மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்கள் படைத்த சிறுகதைகளும் அவற்றின் வழிய பெறப்படும் ஆளுமைகளும்

முனைவர் மு.பழனியப்பன்

Mar 18, 2023

siragu-pen-ezhuthalargal2-150x150
பெண்கள் படைத்த சிறுகதைகளும் பெண்தன்மையும் ஆண் எழுத்தில் இருந்து வேறுபட்ட தன்மைகளும் கொண்டனவாகும். குறிப்பாக எழுத்தாளர் அம்பையின் எழுத்துக்கள் மிக வேறுபட்டவை. அவரின் வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை வித்தியாசமான சிறுகதைத்தொகுப்பு. சிறகுகள் முறியும் என்பதும் சிறப்பான சிறுகதைத் தொகுப்பாகும்.

கணவன், மனைவி உறவுக்குள் மனைவி என்பவள் கணவன் கையாளக் கிடைத்த பொருளாகவே இருப்பதை 1972-ல் வெளியான இவரது ‘சிறகுகள் முறியும்…’ சிறுகதை உணர்த்தியது. தோற்றப் பொருத்தம் இல்லை என்கிற அம்மாவின் கருத்தைப் புறந்தள்ளி உடல் பருத்த பாஸ்கரனை மணந்துகொண்டாள் சாயா. தமிழ்த் திரைப்படக் கதாநாயகனாக அவனை வரித்துக்கொண்டு கனவுகள் கண்டவளை, திருமணம் வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றது. அவள் கனவில் கண்ட பாஸ்கரன் அல்ல அவன். இப்போது தமிழ்ப் படக் கதாநாயகன் செத்துத் தொலையட்டும் பாவி, வாழ்ந்து என்ன ஆகப்போகிறது என்கிற மனநிலைக்கு வந்துவிட்டாள். ‘ஆண்கள் உடம்பெல்லாம் வயிறாக, மார்புச் சதை தொங்க ஊதக் கூடாது, மென்மையே இல்லாத ஆண்களுக்குக் குழந்தையே பிறக்கக் கூடாது என்று கட்டாய வாஸக்டமி செய்துவிட வேண்டும்’ என்று மனத்துக்குள் ஆயிரமாயிரம் சட்டங்களை இயற்றுகிறாள். கட்டுகள் ஏதுமின்றி நிச்சலமான அமைதியில் சிறகுகள் அசைய வேண்டும் என நினைக்கிறாள் சாயா.

இந்தியாவின் பெரும்பான்மையான இந்துப் பெண்களின் நிலை என்னவோ அதுதான் சாயாவின் நிலையும். அம்பை இந்தக் கதையை எழுதி நாற்பது ஆண்டுகள் ஆன பின்னும் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. வாழ்க்கை நவீனப்பட்டிருக்கிறதே தவிர குடும்ப அமைப்புக்குள் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் புதுப்புது வடிவம் எடுத்திருக்கின்றன.

அம்மா ஒரு கொலை செய்தாள் கதையில் ஒரு பெண் குழந்தை பூப்படைகிறாள்.. அக் குழந்தை நல்ல கருப்பு. அவளைப் பெற்ற தகப்பனே கறுப்பி கறுப்பி என்றுதான் அழைக்கிறார். ஆனால் அவளுடைய அம்மா அவளை அழகி என்று கொண்டாடுகிறார். அம்மா ஊருக்குப் போன நாளில் அக்குழந்தை பூப்பெய்துகிறாள். வீட்டில் உள்ள அக்காவும் மற்றவர்களும் அசிரத்தையோடும் சாதாரணமாகவும் அதை எதிர்கொள்ள, அன்று ஏற்படும் பயமும் நடுக்கமாக, தன்னைச் சீராட்டும் அம்மாவை எதிர்பார்த்து அவளிடம் எல்லா மனக்கிலேசங்களையும் கோட்டுவதற்காக அக்குழந்தை காத்திருக்கிறாள். தங்கை மகளை பெண் பார்க்க வருகிறார்கள் என்பதற்காக, ஒத்தாசையாக இருக்க என்று, ஊருக்குப் போனா அம்மா மறு நாள் திரும்பி வருகிறாள். தங்கை மகள் கருப்பு என்பதால் வந்த வரன் தட்டிப் போகிறது. அந்தச் சோகத்தோடு வீடு திரும்பும் அம்மா தன் கருத்த மகளும் பூப்படைந்து நிற்பதைக் கண்டு, “ உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம். இதுவேற இனிமே ஒரு பாரம்..” என்று சுளீரெனக் கேட்கிறாள். ஒலி இல்லாக்கேவல்கள் அக்குழந்தையின் நெஞ்சில் முட்டக் கதை முடிகிறது. அக்குழந்தையின் மனதில் தெய்வமாக உயர்ந்து நின்ற அம்மாவை அம்மாவே கொலை செய்கிறாள்.

காட்டில் ஒரு மான் கதையில் வரும் தங்கம் அத்தை பூப்படையவே இல்லை. ஆனால் அவளுக்குத் திருமணம் ஆகிவிடுகிறது.திருமணத்தின் தொடர் நிகழ்வாகப் பிள்ளை பெற்றாகணுமே? தன்னால் தன் கணவனுக்கும் பிள்ளைப் பாக்கியம் இல்லாமல் போகக் கூடாது என்பதற்காகத் தானே முன்னின்று கணவனுக்கு இன்னொரு திருமணத்தை நடத்தி வைக்கிறாள். அவள் மூலம் ஏழெட்டுக் குழந்தைகள்.

அவளைப் பூப்படைய வைப்பதற்காகச் செய்யப்பட்ட வைத்தியங்கள் என்னும் சித்திரவதையிலிருந்து தப்பி ஓடிய நாட்கள் ரணமாக அவள் நெஞ்சில் நிலைத்து இருக்கின்றன. வீடு முழுக்க நிறைந்திருக்கும் குழந்தைகளுக்குத் தானே புனையும் கதைகள் சொல்வதை தங்கம் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவள் புனையும் கதைகளில் ஒன்றுதான் காட்டில் ஒரு மான். பழகிய காட்டிலிருந்து வழி தப்பி வேறு ஒரு காட்டுக்குள் புகுந்து விட்ட ஒரு மான் திகைத்து நிற்கிறது. பழகிய பாதைகள் இல்லை. பழகிய மரம் செடி கொடிகள் இல்லை. பல நாள் திகைத்து நிற்கும் மான் பின்னர் ஒரு பௌர்ணமி நிலவொளியில் மந்திரம் போட்டது போலப் புதிய காட்டைப் புரிந்து கொள்கிறது. வேற காடாக இருந்தாலும் இங்கும் அருவி இருந்தது. மரம் செடி எல்லாம் இருந்தது. அந்தப் புதுக் காட்டோட இரகசியம் எல்லாம் அந்த மானுக்கு இப்பப் புரிய ஆரம்பித்தது.

வெளிப்பாடு’ கதையில் ஓர் ஆய்வாளர் பெண்மணி திருநெல்வேலிக்கு வருகிறார். பெண்களின் வாழ்க்கை பற்றிய ஆய்வு. அங்கே அவர் இரண்டு பெண்களைச் சந்திக்கிரார். முதல் பெண் மணி மணமானவர்.

அவள் தலையைப் பார்த்தாள். கருகருவென்று வெங்கலப் பானை மாதிரி முடிந்த தலைமயிர். “என் முடியைப் பாத்தீகளா? எனக்கு வயசு அம்பது. ஒரு முடி நரைக்கல. இன்னும் தூரம் போகலை.” (தூரம் நிக்கல)

உனக்கு மறைக்க ஒன்றுமே இல்லையா? உன்னையும் என்னை மாதிரி அடக்கி அடக்கித்தான் – தலைப்பு ஏன் இப்படித் தொங்கறது? இடுப்பில் செருகு. வாசல் பக்கம் என்ன பண்றே? வாயை மூடு. கொரல் வெளில வரக்கூடாது படிப்பு கிடக்கட்டும்; இந்தக் காயை நறுக்கித்தா. அப்புறம் தயிர் கடையலாம் – வளர்த்திருப்பார்கள். எந்த பலத்துடன் இப்படி வெள்ளையாய்ப் பேசுகிறாய்? சிரிக்கிறாய்?

– “பதினாலு வயசிலே கல்யாணம். இவுகளுக்கு வயசு இருபது அல்லு அசலு இல்ல. சொந்த மாமா பையன். பெறகு என்ன? சோறு வடிக்கிற ராச்சியந்தான். ரெண்டு பொட்டச்சிக. ஒரு மகன். கட்டிக் கொடுத்தாச்சு. அட, பேரன் எடுத்திட்டன்னா பார்த்துக்குங்களேன்.”

இதுதான் உன் வாழ்க்கையின் கதையா? நாலு வரியில்!

“தோசை வெச்சுட்டு வாரேன் அவுகளுக்கு. சாப்பிடச் சாப்பிட வெக்கணும். இல்லாட்டா மூக்கு மேல கோவம் புசுக்குன்னு. ஒரு அறை வெச்சார்னா …” சிரித்தாள். வெளியே விரைந்தாள் வாழை இலையுடன். —

“சாப்பிட வரீகளா? எனக்குப் பசிக்கி.”

“நான் தோசை சுடட்டுமா?” . “அட, தோசை சுடத் தெரியுமா?”

“ஏன், தெரியாதுன்னு நினைச்சீங்களா? உங்களை மாதிரி அவ்வளவு அழகா வராது. ஆனா சுடுவேன்.”

“என்ன மாதிரின்னா, என் வயசு என்ன உங்க வயசு என்ன? பத்து வயசு தொடங்கி சுடறேன். நாப்பது வருஷத்துல
ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை . . . அம்மம்மா ….” |

ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள். நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துக் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள்? எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்? இவள் சிரிக்கிறாள்.

“என்னா ரிப்போர்ட்டு எளுதணும்?”

“பொம்பளைங்க பத்தி.”

“பொம்பளைக பத்தி எளுத என்ன இருக்கு?” –

“அதாவது அவங்க எப்படி வாழறாங்க, என்னெல்லாம் வேலை செய்யறாங்க, அவங்க தங்க வாழ்க்கையைப் பத்தி என்ன நெனக்கிறாங்க …..”

“என்ன நெனக்கிறாங்க? புள்ள பெறுதோம். ஆக்கிப் போடுதோம்.”

“எப்பப்பாரு புள்ள பெறலியே? நடுவிலே ஏதாவது யோசிச்சிருப்பிங்க, இல்ல?”

“ஆமா, ரோசிச்சோம். போங்க.”

மௌனமாகச் சாப்பிட்டார்கள்.

வெளிப்பாடு கதையில் ஆய்வாளர் சந்தித்த முதல் பெண் மணி இவர். இவர் சொல்லுதல் போல பொம்பளைக பத்தி எழுத என்ன இருக்கு? என்ற கேள்விக்கு விடை தேடுதல் மிகச்சிரமம்.

இரண்டாவதாக அவர் சந்திக்கும் பெண் மணமாகாத ஓர் யுவதி.

ஒரு பேப்பரை எடுத்தாள். “கல்யாணம் கட்டிட்டு என்னெல்லாம் வேணும் சொல்லு. நான் பட்டியல் போடறேன்.”
“கேலியா?”

“சே, நிஜமாவே. சொல்லு.”

ஊஞ்சல் சங்கிலியில் தலையைச் சாய்த்து, முழங்காலைப் பலகையில் ஊன்றி நின்றாள். கூந்தல் அலையாய் நெற்றியில் விழுந்தது. பாய்மர இமைகள் மேலெழுந்தன படகுக் கண்கள் மிதக்க. பட்டியல் அவளிடம் இருந்தது.

தெருல நடக்குணும் தெனம்.

ஓட்டல்ல பலகாரம் சாப்பிடணும்.

கடைக்குப் போய் நானே பொடவை எடுக்கணும்.

சினிமா போகணும்.

நெறைய ஊர் பாக்கணும்.

பின்கட்டு உலகில் பதியப்பதிய நடந்தாள். எருமை மாட்டை அடக்கினாள். தீனி போட்டாள். தீட்டானால் குளிக்கும் இருட்குகை ஸ்நான அறையைக் காட்டினாள். எட்டிப் பார்க்கும்போதெல்லாம் அடுப்படியில். தோசை சுடவா அக்கா? இட்டிலி ஊற்றித் தரட்டுமா? இரவில் புடவை விலகாமல் இரு கால்களையும் அடக்கி, மடக்கிப் படுத்தாள். யார் ஒரு தும்மல் போட்டாலும் எழுந்து மிளகு சீரகம் பொடித்த சுடுதண்ணி போட, விசை தட்டியவுடன் இயங்குபவள் போல் டாணென்று எழுந்தாள். இரவில் அவளுடைய கையை எடுத்து முகத்தில் வைத்துக்கொண்டாள். சோற்று மணம் அடித்தது. பல யுகங்களின் சோற்று மணம்.

இவள் திருமணக் கனவில் இருக்கும் பெண். முன்னால் சந்தித்தவர் திருமணமான பெண். அவருக்கென்றான கனவுகளைக் கூட சிந்திக்க நேரம் இல்லாதவர். இவர்கள் குறித்துச் சிந்திக்க அம்பையின் சிறுகதை நம்மைத் தூண்டுகிறது. இந்த இரு பெண்களில் இந்தியப் பெண்களை அடக்கிவிடலாம் அல்லவா?

பெண்கள் எப்பொழுதும் மற்றவர்கள் பசிக்காகத் தன்னை தன் பணிகளை அர்ப்பணிப்பவர்கள் என்பதுதான் இவற்றில் இருந்து பெறப்படும் ஆளுமைக் கருத்துகள்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்கள் படைத்த சிறுகதைகளும் அவற்றின் வழிய பெறப்படும் ஆளுமைகளும்”

அதிகம் படித்தது