மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செய்யுள்களை எளிதில் புரிந்து கொள்வது எப்படி? – 2

ஆச்சாரி

May 1, 2012

திருக்குறளில் கண் என்ற சொற்கள்

செய்யுள்களை நேரடியாகப் புரிந்துகொள்ளச் சில சீரான நெறிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று அன்றாடம் பழகிய சொற்கள்போல் ஒலித்தாலும் பல சொற்கள் எதிர்பாராத பொருள்களிலும் வழங்குவதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது.

இலக்கியங்களில் அடிக்கடிக் கண், தலை, வாய், கை, கால், முகம் போன்ற பெயர்ச்சொற்கள் வழங்கும். அவற்றைக் கேட்டவுடன் அவை உறுப்புக்களை மட்டுமே குறிக்கின்றன என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. அவை மற்ற பொருள்களும் குறிக்கும். சான்றாகக் கண், வாய், தலை போன்ற சொற்கள் இடம் என்ற பொருளையும் அடிக்கடிக் குறிக்கும். கண் என்பது உடம்பு, பற்றுக்கோடு என்றெல்லாம் கூடப் பொருள்குறிக்கும்; சிலதடவை அசைச்சொல்லாகவும் வழங்கும். கால் என்பது காலம், வீசும் காற்று (கால் + து) என்ற பொருள்களையும் குறிக்கும்! எனவே இதனைத் தெளிந்துகொண்டால் செய்யுள்களை எளிதிற் புரிந்துகொள்ளலாம்.

ஒரு சொல்லுக்குப் பலபொருள்கள் உண்டென்பதைச் நல்ல அகராதியைப் பார்த்தாலே தெரியும்; சென்னைத் தமிழ்ப்பேரகராதி (Madas Lexicon) இலக்கியங் கற்கத் தேவையானது. இணையத்திலே சிகாகோப்பல்கலையின் தளத்திலே கிடைக்கிறது. சான்றாகக் கண் (http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:2233.tamillex ) என்ற சொல்லைப் பார்க்கவும்; அப்படியே அடுத்தடுத்த சொல்லாக அமுக்கித் தாவினால் பலசொற்களுக்குப் பல்வேறு தொடர்பற்ற பொருள்களைக் காணலாம்.

இங்கே நாம் திருக்குறளில் கண் என்பது வழங்குவதை ஆராய்வோம்.

கண்: கண் என்ற ஒலிகொண்ட சொற்கள் திருக்குறளில் பார்க்கும் உறுப்பு என்ற வழக்கமான பொருளில் வழங்குவதோடு இடம் என்ற பொருளிலும் மிகவும் அடிக்கடி வழங்கும். மேலும் இடுக்கண், உறுகண் (“துன்பம்”), வன்கண் (“வன்மை”, “கடுமை”) போன்ற சில சொற்களின் இறுதியில் விகுதியாகவும் வழங்கும்.

ஆனால் இதைக் கேட்டு மலைக்கவேண்டியதில்லை; இந்தப் பாகுபாட்டைத் திருக்குறளில் இடம்பொறுத்து உடனே உணர்ந்துகொள்ளலாம். இன்றைய வழக்கிலும்கூட இப்படிப்பட்ட சொற்கள் வழக்கமே. ஆட்டம் என்ற சொல் ஆடுதல் என்றும் போல என்றும் பொருள்படுகிறது; ஆனால் “பொம்மலாட்டம் கண்டதுண்டா” என்கிறபொழுது அசைவு என்றும் “இவனாட்டம் யாரையும் கண்டதுண்டா?” என்கிறபொழுது இவன்போல என்றும் உடனே தெரிந்துகொள்கிறோம். இது என்றென்றும் எல்லா மொழிகளிலும் நிலவும் நிலை. ஆங்கிலத்திலும்கூட like என்கிற சொல் விரும்பல் என்றும் போல என்றும் இருபொருள்பட்டாலும் “I like you”, “I am like you” என்கிற இரண்டிலும் உடனே பொருள்வேறுபாடு இயல்பாகவே தென்பட்டுவிடுகிறது.

அடுத்து கண் என்பதின் பலபொருள்களுக்கான சான்றுகள் காண்போம்.

காணும் உறுப்பு என்ற பொருள் “ஆர்வலர் புன்கண்நீர் பூசல்தரும்” (குறள்:8:1), “விழித்தகண் வேல்கொண்டு எறிய” (குறள்:78:5) போன்ற குறள்களில் வெளிப்படை. “புன் கண்நீர்” என்றால் “சிறு கண்ணீர் அல்லது துளிக்கண்ணீர்” என்றுபொருள்.

ஆனால் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” (குறள்:4:4), “மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்” (குறள்:6:2) போன்ற குறள்களில் இடம் என்றுதான் பொருள்படும்; எனவே அவற்றின் பொருள் “மனத்து இடத்தில் அல்லது மனத்தில் மாசில்லாதவன் ஆகுக” என்றும், “மனைவாழ்க்கைத் தகுதி இல்லாளிடத்தில்  இல்லை ஆயின்” என்றும் கொள்ள வேண்டும்.

அடுத்துக் கண் என்பது எந்த வெளிப்படையான பொருளையும் குறிக்காமல் வெறும் சொல்விகுதியாக வழங்கும் சில குறள்கள் காண்போம். சில சான்றுகள்: “உயிர்க்கு உறுகண் செய்யாமை” (குறள்:27:1), “இடுக்கண் வருங்கால் நகுக” (குறள்:63:1), “ஊறு அஞ்சா வன்கண்” (குறள்:77:2). இங்கே கண் என்பது உறுகண், இடுக்கண், வன்கண் ஆகிய சொற்களின் விகுதி; தனியாகப் பிரிந்து வழங்காது. வன்மை, கடுமை போன்றவற்றில் உள்ள மை என்ற சொல் போன்றது. எனவே அந்தத் தொடர்கள் “உயிர்க்குத் துன்பம் செய்யாமை”,  “துன்பம் வரும்பொழுது சிரிக்க”, “இடையூற்றிற்கு அஞ்சாத வன்மை அல்லது  உள்ளவுறுதி” என்று பொருள்படும்.

திருக்குறளில் கண்ணின் பொருள்முறை எண்ணிக்கை:

ஏற்கெனெவே திருக்குறளில் கண் என்ற சொல் இடம் என்ற பொருளில்தான் மிகுதியாக வழங்குகிறது என்று சொல்லியிருந்தது. அதனை நம்பவேண்டுமென்றால் நாம் அந்த வழக்குகளை நேரே எண்ணிப்பார்த்தாலே தெரியும்.  (குறிப்பு: இங்கே கண்ணோட்டம் (இரக்கம்), கண்ணஞ்சா, கண்ணின்று, கண்ணற போன்றவற்றையும் உறுப்புக் கணக்கிலே சேர்த்துள்ளது; “கண்நின்று கண்ணறச் சொல்லினும்” என்பதிலே கண்நின்று என்பதற்கு முன்னேநின்று என்றுதான் பொருள்; ஆயினும் சிலர் கண்ணெதிரே என்பதால் கண் என்ற உறுப்புப் பொருள்தான் என்று சொல்வதை ஏற்றாலும் எண்ணிக்கை பெரிதாகக் கூடிவிடாது என்று காட்டும் பொருட்டு உறுப்பாகவே எண்ணியுள்ளது.)

அறத்துப்பாலிலே மட்டும் எண்ணினால் தோராயமாக மொத்தம் 34 தடவை கண் என்ற ஒலிகொண்ட சொற்கள் வழங்குகின்றன:  அவற்றுள் 28 தடவை இடம் என்ற பொருள் குறிக்கின்றன; மூன்று தடவை “உறுகண்” (துன்பம்), “வன்கண்” (வன்மை, உறுதி, கடுமை) என்ற பண்புப்பெயர்ச் சொற்களில் விகுதியாக வழங்குகிறது; மூன்றே மூன்று தடவைதான் உடலுறுப்பு என்ற பொருள் குறிக்கிறது!

மற்ற பால்களில் கண் என்ற உறுப்புப்பொருள் கணிசமான இடங்களில் குறிக்கிறது. முழுக்கணக்கையும் கீழே அட்டவணையிலே காணலாம். திருக்குறள் முழுதிற்கும் மொத்தவிழுக்காடு: இடம் என்ற பொருள் 46%, உறுப்புப்பொருள் 44%, சொல்விகுதியாக 10%.

 

திருக்குறளில் கண் என்பதற்கு வெவ்வேறு பொருள்களின் எண்ணிக்கை
கண் என்னும் உடலுறுப்பு என்ற பொருள் இடம் என்ற பொருள் சொல்விகுதி 

(இடுக்கண் போன்ற சொற்களில்)

அறத்துப்பால் 34 3 28 3
பொருட்பால் 111 40 57 14
காமத்துப்பால் 68 50 12 6
மொத்தம் 213 93 97 23
% விழுக்காடு 44% 46% 10%

 

இந்த எண்ணொப்பீடு அறிவுறுத்துவது என்னவென்றால், கண்ணுறுப்புப் பொருள்தவிர மற்ற பொருள்களும் மிகவும் வழக்கம், அதனால் அவற்றை உள்ளார்ந்து பழகித் திருக்குறளை ஓதவேண்டும் என்பதே.

மலைக்க வேண்டியதில்லை:

முன்பே சொல்லினதுபோல் இந்தப் பொருள்வேறுபாடு கண்டு மலைக்க ஏதும் காரணமில்லை. இடத்தைப் பொறுத்து உடனே பொருள் தெரிந்துவிடும். கண் என்ற உறுப்புப் பொருள் பல இடங்களில் கொஞ்சமும் பொருந்தாது. மற்ற பொருள்களும் உண்டு என்று தெரிந்துள்ளதால் இனிமேல் உடனே திருத்தமாகப் பொருளை உணரலாம். நாம் அடுத்து வெவ்வேறு இடங்களில் இந்தப்பொருள்களை நன்கு பழகுமாறு பயில்வோம்.

கண் சொல்விகுதியாக:

திருக்குறளில் உறுகண், இடுக்கண், தறுகண், வன்கண், இன்கண், புன்கண் என்ற ஆறு பண்புப்பெயர்ச் சொற்கள்தாம் கண் என்று விகுதிகொண்டவை. இவையே மீண்டும் மீண்டும் பயிலும்; எனவே அவற்றின் பொருளை அறிந்து சிலதடவை பழகிக்கொண்டால் மேற்கொண்டு பொருள் தெரியாது திகைக்கத் தேவையிராது. ஏற்கெனெவே சொல்லினதுபோல் இவற்றில் கண் என்ற பகுதி வெறும் விகுதி; வன்மை, கடுமை போன்றவற்றின் மை போன்றது.

உறுகண், இடுக்கண் இரண்டுக்கும்  துன்பம் என்று பொருள்.

தறுகண், வன்கண் இரண்டுக்கும் பொருள் கொடுமை, வன்மை, கடுமை, அஞ்சாமை ஆகிய தொடர்புடைய குறிப்புக்கள். கடுமை என்ற பொருள்படும் கடுங்கண் என்றசொல்கூடச் சங்கப்பாட்டிலே வழங்குகின்றது: “கடுங்கட் கூளியர்” (மதுரைக்காஞ்சி:692) = “அஞ்சாமை கொண்ட படையினர்”. எனவே இந்த விகுதியாகிய கண் = மை என்று புரிந்து பழகிக்கொள்ளவும்.

புன்கண் என்றால் சிறுமை, மெலிவு, எளிமை (பிரிவு, துன்பம், வறுமை போன்றவற்றால் ஏற்படுவது); புன்மை என்றே ஒருசொல் அதேபொருளில் திருக்குறளில் வழங்கும்: “புறம்சொல்லும் புன்மை” (குறள்:19:5) .

இந்தச்சொற்கள் தனியே மட்டும் வழங்காமல் உரிமை அல்லது தொடர்பு விகுதிகள் சேர்த்தும் வழங்கும். சான்றாக வன்கண்ணது, வன்கணவர், வன்கணார் என்றும் புன்கண்ணை என்றும் வழங்கும்.  “வன்கண்ணது” என்றால் “வன்கண் உடையது அல்லது கொடுமையுடையது அல்லது கொடுமையானது” என்று பொருள்; “வைத்திழக்கும் வன்கணவர்” என்றால் “வைத்திழக்கும் வன்மையர்கள்/கொடுமையர்கள்” என்று பொருள். “புன்கண்ணை” என்பது முன்னாலே நின்று பேசுவோரைக் குறிக்கின்ற ஐ-விகுதி சேர்த்துள்ளது; அதற்கு “நீ புன்கண்/எளிமை உடையாய்” என்று பொருள். “நீ சென்றனை” என்பதில் உள்ள ஐகார விகுதியும் இதுவும் ஒன்றே. ஒப்புமையாக “நீ வன்கண்ணை” என்றால் “நீ வன்கண், கொடுமை உடையாய்” அல்லது “வன்கண், கொடுமை கொண்டுள்ள நீ” என்று பொருள்.

இப்பொழுது காமத்துப்பாலில் “புன்கண்ணை, வாழி, மருள்மாலை! எம்கேள்போல் வன்கண்ணதோ நின்துணை?” (குறள்:123:2) என்ற குறளைப் புரிந்துகொள்ளலாம். தலைவியின் அந்தப்பேச்சு “எளிமைப்பட்டுள்ளாய், வாழி, மயங்கிய மாலையே! எம் துணைபோல் நின்துணையும் கொடுமையானதோ?” என்றுபொருள்படும்.

கண் இடப்பொருளோடு: இடம் என்ற பொருளில் வழங்கும்பொழுது பெரும்பாலும் மூன்று நிலைகளில் வழங்கும்:

(1) ஏதேனும் ஒருபொருளையோ கருத்தையோ குறிக்கும் சொல்லோடு வழங்கும்: “வினைக்கண்” = வினையில், செயலில்; “ஒருமைக்கண்” = ஒருமையில், ஒருபிறப்பில்.

(2) ஒரு  செயல்செய்பவரை அல்லது ஒரு நிலைமையில் இருப்பவரைச் சுட்டும் சொல்லோடு சேர்த்து வழங்கும்: “இல்லாள்கண்”, “நல்லார்கண்”, “பிறர்கண்”

(3) மற்றவிடங்களில் நிகழ்ச்சியைக் குறிக்கும்: “பற்றற்றகண்ணும்”, “எய்தியக்கண்ணும்”; அந்த இடங்களில் பொழுது என்று பொருள்கொள்வது இன்றைய வழக்கிற்கு இசையும்.

சான்றுகள் காண்போம்.

  • நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு”. (குறள்:41:8)

பொருள்: நல்லாரிடம் இருக்கும் வறுமையினைவிடத் துன்பமானதுதான், கல்லாரிடம் இருக்கும் செல்வம்”.

  • “மடிமை குடிமைக்கண் தங்கின் தன்ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும்” (குறள்:61:8)

பொருள்: “சோம்பல் குடும்பப்பண்பில் தங்கினால் தன் எதிரிகளுக்கு அடிமையாகும் நிலைக்கு அனுப்பிவிடும்”

  • ஒருமைக்கண் தான்கற்ற கல்வி எழுமையும் ஏமாப்பு உடைத்து” (குறள்:40:8)

பொருள்: “ஒருபிறப்பிலே தான்கற்ற கல்வி ஏழுபிறப்புக்கும் பாதுகாப்பு உடையது.

கண் என்பதைப் பொழுது என்று பொருள்கொள்வது இயல்பாகும் நிகழ்ச்சித் தொடர்கள்:

  • “எனைவகையான் தேறியக்கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர்பலர்” (குறள்:52:4)

பொருள்: “எத்தனைவகையால் தேறியபொழுதும் வினைவகையில் வேறாகும் மக்கள் பலர்”. அத்தாவது எத்தனை வகையாக ஆராய்ந்து வேலைசெய்ய உறுதிசெய்தாலும் உண்மையாக வேலைசெய்கிறபொழுது தம் பாங்கிலே வேறுபடும் மக்கள் பலர் என்று பொருள்.

  • பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள” (குறள்:53:1)

பொருள்: “செல்வம்[1] அற்றபொழுதும் பழைமையுறவைக் கொண்டாடும் இயல்புகள் சுற்றத்தாரிடத்திலேதான் உள்ளன”.

முடிவுரை:

திருக்குறளில் நூற்றுக்கணக்கான இடங்களில் கண் என்கின்ற சொல்லைக் குழம்பாமல் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரையின் விளக்கம் உதவும் என்று நம்புகிறது. மேலும் செய்யுள்களில் வாய், தலை போன்ற உறுப்புப் பெயர்கொண்ட சொற்களையும் பொதுவாகவே அன்றாடச் சொற்கள்போல் ஒலிக்கும் பழக்கப்போலிச் சொற்களையும் விழிப்போடு கவனமாக ஓதவேண்டும் என்னும் நெறிமுறைத்தெளிவும் கிடைக்கும். மேலும் தமிழ்மொழிக் கல்விமுறையும் மாறித் தேர்வுகளில் இப்படிச் செய்யுள்களின் சொற்றொடர்களின் பொருளை வெளிப்படையாக வினாவி மதிப்பிடவேண்டும்; அப்பொழுதுதான் தமிழர்கள் இலக்கியப்பயன்பெற முடியும்.

Addressing the reader thank you for not leaving and reading the http://collegewritingservice.org/ research paper

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “செய்யுள்களை எளிதில் புரிந்து கொள்வது எப்படி? – 2”
  1. நந்தினி மருதம் says:

    கட்டுரை சிறப்பாக இருக்கிறது. புதிய அணுகுமுறையில் திருக்குறளை அணுகி இருக்கிறீர்கள். மிகுந்த முயற்சியும் கடுமையான உழைப்பும் கூர்ந்த் அறிவியல் நெறி சார்ந்த ஆய்வுப்பார்வையும் இக்கட்டுரையின் பின்னால இருப்பதை அறிய முடிகிறது

    தங்கள் ஆய்வு வளம் சிற்க்க வாழ்த்துக்கள்
    ———————————————
    நந்தினி மருதம்

  2. raja says:

    அருமையான கட்டுரை.

  3. [...] கட்டுரையில் திருக்குறளில் கண் என்ற ஒலிகொண்ட சொற்… வகுத்தும் தொகுத்தும் விளக்குகிறது. [...]

  4. kondrai vendhan says:

    பேராசிரியர் திரு.பெரியண்ணன் சந்திரச்கரன் அவர்களின் அரும் பனி தொடரட்டும். மொழியின் சிறப்பும் இயல்பும் அதனை வழக்கில் கொண்டு வரும் பொழுதே முழுமை பெரும். சிறகு இத்தகு அறிஞர் பெருமக்களின் படைப்புகளை வெளியிட்டு, தமிழுக்கும் தமிழருக்கும் பயனளிக்கும் சேவை தொடரட்டும். நன்றி.

அதிகம் படித்தது