மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்காவில் இந்திய பிரதமரின் ஊர்வலம்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 21, 2019

siragu howdy modi4

செப்டம்பர் 17, 2019 எழுத்தாளர் Pieter Friedrich ஹுஸ்டன் சிட்டி கவுன்சில் கூட்டத்தில், இந்திய பிரதமர் மோடி அவர்களின் “Howdy Modi” என்ற ஊர்வலத்திற்கு எதிராக முழங்கியுள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு:-

இந்து தேசியத்தை வலியுறுத்தும் பா.ச.க-வின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 22, “Howdy Modi” எனும் ஊர்வலத்தில் பங்கேற்க ஹுஸ்டன் வருகின்றார். அந்த ஊர்வலத்தில் ஹுஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னர் பங்கேற்க உள்ளார்.

மோடியின் கரங்களில் குருதி தோய்ந்துள்ளது. அவரை வரவேற்க கைக்குலுக்கும் நபர்களின் கரங்களில் ஒட்டிக்கொள்ளப் போகும் குற்றங்களின் பங்களிப்பிலிருந்து அவர்கள் தங்கள் கைகளை கழுவிட முடியாது.

“Howdy Modi” எனும் இந்த ஊர்வலம் அமெரிக்காவில் இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையால் முன்னெடுக்கப்படுகின்றது. ஆர்எஸ்எஸ் துணை இராணுவ அமைப்பு போல் செயல்படக்கூடிய ஒன்று. அதன் சீருடை ஹிட்லர் யூத் அமைப்பின் உறுப்பினர்கள் அணிந்திருந்தை ஒத்திருக்கும். இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதே வருடம் தான் ஹிட்லரின் நாஜி அமைப்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆர்எஸ்எஸ் இத்தாலியின் முசோலினி பாசிச அமைப்பை போல் தன்னை வடிவமைத்துக்கொண்டது.

1940 – 1973 வரை ஆர்எஸ்எஸ் அமைப்பை வழிநடத்திய எம்.எஸ் கோல்வால்கர் நாஜி இனக்கொள்கையை ஆதரித்தவர். யாரெல்லாம் இந்து மத நாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனரோ அவர்கள் அனைவரும் துரோகிகள் என கோல்வால்கர் குறிப்பிட்டார். அதே போன்று இந்து மதத்தை துறந்து வேறு மதத்தை தழுவுவது தேசத் துரோகம் என்றும் கருதினார். 1939 இல் இனத் தூய்மையைக் காப்பாற்ற ஜெர்மனியில் நடத்தப்பட்ட யூத இன அழிப்பை அவர் பாராட்டி, இனத்தூய்மை அங்கு சரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இது இந்துத்துவத்தை நிறுவிட நினைக்கும் நமக்கு கற்றுக்கொள்ள நல்ல பாடம் என்று தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் வன்முறையை தூண்டும் ஒரு அமைப்பு. பல முறை அந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இந்தியாவின் தேசத் தந்தை காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த ஒருவர் கொன்றபோது முதல் முறை தடை செய்யப்பட்டது. 2002 இல் மனித உரிமை கண்காணிப்பு குழு, குஜராத்தில் 2000 இசுலாமிய மக்களைக் கொன்ற கொடூரங்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பே காரணம் என்றது. 2012 இல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர ஊழியர் சுவாமி அசிமானந்த் 2006- 2008 வரை நடந்த பல்வேறு தொடர் குண்டு வெடிப்புக்களுக்குத்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். ஜுன் 2019 இல் யுனைட்டட் ஸ்டெட்ஸ் கமிஷன் ஆன் இண்டர்நேஷனல் ரிலிஜியஸ் பிஃரிடம் (United States commission on international religious freedom) ஆர்எஸ்எஸ் அமைப்பு எவ்வாறு இந்து அல்லாதவர்களையும், இந்து மதத்தில் கீழ் சாதி எனப்படுவோரையும் அந்நியப்படுத்துகின்றது என்று எச்சரித்தது. இதன் மூலம் மத தீவரவாதம் பரப்பபடுவதாகவும் குற்றஞ்சாட்டியது.

அதனால் என் கருத்துப்படி, “Howdy Modi” என்பதை மாற்றி “Adios Modi” என்று குறிப்பிட வேண்டும் என்றேன்.

(Adios என்றால் குட்பை என்று பொருள்படும்) சென்ற மாதம் ஒரு வெள்ளை நிறவெறி தீவிரவாதி எல் பாசோ, டெக்சாசில் (El Paso, Texas)22 மக்களை படுகொலை செய்தான். அவனின் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு உந்துதலாக இருந்தது நியூசிலாந்தில் உள்ள மசூதியில் 51 பேரை படுகொலைச் செய்த சம்பவம்.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு அடித்தளமாக இருந்தது 2011 இல் நார்வேயில் 77 பேரை கொன்ற படுகொலைச் சம்பவம்.
நார்வே தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஆண்டர்ஸ் பிரேவீக் (Anders Breivik) தான் எப்படி உலகெங்கும் இயங்கும் தீவிரவாத அமைப்புகளால் தூண்டப்பட்டேன் என்று எழுதியபோது , இந்தியாவில் இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றிக் குறிப்பிட்டுள்ளான்.

வலது சாரி இந்து தேசியத்தை பாராட்டி, ஆர்எஸ்எஸ் இந்திய நாடு முழுவதும் இந்து தேசமாக மாற்றும் திட்டத்தை வரவேற்றுள்ளான். மேலும் ஆர்எஸ்எஸ் இசுலாமியர்களுக்கு எதிராக நடத்தும் கொலை வெறித்தாக்குதல்களை பாராட்டியுள்ளான். வெள்ளை நிறவெறி மற்றும் ஆர்எஸ்எஸ் குறிக்கோள்கள் ஒத்துப்போவதாக கூறினான். ஆர்எஸ்எஸ் சிடம் கற்றுக் கொள்ள நிறைய செய்திகள் இருப்பதாகவும் தெரிவித்தான்.

ஆர்எஸ்எஸ் பாசிச இராணுவ அமைப்பு. 1925 இல் ஹிட்லர் Mein Kampf வெளியிட்ட அதே ஆண்டு தொடங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் நாஜிக்களை பார்த்து உருவாகி இன்று நரேந்திர மோடியை உருவாக்கி உள்ளது.

2002 இல் 2000 இசுலாமியர்களை படுகொலை செய்த குற்றத்தில் மோடி தான் தலைமை தாங்கினார். அவர்கள் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தனர், உயிரோடு இசுலாமிய மக்களை கொளுத்தினார்கள். இதை முன்னெடுத்தவர்கள் இந்த சம்பவத்தை மோடியே ஆதரித்து தொடங்கி வைத்ததாக பிறகு ஒத்துக்கொண்டனர்.

இந்த கொலைகளை முன்னின்று செய்த காரணத்தால் பத்து வருடங்களுக்கும் மேல் அமெரிக்காவில் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இன்றைக்கு மோடியின் ஆட்சியின் கீழ் கிறித்துவர்கள், தலித்துகள், இசுலாமியர்கள், சீக்கியர்கள் மற்றும் இந்த வெறுப்பை விரும்பாத இந்துக்கள் அனைவரின் உயிர்களும் அச்சுறுத்தலில் இருக்கின்றன.

மோடியின் கரங்கள் குருதியில் தோய்ந்துள்ளது. அவரை வரவேற்க கைக்குலுக்கும் கைகளில் இருந்து குற்றக் கரைகளின் பங்கெடுப்பை கழுவிட முடியாது.

“அநீதி நடக்கும் தருணங்களில் நாம் நடுநிலை வகித்தால் நாம் ஆதிக்கத்தின் பக்கம் சாய்ந்துவிட்டதாக பொருள்” என்று பிஷப் டெஸ்மண்ட் டுடு ஒரு முறை குறிப்பிட்டார்.

ஒரு ஆதிக்கவாதிக்கு சிகப்பு கம்பளம் விரிப்பதின் பொருள் என்ன?

தத்துவ ஞானி பிளேட்டோ குறிப்பிட்டதுப் போல், “மௌனம் சம்மதம்” என்பதாகும். எனவே “Howdy Modi” என்பதற்கு பதிலாக “Adios Modi” என்று குரலெழுப்ப வேண்டும். என்று எழுத்தாளர் Pieter Friedrich தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்காவில் இந்திய பிரதமரின் ஊர்வலம்”

அதிகம் படித்தது