மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அடையாளம் தொலைக்கும் நாஞ்சில் நாடு!….

சு.நாகராஜன்

Jul 9, 2016

siragu Naanjil nadu1

திருவிதாங்கூர் அரசின் நெற்களஞ்சியமாக இருந்த நாஞ்சில் நாடு இன்று தன் அடையாளத்தை இழந்து நிற்கின்றது. குமரி மாவட்டம் இப்படி ஆகி விட்டதே என கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கின்றார்கள் இயற்கை காவலர்கள். நெல் விவசாயத்தில் கொடி கட்டி பறந்த நாஞ்சில் நாட்டில் இப்போது நெல் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு அறுவடை காலத்திலும் சில விவசாயிகளுக்கு அது தான் கடைசி சாகுபடியாக இருப்பது தான் வேதனைக்குரிய ஒன்று. நாகர்கோவிலில் இருந்து வடமதியை(அழகியபாண்டியபுரம்) நோக்கி பயணிப்பதே சுகமான கவிதை தான். நகரின் எல்லைப் பகுதியில் இருக்கும் சி.பி.ஹச் மருத்துவமனையை கடந்ததும் சமுத்திரமாக விரிகின்றது புத்தேரி பெரிய குளம். அதனைத் தொடர்ந்து வடமதி முழுவதும் வரிசை கட்டி நின்று செழுமை சேர்த்துக் கொண்டிருக்கின்றது நெல் வயல்கள்.

நிற்க! இப்படி செழுமை கட்டியது சில ஆண்டுகளுக்கு முன்பு தான். வேளாண்மையில் மிகப்பெரிய வருமானம் இல்லாத நிலையிலும், விடாப்பிடியாக நெல் சாகுபடியில் ஈடுபட்ட வடமதி பகுதியிலும் நெல் போட்ட பூமியில் இப்போது வீடுகட்ட கல் போடப்பட்டுள்ளது. திரும்பிய திசையெல்லாம் பாரம்பர்ய நெல் சாகுபடி நடைபெற்ற பகுதிகளில் இன்று பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியில் மட்டுமே காட்சி பொருளாக அலங்கரிக்கின்றது.

siragu Naanjil nadu3

விவசாயிகளின் வீட்டுக்கு வீடு ஏர் மாடு, கறவை பால் மாடு இருந்த குமரி தன் அடையாளத்தை தொலைத்து நிற்கின்றது. உழவு ஓட்ட டிராக்டர்கள் வரிசை கட்டி நிற்கின்றது. அதில் விவசாயத்திற்கு மட்டும் என பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் ஏர் மாட்டு உழவுமுறையை அழித்தொழித்ததை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஏர் மாடு வேளாண்மை இருந்து அந்நியப்பட்டு போக, விவசாயிகளுக்கு வரமாக இருந்த தொழுவுரம் நாஞ்சில் நாட்டில் காணக் கிடைப்பதில்லை. வட்டார வழக்கில், நாஞ்சில் நாட்டு மொழி நடையில் நாட்டுப்புறப்பாடல் பாடிக் கொண்டே சேலையை முழங்காலுக்கு மேல் ஏற்றிக் கொண்டு நெல் நடவு செய்த பெண்மணிகளும் இப்போது நூறு நாள் வேலைக்கு பயணப்பட்டு விட்டனர். இப்போது நடவு முதல் அறுவடை வரை வேளாண் துறையில் இயந்திரங்களின் ஆட்சி தான். இப்போது குமரி மாவட்ட அறுவடை பணிக்கு சேலத்தில் இருந்து அறுவடை இயந்திரங்கள் வருகின்றன. இது போக குமரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையிலும் 2 அறுவடை வண்டிகள் இருக்கின்றது.

siragu Naanjil nadu6தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் இருந்ததைப் போல் திருவிதாங்கூரின் நெற்களஞ்சியமாக நாஞ்சில் நாடு தான் இருந்து வந்தது. நாஞ்சில் என்ற சொல்லுக்கு கலப்பை என்று அர்த்தம். அந்த அளவுக்கு நெல் சாகுபடியில் கொடிகட்டிப் பறந்த குமரி மாவட்டத்தில் கடந்த 1955ம் ஆண்டு 55,000 ஹெக்டேராக இருந்த நெல் சாகுபடி பரப்பு இப்போது 10,000 ஹெக்டேராக சுருங்கி விட்டது. பாரம்பரிய நெல் சாகுபடி முறைகளிலும், பழக்கவழக்கங்களிலும் கூட காணக் கூடாத மாற்றங்களே மலர்ந்துள்ளது.

siragu Naanjil nadu4

ஆரம்ப கட்டத்தில் நாஞ்சில் நாட்டு விவசாயிகள் அவர்களுக்குத் தேவையான விதை நெல்லை அவர்களே உற்பத்தி செய்து வந்தனர். 5 மரக்கால்(25 செண்ட்)நெல் சாகுபடி செய்யும் விவசாயி கூட அவருக்கு தேவையான விதை நெல்லை அவரே உற்பத்தி செய்து கொள்ளும் நிலை இருந்தது. விதை நெல்லை சேமித்து வைக்க வீட்டுக்கு, வீடு பத்தாயம், குலுக்கை, குதில் என அலங்கரித்தது. ஆனால் இப்போது விதை நெல்லைத் தேடி வேளாண்மை விரிவாக்க மையம், அரசு விதைப் பண்ணை, தனியார் விதை வியாபாரிகள் என கபடி ஆடுகின்றனர் நாஞ்சில் நாட்டு விவசாயிகள். ஏறக்குறைய விதை நெல்லை அவித்து தின்று விட்ட விவசாயி அறுவடைக்கு புறப்பட்ட கதையும் இதுவும் ஒன்று தான்.
விதை முதல் அறுவடை வரை இன்று தற்சார்பை இழந்து நிற்கின்றனர் நாஞ்சில் நாட்டு விவசாயிகள். விதை குலுக்கையில் பூச்சி, நோய் தாக்கத்தில் இருந்து விதை நெல்லை பாதுகாக்க வேப்ப இலையையும், நொச்சி இலையையும் போட்டு வைக்கும் விவசாயியை மாத்திரம் அல்ல. இப்போதெல்லாம் குலுக்கையும், பத்தாயமும், குதிலுமே அரிதாகி விட்டது. தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தான் கன்னி பூ, கும்பப் பூ என சாகுபடி அழைக்கப்படுகின்றது. இவை மலையாள மாதங்களின் குறியீடு. தொடக்க காலத்தில் குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நாளேறு செய்தல் என்ற நிகழ்வு இருந்தது. நல்ல நாள் குறித்து அரசுஇதை அறிவிக்கும். ஊருக்கு, ஊர் முரசடித்து அறிவிப்பு செய்யப்படும். அன்றைய நாளில் தான் விதை நெல் விதைப்பு செய்யப்படும். அதன் பின்னூட்டமாக நாள் கதிர் கொள்ளுதல், புத்தரிசி பொங்குதல் என நடைபெற்ற விழாக்கள் பலவும் இன்று அந்நியப்பட்டு நிற்கின்றது. நீர் பாய்ச்ச நாஞ்சில் நாட்டில்  பயன்படுத்தப்பட்ட இறவட்டியை இப்போது காண முடியவில்லை. பம்ப் செட்கள் கபளீகரம் செய்து விட்டது.

ஊடு மண்வெட்டி, பொழித்தட்டுப் பலகையோடு வயலுக்கு சென்ற விவசாயிகள் இப்போது ஒவ்வொன்றிற்கும் கருவிகளை சார்ந்தே உள்ளனர். துவக்க காலங்களில் நீர் ஆதாரங்களை விவசாயிகளே கவனித்து வந்தனர். குடிமராமரத்து பணிகள் சிறப்பாக நடைபெற்றது. இப்போது நீர் ஆதாரங்கள் விவசாயிகளின் கையில் இருந்து விலகி விட்டது. நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம், வடசேரி பேருந்து நிலையம், அண்ணா விளையாட்டு அரங்கம், நாகராஜா கோவில் திடல், செட்டிக்குளத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் என குளங்களாக இருந்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்டவற்றின் பட்டியலும் இங்கு நீளம். அதன் எதிர்விளைவு கடைமடை வரை நீர் கிடைப்பதில்லை. விவசாயிக்கு போதிய விலை இல்லை என வெளியேறும் நிலையும் குமரியில் அதிகம்.

siragu Naanjil nadu8

தமிழகத்தில் அதிக அளவில் மக்கள் அடர்த்தி உள்ள மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்கு வேளாண் துறை வீழ்ச்சி அடையும் நிலையில் தான் மனை வணிக புள்ளிகள் நிலத்தை வாங்குவது நடக்கின்றது. சோறு போட்ட விளைநிலம் கூறு போடப்படுகின்றது. விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற முறையான அனுமதி பெற வேண்டும் என்ற சட்டத்திற்கு இங்கு சத்து இல்லை. 6 மாதங்கள் பாடுபட்டு நெல் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 10,000 ரூபாய்க்கும் குறைவாகவே லாபம் கிடைக்கின்றது. ஏறக்குறைய ஒரு  ஏக்கரில் நெல் சாகுபடி செய்யும் விவசாயியின் மாதாந்திர வருமானம் 1500க்கும் குறைவு தான். முதியோர் உதவித் தொகை 1000 கிடைக்கும் இன்றைய சூழலில் இது தான் ஏர் பிடித்தவனின் கதி.

இப்போதெல்லாம் நாஞ்சில் நாட்டில் வேளாண்மை தொழில் செய்பவர்கள் தங்கள் வாரிசுகளை வேளாண்மையில் சேர்த்துக் கொள்வதில்லை. விவசாயத்திற்கு குமரியில் சமூக அங்கீகாரம் இல்லை என்கின்றார்கள் அனுபவ விவசாயிகள். ’’சாப்ட்வேர் மாப்பிள்ளை மோகத்தில், சாப்பிடும் விளைபொருள்களை உற்பத்தி செய்யும் என் பையனுக்கு யாரும் பொண்ணு தரலடே.. ”என வெள்ளந்தி விவசாயி ஒருவர் பேருந்து பயணத்தில் புலம்பியது மட்டும், இப்போதும் செவிகளில் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

siragu Naanjil nadu9

இன்று விவசாய வேளாண் இடுபொருள்களின் விலை கடுமையா கூடிருச்சு. ரசாயன உரத்தையும், பூச்சிக்கொல்லி மருந்தையும் விவசாயிகளுக்கு பழக்கிக் கொடுத்ததே நம்ம ஆட்சியாளர்கள் தான். இதன் காரணமாக செலவில்லாத பாரம்பரியமான இயற்கை விவசாயத்தை விட்டுட்டு எல்லோரும் ரசாயணம் பக்கம் வந்துட்டாங்க. இப்ப உரச்செலவும் கூடிருச்சு. விவசாயமும் அதிக செலவுள்ளதா மாறிப் போயிடுச்சு. அதிலும் குறிப்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் கொஞ்சம், நஞ்சமில்லை. பல பகுதிகளில்  கடைமடை வரை தண்ணீர் வராம போராடி தான் வெள்ளாமை பண்ணுறாங்க. இவ்வளவு கஷ்டப்பட்டாலும் குவிண்டாலுக்கு 1200 ரூபாய்க்கும் குறைவாகத் தான் விலை இருக்கு. ரியல் எஸ்டேட் பண்ண பிளாட் போடுறவன் கூட அவன் நிலத்துக்கு அவன் தான் விலை வைக்குறான். ஆனா உலகத்துக்கே சோறு போடுற விவசாயியோட விளை பொருளுக்கு  அரசாங்கம் விலை வைக்குது. உழுதவன் கணக்குப் பார்த்தா உழக்குக் கூட மிஞ்சாதுன்னு சொல்றது நெல் விவசாயிகளுக்குத் தான் பொருந்தும். “என்கின்றார் விவசாய நண்பர் ஒருவர்.

கடுமையான உற்பத்தி செலவீனம், வேலையாட்கள் பற்றாக்குறை, கொள்முதல் செய்வதில் சிக்கல் உள்ளிட்ட அத்யாவசிய பிரச்னைகளை குமரி மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனிக்கா விட்டால் எதிர்கால தலைமுறையினர் நெல்லை பார்க்க கண்காட்சிக்கு போகும் சூழல் உருவாகும்.

Getting them to open up on their own will be far remarkable source more healthy than arguing and demanding explanations

சு.நாகராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அடையாளம் தொலைக்கும் நாஞ்சில் நாடு!….”

அதிகம் படித்தது