மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது?

தேமொழி

Nov 19, 2022

siragu KEELADI

தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது?

நம் முன்னோர்கள் எழுத்து வடிவில் விட்டுச் சென்ற ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் இல்லாத பொழுது அவர்களுடைய வாழ்வியல் குறித்து அகழாய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் படிமங்கள், புதைபொருள்கள், எலும்புகள் போன்ற தொல் பொருட்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் முறையில் கணிக்கப்படும் காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ஆகும். எழுத்து வடிவில் கிடைக்கும் சான்றுகளின் மூலம் படித்து அறிந்து கொள்ளக் கூடிய காலம் வரலாற்றுக் காலம் ஆகும். இது நாம் அனைவரும் பள்ளியில் படித்த வரலாறு குறித்த ஓர் அறிமுகமே. ஆகவே எழுத்தின் தோற்றமே வரலாற்றுக் காலத்தின் துவக்கம் எனலாம்.

தொல்பொருட்கள் மூலம் முன்னோர் வாழ்வியலை அறியும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் முன்னோர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு எத்தகைய கருவிகளைப் பயன்படுத்தினார்கள் என்பதன் அடிப்படையில்கற்காலம் (பழைய கற்காலம் மற்றும் புதிய கற்காலம்) என்றும், உலோகக் காலம் (செம்புக் காலம் மற்றும் இரும்புக் காலம்) என்றும் காலத்தைக் கணிக்க உதவியாகப் பிரித்து அறியப் படுகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட காலமும் வரலாற்றுக் காலமும் ஆகிய இப்பிரிவுகள் முறையே கற்காலம் → உலோகக் காலம் → வரலாற்றுக் காலம் எனக் காலக்கோட்டில் அமைத்து வரலாறு எழுதப்படுகிறது.

சங்க கால மக்களின் எழுத்தறிவு:

சங்ககால இலக்கியத்தில் நடுகற்கள் பற்றிய செய்திகள் உள்ளன. “கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து” (அகம் 343) என்றும், ”பீடும் பெயரும் எழுதி” ”எழுத்துடை நடுகல்” போன்ற தொடர்கள் நடுகற்களில் வீரர்களின் பெயரை மட்டுமன்றி அவர்கள் எதன்பொருட்டு மரணம் எய்தினர் என்பதையும் பொறித்துள்ளனர் என்பதை அறியத் தருகின்றன. தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த தொல்லியல் தடயங்களை அறிவியல் முறையில் கரிமப் பகுப்பாய்வு செய்து அறியப்பட்ட காலக்கணிப்பில் இன்று நாம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் சங்ககால மக்கள் எழுத்தறிவு பெற்று இருந்துள்ளதை அறிய முடிகிறது.

குறியீடுகள், தமிழி எழுத்துகள் – அதன் வளர்ச்சி:

முத்திரைகளில் உருவ எழுத்துகள் மற்றும் குறியீடுகள் போன்றவை சிந்து சமவெளி அகழாய்வில் கிடைத்துள்ளன. இத்தகைய குறியீடுகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக, சிந்துவெளி குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் தென்னிந்தியாவில் ‘மட்டும்’ கிடைக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 70 விழுக்காடு குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. உருவ எழுத்துகளிலிருந்து குறியீடுகளும், பின்னர் அதிலிருந்து எழுத்து முறையும் உருவானது. அகழாய்வு கண்டுபிடிப்புகளும் இதை உறுதிப்படுத்துகிறது. தமிழக அகழாய்வுகளில் மேலடுக்குகளில் தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் அதற்குக் கீழே உள்ள அடுக்குகளில் காலத்தால் முந்தைய குறியீடுகளும் கிடைக்கின்றன.

தமிழகத்தின் தொல்லியல் அகழாய்வுகள்:

ஒரு பண்டைய நாகரிகத்தின் கூறுகளை அறிந்துகொள்ள உதவுவது அகழ்வாய்வு. குறிப்பாக வெவ்வேறு மண்ணடுக்குகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அம்மக்கள் வாழ்ந்த காலத்தினை கண்டறிய உதவுகிறது. அகழாய்வு மூலம் தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்ந்து, பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருள்களைச் சேகரித்து, அவற்றைச் செயல்முறைக்கு உட்படுத்தி(processing), காலக்கணிப்பு செய்து, பதிவு செய்து, ஆய்வு செய்தல் ஒரு பகுதியின் தொன்மை மற்றும் பண்பாட்டினைக் கண்டறிய உதவுகிறது. ஓரிடத்தில் எப்போதிலிருந்து மக்கள் வாழத் தொடங்கினர் என்பது முதல் வரலாற்றுப் போக்கில் விடை அறியாத வினாக்களுக்கும் அகழாய்வின் மூலம் அறிவியல் வழியில் உரிய விடை கிடைக்க வழியுண்டு.  இன்றைய நாட்களில் தமிழகத்தில் செய்யப்பட்ட பல தொல்லியல் அகழாய்வுகள் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் முன்னோர்கள் வாழ்வை நாம் அறிந்து வருகிறோம். ஆகவே தொல்லியல் ஆய்வுகளும் தொல்லியல் அகழாய்வுகளும் தமிழர்களின் வரலாற்றைத் தெளிவுபடுத்த இன்றியமையாதவையாக அமைகின்றன.

தமிழ்நாட்டில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட சில முக்கியமான இடங்கள்:

இராமநாதபுரம் மாவட்டம்:   அழகன்குளம், தேரிருவேலி

ஈரோடு மாவட்டம்:    கொடுமணல்

கரூர் மாவட்டம்:கரூர்

காஞ்சிபுரம் மாவட்டம்:காஞ்சிபுரம்

கிருஷ்ணகிரி மாவட்டம்:    மயிலாடும்பாறை

சிவகங்கை மாவட்டம்:கீழடி

தருமபுரி மாவட்டம்:   மோதூர்

திருச்சி மாவட்டம்:    உறையூர்

திருநெல்வேலி மாவட்டம்: மாங்குடி

திருவள்ளூர் மாவட்டம்:     அத்திரம்பாக்கம், பட்டறைபெரும்புதூர்

தூத்துக்குடி மாவட்டம்:ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை

மதுரை மாவட்டம்:    மாங்குளம்

மயிலாடுதுறை மாவட்டம்:  பூம்புகார்

வேலூர் மாவட்டம்:    அப்புக்கல்லு

பாண்டிச்சேரி பகுதியில் – அரிக்கமேடு

தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு கீழ்க்காணும் ஏழு இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றது.

1. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் – சிவகங்கை மாவட்டம்

2. சிவகளை – தூத்துக்குடி மாவட்டம்

3. கங்கைகொண்ட சோழபுரம் – அரியலூர் மாவட்டம்

4. மயிலாடும்பாறை – கிருஷ்ணகிரி மாவட்டம்

5. வெம்பக்கோட்டை – விருதுநகர் மாவட்டம்

6. துலுக்கர்பட்டி – திருநெல்வேலி மாவட்டம்

7. பெரும்பாலை – தர்மபுரி மாவட்டம்

அத்திரம்பாக்கம் அகழாய்வு (15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்):

அத்திரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் —

இந்தியாவில் காலத்தால் முற்பட்டதாகக் கிடைத்திருப்பவை அத்திரம்பாக்கம் தொல்லியல் தடயங்கள். அத்திரம்பாக்கம் என்ற இடம் ஒரு தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் உணவுக்காக விவசாயம் செய்தல், கால்நடை விலங்குகளை வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில், கொற்றலையாறு பகுதியில் அமைந்துள்ளது அத்திரம்பாக்கம். இப்பகுதி கற்கருவிகள் செய்வதற்கு ஏற்ற கற்கள் கிடைக்கும் பகுதி. இங்கு வாழ்ந்த மக்கள் அச்சூலியன் கருவி என்றழைக்கப்படும் கைக்கோடரி கருவிகளை ஆற்றுப்படுகையில் கிடைக்கும் குவார்சைட் (quartzite) கற்களைக் கொண்டு உருவாக்கியுள்ளார்கள். இந்த அச்சூலியன் கருவிகள் வெட்டுவதற்கும், குழி தோண்டுவதற்கும் முற்கால மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகிய நிலப்பொதியியல் வல்லுநர்கள் 19ஆம் நூற்றாண்டில் அத்திரம்பாக்கத்தில் தொல்லியல் தடயங்களாகக் கற்காலக் கருவிகளைக் கண்டெடுத்தனர். அண்மையில் சாந்தி பப்பு செய்த ஆய்வுகளின் வழியாக இந்த இடம் சுமார் 15 லட்சம் வருடங்களுக்கும் மேல் பழமையானது என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. அத்திரம்பாக்கம் அகழாய்வின் மூலம் கீழைப் பழங்கற்காலம் (Lower Palaeolithic period), இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic period), மேலைப் பழங்கற்காலம் (Upper Palaeolithic period) மற்றும் இடைக்கற்காலம் (Mesolithic period) (நுண்கற்கருவிக் காலம், Microlithic period) ஆகிய காலத்தைச் சேர்ந்த சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பட்டறைபெரும்புதூர் அகழாய்வு(30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்):

பட்டறைபெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம் —

சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டறைபெரும்புதூர் கிராமத்தில் நடந்த அகழாய்வு தொல்லியல் அகழாய்வில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கண்டறிந்துள்ளனர். பட்டறைபெரும்புதூர் அகழாய்வின் முக்கியத்துவம், தமிழ்நாட்டில் இதுநாள்வரை அகழாய்வு நடந்த பகுதிகளில், இவ்விடத்தில் மட்டும்தான் கற்காலம் முதல் தற்போதைய காலம் வரை மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்ததற்கான பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காட்டும் தடயங்களை இங்குள்ள அகழாய்வு அடுக்குகளின் வழி அறியமுடிந்துள்ளது. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் (Megalithic Period) சேர்ந்த கைக்கோடரி, கத்தி, சுரண்டி (scrapper) போன்ற கற்கருவிகள் போன்றவையும், சங்க கால செங்கற் கிணறு ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது.

4200 ஆண்டுகள் பழமையான இரும்பு பயன்பாடு அறிந்திருந்த மயிலாடும்பாறை நாகரிகம்

மயிலாடும்பாறை அகழாய்வு(கி.மு.2040):

மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் —

தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை பகுதியில் ஈமச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வாழ்விடப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டிற்கு வந்த காலம் 4200 ஆண்டுகளுக்கு முன்னர் என்ற மிக முக்கிய தரவு கிடைக்கப்பெற்றது. இதற்குச் சான்றாக இரும்புக் கால ஈமப்பொருட்கள், இரும்பால் ஆன நீண்ட வாள் போன்றவை மயிலாடும்பாறையில் கிடைத்துள்ளன.

3200 ஆண்டுகள் பழமையான பொருநை ஆற்றங்கரை நாகரிகம்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு (கி.மு.950):

ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி மாவட்டம் —

இந்நாட்களில் தாமிரபரணி என்று அறியப்படும் பொருநை ஆற்றின் தென்கரையில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் நாகரிகத் தொட்டில் என்று கூறக்கூடிய சிறப்புப் பெற்றது ஆதிச்சநல்லூர் – பொருநை ஆற்றங்கரையின் நாகரிகம்.

ஜெர்மானிய தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் யாகோர் (Dr. Jagor, 1816 — 1900) 1876ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூர் பகுதியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் மிகப்பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகளைக் கொண்ட பண்டைய ஈமக்காடு இங்கிருப்பதைக் கண்டறிந்தார். ஆதிச்சநல்லூர் ஈமக்காடு 115 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அவர் இப்பகுதியில் சேகரித்த தொல் பொருட்கள் பெர்லின் அருங்காட்சியகத்தின் சேமிப்பில் உள்ளன. தற்பொழுது ஜெர்மனியின் லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெறும் “அகம் புறம்” என்ற தமிழர் பண்பாட்டுக் காட்சியில் இவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

டாக்டர் யாகோர் செய்த ஆய்விற்குப் பின்னர், ஆதிச்சநல்லூர் பகுதியில் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா (Alexander Rea, 1858 — 1924)

1903-04-ஆம் ஆண்டுகளில் பெரிய அளவில் அகழாய்வுகளை மேற்கொண்டார். அவரது ஆய்வில் கிடைக்கப் பெற்ற தொல்லியல் பொருட்கள் தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்திய ஒன்றிய அரசின் தொல்லியல் துறை 2003 ஆம் ஆண்டு முதல் நிகழ்த்திய தொல்லியல் அகழாய்வில் பல முதுமக்கள் தாழிகள் வெளிக் கொணரப்பட்டன. பின்னர் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆதிச்சநல்லூர் ஈமக்காட்டிலும், அதன் அருகில் உள்ள வாழ்விடப் பகுதியிலும் அகழாய்வுகளை மேற்கொண்டது. ஈமத்தாழிகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்ற பல தொல்பொருட்கள் இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன.

2021-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் வாழ்விடப்பகுதி முதன்முதலாகக் கண்டறியப்பட்டு ஆதிச்சநல்லூர் வாழ்விடப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் மூலக்கற்கள் மற்றும் நுண்கருவிகள், மேற்கூரை ஓடுகள், இரும்பு ஆணிகள், இரும்பினாலான தொல்பொருட்கள், கண்ணாடி மணிகள், குறியீடுகள் மற்றும் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், நுண்கற்காலம் முதல் தொடக்க வரலாற்றுக் காலம் வரை இப்பகுதியில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்துள்ளனர் என்பது சான்றுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த ஈமத்தாழியில் நெற்கதிர், பெண் உருவம், மான், முதலை போன்ற உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக வளமையின் வெளிப்பாடாக வடிக்கப்பட்டுள்ளன. பொன்னால் ஆன நெற்றிப்பட்டங்கள், உயர் ரக வெண்கலப் பாத்திரங்கள் (High tin bronze), வெண்கலத்தினால் ஆன விலங்கு, பறவை கலைப் பொருட்கள், வாள், குறுவாள் போன்ற இரும்பினால் ஆன ஆயுதங்கள், ஈமத்தாழிக்குள் நெல்மணிகள் ஆகியவை ஆதிச்சநல்லூர் ஈமக்காட்டு அகழாய்வில் கிடைக்கப் பெற்றன. ஈமத்தாழிக்குள் கிடைத்த நெல்மணிகளை அறிவியல் முறைப்படி கரிமக் காலக் கணிப்பு செய்ததில்,  நெல்மணிகளின் காலம் கி.மு.950 என்று அறியப்பட்டுள்ளது.

-தொடரும்

 


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது?”

அதிகம் படித்தது