படுகிறது. மேலும் நினைவு சக்தி குறைவாக உள்ள, ஆனால் நுண்ணறிவு மிகுந்த, கற்றவற்றை எளிதாகப் புரிந்துகொள்ளும் திறன் உள்ள மாணவர்கள், நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில் முழு மதிப்பெண்கள் வாங்க முடியாமல் மேற்படிப்பு சேரமுடியாமல் இருக்கிறார்கள். பல புகழ் பெற்ற அறிவியலாளர்கள் நினைவாற்றல் குறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

Entrance-Examination3தமிழகத்தில் தேர்வுத்தாள்கள் மதிப்பிடும் முறையும் விசித்திரமானது. கேள்விகளுக்கான விடைகள், Key Words எனப்படும் முக்கியமான வார்த்தைகளுடன் தேர்வுத்துறையால், மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு அச்சிடப்பட்டு வழங்கப்படும். அதுவே மதிப்பெண் வழங்குவதற்கான அளவுகோல். அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் விடைகளுடன் மாணவர்களின் விடைத்தாள் ஒப்பிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. வார்த்தை பிசகாமல், அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் விடைகளுடன் மாணவர்கள் எழுதியிருக்கும் விடைகள் ஒத்திருக்குமானால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். சரியான விடைகளை வேறு வாக்கியங்களில், வேறு வார்த்தைகளில், வேறு விதமாக எழுதியிருந்தால், சரியான விடையாக இருந்தாலும் மதிப்பெண்கள் குறைக்கப்படும். இது விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறக்கேட்ட தகவல். மற்ற மாநிலங்களில் இவ்வாறா என்பது தெரியவில்லை.

இங்கு சோதிக்கப்படுவது மாணவர்களின் அறிவுத்திறனா? அல்லது நினைவுத்திறனா?. மேற்கல்விக்குத் தேவை அறிவுத்திறனா? அல்லது நினைவுத்திறனா? கிராமப்புற மாணவர்களுக்கு அறிவுத் திறன் குறைவு என்று எவ்வாறு இவர்கள் முடிவு செய்தார்கள்?. கிராமப்புற மாணவர்கள் என்று இவர்கள் கூறுவது உண்மையில் கிராமப்புற மாணவர்களையா? இல்லை அரசுப்பள்ளி மாணவர்களையா?. அரசுப்பள்ளி மாணவர்களை என்றால், அரசுப்பள்ளிகள் தரமற்றவை எனக்கூறுகிறார்களா?.

பொது நுழைவுத்தேர்வு நடத்தினால் முதன்மையாக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை மொழி. கேள்விகள் பிராந்திய மொழிகளிலும் இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பிராந்திய மொழிகளில் கல்வி கற்பவர்கள் இழப்புக்கு ஆளாகலாம். இது பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை. நாம் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுத்து அனுப்பிய நமது பிரதிநிதிகளால் எளிதாக எதிர்கொள்ள முடியும் பிரச்சினை.

tharkaalakkalvi3அடுத்ததாக கூறப்படுவது, நுழைவுத்தேர்வுகள் சி.பி.எஸ்.இ (C.B.S.E)  தரத்தில் இருக்கும். வெவ்வேறு மாநிலங்களில் கல்வியின் தரம் வெவ்வேறாக இருப்பதால், அனைத்து மாணவர்களையும் ஒரே அளவீட்டில் அளவிடுவது சரியாக இருக்காது என்பது. இதுவும் பெரிய பிரச்சினை இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஒரு மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான மேற்படிப்புக்கான இடங்கள் அந்த மாநிலத்து மாணவர்களுக்கே ஒதுக்கப்பட்டிருக்கும். எனவே வெளி மாநிலங்களிலிருந்து குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கு மாணவர்களால் வர முடியாது. ஆனால் அதே மாநிலத்தில்  சி.பி.எஸ்.இ (C.B.S.E) பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மற்றவர்களை விட முன்னே வரலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளில் சி.பி.எஸ்.இ (C.B.S.E) பள்ளிகள் மிகக்குறைவாகவே உள்ளன. எனவே அது உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் சி.பி.எஸ்.இ (C.B.S.E) உயர்நிலைப்பள்ளிகள் தமிழகமெங்கும் உடனே முளைக்கலாம். தமிழக உயர்நிலைப் பள்ளியின் கல்வித் தரத்தை சி.பி.எஸ்.இ (C.B.S.E)  க்கு இணையாகவோ, அதைவிட சிறந்ததாகவோ உயர்த்துவதன் மூலம் இந்தப்பிரச்சினையையும் எதிர்கொள்ளலாம்.

கல்வித்தரத்தை உயர்த்தியாக வேண்டும், வேறு வழியில்லை. எனவே ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்தியாக வேண்டும். இதிலும் சமரசத்திற்கு இடமில்லை. இன்று நுழைவுத்தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கிறார்கள் என சத்தம் எழுப்புவது அரசியல்வாதிகளும், ஆசிரியர்களும் மட்டுமே. ஆசிரியர்களும் இங்கு இருப்பதால் இந்தக் கூச்சல் கருத்தியல் தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மக்கள் அவர்கள் கூச்சலிடுவதை நம்ப ஆரம்பிக்கிறார்கள். யார் அவர்கள்? மாற்றத்தை ஒரு பெரிய தரப்பிற்குள் கொண்டு வரவேண்டிய, அந்தத் தரப்புடன் மோத அச்சப்படுகின்ற அரசியல்வாதிகளாகிய ஆட்சியாளர்களும், அந்தப் பெரிய தரப்பாகிய, மாறுதலுக்குள்ளாக வேண்டிய ஆசிரியர்களும்தான்.

பொதுமக்களாகிய நாம், நம் சந்ததிகளின் திறனை இந்த இரு தரப்புகளின் சுயலாபத்திற்காக, அவர்களுடன் சேர்ந்து கொல்ல வேண்டுமா? அல்லது நமக்காகவே அந்த இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளிடமும் ஆசிரியர்களிடமும், எங்களுக்குத் தேவை உங்கள் திசைதிருப்பும் கூச்சல்களும் எங்கள் சந்ததியினர் மேல் தொடர்ந்து செய்யப்படும் அறிவொழிப்பும் அல்ல, எங்கள் சந்ததியினரின் அறிவொளிதான் என உரக்கச் சொல்ல வேண்டுமா?.


T.K.அகிலன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நுழைவுத் தேர்வுகள்”

அதிகம் படித்தது